Friday 19 June 2020

எல்லையில் பதற்றம் : பேச்சுவார்த்தையே தீர்வுக்கு வழி

        


நியூஏஜ் தலையங்கம்

எல்லையில் பதற்றம் :
பேச்சுவார்த்தையே தீர்வுக்கு வழி
        
இந்தியா-சீனா எல்லையில் அதிகரித்துள்ள பதற்றம், அமைதியை விரும்பும் அத்தனை மக்களுக்கும் பெரும் கவலையளிப்பதாகும். கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய இராணுவவீரர்கள் கொல்லப்பட்டிருப்பது எதிர்பாராத திருப்பம். அந்தத் தியாக வீரர்கள் தேசத்தின் ஹீரோக்களாக என்னென்றும் நினைவில் கொள்ளப்படுவர். அந்த வீரர்களின் குடும்பநலன்களைப் பாதுகாக்க அரசு ஆவண செய்யும் என நம்புவோம். சீனத் தரப்பில் பாதிப்பு குறித்த விபரங்களை அந்நாட்டு அரசு வெளிப்படுத்தவில்லை எனினும், அங்கேயும் உயிர் இழப்பு உள்ளிட்டு கடும் சேதாரம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுயமரியாதையும் இறையாண்மையும் உடைய எந்த நாடும் தனது நாட்டு எல்லைகள் அத்துமீறப்படுவதைச் சகித்துக் கொள்ள முடியாது. பிரதேச ஆக்கிரமிப்பு என்பது (நாடுபிடிக்கும்) பிரதேச விரிவாக்க முயற்சி என்பதைத் தவிர வேறல்ல. கடந்த காலத்தில் கூட சீனா அதற்கான அத்தகைய ஆர்வத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
        கடந்து போன வருடங்களின் அரசியல் உளவியல் அது. நவீன காலத்தில் எந்த ஒரு நாடு அத்தகைய பாதையைத் தேர்ந்தெடுக்கிறதோ, அந்த நாடு போர்வெறி பிடித்தது; (பிற பகுதியை ஆக்கிரமித்து) எல்லைகளை விஸ்தரிக்க அலைவது என்றே அழைக்கப்படும். போர் அரசியல், அழிவு உண்டாக்கும் தற்கொலை பாதை. இந்தியாவின் மரபார்ந்த பாரம்பரியமும், பின்பற்றும் தத்துவமும் நிச்சயம் போருக்கு எதிராக உறுதியாக நிற்பது.
       இந்திய சீன உறவு போக்குகளில் எல்லை தகராறுகள் புதிதல்ல. புரிந்து கொள்ளக் கூடிய காரணங்களால் இரண்டு பக்கத்திலும் வழக்கமாகத் தகராறுகள் கைமீறிவிடாது ஓர் எல்லைக்குள் வைக்கப்படுகின்றன. முரண்பாடுகள் ஒருபோதும் மோதல்களாக மாறிவிட அனுமதிக்கப்பட்டதில்லை. காரிய சாத்தியமான ஒருவழிமுறை ஏற்படுத்தப்பட்டு, இந்தியா சீனா இரண்டு நாடுகளும் அதனை பின்பற்றியும் வருகின்றன. அந்த வழிமுறைகளும் அதன் விளைவாய் உண்டான உடன்பாடுகளும் பின்பற்றப்பட்டிருக்குமானால், தற்போதைய உயிர்பலி பாதிப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும். இரண்டு படைவீரர்களுக்கும் இடையே கைகலப்பும் பூசல்களும் பெரும் பதற்றமாவதைத் தணிப்பதற்காகவே தலமட்டப் பேச்சுவார்த்தையை அந்த உடன்பாடுகளில் வலியுறுத்தப்பட்டதன் நோக்கமாகும். அமைதியைப் பேணவும், சிக்கல் மிகுந்த பகுதிகளில் (எல்லையில் போர் உஷ்ணம் அதிகரிக்காது பூஜ்யத்தில்) நிலைத்தன்மை பாதுகாக்கப்படவும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையேயும் மற்றும் அரசியல் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
        ஆனால் ஜூன் 15--16 இரவில் துரதிருஷ்டவசமான எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்து விட்டது. இவ்வளவு முக்கியமான சம்பவம் நிகழ்ந்த பிறகு ஏன் இந்திய அரசு வாய்மூடி மௌனமாக இருந்தது என்பதற்கான காரணம் தெரியவில்லை. உண்மையான நிலவரத்தை நாட்டு மக்களுக்கு விளக்கிட அரசின் அரசியல் தலைமை முன்வரவில்லை. அதிமுக்கியமான காலகட்டத்தில் எல்லாம் மக்களை நாடிச் சென்று உண்மைகளை எடுத்துரைப்பது தலைவர்களின் கடமை. ஆனால் நரேந்திர மோடி வழிநடத்தும் இந்திய ராஜ்யத்துறை சர்வதேச உறவின் புதிய ஞானம் வேறு வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. அமைதியை விரும்பும் இந்த மாபெரும் தேசம் மற்றும் அதன் இன்னலுறும் மக்கள் கூட்டத்தின் அடிப்படை நலன்களுக்குப் பொறுப்பானவர்களாகவும் நியாயமாகவும் தங்கள் தலைவர்கள் நடக்க வேண்டும் என்று நாடு விரும்புகிறது.
