Sunday 26 July 2020

பொதுத் துறைகள் பற்றி தோழர் பட்டாபி




“நவீன­இந்தியக் கோவில்கள் கட்டப்பட்ட வரலாறும்
இடிக்க நடக்கும் இன்றைய முயற்சிகளும்”

          24 இரவு முகநூல் நேரலையில் “இன்றைய அரசும் பொதுத்துறையும்” என்ற தலைப்பில் தோழர் பட்டாபி      ஆற்றிய உரையின் சுருக்கம்.                    நிகழ்ச்சிக்கு CPI திருநெல்வேலி              மாவட்டக் குழு முகநூல் ஏற்பாடு செய்திருந்தது.
        “மூத்த தோழர் காசி, மாவட்டச் செயலாளர் ரங்கன் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். தலைப்பிற்குள் செல்லும் முன் பொதுத் துறை குறித்த சில செய்திகள். இந்தியப் பொருளாதார மாற்றத்தை விரைவு படுத்த, பல்வேறு பகுதி மக்களுக்கும் பொருளாதாரப் பயன்களைப் பகிர்ந்தளிக்கப் பொதுத் துறைகள் மூலம் முயல்வது என்பது விடுதலைக்கு முன்பே இருந்த கனவு. அப்போது பல முரண்படும் பொருளாதாரக் கோட்பாடுகள் இருந்தன என்பது உண்மையே. காந்திஜியின் கிராம நிர்மாணப் பொருளாதாரத் திட்டம், தோழர் எம்என் ராய் முன் வைத்த இந்தியப் பாதை, 1948களிலேயே சோஷலிஸ்ட்டுகளின் தனியான கருத்துகள் இருந்தன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத வரைவுக்குழுவிற்கு ஜவகர்லால் நேரு, காரிய சாத்தியமான இலக்குகளை நிறைவேற்றல் என்ற அரசியலமைப்பிற்கான நோக்கத் தீர்மானத்தை முன் வைத்தார். பின்பு அதன்அடிப்படையில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் பெருமக்கள் பெரும் உழைப்பில் வரைந்தளித்த அரசியலமைப்புச் சட்ட Preamble எனும் நோக்க நுழைவாயிலின் ஆன்மாவானது நேருவின் தீர்மானம். விடுதலை அடைந்த நாட்டின் பிரதமர் பொறுப்புக்கு நேரு, பட்டேல், ராஜாஜி இவர்களில் யார் என்ற கேள்விக்கு நேருவே என காந்தி தீர்வு தந்தார்.
        நேருவின் தலைமையிலான அரசு பொருளாதார மாற்றங்களைப் பொதுத்துறை வாயிலாக நிறைவேற்ற, காங்கிரஸ் கட்சிக்குள் விவாதித்து முதல் ஐந்தாண்டு திட்டத்திலேயே 29 கோடி ரூபாய் முதலீட்டில் 5 பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியது. அதன் பயணம், யாத்திரை அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து 1991ல் உச்சம் தொட்டன. ராஜீவ் காலத்தில் சற்று தடுமாறியது. இந்திரா ஆட்சியில் எவ்வளவு அரசியல் விமர்சனங்கள் வந்தாலும் 1969 வங்கிகள் தேசியமயத்தின் மூலம் உச்சம் தொட்டது.
        ஆண்டு தோறும் பொதுநிறுவனங்களின் இலாக்கா எனப்படும் DPE, பொதுத் துறை நிறுவனங்கள் பற்றி, அவற்றின் லாப—நஷ்டங்களை விவரித்து, சர்வே ஆய்வு அறிக்கையை வெளியிடும். 2018—19ம் ஆண்டிற்கான அறிக்கை 2020 பிப்ரவரியில் வெளியானது. அதன்படி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 348 பொதுத்துறை நிறுவனங்களில், கட்டுமானநிலையில் உள்ள 86 மற்றும் வழக்கொழிந்தவை 13 நிறுவனங்கள் போக, மற்றவற்றில்  முதலீடு 16.5 லட்சம் கோடிஎன ராட்சச வளர்ச்சி அடைந்துள்ளன.
