Tuesday 30 June 2020

கோவிட் பாதிப்புக்குப்பின் பொருளாதாரத் திட்டம்


கொள்ளை நோய்க்குப் பிறகு,
நாளைய பொருளாதார மறுமலர்ச்சி, வளர்ச்சி  
உழைப்பாளர்களின் கண்ணியம் முக்கியமாகட்டும்!

--சுனில் முகோபாத்யாய்

   
(நியூஏஜ் வார இதழ் 
             ஜூன் 28–ஜூலை 04)

தலைமுறைக்கு நன்றி சொல்வோம், நல்லவேளை சார்லஸ் டிக்கன்ஸ் அல்லது மார்க்சிம் கார்க்கி நமது நாட்டில் பிறக்கவும் இல்லை, இன்று உயிரோடும் இல்லை. அப்படி இருந்திருந்தால் இன்றைய நமது ஆட்சியாளர்கள், அவர்களுடைய மாபெரும் இலக்கியப் படைப்புக்கள் -- ‘கடுமையான காலங்கள்’(1854), ‘அடி ஆழங்கள்’(1902) --  இரண்டையும் முன்வைத்து, அவர்களை ‘அழிவின் முன்னறிவிப்பாளர்கள்’ என்று அழைத்திருக்கக் கூடும். டிக்கன்ஸ் எழுதிய ‘கடுமையான காலங்கள்’ நாவலில் விக்டோரியா கால இங்கிலாந்தின் தொழில்நகரங்களில் தொழிலாளர்களின் துயரம் மிகுந்த வாழ்வியல் நிகழ்வுகள் உருக்கமாக விவரிக்கப்பட்டிருக்கும். உலகம் புகழும் கார்க்கியின் நாடகமான ‘அடி ஆழங்கள்’ அதாவது படுபாதாளத்தில் ஒதுக்கப்பட்டு, மோசமான இழிநிலையில் வைக்கப்பட்ட –ஜார் உருஷ்யாவின் வோல்கா நதிக்கரை அருகே—கூடாரங்களில் வாழ்ந்த ஒரு மக்கள் குழு படும் துயரங்கள் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும்.
        இவ்விரண்டு பெரும் படைப்புக்களிலும், கசப்பான உண்மைகளுக்கும் அந்தச் சமூகங்களில் நிலவிய ஆறுதல் அளிக்கும் மாயைகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் விளக்கப்பட்டிருக்கும். வாழ்க்கையின் உண்மை, மனிதர்களைப் பயன்படுத்திய பின் மிகச் சுலபமாக வீசி எறிந்து விடுவதால், அவர்கள் நம்பிக்கை இழந்து திருட்டுகளிலும் விபசாரத்தின் பக்கமும் திரும்பி விடுகிறார்கள்.
நவீன இந்தியச் சினிமா தயாரிப்பாளர்களின் ஆதர்ச குருவாகிய சத்தியஜித் ரே கூட அவருடைய ‘பதேர் பாஞ்சாலி’ மாபெரும் படைப்புக்காக விட்டு வைக்கப்படவில்லை. விபூதிபூஷண் பந்தோபாத்யா எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட அந்தப் படம் உலகளாவிய அளவில் புகழ்களை அள்ளிக் குவித்தது; ஆனால் இந்தியாவில் அப்போது சிலர் ரே இந்திய வறுமையை வெளிநாட்டில் விற்றுக் கொண்டிருக்கிறார்’ என்று குறை கூறினர். அவர்களெல்லாம் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் எறியப்பட்டுவிட்டார்கள்.  (''சத்யஜித் ரேயின் திரைப்படங்களை ஒருவர் பார்த்திருக்கவில்லை என்றால், அவர் சூரியனையும், நிலவையும் கண்டிராமல் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று அர்த்தம்" என அகிரா குரோசாவா புகழாரம் சூட்டியுள்ளார். அத்தகைய) சத்தியஜித் ரேவின் பதேர் பாஞ்சாலி படத்திற்கு அன்றைய அரசுகள் கேலிக்கை வரிச் சலுகைகள் வழங்கின; தேசிய விருதும் தரப்பட்டது.
ஆனால் இன்று அதே காமிராக்காரர்கள், ஊடகவியலாளர்கள், நிருபர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் கோவிட் பாதிப்பு, ஊரடங்கின் காரணமாகப் படும் இன்னல்களை, அவர்களது துயரம்மிகு நீண்ட பயணங்களை, அதன் இடையூறுகளை, அவலக் காட்சிகளை வெளிஉலகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்தார்களென, அவர்கள் ‘அழிவின் முன்னறிவிப்பாளர்கள்’ என ஆளும் வட்டாரங்களால் முத்திரை குத்தப்படுகிறார்கள்.
