Friday 24 July 2020

சரித்திரத் தலைவர்கள் வரிசை 6 தோழியர் பார்வதி கிருஷ்ணன்




நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :
சில சித்திரத் சிதறல்கள் - 6
பார்வதி கிருஷ்ணன் : 
துடிப்புமிக்கத் தோழியர், தலைவர்

--அனில் ரஜீம்வாலே
(நியூஏஜ் ஜூலை 19 –25)
        ஆண்களின் உலகம் எனக் கருதப்பட்ட தொழிற்சங்க அரங்கம், மற்ற நடவடிக்கைகளில் துணிச்சலுடன் இறங்கி கலக்கிய அரிதான பெண்மணிகளில் ஒருவர் பார்வதி கிருஷ்ணன் (குமாரமங்கலம்). இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், ஏஐடியுசி தொழிற்சங்கக் காங்கிரஸின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
        1919 மார்ச் 15ம் நாள் ஊட்டியில் பிறந்தார் பார்வதி. சுதந்திரத்திற்கு முன் சென்னை இராஜதானியின் முதல்வராகவும், நேருவின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்த டாக்டர் சுப்பராயன் அவருடைய தந்தை. மத்திய சட்டமன்றத்திற்கு 1938லேயே முதன் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினரான ராதாபாய் அவரது தாய்.  (முதல் மற்றும் இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணியான) அவருடைய தாயாரே பார்வதி அரசியலில் நுழையக் காரணமாவார். புகழ்பெற்ற காங்கிரஸ் அமைச்சரான மோகன் குமாரமங்கலம் அவருடைய சகோதரர். மற்ற இரு சகோதரர்கள் ஜெனரல் பரமசிவம் (P) குமாரமங்கலம் இராணுவப் படை முதன்மைத் தளபதி,  G குமாரமங்கலம் கோல் இந்தியா லிட் நிறுவனத்தின் தலைவராவார். அவர்கள் எல்லோரும் புகழ்பெற்ற ‘குமாரமங்கலம் ஜமீன்’ பரம்பரையைச் சேர்ந்தவர்கள். 5000 ஏக்கர் நிலம் அவர்களின் குடும்பச் சொத்தாக இருந்ததை நிலமற்ற விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்து, அக்குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வேறு வேறு துறைகளில் சிறந்து விளங்கினர்.
        புகழ்பெற்ற பிரிட்டீஷ் கம்யூனிஸ்ட் வரலாற்றாசிரியரான எரிக் ஹாப்ஸ்பாவ்ம் (Eric Hobsbawm) தனது சுயசரிதமான “இன்டரஸ்டிங் டைம்ஸ்” நூலில் மறக்கவொண்ணா புகழ்பெற்ற இந்தக் குடும்பத்தைப் பற்றி ஆர்வத்தோடு விவரித்திருக்கிறார். தனது சகோதரர் மோகன் குமாரமங்கலத்தைச் சந்திக்க பார்வதி கிருஷ்ணன் லண்டன் கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு வந்தது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
 பல்கலைக்கழக மாணவராக இங்கிலாந்தில்
        பார்வதி பள்ளிப் படிப்பைச் சென்னை (மெட்ராஸ்) இவர்ட் பள்ளியில் நிறைவு செய்தபின், கேம்ரிட்ஜில் படிக்க இங்கிலாந்து அனுப்பி வைக்கப்பட்டார். நுழைவுத் தேர்வுக்குத் தயார் செய்ய பிரிஸ்டனின் பாட்மின்டன் பள்ளியில் சேர்ந்து, பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 1938ல் சேர்ந்தார்.
