Tuesday 28 July 2020

கோவிட் பாதிப்பு நேரத்தில் கோயில் கட்ட கோடிக் கணக்கில் செலவிடுவதா?




நியூஏஜ் (இதழ், ஜூலை26 –ஆக.1) கட்டுரை

அயோத்தியா விளையாட்டை நிறுத்து!
கோயில் கட்டும் பணத்தை ஏழைகளுக்குச் செலவிடு!

--பினாய் விஸ்வம் MP
          டாக்டரின் ஸ்டெத்தஸ்கோப் போல அரசியல், சமூகத்தின் இதயத் துடிப்பைக் கட்சிகள் அறிந்து கொள்ள உதவுவது. கட்சிகளின் அரசியலைத் தீர்மானிக்கும் தத்துவம் அவற்றின் வழிமுறைகள், செயல்திட்டங்களில் செல்வாக்கு செலுத்துகின்றன. தனது அரசியல் திட்டங்களை வெளிப்படையாக மக்களிடம் உடனடியாகத் தெரிவித்துவிடக் கூடாது என பாஜக நினைத்து, அவற்றை மறைத்தது ஒரு காலம். அந்தக் காலத்தில் அத்திட்டங்களின் நிகழ்ச்சிநிரலைச் சங்பரிவார் அரசியலின் கருவறையில் பக்தியோடு சேமித்து வைத்திருந்தனர். எனவேதான் அரசியல் நோக்கர்களும் “மறைமுகத் திட்டம்’’ என்று அழைத்தனர் போலும்!
        தேசிய அரசியல் அரங்கில் நரேந்திர மோடி நுழைந்தது முதல், அவர்களின் நிகழ்ச்சி நிரலின் ஒவ்வொன்றாக, மக்களின் விருப்பம் என்று சொல்லி, சமூகத்தின்முன் உந்தித் தள்ளப்படுகின்றன. இரண்டாவது முறை மோடி ஆட்சியில் மறைமுகத் திட்டங்கள் கொடூரமாக வெளிப்படுகின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டம், குடிமக்கள் பதிவேடு, அயோத்தியா, ஜம்மு காஷ்மீர் எனப் பல தருணங்களிலும் அதனை நாட்டு மக்கள் பார்த்து வருகின்றனர். பக்தியோடு பாதுகாத்த நிகழ்ச்சி நிரல் அமலாக்குவதற்கான நேரம் கனிந்து விட்டது என்பது அவர்கள் தத்துவத்தின்படி பாஜக-வின் அரசியல் கணிப்பு. ஒரு வகையில் உண்மைதான், பலஆண்டுகளாகத் தொடர்ந்து சமூகத்தில் மத வெறுப்புணர்வுக்கான விதைகளை விதைத்து, களத்தை அதற்கேற்பத் தயாரித்து வந்தார்கள். சாதாரணமாக அல்ல, நன்கு திட்டமிட்டு இந்திய வாழ்வின் சகல பகுதிகளிலும் எதிர்ப்புக் குரல்களையும் அறிவார்ந்த கேள்விகளையும் தொடர்ந்து ஒடுக்கி வந்தார்கள்.
        இப்போது ராமர் கோயில் கட்டும் அறிவிப்பு, அநேகமாக ஆகஸ்ட் முதல் வாரம் துவங்குமென, வெளியாகி உள்ளது. இயல்பாகவே பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டுவார், அதுவும் வந்துள்ள தகவல்களின்படி,  ‘வெள்ளிப் பாளமாக’! எண்பது வயது முதியவரான எல்.கே அத்வானியையும் பூமி பூசைக்கு அழைக்கும் அளவு அவர்பால் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்குப் பெரிய மனது!. என்ன இருந்தாலும் அவர் ஒரு காலத்தில் நரேந்திர மோடி உட்பட அனைவருக்கும் ‘லோக புருஷராக’ விளங்கியவர் அல்லவா! பிரம்மாண்டமான அத்திட்டத்தில் 1300 கோடி ரூபாய் செலவிடப்படும் எனத் தகவல்கள். கோயில் கட்டுமானம், சுற்றுப்புற நிலங்களை மேம்படுத்துவது உட்பட இந்தத் தொகை. இந்த முன்னேடுப்பு வரும் நாட்களிலும் பகவான் இராமர் பாஜக அரசியலின் மைய இடத்தை வகிப்பார் என்பதைப் பிரகடனப்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிகாட்டலில் ஏற்கனவே பாஜக, தங்கள் குறுகிய அரசியல் நோக்கத்திற்கு மக்களின் மத நம்பிக்கையைப் பயன்படுத்தும் கலையில் விஞ்சிவிட்டது. கடந்த காலங்களிலும்கூட தீவிர வலதுசாரி சக்திகள் புராணங்களையும் நம்பிக்கைகளையும் தங்கள் தேவைக்குப் பயன்படுத்தி உள்ளன. ஒருமுறை ஆட்சி அதிகாரம் கைக்கு வந்ததும் புராண, மத, நம்பிக்கைகளை அன்றாடம் முற்றி வளரும் நெருக்கடிகளச் சமாளித்து மூடிமறைக்கும் நல்லதொரு மறைப்பாக்கி விடுகின்றன. வலதுசாரி அரசியல், மற்றும் அதன் கார்ப்பரேட் எஜமானர்களுக்கு மதநம்பிக்கை என்பது தங்கள் --பொருளாதாரப் பேராசை மற்றும் அதிகார வெறி – இலக்குகளைச் சுற்றி ஜனரஞ்சக உணர்ச்சி வெறியூட்டல் எழுப்பும் கருவி அவ்வளவே.
