Thursday 4 June 2020

சோஷலிசம் மீண்டும் எழுச்சி பெறுமா? --பினாய் விஸ்வம் கட்டுரை


நியூஏஜ் இதழில் வெளியான ஃப்ரண்ட்லைன் கட்டுரை
சோஷலிசம் மீண்டும் எழுச்சி பெறுமா?
--பினாய் விஸ்வம்
நியூஏஜ் ஆசிரியர் மற்றும் சிபிஐ தேசியச் செயலாளர்


        மக்கள் தங்கள் துன்பதுயரங்களாலும் நம்பிக்கையாலும் “சோஷலிசம் மீண்டும் எழுச்சி பெறுமா? எனக் கேட்கத் துவங்கி உள்ளனர். கேட்பவர்களில், பெரும்பாலானோர் உண்மையான நம்பிக்கை மற்றும் ஆர்வத்தால் கேட்கின்றனர்; வேறு சிலர் அவ்வளவு உற்சாகத்தோடு இல்லாமல் இருக்கலாம். மீண்டும் சோஷலிசம் உறுதியாக வரும் என்பதைப் புறக்கணித்துவிட முடியாது என்று சொல்லும்போதே அது தீடீரென நாடகபாணியில் நடந்து விடாது என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டும். புதிய உலக நிகழ்முறையில் சோஷலிசத்தின் மறுஎழுச்சி என்பது வரலாற்றுரீதியான பல காரணிகளைப் பொருத்திருக்கும். அவை, பொருளாதார, அரசியல், தத்துவார்த்த, சமூக மற்றும் சுற்றுச்சூழலியல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்வு காண்பதைப் பொருத்தது. பலர் விரும்புவதுபோல அந்தப் பணி அவ்வளவு சுலபமான ஒன்றல்ல. புறவயமான மற்றும் அகவயமான அம்சங்கள், அவற்றின் வளர்ச்சி மற்றும் இரண்டும் ஒத்திசைந்து தொழிற்படல் முதலியன சமூக மாற்றத்தின் திசைவழியைத் தீர்மானிக்கும். எவ்வளவு ஆழமாகவும் உளமார உண்மையாகவும் நம்பினாலும், அது மட்டுமே அத்தகைய விருப்பங்களை நனவாக மாற்றிவிடப் போதுமானதல்ல. மேலும் கூடுதலாக மிகக் கடுமையான உள்நோக்கிய ஆய்வு மற்றும் சமுதாயச் சக்திகளின் திருந்திய தகவமைப்பு அதற்கு வேண்டப்படுகிறது. தற்போதைய நிலையில் கோவிட் 19 பாதிப்பிற்குப் பின்வரும் உலகு, புதிய சவால்களுக்கானத் தீர்வுகளை வழங்க முழுவதுமாக இன்னும் தயாராகவே இல்லை.
        சோஷலிசம் மீண்டும் மலர்வதற்கான வாய்ப்பு என்பது முக்கியமாகப் புதிய சவாலான கேள்விகளுக்கான புதிய விடைகளைக் கண்டறியும் ஆற்றலையும் தயார்நிலையும் சார்ந்து அமையும். ஆனால் சோஷலிச சக்திகள் தங்களுக்குக் கிடைத்த பொழுதையெல்லாம் அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை, அதிலும் முக்கியமாகத் தங்கள் மத்தியிலான முரண்பாடுளை, விவாதிப்பதில் போக்கியதால் பலநாடுகளிலும் அவர்களை மேலும் ஓரம் கட்டிவிட்டது. இந்தச் சுய அழிப்புச் சட்டகத்திற்குள்ளிலிருந்து அவர்கள் முதலில் வெளியே வரவேண்டும்; தங்களது தத்துவத்தையும் கொள்கைகளையும் புதிய சூழ்நிலைக்குப் பொருந்துவதாகப் பயன்படுத்தக் கற்க வேண்டும். அது மட்டுமே மக்களுக்கும் காலத்திற்கும் பொருத்தப்பாடு உடையதாக மாறும் விஞ்ஞானபூர்வ வழிமுறையாகும். ஒற்றுமைக்குப் பாடுபடுவதன் மூலம் அந்த நிகழ்முறைக்கு புதிய வேகமும் உற்சாகமும் கிடைக்கும் –அதுவே பொருத்தமுடைய மிக முக்கியமான காரணியாகும்.