        பொதுத்துறை நிறுவனம் என்றால் என்ன என்பதைக் கம்பெனிகள் சட்டம் 1956, திருத்தப்பட்டு 2013 சட்டம் வரையறுத்தபடி தற்போது 51% அரசு மூலதனம் உள்ள நிறுவனம் (முன்பு இந்த சதவீதம் கூடுதலாக இருந்திருக்கலாம்) பொதுத்துறை நிறுவனமாகும். அரசின் நிதித்துறை நிதி கிடங்கிற்குப் பொதுத்துறை நிறுவனங்கள் டிவிடென்டுகள், லாபத்தில் ஈவுத் தொகை, கடன், கார்ப்பரேட் வரி, விற்பனை வரி, ஜிஎஸ்டி வரி முதலியவை மூலம் பங்களிப்புச் செய்கின்றன. நாட்டின் மொத்த பட்ஜெட் நிதி செலாவணி ரூ20 லட்சம் கோடி எனில், அதில் மூன்றரை லட்சம் கோடி, அதாவது 17% பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பாகும். அதுதவிர எஸ்சி/எஸ்டி/ஓபிசி இடஒதுக்கீடுகளை வழங்கி வேலை வாய்ப்பு அளித்தல் முதலிய அரசின் சமூகக் கடப்பாடுகளை நிறைவேற்றி வருகிறது. மேலும், நாட்டின் உற்பத்தியில் சுயதேவை பூர்த்தி, பேலன்ஸ் ஆஃப் பேமெண்ட், விலைகொள்கைகளில் நிலைத்தன்மை, சந்தைவிலையில் நிதானம் கொண்டுவர என பலவகைகளிலும் உதவுகிறது. இதுவரை பொதுத்துறைகள் சமூகக் கடப்பாடு நிறைவேற்றல் கடமையில் மங்காது இருக்கிறது. மேலும், ஆண்டுதோறும் 18சதவீத வளர்ச்சியும் 26 லட்சம் கோடி வரவுசெலவு (வியாபார விற்றுமுதல்) என லாபத்திலும் 15% வளர்ச்சி கண்டு வருகிறது. மொத்தத்தில் நாட்டின் (good economics) நல்ல பொருளாதாரத்திற்கு உதவிகரமாக பொதுத்துறைகள் உள்ளன.
        DPE அறிக்கையில் ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், நிலக்கரி, என்டிபிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் என லாபம் ஈட்டும் 10 டாப் நிலையில் உள்ள நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 248 நிறுவனங்களில் 178 லாபம் ஈட்டுவன. அவற்றில் மேற்கண்டவை மட்டுமே 62% லாபத்தை ஈட்டித்தர மற்றவை அனைத்தும் சேர்த்து 38% லாபம் தருகின்றன.
        அதே போல  நட்டம் அடையும் 70 நிறுவனங்களில் டாப் 10. இதில் எங்களுடைய BSNL, MTNL மற்றும் ஏர் இந்தியா மூன்று மட்டுமே 82% நட்டத்தைத் தருகின்றன. பங்கு விற்பனைக்குப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக 56 கம்பெனிகள் உள்ளன.
அரசு செய்தது என்ன? செய்யப் போவது என்ன?
        நிறுவனங்களின் நோயுற்ற தன்மையை sickness நிலைமையை ஆராய முன்பு BRPSE ’பொதுத்துறை நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான போர்டு’ இருந்தது. நலிந்து வரும் நிறுவனங்களை ஆராய்ந்து மறுசீரமைக்க, புத்தாக்கம் செய்ய எடுக்க வேண்டிய பரிந்துரைகளைத் தரும் அந்த போர்டை மோடி ஆட்சிக்கு வந்ததும் கலைத்து விட்டார். போர்டுக்குப் பதில் அந்தந்த நிறுவனங்களின் அமைச்சக நிர்வாகப் பிரிவே ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என்றது. அதன்படி நலிவடைந்த நிறுவனங்கள் புத்தாக்கம் பெறலாம், தனியார் பங்குதாரர்களைச் சேர்க்கலாம், பங்கு விற்பனை அல்லது முற்றாக மூடி விடுதல் என்ற முடிவுகளையும் எடுக்கலாம் என்றானது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு  அரசின் கொள்கை முடிவு வழிகாட்டுதல்களை மட்டுமே DPE வழங்கும் என்றது. அப்படி 9-11-2015ல் DPE வெளியிட்ட ஆவணம் முக்கியமானது, குறிப்பாக நட்டமடையும் 70 பொதுத்துறைகளில் செயல்படும் தொழிற்சங்கங்களுக்கு முக்கியமானது.
நட்டமடையும் 70 பொதுத்துறை நிறுவனங்களில், லாபமில்லாததால் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றமில்லை, அது சங்கங்களுக்கும் ஊழியர்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் பிரச்சனையாகிறது. ஆனால்  அரசு ஊழியர்களுக்கு அவ்வாறு இல்லை. சம்பளக்குழு மூலம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியமாற்றம் கிடைக்கிறது.