        இந்தியா சுதந்திரம் பெற்றபின் 1980 தொடங்கி உருவாகியுள்ள அரசியல் சமூக வளர்ச்சிப் போக்கின் திருப்பு முனை பாபர் மசூதியைச் சுற்றி அமைகிறது. ‘பிரித்தாளும் அரசியல்’ சூத்திரதாரிகளுக்கு அயோத்தியாவின் மோதல் முரண்பாடுகள் எப்போதுமே ஒரு வலிமையாக ஆயுதமாக உள்ளது. அப்பாவிகளான ஆழ்ந்த நம்பிக்கை உள்ள பக்தர்கள், தந்திரம் உடைய அரசியல்வாதிகளால் சூழ்ச்சியாகத் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். அதிகார அரசியல் விளையாட்டு எனும் சதுரங்கத்தில் இப்போது அந்தச் சூழ்ச்சி விளையாட்டை விளையாடுவது நரேந்திரமோடியின் முறை.
அயோத்தியா காட்சிகளைப் பார்த்து வரும் நுட்பமான அறிவும் உணர்வும் உடைய இந்தியர்கள், எப்படியெல்லாம் இராமாயணம், சங் பரிவார் கூட்டத்தால் தவறாக வியாக்யானம் செய்யப்படுகிறது என்பதைக் கண்டு வியக்கவே செய்வர். எந்த ஸ்ரீஇராமனை அவர்கள் பேசுகின்றனர்? பவித்திரமான பக்தி உடைய அன்பர்கள் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு உரிமை படைத்தவர்கள். அது அவர்களின் உரிமை மட்டுமே அல்ல. இராமாயணம் போன்ற காவியங்கள் இந்தியக் கலப்புப் பண்பாட்டு மரபின் பிரிக்க முடியாத அங்கம். எனவே ஒவ்வொரு இந்தியனும் இந்தக் கேள்வியைக் கேட்க அதிகாரம் உடையவர்கள். எந்த இராமனைக் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள்?
இராமாயண மகாகாவியத்தில் உள்ள ஸ்ரீஇராமரும் பாரதிய ஜனதா கட்சியின் (ஜெய்)ஸ்ரீராமும் ஒருவராக இருக்க முடியாது. இராமாயணத்தின் இராமர் மரியாதைக்குரிய புருஷோத்தமன். ஆனால் பிஜேபி கோஷமிடும் ஸ்ரீராம் அதிகாரப் போருக்காகச் சண்டையிடச் செல்லும் ஆயுதப்படை தலைவன். தந்தையின் ஒரு சொல்லைத் தலைமேற்கொண்டு அரியணையைத் துறந்த இராமர் எங்கே, பிறமத நம்பிக்கையாளரின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்தக் கரசேவகர்கள் கும்பலின் அடையாள ஸ்ரீராம் எங்கே? பதவியைத் துறந்த இராமாயண இராமரைப் பதவி வெறிக்கான அடையாளமாகப் பாஜக மாற்றி விட்டது. எனவே இராமாயண மகாகாவியத்தின் ஸ்ரீஇராமரும் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்ரீராமும் ஒருவராக இருக்கவே முடியாது.
இராமாயணத்தில் வால்மீகி முனிவரின் இராமன், முடியைத் துறந்து கானகத்தில் கழித்த 14 ஆண்டுகளின் வாழ்க்கை,  மிகுந்த மகிழ்ச்சியோடும் திருப்தியாகவும் இருந்தது. ஆனால் பாஜகவின் ராம் அதிகாரத்திற்கு விரைவாகச் செல்லும் படிக்கட்டாக அல்லவா முன்னிறுத்தப்பட்டான் – இந்நாட்டு மக்கள் வாழ்க்கையின் உண்மையான நம்பிக்கை மிகுந்த கடவுளையே அவர்கள் களவாடிக் கடத்திச் சென்று விட்டார்கள். மக்களின் பக்திப் பாதையில் அவர்கள் நிகழ்த்திய நம்பிக்கை மோசடிப் போக்கை மறைக்க, மதத் தீவிரவாத உணர்வுகளை ஊதிப்பெருக்கி, மதநம்பிக்கை உள்ள சாதாரண மக்கள் தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்க முடியாதபடிச் செய்துவிட்டார்கள்.  
