Friday 3 July 2020

வரலாற்று கம்யூனிசத் தலைவர்கள் வரிசை 3: இந்திரதீப் சின்கா


நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :
சில சித்திரத் சிதறல்கள் -3

           இந்திரதீப் சின்கா :
      பொருளாதார அறிஞர்,
    இயக்கக் கட்டமைப்பாளர்
 
                            --அனில் ரஜீம்வாலே
                   (நியூஏஜ் ஜூன்28 –ஜூலை 04 இதழ்)
            
    இந்திரதீப் சின்கா பீகாரின் சிவான் மாவட்டத்தின் ஷக்ரா கிராமத்தில் 1914 ஜூலை 1 தேதி பிறந்தார்.  அவர் சிறந்த அறிவாளி, விவசாயப் பிரச்சனைகளில் நிபுணர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய தலைமைக்குழு உறுப்பினர். ஜமீன்தார் குடும்பம் ஒன்றில் பிறந்தாலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பாடுபடுவதைத் தேர்ந்தெடுத்தார். கிராமப் பள்ளியில் கல்வியைத் துவக்கி கோரியா கோடீயில்  உயர்நிலைக் கல்வியை முடித்து, 1933ல் பாட்னா கல்லூரியில் சேர்ந்தார். 1937ல் இளங்கலைப் பட்டத்தையும் 1939ல் பொருளாதாரத்தில் முதுகலை எம்.ஏ. பட்டமும் பெற்றார். தேர்வில் தங்கப் பதக்கத்தோடு முதல் இடம் பெற்றார். புகழ்பெற்ற பொருளாதார மேதை டாக்டர் ஞான்சந்த் அவருடைய துறைத் தலைவர்.

அரசியல் தொடர்பு

       சிவான் போலவே ச்சாப்ரா மற்றும் அருகில் இருந்த இடங்கள் காந்திஜியின் சட்டமறுப்பு மற்றும் பிற சுதந்திர இயக்கப் போராட்டங்களின் ஆழமான தாக்கத்தைப் பெற்றிருந்தன. மாணவர்கள் எழுச்சி பெற்று, பள்ளிகளிலும் தங்கும் விடுதிகளிலும் இது குறித்துப் பேசவும் விவாதிக்கவும் ஆரம்பித்தனர். இந்திரதீப்பும் இதில் கலந்து கொண்டு மூவண்ணக் கொடியைச் சுமந்து கதர் அணியத் துவங்கினார். விரைவிலேயே அவர் கைதானார். நேருவின் எழுத்துகளாலும், உரைகளாலும் ஈர்க்கப்பட்டார்.
 
புத்தகங்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர்; இலக்கியம், பொருளாதாரம், அரசியல், தத்துவம், பல்வேறு கொள்கையிசங்கள் எனப் புத்தகங்களை விழுங்கினார் என்றே சொல்ல வேண்டும். விரைவில் மார்க்சிய நூல்களோடு தொடர்பு ஏற்பட்டது. காரல் மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ நூலைக் கற்றறிந்த ஒருசிலரில் இந்திரதீப்பும் ஒருவர்.
 
பாட்னா கல்லூரி கட்டடங்களில் தேசியக் கொடியை ஏற்றுவது என்ற மாணவர் இயக்கங்கள் வெடித்தன. இந்திரதீப் ‘கொடி கமிட்டி’யின் செயலாளராகத் தேர்வானார். அந்தக் கமிட்டியே பின்னர் ’அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்’ AISF அமைப்பின் ஒரு கிளையானது. (1936 ஆகஸ்ட் 12ல் அமைக்கப்பட்ட AISF, சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரே மாணவர் அமைப்பாகும்). அவரோடு எப்போதும் பாட்னாவில் சந்திரசேகர் சிங் உடன் படிப்பவராக இருந்தார். பாட்னா விடுதியில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்தனர். அவர் பி சி ஜோஷியைச் சந்தித்தார், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியோடுத் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டார்.

