Sunday 19 July 2020

பி வி நரசிம்மராவ் பிறந்தநாள் நூற்றாண்டு -- எஸ் சுதாகர் ரெட்டி கட்டுரை மொழிபெயர்ப்பு


முன்னாள் பிரதமர் நூற்றாண்டு விழா


பி வி நரசிம்மராவ் அவர்களின் மறுபக்கம்


       “நான் சீசரைப் புதைக்க வந்திருக்கிறேன், புகழ்வதற்காக அல்ல. மனிதர்களின் சாவுக்குப் பிறகும் அவர்கள் செய்த தீமைகள் உயிர்ப்பாய் நினைவில் இருக்கும். செய்த நன்மைகள்தான் பெரும்பாலும் அவர்கள் எலும்போடு மண்ணில் புதைந்துவிடும்”

                                                   ---சேக்.ஷ்பியரின் ‘ஜூலியஸ் சீசர்’

                                                    நாடகத்தில் மார்க் அன்டனி

                                                                 

 --எஸ் சுதாகர் ரெட்டி, (சிபிஐ மேனாள் பொதுச் செயலாளர்)

        தெலுங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகரராவ் இந்த ஆண்டு முழுவதும் பி வி நரசிம்மராவ் பிறந்தநாள் நூற்றாண்டைக் கொண்டாட அழைப்பு விடுத்துள்ளார். எதைச் செய்தாலும் பிரம்மாண்டமாகச் செய்வதைப் பழக்கமாகக் கொண்ட சந்திரசேகரராவ், அதற்கேற்ப முன்னாள் பிரதமருக்குப் பாரத இரத்னா விருது வழங்கக் கோரி இந்தத் தருணத்தைத் தனது அரசியலுக்குப் பயன்படுத்தியுள்ளார். அவருக்குப் பயம், எங்கே பாஜக இந்தத் தருணத்தைச் சர்தார் வல்லபாய் பட்டேலைக் கடத்தியது போல கடத்திவிடுமோ என்று. எனவே நரசிம்மராவ் புகழை அதிகரிக்க அவரைப் பெரும் நேயத்திற்குரிய தெலுங்கானாவின் மகன் என்பதைச் சந்திரசேகரராவ் வலியுறுத்துகிறார்.

        காங்கிரஸ் கட்சியை அரசியல் ரீதியாகச் சீண்டி, சங்கடப்படுத்துவதே அவரது நோக்கம். கேசிஆர் புத்திசாலி, ஆனால் தன் சொந்த நலனுக்காக மட்டுமே அரசியல் தந்திரங்களைக் கையாளுபவர்; புத்திசாலித் தலைவர்கள் எல்லாம் நல்ல மனிதர்களாகவும், மக்களுக்கு ஆதரவாளர்களாகவும் இருக்கத் தேவையில்லை என ஒருமுறை மூத்தப் பத்திரிக்கையாளர் விமர்சித்தது சரிதான்.

நரசிம்மராவ் ஓர் அறிவாளி. முந்தைய ஹைத்ராபாத் அரசின் உயர்குடி நிஜாமின் ஆட்சியை எதிர்த்தார். ஆனால் அன்றைய காங்கிரஸின் நிஜாம் எதிர்ப்புப் போராட்டங்கள் ஒரு வரையறைக்குள் குறைவானது. அப்போது மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் சுவாமி இராமானந்த தீர்த்தர். தெலுங்கானா, கர்னாடகா, மகாராஷ்டிரா மூன்று பகுதிகளுக்கு முறையே பிவி நரசிம்மராவ், வீரேந்திர பாட்டீல், SB சவாண் பொதுச் செயலாளர்கள். பின் அந்தந்தப் பகுதி மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஆனார்கள்.

ஆந்திர மகாசபாவில் நரசிம்மராவ் பெரிய அளவில் பங்கு வகித்ததற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை. முந்தைய ஹைத்ராபாத் இராஜியத்தின் முக்கிய அரசியல் பங்கு வகித்த ஆந்திர மகாசபாவில் வலதுசாரிகள், இடதுசாரிகள், மத்திய கொள்கைநிலை உடைய சக்திகள் அனைவருமே இருந்தனர். ஆனால் மகாசபாவில் ராவின் பங்கு அதிகமில்லை. மற்றவர்களோடு சேர்ந்து வந்தே மாதரம் பாடலைப் பாடியதற்காக உஸ்மானியா பல்கலைக்கழகத்திலிருந்து நரசிம்மராவ் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்பி விட்டார்கள். பின்னர் அவர் நாக்பூர் பல்கலைக் கழகத்தில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தார்.

