Saturday 18 July 2020

தலைவர்கள் சரித்திர வரிசை 5 தோழர் R D பரத்வாஜ்




நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :
சில சித்திரத் சிதறல்கள் -5

R D பரத்வாஜ் : மனிதநேயர்,
அணிதிரட்டும் ஆற்றலர் மற்றும் கம்யூனிஸ்ட்
                                          --அனில் ரஜீம்வாலே
(நியூஏஜ் ஜூலை 12 –18 இதழ்)
          ருத்ரா தத் பரத்வாஜ் போன்ற பெரும் தலைவரை, விடுதலைப் போராட்டத்தில் ஆகப்பெரும் பங்களித்திருப்பவரைப் பற்றி நாடு ஒருசிறிதும் அறியாதிருப்பது உண்மையில் வருத்தமளிப்பதாகும். நாற்பது ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்தாலும் வடஇந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் பரவ உதவியவர். 1930கள் மற்றும் 40களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகம் அறியப்படாத பொலிட்பீரோ உறுப்பினராக இருந்துள்ளார்.
இளமை வாழ்க்கை
        மேற்கு உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே, பாக்பட் தாலுக்காவைச் சேர்ந்த பூட்புர் என்னும் கிராமத்தில், ஆர்யசமாஜத்தைச் சேர்ந்த குடும்பத்தில் டிசம்பர் 1908ல் பிறந்தார். கிராமத்திற்கு அருகமைப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வியும், 5ம் வகுப்பில் ஜெயின் உயர்நிலைப் பள்ளியிலும் சேர்ந்தார். தற்போதைய அரியானாவில் உள்ள பால்வால் எனுமிடத்தில் 1919ல் மகாத்மா காந்தி கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்துப் பள்ளியில் ருத்ரா தத் வேலைநிறுத்தம் நடத்த முன்னின்றார். காந்திஜி விடுதலையாகும் வரை ஒரு வேளை உணவு மட்டுமே உண்பது என்று சபதம் செய்தான் அந்தச் சிறுவன்! காந்திஜி உடனே விடுதலையானது, சபதம் முடித்து இயல்பான உணவு முறைக்குத் திரும்ப வாய்ப்பளித்தது!
        1920ல் பாலகங்காதர திலகர் (லண்டனிலிருந்து திரும்பியதும் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 1 நாள்) மறைந்தார். இருபதாயிரம் மக்களுக்கு மேல் கலந்து கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். மீண்டும் அந்தப் பள்ளி மாணவர்களின் வேலைநிறுத்தத்தில் ருத்ரா முன்வரிசையில் இருந்தார். புகழ்பெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின்போது அவர் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். காந்திஜி, பள்ளி-கல்லூரிகளைப் புறக்கணிக்குமாறு மாணவர்களுக்கு அறைகூவல் விடுத்தார். அதனைச் சிரமேல் ஏற்று உடனயாகப் பள்ளியைவிட்டு வெளியேறினார் ருத்ரா! அவருடைய தந்தை பண்டிட் ராம்நாத் சர்மா கடுமையாக எதிர்த்தபோதும் பலனில்லை.
        பள்ளியை விட்டதும் ருத்ராவும் சிலநண்பர்களுமாக 40 மைல்கள் அப்பால் இருந்த டெல்லிக்கு நடந்தே புறப்பட்டனர். இராட்டையில் நூல்நூற்கும் வேள்வியை இரண்டு மாதங்கள் நடத்த காந்திஜி கூறியபடி ருத்ராவும் இரண்டு மாதங்கள் காதி நூல் நூற்கும் இயக்கத்தில் பங்கேற்றார். எதிர்ப்பட்ட வாழ்க்கை இன்னல்களை எப்படியோ சமாளித்தார். அவரைத் தேடி டெல்லி வந்த அவருடைய சகோதரர் தேவ்தத், ஏதாவதொரு ’தேசிய’ப் பள்ளியில் அவரைச் சேர்த்துவிடுவதாக உறுதியளிக்க, ருத்ரா சமாதானமாகி திரும்ப வந்தார்.