கட்சி உறுப்பினர்

        பீகாரில் 1939 அக்டோபர் 20ல் அமைக்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர, பீகார் ஏஐஎஸ்எப் பொதுச் செயலராக இருந்த அலி அஷ்ரப் அவரை ஊக்குவித்தார். அதுவரை இந்திரதீப்பும் சந்திரசேகர் சிங்கும் உறுப்பினராக- வில்லை. கட்சி அணியினர்களுக்காகப் பம்பாயில் நடந்த பயிற்சி முகாமில், அவர்கள் இருவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்குமாறு பி.சி ஜோஷி, சுனில் முகர்ஜியிடம் சொல்ல, அப்படித்தான் 1940 பிப்ரவரி 2ம்நாள் இருவரும் சிபிஐ உறுப்பினரானார்கள். சிறிது காலம் ச்சாப்ராவில் இந்திரதீப் விரிவுரையாளராகப் பணியாற்றினாலும், கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்ற அந்தப் பணியை விட்டுவிட்டார்.

பாம்பே சிபிஐ தலைமையகத்தில்

      சிபிஐ தலைமையகத்திலும் கட்சியின் இந்தி இதழ்  ‘லோக்யுத்தா’விலும்         பணியாற்ற இந்திரதீப் சின்கா பம்பாய்க்கு மாற்றப்பட்டார். இந்தி மொழியில் பல புத்தகங்களை மொழிபெயர்த்தார். புகழ்பெற்ற தலைவர்கள் சி ராஜகோபாலச்சாரி, பிரித்வி ராஜ் கபூர், ஷேக் அப்துல்லா, வி சாந்தாராம், (‘புரட்சியின் பாவலன்’ என்று புகழப்பட்ட கவிஞர்) ஜோஷ் மலீகாபாடி (Josh Malihabadi), க்வாஜா அகமத் அப்பாஸ் மற்றும் பல தலைவர்களோடு தொடர்பு ஏற்பட்டது. பரேல் மற்றும் தாதரில் சில தொழிற்சங்க இயக்கப் பணிகளையும் ஆற்றினார். 1945ல் பீகார் திரும்பினார்.

1947, ஆகஸ்ட் 15ல் இந்தியா விடுதலை அடைந்தது. எங்கும் ஊர்வலங்கள், கூட்டங்கள், விழாக்கள் எனக் கொண்டாட்டங்கள். இந்திரதீப் சின்கா உற்சாகத்துடன் அவற்றில் பங்கேற்றார், தோளில் மூவண்ணக்கொடியைச் சுமந்தபடி.

‘பி.டி. ஆர் காலமும்’ பின்விளைவுகளும்

        சிபிஐயின் இரண்டாவது கட்சி காங்கிரஸ் மாநாட்டில் இந்திரதீப் சின்கா கலந்து கொண்டார், அந்த மாநாட்டில்தான் (1948 பிப்ரவரி–மார்ச்) குறுங்குழுவாதச் சாகசத் திசைவழி (a sectarian adventurist line) தீர்மானம் ஏற்கப்பட்டது. சின்கா, “பி.டி ரணதிவே தனது அகவயப்பட்ட புரிதல்களால் நாடு புரட்சிக்குத் தயாராக உள்ளது என்ற முடிவுக்கு வந்தார்” என விமர்சித்தார். கட்சிக் காங்கிரஸ் பி சி ஜோஷியைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சம்பிரதாயமாக நீக்கியது.

        1948 மார்ச் 8ம் தேதி தலைமறைவு வாழ்க்கைக்குச் சென்ற இந்திரதீப், 1951ம் ஆண்டு ஏப்ரலில்தான் வெளிப்டையாக வெளியே வந்தார். பலகாலம் பாட்னாவிலே தங்கி, ஜனசக்தி அச்சகத்தில் பணியாற்றி (பாட்னாவின் இந்தி) கட்சிப் பத்திரிக்கையை வெளிக்கொண்டு வந்தார். வங்காளம், ஹைத்திராபாத், திருவாங்கூர் முதலிய பல மாநிலங்களில் கட்சி சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டிருந்ததைத் தோழர்கள் டெலிப்பிரிண்டர் செய்தி வழியாக அறிந்தனர். பீகாரில் கட்சிச் செயல்பாடு பாதி சட்டபூர்வமானதாக இருந்தது.

