Monday 13 July 2020

வரலாற்று வரிசை 4 : சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்


                                    நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

        சில சித்திரத் சிதறல்கள் -4

ம சிங்காரவேலர் : தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்

                                                             --அனில் ரஜீம்வாலே

                                                   (நியூஏஜ் 2020 ஜூலை 05 -- 11)

நன்றி படம்: தினமணி

    எம் சிங்காரவேலு மற்றும் சிங்காரவேலர் என்று புகழார்ந்த மதிப்போடு அறியப்படும் மலப்புரம் சிங்காரவேலு செட்டியார், 1860 பிப்ரவரி 18ம் நாள் மெட்ராசில் வளமான மீனவர் குடும்பத்தில் பிறந்தார். வரலாற்றில் அவர் ‘தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’ என்றே இடம் பெறுகிறார்.

        அவருடைய தந்தை வெங்கடாசலச் செட்டியார், தாயார் வள்ளியம்மை. மெட்ராஸில் துவங்கிய ஆரம்பக் கல்வி, திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளி, பின் FA எனப்படும் கல்லூரி ‘முதல் தேர்வு’ மெட்ராஸ் கிருஸ்டியன் கல்லூரி, பின்னர் பிரிசிடன்சி கல்லூரியிலுமாகத் தொடர்ந்தது. அவர் BA இளங்கலை பட்டத்தை 1894ல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பெற்றார். மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆனார். (1907ல் வழக்கறிஞர் தொழிலில் இறங்கிய சிங்காரவேலர் அடக்குமுறையாளர்கள், பேராசைக்காரர்கள் ஆகியோர் சார்பாக எந்தவொரு சூழலிலும் வழக்காடியதில்லை. 1921ல் ஒத்துழையாமை இயக்க ஈடுபாடு காரணமாகத் தனது   வழக்கறிஞர் தொழிலைப் புறக்கணித்தார்.) 1989ல் அங்கம்மாள் என்பாரைத் திருமணம் செய்து கொண்டு, கமலா எனும் மகளைப் பெற்றெடுத்தார். அவருடைய உடன்பிறந்தார் பேத்தி சீதா 1939ல் புகழ்பெற்ற மீரட் சதிவழக்கின் கைதிகளில் ஒருவரான பிரிட்டீஷ் கம்யூனிஸ்ட், பிலிப் ஸ்ப்ராட் (Philip Sprat) என்பவரை மணந்தார்.

        தென்னிந்திய பௌத்த சொஸைட்டியை மெட்ராசில் 1900 ம் ஆண்டு நிறுவினார்.

லண்டன் விஜயம்

        அரிசி வியாபாரம் தொடர்பாக 1902ம் ஆண்டு வாக்கில் லண்டன் சென்ற அவர் அங்கே ஆறுமாத காலம் தங்கினார். அப்போது லண்டனில் நடைபெற்ற உலக புத்த மதத்தவரின் மாநாட்டில் கலந்து கொண்டார். நாடு திரும்பியதும், அவரது வீட்டிலேயே மகாபோதி சங்கத்தினரின் கூட்டங்கள் நடைபெறலாயின. (அதற்கு முன்பு ஐஸ் ஹவுஸ் பக்கத்தில் இருந்த கட்டடத்தில் அக்கூட்டங்கள் நடைபெற்றன –பாரதி புத்தகாலயம் வெளியிட்ட கே முருகேசன் மற்றும் சி எஸ் சுப்பிரமணியம் எழுதிய ‘சிந்தனைச் சிற்பி சிங்காரவேலு –வாழ்வும் சிந்தனையும்’ நூலிலிருந்து).

 ‘நான் ஓர் இந்து மத நம்பிக்கையாளன்; அந்த வகையில் பௌத்தத்திற்கு எதிரான எனது கருத்துகளைக் கூற மகாபோதி சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்வேன். ஆனால் டார்வின் தத்துவம் உள்ளிட்ட பரந்துபட்ட பொருள்கள் மீது சிங்காரவேலு ஆற்றிய உரைகளைக் கேட்ட பின், நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்’ எனத் (திருவிக எனப்படும்) திரு வி கல்யாணசுந்தரம் முதலியார் குறிப்பிட்டுள்ளார். மகாபோதி சங்கத்தின் அலுவலகம் சிங்காரவேலு அவர்களின் இல்லத்திற்கு அருகேயே இருந்தது.

சமூக மற்றும் சுதந்திரப் போராட்ட இயக்கங்களோடு தொடர்பு

        சிங்காரவேலருக்கு ஏனைய பல சமூக அமைப்புகளோடும் தொடர்பு இருந்தது. பலமொழி கற்ற அவர் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். பாண்டிச்சேரி வழியாக அவருக்கு லண்டன், நியூயார்க் முதலிய இடங்களிலிருந்து புத்தகங்கள் வருவது வழக்கம். (வீட்டில் பெரிய நூலகம் வைத்திருந்தார். நூலகத்திற்கு வந்து படிக்க கேட்டுக் கொள்வார்; ஆனால் எந்த நூலையும் இரவல் தரமாட்டார். பெரும் பொக்கிஷமான தனது பல்லாயிரம் நூல்கள் அனைத்தையும் உயில் எழுதி வைத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைத்தார். –தோழர் ஏஎஸ்கே கூறியதாக மேற்கண்ட பாரதி புத்தகாலயம் நூலிலிருந்து)

        இந்த நேரத்தில் புகழ்பெற்ற கவிஞர் சுப்பிரமணிய பாரதியார், தொழிற்சங்கத் தலைவர் வி சக்கரைச் செட்டியார், வஉ சிதம்பரம் பிள்ளை (வஉசி) போன்ற காங்கிரஸின் தீவிரவாதத் தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் 1907 சூரத் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு பாலகங்காத திலகரைப் பின்பற்றினர்.  

        தொழிலாளர் வர்க்க இயக்கங்களும் தீவிரமடைந்தன. ஒரு பிரிட்டீஷ்காரருக்குச் சொந்தமான தூத்துக்குடி கோரல் மில்லின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.  பாரதியார் மெட்ராசிலிருந்து ‘இந்தியா’ எனும் தமிழ் இதழை வெளியிட்டு வந்தார். புகழ்பெற்ற புரட்சியாளர்

MPBT ஆச்சார்யாவும் (மண்டையம் பிரதிவாதி பயங்கர திருமலா ஆச்சார்யா) சேர்ந்து கொண்டார். 1919 ஏப்ரலில் மாமேதை லெனினைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற ஒருசிலரில் ஆச்சார்யாவும் ஒருவர். இவர்களது தொடர்புகள் சிங்காரவேலரைத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தினுள் கொண்டு வந்தது.


தொழிலாளர் இயக்கத்தில்

        பக்கிம்ஹாம் கர்னாட்டிக் மில்ஸ், பிரட்டீஷ்காரர் ஒருவருக்குச் சொந்தமானது. அதில் ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ என்ற தொழிற்சங்கத்தை 1918ல் இந்தியாவில் முதன் முதலாகத் அமைத்த பெருமை சிங்காரவேலரையே சாரும். திரு வி க, (சக்கரைச் செட்டியார், வாடியா) முதலானவர்களுடன் சேர்ந்து சிங்காரவேலர்  MSM ஒர்க்கர்ஸ் யூனியன் ( Madras and Southern Mahratta ரயில்வே கம்பெனியில் இயங்கிய சங்கம்), எலெக்ட்டிரிசிட்டி ஒர்க்கர்ஸ் யூனியன், டிராம்வே ஒர்க்கர்ஸ் யூனியன், அச்சகத் தொழிலாளர் யூனியன், பெட்ரோலியம் ஊழியர்கள் சங்கம், அலுமெனியம் ஒர்க்கர்ஸ் யூனியன், கோயம்புத்தூர் ஒர்க்கர்ஸ் யூனியன், மதுரை ஒர்க்கர்ஸ் யூனியன் போன்ற பல்வேறு வகையான தொழிலாளர்களைத் திரட்டி தொழிற்சங்கங்களை நிறுவினார்.