அவரது வாழ்க்கை வரலாற்றைத் தொட்டுக் காட்டுவதல்ல எனது நோக்கம். தேசத்தின் மிகமிக முக்கியமான அக்கறைமிக்கத் தருணங்களில் அவருடைய சில அரசியல் நிலைபாடுகளைச் சுட்டிக் காட்டுவதற்காகவே. மாநில அமைச்சராகப் பலதுறைகளை ஏற்று பொறுப்புகளையும் சுமந்துள்ளார். ஆனால் அவர் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல.  மத்தியில் அவரது பங்கு குறித்து வேறுபட்டதான பல கருத்துகள் உண்டு.

அவர் மாநிலத்தில் பொறுப்பு வகித்தபோது ரெட்டிகள் அல்லது (விஜயநகரப் பேரரசின் கீழ் பத்மநாயக்க வேலம்மாவின் வேலுகோட்டி வம்சத்தை சேர்ந்த) வேலம்மா நிலச்சுவான்தாரர்களுடன் எந்த முரண்பாடுகளும் வராமல் தவிர்த்தார். அப்போது அவர்கள்தான் பொருளாதார, அரசியல் ரீதியாக மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் வலிமை பெற்றிருந்தார்கள். பல மொழிகளில் புலமைமிக்க நரசிம்மராவ் எப்போதும் தனது பணிகளில் ஆழமாக ஈடுபடும் பழக்கமுடையவராக இருந்தார்.

ஒருங்கிணைந்த ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது, நிலச்சுவான்தாரர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்காமல், நடுத்தர வர்க்க அரசியல்வாதிகளுக்கு இடம் தருவதையே தேர்ந்தெடுத்தார். சட்டமன்றத்தில் கூடுதலான இடங்களைப் பிற்பட்டச் சமூகங்களைச் சார்ந்தவர்களுக்கே ஒதுக்கினார் என்பதும், ஒருசாராரின் கருத்து.

ஒருசில ஊடகங்களின் பிரச்சாரம், நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்தியதன் மூலம் அவர் கம்யூனிஸ்ட்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் என்பது; ஆனால் உண்மையல்ல.

சரித்திரப் புகழ்பெற்ற தெலுங்கானாவின் ஆயுதப் போராட்டமே நிலச்சீர்திருத்தப் பிரச்சனையை முன்னுக்கு எடுத்து வந்தது. அது நில உடைமையின் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிந்தது. கம்யூனிஸ்ட் கட்சி 10லட்சம் ஏக்கர் நிலங்களைப் பகிர்ந்து கொடுத்தது. இது நிலம் குவிக்கப்படுவதை ஓரளவு குறைத்தது என்றாலும், நிலச் சீர்திருத்தம் மாநில அரசால் நியாயமாக, முறையாக அமல்படுத்தப்படவில்லை. தீவிர நிலச்சீர்திருத்தத்தை வற்புறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டியதோடு, ‘உழுபவர்களுக்கே நிலத்தை உரிமையாக்கு’ என்ற போராட்ட இயக்கங்களையும் நடத்தியது.

மாநிலத்தில் நிலச்சீர்திருத்தத்தைப் பிரகடனப்படுத்திய நரசிம்மராவ் அரசு, 36 லட்சம் ஏக்கர் உபரிநிலம் இருந்ததை வெளிப்படுத்தியது. ஆனால் நடைமுறையில் வெறும் ஐந்து முதல் ஆறு லட்சம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டன. அதிலும் இறுதியில் பார்த்தால் அரசு பிரித்துக் கொடுத்த இரண்டரை லட்சம் ஏக்கர் நிலங்கள் அத்தனையும் கரம்பு, கல்லாங்குத்து (கற்கள் மிகுந்து காணப்படும் நிலம்), வறுநிலம், பாழ் நிலமாக (நிலத்தின் பயன்பாடு கருதி தமிழில் 106க்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன) பாறையும் புதருமாக விவசாயத்திற்குப் பயன்படாத மலைப்புறத்தில் உள்ள நிலங்கள்.

நில உரிமையாளரோ தனிப்பட்ட விவசாயியோ எவ்வளவு நிலம் வைத்திருக்கலாம் என அரசு முடிவு செய்து பொது அறிவிப்புச் செய்தது. கூடுதலாக நிலம் வைத்துக் கொண்டிருப்பவர்களை நோட்டீசுக்குப் பதில் அளிக்கச் சொன்ன அரசு, உபரிநிலத்தைக் கைப்பற்றும் அதிகாரத்தை மட்டும் தன்கையில் வைத்திருக்கவில்லை. எனவே இன்று வரை நிலஉடைமையாளர்கள், மைனர் குழந்தைகளின் வயதை மாற்றியும், கணவன் மனைவியாக வாழ்ந்தாலும் சட்டப்படி டைவர்ஸ் பெற்று மனைவிகள் பெயரிலும், ஏன் வளர்ப்பு நாய்கள் பேரிலும் நில ஆவணங்களை மாற்றி எழுதி, உபரி நிலங்களைத் தங்கள் வசமே வைத்துக் கொண்டு நிலஉச்சவரம்பு சட்டத்திலிருந்து தப்பிக்கின்றனர். நிலச்சீர்திருத்தம் பற்றி பகட்டாக விளம்பரப்படுத்தினாலும், அமலாக்கம் என்னவோ மட்டுப்பட்டதாகவே உள்ளது. அன்றைய காங்கிரஸ் அரசின் நிலச்சீர்திருத்த மர்மதேசக் கதை இப்படியாக உள்ளது.