அந்தத் ‘தீர்க்கதரிசிகள்’ தங்கள் கடமையைத் தொடர்ந்து செய்யட்டும். ஊரடங்கு மற்றும் கோவிட் பாதிப்பிலிருந்து தேசம் மீண்டெழுந்து வளர்ச்சி பெற, வீராவேசமாகக் கொட்டி முழங்குவது எந்தவகையிலும் உதவப் போவதில்லை. ஆனால் ஆக்கபூர்வமான விமர்சனங்கள், நலம்தரும் ஆலோசனைகள் நிச்சயம் உதவும் -- ஆள்வோர்கள் அவற்றை ஆழமாகக் கருத்தில் கொண்டு பரிசீலித்து அமல்படுத்துவார்கள் எனில், --  அவைஉதவும்.
சில அப்பட்டமான உண்மைகள்: நமது ஒட்டுமொத்த பெரும் பொருளாதாரத்தின் அளவுகோல் குறியீடுகள், தொற்று பாதிப்பிற்கு முன்னரே குறையத் தொடங்கியதைச் சுட்டிக் காட்டுகின்றன. (1) ஜிடிபி இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்த 7 சதவீதத்திலிருந்து 2019 –20 நிதியாண்டில் 4.2% எனக் குறைந்தது. (2) தொழிற்சாலை உற்பத்திக் குறியீடு 4.4% லிருந்து மைனஸ் 0.7 சதவீதமாக வீழ்ச்சி (3) முதலீடு 34.2% லிருந்து 29.7%ஆனது. (4) ஏற்றுமதி 10% லிருந்து எதிர்மறையாக 4.8% வீழ்ச்சி (5) வங்கி வழங்கும் கடன் 10 சதவீதத்திலிருந்து 6.1%ஆகக் குறைவு (6) வங்கிக் கடன் வளர்ச்சியைத் தரமிடும் ஆய்வு அமைப்பான CRISIL (Credit Rating Information Services of India Limited), வங்கி வழங்கும் கடன் தலைகுப்புற வீழ்ச்சி அடைந்து பூஜ்யம் முதல் எதிர்மறை 1 சதவீதமாகலாம் எனக் கணித்துள்ளது. (7) இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு, ‘கோவிட் பாதிப்பால் துண்டிவிடப்பட்ட ஊரடங்குகள் பொருளாதார நடவடிக்கைகளை உறையச் செய்துவிட்டன; இது நிச்சயம் பொருளாதார வளர்ச்சியை மேலும் மந்தகதி அடையச் செய்யும்’ எனக் கூறியுள்ளது. – இவர்கள் எல்லாம் ‘அழிவின் முன்னறிப்பாளர்களா?’ 
கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்கள் உயிர்களைக் காப்பாற்றுவது மற்றும் வாழ்வாதாரம் இழந்துவிடாதவாறு மக்களைக் காப்பது என்ற இருபிரச்சனைகளுக்கு இடையே சமன்பாடு காண்பது என்பது மிக முக்கியமான சவால் என்பதை நாம் ஒப்புக் கொள்வோம். 80% மேல் இந்திய வேலைவாய்ப்பு அமைப்புசாரா பகுதிகளில் உள்ளது. இந்தப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், தினக்கூலிகள் (அவர்களில் பெரும்பான்மையோர் புலம்பெயர் உழைப்பாளிகள்) வேலைகளையும் வருவாயையும் இழந்துள்ளனர். அவர்களுடைய முதலாளிகளுடன் அநேகமாக எவருக்கும் எந்தவித ஒப்பந்தமும் இல்லை, எனவே எந்தவிதச் சமூகப் பாதுகாப்பு ஆதரவும் இல்லை. அவர்கள் மிகக் கொடுமையான ஏழ்மையில் தள்ளப்பட்டுள்ளனர்; பொருளாதார மீட்பு ஏற்படும் வரை அவர்களுக்கு வாழ்வு இல்லை.
தொற்று பாதிப்பு குறைந்த பிறகு வேலை வாய்ப்பு வடிவம் நிச்சயம் வெகுவாக மாற வேண்டியிருக்லாம்; காரணம், மனிதர்களுக்கிடையே இடைவெளியைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டிய தேவை உள்ளது. பொருளாதாரத்தில் பல பணிகள் முக்கியத்துவம் இழந்து மறையலாம். இதனாலும் வேலை இழப்புகள் கூடும். அப்போதைய சூழ்நிலையில் தேவைப்படும் புதிய தொழில் திறன் இல்லாத காரணத்தால், வேலைஇழந்தவர்கள் புதிய சூழ்நிலைக்குப் பொருந்தாது மேலும் துன்பத்தில் ஆழ்வர். நாம் நன்கு திட்டமிட்டு சமூகப் பாதுகாப்பு முறையை உருவாக்கினால் மட்டுமே, மேற்கண்ட சூழல் உண்டாக்கக்கூடிய அடுக்கடுக்கான பெரும் சமூக விளைவுகளைத் தவிர்க்க முடியும். இதனைச் சாதிக்க மத்திய மாநில அரசுகள், தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்து, மிகமிக முக்கியமான பங்கினை ஆற்ற வேண்டும்.