        மெட்ராசில் பிளேக் நோய் பரவியபோது சிங்காரவேலர் கடுமையாகப் பணியாற்றினார். மீனவர் குடும்பங்கள் வாழ்ந்த குப்பங்களுக்கே சென்று ஆர்வமாகச் செயல்பட்டார். தன்வீட்டில் உணவைத் தயார் செய்து அவர்களிடம் சென்று வழங்கினார்.

தேசிய இயக்கத்தில்

        ஜாலின் வாலா பாக் துப்பாக்கிச் சூடுகளைக் கண்டித்து மெட்ராசில் 1919ல் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் சிங்காரவேலு, திரு விக, சக்கரை, சுப்ரமணிய சிவா மற்றும் பலரும் செயலூக்கமாகப் பங்கேற்று உரையாற்றினர்.

        1922 கயா காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட சிங்காரவேலர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரானார். அக் கூட்டத்தில் எஸ் ஏ டாங்கே அவர்களைச் சந்தித்தார். ஒரு கம்யூனிஸ்ட்டாக, கம்யூனிஸ்ட்களால் நிறுவப்பட்ட புதிய சமூக ஒழுங்குமுறையின் பிரதிநிதி எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கூட்டத்தில் பேசினார். இதற்காக எம் என் ராய் அவரைப் பெரிதும் புகழ்ந்து தனது ‘வேன்கார்டு’ இதழில் எழுதினார் (மார்ச்1, 1923, பெர்லின்). ’தாஷ்கண்ட் கட்சி’ மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழு தொடர்பு கொள்ள முயன்றதாக எழுதிய டாங்கே, உடனே சிங்காரவேலு மற்றும் பிறருடன் தொடர்பு கொண்டார். எம் என் ராய் மற்றும் அபானி முகர்ஜியும்  தொடர்பு கொண்டதில், முகர்ஜி சென்னைக்கே வந்து சிங்காரவேலரைச் சந்தித்தார்.

        ‘சுதேச மித்ரன்’ போன்ற பிரபலமான நாளிதழிகளில் சிங்காரவேலர் ஏராளமாக எழுதினார்.

மெட்ராசில் முதல் மேதினச் செங்கொடி, 1923

        சிங்காரவேலரின் முன் முயற்சியால் இந்தியாவில் முதன் முறையாக மேதினம், 1923 மெட்ராசில் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில்தான் ‘லேபர் கிஸான் பார்ட்டி’ (தொழிலாளி–விவசாயிக் கட்சி) அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம் ஜாரியாவைச் சேர்ந்த சுவாமி தீனானந்த் அவர்களுக்குத் தந்தி அனுப்பி   மேதினம் கொண்டாடும்படி அவர் கேட்டுக் கொண்டார் (சுதேசமித்ரன் 23-05-1923).

        மெட்ராஸ் கடற்கரையில் இரண்டு பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன: ஒன்று சிங்காரவேலர் தலைமையில் உயர்நீதி மன்றக் கடற்கரையில், இரண்டாவது லேபர் கிஸான் பார்ட்டியின் தலைவர் MPS வேலாயுதம் தலைமையில் திருவல்லிக்கேணி கடற்கரையில். அக்கூட்டங்களில் செங்கொடிகள் ஏற்றப்பட்டன; சுப்பிரமணிய சிவா, கிருஷ்ணசாமி சர்மா போன்ற காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்றனர். இந்தியாவில் ஓர் அரசியல் கூட்டத்தில் செங்கொடிகள் ஏற்றப்பட்டது அதுதான் முதன்முறை.