        ஜனசக்தியின் நிதிநிலைமை விரைவில் மோசமடைய, ஒரு நேரத்தில் இந்திரதீப் தனது கல்லூரி தங்கப்பதக்கத்தைத் தெரிந்தவர் ஒருவரிடம் ச்சாப்ராவில் விற்க நேர்ந்தது. அதன் பிறகு அந்தப் பதக்கத்தை அவர் திரும்பப் பெறவே இல்லை. நாளிதழான ஜனசக்தி, வார இதழானது. சோனேபூர், ஹாஜ்பூர், ச்சாப்ரா உட்பட பலஇடங்களில் இந்திரதீப் போலீசில் பிடிபடுவதிலிருந்து நூலிழையில் தப்பி இருக்கிறார்.

‘அகில இந்திய ரயில்வே வேலைநிறுத்த’ அறைவவலும்
புரட்சிக்கான நீண்ட காத்திருப்பும்!
          1949ல் இந்திரதீப் சின்கா, ஜகன்நாத் சர்க்கார் மற்றும் யோகேந்திர சர்மா மூவரும் கல்கத்தா கட்சி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டனர். ஜகன்நாத் சர்க்காரின் மூத்த சகோதரர் வீட்டில், சிலகாலம் பதுங்கி காத்திருந்தனர். இறுதியாகப் பொதுச் செயலாளர், பி.டி. ரணதிவே, ஒரு சிதலமடைந்த மசூதி கட்டடத்தில் அவர்களைச் சந்தித்தார். எதிர்வரும் ‘புரட்சிக்கான நடவடிக்கை’ விரைவில் என்ற செய்தியைத் தெரிவித்தார். புரட்சி மாபெரும் ரயில்வே வேலைநிறுத்தத்துடன் 1949, மார்ச்-9ல் துவங்குமென அறிவித்தார்! அவர் பேசி முடித்த பிறகே அவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
        பாட்னா திரும்பிய பிறகு இந்திரதீப் சின்கா பாட்னா ரயில்வே லைன் அருகே ஓர் ஆதரவாளர் வீட்டில் தங்கி இருந்து, மூச்சுவிட மறந்த ஆர்வத்துடன் (with bated breath, ஷேக்ஸ்பியர் மொழி பயன்பாடு) ‘புரட்சிக்காக’ காத்திருந்தார். ஒரு ரயில் வருவதைப் பார்த்தார்! ஓகோ, சரிதான் என அவர் எண்ணினார். பிறகு மீண்டும் மற்றொன்று, அதன் பின்னே இன்னொன்று! ரயில் வண்டிகள் எல்லாம் வழக்கம்போல் ஓடின. தாவிப் பாய்ச்சல் சாகச வேலைநிறுத்தம் மற்றும் உறுதியளிக்கப்பட்ட ‘புரட்சி’ முழுமையாகத் தோல்வி அடைந்தன.

        பிடிஆர் பின்னர், கட்சிக்குள் ஊடுருவிய ‘திருத்தல்வாதி’களைப் பழி கூறினார். அந்தத் திருத்தல்வாத ‘உதிரிகள்’ யாரெனக் கண்டுபிடிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மீண்டும் அவசர அவரமாக அவர்கள் கல்கத்தாவிற்கு அழைக்கப்பட, வழியில் ஜகன்நாத் சர்க்கார் கைதானார்; எப்படியோ சின்காவும், சர்மாவும் கல்கத்தா அடைந்தனர். பொலிட் பீரோ உறுப்பினர் அருண் போஸ் கண்காணிப்பில் அவர்கள் இருவரும் (ஏறத்தாழ) வீட்டுச் சிறையில் ஒரு குடியிருப்பில் ‘அடைக்க’ப்பட்டனர். முழு 8மாதங்கள் வெளியே வர இந்திரதீப் அனுமதிக்கப்படவில்லை. அப்போதைய கல்கத்தா கட்சி மாவட்டச் செயலாளர் இந்திரஜித் குப்தாதான் அடுத்த தலைவராக (பாஸாக) இருந்தார்! 