ஆனாலும் சிலபகுதியினர் நரசிம்மராவைப் புகழ்ந்து கொண்டாட முக்கியமான காரணம், தாராளமய புதிய பொருளாதாரக் கொள்கையை அவர் கொண்டு வந்தார் என்பதே. இதனால் பெரு முதலாளிகள் வளர்ச்சியடைந்து கார்ப்பரேட்டுகள் ஆனார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் செல்வம் குவியத் தொடங்கியது. சமத்துவமற்ற வளர்ச்சி தீவிரமடைந்தது, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி பெரும் பிளவாக அகலமாகிறது.

விடுதலை அடைந்ததும் நமது பாரத தேசம் மற்றவர்களைச் சார்ந்து வாழும் நாடாக இருப்பதையே அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய தேசங்கள் விரும்பின. ஆனால் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு, அந்நாடுகளின் விருப்பத்திற்கு மாறான பொருளாதாரக் கொள்கைகளை வகுத்தார். அவர்கள் தந்திரங்களிலிருந்து நாட்டைக் காப்பாற்றத் தேசத்தின் சுயசார்பிற்கான நடவடிக்கைகளை எடுத்தார். கனரக ஆலைகளை நிறுவினார். கேந்திரமான துறைகளைப் பொதுத்துறையில் நீடிக்கச் செய்தார். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு 1990ல் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு உதவ யாரும் இல்லை. இந்தப் பின்னணியில் இதனைக் காரணமாக்கி, பிவி நரசிம்மராவ், “உலகமயம்” என்பதைப் புகுத்தினார். [கோவிட் பாதிப்பில் இன்று ஒவ்வொரு நாட்டிலும் தடுப்புச் சுவர் எழுப்பாத குறையாக ‘உலகமயம்’ படாதபாடு படுகிறது. ‘ஆத்மநிர்பார் பாரத்’ கூட அதன் ஒரு வெளிப்பாடே]. உலகமயக் கொள்கையால் இந்தியாவில் மிக விரைவாகக் கார்ப்பரேட் முதலாளித்துவம் வளர்ந்தது.  செல்வம் சிலர் கையில் குவிய, ஏழ்மை பலமடங்கு அதிகரித்தது. அப்போதேகூட அவருடைய சீர்திருத்தங்கள் மனிதநேய கண்ணோட்டம் இல்லாமல் இருந்ததாக சில விமர்சனங்கள் எழுந்ததுண்டு என்பது ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. பிரதமர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இது குறித்து சில பத்திரிக்கையாளர்கள் தனிப்பட்ட முறையில் கேட்டபோது, அவரும் அந்த விமர்சனத்திற்கு உடன்பட்டார். அப்போது ஒப்புக்கொண்டு என்ன ஆகப் போகிறது, காலம் கடந்த ஞானம் – எல்லாம் தாமதமாகிக் கை மீறிப் போய்விட்டது.

ஆனால் அவை வேறு காலம், வேறு சூழல். இன்றோ அனைத்துப் பிரிவுகளிலும் வெளிநாட்டு முதலீடுகளுக்குக் கதவுகள் அகலத் திறந்துவிடப்பட்டுள்ளன. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தைவிட தற்போது நமது நாடு மிக அதிகமாக இறக்குமதிகளையும் வெளிநாட்டு முதலீடுகளையும் சார்ந்து வைக்கப்பட்டுள்ளது.  

நரசிம்மராவின் பொருளாதாரச் சீர்திருத்தத்தங்களைச் சிலபகுதியினர் புகழ்தாலும், இடதுசாரிகளும் ஜனநாயக சக்திகளும் எதிர்த்தனர். அவரது சீர்திருத்தம் உலகமயத்திற்கு வழியமைத்தது; அது, ஏழ்மையையும் பொருளாதார ஏற்றத்தாழ்வையும் அதிகரித்ததால் நியாயமாகவே இடதுசாரி, ஜனநாயகவாதிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