இராமாயணத்தின்படி ஸ்ரீராமருடைய முதன்மையான அக்கறை நாட்டு மக்களின் நலவாழ்வு. வீதியில் நடக்கும்போது எதிர்ப்படுவோரை அன்போடு நலம் விசாரிக்கும் இராமன். (அதனால்தான் காந்தியடிகளின் கனவு சமுதாயம் இராமராஜியம் எனப்பட்டது. காந்தியின் `ராம ராஜ்யம்' என்பதற்கு `‘மக்களும் அரசும் நேர்மையாக இருக்கின்ற ஆட்சி' என்பதே அவர் தரும் பொருள். காந்தியின் இராமன் ஒரு லட்சிய மனிதன், அயோத்தியில் பிறந்த வரலாற்று மனிதராக அவர் ஒருபோதும் கருதவில்லை. காந்தியின் ‘ஹே ராம்’ ஒருபோதும் பாஜக-வின் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமாகாது. மதத்தினை அன்பின்வழியில் அணுகுவதற்கும், ஆதிக்கத்தின் வழியே அணுகுவதற்கும் உள்ள முரண்பாடு அது.)
ஆனால் நரேந்திரமோடியின் ஆட்சின்கீழ் இந்தியாவில் இன்று என்ன நடக்கிறது? அவர்களுடைய செயல்திட்ட முன்னுரிமைகளில் மக்கள் எப்போதுமே கடைசியில் வைக்கப்பட்டுள்ளனர். பணக்கார முதலாளிகளுக்கு மேலும் லாபம் என்பதே, அவர்கள் வழிபாட்டின் மந்திர உச்சாடனம். கோடிக் கணக்கான இந்தியக் குடிமக்கள் பட்டினிக் கொடுமையில் பரிதவிக்கும்போது, இவ்வளவு கோடிக் கணக்கிலான ஆலய நிர்மாணத் திட்டத்தில் செலவிடுவதைக் கடவுள் ஆசிர்வதித்து அனுமதிப்பாரென எந்த உண்மையான இராமபக்தரும் நம்புவாரா? புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவும் உறைவிடமும் வழங்கத் தன்னிடம் நிதி இல்லை என்று கைவிரிக்கும் அரசு, இந்த நேரத்தில் தன்னுடைய பெயரில் ஆலயம் கட்டக் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்வதை நிச்சயம் ஸ்ரீராமர் ஒப்புக்கொள்ளவே மாட்டார்.
எனவே இராமாயண மகாகாவியத்தின் ஸ்ரீஇராமர் பால் உண்மையான பற்று இருக்குமானால், நரேந்திரமோடி அயோத்திக்குச் செல்லும் திட்டத்தை ரத்து செய்வதுடன், இப்போது ராமர் கோயில் கட்டும் திட்டத்தை உடனடியாக முழுமையாக மறுபரிசீலனைச் செய்ய வேண்டும். ஸ்ரீராமரின் மீதுஉண்மையான நம்பிக்கையுள்ள பெரும்பான்மையினர் ஸ்ரீராமரின் போதனைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும். இல்லையெனில், அதிகாரத்தைத் தேடிஓடும் இராவணப் பேராசைக் கும்பல், சூழ்நிலையைக் கைப்பற்றுவதுடன் ஏழை எளியவர்கள்பால் அவர்களுக்குள்ள இரக்கத்தையும் அக்கறையையும் சர்வநாசம் செய்துவிடும்.
காஞ்சி மன்னன் காடவர் கோன் கட்டிய கற்கோயில் கும்பாபிஷேகத்திற்கு வராத இறைவன், பூசலார் கட்டிய மனக்கோயிலில் குடிபுகுந்ததைப் பெரியபுராணம் பேசும்.
 கவியரசு கண்ணதாசன் பாடலில்,
“ஆடை அணிகலன் ஆடம்பரங்கள்
 ஆண்டவன் விரும்புவதில்லை;
 இசையில் கலையில் கவியில் மழலை
 மொழியில் இறைவன் உண்டு”
‘தெய்வம் இருப்பது எங்கே’ என்ற உண்மையை உரத்துக் கூறி, செய்ய வேண்டியதையும் சொல்கிறார்:
“இவைதான் தெய்வம் என்பதை அறிந்தால்
 ஏற்கும் உனது தொண்டு! ”

பாஜக சங்பரிவார் கூட்டம் இதனை உணர வேண்டும்,இல்லையேல் நாட்டின் நல்நம்பிக்கையாளர்கள் உணர்த்த வேண்டும்!

--தமிழில் : நீலகண்டன்,
 என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment