Friday 26 June 2020

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான தோழியர் அமர்ஜித் கவுர் பேட்டி


AITUC பொதுச் செயலாளர்
தோழியர் அமர்ஜித் கவுர்
 நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா           
 ஜூன் 26 இதழில் பேட்டி


ஊதியம், பணிபாதுப்பு மட்டும் கேட்பதற்கல்ல தொழிற்சங்கங்கள்!
பொது நலனுக்காகச் சங்கடமான கேள்விகளையும்
அவர்கள் கேட்க வேண்டும்!
(இந்தியா முழுமைக்குமான முதல் தொழிற்சங்கம் AITUC தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வரும் ஆண்டு இது. அதன் பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர், தற்காலச் சூழலில் தொழிற்சங்க இயக்கத்தின் பங்கு என்ன என்பதைத் தரூஃபால் (Taru Bahl) அவர்களுடான பேட்டியின்போது துல்லியமாக வரையறுத்துச் சுட்டிக்காட்டுகிறார்)
? ஊரடங்கின்-பின், உங்கள் பார்வையில் அக்கறைகள், கவலைகள் என்ன?
       தொழிலாளர்கள் சந்தையில் முன்பே இருந்த பிரச்சனைகள் மேலும் வேலை இழப்புகள், ஊதிய இழப்பு, ஒப்பந்தப்பணிக்கு மாறுவது, ஆட்குறைப்பு, அனைத்து வகைத் தொழிலாளர்களுக்கும் —நிரந்தரமானவர்கள், காஷுவல், தற்காலிகமோ அல்லது  கால வரன்முறைப் பணியாளர்களோ எவராயினும்-- கட்டாயச் சம்பளமில்லா விடுப்பு என இவை, (ஆள்வோர்களால்) தம்பட்டமடிக்கப்படும் பணிப் பாதுகாப்பு உறுதிமொழிகளைக் கேலிக்கூத்தாக்குகின்றன.
        தொழிலாளர் சட்டங்களை மாற்றுவது, அவர்களின் அடிப்படையான ஊதிய உரிமை, மருத்துவப் பாதுகாப்பு, போனஸ் மற்றும் மிகுதிநேரப்படியை மறுப்பதற்குக் கோவிட்-19 ஒரு வசதியான சால்ஜாப்பாகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. ’ஒரு சட்டம், ஒரு நாடு’ என்ற தத்துவத்தை அனுசரிக்கிறோமா இல்லையா? மத்திய அரசு சொல்லியபடி உ.பி., மத்திய பிரதேசம், குஜராத் மாநில அரசுகள் தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவதிலும் அவற்றை இடைநிறுத்தி வைப்பதிலும் ஈடுபடுகின்றன. சட்டப்படியான 8மணிநேர வேலைநேரம் அதிர்ச்சிதரும் வகையில் 12 மணியாக, அதைவிட மோசமாக அதிகரிக்கப்பட்டது. பணிநேர உத்தரவை இராஜஸ்தான் அரசு திரும்பப் பெற்றுவிட்டது.
        பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் துவக்குவதற்கு இந்த மாற்றங்கள் எதுவும் தேவையே இல்லை. மாறாக இந்த மாற்றங்கள் உண்மையில் ‘வாடகைக்கு எடு, பயன்படுத்து, தூக்கி எறி’ என்ற முறையைக் கொண்டுவரவும், லாபத்தை உச்சபட்சமாக அதிகரிக்கவும், தொழிலாளர் செலவுகளை வெட்டுவதற்கும், கூட்டுபேர உரிமை மற்றும் சங்கம் அமைக்கும் உரிமைகளை முடக்குவதற்குமே வழியமைத்துத் தருகின்றன.
? உங்களுடைய உடனடியான முன்னுரிமையுள்ள அடுத்த நடவடிக்கைகள் என்ன?
        தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள் மற்றும் குறுங்குறி (Codification) ஆக்கல் நிறுத்தப்பட வேண்டும். சமீபத்தில் பிரகடனம் செய்யப்பட்ட அவசரச் சட்டங்கள் உத்தரவுகள் அனைத்து திரும்பப்பெற்று, அரசும், பணியமர்த்துநர்களும் தொழிலாளர் நலன்களை மனதில் கொள்ள வேண்டும்.