ஆக்ஸ்போர்டு ‘மஜ்லின்' என்ற அமைப்பின் மாணவர் செயலாளராகப் பார்வதி செயல்பட்டார். (‘மஜ்லின்’ என்ற பெர்ஷிய சொல்லிற்கு ‘அசம்பிளி’ என்பது பொருள். அந்தப் பல்கலைக் கழகத்தின் இரண்டாவது பழமையான மாணவர் விவாத அமைப்பு அது). ஃபெட்இண்ட் என்ற இதழ் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார். (இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் இந்திய மாணவச் சமூகங்களின் சம்மேளனம் என்பது FEDIND –ன் விரிவாக்கம்.) இலண்டன் மற்றும் ஆக்ஸ்போர்டு கேம்பிரிட்ஜில் ஏராளமான இந்திய மாணவர்கள் படித்து வந்தார்கள். அவர்களில், என்.கே.கிருஷ்ணன், பூபேஷ் குப்தா, ஜோதிபாசு, மோகன் குமாரமங்கலம், இந்திரஜித் குப்தா, மொகித் சென் முதலானவர்கள் அதன் பிறகு கம்யூனிஸ்டாக மலர்ந்தவர்கள். பாசிசத்தை எதிர்த்த நேசநாடுகளின் மாணவர் குழுவில் பார்வதி இணைந்தார். ஜெனிவாவில் நடைபெற்ற மாணவர்களுக்கான கோடைக் கால முகாமில் கலந்து கொண்ட பார்வதி, குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திரா காந்தி அவருடைய நெருங்கிய தோழி, அது போலப் பின்னாட்களில் பிரபலமான பலரும் அப்போது அவருக்கு நண்பர்கள். 1930களில் பிரச்சனைகளால் சூழப்பட்டிருந்த ஸ்பெனினுக்கு உதவிட அமைக்கப்பட்ட சர்வதேச பிரிகேடு உள்பட பல குழுக்களிலும் பார்வதி பணியாற்றியுள்ளார்.  இரண்டாவது உலக யுத்தம் வெடித்ததும் முன்பு எப்போதும் இல்லாத அளவு போருக்கு எதிரான இயக்கங்கள் முகிழ்த்தன. பல கல்லூரிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி 1940ல் அமைக்கப்பட்ட ‘அமைதி குழு’விற்குப் பார்வதி தலைவரானார். அந்த அமைப்பு வெளியிட்ட இதழ் ஒன்றின் ஆசிரியராகவும் அவர் இருந்தார்.
பாசிசத்தால் பழிவாங்கப்பட்டு கொடுமையாகப் பாதிக்கப்பட்ட யூதர்கள் மற்றும் ஆஸ்திரியா, ஜெர்மனி, செக்கோஸ்லாவாக்கியா போன்ற நாடுகளின் அகதிகளுக்கு உதவிடப் பார்வதி நிவாரண நிதி திரட்டினார்.
        அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் ‘தி ஸ்டூடன்ட்’ பத்திரிக்கையின் 1942 ஜூலை இதழில் ‘தேசியப் பாதுகாப்பில் பிரிட்டீஷ் மாணவர்கள்’ என்றொரு கட்டுரை எழுதினார். அதில் பிரிட்டனில் போருக்கும் பாசிசத்திற்கும் எதிராகப் பெருகி வரும் மாணவர் போராட்டங்கள் பற்றிய விரிவான தகவல்களைத் தந்துள்ளார். மேலும் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம் பற்றிய அவர்களது அணுகுமுறையும் ஆராயப்பட்டுள்ளது. சோவியத் சோஷலிசக் குடியரசின் மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் 50 சதத்திற்கும் மேலான மாணவர்கள் கையெழுத்திட்டனர்.  போர் எதிர்ப்பு பிரச்சார இயக்கங்களில்  தேசிய மாணவர்கள் சங்கம் NUS, பல்கலைக்கழகத் தொழிலாளர்கள் சம்மேளனம்(ULF) தீவிரமாக ஈடுபட, உலக இளைஞர் காங்கிரஸ் மற்றும் உலக மாணவர்கள் அஸோசியேஷன் அமைப்புகளும் கலந்து கொண்டன.
        பெரும்பான்மையான பிரிட்டீஷ் மாணவர்கள் இந்திய விடுதலை இயக்கத்தைத் தீவிரமாக ஆதரித்தனர் என்கிறார் பார்வதி. இந்திய விடுதலைப் போராட்டம் குறித்தப் பல்கலைக்கழகத் தொழிலாளர்கள் சம்மேளனம் வெளியிட்ட சிறுபிரசுரம் 20ஆயிரம் பிரதிகள் விற்பனையாயின. இந்திய வாழ்க்கையைச் சித்தரிக்கும் போஸ்டர் கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே மாணவர்கள் ’விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க, இந்தியாவை விடுவி’ என்ற பிரச்சாரத்தைத் துவக்கினர்.
