Friday 4 December 2020

பிடெரிக் ஏங்கல்ஸ், காலத்தை ஆக்கிரமித்த மாபெரும் சிந்தையாளர்

 


பிடெரிக் ஏங்கல்ஸ், காலத்தை ஆக்கிரமித்த மாபெரும் சிந்தையாளர்

--அனில் ரஜீம்வாலே

(நியூஏஜ் நவ.22 –28)

            இவ்வாண்டின் நவம்பர் 28, பெரும் பங்களிப்புகளை அடையாளப்படுத்திய பிடெரிக் ஏங்கல்ஸ் வாழ்வின் இருநூறாவது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் நிறைவு நாளாகச் சிறக்கிறது. தாம் வாழ்ந்த காலத்தை மட்டுமல்ல அதையும் தாண்டி, இன்றும் முழுமையாய் ஆக்கிரமித்துச் செல்வாக்கு செலுத்தும் ஓர் அரிய சிந்தையாளர், தத்துவ அறிஞர். வரலாற்றியல் பொருள் முதல்வாதத் தத்துவக் கோட்பாடுகளுக்குக் காரல் மார்க்சுடன் இணைந்து அடித்தளம் அமைத்து இயற்கையின் இயங்கியலையும், உணர்வுநிலையின் இயங்கியலையும் (dialectics of nature and consciousness) கண்டறிந்து வெளிப்படுத்தினார். இக்கண்டறிதலின் நிகழ்வுப் போக்கில், புதுவகையான உற்பத்திச் சாதனங்களை இயக்கும் வரலாற்று வர்க்கமாகிய ஆலைத் தொழிலாளிகளை விடுவிப்பது எப்படி என்பதற்கான கோட்பாட்டு அடிப்படைகளை நிறுவினார். ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யின் முதல் வரைவை (டிராப்ட்ஸ்) எழுதியவர் ஏங்கல்ஸ்; தொழிலாளிகளின் நிலைமைகளை அவர்கள் வாழும் சேரிகளுக்கே சென்று தரவுகளைச் சேகரித்து அவர் எழுதிய நூல்தான், ‘இங்கிலாந்தில் உழைப்பாளர் வர்க்க நிலைமை’  (1844)

            காரல் மார்க்சுடன் சேர்ந்து ஓர் இணை படைப்பாளியாகப் பொதுவாகக் கருதப்பட்டாலும் ஏங்கல்ஸ் தன்னளவில் ஒரு மாபெரும் சிந்தனையாளர். மார்க்ஸின் பெயரிலிருந்து அவர் பெயரைத் தனியாகப் பிரிக்க முடியாது என்றாலும் அவருடைய ஏராளமான பங்களிப்புகள் குறைவானதுஅல்ல.

            ஏங்கல்ஸ் தனித்து தனது ஆய்வுகள் மூலம் மார்க்ஸின் முடிவுகளைப் போன்ற முடிவுகளையே 1840களில் மத்தியில் வந்தடைகிறார். முறையான கல்வி எனில், ஆய்வு முனைவர் பட்டம் பெற்ற மார்க்ஸ் போலன்றி ஏங்கல்ஸ் பள்ளி கல்வி மட்டுமே படித்திருந்தாலும் அவர் நிரம்ப நூல்களைப் படிப்பவர், ஒரு கலைக்கலைஞ்சியம் போல, அசாதாரணமான கூர்மையான புத்திசாலி. தத்துவம், அரசியல் பொருளாதாரம், இயற்கை அறிவியல், இராணுவ விஞ்ஞானம், சோஷலிசம், மூலதனம் (டாஸ் கேப்பிடல்), உழைப்பாளர் வர்க்க இயக்கம், மதம் போன்ற பல துறைகளில் ‘பல்கேள்வித் துறைபோகிய’ (பட்டினப்பாலை) முழுமையான ஞானமுடையவர்.

            பருத்தி ஆடை உற்பத்தி செய்யும் ஆலைமுதலாளிகளின் பணக்கார குடும்பத்தில் பிறந்த பிடெரிக் ஏங்கல்ஸ், கம்யூனிசத்திற்கு வந்தது வர்க்கம் தாண்டிய பெரும் பயணம். அவரே ஓர் ஆலை முதலாளியாக இருந்ததால் ஆலையின் உள்நிகழ்வுகள் அத்தனையும் அவருக்கு அத்துப்படி. ஆயுதம் தாங்கி 1848-49ல் போர்க்களத்தில் சண்டையிலும் ஈடுபட்டவர், ஸ்விஸ் எல்லை வழியாகத் தப்பித்து, இரண்டு வாரங்கள் நடந்து, விவசாயிகளின் குடிசைகளிலும் தங்கி பிரான்ஸ் தேசம் வந்தடைந்தார்.