        அந்தக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மேதினத்தை விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரியது.

லேபர் கிஸான் பார்ட்டி

        1923ல் தொழிலாளர் விவசாயிக் கட்சியை நிறுவிய சிங்காரவேலர், கட்சி அறிக்கை (மெனிபெஸ்டோ)யில், “ம.சிங்காரவேலு (இந்தியக் கம்யூனிஸ்ட்), தலைவர் மகாபோதி சங்கம், மெட்ராஸ்” என எழுதிக் கையெழுத்திட்டார்.

        ஜூலை 1923ல் லேபர் கிஸான் கட்சி பாம்பே, பஞ்சாப் மற்றும் வங்கத்தில் இயங்கிய தனது கட்சிக் கிளைகளை 1923, ஜூலை 18ல் ‘கொடி தினம்’ நடத்த அணிதிரட்டக் கேட்டுக் கொண்டது. கொடிதினக் கூட்டங்களில் மகாத்மா காந்தியை விடுதலை செய்யக் கோரி மூவர்ணக் கொடிகளோடு செங்கொடிகளையும் பறக்கவிட  வேண்டும் என்று குறிப்பிட்டது.

        1924ம் ஆண்டு ஜனவரியில் தோழர் லெனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சி அலுவலகங்களில்  செங்கொடிகள் பாதியில் பறக்கவிடப்பட்டன. 

கான்பூர் சதி வழக்கு, 1924

        எஸ் ஏ டாங்கே, முஸாஃபர் அகமத், நளினி குப்தா, RCL சர்மா, சவுகத் உஸ்மானி, சிங்காரவேலர் மற்றும் பிறர் மீது சதி வழக்குகள் தொடுக்கப்பட்டன. 1923ல் டாங்கேவும் சிங்காரவேலரும் கைதாக, மற்றவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர். சிங்காரவேலர் உடல்நலக்குறைவால் பலகீனமாக இருந்ததால், ஜாமீனில் விடுதலை பெற்று பின்னர் முழுமையாக விடுவிக்கப்பட்டார்.

இந்தியக் கம்யூனிஸ் கட்சி அமைப்பு நிறுவுதல், 1925

1918 - 19 முதலே சிங்காரவேலர் மார்க்ஸியத்தின் பெரும் தாக்கம் உடையவராக இருந்தார். 1920 அக்டோபர் 30ல் ‘அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ்’ (ஏஐடியுசி), லாலா லஜபதி ராய் தலைவராகக் கொண்டு, அமைக்கப்பட்டபோதே சோஷலிசத்தை ஆதரித்தவர் சிங்காரவேலர். மார்க்ஸிய நூல்களை ஆழமாகக் கற்றதுடன், முன்பே குறிப்பிட்டது போல டாக்டர் மணிலால், MPS வேலாயுதம், டாங்கே போன்ற பல புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

‘தி சோஷலிஸ்ட்’ என்ற வெளியீட்டை எஸ் ஏ டாங்கே தொடங்கிய பிறகு, ‘தி மெட்ராஸ் க்ரூப்’ தோழர்கள் டாங்கேவுடன் தொடர்பு கொள்ளத் துவங்கினர். டாங்கே 1923, ஜனவரி 29ல் சிங்காரவேலருக்கு எழுதிய கடிதத்தில், ‘இந்தியக் கம்யூனிஸ்ட்கள் ஐரோப்பாவில் கம்யூனிசத்தைத் தேடுவது ஒரு பைத்தியக்காரத்தனமான வீண்முயற்சி (அநேகமாக எம்என் ராய் அவர்களைக் குறிப்பிட்டிருக்கலாம்); நாட்டிற்குள்ளாகவே தேடி அதனைக் கட்ட அவர்கள் முயற்சிக்க வேண்டும்’ என்று எழுதியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட்கள் கான்பூரில் 1925 டிசம்பர் 25 முதல் 29 வரை கட்சி அமைப்பு மாநாட்டை நடத்தினர். முதலில் (பிரிட்டீஷ் பாராளுமன்ற உறுப்பினரும், கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவருமான) ஷாபூர்ஜி ஷக்லத்வாலா அம்மாநாட்டிற்குத் தலைமையேற்பதாகத் திட்டம்; ஆனால் பிரிட்டீஷ் அரசு அவரை நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்து விட்டனர். எனவே முதல் அமைப்பு மாநாட்டிற்கு ம. சிங்காரவேலு தலைமை ஏற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதாக டிசம்பர் 26ல் மாநாடு முறைப்படி அறிவித்தது. மாநாட்டுத் தலைவரான சிங்காரவேலர் லெனின், திலகர் முதலானவர்களின் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து ஆற்றிய துவக்க உரை எழுச்சியூட்டக் கூடியதாகவும், அறிவார்ந்ததாகவும் இருந்தது. காரல் மார்க்சின் கொள்கைகளைச் சுட்டிக் காட்டி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் கம்யூனிஸ்ட்கள் பணியாற்ற வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