இந்தியா திரும்புதல்
        1941 நவம்பரில் இந்தியா திரும்பினார் பார்வதி. அவர் வந்த கப்பல் இடையே தென்னாப்பிரிக்காவின் டர்பன் துறைமுகத்தில் நங்கூரமிட்டது. இனஒதுக்கலுக்கு எதிரான (ஆன்டி அபார்ட்தைட்) இயக்கத்தின் ஹெஏ நாய்க்கர், நாயுடூ, யூசுஃப் டாடூ போன்ற வீட்டுச் சிறைவைக்கப்பட்டிருந்த தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்றார். எதிர்காலத்தில் சிலோன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான பீட்டர் குன்னிமன் அவர்களை கொழும்புவில் சந்தித்தார்.
        ஆக்ஸ்போர்டிலேயே அறிமுகமான நிகில் சக்ரவர்த்தியைக் கல்கத்தாவில் சந்தித்தார். பின்னாட்களில் நிகில் சக்ரவர்த்தி புகழ்பெற்ற ‘மெயின் ஸ்டிரீம்’ வார இதழைத் துவக்கினார். பார்வதி டெல்லியில் இருந்த சிறிது காலம் அதன் மேலாண்மைப் பணிகளில் உதவினார்.
        கட்சி அவரிடம் தென்னக மாநிலங்களில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஏஐஎஸ்எஃப் அமைப்பைத் திரட்டும் பொறுப்பை அளித்தது. அவரும் சென்னை ராஜதானியின் குறுக்கும் நெடுக்குமான நீண்ட தூரங்கள் பயணம் செய்து அதற்காகக் கடுமையாக உழைத்தார். சேலத்தில் 1942 ஜூன் மாதம் நடைபெற்ற, மெட்ராஸ் மாகாண அளவிலானப் பெருமன்றத்தின், மாநாட்டின் வெற்றிக்கு அவரே முக்கிய காரணம். அந்த மாநாட்டில் என் கே கிருஷ்ணன், ஆர் உமாநாத், மோகன் குமாரமங்கலம், பாலதண்டாயுதம் (பாலன்) போன்றோர் பங்கேற்றனர். ஆர் உமாநாத் பிரதேச மாணவர் பெருமன்றக் கிளையின் செயலாளர் ஆனார். மெட்ராஸ் பிரிசிடன்சி ‘சோவியத் யூனியன் நண்பர்கள்’ (FSU) அமைப்பின் மாநாடு மதுரையில் 1942 நவம்பரில் நடைபெற்றது. அம்மாநாட்டின் தலைமை, சக்ரவர்த்தி சி ராஜகோபாலச்சாரி (ராஜாஜி). அதன் முக்கிய அமைப்பாளராகச் செயல்பட்டவர் பார்வதி கிருஷ்ணன். மேலும் பல புகழ்பெற்ற ஆளுமைகள் பங்கேற்ற மாநாட்டில் TV கல்யாண சுந்தரம் தலைவராகவும் பாலதண்டாயுதம் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1942ல் பார்வதி மாணவர் பெருமன்றத்தின் செயலாளராகவும், பின்னர் ‘இந்திய மக்கள் நாடக மன்றம்’ (IPTA)வின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சி தலைமையகத்தில்
        சுதந்திரத்திற்கு முன்பே பார்வதி கட்சியின் முழுநேர ஊழியராகி, பாம்பேயில் கட்சி தலைமையக்த்தில் பணியாற்றினார். சிபிஐ பொதுச் செயலாளர் பிசி ஜோஷியின் தனிச் செயலாளரானார். கட்சியின் புகழ்பெற்ற தலைவர் என்கே கிருஷ்ணன் அவர்களை மிக எளிய விழாவில் வாழ்க்கை துணைவராக, ‘அவர் காரியம் யாவினும் கைகொடுத்து மாதர் அறங்கள் மாட்சிமை பெற’ மணமுடித்தார். எளிய விழா எனில், திருமண விழாவின் மொத்த செலவே இருபது ரூபாய்தான்! ஏஎஸ்ஆர் சாரி, மோகன் முதலிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். (பின்னர் தன் குழந்தை ‘இந்திரா’வுடன் 1944முதல் கம்யூனில் தங்கிய பார்வதிக்குத் தொடர்ச்சியாகக் கட்சிப் பணிகள் இருந்தமையால் கட்சி அலுவலகத்தில் இருக்கும் தோழர்களே இந்திராவை 5 வயதுவரை வளர்த்தார்கள். – 2019 பிப்ரவரி 20 விகடன் இதழிலிருந்து இணைத்தது). நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அவருடைய மகள், இந்திராவுக்கும் திருமணம் எளிய முறையிலேயே நடந்தது. 1950களில் டெல்லியில் அந்தத் திருமண நிகழ்வின் மொத்த செலவு ரூ2000/= மட்டுமே! திருமணத்திற்கு வந்த தலைவர்களில் பண்டித நேருவும் ஒருவர்.
கலைஞர்களுடன்
        புகழ்பெற்ற கலை, பண்பாடு, இலக்கிய ஆளுமைகளான (எழுத்தாளர்) கைஃபி ஆஸ்மி, (1997ல் வாழ்நாள் சாதனைக்காக ஞானபீட விருது வழங்கப்பட்ட உருது இலக்கிய கர்த்தா) அலி சர்தார் ஜாஃப்ரி, பிருத்வி ராஜ் கபூர் போன்றோருடன் தொடர்பு ஏற்பட்டது. பார்வதி அமைத்த ஒத்திகை நிகழ்வுகளில் அவர்களும் கலந்து கொள்வது வழக்கம். (இப்டா’வின் தந்தை எனப் போற்றப்படும் கலைஞரான) பால்ராஜ் சகானி மற்றும் (திறமையான நடிகையான) அவரது மனைவி தமயந்தி இருவரையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையச் செய்ததில் பார்வதி கிருஷ்ணன் முக்கிய பங்கு வகித்தார்.
தலைமறைவு வாழ்வு
        1948ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது பார்வதி தலைமறைவு வாழ்வைத் தொடங்கினார். 1947ல் அவரது கணவரைக் கைது செய்யும்படி வாரண்ட் உத்தரவில் கையெழுத்திட்டவர் அவரது தந்தை. தமிழ்நாட்டில் சில மாதங்கள் தங்கிய பிறகு, பாம்பே சென்று கட்சியின் பொருளாளராகவும் ஏஐடியுசி-யின் ஆவணங்கள் ஒழுங்குபடுத்தும் மையத்தின் பொறுப்பாளராகவும் பணியாற்றினார். 1949 மார்ச் 9ம் தேதி இரயில்வே வேலைநிறுத்தப் போராட்ட அறைகூவல் தொடர்பாகப் போலீசார் அவரைக் கைது செய்ய முயன்றனர், ஆனால் அவர் பிடிபடாமல் தப்பி விட்டார்.
தொழிற்சங்க இயக்கத்தில்
ஏஐடியுசி தொழிற்சங்க மத்திய அமைப்பில் பணியாற்றுவதுடன் பார்வதி திருப்தி அடையாமல் நேரடியாகக் களப்பணி ஆற்ற விரும்பி, மெட்ராசுக்கு மாறினார். ஏஎஸ்கே ஐயங்கார் அவரை மெட்ராஸ் கார்பரேஷன் தொழிலாளர் சங்கத்தின் முனிசிபல் ஊழியர்கள் மத்தியில் பணியாற்றக் கூறினார். தொழிற்சங்கவியல் பாடத்தை புகழ்பெற்ற தொழிற்சங்கத் தலைவர் சக்கரைச் செட்டியாரிடம் கற்றறிந்து, அந்தச் சங்கத்தின் செயலாளர் ஆனார்.