        இன்றைய உலகநிலையில் முதலாளித்துவத்தின் மறுக்க முடியா மேலாண்மை அந்தஸ்து மிகக் கடுமையாக அடிவாங்கியுள்ளது. வளர்ச்சியின் வழிமுறை இதுவெனப் புகழ்ந்து கொண்டாடப்பட்ட அனைத்தும் முடமாகி நிற்கின்றன. ‘மனிதகுல வளர்ச்சியின் உச்சபட்ச ஆதாரம் சந்தைப் பொருளாதாரமே’ என்ற மாயை சுக்குநூறாக உடைந்து சின்னாபின்னமாகியுள்ளது. உலகமயத்தின் அனைத்து வாக்குறுதிகளும் சோப்புநுரை நீர்க்குமிழிகளாக உடைந்து சிதறின. பொருளாதாரத்தில் அவர்கள் போற்றிப் புகழ்ந்த ‘மெல்ல ஊடுருவிக் கீழிறங்கும் கொள்கை’ *(trickledown theory) ஒன்றுமில்லாத வெற்றுக்கூடு என சிலகாலம் முன்பு போப் பிரான்சிஸ் கூறியது தற்போது நிரூபணமானது.
*(வியாபார நிறுவனங்கள் மற்றும் சமூகத்தில் செல்வந்தர்கள் மீதான வரிகள் குறைக்கப்படுவதன் மூலம், வர்த்தக முதலீடுகள் குறைந்த காலத்தில் அதிகரிக்க ஊக்குவிக்கப்படும்; அதனால், நீண்டகால அடிப்படையில் சமுதாயம் பெருமளவில் பயன்பெறும் என்ற பொருளாதார யோசனையே ட்ரிக்கிள் டவுன் பொருளாதாரத் தியரி எனப்படுகிறது. –விக்கிபீடியாவிலிருந்து)   
        கோவிட் 19 தாக்குதலால் இதற்குமுன் எப்போதும் சந்தித்திராத மனிதத் துயரை உலகம் எதிர்கொள்ள நேரிட்ட அந்தக் கணத்திலேயே உறுதிமொழி பலூன்கள் உடையத் துவங்கின. சந்தைப் பொருளாதாரம் மற்றும் புதிய தாராளமய உலக ஒழுங்குமுறையின் முதன்மை ஆதரவாளன், பாதுகாவலன் என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திய நாடு அமெரிக்க ஐக்கிய நாடுகள்தான். உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியை ஆராய விரும்பும் ஒரு ஆய்வு மாணவனுக்கு இன்று சிறந்த வித்தியாசமான மாதிரி ஆய்வுப் பொருளாக அமெரிக்கா விளங்குகிறது.
        ஜார்ஜ் சொரோஸ், ‘உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி’ என்ற நூலை 1998ல் வெளியிட்டபோது அதனை யாரும் பெரிதாகக் கருதவில்லை. ஒரு கோடீஸ்வரரான சொரோஸ் அந்த நெருக்கடி பிரச்சனையை மார்க்கெட் பொருளாதார ஆதரவாளர் என்ற நிலையிலிருந்தே அணுகினார். சந்தை அடிப்படைவாதத்தை நோக்கிச் செல்லும் உலக முதலாளித்துவம், முதலாளித்துவ அஸ்திவாரத்தையே குழப்பி கலக்குகிறதே என்பதே அவரது வேதனை. அரசு தலையிடக்கூடாது (laissez- faire) என்று விரும்புவது சுதந்திரச் சந்தைப் பொருளாதார சிஸ்டத்தின் இயல்பான குணமாதலின் அதனைத் தவிர்க்க முடியாது. அதிபணக்காரர்களின் கட்டுப்படுத்தப்படாத பெருலாபவேட்டை பேராசை என்பது ‘உலகமய காலத்தின்’ மிகப் பெரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. இந்தப் பேராசை குறித்துத்தான் காரல் மார்க்ஸ் கூறினார்: ‘லாபத்தின் மட்டம் அதிகரிக்க அதிகரிக்க, முதலீடு எதையும் செய்யத் துணியும்; எந்த அளவு எனில், இறுதியாக (முதலீடு) தன் எஜமானனையே கொல்லும் அளவிற்குச் செல்லும்.’ இப்படிச் சரியாக அனுமானித்தது மார்க்ஸ் முக்காலம் உணர்ந்த தீர்க்கதரிசி என்பதால் அல்ல. முதலாளித்துவத்தின் அடிப்படை இயல்பைப் பகுத்துணர்ந்து படித்த விஞ்ஞான முறைமையின் பலத்தால், அதன் உதவியால், விஞ்ஞான சோஷலிசத்தின் நிறுவனர்கள் இத்தகைய சரியான முடிவுக்கு வர முடிந்தது. முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படை குணத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சிய விஞ்ஞான சோஷலிசம் கண்டறிந்து கூறியது, ‘(முதலாளித்துவ உற்பத்தி முறையில்) சமூக உழைப்பின் பலனைத் தனியார் லாப நோக்கம் அபகரித்துத் தனதாக்கிக் கொள்ளும்.’ முதலீட்டின் இந்த உள்ளார்ந்த தன்மை சமூகத்தில் தவிர்க்க இயலாத முரண்பாடுகளுக்கு இட்டுச் செல்லும். முதலாளித்துவம் எவ்வளவு வளர்கிறதோ அவ்வளவு முரண்பாடுகளும்கூட வளரும். இந்த முரண்பாடுகளின் வீச்சு மற்றும் வடிவ அம்சங்கள் மாறலாமே தவிர, அடிப்படையான குணம் மாறாது.
        உலக சோஷலித்தின் பின்னடைவுக்குப் பிறகு, (தாராளமயம், தனியார்மயம், உலகமய) LPG காலத்தில், முதலாளித்துவம் மேலும் மூர்க்கத்தோடும் எதிர்த்துக் கேட்பார் இன்றியும் போனது; அங்கே மேலும் உச்சபட்ச லாபம் என்பதே நோக்கமானது. இதனால் மனிதனையும் இயற்கையையும் இரக்கமற்றுக் கொடுமையாகச் சுரண்டுவதற்குப் பாதை அமைக்கப்பட்டது. சோஷலிசத் தத்துவத்தின் வலிமை, முதலாளித்துவ முரண்பாடுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான படைப்பூக்க ஆற்றலுடையது மட்டுமல்ல. சரியாக வளர்த்துப் பயன்படுத்தப்படுமானால், முந்தைய சோஷலிச மாடல் வீழ்ச்சி அடைந்ததற்கான காரண காரியங்களையும் புரிந்து கொள்ளும் திறன் அதற்கு உண்டு. ‘விக்ஞானங்கள்/விளக்கங்கள் மட்டுமே போதுமானதல்ல’ என்று மார்க்ஸ் கூறியது போல, அது மட்டுமே போதுமானதல்ல. இங்கே கேள்வி, “எப்படி அதனை மாற்றுவது?” என்பதுதான்.  
        21ம் நூற்றாண்டின் இன்றைய சூழ்நிலையில், உலக முதலாளித்துவத்தின் கொள்கை மற்றும் நடைமுறை, சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை கொள்கைகள் அனைத்தும் மிகப் பரிதாபகரமாகத் தோல்வியடைந்துள்ளன. கோவிட் 19 தொற்று பரவல் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாதிப்பு, உலக முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத அதன் சிஸ்டத்தில் இருந்த முரண்பாடுகளை அம்பலப்படுத்தித் தோலுரித்துக் காட்டிவிட்டது. உலகமயம், உலக வெப்பமயமாதல், நோய் தொற்றுப் பரவலும் அதன் பொருளாதார விளைவுகள் என அவற்றின் இடையே இருந்த தொடர்புகளை மேலும் மேலும் அனைவரையும் பார்க்கச் செய்துள்ளது. உலக முதலாளித்துவத்தின் ‘புயல்-படைகள்’ (Storm-troopers –நாஜி ஜெர்மனியின் தாக்குதல் பிரிவு) இனியும் அவற்றை மூடி மறைக்க முடியாது.