 தற்போதைய மோடி அரசின் background, இந்த மாற்றங்களுக்கான கொள்கை பின்புலம், தத்துவத் தொடர் சங்கிலி என்ன எனப் பார்க்கலாம்:
எக்கனாமிக் நேஷனலிசம் – பொருளாதாரத் தேசியவாதம் -- என்பதே அடிப்படை. 1951 அக்டோபர் 21ல் சியாமா பிரசாத் முகர்ஜி தொடங்கிய ஜனசங்கத்தின் கொள்கைஜனசங்கத்தின் பொதுச் செயலராக அப்போது இருந்தவர் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா. அவர் இந்தியத் தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் போன்ற பன்முகத் தன்மையாளர். அவரின் பொருளாதாரக் கருத்துகளே ஜனசங்கத்தால் பின்பற்றப்படுகிறது.  
 (ஜனசங்கம்1951 முதல் 72வரை செயல்பட்டு, பின் ஜனதா கட்சியோடு இணைந்து அதுவே பின்னர் 1980ல் பாரதிய ஜனதா கட்சியானது.) ஜனசங்கம் தொடங்கி வெள்ளிவிழா கொண்டாடும் முன் தங்களது பொருளாதார, அரசியல், சமூகப் பார்வையைத் தொகுத்து மூன்று தொகுதிகள்  வெளியிட்டனர். இரண்டாவது தொகுதியில் 1951முதல் 72வது ஆண்டுவரையான பொருளாதாரத் தீர்மானங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாகக் கூறப்படுவது,1) கொள்கையில் இறுக்கம், வரட்டுத்தனம் இருக்காது  2) இந்தியத் தன்மை அல்லாதவற்றை –unIndianness—எதிர்ப்பது 3) கேப்பிடலிசம் –முற்றிலும் சுதந்திரமான வர்த்தகத்தை-- எதிர்ப்பது (இதுவும் அவர்கள் சொன்னதுதான்; அப்போது நேரு கலப்புப் பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்தினார். அதுவும் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், சோவியத்தின் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்த பிறகு) ஆனால் ஜனசங்கத்தினர் அந்த சோவியத் பாணியை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றனர். எங்களுடையது மூன்றாகப் பிளவுபட்ட அணுகுமுறை. அதாவது 1) உற்பத்தி பெருக்கம் 2) சமமாகப் பகிர்ந்தளித்தல் 3) நுகர்வில் சுயகட்டுப்பாடு, ஏனெனில் மேற்கத்திய நாகரீகம் போல உலகப் பொருட்களில் (அதீத) நுகர்ச்சி அல்ல இந்தியக் கலாச்சாரம்.
1955ல் தெங்கடி (தந்தோபந்த் பாபுராவ் தெங்கடி) BMS  பாரதிய மஸ்தூர் சங்கம் என்னும் தொழிற்சங்கப் பிரிவைத் துவக்கினார். அடிப்படை கொள்கை கேப்பிடலிசம், கம்யூனிசம் இவற்றிலிருந்து விலகி இருப்பது. தேசம் பற்றிய சிந்தனையோடு செயல்படுவது, தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பது நோக்கம். 1960களிலேயே அவர்கள் தங்களை வெளிப்படுத்தி விட்டனர். அப்போதே பொதுத்துறை நிறுவனங்களை விரிவாக்காதீர்கள், பெருக்காதீர்கள், தேவையில்லை மேலும் பொதுத்துறைகள் என்று கூறியதோடு தனியார் பிரிவுகளை ஆதரிக்க வேண்டும் என்றும் அரசை வற்புறுத்தினர். 1967ல் நுகர்வுப் பொருட்கள் தயாரிப்பு பிரிவுகள் அனைத்தையும் தனியார் வசம் விட்டுவிட வேண்டும்; ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி R & D பிரிவுகளை அரசே முழுமையாக மேற்கொள்ள வேண்டியதில்லை, தனியார் நிறுவனங்களும் அதில் ஈடுபட அரசு போதுமான உதவி செய்ய வேண்டும் என்றனர்.
1969ல் இந்திராகாந்தி வங்கிகளைத் தேசியமயமாக்கியபோது, அவர்களின் இந்தக் கொள்கை நிலைபாடுகளெல்லாம் பூரணமாக வெளிப்படையானது. வங்கி தேசியமயத்தை எதிர்த்தது மட்டுமின்றி  இந்திரா அரசியல் காரணங்களுக்காக, அரசியல் பொருளாதார ஏகபோகம் என்ற ஆதாயத்திற்காகத் தேசியமயமாக்குகிறார் என்று விமர்சனம் செய்தனர்.
