Friday 10 July 2020

தோழர் ஷமீம் ஃபைசி முதாலாமாண்டு நினைவேந்தல்




     மீள்பதிவு (தோழர் ஷமீம் ஃபைசி முதலாண்டு நினைவாக)
     ஜனசக்தி 2019, செப்.29—அக்.5 வெளியானது

மகளிடமிருந்து ஒரு புகழஞ்சலி
--சீமா ஃபைசி

(ஜூலை 5, 2019 ல் மறைந்த நியூஏஜ் இதழின் ஆசிரியர்,

தோழர் ஷமீம் ஃபைசி அவர்களின் மகள்) 
        
என்னுடைய தந்தை ஷமீம் ஃபைசி ஓர் அரசியல் தலைவரும் பத்திரிக்கையாளரும் ஆவார். பல வகைகளிலும் அவர் தனது காலத்தைத் தாண்டி விஞ்சி இருந்தார். கம்யூனிசத்தில் ஆழ்ந்த கொள்கைப் பிடிப்பு, ஜனநாயகத்தின் மீது அவர் கொண்டிருந்த பற்றுறுதி, வெறும் அரசியல் சிந்தாந்த நம்பிக்கை சார்ந்தது மட்டுமல்ல. தான் நம்புவதையே அவர் வாழ்க்கையிலும் உண்மையாகக் கடைபிடித்தார், வாழ்வில் கடைப்பிடிப்பதன் மூலம் அதையே தனது அலுவலக மற்றும் தனி வாழ்க்கையிலும் மற்றவர்களுக்குப் போதித்தார். வெளிப்பார்வைக்கு அவர் எளிய மனிதர் போலத் தோற்றமளித்தாலும், அவரது அறிவு எப்போதும் உயர்ந்த சிந்தனைகளிலும் யோசனைகளிலுமே மூழ்கி இருந்தது. அரசியல் சிந்தாந்தமாகட்டும், மதம் அல்லது சமூக வாழ்க்கையாகட்டும் அவர் அனைத்திலும் கடைசி வரை விஞ்ஞான அணுகுமுறை உடையவராகவே விளங்கினார். எல்லாவற்றையும் கேள்வி கேட்டு ஆய்வுக்கு உட்படுத்துவதில் நம்பிக்கை கொண்டிருந்தார்; அதையேதான் எங்களுக்கும் கூட அவர் கற்பித்தார்.  அது மட்டுமல்ல, எப்போதுமே அவர் எங்களைக் கேள்விகள் கேட்க ஊக்கப்படுத்துவார். 
        எங்களுடைய குடும்பத்தில் எப்போதுமே கட்டுப்பாடான இறுக்கமான விதிகளோ, இதைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும் என்ற மரபுகளோ கிடையாது. அது நாகரீகமாகட்டும் அல்லது சமயம், மதம் எதுவானாலும் அது பற்றி நாங்கள் அவருடன், புதிய விதிகளை உருவாக்க, விவாதத்தில் ஈடுபடுவோம். எங்களுடைய காரண, காரிய வாதங்களை மிகப் பொறுமையாக அவர் கேட்பது மட்டுமல்ல, அதில் அவர் திருப்தி அடைவார் எனில், நாங்கள் எதை விரும்புகிறோமோ அதைச் செய்ய எங்களை அனுமதிக்கவும் செய்வார்.
        என்னுடைய தந்தை எப்போதும் (ஆண்-பெண்) பால்-சமத்துவத்தில் நம்பிக்கை உடையவர். மகளிர் தினத்தில் மட்டும் பெண்களைக் கொண்டாடும் பெண்ணியவாதி அல்லர். மகளிர் தினம் நமக்கெல்லாம் கொண்டாட்டத்திற்குரிய சிறப்பான தினம் என்பதில் சந்தேகமில்லை. அன்றைய தினத்தில் சிறப்பாக அவரும் என்னுடைய ஒரே சகோதரரும் சமையல் மற்றும் வீட்டு வேலைகளை அவர்களே செய்வார்கள். அப்படி வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்தல் என்பது அவரைப் பொருத்து அந்த ஒரு நாள் மட்டுமல்ல, ஆண்டின் மற்ற நாட்களிலும் எனது தாயாருடன் பொறுப்புக்களைப் பகிர்ந்து செய்வார். அவர் மிக நன்றாகச் சமைப்பவரும் கூட; அது