        பாத்திரங்களைக் கழுவுதல், இடத்தைச் சுத்தம் செய்தல், டீ தயாரிப்பு, சமையல் போன்ற வேலைகள் இந்திரதீப்பிற்குத் தரப்பட்டன. சில மொழிபெயர்ப்பு பணிகள் மற்றும் சில ஆவணங்களைக் கொடுத்து அவற்றைப் பரிசீலித்து ஏதேனும் ‘திருத்தல் வாதங்கள்’ இருக்குமென்றால் அவற்றைக் களைந்து நீக்கும்படி சொல்லப்பட்டது. இப்படியாக இந்திரதீப் ‘கவனித்துப்’ பராமரிக்கப்பட்டார், அவரது தலைமறைவு வாழ்வில். 
  
விளைந்தது நல்ல மாற்றம்

        திடீரென ஒரு நாள் காலை, அறையில் சில வித்தியாசமான புதிய மனிதர்களை இந்திரதீப் சின்கா கண்டார்; அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள் அல்லது தலைகீழாகச் ‘சிரசாசனம்’ செய்து கொண்டிருந்தார்கள். அவருடைய அதிருஷ்டம் நல்ல மாற்றங்களைக் கண்டது – அவர் வெளியேகூட செல்ல அனுமதிக்கப்பட்டார். அதற்கான காரணம், கட்சிக்கு ஒரு புதிய பொதுச்செயலாளர் 1950 ஜூனுக்குப் பிறகு கிடைத்தார்: அவர் சி. இராஜேஸ்வர் ராவ்.

        இந்திரதீப் சின்கா பாட்னா திரும்பினார். புது மாகாணக் கமிட்டி அமைக்கப்பட்டு, இந்திரதீப் சின்கா அதன் செயலாளர் ஆனார்.

1952 தேர்தல்கள்

        தீவிர மாறுதலாக, சிபிஐ பொதுத் தேர்தல்களில் போட்டியிடுவது என்ற முடிவை எடுத்தது. பரவலான சுய அழிப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னும், நாட்டின் முக்கிய எதிர்க் கட்சியாக உருவெடுத்தது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. கட்சியை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டு வருவதில் அஜாய் கோஷ், டாங்கே மற்றும் காட்டே முக்கிய பங்காற்றினர்.

        பீகாரில் சிபிஐ 23 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, கடுமையாகப் போராடினாலும் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோஷலிஸ்ட் கட்சியுடன் 30 இடங்களைக் கோரி உடன்பாடு காண முயன்றபோது, அவர் 5 இடங்களைக் கூட வழங்கச் சம்மதிக்கவில்லை. பீகாரில் ஆட்சி அமைக்க விரும்பிய ஜெபியின் சோஷலிஸ்ட் கட்சி, மொத்தமுள்ள 330 தொகுதிகளில் 30 மட்டுமே வென்றது.

விவசாய இயக்கத்தில் 

இந்திரதீப் சின்கா, யோகேந்திர சர்மா மற்றும் பிற பிரபலமான தலைவர்கள், குத்தகைதாரர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்காக இன்றும் நினைவுகூரத்தக்க பல போராட்டங்களை 1940 மற்றும் 50களில் நடத்தி உள்ளனர். கால்களால் நடந்தும் சைக்கிளில் சுற்றித் திரிந்தும் விரிவாகப் பயணித்து அவர்களுக்காக உழைத்திருக்கிறார். பாகல்பூர் பகுதியில் நிலவிய ‘மங்கான் –மானேசாறி’ முறைக்கு எதிராகப் போராடினார். இம்முறையானது, குத்தகைதாரர்கள் இவ்வளவு விளைச்சல் உற்பத்திக்கு இவ்வளவு பங்கு அளக்க வேண்டும்; ஜமீன்தாரர்களுக்கும் பங்கு தர வேண்டிய குத்தகைதாரர் உடன்பாடு முறையாகும். முதன் முறையாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் பாட்னாவில் நடைபெற்றது. 1954ல் கட்சியும், கிஸான் சபாவும் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 40ஆயிரம் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