உலக முதலாளித்துவத்தின் கோட்டைக் கொத்தளமான ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நியூயார்க் நகரில் மட்டும் கரோனா சம்பந்தமாக இறந்தவர் எண்ணிக்கை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். ஏப்ரல் 15 வரை மட்டும் அமெரிக்காவில் 6,14,246பேர் பாதிப்பு; 26,064 பேர் பலியானதாக அறிவிக்கப் பட்டுள்ளது. (மொழிபெயர்த்த ஜூன் 4ம் தேதி இணையதளத் தகவல்படி அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் மொத்தம் 19,01,783 பேர்; பலியானோர் 1,09,142 பேர். பாதிக்கப்பட்டோர், பலியானோர்க்கு நமது பரிவும் அஞ்சலியும் --மொழிபெயர்ப்பாளர்)
        மிகமிக வளர்ச்சியடைந்த முதலாளித்து நாட்டின் மக்கள் முகக் காப்பு, கை கழுவ கிருமிநாசினி மற்றும் முக்கியமான கருவிகள் கிடைக்காத பற்றாக்குறையால் கடுமையான தட்டுபாட்டைச் சந்திக்கிறார்கள். அத்தியாவசியமான மருந்துகள், முழு உடல் காப்பு ஆடை முதலிய கருவிகள் அவர்களுக்கு எட்டா கனியாக உள்ளது. (சமூக வலைதளக் குறும்படத்தில் வயதான பெண்மணி தனது தாயாருக்குத் தேவையான ஊசி மருந்தைத் தேடி அலைந்து கிடைக்காதபோது, ஒரு மருந்து விற்பனையாளரான இளைஞன் அதிக விலைக்கு விற்கும் அவலம் காட்சிப்படுத்தப்பட்டது நினைவுக்கு வருகிறது). தனியார்மயப் பைத்தியக்காரத்தனத்தின் காரணமாக சில வருடங்களுக்கு முன்பு பொதுச் சுகாதாரப் பராமரிப்பு சிஸ்டம் மூடப்பட்டது. மருத்துவக் காப்பீடு வெட்டிக் குறைக்கப்பட்டது; 3 கோடி அமெரிக்கர்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. 33சதவீதமான மக்கள் எந்தவிதச் சிகிச்சையும் பெற விரும்புவதில்லை; காரணம், அதற்கான செலவு 30 முதல் 50 லட்சம் ரூபாய் என்பது அவர்களுக்குக் கட்டுப்படியாகாத ஒன்று. கோரோனா காலத்தில் கூட 120 கிராமங்களில் மருத்துவமனைகள் மூடப்பட்டு விட்டன. மருத்துவர் -- நோயாளி விகிதம் பல ஆப்பிரிக்க ஏழை நாடுகளை விட அமெரிக்காவில் குறைவு. இதன் பொருள் மக்கள்தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள் எண்ணிக்கை இல்லை என்பதே. வேலையில்லா திண்டாட்டம் மிகக் கடுமையாக அதிகரித்து, அதன் சமூக விளைவு அமெரிக்காவைத் துரத்தத் தொடங்கிவிட்டது. இதே அவலநிலைதான் பல ஐரோப்பிய நாடுகளிலும் நிலவுகிறது.
        சரித்திரம் இன்று, ‘கரோனாவிற்கு முன்பும் பின்பும்’ எனப் பிரிக்கப்பட்டு, குறுக்கு ரோட்டில் நிற்கிறது. உலகில் எதுவும் கரோனாவிற்கு முன்பு இருந்த பழைய நிலைக்குத் திரும்பப் போவதில்லை. இனிவரும் நாட்களில் மனிதர்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்தும் வித்தியாசமாக இருக்கப் போகிறது. சுத்தம், சுகாதார ஆரோக்கியப் பராமரிப்பு மட்டுமல்லாது, பொருளாதாரம், அரசியல், சமூகவியல் என அனைத்தும் மாற்றத்திற்கு உள்ளாகும். அனைத்துப் பிரிவுகளிலும், அனைத்து வகையான தனியார் உடைமைகளும் –தாங்கள் நீடித்திருப்பதற்கே-- பொதுத்துறைகளையும், அரசு ஆதரவு நிதிஉதவியையும் சார்ந்தே இருக்க வேண்டிவரும். முதலாளித்துவ நெருக்கடிகள் கடந்த காலங்களில் பல முறை அரசு/ பொதுமக்களின் நிதியைப் பயன்படுத்தியே தீர்க்கப்பட்டுள்ளன. நெருக்கடி தனியார் முதலீட்டால் உருவாக்கப் பட்டது என்றபோதும் அதன் தீர்வு பொதுமக்கள் பணத்தைக் கொட்டியே சாத்தியமாகி இருக்கிறது. (நமது நாட்டில் ‘எஸ்’ வங்கி திவால் பிரச்சனை எஸ்பிஐ நிதியைக் கொண்டே சமாளிக்கப்பட்டது ஓர் உதாரணம்).