            மார்க்ஸ் நமக்குக் கிடைப்பதற்கு ஏங்கல்சின் பங்களிப்பு வரலாற்றில் என்னென்றும் அழிக்க முடியாத முத்திரை பதித்ததாகும்.

தத்துவத்தில் தொடங்கிய பயணம்

            மார்க்சும் ஏங்கல்சும் தங்கள் மார்க்சியப் பயணத்தைத் தத்துவத்திலிருந்து தொடங்கினர். மார்க்ஸைப் போலவே ஏங்கல்சும் (அக்காலத்தின் புகழ்பெற்ற) இடதுசாரி ஹெகலியர். எனவேதான், ‘ஹெகல் தத்துவத்தை ஆழமாகக் கற்காமல், ஒருவர் மார்க்சியத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது’ என்று லெனின் வலியுறுத்தியுள்ளார். இன்றைக்குப் புறக்கணிக்கப்பட்ட பலவற்றுள் ஒன்றான ஹெகல் தத்துவம் மற்றும் ஹெகலிய இயங்கியலை வரலாற்றில் ஐயம் திரிபறக் கற்ற சிலரில் ஏங்கல்சும் ஒருவர்.  

            தத்துவ வரலாற்றில் ஏங்கல்ஸ் எழுதிய ‘பியவர்பாஹ் (Feuerbach)ம் செவ்வியல் ஜெர்மன் தத்துவத்தின் இறுதியும்’ என்ற முக்கியத்துவம் வாய்ந்த நூல், தத்துவத்தில் குணாம்சரீதியான ஒரு பாய்ச்சல். செவ்வியல் ஜெர்மன் தத்துவத்தின் காலம் முடிந்து, இயக்கவியல் / வரலாற்றியல் பொருள்முதல்வாதச் சகாப்தத்தின் தொடக்கம் அது.  ஆழமான சிந்தனைகள் நிரம்பிய சிறப்பான அந்தப் படைப்பு, எதார்த்தமான இயக்கவியலில், எவ்வாறு உற்பத்தி சக்தி மற்றும் உற்பத்தி உறவுகளுக்கிடையே ஒன்றுபடுதலும் முரண்படுதலுமான தொழிற்படுதல் சமூகத்தில் செயல்படுகிறது என்பதை முதன் முதலாகக் கண்டறித்து அறிவித்தது. தத்துவத்தில் புரட்சி முழுமையானது: ஏங்கல்ஸ் மார்க்சுடன் சேர்ந்து உலகம் பற்றிய முழுமையான அணுகுமுறைப் பார்வையில் மாற்றத்தைக் கொண்டு வந்தார்; அந்த மாற்றம் தலையில் நின்றுகொண்டிருந்த உலகை, நேராக அதன் கால்களில் நிற்க வைத்தது! – இது தலைகீழ் மாற்றமல்ல, தலைகீழாக இருந்ததை நேராக்கிய மாற்றம்.

மார்க்ஸியத்தின் மூன்று கூறுகள்

            மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் மார்க்சியத்தின் மூன்று கூறுகளாக அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதத் தத்துவம் என்பதைப் படைத்தனர். 1850களில் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் இங்கிலாந்துக்குச் சென்றது இந்த மூன்று கூறுகளைப் பற்றி ஆராய்ந்து படித்து முழுமைபெறச் செய்ய உதவியது. இங்கிலாந்து தேசம் ஒரு செவ்வியல் முதலாளித்துவம், அதனைப் போன்ற ‘தூய்மையான’ மேலும் முழுமையான முதலாளித்துவத்தை வேறெங்கும் பார்க்க முடியாது.

            இந்த ஆய்வின் விளைவாய் உருவானதே அவர்களின் ஆகச் சிறந்த படைப்பான ‘மூலதனம்’ (‘Das Capital’) –அப்படைப்பு உடனடியாக, அரசியல் பொருளாதாரம் மற்றும் தத்துவத்தின் உச்சமாக மிளிர்ந்தது. அதில் முதலாளித்துவ உற்பத்தி முறையின் கோட்பாடுகள் மற்றும் அதன் அனைத்து வகைகளும்; அதன் மாற்றங்கள், மாறும் செயல்இயக்க வடிவங்கள் (polar motions); ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகரும் இடைக்காலம்; என அனைத்தும் விளக்கப்பட்டுள்ளன. மார்க்சும் ஏங்கல்சும் மிக வித்தியாசமான விஞ்ஞானிகள், தங்களின் பகுப்பாய்வை உலகப் பொருள்களோடு துவக்கியவர்கள், பொருளின் (commodity) செல்வாக்கு சமூகத்தின் அனைத்து உறவுகளிலும் எப்படிப் பிரதிபலிக்கிறது என்பதையும் சேர்த்தே ஆராய்ந்தார்கள். அவர்களின் பணி ஈடுஇணை இல்லாதது.