மாநாட்டின் தலைவரே கட்சியின் தலைவராவார் என்பது அப்போதைய சிபிஐயின் அமைப்பு நிலை விதி. அதன்படி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைவர் M சிங்காரவேலு அவர்களே ஆவார்.

கான்பூர் கம்யூனிஸ்ட் மாநாடு முடிந்த கையோடு மெட்ராசில் 1926 ஜனவரி 9, 10 தேதிகளில் ஏஐடியுசி-யின் கூட்டத்தொடர் வி வி கிரி அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் சிங்காரவேலர், சக்கரை, திருவிக மற்றும் தலைவர்கள் செயலூக்கமான பங்கு வகித்தனர்.  

1927ல் இந்தியா வந்த ஷக்லத்வாலா, பிப்ரவரி 24ல் மெட்ராஸ் வந்தபோது அவருக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பெருந்திரள் தொழிலாளர்களிடையே பொதுக்கூட்டங்களில் ஆற்றிய உரையைச் சிங்காரவேலர் தமிழில் மொழிபெயர்த்தார். ‘இளம் தோழர்களின் குழு’ ஒன்றும் அமைக்கப்பட்டது.

தொழிலாளர் இயக்கங்களில் மூண்ட எழுச்சி

        தொழிலாளர்களிடையே 1927 –28களில் பெரும் எழுச்சி பொங்க, சிங்காரவேலரும் பிறரும் ஒருங்கிணைத்த (எரிபொருள்) ‘எண்ணெய்த் தொழிலாளர்கள் சங்க’த்தின் போராட்டம் 26 நாள்கள் நடைபெற்றது. அப்போராட்டத்தின் விளைவாய் 119 தொழிலாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர். ( மற்றும் 23 தொழிலாளர்களின் ஊதிய வெட்டு ரத்து, ஊழியர்கள் பணிசெய்ய பெஞ்சுகள் வழங்குதல் முதலிய கோரிக்கை ஏற்பு; ஆனால் ஓர் அணா ஒரு நாள் ஊதிய உயர்வு கோரிக்கை பின்னர் பரிசீலிக்கப்படும் என நிர்வாகம் உறுதியளித்ததை ஏற்று போராட்டம் முடிவுக்கு வந்தது. போராடிய காலத்தில் பிரிட்டீஷ் போலீஸ் அதிகாரிகள், ‘எண்ணைய் எளிதில் தீப்பிடிக்கும், வாலாட்டாதீர்கள்’ என எச்சரிக்க – போராட்டக்காரர்கள், ‘ஊழியரின் உணர்ச்சிகள் மிகவிரைவில் தீப்பிடிக்கும், அதனோடு விளையாடாதீர்கள்’ எனச் சுடச்சுட பதில் தந்தனர். இருமுறை துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது  -- கூடுதல் தகவல் இணைப்பு, மேற்குறிப்பிட்ட பாரதி புத்தகாலயம் புத்தகத்திலிருந்து).