ஆனால் சில மாநில அரசுகள், பொருளாதாரத்தை மறுஎழுச்சி பெறச் செய்ய தொழிலாளர்கள் 12 மணிநேரம் உழைக்க வேண்டும் என நம்புவது ஒரு பிரச்சனையாகி உள்ளது. இதுவும் மிகவும் குழந்தைத்தனமானதும் மிகச் சிக்கலான பிரச்சனைக்குப் பழமைவாத அணுகுமுறைத் தீர்வும் ஆகும். இது ஒரு பக்கம், மேலும் வேலையின்மையை அதிகரிக்கும், அது நிச்சயம் விரும்பக்கூடியது அல்ல; மறுபக்கம், இது தொழிலாளர்களை டிக்கன்ஸ் மற்றும் கார்க்கி காலத்தின் நீண்ட நேர கட்டாய அடிமை உழைப்பு முறைக்கு மீண்டும் கொண்டு செல்லும் --  அதன் விளைவாய் உழைப்பாளிகள் களைப்பு, காயம் மற்றும் இறுதியில் இறப்பதற்கும் வழி வகுக்கும்.
மாறாக, நமக்குத் தேவை வேலை வாய்ப்பை அதிகரிக்கும் பிரிவுகளான உற்பத்திப் பிரிவு, வேளாண்மை மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டங்கள். இந்தியாவை உலக உற்பத்தியின் மையமாக்க வேண்டும். அது ஒரு நாள் இரவில் நடத்தி முடிக்கப்படுவதும் அல்ல, விரைவில் நனவாகும் சாத்தியமும் அல்ல. கோவிட் மற்றும் ஊரடங்கால் உலகின் தேவை–வழங்கல் சங்கிலித் தொடர்பு அறுபட்டு, உலகப் பொருளாதாரமே உழல்கிறது.  வளர்ந்த பொருளாதார நாடுகளின் வீழ்ச்சியடைந்த நுகர்வு மீண்டும் உற்சாகம் பெற காலம் பிடிக்கும். நுகர்வு குறையும் போது, (உற்பத்தியும் சுருங்குவதால்) முதலீடு சற்று ஓய்வெடுக்கச் சென்றுவிடும். உலக முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய உடனே ஓடிவந்து விடுவார்கள் என எதிர்பார்க்க முடியாது, உலகப் பொருளாதாரம் மறுமலர்ச்சி அடையும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.
பொருளாதாரம் மந்தகதி அடைந்தபோதும் கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயத் துறையில் செயல்பாடு நன்றாகவே உள்ளது. எனவே நாம் விவசாயத்துடன் கூடவே தோட்டப்பயிர், பூக்கள் உற்பத்தி, மீன்வளம், கோழிப்பண்ணை மற்றும் கால்நடை, விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளிலும் மேலும் வேலைவாய்ப்பை உருவாக்கக் கவனம் செலுத்த வேண்டும் – இந்திய கிராமங்கள்  வளர்ச்சி பெற வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியது நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது: ஓர் இடத்தில் குவிதல் இன்றி, நாடு தழுவிய அளவில் நிலப்பரப்பில் பரவலாக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி மாதிரியை உருவாக்க வேண்டும். அது உழைப்பாளிகளின் உழைப்பை மதிக்கும், அவர்களைக் கண்ணியமாக நடத்துதை ஆதார அடிப்படையாகக் கொண்டு இயங்கும் வளர்ச்சி முறையாக இருக்கும். உற்பத்தி மற்றும் சந்தைப் படுத்துவது இரண்டிலும் விவசாயக் கூட்டுறவுகள் முக்கியமான பங்காற்ற முடியும். பால் பொருட்களுக்கான ‘அமுல்’ பிராண்டு நிறுவன அடையாளமாகி வெற்றி பெற்றதை எவ்வாறு மறக்க முடியும்? அது எங்கெல்லாம் செயல்பட்டதோ அங்கெல்லாம் வெண்மைப் புரட்சி விளைத்தது பெரும் மாற்றம். நமது நாட்டின் நிலப்பரப்பில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் மேலும் மேலும் புதிய நிறுவன அடையாளங்களை ஏற்படுத்த முடியும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க மாநில அரசுகள் பிற்பட்ட மாவட்ட வளர்ச்சித் திட்டங்களை மேலும் விரிவாக்க வேண்டும்.
