Monday 29 June 2020

தலைவர்கள் வாழ்விலிருந்து : சித்திரத் சிதறல்கள் -2 S.G. சர்தேசாய் :


நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :
சில சித்திரத் சிதறல்கள் -2


S.G. சர்தேசாய் : தலைவர், நல்ஆசிரியனுமாய்

--அனில் ரஜீம்வாலே
(நியூஏஜ் 2020 ஜூன் 21 – 27 இதழ்)

இளமைப் பருவம் பள்ளியில்
        ஸ்ரீனிவாஸ் கணேஷ் சர்தேசாய் மராட்டிய மாநில ஷோலாப்பூரில்1907 மே 3ம் நாள் பிறந்தார். ஜிஎஸ் சர்தேசாய் எனும் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரின் உடன்பிறந்தார் மகன் உறவு (nephew). சர்தேசாய் புகழ்பெற்ற கல்வியாளரும் தொழிலதிபருமான கிர்லோஸ்கர் குடும்ப உறவினரும் கூட. அவரது நான்கு வயதில் தமது தாயை இழந்தார். 13வயதிலேயே 1920-ல் பரோடா உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்ட அவர் மெட்ரிகுலேஷன் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை, காரணம் குறை வயதாம்! எனவே அடுத்த ஆண்டு 1923லே எழுதினார். அவருடைய மாமா ஜிஎஸ் சர்தேசாய் இளவரசர் பிரதாப் மற்றும் கெய்க்குவாட் அரசகுடும்ப உறுப்பினர்களுக்கு ஆசிரியராக இருந்தார். அதனால் அரச குடும்பத்தினர் பழக்க வழக்கங்களை மிக நெருக்கமாக இருந்து பார்க்கக் கூடிய வாய்ப்பைச் சர்தேசாய் பெற்றார்.
கல்லூரியில்
         (மராட்டிய சங்கிலி மாவட்டத் தலைநகரான சங்கிலி –மஞ்சள் நகர் என மஞ்சளுக்குப் புகழ்பெற்ற -- கிருஷ்ணா நதிகரையில் அமைந்த) சங்கிலி கல்லூரியில் 1923ல் ஸ்ரீனிவாஸ் சேர்ந்தார். அங்கே ஆங்கிலம், சமஸ்கிருதம், பௌதீகம் மற்றும் கணக்குப் பாடங்களைப் பயின்றார். அந்தப் பாடங்களில் அவருக்கு ஆர்வம் இல்லாததால் வணிகம், பொருளாதாரம், ஆங்கிலம் முதலியவற்றைப் படிக்கப் பாம்பே வணிகக் கல்லூரிக்கு மாறினார். அதே நேரம் இந்தியத் தத்துவங்கள், சுவாமி விவேகானந்தர், ராமதீர்த்தர் போன்றவர்களைப் படிக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கல்லூரி விவாதங்களில் பங்கேற்றதுடன் கல்லூரி இதழ் நடத்துவதிலும் பொறுப்பேற்றார். பேராசிரியர் பீ.ஏ.வாடியா மற்றும் பி.ட்டி.ஷா போன்ற பெரும் கல்வியாளர்கள் சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றார். அவருக்குக் கிடைத்த மற்றொரு பெரும் வாய்ப்பு புகழ்பெற்ற பிரித்தானியக் கம்யூனிஸ்ட் தலைவர் (மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்) ஷபூர்ஜி சக்லத்வாலா உரையைக் கேட்டது.  1927ல் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் (M.Com) முதுகலை வணிகவியல் கற்கச் சென்றார். பாம்பேயில் சைடென்ஹாம் கல்லூரி முதல்வர், இந்திய அரசு சேவையில் பணியாற்றச் சர்தேசாய் பெயரைச் சிபார்சு செய்தபோதும், அவர் அதை நாகரீகமாக மறுத்து விட்டார்.
அரசியலில்
       அலகாபாத் நிகழ்வொன்று அவர் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இந்தியா வந்திருந்த பிர்கென்ஹெட் பிரபு, இந்தியர்கள் சொந்தமாக அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கத் தெரியாதவர்கள் என விமர்சனம் செய்தார். அதன் பின்னரே மோதிலால் நேரு தலைமையில் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு அமைக்கப்பட்டது. வரைவு அறிக்கையைத் தயாரிக்கும் பணி சர் தேஷ் பகதூர் சாப்ரு வசம் தரப்பட்டது. அவருக்கு ஓர் உதவியாளர் தேவைப்பட்டார். அப்போது சர்தேசாய் தமது முதுகலைப் பட்ட ஆய்வுக்காகப் பாடுபட்டு வந்தார். அவரைப் பண்டிட் இருதயநாத் குன்ஸ்ரு (சமூக சேவகர் மற்றும் 1954ல் நீதிபதி ஃபாஸில் தலைமையில் அமைக்கப்பட்ட மாநிலப் புனரமைப்புக்குழுவின் உறுப்பினராகச் செயல்பட்டவர்) அந்த உதவியாளர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி கூறினார். அதன்படி 1928லிருந்து நேரு குடும்ப இல்லமான ஆனந்த பவனத்திலிருந்து சர்தேசாய், சாப்ருவின் உதவியாளராகப் பணியாற்றத் துவங்கினார்.  