மட்டுமா, அவர்தான் என் தாயாருக்கே சமையல் செய்யக் கற்றுக் கொடுத்ததாகக்கூட அவர் எங்களிடம் (பெருமையாகக்) கூறுவார். நாங்கள் ஒரு சகோதரனுடன்  நான்கு சகோதரிகள். மற்ற எந்த இந்தியக் குடும்பத்தைப் போலவே மகள்களைச் சீக்கிரம் மணம் முடிப்பதற்குத் தகுந்தவாறு வளர்க்க வேண்டும் என்ற நெருக்கடிக்கள் அவருக்கும் தரப்பட்டாலும்  -- அவர் (இதிலெல்லாம்) சாதாரணமாக யாருடைய பேச்சையும் காது கொடுத்துக் கேளாது -- எங்களைச் சிறப்பாக வளர்த்தார், மிக எளிதாக நன்முறையில் எங்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். அவர் எங்கள் எல்லோரையும் பொருளாதாரச் சுதந்திரம், தற்சார்பு உடையவர்களாக ஆக்கினார்; ஏனெனில், பொருளாதாரச் சுதந்திரமே அவரைப் பொருத்து உண்மையான சுதந்திரம் ஆகும். எங்களுடைய சகோதரனுக்குச் சமமாக மகள்களாகி எங்களுக்கும் கல்வி கற்க, எங்கள் கனவின்படியான வாழ்க்கையை வாழ அவர் சரிசமமான வாய்ப்புகளை அளித்தார்.
        என்னுடைய தந்தை ஓர் உண்மையான கம்யூனிஸ்ட். கல்வி என்பது முழுமைபெற்ற கல்வி மட்டுமே என்பதில் அவருக்கு உறுதியான நம்பிக்கை. கற்றவன் எனில் ஒருவன் பெற்ற கல்வி அவனைச் சமூகத்தில் யாரையும், --அவர்கள் சார்ந்த சாதி, நிறம், மதம் அல்லது சமய நம்பிக்கை காரணமாகப்-- பேதப்படுத்தி உயர்வு தாழ்வு என பாகுபடுத்தக் கூடாது என வற்புறுத்துவார். கட்சித் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான கே எல் மகேந்திராவை ’சின்ன தாத்தா’ (சோட்டா நானா) என்றும், டாக்டர் ராஜ் பகதூர் கௌர் அவர்களை ’பெரிய தாத்தா’ (படே நானா) என்றும் நான் அழைப்பேன் என்பது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எங்களின் குழந்தைப் பருவத்தை டெல்லி லுடியன்ஸ் பகுதியில் கழித்தோம்.
        அந்தப் பகுதியில் ஒருவரின் வர்க்கமும் அந்தஸ்தும் சமூகத்தில் ஒருவரோடு ஒருவர் பழக மிக மிக முக்கியமான அம்சங்களாகக் கருதப்பட்டது. எங்கள் தந்தையிடமிருந்து நாங்கள் கற்றது என்பது அவர் எங்களைப் பேரணிகள் மற்றும் தர்ணாக்களுக்கு அவரோடு அழைத்துச் சென்றதில் மட்டுமல்ல, வீட்டு வேலைகளிலும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டோம். உண்மையான இந்தியாவின் தரிசனம் அவருடைய கண்களின் வழியேதான் எங்களுக்குக் கிடைத்தது. எங்களுடைய அந்தத் தரிசனத்தில் நாங்கள் கண்டது, மிக அழகான, பண்பாட்டு கலாச்சாரத்தில் விதவிதமாக வேறுபட்ட மற்றும் மொழி ரீதியாக மிகுந்த செல்வ வளம் மிக்க இந்தியாவைக் கண்டோம்;  அதே இந்தியா சாதி, பிரதேசம், மொழி, கலாச்சாரம், மத நம்பிக்கை எனப் பலவாறு ஆழமாகப் பிளவுபட்டு கிடந்ததையும் கண்டோம்.