            ‘மூலதனம்’ ஆய்வு முறையையே மாற்றியது: மனிதர்களின் மொத்த வாழ்வுலகுக்கும் பொருந்தக் கூடிய பொருள்கள் மற்றும் எதார்த்த நிகழ்வு (phenomena)களிலிருந்து தொடங்குவதற்கு மாறாக, மார்க்சும் ஏங்கல்சும் அவற்றின் சாராம்சத்திலிருந்து (எஸ்சன்ஸ், பிழிவு) ஆய்வைத் தொடங்கி, பின்னதிலிருந்து முதலில் உள்ளது பற்றிய முடிவுக்கும்; புறஉலகின் எதார்த்த நிகழ்வு மற்றும் அதன் சாராம்சத்திற்கு இடையே உள்ள நெருங்கிய தொழில்படு உறவையும் கண்டுபிடித்தார்கள். அவர்கள் (மனித உழைப்பின் ஸ்தூல மதிப்பாகிய பொருண்மை மதிப்பு மற்றும் மறைவானதும் பொதுவானதுமான சூக்கும மதிப்பு ஆகிய) உழைப்பின் இரட்டைத் தன்மை யிலிருந்து, பொருட்கள் இயல்பின் இரட்டைத் தன்மையை (பயன் மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பு) தேடிக் கண்டடைந்தார்கள்.

            (பண்டத்தை உற்பத்திச் செய்பவரின் உழைப்பு ஒரு புறத்தில், பயன்மதிப்புகளைத் தோற்றுவிக்கும் ஸ்தூல வடிவிலான உழைப்பாய் இருக்கிறது; மறுபுறத்தில் பண்டத்தின் மதிப்பைத் தோற்றுவிப்பதற்கான பொது வடிவிலான உழைப்புச் செலவிடப்படுவதான செலவாய், சூக்குமமான உழைப்பாய், சமூக உழைப்பின் ஒரு பங்காய் இருக்கிறது.

            இவ்வாறு, பண்டம் இருவேறு தன்மையதாய் இருப்பதானது, அப்பண்டத்தில் உருப்பெற்றிருக்கும் உழைப்பும் இருவேறு தன்மையதாய் இருப்பதிலிருந்து எழும் தவிர்க்கவொண்ணாத விளைவே ஆகும். – தோழர் அ.க. ஈஸ்வரன் அவர்களின் கட்டுரையிலிருந்து மொழிபெயர்ப்பாளர் இணைத்தது)

            மார்க்ஸ் மறைவுக்குப் பின் 12 ஆண்டுகள் வாழ்ந்த ஏங்கல்ஸ் எஞ்சிய வாழ்வை மூலதனத்தின் இரண்டு, மூன்று பாகங்களைத் தொகுத்து வெளியிடுவதில் அர்ப்பணித்தார். ஏனெனில் மார்க்ஸ் குறிப்புகளின் கையெழுத்தைப் படிப்பது மட்டுமல்ல, கோட்பாட்டு ரீதியாக அதைச் சரியாகப் புரிந்து கொள்ளக்கூடியவர் ஏங்கல்ஸ் மட்டுமே.

            அதைத் தவிரவும் அவரது நண்பர்கள் வற்புறுத்தியதால் சோஷலிசம், தத்துவம் மற்றும் அரசியல் பொருளாதாரம் குறித்த யூஜின் டூரிங் கருத்துக்களை மறுத்து உண்மையை நிலைநாட்டப் பாடுபட வேண்டியிருந்தது. அதன் விளைவாய் படைக்கப்பட்டதே மூன்று அடிப்படை ஆதாரங்கள் விளக்கமும், மார்க்ஸியத்தின் ஒருங்கிணைந்த மூன்று பகுதிகளுமான : ‘டூரிங்குக்கு மறுப்பு’. அதன் ஒரு பகுதியாக வெளிவந்ததே ‘சோஷலிசம்: கற்பனாவாதமும் விஞ்ஞான பூர்வமானதும்’