BMS தலைவர் தெங்கடி வெளியிட்ட சிறுபிரசுரத்தில் ஸ்டேட் (அரசு) வேறு, Nation (தேசம்) வேறு. இந்திரா வங்கிகளை அரசுமயப்படுத்துகிறாரே தவிர, தேசியமயப்படுத்தவில்லை என வியாக்யானம் தந்தார்.
2004ல் மத்திய ஆட்சியை விட்டு போகும்போது வாஜ்பாய் (BJP துவங்கிய) 1980 முதல் 2004 வரை நாங்கள் என்ன செய்தோம் what we did என்ற ஆவணத்தைக் கொண்டு வந்தார். அதில் நேரு, நரசிம்மராவ் பொருளாதாரக் கொள்கைகள் விமர்சிக்கப்பட்டன. அதற்கு மாறாக வாஜ்பாய், நாங்கள் 1) தேச பக்தியை முன்நிறுத்துவோம் 2) இயந்திரமயத்தைக் குறைத்து உற்பத்தியில் தொழிலாளர்களை அதிகப்படுத்துவோம் 3) நாட்டை தொழில்மயப்படுத்துவோம்        என்று கூறி எதிர்காலத் திட்டங்களாக இந்தியாவை கிராமமயப்படுத்துவது (Ruralisation), தொழில்மய, தொழிலாளர்மயப் படுத்துவது,  தொழிலாளர்கள் கையில் மூலதனம் வரச்செய்தல், மூலதனக் குவிப்பைத் தடுத்தல் எனப் பட்டியலிடுகின்றது.
1991ல் புதிய பொருளாதாரக் கொள்கைகள் வந்த பிறகான 10 ஆண்டு கால ஆட்சியை, விபி சிங் உட்பட, ‘முடை நாற்றத்தின் 10 ஆண்டுகள்’ எனக் கடுமையான விமர்சனம். நாற்பது ஆண்டு காலப் பொதுத் துறைகளால் பலன் ஏதும் விளையவில்லை; மாறாக, அது அரசு பணத்தை விழுங்கும் வெள்ளை யானை white Elephant . மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர், மக்கள் அன்னியப்படுத்தப்பட்டனர் என்றெல்லாம் கூறி,  எனவே நாங்கள் அதனை மக்களுக்குத் திறந்து விடுவோம். பொது மக்களிடம் சேருமாறு பங்குகளை விற்போம்; எந்தத் தனிநபருக்கும் 5 சதவீதத்திற்கு அதிகமான பங்குகளைத் தரமாட்டோம். ஆமாம், அப்போது 1991 தீர்மானத்தில் அவர்கள் சொன்னது, 5%கும் அதிகமான பங்குகளைத் தனியாருக்குத் தர மாட்டோம் என்று. ஆனால் இப்போது மோடி ஆட்சியில் நிலைமைகள் தலைகீழானது வேறு விஷயம்.  அரசுமயப்படுத்தப்பட்டவைகளை அரசின் பிடியிலிருந்து விரைவாக நாங்கள் விடுவிப்போம், de-governmentalisation எங்கள் கொள்கை . வெளிநாட்டு முதலீடுகளை FDI நம்பி ஒரு நாடு இருக்க முடியாது – இதைச் சொன்னதும் பாஜக தான் 1992 ஆகஸ்ட் தீர்மானத்தில். சுதேசியை, தாராளமயத்துடன் கூடிய சுயசார்பைக் கொண்டு வருவதே எங்கள் கோட்பாடு என்றனர்
        1995ல் கூறியது பெரும் அதிர்ச்சி தருவது, நேரு மாடல் bad மோசம், நரசிம்மராவ் worst மோசத்தின் உச்சம் என்று விமர்சித்து, நாங்கள் மக்களையும் நாட்டையுமே முன்நிறுத்துவோம்; மக்களும் சந்தையுமே எங்கள் எதிர்காலத் திட்டங்களில் முக்கியம் என்றனர்.
2000க்கு பிறகு
        ஆகஸ்ட் 2000ல் மையப்படுத்தப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளை பரவலாக்குவது, டி-சென்ட்ரலைஸ் செய்வது என்றும், 21ம் நூற்றாண்டை நோக்கி இந்தியாவை முன்னேற்றுவதற்கான திட்டம் என்ற ஆவணத்தை கொண்டு வந்தனர். ராவ், மன்மோகன் காலத்திலேயே வந்து விட்ட பங்குவிற்பனை வேகம் போதாது. பங்குவிற்பனை இல்லாமல் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது என்றவர்கள் கொண்டு வந்த முக்கியமான மாறுதல், பங்கு விற்பனைக்கான இன்ஸ்ட்ருமெண்ட் (வழிமுறைகள்) ஆகும். 
2014ல் மோடி வந்த 6 ஆண்டுகளில் அவர்களின் பொருளாதாரக் கோட்பாடு ‘தேசியப் பொருளாதாரப் பார்வை’ எப்படியெல்லாம் மாற்றிப் பேசுகிறார்கள். 50 ஆண்டுகளாக இருந்த திட்டக்குழுவைக் கலைத்து, நிதிஆயோக் கொண்டு வந்தார். கிராமிய அடிப்படைஎன்பது மெல்ல தாலுக்கா, மாவட்டம், மாநில அளவில் மாற்றத்திற்காகத் திட்டமிடுதல் என மாறிப் போகிறது. அன்னிய நேரடி மூலதனம் FDI நம்பி ஒரு நாடு இருக்க முடியாது என்றவர்கள், டாக்டர் அரவிந்த் மாயாராம் குழுவை அமைக்கின்றனர்.  அந்தக் குழு FDI ல் சீர்திருத்தம் வேண்டும், அப்போதுதான் அன்னிய மூலதனம் விரைவாக வரும் எனப் பரிந்துரைக்கிறது.
அதற்காகக் காத்திருந்தவர்கள் போல உடனடியாக மோடி கட்டுமானத் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கிறார். முன்அனுமதி தேவையில்லாத வழியில் ஆட்டமேட்டிக்காக அரசு ஒப்புதல் அளிக்கும் வழிமுறை Foreign Portfolio Investment (FPI) முன்பே இருந்தது. ஆனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அந்த முன்னனுமதி தேவையில்லை எனச் சிவில் விமானப் போக்குவரத்து ஏர் இந்தியாவில் மாறுதல் கொண்டுவந்தார். தவிர முன் அனுமதி தேவைப்படும் துறைகள், உதாரணத்திற்குப் பாதுகாப்பு, தொலைபேசி, மருந்து தயாரிப்பு பகுதிகளில்கூட ஒப்புதல் வழங்க FIPB (The Foreign Investment Promotion Board ) தனி அமைப்புகளை உருவாக்கினார். தற்போது ஏர் அத்தாரிட்டியிலும், காப்பீட்டுத் துறையிலும் FDI முதலீட்டின் உச்சவரையறை உயர்த்தப்பட்டுள்ளது;  தனியார் வங்கிகளில் 74%, பெட்ரோ கேஸில் 49%, எப் எம் ரேடியோ, சில்லறை விற்பனை எங்கும் FDI.
.2020, ஜூன் 19ல் முக்கிய அறிவிப்பு. PFRDA (Pension Fund Regulatory and Development Authority) மூலம் பென்ஷன் நிதியத்தில் பென்ஷன் எஜென்சிகளை, அவை FDI முதலீடு பெறுவதை ஒழுங்குபடுத்தும் என்றனர். இது அபாயகரமான சிக்னலாகப் பார்க்கிறோம்.   பாதுகாப்புத் துறையில் FDI அதிகபட்சம் 26% மட்டுமே என முன்பு இருந்ததை 74சதவீதமாக உச்சவரம்பை உயர்த்தி விட்டனர். தனியார் துறைக்கு முதலீடு கிடைக்க வழி செய்யவதற்கான ஏற்பாடுகள் இவை. (இதனால் இராணுவ உற்பத்தித் தளவாட பொதுத்துறை ஆர்டனஸ் பேக்டரிகள் பாதிப்படைந்து உற்பத்திப் பிரிவுகள் சிலவும் மூடப்படுகின்றன. அந்தப் பிரிவு தொழிலாளர்கள் தனியார்மயத்தை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வருகின்றனர்.)
தீபம் என்பது இன்னொரு வழிமுறை (இன்ஸ்ட்ரூமெண்ட்). DIPAM (Department of Investment and Public Asset Management) இலாக்காவின் நோக்கம் தனியார் நிறுவனங்கள் பொதுத்துறைகளில் பங்கேற்று (Public Private Participation) பொதுத்துறைகளில் சொத்துரிமை பெற உதவுவது என வரையறுத்து, அதனைப் பங்கு விற்பனை மூலம் செயல்படுத்துகின்றனர். அதன்படியே டெலிகாமின் நிலச் சொத்துகள் விற்பனை செய்யப்பட உள்ளன. பல நிறுவனங்களிலும் உபரி நிலம், காலி நிலம் எவ்வளவு என்பதை நிதிஆயோக் கணக்கிடுகிறது.