இந்நிகழ்வு சர்தேசாயின் வாழ்வின் திசைவழியை மாற்றியது.
        சர்தேசாய் தமது பணிகளில் அப்படியே மூழ்கி விடுவார் என பண்டிட் மோதிலால் நேரு அடிக்கடி குறிப்பிடுவார். கூட்டங்களுக்குக் குறிப்புகள் தயாரிப்பார். பிரிட்டீஷ் அரசியலமைப்பை விரிவாகப் படித்ததுடன், பிரிட்டீஷ் பேரரசின் பிற அரசியலமைப்புச் சட்டங்களையும் படித்தார். இந்திய அரசியலமைப்பு அறிக்கையை எழுதிய ஆசிரியர்கள் முக்கியமாக மோதிலால் நேருவும் சாப்ருவும் ஆவர். மௌலானா ஆசாத் மற்றும் பிற தலைவர்களின் கருத்துகளைக் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றார் சர்தேசாய்.
        இதன் மத்தியில், ஜவகர்லால் நேரு மற்றும் பிசி ஜோஷியுடன் சர்தேசாய் அறிமுகம் ஆகிறார். அப்போதுதான் சோவியத் யூனியனிலிருந்து திரும்பிய நேரு அந்நாட்டின் சோஷலிச முறையால் பெரிதும் ஈர்க்கப்பட்டவராக இருந்தார். அங்கே அவர் 1929ல் புரூசெல்ஸில் நடைபெற்ற ஏகாதிபத்தியத்திற்கு எதிரான லீக் மாநாட்டிலும் கலந்து கொண்டார். சர்தேசாயிடம் –கம்யூனிஸ்ட் அறிக்கை, அரசும் புரட்சியும், புக்காரினின் வரலாற்றுப் பொருள்முதல் வாதம் முதலானவை உட்பட-- பல மார்க்ஸிய நூல்களை நேரு கொடுத்தார் எனச் சர்தேசாய் குறிப்பிட்டுள்ளார்.
        அலகாபாத்தில் உள்ள ஹாலண்டு ஹால் ஓட்டலில் சர்தேசாய் பி.சி.ஜோஷியைச் சந்தித்தார். அங்கே ஜோஷி மார்க்ஸியப் படிப்பு வட்டம் ஒன்றை அமைத்தார். மீரட் சதி வழக்கில் (1929 – 33) ஜோஷி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார். அதன் பின்னர், சர்தேசாய் கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியராக இணைய விரும்பி, சாப்ரு போன்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் நன்கு சிந்தித்த பிறகு முடிவெடுக்கும்படி கூறினர். கிர்லோஸ்கர் பிரதர்ஸ் கம்பெனிகள் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றவும் அவருக்கு அழைப்புகள் வந்தன. ஆனால் அவற்றை விட்டு, தனது வணிகவியல் முதுகலைப்பட்ட ஆய்வையும் முடிக்காமல் முழுநேர ஊழியராகப் பணியாற்றத் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கட்சியில் சேர்ந்தார்.
பாம்பேயில்
        M Com படிப்பை விட்டு நீங்கிய சர்தேசாய், பி சி ஜோஷி கைதுக்குப் பின் பாம்பே சென்றார். அங்கு 1929 முதல் தி கிரேட் இந்தியன் பெனிசுலா (GIP) இரயில்வே கம்பெனி தொழிலாளர்கள் சங்கத்தில் பணியாற்றத் துவங்கினார். எஸ் வி தேஷ்பாண்டே,     BT ரணதிவேயுடன் தொடர்பு கிடைத்தது. 