வரலாற்று சக்தியாகத் தொழிலாளர் வர்க்கத்தைக் கண்டுபிடித்தல்

            வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாகத் தொழிலாளர் வர்க்கத்தை மார்க்சும் ஏங்கல்சும் கண்டு பிடித்தது, புரட்சிகரக் கோட்பாட்டின் குணாம்சரீதியிலான தாவிப் பாய்ச்சல். தொழிலாளர்கள் பற்றி வேறு யாரையும் விட நன்றாக அறிந்தவரானதால், ஏங்கல்ஸ் தொழிலாளர்களின் அன்றைய மோசமான வாழ்வியல் சூழல்கள் குறித்து மற்றவர்களைப் போல துக்கப்பட்டவர் அல்ல; மனம் சோர்ந்து கண்ணீர் சோர வெடித்து அழுபவர் அல்ல.  விஞ்ஞானபூர்வமான புரட்சியாளர் அவர், சோஷலிசத்தை அறிவியல் விஞ்ஞானமாக மாற்றியவர்.

            மார்க்சும் ஏங்கல்சும் மிக முழுமையாக உருவான வர்க்கத்தைக் கண்டுபிடித்தவர்கள்; அந்தத் தொழிலாளி வர்க்கம், மிக உயர்தர முற்போக்கான கருவிகள், இயந்திரங்கள் என அனைத்தும் ஒன்றிணைந்தும் கூட்டுறவோடுச் செறிந்து குவிந்திருக்கும் உற்பத்திச் சாதனங்களைப் படைத்தது. அதன் வர்க்க குணம் செல்வத்தைப் பிரிப்பதற்கு அனுமதிக்காது; அதற்கு மாறாகக் கீழ்நடுத்தர வர்க்கமான சிறுவணிகர்கள் விவசாயிகளான பெட்டி பூர்ஷ்வாக்கள், அவர்களளவில் அவர்கள் புரட்சிகரமானவர்களாக இருந்தாலும், அவர்கள் கூட்டுச் செயல்பாடு அற்றவர்கள் என்பதால் சமூகப் (பொது சொத்து) உரிமைக்குப் பொருத்தமற்றவர்கள்.

            உழைப்பின் இரண்டு வகைத் தன்மைகளை -- ஒன்று பருநிலையில் ஸ்தூலமானதும், மற்றொன்று புலனாகாத சூக்குமமானதும் (வெளிப்படாத தன்மை) – என்ற வடிவில் மிகமிக முற்போக்கான பண்டத்தை உற்பத்தி செய்ததை மார்க்சுடன் இணைந்து ஏங்கல்ஸ் கண்டுபிடித்தார். உழைப்பு மற்றும் உற்பத்திப் பொருளின் இரட்டைத் தன்மையின் புதிரை விடுவித்த (அவற்றின் இடையே உள்ள தொடர்பைக் கண்டுபிடித்த) வரலாற்று பெரும் கடமையைக் கம்யூனிசம் ஆற்றியது.

 (ரிக்கார்டோ, ஆடம் ஸ்மித் போன்ற முந்தைய பொருளாதார அறிஞர்கள் உழைப்புதான் செல்வத்திற்குக் காரணம் என்றனர். மார்க்சும் ஏங்கல்சும் இதிலிருந்து வேறுபட்டுச் செல்வம் குவிவதற்குக் காரணம் சுரண்டலும் உபரிமதிப்பும்தான் என்று –மூலதனம் நூலில் விரிவாக- விளக்கினர். – தோழர் எஸ் தோதாத்ரி எழுதிய ‘எங்கல்ஸ் வேறு, மார்க்ஸ் வேறா?’ ஜனசக்தி நவ.29 டிச.5 இதழ் கட்டுரையிலிருந்து  மொழிபெயர்ப்பாளர் இணைத்தது)

கூட்டுறவும் கூட்டு இயக்க அமைப்புமாகத் திகழும் சமூகத்தைப் படைக்கும் ஆற்றல் உள்ள ஒரு வர்க்கம், வரலாற்றில் முதன் முறையாக, கண்டுபிடிக்கப்பட்டது. சமூக நீதி என்பது ஏதோ புலனாகாதப் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் அநீதி குறித்த உணர்ச்சிகரமான கோட்பாடு சம்பந்தப்பட்டதல்ல என்ற கருத்தில் உறுதியானவர்கள் மார்க்சும் ஏங்கல்சும்; அதனால்தான், ‘சகோதர ஜனநாயகவாதிகள்’ மற்றும் ‘நீதிக் கழகம்’ (லீக் ஆஃப் த ஜெஸ்ட்) என்பதன் மீதான தங்கள் திறனாய்வில் மிகக் கூர்மையாக விமர்சனம் செய்தார்கள்.