        ஆனால் குடும்பத்தினர் தங்கள் வாக்கைக் காப்பாற்றவில்லை. எனவே 1921 ஆகஸ்ட்டில் அவர் மீண்டும் ஓட்டம் பிடித்தார், இம்முறை (தற்போது மகரிஜி தயானந்த் பல்கலைக் கழகம் இருக்கும் அரியானாவின்) ரோஹ்டக் பகுதிக்கு. அங்கு வைஷ்யா ராஷ்ட்டிரிய பள்ளியில் சேர்ந்து கொண்டார். குடும்பத்தினர் அவரைச் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. 1923ல் லாகூரில் பஞ்சாப் தேசியப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிய பள்ளியில்  சேர்ந்தார். ஆனால் அந்தப் பள்ளி நீண்டநாள் நீடிக்கவில்லை. அதன் பிறகு அவர் பெனாரஸ் மத்திய உயர்நிலைப் பள்ளியிலும், அதன் பின்னர் பெனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திலும் சேர்ந்து பயின்றார்.
1925 காங்கிரஸ் கூட்டத்தொடரில் தொண்டு
1925ல் கான்பூரில் காங்கிரஸ் கட்சி மாநாட்டின் கூட்டத்தொடர் நடந்தது. ஏறத்தாழ அதே இடத்தில் சமகாலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அமைப்பு மாநாடும் நடந்தது. அப்படியொரு கம்யூனிஸ்ட் மாநாடு நடைபெறுவதை அறியாதவராக, காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு தொண்டராகப் பணியாற்ற ருத்ரா தத் தன்னைப் பதிவு செய்து கொண்டார்.
1927ல் தனது முதல் தேர்வை (FA) முடித்து அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1929ல் இளங்கலை BA பட்டத்தையும், 1931ல் அரசியல் விஞ்ஞான பாடத்தில் MA முதுகலை பட்டத்தைப் பல்கலைக்கழகத்திலேயே இரண்டாவது இடத்தைப் பெற்று நிறைவுசெய்தார். இத்துடன் அவர் சட்டக்கல்வியும் பயின்றார்.
PC ஜோஷியோடு சந்திப்பு
       ஒருமுறை மாணவர்கள் மத்தியில் பி.சி.ஜோஷி பேசுவதாக அறிந்து, அவரது உரையால் ஈர்க்கப்பட்டு, அவரோடு நட்பு கொண்டார். இப்படித்தான் கம்யூனிசத் தத்துவம் அவருக்கு அறிமுகமானது. ருத்ராவின் ஆசிரியர்களில் ஒருவர், ‘ரஷ்யப் புரட்சியைவிட பிரஞ்ச் புரட்சி ஆகச் சிறந்தது’ என்று கூறினார். இதனால் ஏற்பட்ட சந்தேகம் ஜோஷியின் சொற்பொழிவாலும், அவருடன் பேசியதிலும் தெளிவானது.  ருத்ரா தத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கான்பூர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லையே என்ற வருத்தம் உண்டானது.
        1929 மார்ச்சில் பி.சி.ஜோஷி மீரட் சதிவழக்குத் தொடர்பாகக் கைதானார். மிகவும் ஆச்சரியகரமானது, ஜோஷியின் பல பொறுப்புகளைப் பரத்வாஜ் ஏற்றார். ஜவகர்லால் நேரு தலைவராக இருந்த ‘இளைஞர் கழக’த்தின் (யூத் லீக்) செயலாளர் ஆனார் பரத்வாஜ். அவருக்கு நேருவுடன் பணியாற்றக் கிடைந்த முதல் வாய்ப்பு அது.