தனியாருக்கு ஆதரவாகப் பங்கு விற்பனை அதிகரிப்பது அரசின் திட்டம். மோடி வந்த பிறகு 5 ஆண்டுகளில் 2020 மார்ச் முடிய பங்கு விற்பனை மூலம் 4.3 லட்சம் கோடி திரட்டுவது என்பது இலக்கு. பொதுவாக இலக்கில் ஒரு பகுதி அளவே எட்டுவது நடைமுறையாக இருக்க, 2019 மார்ச் மாதம் முடிய 2.7 லட்சம் கோடி ரூபாய் அரசின் கைக்கு வந்துவிட்டது. அதாவது, பொதுத்துறையின் 16 லட்சம் கோடி சொத்துக்களிலிருந்து 2.7 லட்சம் கோடியை அரசு உருவி எடுத்து விட்டது. இந்த அரசு 100 சதவீத பங்குவிற்பனை இலக்கை நிறைவேற்றியது.  BPCL, HPCL போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் சட்டப்படியான பங்குதாரர் இணைப்பு (Statutory Partner) வழிமுறை பின்பற்றப்படுகிறது. ஏனெனில் அந்நிறுவனங்களில் 51% மேலும் பங்கு விற்பனை செய்ய சில சட்டத் தடைகள் உள்ளன. 2003ல் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தடையானது.
நேரு, இந்திரா ஆட்சி காலத்தில் நிறுவனங்களைத் தேசியமயமாக்கச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மோடி காலத்தில் சட்டம் தடையாக உள்ளதென்று, legal barrierகளை அகற்றச் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. ஒவ்வொரு துறையிலும் என்ன நடக்கிறது என்பது குறித்த அறிக்கைகள் தஸ்தாவேஜூகளை அரசு வெளியிடுகிறது. அதைப் படித்துத் தெரிந்து கொள்ளவில்லை எனில் அது நமது தொழிற்சங்கங்களின் தவறே ஆகும்.
இப்போது ஆத்மநிர்பார் பாரத் (தற்சார்பு) கொண்டு வரப்படும்போது, பொதுத்துறைகளைத் தனியார்மயப்படுத்துவதே கொள்கை என நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 2020 மே 17ல் அறிவித்தார். விரிவான விபரங்கள் இனிதான் வர வேண்டும்.  எது கேந்திரமான தொழில் பகுதி என்பதை நிதிஆயோக் முடிவு செய்யும். அதாவது அந்தப்பகுதிகளில் நேரடியாகத் தனியார் மயம் வராது; ஆனால் தாராளமயம், லிபரலைசேஷன் கொண்டுவரப்படும், (முன்வாசல் வழியே அல்லாமல் பின்வாசல் வழியே வரும், அவ்வளவுதான் வித்தியாசம்.)
பலதுறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 குறுங்குறிகளாக (Code) மாற்றப்படுவது தனி. காப்பீட்டுத் துறையில் திருத்தச் சட்டம் 2015 – காப்பீட்டு கம்பெனிகள் இணைப்பு, ஜெனரல் இன்ஷுரன்சில் வர்த்தகம் 70% செய்தால் போதும் என்ற மாறுதல்.  ஆனால் LICல் LICசட்டத்தை மாற்ற வேண்டியிருப்பதால் அதனை  IPO (Initial public offering) மூலம் திறந்து விடுதல், அதாவது பிற நிறுவனங்களை ‘துவக்க விலை பங்குகளை’ வாங்க அனுமதிப்பது.
FCI இந்திய உணவுக் கார்பரேஷனில் என்ன் நடந்தது? 2015ல் சீர்திருத்தக் கமிட்டி அமைத்தார்கள். அக்குழு இந்திய உணவுக் கார்பரேஷனே ஏன் எல்லா தானியங்களையும் கொள்முதல் செய்ய வேண்டும், ஏன் ஸ்டாக் வைக்க வேண்டும்? ஏன் உணவுக் கழகமே அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். தனியார் சேமிப்புக் கிடங்குகளை அனுமதிக்கலாம். FCIன் பணியின் பங்கு இப்படி விரிவானதாக இல்லாமல், தேவை உள்ள மாநிலங்களுக்கு ஸ்டாக்கை அனுப்புவதோடு தங்கள் பணியை வரையறுத்துக் கொள்ள வேண்டும் என்றது. அப்படிச் செய்தால்தான் தனியார் துறை இதில் பங்கேற்க இடம் கிடைக்குமாம். உணவு பாதுகாப்புச் சட்டம் நீர்த்துப் போகச் செய்தது. 67 சதவீத மக்களுக்குப் பயனளித்ததை 40 சதமாகக் குறைத்துள்ளனர். பயனாளிகளுக்கு எவ்வளவு உர மானியம் தரவேண்டுமோ அதை அரசே அவர்கள் கணக்கில் நேரடியாக வங்கியில் செலுத்தும் முறை (Direct Fund Transfer). அதன் பொருள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயவிலை கடைகள் மூலம் மாநில அரசுகள் வழங்குவது போலச் செயல்படத் தேவையில்லை, மக்கள் தனியாரிடம் பெற்றுக் கொள்வார்கள்; அரசு மானியத் தொகையை மட்டும் அளித்தால் போதும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து இங்கு பேச நேரமில்லை.