        இரண்டாவது, முக்கியமாகப் பட்டினிச் சூழ்நிலை பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டும். இன்னார் இனியார் எனப் பார்க்காது அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவதுடன், அதற்கேற்ப உணவுப் பொருட்களும் மாநில அரசுகளுக்கு உறுதி செய்யப்பட வேண்டும். இந்த நடவடிக்கை கிராமப்புற மற்றும் நகர் புறத்து மக்கள், திரட்டப்பட்ட மற்றும் திரட்டப்படாத தொழிலாளர்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.  அனைத்துத் தொழிலாளர் நலன்களையும் பாதுகாப்பதான விரிவான சமூக உத்தரவாதம் / பாதுகாப்பு வலைப்பின்னல் அமல்படுத்தப்படவேண்டும்.
        மூன்றாவது, 6மாத காலத்திற்கு மக்கள் கையில் ரொக்கத் தொகை வழங்க வேண்டும். (இந்தப்பணம் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கப் பயன்படுத்தப்பட்டு சந்தையில் சுழற்சிக்கு வந்து மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை உண்மையில் ஊக்கப்படுத்தும் என்பது பலராலும் விளக்கப்பட்டுள்ளது). வேலையைப் பொருத்தவரை ஊதியம் பராமரிக்கப்பட வேண்டும்; இன்றைய சூழ்நிலையில் வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட திரட்டப்படாத மற்றும் அமைப்புசாரப் பிரிவுகளில் பணியாற்றுவோர்க்கு மாதம் ரூ7,500/= வழங்க வேண்டும். இது பொருளாதாரத்தை மீண்டும் செயல்பட உதவும். எவர் ஒருவரும் வேலை இழக்கக் கூடாது. சிறு,குறு தொழிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நான்கு ஐந்து மாதங்களுக்கு ஊதியம் வழங்க மத்திய அரசு முன்வருமானால், அந்தத் தொழில் முனைவோரும் எவர் ஒருவரையும் வேலையிலிருந்து விரட்ட மாட்டார்கள். இந்திய கிராமப்புறத்தைப் பொருத்து, சிறு, குறு, நடுத்தர மட்ட விவசாயிகள் பாதுகாக்கப்படவும், அவர்களுக்கு இடுபொருள்கள் மானிய விலையில் வழங்கப்படவும், விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவதாலும் அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும்; அதன் பணிகள் பரவலாக்கவும், வேலைநாட்களை 200 ஆக உயர்த்தவும் மற்றும் கிராமப்புறத்தில் இன்றைய பணிவாய்ப்பு கூடுதலாக இருப்பதைச் சமாளிக்கும் வகையில் மாநிலத்தின் குறைந்தபட்ச கூலி பொருந்துவதாகவும் செய்ய வேண்டும்.
        தொழிலாளர்கள் மற்றும் ஏழைப்பிரிவு மக்கள் வெளிப்புறச் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக ஆயுஷ்மான் பாரத் அட்டை விதிகளை ஏன் திருத்தக் கூடாது? ஏனெனில் தற்போதைய திட்டத்தின்படி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கான செலவுகள் மட்டுமே, அதுவும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெற முடியும். இந்திய கிராமப்புற மற்றும் நகர்புறத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பிஎம் கேர்ஸ் நிதி உண்மையில் மேலும் பங்காற்றுவதாக வேண்டும்.
?தொழிலாளர் வர்கத்தின் நலன்களைப் பாதுகாக்கத் தொழிற்சங்க இயக்கத்தை மறுபடைப்பூக்கமுடையதாக மாற்றியமைப்பதற்கான தருணம் வந்து விட்டதா?   