 சிங்காரவேலர் ‘எண்ணெய்த் தொழிலாளர்கள் சங்க’த்தின் தலைவராவார்.

        MSM இரயில்வே மற்றும் தென்னிந்திய இரயில்வே தொழிலாளர்கள் சங்கம் ஜூலை 14ல்  துவக்கிய வேலைநிறுத்தம் 10 நாள்கள் நீடித்தது. சிங்காரவேலர் போராட்ட முனைமுகத்தில் நின்றார். அப்போராட்டம், “தென்னிந்தியாவைக் குலுக்கிய பத்து நாள்கள்” என வரலாற்றில் இடம் பெற்றது. [ரஷ்யப்புரட்சியைப் பற்றிய அமெரிக்க பத்திரிக்கையாளர் ஜான் ரீட் எழுதிய “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’‘ புத்தகத்தை நினைவு படுத்துகிறது அல்லவா. அப்புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டு புரட்சியின் 10வது ஆண்டு கொண்டாட்டத்தின்போது ரஷ்ய இயக்குநர் செர்ஜி ஐசன்ஸ்டீன் இயக்கிய ஆவணப்படம் குறித்த செய்தியை ‘வினவு’ இணையதளத்தில் https://www.vinavu.com/2011/11/07/10-days-that-shook-the-world/ என்ற முகவரியில் படிக்கலாம்.]

        1927 மேதினத்தின்போது தொழிலாளர்களுக்கு மிகப் பெரிய விருந்தொன்றை அளிக்க ஏற்பாடு செய்தார் சிங்காரவேலர். (பஜனை) பாடல்களோடும் ஊர்வலம் மற்றும் ‘101’ பெரும் வெடிகளை வெடித்தும் ‘வணக்கம்’ (சல்யூட்) செலுத்தப்பட்டது!

1927 மெட்ராஸ் காங்கிரஸ் கூட்ட அமர்வு

        1927 டிசம்பரில் காங்கிரஸ் கட்சியின் 42வது கூட்டத்தொடர் மெட்ராசில் நடந்தது. அதில் முன்வைக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்கக் கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள் சிங்காரவேலரின் இல்லத்தில் கூடினர். அவரது வீடு கட்சியின் தற்காலிகத் தலைமையகமானது.  மேலும் அங்கு நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் சிங்காரவேலர் பங்கேற்றார்.

மெட்ராசில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தல்

1932ல் இளம் ஊழியர்கள் குழு (யங் ஒர்க்கர்ஸ் லீக்) ஒன்றை அமைத்து அமீர் ஹைதர்  கான் (படம், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் பாக். கம்யூ. செயற்பாட்டாளர், மார்ச் 1900 – டிசம்.1989) ஏற்கனவே தயாரிப்புப் பணிகளைத் துவக்கிவிட்டார். சிங்காரவேலு, ‘ரஷ்யா மாணிக்கம்’, ராஜவடிவேலு, P சுந்தரையா, ஏஎஸ்கே (அய்யங்கார்) போன்ற பிறரும் சேர்ந்து வரையறுக்கப்படாத ஒரு தொளதொளப்பான (nebulous) கம்யூனிஸ்ட் குழுவைத் ‘தொழிலாளர் பாதுகாப்பு லீக்’ என்ற பெயரில் அமைத்தனர்.

        1936 நவம்பரில் ‘சுயமரியாதை சோஷலிச மாநாடு’ ஒன்றிற்காக டாங்கே வந்தார். எஸ் வி காட்டே 1936ல் மதராஸ் மாகாணத்தில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை (CSP) அமைத்தார். மெட்ராஸ் கம்யூனிஸ்ட் குழுவிற்கு சி எஸ் சுப்பிரமணியம் செயலாளர். கே முருகேசன், P.ஜீவானந்தம், ஏஎஸ்கே அய்யங்கார், B.சீனுவாச ராவ் இவர்களோடு சிங்காரவேலுவும் ஒன்று கூடினர்.