அனார்க்கிஸம் அல்ல, மாறாக விஞ்ஞான பூர்வ சோஷலிசம்

          அனார்க்கிஸம் (Anarchism) என்பது அராஜகவாதம் அல்லது அரசின்மை வாதம் ஆகும். அரசின்மைக் கோட்பாட்டாளர்கள், பூடகமான நீதி மற்றும் கற்பனாவயப்பட்ட புரட்சி என்பதன் பெயரால் முட்டாள்தனமான உணர்ச்சி மேலீட்டால் பரப்பிய கருத்துக்களை ஏங்கல்ஸ் கடுமையாகத் தாக்கி மிகக் கூர்மையாக விமர்சித்தார்; அது அவர்களது விஞ்ஞானக் கோட்பாடு குறைபடுதல் காரணத்தால் வெளிப்பட்ட அவர்களின் ‘தத்துவத்தின் வறுமை’ என்றார். ‘அனைத்து மனிதர்களும் சகோதரர்கள்’ என்ற வர்க்கமல்லாத கோட்பாட்டை, மார்க்சும் ஏங்கல்சும் உழைக்கும் வர்க்கம் மற்றும் பெருந்திரள் மக்களின் வர்க்க ஒற்றுமை என்று மாற்றி அமைத்தனர்; அவர்கள் பயன்படுத்தும் உற்பத்திச் சாதனங்களைத் தேடி அதில் பொருத்தினர். வர்க்கங்கள் என்பது கருவிகள் மற்றும் உற்பத்திச் சாதனங்களோடு தொடர்புடைய மக்கள் குழு –அவர்கள் கூட்டாக அல்லது தனிநபர்களாக இருந்தாலும்; சொத்துடைமையாளர்களோ அல்லது கீழ்ப்படிந்து பணியாற்றுபவர்களோ– எப்படி இருந்தாலும் உற்பத்திச் சாதனங்களோடு தொடர்புடைய மக்கள் குழு. சுரண்டலின் ஊற்றுக்கண்ணை இங்கேதான் கண்டுபிடிக்க முடியுமே தவிர, மாறாக வேறு எங்கோ தெளிவற்ற, உருவமற்ற ‘மனிதாபிமானம்’, ‘சமூக’ மற்றும் ‘கலாச்சார’ தொகுதிகள், சொல்லாடல்கள் மற்றும் கோட்பாடுகளில் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. முன் சொன்னதிலிருந்துதான் (உழைப்பு, பண்டம்) பின் சொல்வதை (மனிதாபிமானம், சமூக கலாச்சார பண்பாடு) தருவிக்க முடியும்; அதற்கு மாறாகப் பின்னதிலிருந்து முன்னது தோன்ற முடியாது. (பண்பாட்டை மாற்றினால் சமூகம் மாறிவிடாது – சமூகத்தை மாற்றினால்தான் பண்பாடு மாறும்)

            உற்பத்திக் கருவிகளைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள வர்க்க உறவுகளிலிருந்து உருவாகும் உற்பத்தி உறவுகளிலிருந்தே சகோதரத்துவம் மற்றும் மனிதாபிமானம் முதலிய பண்புகள் ஊற்றடெடுக்க முடியும். அவ்வாறு இல்லாவிடில், அவை சூக்கும வடிவினதாய் பொதுவான கருதுகோள்களாக, விஞ்ஞானபூர்வமான உள்ளடக்கம் ஏதுமற்றதாகிவிடும். பிரஞ்ச் புரட்சியின் முழக்கமான “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” புரட்சிகரமானதுதான், ஆனால் அதனால் பதிலளிக்க முடியாத கேள்வி: யாருக்காக? இந்தக் கேள்விக்கான விடையை மார்க்சும் ஏங்கல்சும் மிகப் பொருத்தமாக வழங்கினார்கள்.

            இந்தக் காரணங்களாலேயே மார்க்சும் ஏங்கல்சும் தொழிலாளர் வர்க்கத்தை வரலாற்றின் மையத்தில் வைத்து, கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறையிலும் புரட்சியைச் சாதிக்க இயன்றது. ‘சோஷலிசம் : கற்பனாவாதமும், விஞ்ஞானபூர்வமானதும்’ என்ற நூலில் ஏங்கல்ஸ் பின்வருமாறு விளக்கினார் -- முதலாளித்துவத்தின் வளர்ச்சியோடு ஒட்டுமொத்த தொழிலாளர்களும் அளவில் பெருகி சோஷலிசத்திற்கு ஏற்ற வகையில் சமூக ரீதியாகவும் கூட்டாகவும் மாறுவார்கள்; இதனால் எதிர்காலச் சமுதாயத்தில் முக்கியமான உற்பத்திச் சாதனங்களின் உரிமை என்பது கூட்டாகவும் சமூகமயமாக்கப்பட்டதாகவும் ஆகும்.

            இதுவே சோஷலிசக் கோட்பாட்டின் விஞ்ஞான அடிப்படை.

            (சமூகத்தில் இந்த மாறுதல் நிகழும்) அதே பொழுது, ஏனைய வர்க்கங்களின் ஜனநாயகப் பிரிவுகளும் சமூக மாற்றத்தின் இந்த மைய நீரோட்டத்தின் பல்வேறு இடைநிலை கட்டங்களில் இணைந்து கொள்வார்கள்; கம்யூனிசத்திற்கு மாறுவதற்கு முன்னதான அந்தக் கட்டங்கள், சமூக ஜனநாயக மாற்றத்தின் விரிவான நீண்டகாலம் நிகழும் நிகழ்வுப் போக்காகும்.

தொழிலாளர் வர்க்கம், ஜனநாயகம் மற்றும் சோஷலிசம்

            ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம், சோஷலிசத்திற்கான போராட்டங்களின் பிரிக்க முடியாத பகுதி என ஏங்கல்ஸ் (மற்றும் மார்க்ஸ்) கருதினார்கள். கம்யூனிஸ்ட் அறிக்கை ஜனநாயகக் கோரிக்கைகளைக் குறிப்பிடுகிறது. தேர்தல் உரிமைகளும் வாக்குச் சீட்டின் முக்கியத்துவமும் சோஷலிசத்திற்கும் அவசியம் என உறுதியாக வற்புறுத்திய மாபெரும் சிந்தனையாளர் ஏங்கல்ஸ். புரட்சியைப் படைக்க வன்முறை வழியிலான வர்க்கப் போராட்டம் என்ற கொள்கைக்காக நின்றவர்கள் அவரும் மார்க்சும் என்ற ஒரு பிம்பம், மிகத் தவறான புரிதல் காரணமாக உருவாக்கப்பட்டுள்ளது.

            மார்க்சும் ஏங்கல்சும் சுதந்திரமான பத்திரிக்கை துறை மற்றும் வெளிப்படையான போராட்டங்களை வற்புறுத்தியவர்கள். லீக் ஆப் ஜெஸ்ட் (நீதிக் கழகம்) அமைப்பு வெளிப்படையாகச் செயல்படவில்லை என்றால் அதில் சேர மறுத்தவர்கள் அவர்கள். இங்கிலாந்தில் 1830–40களில் நடைபெற்ற மக்கள் உரிமை சாசன இயக்கத்தின் கோரிக்கைகளின் ஒன்றான அனைவருக்கும் வாக்குரிமை என்பதை உதாரணமாக எடுத்துக் காட்டி, அக்கோரிக்கை வர்க்கப் போராட்டத்திற்கான ஆயுதமாக விளங்குவதைக் கண்டார்கள். ஜெர்மன் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 20 லட்சம் வாக்காளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்களோடு அவர்கள் ‘சர்வதேசத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் அதிர்ச்சித் தாக்குதல் சக்தி’யாகத் திகழ்வதாக ஏங்கல்ஸ் கருத்து தெரிவித்தார். சோஷலிசத்திற்கு மாறுவதற்குத் தேர்தல் வாக்குப் பெட்டியைப் பயன்படுத்துவது எப்படி என்பதற்கான சிறந்த உதாரணமாக ஜெர்மன் தொழிலாளர்கள் கட்சியைச் (சமூக ஜனநாயகக் கட்சி) சித்தரித்தார் ஏங்கல்ஸ். அரசின்மைவாதிகள் (அனார்கிஸ்ட்) ஏங்கல்சைத் திரிபுவாதி என்றுகூடக் குற்றம் சாட்டினர்! ஏங்கல்ஸ் தமது இரண்டாம் அகில காலத்தில் (1889 –95) ஜனநாயகப் பாராளுமன்ற உரிமைகளுக்கான பெரும் ஆதரவாளராக விளங்கினார். (ஏங்கல்ஸ் 200வது பிறந்தநாள் சிறப்புக் கட்டுரையாக ஜனசக்தி நவ.01--.07 இதழில் அனில் ரஜீம்வாலே எழுதிய “நாடாளுமன்ற அமைப்புகள், பொது வாக்குரிமை பற்றி பிரடெரிக் ஏங்கல்ஸ்” என்ற விரிவான கட்டுரையின் தழிழாக்கம் வெளியாகி உள்ளது)

            ஜெர்மன் சோஷலிஸ்ட் ஜனநாயக கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட தினசரி நாளிதழ்களை நடத்தியது; ஒரு முறை, பதிவான வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் பெற்றது. அத்தகைய பெருவாரியான செல்வாக்கு படைத்தது தொழிலாளர்கள் கட்சியின் அமைப்பு.