எலெக்ட்ரிசிடி திருத்தச் சட்டம் 2014 மற்றும் மீண்டும் 2020 ஏப்ரல். தமிழ்நாட்டின் சமூகநலத் திட்டமான விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்  பறிபோகும் நிலை. இச்சட்டத்தின்படி ஏற்கனவே மின் உற்பத்தி, மின் பராமரிப்பு, மின் விநியோகம் தனித்தனி அமைப்புகளாக்கப்பட்டு விட்டன. இந்த ஏற்பாட்டிற்குக் காரணம், மாநில அரசுகளே எல்லாவற்றையும் செய்ய வேண்டியதில்லை. பிறகு யார் செய்வார்கள்? இருக்கவே இருக்கிறார்கள், தனியார் பரோபகாரி முதலாளிகள், சப்-ஏஜெண்டுகளாகப் பங்கேற்க. இங்கும் விவசாயிகள் உட்பட மானியம் யாருக்குத் தரவேண்டுமோ அந்த மானியத் தொகையை மாநில அரசு முன்கூட்டியே கட்டிவிட்டால் மத்திய அரசு, பயனாளிகளுக்கு நேரடி வங்கிக் கண்க்கில் மாற்றி விடும். அதேபோல மின்சாரத்திற்கு எல்லா நேரத்திற்கும் ஒரே மாதிரியான கட்டணம் விதிக்கக் கூடாது; மாறாக, Peak hour என்று சொல்லப்படும் அதிக உபயோகமுள்ள காலத்திற்கு ஒரு விலை விகிதம், அதிகம் தேவையில்லாத காலத்திற்கு ஒரு கட்டணம். வியாபாரத்திற்கு ஒரு மாதிரி, வீட்டிற்கு வேறு. (அப்படியே விமானப் பயணம், இரயிலில் டைனமிக் விலை கட்டணம் போலவே எல்லா இடத்திலும் வியாபாரம்). மத்திய மாநிலப் பொதுப்பட்டியலில் இருக்கும் மின்சாரத் துறையில், மாநில அரசு அரசுகளை அதிகாரமற்றவைகளாக மாற்றும் முயற்சி.
அட சாதாரண ஏழை மக்கள் மட்டுமே தற்போது பயன்படுத்தும் மண்ணெண்ணையைக் கூட  பொதுவினியோகத் திட்ட கெரசின், PDS அல்லாத பயனாளர்களுக்கான கெரசின் எனப் பிரிக்க வேண்டுமாம். மக்களுக்குத் தரப்படும் மானியத்தை வெட்டுவதே ஒரே நோக்கம்.
அடுத்து நிலக்கரி,  அதில் நிலக்கரி வயலை ஏலம் எடுத்த தனியார் எப்படி வேண்டுமானாலும் நிலக்கரியைப் பயன்படுத்த அனுமதி. ஏர் இந்தியா (இப்போதே 6 விமான நிலைய பராமரிப்பு அதானியிடம் அளிக்கப்பட்டு விட்டது) மேலும் அதன் கடனை ஒரு ஹோல்டிங் கம்பெனியை ஏற்படுத்தி கடனை உறைய வைத்து, நிறுனத்தை மட்டும் தனியாரிடம் விற்கவும் ஏற்பாடு. இரயில்வேயில் 109 வழித்தடங்களில் தனியார் இரயில்கள் விட ஏற்பாடு. வங்கியில் சீர்திருத்தம், வங்கிகள் இணைப்பு என்பதுபோய் தற்போது வங்கிகள் தனியார்மயம் எனப் பேசுகிறார்கள். அதற்கேற்ப வங்கிகள் செயல்பாடு, உலகத் தரத்தில், உதாரணமாக ஒரு தொலைபேசி அழைப்பில் கடன் பெறுவது Loan on Call என்றெல்லாம் ‘வங்கிச் செயல்பாடு’ என இனிக்கப் பேசுவதைக் கேட்கும்போது வாராக் கடன் சுமையால் பொதுத்துறை வங்கிகள் தள்ளாடுவதும், உலகத் தரத்தில் தொலைபேசி சேவை என்று தனியாரை அனுமதித்துவிட்டு, தற்போது BSNLம் MTNLம் நிதிநெருக்கடியில் சிக்கித் தவிப்பதுமே கண்முன் வருகிறது.