முதலில் நரசிம்மராவ் விபத்தில் பிரதமரானவர். அவருக்கென்று கட்சியில் தனியே ஆதரவாளர்கள் இல்லை. மற்ற குழுக்களிடையே ஒற்றுமை இல்லாததால் வேறுவழியின்றி அவர் பிரதமராக்கப்பட்டார். அவர் மிகவும் பலவீனமான பிரதமராவார் என எல்லோரும் நினைத்தார்கள். எப்படியோ முழு ஐந்து ஆண்டுகளும் பிரதமராகத் தாக்குப் பிடித்தார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானது அவருக்குப் பெரிதும் பயன்பட்டது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறச் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கையூட்டு அளிக்கப்பட்டதாகச் சில குற்றச்சாட்டுகளும் எழுப்பப்பட்டன. இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்கு நடந்தது; ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்றாலும்,  அது உண்மையே. பி வி நரசிம்மராவின் நெருங்கின உறவினர் ஒருவர் இதன் முழுமையான பின்னணியில் இருந்தார். பின்னர் அவருக்கு ராஜ்ய சபாவில் ஓர் இடம் பரிசாகவும் வழங்கப்பட்டது.

நரசிம்மராவ் ஆட்சியின் மிகப் பெரிய தோல்வி, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அவர் தடுக்கத் தவறியது. ‘பாபர் மசூதியை நாங்கள் இடிக்க மாட்டோம்’ என்று (கரசேவையின் போது) பாரதிய ஜனதா கட்சி அளித்த உறுதி மொழியை, உச்சநீதிமன்றமும் பிவி நரசிம்மராவையும் தவிர, வேறு யாரும் நம்பவில்லை.

அப்படியே பாபர் மசூதி இடிக்கப்பட்டு விடுமானால், அதன் பிறகு கலவரங்கள் எதுவும் நிகழாது; அல்லது இடிக்கும் செயலைத் தடுக்கும் ஆற்றல் அற்றவர் அவர் என்ற தவறான முன்கணிப்பால் நரசிம்மராவ் செயல்படாது அசைவற்று இருந்ததற்குக் காரணமா என்பன போன்ற கேள்விகள் எழுந்தன. 

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நரசிம்மராவ் தடுக்காததால், குறிபிடத்தக்க அளவு மைனாரிட்டி வாக்குளைக் காங்கிரஸ் இழந்து விட்டது என்ற கருத்து காங்கிரஸ்காரர்கள் மத்தியில் வளர்ந்தாலும், அவர்கள் அதை வெளியில் வெளிப்படையாகக் கூறவில்லை. இதன் காரணமாகத்தான் பாஜக-வுக்கு நரசிம்மராவ் பால் ஒரு வகையான அனுதாப அணுகுமுறை இருக்கிறது. (இல்லையென்றால், ‘நேரு அளவு திறமையானவர் ராவ்’ எனச் சந்திரசேகரராவ் புகழும்போது, நேருவை அவமதிக்கும் பாஜக, நரசிம்மராவைக் கொண்டாடுமா?)

இவை எல்லாவற்றையும் தாண்டி, நரசிம்மராவ் சில அடிப்படையான நெறி சார்ந்த விழுமியங்களைப் பற்றி நின்றார். சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக் கொண்டார் என்பதும் உண்மையே. அரசியல் எதிரிகளோடுகூட அவர் மென்மையான அணுகுமுறை கொண்டிருந்தார். தவிர்க்க முடியாதபடி ஒரு கடுமையான முடிவை எடுக்க வேண்டிய நிர்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டால், அவர் மௌனத்தைக் கடைப்பிடிப்பார்; தான் எதன் பக்கம் நிற்கிறோம் என்பதைத் தெளிவாகக் கூறாததன் மூலம் சர்ச்சைகளிலிருந்து விலகி நிற்பார். ஓய்வு பெறும் நிலையில் எதிர்பாராது பிரதமராகி முழுமையாக ஐந்தாண்டு ஆட்சிகாலத்தை நிறைவு செய்தார். அந்த வயதில் அவர் கணிணி தொழில்நுட்பச் செயல்பாடுகளில் தன்னைத் தகவமைத்துக் கொண்டார் என்பதும் தினமும் 10லிருந்து 12 மணி நேரம் பணியாற்றும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் என்பதும் பாராட்ட வேண்டிய வியப்பிற்குரியது. இதனால் உலக வங்கியோடு நேரடியாகத் தொடர்புகளை வளர்த்துக் கொள்ள இது வாய்ப்பமைத்துத் தந்தது.

நரசிம்மராவின் வாழ்வு இருளும் ஒளியும் நிரம்பிய பக்கங்களை உடையது. அவரது பிறந்தநாள் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் இன்றைய தலைவர்களின் அரசியல் விளையாட்டின் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது. அந்த விளையாட்டில் நேற்று வல்லபாய் பட்டேல், இன்று பி வி நரசிம்ம ராவ்.     

-- நியூஏஜ் ( ஜூலை 19 –25)

--தமிழில் : நீலகண்டன்,

தொடர்புக்கு 94879 22786


No comments:

Post a Comment