பார்வதி, என்கே கிருஷ்ணன் இருவரும் 1953ல் கோயம்புத்தூரை, முக்கியமாகத் தொழிற்சங்கப் பணியாற்றுவதற்காக, தங்கள் வசிப்பிடமாக மாற்றிக் கொண்டனர். முக்கியமாகப் பார்வதி, தோட்டத் தொழிலாளர்கள், பீடி, ஜவுளி ஆலை இவற்றோடும் நீலகிரியின் பிற தொழிலாளர்கள், ஆனைமலை, பரம்பிகுளம் மற்றும் வால்பாறை பகுதிகளின் தொழிலாளர்கள் மத்தியிலும் தீவிரமாகப் பணியாற்றினார். தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தின்போது, 1957 ஜனவரி 26ல் வால்பாறை டீ எஸ்டேட்டில் நடத்தப்பட்ட போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் (குடியரசு நாளில் குடிமக்களுக்கு நல்ல பரிசு?). பார்வதியும் என்கே கிருஷ்ணனும் இப்போராட்டங்களில் முன்னே இருந்து போராடினர்.
இரயில்வே வேலைநிறுத்தம்  & மில் தொழிலாளர் போராட்டங்கள்
தனது வாழ்வின் இறுதிவரை, பார்வதி கிருஷ்ணன் கோயம்புத்தூர் மாவட்ட மில் தொழிலார்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார். தொழிற்சங்க முன்னணி ஊழியர்களைப் பயிற்றுவித்து பல இளம் தொழிற்சங்கத் தலைவர்களை உருவாக்கினார். பல சர்வதேசக் கருத்தரங்குகளில் ஏஐடியுசி மற்றும் சிபிஐ கட்சியின் சார்பாகப் பங்கேற்றதுடன்,  உலகத் தொழிற்சங்கச் சம்மேளனம் WFTU-ன் பொதுக்குழு உறுப்பினராகவும் திறமையாகச் சிறப்புடன் பணியாற்றினார். தேசிய இரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனம் NRWF-ன் தலைவரானார். இரயில்வே ஊழியர்களின் போராட்ட இயக்க தேசிய ஒருங்கிணைப்புக் குழு (NCCRS) வில் பார்வதியும் ஒரு உறுப்பினர். (ஜார்ஜ் பெர்னான்டஸ் உள்ளிட்ட) அந்தக்குழு முன்னின்று நடத்தியதே 1974ன் இரயில்வே வேலைநிறுத்தம்.  (மே 8 முதல் 27வரை இருபது நாட்கள் நடைபெற்ற அந்தப் போராட்டம், 17லட்சம் இரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்ட உலகின் மிக பிரம்மாண்டமான போராட்டம்). பார்வதி கைது செய்யப்பட்டு சில காலம் சிறையில் இருந்தார். ஊழியர்களுக்கான ஸ்டேட் இன்ஷுரன்ஸ் கார்ப்பரேஷன் நிலைக்குழுவின் உறுப்பினராக 1962முதல் 1970வரை இருந்தார். கோயம்புத்தூர் ஜவுளி ஆலைகளின் மையமாக மட்டுமின்றி பிற தொழிற்சாலைகளுக்கும் புகழ்பெற்ற நகரமாகும். பார்வதி கிருஷ்ணன் பெரும்பகுதி காலம் அந்தப் பகுதியின் தொழிற்சங்க இயக்கங்களிலேயே பாடுபட்டார். அறுபது ஆண்டுகளுக்கும் மேல் தொழிற்சங்கங்களிலும் பொது வாழ்விலும் அர்ப்பணித்த அவருடைய சேவைக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏஐடியுசி பாராட்டு விழா எடுத்தது.
இங்கிலாந்து சர்வதேச பிரிஹேடு குழுவின் தன்னார்வத் தொண்டர்களோடு எவ்வளவு சகஜமாகவும் சிரமமின்றியும் உரையாடுவாரோ அப்படி அத்தகைய நெருங்கிய இயல்பாய் டெக்ஸ்டைல் தொழிலாளர்களோடும், வால்பாறை டீ எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரோடும் சுலபமாகப் பேசி உரையாடக் கூடியவர் பார்வதி கிருஷ்ணன்.
