Tuesday 23 June 2020

சி அச்சுத மேனன் -- அர்ப்பணிப்பின் உறைவிடம்


நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :
சில சித்திரத் சிதறல்கள் -1
       
        சி. அச்சுத மேனன் : அர்ப்பணிப்பின் உறைவிடம்

--அனில் ரஜீம்வாலே
       இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற நாட்டின் முதல் முதலமைச்சர் சி. அச்சுத மேனன். அவருடைய பெயர் தூய்மையும் நேர்மையும் உடைய ஊழல் அற்ற ஆட்சி, மிக முற்போக்கான நிலச்சீர்திருத்தங்கள், ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றம், அடிப்படை ஆய்வு நிறுவனங்கள் போன்றவற்றோடு பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டுள்ளது. நேர்மைக்கும் அர்ப்பணிப்பிற்கும் அவர் ஓர் எடுத்துக்காட்டு உருவகம், அரசியலில் மிக உயர்ந்த, புதிய தரத்தை ஏற்படுத்தி நிறுவியவர். ஒரு முதலாளித்துவ ஆட்சிமுறைக்கு உட்பட்டும் எவ்வளவோ சாதிக்கலாம் என்பதை எடுத்துக்காட்டிய அச்சுத மேனன், மக்களுக்கு ஆதரவான பல முற்போக்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்தியவர்.  
இளமைக்காலமும் அரசியலும்
        செலாத் அச்சுதமேனன் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில், முந்தைய கொச்சி மாநில திருச்சூரில் 1913 ஜனவரி 10ம் நாள் பிறந்தார். மெட்ரிக் தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடம் பெற்று, மெட்ராஸ் பல்கலைக் கழக இளங்கலை (கணிதவியல்) பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்று சட்டப் படிப்பில் நுழைந்து (பிரிட்டீஷ் இந்தியாவின்) மெட்ராஸ் மாகாணத்திலேயே பாஷ்யம் அய்யங்கார் தங்கப் பதக்கத்தை வென்றார்.
        சட்டத் துறையில் சேர்ந்தாலும் அது, அவரது விருப்பத்திற்கு உகந்ததாக இல்லை. இதன் மத்தியில் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் தொடர்பு ஏற்பட்டு 1935ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்; அதே வருடத்தில் முதலில் திருச்சூர் மாவட்டக் காங்கிரஸ் செயலாளராகி, பின்னர் அதன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே கொச்சி மாநில காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர் ஆனார்.

        காங்கிரஸ் தலைவர் வி.ஆர் கிருஷ்ணன் எழுத்தச்சன் அவர்களுடன் இணைந்து கொச்சியில் விவசாயிகளைத் திரட்டினார். குத்தகை கால நிர்ணயம் மற்றும் நியாயமான குத்தகை கோரி முதலாவது கிஸான் பேரணியைக் கொச்சி மாநிலத்தில் –திருவில்வாமல முதல் எர்ணாகுளம் வரை—நடத்தினார். மற்றவர்களுடன் இணைந்து அவர் மற்றுமொரு பேரணியைச் செருந்துருத்தி முதல் எர்ணாகுளம் வரை, ஆலய நுழைவு கோரிக்கையை முன்வைத்து நடத்தினார். 
        சிங்கப்பூரிலிருந்து, சோஷலிச அறிவாயுதத்தைத் தாங்கி, அப்போதுதான் நாடு திரும்பி இருந்த புகழ்பெற்ற கே.கே வாரியாருடன் சேர்ந்து திருச்சூர் தொழிலாளர் சகோதரர்களுடனும் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.