        மார்க்ஸியத்தை ஆழமாகக் கற்கத் தொடங்கினார். ஒரு செய்தியை அறிய ஆச்சரியமாக இருக்கிறது: ருத்ரா தத் காரல் மார்க்சின் ‘மூலதனம்’ நூலை விளக்கி, ரமேஷ் சின்காவிற்குப் பிற்காலத்தில் கற்பித்திருக்கிறார். படிப்பு வட்டம் (ஸ்டடி சர்கிள்) அமைப்புகளை ஏற்படுத்தி கிராமங்களில் கம்யூனிசக் கொள்கைகளைப் பரப்பினார். நாவன்மை மிக்கவராக, ’கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்’ சொற்பொழிவாற்றும் சிறந்த பேச்சாளராக, குறிப்பாகப் பல்கலைக்கழக வட்டார விவாதங்களில், மிகப் பிரபலமாக விளங்கினார். இதற்காக அவர் பல்கலைக்கழகப் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
பாம்பேயில்
        மீரட் வழக்கில் கைதானவர்களுக்கு உதவிட ருத்ரா தத் கடுமையாகப் பாடுபட்டார். தோழர்கள் கைதானது பாம்பே தலைமையகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. பரத்வாஜ் பாம்பே செல்லப் பணிக்கப்பட, பல்கலைக்கழகத்தை விட்டுவிட்டு, பாம்பே சென்றார்.
        அங்கே எஸ் ஜி சர்தேசாய், அதிகாரி மற்றும் தலைவர்களோடுப் பணியாற்ற அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. விரைவில் அவர் (பாம்பே பரோடா அண்ட் சென்ட்ரல் இந்திய இரயில்வே) BB & CI இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார். கிர்ணி காம்கர் யூனியன் (1928 பொது வேலைநிறுத்தத்தின்போது தோழர் டாங்கே முயற்சியில், கம்யூனிஸ்ட்கள் செல்வாக்கின் கீழ், பாம்பே டெக்ஸ்டைல் தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்ட சங்கத்தின்) நடவடிக்கைகளிலும் பிற சங்கங்களோடும் ஆர்வமாகச் செயல்பட்டார். சர்தேசாயுடன் சேர்ந்து இரயில்வே சங்கங்களுக்கான ஆங்கில, இந்தி தொழிற்சங்க இதழ்களிலும் பணியாற்றினார்.
        தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றியதற்காகக் கைதாகி, சிறைதண்டனை மூன்று மாதம் பெற்றார். அப்போது நவீன இயந்திரங்கள் புகுத்தப்பட்டதால் பாம்பே, அகமதாபாத், அஜ்மீர் முதலிய பல இடங்களில் ஏராளமான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்த இடங்களில் எல்லாம் பரத்வாஜ் சுற்றுப்பயணம் செய்தார்.
        விடுதலையான பிறகு இரயில்வே தொழிலாளர் போராட்டங்களில் கலந்து கொண்டதால், மீண்டும் கைதுசெய்யப்பட்டு ஒன்னரை மாதங்கள் சிறைதண்டனை பெற்றார்.
        1934ல் பாம்பே அனைத்திந்திய டெக்ஸ்டைல் மில் தொழிலாளர் மாநாடு நடைபெற்றது. அஜ்மீர் சென்று இரயில்வே தொழிலாளர்களை, அவர்களது வேலைநிறுத்தத்தை நடத்த வழிகாட்ட, கைதாகி அஜ்மீர் சிறையில் ஒன்னரை மாதங்கள் தண்டனை. விடுதலைக்குப் பின் மீண்டும் அகமதாபாத்தில் கைதாகி இரண்டாண்டுகள் சிறை. 1936 ஏப்ரலில் விடுதலையான அவரைப் போலீசார் மடக்கிப் பிடித்து அலகாபாத்திலிருந்து அழைத்துச் சென்று அவருடைய சகோதரரிடம் ஒப்படைத்தனர்! அப்போது அவருடைய சகோதரர் ‘தலைவர்’ (லீடர்) என்ற பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
[இரண்டாம் பகுதி (நியூஏஜ் ஜூலை 19—25 வெளியானது)]
பொலிட் பீரோ உறுப்பினராக
        1936 நாக்பூரில் நடந்த சிபிஐ மத்தியக்குழு கூட்டத்தில் பரத்வாஜ் மத்தியக்குழு உறுப்பினராக மட்டுமல்லாமல் பொலிட் பீரோ அமைப்பின் உறுப்பினராகவும், பிசி ஜோஷி, அஜாய் கோஷ் இவர்களோடு, தேர்ந்தெடுக்கப்பட்டார். பஞ்சாப், உபி மற்றும் பீகார் பிரதேச கட்சிப் பணிகளுக்குப் பரத்வாஜ் பொறுப்பாளராக்கப்பட்டார். கட்சிக்கும் அவருக்கும் இது முக்கியமானதொரு நிகழ்வாகும்.