            தேர்தல்களில் பங்கேற்றுப் போராடுவதை ஏங்கல்ஸ் வர்க்கப் போராட்டம் மற்றும் பெருந்திரள் போராட்டத்தின் ஒரு வடிவமாகவே எடுத்துக் காட்டியுள்ளார்.

இயற்கையின் இயக்கவியல் பற்றி

அறிவுசான்ற கற்றோர்களின் ஒரு பிரிவினர் ‘இயற்கையில் இயக்கவியல்’ தத்துவத்தை ஏங்கல்ஸ் ‘வேண்டுமென்றே’ ஏற்படுத்தி அதன் பிறகு அதனைச் சமுதாயத்திற்கு மாற்றி விடுகிறார் என்று குற்றம் சாட்டுவர்! மேலும், சமூகத்தில் தனிநபர்கள் இடையே ‘உண்மையில்’ இருக்கின்ற வித்தியாசங்களைப் புறக்கணித்து மேற்செல்லுகிறார் என்றுகூட அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது. இத்தகைய விமர்சனப் பார்வை தற்போதும்கூட சில பிரெஞ்ச், இத்தாலிய மற்றும் பிற மார்க்சியவாதிகள் மற்றும் மெத்தப் படித்தவர்களிடையே நிலவுகிறது.

இது அசாதாரணமாக வித்தியாசமானதாகவும் பகுத்தறிவுக்குப் புறம்பான வகையில் ஏங்கல்சின் மாபெரும் பங்களிப்பை (குறைவுபடுத்தி)ப் பார்ப்பதாகும். மார்க்சும் ஏங்கல்சும் இயற்கை, சமுதாயம் மற்றும் (சமுதாயக் கூட்டு) உணர்வு (consciousness) இவற்றின் இயக்கவியலில் (தொழில்படும்) உலகளாவிய பொது விதிகளைக் கண்டுபிடித்து, பொருள் (மேட்டர்) என்பதன் விஞ்ஞானபூர்வமான கோட்பாட்டினை வளர்த்தார்கள். சமுதாயம் என்பது ஒரு குறிப்பிட்ட வடிவிலான பொருள்; (ஏனைய பொருள்களின்) அசைவு அல்லது இயக்கம் பற்றிய பொதுவான மற்றும் குறிப்பான இரண்டு இயக்கவிதிகள் சமுதாயம் என்ற பொருளுக்கும் உண்டு. அந்தக் குறிப்பிட்ட விதிகள் ‘பொருள்முதல்வாத கோட்பாட்டு வரலாற்றில்’ அடங்கி உள்ளன. அதைத்தான் நாம் வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்று அழைக்கிறோம்.

     (டேவிட் எமில் துர்கெய்ம் என்ற பிரெஞ்ச் சமூகவியலாளர் கூட்டு உணர்வு என்பதைக் "கூட்டுறவு நிறுவிய நம்பிக்கைகள் மற்றும் நடத்தை முறைகள்" என்ற பரந்த பொருளில் காண வேண்டும் என்கிறார்; மேலும்  சமூகவியல் என்பது, தனிநபர்களின் குறிப்பிட்ட செயல்களுக்கு மட்டுப்படுத்தப் படுவதைக் காட்டிலும், சமுதாயத்திற்குக் கூறப்படும் நிகழ்வுகளைப் பெருமளவில் படிக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார் –மொழிபெயர்ப்பாளர் இணைத்தது.)

