Monday 8 June 2020

நாம் காண மறுக்கும் பிரச்சனைகள் : இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம்


தூசுக்குக் கவலைப் படுகிறாயே, கண்ணில் விழுந்த உத்தரம் காணாயோ?
            இன்றைய நிகழ்காலச் சமூக ஊடக உலகில் எல்லா சாவுகளும் ஒன்றல்ல. வெடி பொதிந்த பழத்தை உண்டதால் கேரளத்தில் கர்பிணி யானை ஒன்றின் நெஞ்சை உலுக்கும் சாவு, ஒட்டுமொத்தச் சமூகப் பிரக்ஞையைக் கலக்கி உள்ளது. ஆனால் நெஞ்சங்களைச் சுக்கலாக நொறுங்கச் செய்யும் நூற்றுக் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லம் நோக்கிப் பயணித்தபோது கொடுமையான வகையில் (பசியாலும், ரயில் மோதியும், சாலை விபத்துக்களிலும்) செத்து மடிந்தபோது நமது கூட்டான பொது உணர்வு இவ்வளவு கலங்கவில்லை. என்ன செய்ய, உணர்வுகள் கொப்பளித்துப் பெருகியோட நமக்கு யானை கதைகள் தேவையாய் உள்ளன.
            தரவுகளின்படி, 2014 – 2019 காலத்தில் இயற்கையல்லாத காரணங்களால் 519 யானைகள் இறந்துள்ளன. அவற்றுள் 333 மின்சாரம் தாக்கியும், 77 ரயில் விபத்துக்களிலும் 71 கள்ள வேட்டையாடுபவர்களாலும் நிகழ்ந்துள்ளன. இந்தியாவில் இயற்கையாக அல்லாத காரணத்தால் யானைகள் பலியாவதில் கேரளா ஆறாவது இடத்தில் (8.2%); ஆனால் அசாமும் ஒடிஷாவும் சேர்ந்து 40% சாவுக்குக் காரணம். இதில் அசாமிலும் கேரளத்திலும் சமஅளவு காட்டுமிருகங்களின் எண்ணிக்கை உள்ளன. அப்படி இருக்கையில் கேரளாவில் ஒரு யானையின் பலி அதற்கு முந்தைய 500 இறப்புகளைவிட அதிகமான கோபத்தை மூட்டியுள்ளது.  
            இதற்குக் காரணம் அரைகுறையான தவறான தகவல். (பசுவதை போல அரசியல் காரணம் எதும் இந்தப் பத்திரிக்கையால் கூறப்படவில்லை). ஆண்டுகள் பலவாக, கேரளா மற்றும் தமிழக வேளாண் பெருமக்கள் தங்கள் விவசாயப் பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்  பன்றிகளைக் கொல்ல (கண்ணிவெடி போல) கனி வெடிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த யானை வெடிக்குப் பலியாகி இறக்கும் இதுநாள் வரை, அது செய்தியாகவில்லை. தேசியத் தொலைக்காட்சி ஊடகங்களில் இந்தச் சம்பவம் காட்சிப்படுத்தப்படச் சமூக ஊடகத்தினர் அந்த இழையைப் பிடித்து கொண்டு, விஷமிகள் வேண்டுமென்றே யானைக்கு வெடி மருந்தை மறைத்து வைத்த (அன்னாசிப் பழத்தை / தேங்காயை) உணவை ஊட்டினர் என்று பரபரப்பு கூட்டினர். இந்த உணர்ச்சிப் பிழம்பான மிகை உணர்வு ஊதப்பட்டு வெடித்த பரபரப்பில் இங்கு உண்மை பலியானது. நடிகர்கள், அட பெரு வர்த்தகப் புள்ளிகள் திடீரென்று விலங்குகள் ஆர்வலர்களாகவும், விலங்குகளின் உரிமை பாதுகாப்புச் செயற்பாட்டாளர்களாகவும் –பதறாதீர்கள், சமூக ஊடகங்களில்தான் -- அவதாரம் எடுத்துள்ளனர்.
             அது சரி, இந்த வர்த்தப் புள்ளிகளின் வணிகக் குழுமங்கள் சூழலியல் ஒழுங்கு படுத்தல் விதிமுறைகளில் இருக்கும் பொத்தல்களைப் பயன்படுத்தி அந்தச் சட்டங்களைத் தவிர்ப்பதை, தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனவா? அல்லது இந்த நடிகர்கள் சுற்றுச் சூழலுக்குக் கேடுவிளைவிக்கும் பெரும் புராஜெக்டுகளை மறுத்து விட்டார்களா? ஒருக்கால், இல்லை என்பதுதான் நிச்சயமான பதிலாக இருக்கும். சமீபத்தில் சுமார் 300 வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் எழுதினர்; அதில், நாட்டின் சுமார் (30%) மூன்றில் ஒருபங்கு புலிகளின் வசிப்பிடமாக உள்ள மிகப் பிரம்மாண்டமான 15 புலி சரணாலயங்கள் அமைந்துள்ள இடத்தைப் பாதிக்கும் வகையிலான 31 வணிகத் திட்டங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள ஒப்புதலை மறுபரிசீலினை செய்ய வற்புறுத்தி இருந்தனர். எந்த வணிகப் புலிகளும், வர்த்தகப் பெரும் புள்ளிகளும் அல்லது நடிகர்கள் எவருமே இதுவரை அந்தத் திட்டங்களை ஏன் எதிர்க்கப் புறப்படவில்லை என்பது மிகப் பெரிய மர்மம். (யானைக்காக முதலைக் கண்ணீர் விடுவதைப் போல சமூக ஊடகத்தில்கூட நடிக்க மாட்டார்கள்; ஏனெனில், அது அவர்களின் வருமானத்தை, லாபப் பேராசையைப் பாதித்துவிடும்.)
            இன்றைய தசாப்தத்தில் சூழலியல் ஆட்சேபணைகளை நீக்கி “விரைவுப் பாதை” அனுமதி வழங்கும் பொருளாதார வளர்ச்சி காலத்தில் வனவிலங்குகளின் வாழ்க்கையைக் காப்பாற்ற வெறும் உதட்டளவு உபசார வார்த்தைகள் மட்டும் போதாது. (யானைகள் ஊருக்குள் வருவதற்கும், கரோனா போன்ற வைரஸ்கள் பரவுவதற்கும் வனங்களின் பரப்பை ஆக்கிரமிக்கும் மனிதகுலத்தின் நுகர்வுப் போக்கே காரணம் எனப் பூவுலக நண்பர்களும் அறிவியலாளர்களும் விளக்கி வருகிறார்கள். அவர்கள் கூறுவதற்குச் செவிமடுத்து)  அரசுகள், வணிக நிறுவனங்கள், தனிநபர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முயல வேண்டிய தேவை எழுந்துள்ளது. அது வரை, விலங்கு உரிமைகள் பாதுகாப்புச் செயற்பாடுகள் என்பது பிரச்சாரம் செய்யச் சுலபமானதொரு காரணமாக இருக்குமே தவிர, எந்த விலங்குகளும் காப்பாற்றப்படாது – அதனால் என்ன, எந்த மிருகமும் நமது அடையாள பூர்வ வேடங்களைக் குற்றம் சொல்லப் போவதில்லை.   
--நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம்
“The Elephant in the Room”
(பிரச்சனை நம் கண் முன்னே யானை போல காட்சியளித்தாலும் (பகலில் பசுபோல) நாம் காணமறுக்கிறோம், அதனை விவாதிக்கவோ தீர்வுக்காக யோசிக்கவோ மறுக்கிறோம் என பொருள் படும் ஆங்கில மரபுத் தொடர் அது)                      
                                                                                                       --தமிழாக்கம் : நீலகண்டன்
என்எப்டிஇ, கடலூர்


No comments:

Post a Comment