        பகுதி தலைமறைவு நிலையில் லக்னோ, அலகாபாத் மற்றும் கான்பூரில் கட்சி அலுவலகம் அமைப்பதில் பரத்வாஜ் உதவினார். ஜோஷி, ரமேஷ் சின்கா மற்றவர்களோடு இணைந்து உத்தரபிரதேசத்தில் கட்சி அமைப்பைக் கட்டினார். கட்சியின் வாரஇதழாக ’நயா இந்துஸ்தான்’ (புதிய இந்துஸ்தான்) மற்றும் மாத இதழ் ஒன்றும் துவக்கப்பட்டு, அவ்விரண்டிலும் பரத்வாஜ் முக்கிய பங்காற்றினார்.
உ.பி.யில் சிபிஐ அமைப்பு மாநாடு
        உ.பி. பிரதேச கட்சிக் கிளை அமைத்திட 1935ல் எடுத்த முயற்சி தோல்வியடைந்தாலும், 1936 அக்டோபரில் இரண்டாவது முறை வெற்றியடைந்தது. அம்மாநாட்டை முக்கியமாக ஆர்டி பரத்வாஜ், இரகசியமாகவே கைசர்பாக்கில் நடத்தினார். தேசிய மற்றும் சர்வதேசியச் சூழல் குறித்த அறிக்கையை முன் வைத்த பரத்வாஜ், பாசிசத்திற்கு எதிராகப் போராட தேசிய முன்னணி அமைக்கப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். அவர் பரிந்துரைத்தவாறு அர்ஜுன் அரோரா கட்சியின் முதல் பிரதேசச் செயலாளராகத் தேர்வானார்.
1938 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், கான்பூர்
        ஆங்கிலேயர் ஆட்சியில் காங்கிரஸ் மந்திரிசபைகள் அமைந்ததும், அரசியல் சுழல் மாற, கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கப்பட்டது. பரத்வாஜ் முக்கிய பங்கு வகித்தப் புகழ்பெற்ற கான்பூர் மில்தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் 1938ல் நடைபெற்றது. வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை விரைவில் 50ஆயிரத்தைக் கடந்தது. ஆலைகளின் குழுக்களின் பிரதிநிதிகள் அடங்கிய வேலைநிறுத்தக்குழு வழிகாட்டலில் நடைப்பெற்ற போராட்டம் இறுதியில் வெற்றியடைந்தது.
அடையாளத்தை மாற்றி 1940 காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்பு
        கணேஷ் ஷங்கர் வித்யார்த்தி என்னும் பெரும் முற்போக்கு காங்கிரஸ்காரரை மதவாத சக்திகள் படுகொலை செய்தனர். அவரைத் தொடர்ந்த சீடரான ‘பிரதாப்’ பண்டிட் பால்கிருஷ்ண சர்மாகூட தொழிலாளர்களின் நலனுக்காகவும் முற்போக்கு ஆதரவாளராகவும் இருந்தார். அவருடன் பரத்வாஜுக்கு இருந்த நட்பு, கம்யூனிஸ்ட்கள் மற்றும் காங்கிரஸ்காரர்கள் இடையே ஒத்துழைப்புக்கு உதவி செய்தது.
        அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் தேர்வானார் பரத்வாஜ். 1937ல் (முதன் முதலாகக் காங்கிரஸ் அமர்வு ஒரு கிராமப்பகுதியான, மகாராஷ்டிரா, ஜால்கான் அருகே உள்ள)  பைஸ்பூரில் நடத்தப்பட்டது. (மாநாட்டுத் தலைவரான ஜவகர்லால் நேரு, ‘விவசாயிகள் நிறைந்த இந்திய தேசத்தின் இன்றைய அழுத்தும் பிரச்சனை, விவசாயிகளின் பிரச்சனையாகும்’ என்றார்) அம்மாநாட்டில் கலந்து கொண்டு கட்சியின் சார்பாக உரையாற்றினார் பரத்வாஜ். பின்னர் 1940 பீகார் ராம்ஹர்க் மாநாட்டிலும் கலந்து கொண்டார். பரத்வாஜை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினர் ஆக்குவதை உறுதிசெய்யுமாறு, அந்த மாநாட்டிற்கு முன்பு பிசி ஜோஷி, ரமேஷ் சின்னாவிற்குத் தகவல் அனுப்பினார். அவரும் ரஃபி அகமத் கித்வாயுடன் பேசி அவரது தேர்வை உறுதிசெய்தார். மாநாடு நிகழ்ந்த இடத்தில் கடுமையான போலீஸ் கண்காணிப்பு இருந்ததால், நேரு ஒரு காரை ஏற்பாடு செய்து பரத்வாஜை மாநாட்டிற்குள் கடத்திவரச் செய்தார். ‘எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்’ என்பதுபோல மாநாட்டிற்கு வந்து உரையாற்றினார், தீர்மானங்களைத் தாக்கல் செய்தார், சிட்டென மறைந்து விட்டார் – போலீசார் கண்களில் மண்ணைத் தூவி – ஈரானிய முஸ்லீம் பெண்கள் அல்லது வடஇந்தியப் பெண்கள் அணியும் முகத்திரை போன்ற  ‘chadar’ ‘ச்சாடர்’ (புர்க்கா போன்ற தலைமுதல் கால்வரை முழுஉடல் மறைப்பு ஆடை) அணிந்து, யாரும் அறியாதபடிச் சென்றுவிட்டார்.
        1937ல் லாகூரில் இரகசிய கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கும்போது, கைதாவதிலிருந்து எப்படியோ தப்பினார். வெளியே குதித்து, வீட்டுக்கு வீடு கூரைமீது தாவி மறைந்து விட்டார்.
டெல்லி, பீகார் கட்சிக் கிளைகளுக்கு உதவி
டெல்லி கட்சி கிளை கட்டுவதில்  எம். ஃபரூக்கி (நேரு கைது செய்யப்பட்டதை எதிர்த்து மாணவர் வேலைநிறுத்தம் செய்ய, செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்ட முதலாவது இந்திய மாணவர்) முதலானவர்களோடு பாடுபட்டார். 1939ல் சுமார் 20பேர் கலந்து கொண்ட பீகார் முன்கெர் கட்சி கிளையை அமைத்ததில் பரத்வாஜின் பங்கு முக்கியமானது.
1941ல் பரத்வாஜ் பிடிபட்டு, தியோலி மற்றும் பிற சிறைகளில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு விரைவாக மோசமடையத் துவங்கியது.
தியோலி தடுப்புச் சிறை முகாமில்
1857 இந்திய விடுதலைப் போர் (சிப்பாய்க் கிளர்ச்சி) சமயத்தில், ராஜஸ்தானின் கோடாவிலிருந்து 60 கி.மீ. அப்பால், பாலைவனத்தின் நடுவே, சுற்றிலும் முள்வேலி வேயப்பட்டு கடுமையாகக் காவல் அரண் செய்யப்பட்ட பிரத்தேகமாக அமைக்கப்பட்ட தடுப்பு முகாம் இது. 
இரண்டாவது உலக யுத்தம் வெடித்ததும் கம்யூனிஸ்ட்கள் இங்கே அடைக்கப்பட்டார்கள். ஒரு சமயம் எஸ் ஏ டாங்கே, சோலி பாட்லிவாலா, அஜாய்கோஷ், BT ரணதிவே, மிராஜ்கர் முதலான சுமார் 70க்கும் மேற்பட்டவர்களோடு ஆர்டி பரத்வாஜும் அடைக்கப்பட்டார். அங்கே ஜெயப்பிரகாஷ் நாராணன் உள்ளிட்ட சோஷலிஸ்ட்களும் காங்கிரஸ்காரர்களும் இருந்தார்கள். அவர்கள் தியோலி பிரதான முகாமில் இருந்த தனியான முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர்.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கைதிகள் 18 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். பரத்வாஜின் உடல்நிலை மோசமாகியது. 1942 மே மாதம் அநேகமாக அனைத்துக் கைதிகளும் விடுதலையானாலும், பரத்வாஜ் மட்டும் விடுவிக்கப்படவில்லை. கட்சி எவ்வளவோ முயற்சி செய்தும் அவரை விடுவிக்க அரசு சம்மதிக்கவில்லை. பின்னர் தியோலி முகாம் முடப்பட, ஆக்ரா, சுல்தான்பூர் முதலான பல்வேறு சிறைகளுக்கு மாற்றி பரத்வாஜ் அலைக்கழிக்கப்பட்டார்.