        அதிதீவிர தேசியத்தின் கருத்தாளர்கள் அதிகப்படியாகத் தாண்டிக் குதித்துத் தங்கள் பிரச்சார பீரங்கிகளைக் கூடுதல் பணிநேரம் (கொம்பு சீவிவிடப்) பயன்படுத்துகிறார்கள். அவர்கள் எல்லை பிரச்சனையைக் குறுகிய எதார்த்தமற்ற கருத்தோட்ட நோக்கத்துடன் அணுகுகிறார்கள். அண்டை நாடுகளுடன் உறவு என்பது அவர்களுக்குச் சிறிதும் முக்கியமில்லாத விஷயம். இந்தச் சாகச கொள்கையும், ராஜ்ய உறவுக்கான அதன்  வழிகாட்டலும் இந்திய நாட்டை, அண்டை நட்பு நாடுகள் குறைவாக அமைந்த நாடாக, மாற்றி உள்ளன. அதற்குப் பதிலாக, நம் நாடு தேவைப் பட்டபோதும், தேவையிலாத தருணங்களிலும்கூட, ஒவ்வொன்றிற்கும் அமெரிக்காவை எதிர்பார்க்க வைத்துள்ளது. அந்தச் சக்திகளுக்குச் சீனாவின் எல்லையை ஒட்டி இராணுவ பலத்தைக் குவிப்பது சுலபமான தேர்வாகும். சர்வ தேச அரங்கில் அதன் கூட்டாளிகளும் அத்தகைய நடவடிக்கையை உவந்து வரவேற்கவே செய்வார்கள். (ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல) பலம் பொருந்திய இரண்டு பெரும் அருகமை நாடுகள் முரண்பட்டு மோதிக் கொள்ளும் என்றால், போர் ஆதரவாளர்களுக்கும் சாவை விற்கும் வணிகர்களுக்கும் (merchants of death) நல்ல வாய்ப்பு – மோதலின் பதற்றத்தை ஊதிப் பெரிதாக்கித் தங்கள் ஆயுத விற்பனையை அதிகரிக்க -- அவர்களுக்கு அருமையான வாய்ப்பு. இந்த நெருக்கடியான தருணத்தில் இந்தியா முடிவெடுப்பதில், இந்தியாவை வழி நடத்துவதில் அவர்களுக்கு நாட்டாண்மை தந்துவிடக் கூடாது.  
        இந்தியத் தாயக மண்ணின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்பது அவசியம். எல்லையில் காவல் காத்து நிற்கும் நமது ஜவான்களின் உயிரும் அவர்தம் கௌரவமும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்குப் போர் ஒன்று மட்டுமே தேர்ந்தெடுக்கக்கூடிய வழிமுறை ஆகாது. இந்திய நாடு முழுமையும் கொள்ளை நோய் தொற்றின் கொடுமையான கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்தத் தருணத்தில், ஆகப் பெரும் அளவிலான இராணுவரீதியான மோதலை இந்தியா நினைத்துப் பார்க்க முடியாது. (கொள்ளை நோய் போன்ற பாதிப்பு இல்லை என்ற போதிலும் கூட) உணர்வுள்ள அறிவார்ந்த ஒரு நாடு, அணுஆயுத சகாப்தத்தில், போர் என்பதை நிச்சயம் வழிமுறையாகத் தேர்ந்தெடுக்காது. நவீன யுகத்தில் அத்தகைய போரின் இறுதியில் வென்றவர் என்று மிச்சம் இருக்கக் கூடியவர் எவருமில்லை; மாறாக, தேசத்தின் மக்கள் கூட்டம் மேலும் சொல்லொண்ணா துன்பத்தில் தள்ளப்பட்டு விடும். சீனாவைப் பொருத்தும் இதுவேதான் நிலை, அந்தநாடும் கொள்ளை நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசியல் மட்டத்தில் பேச்சுவார்த்தையே தற்போதைய தேவை. அந்தத் திசைவழியில் இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் விவாதிக்கத் தொடங்கியிருப்பது நம்பிக்கை தரும் நடவடிக்கையாகும். அந்தத் துவக்கம் மேலும் வளர்ந்து பொருள் பொதிந்த புதிய உச்சங்களைத் தொடட்டும்! ஆசியாவின் இரண்டு பெரும் அண்டை நாடுகளில் அமைதி மீண்டும் அரியணை ஏற்றப்படட்டும்!
“புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
        போரிடும் உலகத்தை வேரோடும் சாய்ப்போம்!”   
                                                --பாவேந்தர் பாரதிதாசன்
--தமிழில் : நீலகண்டன்,
  என்எப்டிஇ, கடலூர்



No comments:

Post a Comment