        1956ல் பெகுசராய் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட கட்சி வேட்பாளருக்காக இந்திரதீப் சிங் பிரச்சாரப் பணிகளில் பாடுபட்டதன் பலனாக மாநிலத்தின் முதல் சிபிஐ சட்டமன்ற உறுப்பினராகச் சந்திரசேகர் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

        1957 தேர்தல்களில் 6 தொகுதிகளை வென்ற சிபிஐ, 1962ல் அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி 12 தொகுதிகளில் வென்றது. 1962 முதல் 67 வரை கட்சியின் பீகார் மாநிலச் செயலாளராக இந்திரதீப் சின்கா பொறுப்பில் இருந்தார். மாவோயிஸ்ட் மற்றும் பிற நடவடிக்கைகளால் 1964ல் கட்சி பிளவுபட்டது. ஆனால் 14ஆயிரம் உறுப்பினர்களில் 1,200 உறுப்பினர்கள் மட்டுமே சிபிஎம் கட்சிக்குச் சென்றனர்.

1967ல், வருவாய்த் துறை அமைச்சராக

        1967 பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் 16 மாநிலங்களில் ஒன்பதை இழந்தது. பீகார் உட்பட சில மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத சம்யுக்த விதாயக் தள் (எஸ்விடி) அமைச்சரவைகள் அமைக்கப்பட்டன. பீகார் அரசில் சிபிஐ பங்கேற்றது. இந்திரதீப் சின்கா, சந்திரசேகர் சிங் மற்றும் தேஜ் நரேன் ஜா அமைச்சர்களானார்கள்.

        வருவாய்த்துறை அமைச்சராக இந்திரதீப் சின்கா போற்றத்தக்க பல செயல்களை ஆற்றினார். வறட்சி, பஞ்சத்தில் மக்கள் பட்டினியால் சாக நிர்பந்திக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தினார்; மத்திய அரசையும் பஞ்சாபையும் வற்புறுத்தி ஐயாயிரம் டன் அரிசி மற்றும் சோளத்தைப் பெற்றார். நிலச் சீர்திருத்தம் அவரது பெரும் சாதனை. நிலமற்றவர்களுக்கும் சிறுவிவசாயிகளுக்கும் அவர்களின் உரிமையைப் பெற்றுத் தந்தார். டாட்டாவின் ஜமீன்தாரியின் கீழ் இருந்த 38 கிராமங்களைக் கையகப்படுத்தினார். இதனால் முதன் முறையாக அவர் பாட்னா செகரெட்டரியேட்டுக்கு இந்திரதீப் சின்காவைச் சந்திக்க நேரில் வந்தார். ஆனால் சின்கா அவருடைய கோரிக்கைக்கு இணங்கவில்லை. ‘சக்பந்தி’ (நிலஉச்ச வரம்பு) அமல்படுத்தப்பட்டு, உபரி நிலங்கள் பிரித்தளித்து, நிலம்சூழ்வீடுகள் வழங்கப்பட்டன. நிலஉடைமையாளர்கள் கோபத்தில் ஆயுதபாணியானார்கள். மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன், அந்த அரசு 1969ல் வீழ்ந்தது.

கட்சி மையத்தில் பணி

        1974ல் டெல்லிக்கு மாற்றப்பட்டார் இந்திரதீப் சின்கா. 1974ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பாராளுமன்றத்தில் 1986வரை நீடித்தார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) பொதுச் செயலாளர் ஆனார். பூபேஷ் குப்தா (தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான தனிநபர் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தவர்: கூடுதல் தகவல், -- மொழிபெயர்ப்பாளர்) 1987ல்  மறைந்த பிறகு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘நியூ ஏஜ்’ மத்திய ஆங்கில இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