எம்என் ராய் அவர்கள்கூட 1936ல் மெட்ராசுக்கு வந்து சிங்காரவேலுவின் இல்லத்தில் தங்கியுள்ளார். அந்த நேரம் அவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தைவிட்டு விலகி இருந்தார். 

புராவின்சில் காங்கிரஸ் மாகாண மந்திரிசபை உதயமானதோடு, 1937ல் தமிழில் “ஜனசக்தி” வார இதழ் நிறுவப்பட்டது. ஜீவானந்தம் ஆசிரியராக இருந்து வெளியிடப்பட்ட இதழில் சிங்காரவேலர் பல கட்டுரை ஆக்கங்களை எழுதியுள்ளார். 

சிங்காரவேலர் நோய்வாய்ப்பட, பலகாலம் வீட்டிலேயே இருக்க நேர்ந்தது. ஆனால் வீட்டில் இருந்தபடியே  தந்தை பெரியார் நடத்திய ‘குடிஅரசு’ இதழ் முதலான இதழ்களில் எழுதுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

எம் சிங்காரவேலர் 1946 பிப்ரவரி 11ம் நாள் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்.

ஆனால் மறையாது நின்று நிலவும் அவர் புகழ் நீள் நிலத்தில்!  நம்முடைய கட்சியின் முதல் தலைவர், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரைப் படித்தறிவோம்!

பரப்புவோம் அவர் புகழை இப்பாருலகில்!

-தமிழில் : நீலகண்டன்,

 என்எப்டிஇ, கடலூர்

பின்இணைப்பு

சிங்காரவேலனைப்போல் எங்கேனும் கண்டதுண்டோ?”
பொங்கிய சீர்திருத்தம் பொலிந்ததும் அவனால்
பொய்புரட் டறியாமை பொசிந்ததும் அவனால்
சங்கம் தொழிலாளர்க் கமைந்ததும் அவனால்
தமிழர்க்குப் புத்தெண்மை புகுந்ததும் அவனால்
மூலதனத்தின் பொருள் புரிந்ததும் அவனால்
புதுவுலகக்கனா முளைத்ததும் அவனால்
கோலப் பொதுவுடைமை கிளைத்ததும் அவனால்
கூடின அறிவியல், அரசியல் அவனால்!
தோழமை உணர்வு தோன்றிய தவனால்
தூய தன்மானம் தொடர்ந்ததும் அவனால்
ஏழ்மைஇலாக் கொள்கை எழுந்ததும் அவனால்
எல்லோர்க்கும் எல்லாம் என்றுணர்ந்ததும் அவனால்!
போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி

பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!”

-- பாவேந்தர் பாரதிதாசன்

“வரலாற்று ஆசிரியர்கள் வட இந்தியாவில் உள்ள பிரமுகர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிலாகித்து நூல்கள் பல எழுதியிருந்தாலும் தென்னிந்தியர்களைப் பற்றி, குறிப்பாக, சிங்காரவேலரைப் பற்றிய தகவல்களை வெளியிட மறந்துவிட்டார்களா, மறுத்துவிட்டார்களா என்று தெரியவில்லை.

கடைசியாக 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதியன்று சென்னை அச்சுத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய அவர் , “எனக்கு வயது 84. ஆயினும் தொழிலாளி வர்க்கத்திற்கு என் கடமையைச் செய்ய நான் இங்கே வந்துள்ளேன். உங்கள் மத்தியில் நான் இறந்தாலும் அதைவிட எனக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியம் வேறென்ன? கம்யூனிஸ்ட் கட்சிதான் உங்களுடைய சரியான அரசியல் தலைமை” என்று முழங்கினார்.”

       -- சந்துரு, உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு ),தி இந்து கடுரையில்

 



No comments:

Post a Comment