1930ல் GIP இரயில்வே தொழிலாளர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தில் இறங்கியது. தொழிலாளர்களை அணி திரட்ட (நாசிக் மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நகரான) மன்மட் பகுதிக்கு அனுப்பப்பட்டார் சர்தேசாய். காவல்துறை, மற்றும் நிர்வாகத்தின் கடும் அடக்குமுறைகளைச் சந்தித்து பாம்பே திரும்பினார். அப்போது உப்பு சத்தியாகிரகம் நடந்து கொண்டிருந்தது. அதில் கலந்து கொள்ள அவர் விரும்பினாலும் மற்றவர்கள் ஏன் அனுமதிக்கவில்லை என்பது அவருக்குப் புரியவில்லை. இருப்பினும் மீறி தண்டி உப்பு சத்தியாகிரகத்திலும் காந்திஜியின் மற்ற இயக்கங்களிலும் பங்கேற்றார். அகமது நகர் வன சத்தியாகிரக இயக்கத்தில் (காடுகள் பாதுகாப்பிற்கான சத்யாகிரகம்) பங்கேற்று கைதாகி எரவாடா மற்றும் நாசிக் சிறைச் சாலைகளுக்கு அனுப்பப்பட்டார். காந்தி – இர்வின் உடன்பாடு ஏற்பட்ட பிறகு விடுதலையானார். ‘இரயில்வே ஒர்க்கர்’ ஆங்கில இதழ் மற்றும் ‘இரயில்வே மஸ்தூர்’ என்ற இந்தி இதழ்களின் ஆசிரியராகச் சர்தேசாய் பணியாற்றியுள்ளார்.
        பின்னர் கான்பூர் சென்றபோது அங்கு 1932ல் கைதானார். சிறையில் அஜாய் கோஷ் அவர்களைச் சந்தித்தார். அவருடன் பேசியபோது கம்யூனிச இயக்கம் குறித்துப் பல செய்திகளைக் கூறினார்.  விடுதலையான பிறகு பாம்பே வந்து, பெருமளவில் அப்போது எழுச்சி பெற்று நடந்த மக்கள் இயக்கங்கள் மற்றும் கம்யூனிச இயக்கங்கள் பலவற்றில் உற்சாகமாகப் பங்கேற்றார். 1934ல் நடைபெற்ற வேலைநிறுத்தத்தின்போது மீண்டும் கைதுசெய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். பல மார்க்ஸிய நூல்களைக் கற்றதுடன், அவற்றில் பலவற்றை மராத்தில் மொழிபெயர்த்தார்.
காங்கிரஸ் சோஷலிசக் கட்சியில்
        விடுதலைக்குப் பிறகு CSP (காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி)யோடு தொடர்பு கொள்ளப் பணிக்கப்பட்டார். இதன் மத்தியில் கவுன்சில் தேர்தலில் பணியாற்ற அவர் சோலாப்பூர் அனுப்பி வைக்கப்பட்டார். போலீஸ் அடக்குமுறைகளை மீறி கட்சி வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார். சிலகாலம் சோலாப்பூரில் பணியாற்றியபோது, செம்பாதி எண்ணிக்கை பெண்களாக இருந்த ஏராளமான பீடித் தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்தார். சர்தேசாயின் இளைய சகோதரி மீனாட்சிகூட அங்கே அவர்களோடு பணியாற்றினார்.
        சோலாப்பூரில் ‘ஏக்ஜுட்’ (ஒற்றுபட்டிருத்தல்) என்ற மராத்தி இதழை நடத்தினார். மீண்டும் கைதாகி பீஜபூர் மற்றும் எரவாடா சிறைகளில் அடைப்பு. 1938 நவம்பரில் விடுதலையான பிறகு  பாம்பே பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 திரிபுராவிலும் கல்கத்தாவிலும் நடைபெற்ற இந்திய தேசிய மாநாடுகளில் கலந்து கொண்டார். அங்கே அவர் ஆற்றிய ஈர்க்கக் கூடியதான உரைகள் அனைவராலும் பாராட்டப்பட்டன.
        இரண்டாவது உலகப் போர் வெடித்த பிறகு அக்டோபர் 1939ல் தலைமறைவு இயக்க வாழ்வில் ஈடுபட்டார். 1940ல் பஞ்சப்படிக்காக நடைபெற்ற போராட்டங்களில் உயிர்ப்போடு பங்கேற்றார். 1940 நவம்பரில் மீண்டும் கைது செய்யப்பட்டு நாசிக் சிறையில் அடைக்கப்பட்டவர் சுமார் இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஜூலை 1942ல்தான் விடுதலையானார். காங்கிரசில் இருந்து செயல்பட்ட கம்யூனிஸ்ட் குழுவின் தலைவராக 1942 ஆகஸ்ட் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பங்கேற்றார்.
முதல் இந்தியக் கம்யூனிட் கட்சி காங்கிரஸ் மாநாடு 1943
        1942 செப்டம்பரில் கட்சி மையத்திலிருந்து செயல்பட அவர் பணிக்கப்பட்டார். உ.பி., பீகார் மற்றும் பல மாநிலங்களுக்கும் சென்று கட்சிப்பணி ஆற்றினார்; அவற்றுள் கட்சி கல்விப் பணியும் ஒன்று. லகிசராய் பகுதியின் பல கிராமங்களுக்கும் பீகாரின் பல பகுதிகளுக்கும் சென்று பணியாற்றினார். கட்சிப் பத்திரிக்கையான ‘லோக்ஆயுதா’ இதழில் தொடர்ந்து எழுதினார்.
         இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 1942 ஜூலையில் நீக்கப்பட்டது. (தலைமறைவாக இல்லாமல்) முதன்முறை வெளிப்படையாகக் கட்சிக் காங்கிரஸ் பாம்பேயில் 1943, மே 23 முதல் ஜூன் 1தேதி வரை நடைபெற்றது. அதில் பதினாராயிரம் உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய 139 மாநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கட்சியின் பெரும் தலைவர்கள் எஸ் ஏ டாங்கே, பி சி ஜோஷி, எஸ் ஜி சர்தேசாய், டாக்டர் ஜி அதிகாரி, எஸ் வி காட்டே, இஎம்எஸ், சோகன்சிங் ஜோஷ் மற்றும் பலர் மாநாட்டு நிகழ்முறைகளில் பங்கேற்றனர். சிபிஐயின் மத்தியக் குழு உறுப்பினராகச் சர்தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் டாக்டர் அதிகாரி உட்பட்டோர் அந்தப் பொறுப்புகளில் தாங்களாகவே தங்களை விடுவித்துக் கொள்ளும் வரை நீடித்தார்கள். 1982 வரை தேசியக்குழு உறுப்பினராகச் சர்தேசாய் இருந்தார். மத்திய நிர்வாகக் குழு மற்றும் சிபிஐ மத்தியச் செயலகத்தில் நீண்ட காலம் உறுப்பினராகப் பணியாற்றினார்.
பிற செயல்பாடுகள்
        1969 மாஸ்கோவில் நடைபெற்ற உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு உட்பட பல சர்வதேச மாநாடுகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எஸ் ஜி சர்தேசாய் பங்கேற்றுள்ளார். மத்திய கட்சிக் கல்வி பள்ளியின் பணிகளில் தீவிரமாகப் பணியாற்றிய ஆசிரியர் அவர். 1970 முதல் 1976 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். ‘வோர்ல்டு மார்க்ஸிஸ்ட் ரிவியூ’ இதழின் ஆசிரியர் குழுவில் சர்தேசாயும் ஒருவர். அவர் தமது வாழ்வின் இறுதிக் காலத்தை மகாராஷ்டிரா புனே மாவட்ட தாலேகாவ் (தாபடே) பகுதியில் கழித்தார். 1957ல் டாக்டர் கார்கி பட்கர் அவர்களை  மணந்தார்.
பல நிகழ்வுகள் குறித்த அவரது பார்வையும் எழுத்துகளும்
        ‘ஸ்டாலினிய கொள்கை வரட்டுப் பிடிவாதம்’  (‘Stalinist dogmatism’) மற்றும் (அமைப்புகளை) அதிகாரமயப்படுத்தலை வெளிப்படையாக எதிர்த்தார். மார்க்ஸியம், உருவாகும் புதிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, தொடர்ந்து வளர்ச்சி அடைந்து மாறிக்கொண்டே இருக்க வேண்டும்; இல்லையெனில், அது (குட்டையாகத்) தேங்கிவிடும் என்று சர்தேசாய் வலியுறுத்தினார்.
        டாக்டர் அம்பேத்கார் குறித்து பல கட்டுரைகளை எழுதி அவரது சிந்தனைகளை மார்க்ஸ் மற்றும் பிற சிந்தையாளர்களின் கருத்துகளோடு ஒப்பிட்டார். “அம்பேத்காரும் ஷெட்யூல்டு சாதிகளும்” போன்ற தலைப்புகளில் அவர் எழுதிய கட்டுரைகள் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆங்கிலப் பத்திரிக்கையான) நியூஏஜ் இதழில் டிசம்பர் 1969ல் பிரசுரமானது.
        அவருடைய புகழ்பெற்ற நூல்களில் “பண்டைய இந்தியாவில் வளர்ச்சியும் பழமைவாதமும்” (‘Progress and Conservatism in Ancient India’) என்பது குறிப்பிடத்தக்கது.
        சிறந்த நல்லாசிரியரும் நல்வழிகாட்டியத் தலைவருமான எஸ் ஜி சர்தேசாய் 1996 நவம்பர் 18ம் நாள் மறைந்தார்.
        அவருடைய செயல்பாடுகளும் அறிவார்ந்த எழுத்துகளும் என்றும் நினைவில் வாழும். சர்தேசாய் நினைவுக்குச் செவ்வணக்கம்!
--தமிழில் : நீலகண்டன்,
 என்எப்டிஇ, கடலூர்


No comments:

Post a Comment