1937ல் நடைபெற்ற கொச்சி மாநில அனைத்து அரசியல் கட்சிகளின் மாநாட்டின் வரவேற்புக்குழு செயலாளராக அவர் செயலாற்றினார்.  காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து செயல்பட்ட காங்கிரஸ் இடதுசாரி அணியில் சேர்ந்த அவர் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியோடு தொடர்பு கொண்டார். போருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததற்காக அச்சுத மேனன் முதன்முறையாகக் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். 1942 (சுதந்திரப் போராட்ட) இயக்கத்தில் பங்கு பெற்று மீண்டும் கைது, ஓராண்டு சிறை. சிறையில் அவர் புகழ்பெற்ற எழுத்தாளர் ஹெச் ஜி வேல்ஸ் எழுதிய “சுருக்கமான உலக சரித்திரம்” புத்தகத்தை மலையாள மொழியில் ‘லோக் சரித்திர சங்கிரகம்” என்று மொழி பெயர்த்தார். அவருடைய இரண்டாவது புத்தகம் “சோவியத் லேண்ட்” 1943ல் வெளியானது.
சிபிஐ கட்சியில் இணைதல்
        1941ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து விரைவில் கட்சியின் கொச்சி மாநிலக்குழுவின் செயலாளர் ஆனார். பின்னர் திருவான்கூர் – கொச்சி சிபிஐ கட்சியின் செயலாளர் ஆகி, 1949 வரை கட்சிச் செயலாளராக நீடித்தார்.
        அச்சுத மேனன் 1948 கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது கட்சி காங்கிரஸ் மாநாட்டில் கொச்சியின் 8 பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டு, வாக்கெடுப்பில் ‘பிடிஆர் பாதை’க்கு எதிராக அவர் வாக்களித்தார். மதராஸ் ரயில் நிலையத்திலிருந்து ஏராளமான பிரதிநிதிகள் வண்டியில் ஏறினர். அது ஏறத்தாழ பாதி தலைமறைவு வாழ்க்கைக் காலம். எனவே அச்சுத மேனன் மாறுவேடத்தில் வங்காள வேட்டி மற்றும் நீண்ட குர்தாவை அணிந்திருந்தார்!
        1948 முதல் 1951 வரை அவர் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தபோது கேரள மாநில அமைப்புக் குழுவில் அச்சுத மேனன், இஎம்எஸ், என்.சி சேகர், கே.சி ஜார்ஜ், கே.வி பட்ரோஸ், எம்.எஸ் தேவ்தாஸ் முதலானோரும் 1950ல் இணைந்த பி.கே வாசுதேவன் நாயரும் இடம் பெற்றிருந்தனர். கட்சி பின்பற்றும் பாதையைக் கேள்விகேட்டு அச்சுத மேனன் ஓர் ஆவணத்தைத் தயாரித்து மேலும் சில கேள்விகளை எழுப்பினார். ரஷ்ய பாதை அல்லது சீனப் பாதை என்பதற்குப் பதிலாக, புரட்சிக்கான இந்தியப் பாதை இருக்க வேண்டும் என அவர் வற்புறுத்தினார். கே.சி. ஜார்ஜ் மற்றும் என்.இ பலராம் அவரை ஆதரித்து அவருக்கு உதவினர்.
அந்த அறிக்கையோடு அச்சுதமேனன் மத்திய குழுவிற்கு ஒரு கடிதத்தையும் அனுப்பினார். அதில், அப்போது வெளியிடப்படும் இந்திய அரசமைப்புச் சட்டம் குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார். (அப்படிச் செய்தால்) அது இந்தியக் கம்யூனிஸ்ட்களுக்கு வெளிப்படையாகச் செயல்படுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கக் கூடும். அவருடைய தரப்பு கருத்துகளைக் கட்சித் தலைமை நிராகரித்து, ஏற்க மறுத்தது. இந்தியா ‘உண்மையான’ சுதந்திரத்தை அடையாத காரணத்தால் இந்த ‘அரசியலமைப்புச் சாசனத்தால்’ என்ன பயன்? என்று வினவிய கட்சியின் (மத்தியக் குழு)  தலைமை, அச்சுத மேனனின் கருத்தை ஆட்சேபித்தது.
தேர்தல்களில் கட்சி பங்கேற்பு
        இதன் மத்தியில் B T ரணதிவே கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, அடுத்து இடையே சி.இராஜேஸ்வரராவ், பின் அஜாய் கோஷ் சிபிஐ பொதுச்செயலாளர் ஆனார்கள். மெதுமெதுவே கட்சியின் பாதை நன்மை நோக்கி மாறத் துவங்கி, தேசிய அரசியல் மையநீரோட்டத்தில் சேர்ந்தது. 1952ன் முதல் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதெனக் கட்சி முடிவு செய்தது. அச்சுத மேனன் அப்போது சிறையில் இருந்தபோதும், மாநிலச் சட்டமன்றத்திற்குத் தேர்வானார். 1957, 60, 69 மற்றும் 1970 ஆண்டுகளின் அடுத்தடுத்தச் சட்டமன்றத் தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றார். 1968ல் மாநிலங்கள் அவையின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்த்தெடுக்கப்பட்டார். ஆனால் அடுத்த ஆண்டே 1969ல் மக்களவையிலிருந்து பதவி விலகக் கேட்டுக்கொள்ளப்பட்டார்; காரணம், கேரள மாநில முதலமைச்சர் பொறுப்பை அவர் ஏற்க வேண்டியிருந்தது.
கேரளாவின் முதலமைச்சராக
        இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவை 1957ல் முதலமைச்சர் இஎம்எஸ் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அந்த அமைச்சரவையில் அச்சுதமேனன் நிதி மற்றும் வேளாண்துறை அமைச்சராக்கப்பட்டார். இரண்டே ஆண்டு குறைந்த காலத்தில் சில நல்ல நடவடிக்கைகளை எடுத்தார். அந்த அரசு 1959ல் ஜனநாயக விரோதமாகக் கலைக்கப்பட்டது. 1969ல் சி அச்சுத மேனன் சட்டமன்றக் கட்டட அறை ஒன்றில் அமர்ந்திருந்தபோது இஎம்எஸ் தலைமையிலான மற்றொரு அமைச்சரவையின் பதவி விலகல் அறிவிக்கப்பட்டது. இங்கே அந்த நெருக்கடியின் விவரங்களுக்குள் நாம் செல்லப் போவதில்லை. ஒரு வாரத்திற்குள் புதிய அரசு ஒன்றிற்குத் தான் தலைமை ஏற்கக் கேட்டுக் கொள்ளப்படுவோம் என்று அச்சுத மேனன் எதிர்பார்க்கவே இல்லை! அவர் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். பின்னர் அவரது அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து கொண்டது. உண்மையில் அந்த அரசில் காங்கிரஸே பெரிய கட்சி என்றபோதும், முதலமைச்சர் பதவி அச்சுத மேனனிடம் சென்றது. அந்த அளவு அவரது கீர்த்திமை மேன்மையும் நேர்மையும் இருந்தது. கேரளச் சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக முழுமையான ஐந்தாண்டுகள் நிறைவு செய்த முதல் முதலமைச்சர் அவர். அந்தப் பொறுப்பில் ஏழு ஆண்டுகள் இருந்தார்.
மாதிரி முதலமைச்சர்
        நாடு முழுமைக்கும், நம்பிக்கை நேர்மைக்கு ஒரு முன்மாதிரி எடுத்துக்காட்டு, அச்சுத மேனன் தலைமையிலான அரசு. அந்த அரசு, இந்தியாவில் பெரிதும் முழுமையான நிலச் சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அதன் காரணமாக விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என்ற வர்க்கமே இல்லாது ஆக்கப்பட்டது. இந்தச் சாதனை எவராலும் சாதிக்கப்படாத ஒன்று. இது எப்பேர்ப்பட்டச் சாதனை என்பதை ‘வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால் ….உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்’ என்ற கம்பன் பாடல் கூறும். அதுபோலக் கூலிக்கு நிலத்தை உழுதுவந்த சுமார் 25 லட்சம் உழவர்கள் நில உரிமை  பெற்று உழுதவனுக்கு நிலம் சொந்தமாக்கப்பட்டது. காடு சார்ந்த மற்றும் பிற நிலங்கள் –பிர்லாக்களின் 30ஆயிரம் ஏக்கர் நிலங்களும் உட்பட-- லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு, வீடமைந்த நிலங்களுக்கு விவசாயக் கூலிகள் உரிமையாளர் ஆக்கப்பட்டார்கள்.
        நாட்டின் முதன் வகைப்பட்டதாய் முதன் முதலில் வீடற்றவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் அரசால் கட்டித் தரப்பட்டன. பின்னர் மேலும் கூடுதலாக வீடுகள் கட்டப்பட்டன. தொழிலாளர்களுக்குப் பணிக் கொடை (க்ராஜூட்டி) உரிமை உள்பட வேறுபல முக்கிய நடவடிக்கைகளையும் அந்த அரசு மேற்கொண்டது.
        இவற்றைத் தவிர, விவசாயப் பல்கலைக் கழகம், வளர்ச்சிக்கான மையம், நீர் ஆதார மேம்பாட்டு மையம், காடுகள் ஆராய்ச்சி நிறுவனம், பூமி குறித்த ஆய்வுக்கான ‘புவி அறிவியல் மையம்’ போன்ற பல எண்ணிறந்த நிறுவனங்களை  அவர் நிறுவினார்.
        ஒவ்வொருவராலும் மிக உயர்வாக மதிக்கப்பட்ட அச்சுத மேனன், இன்றும் பரவலாக மரியாதைக்குரியவராகத் திகழ்கிறார். வாழ்நாள் முழுதும் நேர்மை, உண்மை, பணியில் அர்ப்பணிப்பு, நேரம் தவறாமை மற்றும் குறைந்த காலத்தில் நிறைவாகச் சாதித்தவராக இருந்தார். குறைவாகப் பேசும் பழக்கமுடையவர் எனினும், அவரது பேச்சில் குறைவான சொற்கள் நிதானமாய், பொருள் பொதிந்ததாய், மாற்றாரை ஏற்கச் செய்வதாய் இருக்கும். திருவள்ளுவரும் ‘திண்ணமாகச் சில சொற்களால் விளக்கத் தெரியாதவர்களே பல சொல்ல விரும்புவார்’ என்பார் (குறள் 649). இந்தியா இதுவரை பெற்ற ஆகச் சிறந்த முதலமைச்சர் அவர். ஆனால் துரதிருஷ்டம், அவரது சாதனைகளை நாம் போதுமான அளவு பிரச்சாரம் செய்யவில்லை.
(திவான் சி.பி.ராமசாமி ஐயருக்கு எதிராக 1946-ல் நடைபெற்ற) புன்னப்புரா -- வயலார் போராட்டங்கள் குறித்து கே.சி.ஜார்ஜ் எழுதிய புத்தகத்திற்கு அறிமுக உரை எழுதிய அச்சுதமேனன் அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “கே.சி.ஜார்ஜ் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகாத்மா காந்தி. ஏசு கிருஸ்துவுக்கு முன்னோடியான ஜான் (John the Baptist), இயேசுபிரான் குறித்துச் சொல்லும்போது, நான் அவரது காலணிகளின் நாடாவை அவிழ்க்கும் அருகதை உடையவன் அல்லேன்’ என்பது போலத்தான் நானும் சொல்ல வேண்டும். இருந்தாலும் புதிய தலைமுறைக்குக் கே.சி.ஜார்ஜ் அவர்களை நான் அறிமுகம் செய்கிறேன்.”
சோவியத் யூனியன் குறித்து
1956ல் ஹங்கேரியில் சோவியத் யூனியனின் ஆயுதத் தலையீட்டை அச்சுத மேனன் கூர்மையாக விமர்சனம் செய்தார். மேலும் அது பற்றி கட்சி தலைமைக்கும் எழுதினார். ஆனால் அதன் மீது எதுவும் நடைபெறவில்லை. ஆனால் அதன் பின்னர் 1968ல் செக்கோஸ்லாவாக்கியாவில் சோவியத்தின் ஆயுதத் தலையீடு பரவலான விவாதப் பொருளானது. கட்சி ஏறத்தாழ செங்குத்தாக இரண்டு செம்பாதியாகப் பிளவு பட்டது. அச்சுத மேனன் மீண்டும் சோவியத் நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்தார்.