        எந்தவிதமான பாகுபாட்டைக் கண்டாலும் அதை எதிர்த்துக் குரல் உயர்த்தவும், சமூகத்தின் பலவீனமான பகுதியினருக்கு ஆதரவாக அவர்களோடு உடன் நிற்கவும் அவர் எங்களுக்குக் கற்பித்தார். ஆடம்பரமான விடயங்களுக்கு அதிகம் செலவழிப்பதை அவர் வெறுத்தார். அவருடைய பிறந்த நாளின் போதோ அல்லது வேறு நிகழ்வுகளின் போதோ விலை உயர்ந்த ஆடைகளையும், டாம்பீகமான அதிக விலைஉடைய பரிசுப் பொருட்களை அவர் எங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதை மறுத்து விடுவார். மற்ற பல தோழர்கள் போலவே எளிய வாழ்க்கையிலும் உயர்ந்த எண்ணத்திலும் நம்பிக்கை உடையவர் அவர்.
        படிப்பதில் மிகுந்த விருப்பம் உடையவர் என் தந்தை. அவருடை நாள் தினசரி பத்திரிக்கைகளுடன் துவங்கும், கையில் ஒரு புத்தகத்தோடு முடியும். புத்தகங்கள் வாங்குவது செலவு மிக்க அவருடைய பொழுது போக்கு. புத்தகப் புழு என்று சொல்லத்தக்க அளவு, அரசியலிருந்து பண்பாட்டுத் துறை சார்ந்த நூல்கள் வரை, கவிதை முதல் குழந்தைகள் கதைப் புத்தகம் வரை எனப் பரந்த படிப்பாளி.  எதையும் எல்லாவற்றையும் படிப்பதில் அவருக்குப் பெரும் மகிழ்ச்சி.  நீண்ட பயணங்களின் மூலம், புதிய மனிதர்களைச் சந்திப்பதன் மூலம் தனது ஞானத்தை அவர் தேடிச் சேகரித்தார். தனது அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதில் அவருக்கு மட்டற்ற ஆனந்தம்; அறிவைத் தேடி அடைவதில் மற்றவர்களுக்கு உதவுவது மட்டுமல்ல, கல்வி எனும் ஆயுதத்தைப் பெறுவதற்கு அவர்களின் முயற்சிக்கு ஆதரவாகவும் நிற்பார்.
        என்னுடைய தந்தை ஓர் உண்மையான பத்திரிக்கையாளர். செய்திகளைத் திரட்டுவதில் திறமை மிக்கவர். சூழ்நிலைகளை நொடியில் உணர்ந்து புரிந்து கொள்வதில் அவர் கூர்மையானவர். அவருக்கிருந்த பொதுஉடைமைத் தத்துவ மார்க்சிய ஞானம் செய்திகளை / குறிப்பாகப் பொருளாதாரச் செய்திகளைப் பகுத்துப் புரிந்து கொள்வதில் பேருதவியாக இருந்தது. பொருளாதாரச் செய்திகளைத் தட்டையாக ஒற்றைப் பரிமாணத்தில் அல்லாமல் பல்வேறு சாத்தியப்பாடுகளுடன் அவர் பகுத்துரைத்தார். நான் உள்பட பல பத்திரிக்கையாளர்களை அவர் பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தினார்.
        என்னுடைய தந்தை ஒரு போராளி. கம்யூனிச லட்சியத்திற்காகவும், உழைக்கின்ற அடித்தட்டு மக்களுக்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் அவர் போராடினார். அதே போராட்டக் குணத்தோடு தனது கேன்சர் நோயையும் எதிர்கொண்டார்.  இற்றை நாள் இன்று எம் தந்தை எங்களோடு இல்லை. ஆனால் அற்றை அந்நாள்களில் கம்யூனிச லட்சியங்களில் அவர் கொண்டிருந்த பேரன்பும், எளிய மக்களுக்காக அவரின் போராட்டங்களும் என்றும் என்றென்றைக்கும் எங்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கும்.”       
--தமிழில் : நீலகண்டன்,
  என்எப்டிஇ, கடலூர்    


No comments:

Post a Comment