        கரோனா நாட்களுக்கு முன்பே உலகமயத்தின் உந்து சக்தியாகச் பயன்பட்ட சந்தை வருமானத்தில் பாரதூரமான பிளவை மூர்க்கமாக வளர்ந்தது. அதன் விளைவாய், 6.9 பில்லியன் (ஒரு பில்லியன் நூறு கோடி; எனவே 690கோடி) மக்கள் வைத்திருக்கும் சொத்தைப்போல இரண்டு மடங்கு செல்வத்தை உலகின் பெரும் பணக்காரர்களில் 1சதவீதத்தினர் மட்டுமே குவித்து வைத்துள்ளனர். உலகின் அதிபணக்காரர்கள் 22 பேரின் மொத்த சொத்து ஆப்பிரிக்காவில் உள்ள அனைத்துப் பெண்களின் சொத்துக்களைவிட அதிகம் என டைம் டு கேர் ரிப்போர்ட், Oxfam,2020 (சுதந்திரமான 19 அறக்கட்டளை அமைப்புகளின்–லாபநோக்கமில்லா—கூட்டமைப்பு) கூறுகிறது. உலக வங்கியின் மதிப்பீட்டின்படி உலக மக்கள் தொகையில் பாதிபேர் ஒரு நாளைக்கு 5.50 டாலருக்கும் (இன்று ஒரு டாலர் = ரூ75.50 ) குறைவான வருமானத்தில் வாழ்கிறார்கள்.
        இப்போது கரோனா நாட்களின்போது சந்தைப் பொருளாதாரம் கட்டி எழுப்பிய அனைத்து செயல்வழிமுறைகளும் அம்பலப்பட்டு நிற்கின்றன. அவை மக்களின் துன்ப துயரங்களுக்குத் தீர்வு காண முடியாது செயலிழந்துள்ளன. ‘மாற்றுவழி இல்லை’ என்ற அவர்களின் கொள்கை, (TINA –There Is No Alternative) பொத்தல் விழுந்த பலூனாகி உள்ளது. (சந்தை போல மக்கள் அப்படியே உறைந்துபோய் நின்றுவிடுவதில்லை) உலகில் மக்கள் இயல்பாக மாற்று வழிமுறைகளைத் தேடுவார்கள் என்பது நிச்சயம். இந்தத் தருணத்தில் சோஷலிச சக்திகள் புதிய சவால்களைச் சந்திக்க எழுச்சி பெற்று எழ வேண்டும். சோஷலிசத் தத்துவத்தின் அடிப்படை குணாம்சம் புதிய விடைகளைக் கண்டறிவதற்கான ஊற்றாகத் திகழும். சோஷலிசத் தத்துவத்தை நம்புகின்ற சக்திகள், 21ம் நூற்றாண்டின் மிக முக்கியமான பிரச்சனைகளை எவ்வாறு அணுகப்போகின்றன என்பதைப் பொருத்து தீர்வுகள் அமையும்.  சோஷலிச சக்திகளின் தத்துவார்த்த, அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான தயார் நிலை தற்போது சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழலியல், சமூகவியல் மற்றும் பாலின சமநீதி முதலிய பல்வேறு அம்சங்கள் இனிமேலும் இரண்டாமிடத்தில் வைத்து எண்ணப்படல் ஆகாது. இவை அனைத்தின் ஊடாகவும் புதிய பாதைக்கான தேடல் முயற்சியில் ஜனநாயகத்தின்பால் பற்றுறுதி நிச்சயமாக மைய இடம் பெற வேண்டும். பல்வேறு ஓடைகளாய் சமூகமாற்றங்கள் ஒன்றிணைந்து நடைபோடவும் புதிய உலகின் நம்பிக்கையாய் உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது.
சரித்திரம் யாருக்காவும் காத்திருப்பதில்லை.
--நன்றி : ஃப்ரண்ட்லைன்
--தமிழில் : நீலகண்டன்,
  என்எப்டிஇ, கடலூர்

 


No comments:

Post a Comment