விடுதலையும் மரணமும்
1943ல் பரத்வாஜ் விடுதலையானார். உடல்நிலை பாதிப்பால் அவர், (உத்தரர்காண்ட், நைனிடால் மாவட்டத்தில் உள்ள நகராட்சியான, கடல்மட்டத்திலிருந்து 1654மீ உயரத்தில் உள்ள) போவாலீ சானிடோரியத்தில் அனுமதிக்கப்பட நேர்ந்தது. மருத்துவச் செலவுகளுக்காக ஜோஷியும் காட்டேவும் ஏற்பாடு செய்தனர். மருத்துவமனையில் இருந்தபோது செவிலியரான மனோரமா என்பாருடன் நட்பும் பழக்கமும் ஏற்பட, அவரையே திருமணம் செய்து கொண்டார்.
சிகிச்சை முடிந்து, போவாலீயிலிருந்து 1948துவக்கத்தில் ஓய்வுக்காக டேராடூன் சென்றார். அந்நேரம் கட்சி பெரும் கொந்தளிப்பில் இருந்தது. பிசி ஜோஷி மாற்றப்பட்டு பிடிஆர் பொதுச் செயலாளரானார். கட்சிக்குள்ளே தோழர்களிடையே இருந்த தோழமை உணர்வுச் சூழலும் சீர்குலைய ஆரம்பித்தது. ஒருசில தோழர்களே அவர் நலனைக் கவனித்துக் கொள்ள முடிந்தது. 104 டிகிரி சுரத்தில் உடம்பு தகித்தது. திடீரென 1948ம் ஆண்டு ஏப்ரல் 4ம் நாள் போலீசாரால் பரத்வாஜ் கைது செய்யப்பட்டார். நான்கே நாட்களுக்குப் பிறகு, பரத்வாஜ் நம்மிடையே இல்லை, காலத்தோடுக் கரைந்து 1948 ஏப்ரல் 8ம் நாள் இவ்வுலகைவிட்டு மறைந்தார். 
எல்லையில்லா மதிப்பு மிக்க அரிய தோழரை, இளம் தலைவரான பரத்வாஜ், நாற்பதே ஆண்டுகளான இளம்வயதில், கட்சி பறிகொடுத்தது. கட்சியின் தாவிப் பாய்ச்சல், சில சாகசங்கள் தவிர்க்கப்பட்டிருக்குமானால், பரத்வாஜ் வாழ்ந்திருக்கக் கூடும். அதைவிடப் பெரும் துயரம், அவர் குறித்து ஒரு சிறிதும் யாரும் அவ்வளவாக அறியாது போனது.
பரத்வாஜ் பணிகளைப் பற்றிப் பொதுவாகப் பொது மக்களுக்கும், குறிப்பாகக் கட்சி உறுப்பினர்களுக்கும் அவசியம் எடுத்துரைக்க வேண்டும்.
“காரிருள் சூழ்ந்த கரிய வானத்தே
                 தாரகை போன்று ஜொலித்து  நிற்கின்றீர்
                 போராடும் எமக்கு புத்துயிர் தாரீர் தோழா !தோழா”

(மதுரை கட்சி அலுவலகத்தில் தோழர் மணவாளன் எழுதி, தோழர் எம்பி சீனுவாசன் இசையமைப்பில் 1947 ஆகஸ்ட் 15 விடுதலைநாள் அன்று பாடப்பெற்ற ‘விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே! தோழா! வீரர் உமக்கே வணக்கம்’ பாடலிலிருந்து)

--தமிழில் நீலகண்டன்,
 என்எப்டிஇ, கடலூர்
  






No comments:

Post a Comment