        கட்சியின் தேசியக் குழு, மத்திய நிர்வாகக் குழு மற்றும் செயலகத்தின் உறுப்பினராக நீண்டகாலம் பணியாற்றினார். இந்திரதீப் சின்கா சிறந்த பொருளாதார வல்லுநர், குறிப்பாக வேளாண் பொருளாதாரத்தில் நிபுணர். பயன்பாட்டு மார்க்சியம், மார்க்சியம் மற்றும் வேளாண் பிரச்சனைகள், விவசாயிகள் போராட்டங்களின் வரலாறு, விவசாய நிலைமையின் முக்கிய அம்சங்கள், முதலாளித்துவப் பாதையின் நெருக்கடி, ஜெபி முழுப் புரட்சியின் உண்மையான முகம் போன்ற நூல்கள் உட்பட கோட்பாட்டுரீதியில் பல நூல்களை எழுதியுள்ளார்
           
2003, ஜூன் 9ம் நாள் அவர் மறைந்தார்.

        அவருடைய போராட்ட அனுபவங்கள், நூல்கள் நம்மை மேலும் செழுமைப் படுத்தட்டும்! 
இந்திரதீப் சின்கா நினைவுக்குச் செவ்வணக்கம்!
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

பின் இணைப்பு:

        (பீகார் டைம்ஸ் என்ற இணைய பக்கத்தில் வெளியான டாக்டர் சைபல் குப்தா, ஆசிய வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் உறுப்பினர் செயலாளர் எழுதிய ’இந்திரதீப் சின்கா – ஒரு புகழஞ்சலி’ கட்டுரையை http://www.bihartimes.in/articles/shaibal/indradeep.html லிங்கில் காணலாம். அதிலிருந்து நன்றியுடன்:
     “பாட்னா பல்கலைக் கழகத்தின், கற்றல் துறைபோகிய, பொருளாதாரத்துறை பேராசிரியர் ஞான் சந்த், (பின்நாட்களில் நேருவின் ஆலோசகராக இருந்தவர்), அறிவுரையை இந்திரதீப் சின்கா கேட்டிருந்தால், நேரு மறையும்வரை அவருக்கு உற்றதொரு ஆலோசனைக்குழு உறுப்பினர் கிடைத்திருப்பார். … ஆனால் இல்லாதவர்களுக்கு உழைப்பது என்ற கடினமான பொதுஉடைமைப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். அப்படி இல்லாமல் இருந்திருந்தால், நேருஅமைச்சரவையில் தாரகேஸ்வரி சின்கா அல்லது சியாம்நந்தன் மிஸ்ராவுக்குப் பதில் அமைச்சராகி இருப்பார். குறைந்த பட்சம் ஜெயப்பிரகாஷ் நாராணனுடன் அனுசரித்திருந்தால், அவரது அரசியல் பாதையின் போக்கு வேறுமாதிரி இருந்திருக்கும்….
அவருடைய அறிவின் ஆளுமை மற்றும் கூர்மை, அரசியல் சமூக விவாதங்களில், அது அக்காலங்களின் பெரும் ஆளுமைகளான சகஜானந்த சுவாமிகளோ, ஜெபி--யோ யாரையும் சுலபத்தில் விவாதங்களிலிருந்து தப்ப விட்டதில்லை. இந்திரதீப் யோசனைகளைப் பீகார் அரசு கேட்டிருந்தால், தேசத்தின் அரசியல் வரைபடமே வெகுவாக மாறியிருக்கும்….
ஐக்கிய முன்னணி அரசில் கர்ப்பூரி தாக்கூர் முதலானவர்களுடன் பணியாற்றியபோது வருவாய்த் துறை அமைச்சராக அவருடைய செயல்பாடுகள் ஒரு ‘நல்ல அரசு நிர்வாக’ முறைக்கான காலகாலத்திற்குமான பாட புத்தகம்.  பீகாரின் பின்நாட்களின் சமூக நீதி இயக்கத்திற்கு ஓர் ஒப்பற்ற ஜனநாயக அடித்தளத்தை அமைத்துத் தந்தவர்.
சமகாலத்துத் தலைவர்களில் கோபுர உச்சத்தில் இருக்கும் பண்பாளர் இந்திரதீப் சின்கா. )

No comments:

Post a Comment