டெக்ஸ்டைல் போராட்டமும், ஆலைகள் நாட்டுடைமையும்
கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் (டெக்ஸ்டைல் ஆலைகளுக்குப் பெயர்பெற்ற இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள பழம்பெருமை வாய்ந்த நகரம்) எனப் புகழப்படுவது. 1967ல் பங்கஜா மில்ஸ், காளீஸ்வரா மில்ஸ், கம்போடியா மில்ஸ் உட்பட 15 ஆலைகள் நலிவடைந்தவை என அறிவிக்கப்பட்டன. அந்த ஆலைகளைத் தவறாக நிர்வகித்த முதலாளிகளைத் தொழிலாளர்கள் கடுமையாக எதிர்க்க, மாபெரும் போராட்ட இயக்கம் உருவானது. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். வீரம் செறிந்த இப்போராட்டத்தைப் பார்வதி கிருஷ்ணனும் பிற தலைவர்களும் வழிநடத்தியதன் பலனாய், அந்த மில்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு ‘தமிழ்நாடு டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன்’ அமைக்கப்பட்டது. பார்வதி கிருஷ்ணன் தொடர்ந்து இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றதால் ‘தேசிய டெக்ஸ்டைல் கார்பரேஷன்’ (NTC) 1974ல் உருவானது. மில் தொழிலாளர்களுக்கான ஊதிய உடன்பாடு 1956ல் ஏற்படுவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.
(பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டத்தை விரிவுபடுத்திப் பொங்கலூர், பல்லடம் வரையுள்ள வறட்சியான பகுதிகளுக்குப் பாசன வசதி கிடைத்திட, கோவை சுற்றுப்புறப் பகுதி சிறு குறு தொழிலாளர் நலன் சார்ந்த போராட்டங்களில் எப்போதும் அவரின் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. -- விகடன் 2019 பிப்.20 இதழிலிருந்து )
சர்வதேச அரங்கில்
1957ல் ஏஐடியுசி-யின் துணைத் தலைவர்களில் ஒருவராகவும், 1971ல் அவர் கல்கத்தாவில்  செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989ல் மீண்டும் ஏஐடியுசி-யின் துணைத் தலைவரானார்.  1956ல் ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்ட் நகரில் நடந்த முதலாவது சர்வதேச உழைக்கும் பெண்கள் மாநாட்டினைத் துவக்கி வைத்தவர் பார்வதி கிருஷ்ணன். 1975ல் மெக்ஸிகோவில் நடைபெற்ற ‘சர்வதேச பெண்கள் ஆண்டு’ ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் பார்வதி கிருஷ்ணன் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
பாராளுமன்றத்திற்குத் தேர்வு
        அவர் 1952ல் முதன் முதலாக பாராளுமன்ற மக்களவைக்குப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1954ல் மாநிலங்களவை உறுப்பினரானார். 1957ல் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் மக்களவைக்கு  இடைத் தேர்தலில் 1974 லிலும், பின்னர் 1977லிலும் வென்றார். 1977ல் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய், பெண்கள் குறித்து மன்றத்தில் பேசத் தகாத சொற்களைக் கூறிய போது அவையைத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்தவர் பார்வதி கிருஷ்ணன். பிரதமரை வற்புறுத்தி வருத்தம் தெரிவிக்கச் செய்தார், பார்வதி.
        பாராளுமன்ற விவாதங்களின் தரம் தாழ்ந்து வரும் நிலை குறித்துக் கவலையோடு பார்வதி வருந்தினார். 2014ம் ஆண்டு, பிப்ரவரி 20ம் நாள் தனது 95வது அகவையில், முதிர்ந்த வயதில், கோவையில் காலத்தோடு ஐக்கியமானார், ஆகச் சிறந்த தோழியர் பார்வதி கிருஷ்ணன்.
        அவர் கவலை தெரிவித்த அன்றைய சிறு பிரச்சனைகள், இன்று பூதாகாரமாக நாளும் நாளும் தொடர்ந்த வண்ணம் வெருட்டுகின்றன.  பாராளுமன்றம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது இந்த நாட்களில்.
அவர் அன்று சொன்னது அர்த்தம் உள்ளது, ஆய்ந்து அறிய ஆயிரம் உள்ளது!
--தமிழில் : நீலகண்டன்,
  என்எப்டிஇ, கடலூர்


No comments:

Post a Comment