அடுத்து லேபர் சீர்திருத்த மாற்றங்கள். நடைமுறையில் உள்ள 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்து சீர்திருத்தும் நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. முதலாவது Wage Code எனப்படும் ஊதியக் குறுங்குறி மசோதா நாடாளுமன்றத்தில் சட்டமாகி விட்டது.  நான்கு சட்டங்களை உள்ளடக்கிய அந்த மசோதாவைப் பரீசிலித்த நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த திருத்தங்கள் ஏற்கப்படவில்லை. 8மணி வேலை நேரம் என வரையறுக்கப்பட்டதை மாற்றி நெகிழ்வுப் போக்குள்ள பணிநேரம் என்று மாற்றி விட்டனர். சில மாநில அரசுகளும் பணி நேரத்தை 12மணிவரை அதிகரித்து அவசரச்சட்டம் கொண்டு வந்தன; சில அரசுகள் அதைத் திரும்பப் பெற்று விட்டன.
அடுத்து பணி இடப் பாதுகாப்பு குறுங்குறி மசோதா. 13 சட்டங்களை உள்ளடக்கிய இது தற்போது நிலைக்குழுவின் பரிசீலினை முடித்து அவர்களும் திருத்தங்களோடு அறிக்கை தந்து விட்டனர். பாராளுமன்றத்தில் இது விவாதத்திற்கு வந்து சட்டமாக வேண்டும். நாம் தெரிந்து கொள்ள வேண்டியது எந்தெந்தச் சட்டங்களை ஒருங்கிணைத்திருக்கிறார்கள்? பழைய சட்டங்களில் இருந்த எவை எல்லாம் எப்படி மாற்றப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன என்பதை விரிவாக – குறைந்தபட்சம் தலைவர்கள் – படித்தறிய வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து போராடுவதற்கு ஊழியர்களைத் தயார்படுத்த முடியும். (தொழிலாளர் சட்ட சீர்திருத்தம்  பற்றி விரிவாக பட்டாபி முகநூல் பக்கம் pattabiwrites.in முகவரியில் உள்ளது)
        இனி தனியார்மயம் தீவிரமாகும். இறுதியாக அடுத்த ஐந்தாண்டுகளில் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளார்கள் என்பதை National Infrastructure Pipeline (NIP) ஆவணமாகத் தந்துள்ளனர். சாலை, மின்சாரம், கிராம மேம்பாடு கட்டமைப்பு ஏற்படுத்துவதில் தீவிரம் என்பது நோக்கம். பிரம்மாண்டமான பெருவிருப்பத் திட்டம் அது எனச் சொல்லலாம். 111 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டம். 39% மத்திய அரசு, 40% மாநில அரசுகள் மீதி 21% தனியாரிடமிருந்து  எதிர்பார்க்கின்றனர். அந்த 21% என்பது சுமார் 25 லட்சம் கோடிக்கானது. அதைப் பார்க்கும்போது இரயில்வேயில் 30ஆயிரம் கோடி தனியார் முதலீடு அளவில் சிறியது. இதில் 44 லட்சம் கோடிக்கான திட்டங்கள் ஏற்கனவே செயல்படத் துவங்கிவிட்டன, 34 லட்சம் கோடி இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். தங்கள் திட்டங்களில் அவர்கள் தீவிரமாக உள்ளனர் என்பது தெரிகிறது.
பென்ஷனில் கடுமையான மாற்றங்கள் வர உள்ளன. பல நாடுகளிலும் ஓய்யூதியதாரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். இனி எல்லா பொதுத் துறைகளிலும் சொத்து மேலாண்மை செய்யப்படும். காலி நிலம் என்பதற்கான வரையறையைச் சத்தமில்லாமல் மாற்றி விட்டனர். அன்று ஜனசங்கம் சொன்னதை, எந்தப் பெயரில் செய்தாலும், நிறுவனங்களை அரசின் பிடியிலிருந்து விடுவிப்பது, தனியார் துறையை விரிவாக்குவது, பொதுத்துறைகளை விற்பது குறைப்பது என்பதே அவர்களின் செயல் திட்டம்.
விழிப்பாக இருக்க வேண்டியது நமது பொறுப்பு, நமது கடமை. நன்றி”    
--தொகுப்பு : நீலகண்டன்,
 என்எப்டிஇ, கடலூர்


No comments:

Post a Comment