ஒவ்வொரு மாநில அரசும் நிலங்கள் பயன்பாட்டிற்கு மாதிரி வடிவங்களுக்கான வரைபடத்தைத் தயாரிக்க வேண்டும். வளம் குன்றிய தரிசு நிலங்கள் தொழிற்சாலைகள் அமைக்கவும், செழிப்பான நிலங்கள் விவசாயத்திற்கும் ஒதுக்கப்பட வேண்டும். இதில், நமது உணவு முறைகள் மாறிவருவதால் பழத்தோட்டங்கள் அமைப்பது பற்றிக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்; ஓரளவு வசதியானவர்களும் தங்கள் உணவில் தானியங்களைக் குறைத்துக் கொண்டு, கூடுதலாகப் பழங்கள், மீன், முட்டை மற்றும் பால் பொருள்களைச் சாப்பிடத் துவங்கியுள்ளனர். நமது பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து மக்களின் வருவாயும் அதிகரிக்கும்போது இத்தகைய உணவுகளுக்கான தேவையும் நிச்சயம் வளரும். மேலும் கிராமமக்களின் வருவாய் ஈட்டலுக்குக் கைத்தொழில்களை மேம்படுத்துவதும் புறக்கணிக்க முடியாத முக்கியத்துவம் உடையது.
கரோனவின் கடும் பாதிப்பு பெருநகர்களிலே இருப்பதையும் நமது கிராமப்புறப் பகுதிகள் பெருமளவில் பாதிப்பிலிருந்து காப்பிடப்பட்ட தன்மையையும் பார்க்கிறோம். எனவே பெருநகரங்களின் நெருக்கடி மிகுந்த வளர்ச்சியின் அபாயத்தைக் குறைக்கவும் கூடுதல் ஜிடிபி கிராமப் பகுதிகளிலிருந்து அதிகரிக்கவும் முடியும் என நம்பலாம்.
கிராமப்புற ஏழைகளையும், நம்பிக்கை உடைந்து திரும்பியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களையும் பட்டினி, சத்துக்குறைபாடு மற்றும் சாவிலிருந்தும் காக்க வேண்டிய தேவை உள்ளது. இதனை எதிர்கொள்ள ஏற்கனவே நல்லதோர் திட்டம், ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்’ உள்ளது. அதனைப் பயன்படுத்தி மனிதநேய நெருக்கடியிலிருந்து அவர்களை மீட்டெடுத்து, அவர்களிடம் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தலாம். புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர் திரும்பியதும் அவர்களுக்கு வேலை அட்டைகளை வழங்க வேண்டும். பரவலாக வரவேற்பைப் பெற்ற, மையப்படுத்தப்படாத இத்திட்டத்தின் செயல்பாட்டில், நமது பஞ்சாயத்து அமைப்புகள் முக்கியமான இடம் வகிக்க முக்கியத்துவம் தரப்பட வேண்டும். கிராமப்புறப் பொதுப் பணித் திட்டங்களை அவர்கள் பகுதியில் செயல்படுத்தும் பஞ்சாயத்துகளின் திறன் பலப்படுத்தப்பட வேண்டும்; முன்னுரிமை தந்து அவர்களிடம் நிதி அளிக்கப்பட வேண்டும். அவர்கள் கள எதார்த்தத்தை நன்கு உணர்ந்தவர்கள் ஆதலின், திட்டங்களின் பணித் தன்மையை முடிவு செய்யும் அதிகாரம் அவர்களிடமே விடப்பட வேண்டும். (கரோனா எதிர்ப்புத் தடுப்பு நடவடிக்கைகளில் கேரள மாநிலத்தின் பஞ்சாயத்து அமைப்புக்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் பலராலும் பாராட்டப்பட்டது இங்கு நினைவூட்டல் பொருத்தமானது –மொழிபெயர்ப்பாளர்)
இந்த நடவடிக்கைகள் எல்லாம் நகர்ப்புற பொருளாதார மையங்களின் அழுத்தத்தைக் குறைக்கும்; எவ்வாறெனின், கிராமப்புற மக்கள் தங்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்பைப் பெறுவதால், நாட்டின் கிராமப்புற உற்பத்தி அதிகரிப்பது மட்டுமின்றி, அந்த மக்களும் கண்ணியமான மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை –நிச்சயம், நகரங்களின் ஒதுக்குப்புறச் சேரிகளில் வசித்ததைவிட--மேலான வாழ்வைப் பெறுவார்கள்.
‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்ற மகாத்மாவின் மணிமொழி அலங்காரமானச் சொல்லாடலாக மட்டும் இல்லாமல் எதார்த்தத்தில் உண்மையாக வேண்டும்.
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்
     

No comments:

Post a Comment