        தேசிய, மாநில மற்றும் (தொழில்) பிரிவு மட்டங்களில் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைவதற்கான செய்தியை உயர்த்தித் தாங்கிப் பிடித்துச் செல்ல வேண்டும். வேறுபட்ட பிரிவுகளைப் பிரதிநிதித்துவம் செய்வோர் எதிர்காலத்தில் ‘ஒரு தொழிற்சாலை, ஒரு சங்கம்’ என்பதைச் சாதிக்கும் திசைவழியை நோக்கி முயல வேண்டும்.
         “எப்படிப் பேசாமல் மௌனமாக இருந்துவிடக் கூடாது” என்பதைச் சமூகத்தின் மற்ற பிரிவு மக்களுக்கு எடுத்துக் காட்டுவதோடு மட்டுமே தொழிற்சங்கங்களின் கடமைப் பொறுப்பு முடிந்து விடாது; மாறாக, எப்படித் தைரியமாகப் “போராட்டங்களைத் திரட்டி அமைப்பது’‘ என்பதை நிகழ்த்திக் காட்ட வேண்டியதும் தொழிற்சங்கங்களின் கடமைப் பொறுப்பாகும். தொழிலாளர்களை, நாட்டின் செல்வாதாரக் குவிப்பு மற்றும் மறுபங்கீடு குறித்த அனைத்துப் பிரச்சனைகளையும் பாதிக்கும் அரசின் அரசியல் முடிவுகளை அவர்கள் கேள்வி கேட்க வேண்டும். நாம் நம்முடைய ஊதியம், ஊதிய உயர்வு, பணிகாப்பு முதலியவற்றை மட்டும் வெறுமே பேசுபவர்கள் அல்ல. ‘ஒருவன் அல்ல தொழிலாளி, ஒன்றுபட்டவன் தொழிலாளி’ என்ற வகையில் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நாம் ஓர் அமைப்பாக, ஆள்வோர்களிடம் சங்கடமான கேள்விகளைக் கேட்க வேண்டும்; பேரளவிலானப் பொது நன்மையை முன்வைத்து எழுப்பப்படும் எதிர்கருத்து மதிக்கப்பட வேண்டும் என்ற ஒரு பண்பாட்டு முறையை நாம் உண்டாக்க வேண்டும்.
? பணி மற்றும் வாழ்வாதாரத்திற்கான பாதுகாப்பின்மை வளர்ந்துள்ள தற்போதைய சூழலை நாம் தவிர்த்திருக்க முடியுமா?
        ஆம், முழுமையாக முடியும் என்பதே பதில். அதிகாரத்தில் உள்ளவர்கள் அரசியல், மதம், அடையாளச் செயல்பாடுகள் மற்றும் பிரச்சாரத்தை முன்னுக்கு எடுத்து வந்தார்கள்; அதற்கு மாறாக, ஆதரவு, கருணை, உற்சாகமூட்டல், நம்பிக்கை வளர்க்கும் முன்னெடுப்புகளுடன் சமூக ஒருங்கிணைப்பைப் பலப்படுத்தி ஏற்படுத்தி இருப்பார்களானால், நாடு சமீபத்தில் கேட்டப் புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த இந்திய கதைகளின் நிலைமை முற்றிலும் வேறாக இருந்திருக்கும்.
        இன்னும் காலம் கடந்து தாமதமாகி விடவில்லை. தேசிய ஊரடங்கின்போது அரசு ஆலோசகர்கள் கூறியதற்கு மாறாக, கூட்டம் கூட்டமாகத் தொழிலாளர்கள் லே-ஆஃப் செய்யப் பட்டார்கள். 150 ஆண்டுகால நெடிய போராட்டங்களால் இந்திய உழைக்கும் வர்க்கம் சாதித்துப் பெற்ற உரிமைகளான தொழிற்சங்கச் சட்டம் 1926, தொழிற் தகராறு சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், தொழில் பழகுநர் சட்டம், இந்திய ஒப்பந்தத் (தொழிலாளர்) சட்டம், இஎஸ்ஐசி, இபிஎஃப்ஓ மற்றும் பிற உரிமைகளும் சலுகைகளும் அடித்துச் செல்லப்பட்டு, நமது தேசத்தை 19ம் நூற்றாண்டின் கொத்தடிமை மற்றும் சுரண்டல் இருள் வெளிக்குத் தள்ளப்படுகிறார்கள்.
        இவை அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், 
        நிறுத்தப்பட முடியும்!
--நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா
--தமிழில் : நீலகண்டன்,
 என்எப்டிஇ, கடலூர்  


No comments:

Post a Comment