இயற்கையில் ‘இயக்கவியல்’ செயல்படுகிறது என்பதை சிலர் நம்புவதில்லை, மற்றும் சிலரோ சமுதாயத்திலும் ‘இயக்கவியல்’ செயல்படுகிறதா என நம்ப மறுக்கிறார்கள். இயக்கத்தின் (motion) ஆதார ஊற்றுக்கண்ணே இயக்கவியல் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள். ஆனால் பிடெரிக் ஏங்கல்ஸ் தமது ‘இயற்கையின் இயக்கவியல்’ (‘Dialectics of Nature’) எனும் மாபெரும் படைப்பில் குறிப்பிட்ட வகையிலான இயக்கங்களை, அது இரசாயனம், பௌதீகம், உயிரியல், கணிதம், வானியல், காந்தவியல் எனப் பல பல துறைகளில் எவ்வாறு தொழில்படுகிறது என்பதை ஆராய்ந்தார்; அப்படி ஆராய்ந்ததன் பலனாக அந்த (இயக்க) விதிகள் எவ்வாறு நம் கண்ணெதிரே பிரத்யட்சமாக விளங்கும் (பொருட்கள் குறித்த) உலகப் பார்வையை மேலும் செழுமைப்படுத்தியது என்பதை எடுத்துக் காட்டினார். அவரது இந்தப் படைப்பாக்கம், இயற்கை அறிவியலில் தற்போது நிகழ்த்தப்படும் புதுமையான சாதனைகளை மார்க்ஸியத்தோடு உள்ளார்ந்து ஒன்றிணைப்பதற்கான விஞ்ஞான வழிகாட்டி; அதைவிட இன்னும் கூடுதலாகத் தற்போது நிகழ்ந்து வரும் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியோடு ஒருங்கிணைப்பதற்கு மேலும் பொருத்தமுடையதாக விளங்குகிறது.

ஏங்கல்சின் பெரும் உழைப்பில் படைக்கப்பட்டிருக்கும் இயற்கையின் இயக்கவியல் நமது உலகப் பார்வை மற்றும் இயக்கவியல் பொருள்முதல்வாத நிகழ்வழிமுறையை ஆழமாக்கி விசாலப்படுத்தியுள்ளது.

21ம் நூற்றாண்டில் ஏங்கல்சின் பொருத்தப்பாடு

            கடந்த இரு நூற்றாண்டுகளில், கங்கையில் எவ்வளவோ நீர் பாய்ந்தோடியதைப் போல,  எவ்வளவோ மாறிவிட்டன; ஆனால் ஏங்கல்சின் பகுப்பாய்வு முறை பொருத்தமுடையதாய் நீடிக்கிறது. நாம் புத்தம் புது தொழில்நுட்ப, தகவல் யுகப் புரட்சியின் ஊடே பயணித்து வருகிறோம்; இக்காலத்தில் மார்க்சியம் மற்றும் சோஷலிசத்தின்பால் தொடுக்கப்படும் புதிய கேள்விகளுக்கான பதில்கள் கோரப்படுகின்றன. சமூகக் கூட்டமைவு வேகமாக மாறி வருகிறது, புதிய உற்பத்திக் கருவிகள், பரிமாற்றம் மற்றும் தகவல் (பண்டமாக) வேகமாக மலர்ந்து வருகின்றன.  உருவாகியுள்ள புதிய அமைப்பில், எவ்வாறு புதிய சமூகத்தைக் கட்டமைப்பது என்ற புதிய கேள்விகளைச் சோவியத் அனுபவம் மற்றும் ஏனைய ‘தற்போதைய சோஷலிச நாடு’களின் அனுபவங்கள் தொடுத்துள்ளன. தொழிலாளர் வர்க்கக் கூட்டமைவுகளும் (class composition) மாறி வருவதால், அதன்பால் புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது. வர்க்கங்களும் சமூகப் பிரிவுகளும் மாறி வருகின்றன, அவ்விடங்களில் புதியன தோன்றுகின்றன. நகரமயமாக்கல் வேகமாகப் பரவுகிறது; மத்திய வர்க்கப் பிரிவுகள் மேலும் முக்கியமாகி வருகின்றன. தகவல் மற்றும் ஊடகம் புதிய அம்சங்களாகி உள்ளன.

            21ம் நூற்றாண்டு குணாம்சரீதியில் புதிய யுக்தானுசாரம் மற்றும் உத்திகளைத் தேவையாக்கி உள்ளது. மேலும் இந்தக் காலக்கட்டம் புதிய மட்டத்தில் மார்க்சியத்தோடு அறிவியல் மற்றும் தொல்நுட்பத்தை உட்செறித்து ஒருங்கிணைத்தலைக் கோரி நிற்கிறது. இந்த ஆகப் பெரும் கடமைப் பொறுப்பில், கோட்பாட்டையும் நடைமுறையையும் புதிய மட்டத்திற்கு வளர்ப்பதில், நமக்கு பிடெரிக் ஏங்கல்சின் போதனைகளும் பகுத்தாய்வு முறைகளும் ஒளியூட்டும் கை விளக்காக வழிகாட்டும்!

            வெல்க மார்க்சியம்! நீடு வாழ்க ஏங்கல்ஸ் புகழ்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

 

 

No comments:

Post a Comment