        சோவியத் சோஷலிசக் குடியரசின் பொதுவான திசைவழிப் பாதையை மேம்படுத்த மிகைல் கோர்பசேவ் எடுத்த முயற்சிகளை அவர் ஆதரித்தார். அவர்கள் தங்கள் தவறுகளை தேடி அடையாளப்படுத்தவும் திருத்தவும் முயல்கிறார்கள் என்றார். புரட்சியாளர்கள் கட்டாயம் தங்கள் தவறுகளை ஆய்ந்தறிந்து அவற்றைத் திருத்திச் சரிசெய்தல் வேண்டும்.
 இந்தியப் பண்புக்கூறுகளை ஆழ்ந்து படித்தறிந்து இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப  மார்க்ஸியத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என அச்சுத மேனன் வலியுறுத்தினார். சோஷலிசத்திற்கான இந்தியப் பாதையைக் கண்டறிதல் வேண்டும். மாறுபடும் அனைத்து கருத்துகளையும் ‘முதலாளியக் கடைச் சரக்கு’ என நிராகரித்தல் தவறான போக்கு. காரல் மார்க்ஸைத் தவிரவும் கம்யூனிஸ்ட்கள் சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஆச்சார்ய நரேந்திர தேவ், ஸ்ரீ நாராயண குரு, அரவிந்த கோஷ், (தந்தை பெரியார்) போன்ற பிற பெருமக்களின் சிந்தனைகளையும் அவசியம் கற்க வேண்டும். காந்தியின் வன்முறையற்ற அகிம்சை வழியிலான பாதை குறித்து ஆழ்ந்து நம் கவனத்தில் கொள்ளுவதற்கான தேவை உள்ளது.
படைப்பூக்கச் செயற்பாடுகள்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயலகம், மத்திய நிர்வாகக் குழு மற்றும் தேசியக் குழுவில் நீண்டகாலம் பணியாற்றியவர் அச்சுத மேனன். அவரைப் பற்றி குறிப்பிடும் சி இராஜேஸ்வரராவ், ‘அவர் மிகமிக நேர்மையானவராக இருந்ததால் அவரால் வெற்றிகரமான முதலமைச்சராக விளங்க முடிந்தது’ என்றார்.
1977க்குப் பிறகு கட்சியின் முன்னணி பதவிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தனது நேரத்தை சமூகப் பணி, இதழியல் மற்றும் படிப்பதில் செலவிட்டார். கடைசி பத்து வருடங்களில் COSTFORD (கிராமப்புற முன்னேற்றத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்) என்ற லாபநோக்கமற்ற அமைப்பை 1985ல் நிறுவினார். அவரது ஆர்வத்தின் பரப்பும் செயல்பாடும், சூழலியல், விஞ்ஞான தொழில்நுட்பம், (மையத்தில் அதிகாரம் குவிக்கப்படாத) பரவலாக்கப்பட்ட ஜனநாயகம், பெண்கள் முன்னேற்றம், எழுத்தறிவு மேம்பாடு மற்றும் பலவாக, மிக விரிவானது. அவருடைய பெயரால் சி அச்சுத மேனன் பவுண்டேஷன் என்ற அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
கேரள சாகித்ய அகாதமி விருது, சோவியத் லேண்ட் நேரு விருது முதலிய விருதுகளை அவர் பெற்றார். சி அச்சுதமேனன் திருவனந்தபுரத்தில் 1991 ஆகஸ்ட் 16ம் நாள் மறைந்தார்.
  வாழ்க அச்சுத மேனன் புகழ்!
                                                                           --நன்றி நியூஏஜ்
--தமிழில் : நீலகண்டன்,
  என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment