Monday 15 June 2020

தோழர் எஸ் சுதாகர் ரெட்டி ஆற்றிய தோழர் இராஜேஸ்வர ராவ் நினைவுச் சொற்போழிவு




தோழர் CR பிறந்தநாள் நினைவுச் சொற்பொழிவு

சமத்துவம் இன்மையை எதிர்த்துப் போராட
உலகத்தின் ஒடுக்கப்பட்டவர்களே ஒன்று சேருங்கள்!
        போற்றுதலுக்குரிய கம்யூனிஸ்ட் தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகாலப் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவருமான சந்திரா இராஜேஸ்வர ராவ் அவர்களின் 106வது பிறந்தநாள் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி 2020 ஜூன் 6ல் ஹைத்ராபாத்தில் நிகழ்ந்தது. நினைவுச் சொற்பொழிவு ஆற்றிய சிபிஐ மேனாள் பொதுச் செயலாளர் எஸ் சுதாகர் ரெட்டி அவர்கள் உரையின் சுருக்கம் வருமாறு:
        “இன்று பெருமைக்குரிய புகழாளர் மறைந்த தோழர் சந்திரா இராஜேஸ்வர ராவ் அவர்களின் 106வது பிறந்த நாள். சிபிஐ கட்சியின் உச்சத்தில் வைத்து மெச்சப்படும் தலைவர், புகழ்வாய்ந்த தெலுங்கானா ஆயுதம் தாங்கிய புரட்சியின் உத்தியாளர், சுதந்திரப் போராட்டத் தியாகியும், உலகறிந்த புரட்சியாளருமாவார்.
        எளிய வாழ்க்கை மேற்கொண்ட தலைவர். அவரது கவனம் எல்லாம் எப்போதும் வீரம் செறிந்த போராட்டங்களைக் கட்டியமைப்பது; அது, பெனாரஸ் இந்து பல்கலைக் கழகம், வைசாக் மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணா மாவட்ட இளைஞர் இயக்கம் அல்லது கட்சி அவருக்களித்த எந்தப் பொறுப்பாகட்டும் இப்படி அனைத்திலும் அதே கவனம். மார்க்சியத்தை ஆழமாகக் கற்று, நிலவுரிமைப் போராட்டங்களையும் ஏனைய உழைக்கும் மக்களுக்கான போராட்டங்களையும் தலைமை ஏற்று நடத்தினார். ஒரு வலிமையான கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பை நிர்மாணிப்பதில் தளர்வின்றி உழைத்தார். கம்யூனிஸ்ட் இயக்கங்களை ஒன்றுபடுத்துவதில் ஓய்வின்றி அரும் பாடுபட்டார். முதலில் என்னுடைய புரட்சிகர செவ்வணக்கங்களைத் தோழர் சிஆர் அவர்களுக்கு உரித்தாக்குகிறேன்.
         “இனவெறியும் எதிர்ப்புப் போராட்டங்களும்” என்ற தலைப்பில் தோழர் சிஆர் நினைவுச் சொற்பொழிவாற்ற எனக்களித்த வாய்ப்புக்கு நன்றி. முதலில் ஜார்ஜ் ஃப்ளாய்டு என்ற ஆப்பிரிக்க-அமெரிக்கக் கருப்பினத்தவரைச் சமீபத்தில் வெள்ளை இனவெறி போலீசார் இரக்கமின்றிக் கொன்ற நிகழ்வால் உலகளாவி எழுந்துள்ள இனவெறி எதிர்ப்புப் போராட்டங்களிலிருந்து துவங்கலாம். மக்களின் எதிர்ப்பு இயக்கங்களைப் போலீசார் தடிகளால் தாக்குதல், கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கிச் சூடும் நடத்தி முறியடிக்க முயன்றனர். அமெரிக்கா முழுவதும் பரவிய எதிர்ப்புப் போராட்டங்களில் 13 போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி உள்ளனர். 40 நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதுடன், வெள்ளை மாளிகை முன்பு நிகழ்ந்த சீற்றம் மிக்கப் பெருந்திரள் போராட்டத்தால் அதிபர் டொனால்டு டிரம்ப் பாதுகாப்புப் பதுங்கு அறையில் மறைந்து கொள்ள வேண்டி வந்தது.
        போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிப்பதற்கு மாறாக, டிரம்ப் அதைச் சாதாரணமாகத் ‘துரதிருஷ்டமானது’ என்று எளிதாக விமர்சித்தார். அத்தோடு நில்லாது, ‘எதிர்ப்புகள் இராணுவத்தின் துணைகொண்டு ஒடுக்கப்படும்’ என்றார். அவரது துடுக்குத்தனமான டுவிட்டர் பதிவு, “கலகங்கள் துவங்கினால், அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு தொடரும்” என எச்சரித்தது. இவை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாயிற்று. நல்லவேளை, அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செயலாளர் டிரம்பின் கருத்தோடு மாறுபட்டு, மக்களின் எதிர்ப்பு இயக்கங்கள் இராணுவ வலிமையின் துணை கொண்டு அடக்கப்படும் என்ற செய்தியை மறுத்தார். இராணுவத் தலைமை அதிகாரிகளோ தாங்கள் அமெரிக்க தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்களே தவிர, டிரம்பிற்கு அல்ல என வெளிப்படையாகக் கூறி விட்டனர்.
இனவெறி என்பது என்ன?
        மனிதத் தோலின் நிற அடிப்படையில் கருப்பினத்தவர் மற்றும் பிற வெள்ளை அல்லாத நிறமுடையவர்களிடம் (coloured) பாகுபாடு காட்டுவது. இது, இந்தியத் சாதி வேறுபாடு, பாரபட்சம் போன்ற மிக மோசமானதொரு இனவெறி வகை. ஐரோப்பிய வெள்ளையர்கள் மனிதத்தன்மையற்று, ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை வேட்டையாடியும், அடிமைப்படுத்தியும், அவர்களை வியாபாரமும் செய்தனர். ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் காலனிகளாக மாற்றப்பட்டன. இந்தியாவில் சொந்தமாக கிளப்கள் வைத்திருந்த பிரிட்டீஷ்காரர்கள், ‘இந்தியர்களும் நாய்களும் உள்ளே வர அனுமதி இல்லை’ என வெளியே அறிவிப்புப் பலகை வைத்திருப்பார்களாம். ஆப்பிரிக்காவில் உரிய அனுமதிச் சீட்டு வாங்கியிருத்தும் மகாத்மா காந்தி முதல் வகுப்பு ரயில் பெட்டியிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார்; காரணம், வெள்ளையர்கள் மட்டுமே பயணம் செய்யும் பெட்டியது என்பது அங்கே அப்பட்டமாகப் பின்பற்றப்பட்ட இனவெறி / நிறவெறி வழக்கமாம்.
        இந்தியாவிலும்கூட உயர் ஜாதி இந்துகள் தொடர்ந்து தலித்துகளை ஒடுக்கி மேலாண்மை செய்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வந்ததன் பின் அத்தகையத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பசு பாதுகாப்பு என்ற பெயரில் தலித்கள் மற்றும் சிறுபான்மையினரை அடித்துக் கொல்லுவது தொடர்ந்து நடைபெறவே செய்கிறது.
        ஆனால் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாகக் கருதப்படும் அமெரிக்காவிலும் இந்த 21வது நூற்றாண்டிலும் அத்தகையக் காட்டுமிராண்டித் தாக்குதல்கள் நிகழ்வதைச் சகிக்க முடியவில்லை. இதற்கான காரணங்களைப் பரிசீலனை செய்ய, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வரலாற்றுப் பின்புலத்தைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
அமெரிக்க பூர்வீக வரலாறு
        15ம் நூற்றாண்டில் இந்தியா செல்வவளம் கொழிக்கும் நாடாக இருந்தபோது, ஐரோப்பிய வர்த்தகப் பயணிகள் இந்தியா என்று கருதி அமெரிக்கவின் பக்கம் (கடல்) பயணம் செய்து அடைந்தனர். அப்போது அந்நாடு, சில மதிப்பீடுகளின்படி, உலக மொத்த உற்பத்தியில் 23 சதமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அங்கே இருந்த பூர்வீகக் குடிகளைத் தவறுதலாகக் கொலம்பஸ் இந்தியர்கள் என்று அழைத்தார். பிறகு அவர்கள் இந்தியர்கள் அல்லர் எனத் தெரிந்ததும், ஐரோப்பியர்கள் அவர்களைச் செவ்விந்தியர்கள் என்று அழைக்கலானார்கள்.
        அமெரிக்காவில் குறைவான மக்களே வசிக்கும் பரந்த செழிப்பான நிலப்பரப்பால் ஈர்க்கப்பட்ட ஐரோப்பியர்கள், பல நூற்றாண்டுகளாகப் புலம்பெயர்ந்து குடியேறினார்கள். தொழிற்புரட்சிக்கு முன் ஐரோப்பா மிகவும் ஏழ்மையில் இருந்ததால், செல்வம் தேடி அமெரிக்காவில் குடியேறியது பெரும்பான்மையும் ஐரோப்பியர்களே. அதன் பின் ஏனைய கண்டங்களிலிருந்து குடியேறியவர்கள் ஐரோப்பியர்களைவிட எண்ணிக்கையில் குறைவு. வெள்ளையர் அல்லாதார் குடியேற்றம் ஊக்குவிக்கப்படவில்லை; சீனத்தவர்க்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு  பல ஆண்டுகளாக அவர்களது குடியேற்றம் ஏறக்குறைய தடுத்து நிறுத்தப்பட்டது. அமெரிக்காவின் பூர்வ குடிகள் கொல்லப்பட்டு அவர்களது செழிப்பான விளைநிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. காடுகள் அழிப்பை முழு வேகத்தில் நடத்தி நிலங்கள் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டன. அந்நிலங்களில் உழைப்பதற்கு அடிமைகளாகத் தருவிக்கப்பட்ட ஆப்பிரிக்க மக்களே பின்னர் ஆப்ரிக்க- அமெரிக்கர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
        தற்போது அமெரிக்க ஐக்கிய நாடுகள் எனப்படுவதை அப்போது ஆண்ட பிரிட்டீஷ் காலனியவாதிகளை எதிர்த்து மக்கள் கலகம் செய்தனர். 1776ம் ஆண்டு ஜூலை 4ம் நாள் ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் விடுதலை அடைந்தது. தொழிற்புரட்சி மிகப்பெரும் செல்வக்குவிப்பை அமெரிக்காவுக்கு ஈட்டித் தந்தது. நாட்டில் ஆலைகள், வர்த்தகம் என வளர்ந்ததுடன், விஞ்ஞான முன்னேற்றம் இன்னும் பல தொழிற்சாலைகளைப் பெருக்கப் புவியில் செல்வத்தில் ஆகச் சிறந்த நாடானது அமெரிக்கா. புறத்தில் வளர்ச்சி வான் எட்டினாலும், அகஉணர்ச்சியில் ஆகக் கீழ்மையான புராதன, மனிதத்தன்மையற்ற அடிமைப்படுத்தும் வழக்கமும் மனோபாவமும் அமெரிக்கர்களிடம் கோலோச்சியது.
        ஆப்பிரகாம் லிங்கன் எனப்படும் புகழ்வாய்ந்த மனிதநேயப் பண்பாளர் அமெரிக்காவின் அதிபரானார். அடிமை முறையை ஒழித்தார். ஆனால் அடிமை ஒழிப்பு முடிவைத் தென் மாநிலங்களில் இருந்த நிலஉடைமையாளர்கள் ஆதரிக்கவில்லை. அவர்களின் எதிர்ப்பு உள்நாட்டு யுத்தத்தில் முடிந்தது. ஆனால் அடிமை முறையை ஆதரித்தோர் தோற்கடிக்கப்பட்டனர். அடிமைகள் சுதந்திரம் பெற்றனர். ஒவ்வொருவரும் 40 ஏக்கர் நிலமும் ஒரு கோவேறுகழுதையும் வழங்கப்பட்டனர். இது பொருளாதார ரீதியில் அவர்கள் உயர்வதற்கு மட்டுமின்றி சமூகரீதியிலும் வலிமை பெறுவதற்கும் வழிவகுத்தது. மேலும் சட்டப்படியான திருமணம் மற்றும் சொத்துரிமைகளை அவர்கள் பெற்றார்கள்.
        சில காலத்திற்குப் பின்னே ஆப்ரஹாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்டார். அடுத்து வந்த அதிபர் முந்தைய கொள்கைகளைத் தலைகீழாக மாற்ற, அடிமைகளுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் மீண்டும் பறித்துக் கொள்ளப்பட்டன. இப்படியாக அடிமைகள் மீண்டும் சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தொடர்ந்து உரிமை இழந்தனர்.
        உலகின் பலபாகங்களிலிருந்தும் அமெரிக்காவிற்குப் புலம் பெயரத் தொடங்கினர். நிலத்தின் விரிந்த பரப்பு அனைவருக்கும் இடமளித்தது. அப்படிக் குடியேறியவர்களில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் போல, ஐரோப்பிய, அராபிய, சீன, ஜப்பானிய, இந்திய-அமெரிக்கர்கள் இருந்தார்கள். அமெரிக்காவின் மக்கள் தொகை வெறும் 33 கோடி; அதில், ஆப்பிரிக்க-அமெரிக்ர்கள் 14 சதமாக நான்கரை கோடி மக்கள் உள்ளனர்.  
        அமெரிக்கா ஒரு வித்தியாசமான நாடு. அங்கே வேறுபட்ட கலாச்சாரங்களிலிருந்து வந்த பல தேசிய இனத்தவர், பல மொழிகள் பேசுபவர்கள், வேறுபட்ட பண்பாட்டு மரபுகள், வழக்கங்களைப் பின்பற்றி தங்கள் வாழ்வாதாரத்தைத் தொடர்கிறார்கள். பல முரண்பாடுகளோடும் கூட சேர்ந்தே வாழ்கிறார்கள். விஞ்ஞானம், தொழில் நுட்பம், தொழில்கள் எனப் பல முனைகளிலும் வளர்ச்சி பெற்று மிகமுன்னேறிய நாடாகியுள்ளது. இருப்பினும் உள்-முரண்பாடுகள் அதிகரித்து அமெரிக்க முதலாளித்துவச் சமூகத்தில் சமத்துவம் இன்மையின் இடைவெளியையும் அதிகமாக வளர்த்துள்ளது. வளர்ச்சி பெற்ற முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வடிவெடுத்துள்ளது.
அமெரிக்கா நடத்திய யுத்தங்கள்
        விடுதலை அடைந்த நாளிலிருந்து இதுவரை அந்நாடு 223 யுத்தங்களிலும் ஆயுத மோதல்களிலும் ஈடுபட்டுள்ளது. அந்த நாட்டிலிருந்து தள்ளி தொலைவில் இருக்கும் பிற நாடுகளையும் அமெரிக்கா தாக்கியுள்ளது. பல நாடுகளின் இயற்கைச் செல்வாதாரங்களைக் கொள்ளையடித்துச் சுரண்டுவதற்காக, அந்நாடுகளில் ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைச் சீர்குலைத்து, தனது ஆதரவாளர்களான பொம்மை அரசுகளை அரியணையில் ஏற்றியுள்ளது. தன்னைத் தானே உலகப் போலீஸ்காரனாக நியமித்துக் கொண்டதாக எண்ணிக் கொண்டு பெரியண்ணனாக நாட்டாமை செய்கிறது.  ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்ற பொய்யான வேடமிட்டுப் பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறது.
கச்சா எண்ணெய் உற்பத்திச் செய்யும் அரபு தேசங்கள் மீதும்; லத்தின் அமெரிக்க நாடுகளான பனாமா, கியூபா, சிலி, பிரேசில், பொலிவியா நாடுகளிலும்; வெகுதொலைவில் தள்ளி இருக்கும் பிலிபைன்ஸ், கொரியா, வியத்நாம் போன்ற நாடுகள் மீதும் இராணுவத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அரபு நாடுகளான சிரியா, ஈராக், இரான், ஆப்கானிஸ்தான், லிபியா நாடுகளிலும் அந்நாட்டு மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது; ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது, அமெரிக்கா ஆதரித்துப் பாதுகாத்தது மக்களின் சுதந்திரத்தையோ ஜனநாயகத்தையோ அல்ல; மாறாக அந்நாடுகளின் வழக்கொழிந்த அரச வம்சங்கள், பிரபுகள் மற்றும் இராணுவ அரசுகளை ஆதரித்து அந்த நாடுகளின் ஜனநாயகத்தை ஒடுக்கியது என்பதுதான் உண்மை.
இனவெறி நடத்திய கொலைகள்
        மகாத்மா காந்தியை வெறுக்கும் கோட்ஸே போன்றவர்கள் இருப்பது போல அமெரிக்காவில் ஆப்ரஹாம் லிங்கனையும் அவரது கொள்கைகளையும் வெறுப்பவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் சில உதிரிகள் தலித், இஸ்லாமியர், கிருத்துவர்களை வெறுப்பது போல, அமெரிக்காவிலும் சிலர் கருப்பர்களையும் பிற இன மக்களையும் வெறுக்கிறார்கள். முரண்பாடுகள் நாட்டில் தொடர்கிறது. அங்கே செயல்படும் “கு க்ளக்ஸ் க்ளான்” (சுருக்கமாக KKK) என்ற பாசிச அமைப்பின் வெறியும் கறுப்பர்கள் மற்றும் பிற தேசிய இனத்தவர் மீதான வெறுப்பும் அவர்களைக் கொலை செய்யுமளவு செல்கிறது. இங்கேயும் அதுபோல இந்து அடிப்படைவாத உதிரி சிறுபிரிவுகள் கொலை செய்கின்றன. டொனால்டு டிரம்பின் தந்தை அத்தகைய இழிவானதொரு குழுவின் உறுப்பினர் என்ற குற்றச்சாட்டு அமெரிக்காவில் எழுப்பப்பட்டதுண்டு. அதனை அவர் மறுத்தபோதும் குற்றம் சுமத்துவதற்கான சாட்சியங்கள் உள்ளன. மோடிக்கும் டிரம்புக்கும் இடையே பலமானதொரு நட்பின் பிணைப்பிற்கு அடிப்படை உள்ளது. டிரம்ப் ஒரு பாசிசவாதி, அவருடைய தாக்குதல் குறி கருப்பின ஆப்பிரிக்க-அமெரிக்கர்களும், (குறை நிறமுடை) இந்தியர்களும்; மோடி இந்துத்துவா அடிப்படைவாதி, அவரது முக்கிய ஆதரவாளர்கள் தலித்கள், முஸ்லீம்கள், கிருத்துவர்கள், மலைவாழ் பழங்குடியினர் மற்றும் மக்கள் திரளின் பிற்பட்ட பிரிவினர்களைத் தாக்குதல் இலக்காகக் கொண்டுள்ளனர்.
        சமத்துவம் குறித்து வாய்கிழியப் பேசி போதிக்கும் அமெரிக்கா, சொந்த நாட்டு மக்களுக்குச் சமத்துவத்தை மறுக்கிறது. வெள்ளையர் அல்லாதோர் வெள்ளையரின் கருணையையும் இரக்கத்தையும் அண்டி வாழ வேண்டியுள்ளது. அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டது எனினும், சமூக பாகுபாடு மற்றும் சமத்துவம் இன்மை காரணமாகக் கருப்பினத்தவருக்கு வேலைவாய்ப்பில்லை, சொந்தமாக நிலமில்லை. சமத்துவமின்மை பாதிப்பால் பல தலைமுறையாகக் கல்வியையும் பொருளாதார வலிமை அடைதலையும் மறுத்தது. நூற்றாண்டு காலமாகத் தாக்குதல்களுக்கு இரையாகி கொல்லப்பட்டு வருகிறார்கள்.
        அமெரிக்காவின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கு அனைத்துத் துறைகளிலும் ஆப்ரிக்க-அமெரிக்கர்களின் பங்களிப்பு ஆகப் பெரிது.  குத்துச் சண்டை சாம்பியன் முகமது அலி, கால்பந்து மற்றும் கூடைப்பந்து வீரர்கள் மைகேல் ஜோர்டான் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களே. நாட்டிற்குப் பெருமை தேடித் தந்தபோதும் அவர்கள் ஒருபோதும் சமமாக நடத்தப்பட்டதில்லை. 
கருப்பினத்தவர் எழுச்சியும் பின்னடைவும்
        ஆப்ரிக்க அமெரிக்கர்களில் ஒருவரான O.W.குர்லே, ஒக்லகோமா மாநிலத்து கிரீன்வுட்ஸில் 40 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அந்த நிலத்தின் ஒருசில பகுதிகளை ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கு மட்டுமே மறுவிற்பனை செய்தார். இதன் மூலம் ஒரு புதிய பரிசோதனை துவங்கியது. அவர்கள் தொழில் முனைவராக முற்பட்டனர். அவர்கள் திறந்த விற்பனை அங்காடிகள் வெற்றியடைய, ஒருவகையில், வெள்ளையர் நடத்திய கடைகளில் கருப்பினத்தவர் அனுமதிக்கப்படாததும் காரணமாயிற்று. இப்படி சிறு குறு மற்றும் பெரிய தொழிலகங்கள் வளர்ந்தன. மிசிசிப்பியிலிருந்து வேலை தேடி மக்கள் அந்தப் பகுதிக்குப் புலம் பெயர்ந்து வந்ததால், கருப்பர்கள் நடத்திய வர்த்தகம் மற்றும் வணிக நிறுவனங்கள் வளர்ந்தன. சில கறுப்பர்கள் கோடீஸ்வரர் ஆனார்கள்.
        1910ல் 18,000 பேராக இருந்த மக்கள் தொகை, பத்து வருடங்களில் ஒரு லட்சமாக அதிகரித்தது. (வெள்ளை முதலாளிகள் நடத்திய ‘வால் ஸ்ட்ரீட்’ போல) ஒக்லகோமா, துல்சாவில் இருந்த கிரீன்வுட் ’ஒரு கறுப்பு வால் ஸ்ட்ரீட்’ ஆக மலர்ந்தது. அரண்மனை போன்ற பெரிய மாளிகைகளைக் கட்டினார்கள். ஐந்து ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் சொந்தமாக விமானம் வைத்திருந்தனர். ஆனால் சில வெள்ளையர்களுக்கு, கறுப்பர்கள் தங்களைவிட பணக்காரர்கள் ஆவதைச் சீரணிக்க முடியவில்லை.
        இந்தியாவில் மனுஸ்மிருதியை நம்புபவர்கள், பிறர் மீது அதிகாரம் செலுத்தத்தான் பிரமணர்கள் பிறந்தார்கள் என்று எண்ணுவதுபோல, அமெரிக்காவிலும் ஆள்வதற்காகவே வெள்ளையர்களைக் கடவுள் படைத்தார் என்று பிடிவாதமாக நம்பும் சிலர் உள்ளனர்.  ஒக்லகோமா மாநிலத்தில் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கர், ஒரு வெள்ளைப் பெண்மணியிடம் தகாது நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு கிரீன்வுட் உள்ளூர் தினசரியில் செய்தியாக வெளியானது. இதனை முறையாக விசாரிப்பதற்கு முன்பாகவே கலவரம் வெடிக்க, கருப்பினத்தவருக்குச் சொந்தமான தொழிற்சாலைகள், கட்டடங்கள் பலவும் தீக்கிரை யாக்கப்பட்டன. 35 வீதிகள் முற்றாகத் தீநாக்குகளுக்குத் தின்னத் தரப்பட்டன. இதனைக் கண்டித்து ஆயிரக்கணக்கில் கருப்பினத்தவர் திரண்டும், போலீஸ் நிர்வாகம் அந்த எதிர்ப்பியக்கங்களை ஒடுக்கியது. இறுதியில் ஒரு துன்பியல் முடிவாக ‘கறுப்பு வால் ஸ்ட்ரீட்’ நிர்மூலப்படுத்தி அழிக்கப்பட்டது. (இவை குறித்த விரிவான பதிவுகள் இணையத்தில் உள்ளன)
        மீண்டும் ‘கறுப்பு வால் ஸ்ட்ரீட்’டை மறு நிர்மாணம் செய்யப்பட்ட முயற்சிகள் ‘ஸோனிங்’ சட்டங்களின் பாரபட்ச நிர்பந்த அணுகுமுறைகளை எதிர்கொள்ள நேரிட்டது. (Zoning சட்டம் என்பது உள்ளூர் சட்ட விதிமுறைகள். அதன்படி ஒரு பூகோளப் பகுதியின் இடத்தை எதற்குப் பயன்படுத்தலாம் அல்லது கூடாது என்பது வரையறுக்கப்பட்டது. வசிப்பிடச் சுற்றுப் பகுதிகளில் உற்பத்தித் தொழிற்சாலைகள் கூடாது என அது தடுத்தது)
தொடரும் இனவெறித் தாக்குதல்கள்
        1863லேயே அடிமை முறை அரசியலமைப்பின் படி ஒழிக்கப்பட்டுவிட்டாலும், அதனை ஏற்காத சக்திகள் இன/நிற ஒதுக்கல் பாகுபாடுகளை இன்றுவரை தொடர்கிறார்கள். ஆப்ரிக்க அமெரிக்கர்கள் தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார்கள். சம ஊதியம், சிவில் உரிமைகள், நீதி மற்றும் சமத்துவத்திற்காக அயர்வின்றி நீண்ட காலப் போராட்டங்களை, 160 வருடங்களாக, அவர்கள் நிகழ்த்தி வருகிறார்கள். கடுமையான தியாகப் போராட்டங்களில் வென்ற வெற்றிகளைப் பின்னுக்குத் தள்ள வெள்ளை இனவெறியர்கள் தொடர்ந்து முயல்கிறார்கள். 
        தென் மாநிலங்களில் ‘பிக் சட்டங்கள்’ என்ற பெயரில் கருப்பினத்தவர் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. (Pig சட்டத்தின்படி ஆப்பிரிக்க–அமெரிக்கர் இழைத்த சிறு குற்றங்களுக்கும் நியாயமற்ற பெரும் தண்டனைகள். பிச்சை எடுப்தையும், வீதியில் உறங்குவதையும் குற்றமாக்கிய வேக்ரன்ஸி சட்டம் வேலையில்லாமல் இருப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கியது.) கோழிக் குஞ்சு திருடியதைக் கொலைக் குற்றம்போல தண்டித்தது. சம ஊதியம் கேட்பார்கள் எனின், அவர்கள் கம்யூனிஸ்ட்களின் முழக்கங்களை எழுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். ஒரு கறுப்பர் வேலை வேண்டினால், அவர் தனது முந்தைய முதலாளியிடமிருந்து ‘ஆட்சேபணை இல்லை’ என்ற சான்றிதழ் பெற்றுவர வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டார். அவர்களுக்கு வாக்குரிமை இல்லை. இந்தப் பிரச்சனைகள் மீதெல்லாம் அவர்கள் வீரம் செறிந்த பல போராட்டங்களை நடத்தினர். தென் மாநிலத்தின் வெள்ளையினத்தவர் ‘ஜிம் க்ரோ சட்டங்கள்’ என்ற பல சட்டங்களைக் கொண்டு வந்தனர். (Jim Crow சட்டங்கள் அமெரிக்காவில் கறுப்பர்களை இனரீதியாகப் பிரித்துத் தனிமைப் படுத்த ஒரு சட்ட அடிப்படையை வழங்கியது. பல மாநிலங்களிலும் 1876 முதல் 1965 வரை அவை அமலில் இருந்தன.) அதன்படி ஒவ்வொருவரும் சமமானவர்கள், ஆனால் தனித்தனியாக; ரயிலில் தனி கம்பார்ட்மெண்ட், பேருந்துகள், பள்ளிகள் கருப்பர்களக்காகத் தனியே ஏற்படுத்தப்பட்டன. சமத்துவம் என்ற துகில் போர்த்தப்பட்ட பாகுபாடு, பாரபட்சம் தவிர வேறல்ல இது. (மனுஸ்மிருதியின் தண்டனைச் சட்டங்கள் நினைவுக்கு வருகின்றன)
மார்ட்டின் லூதர் கிங் வழியில்
        இந்த அநீதிகளை எல்லாம் தீரத்துடன் கருப்பின மக்கள் எதிர்த்துப் போராடினர். சில இயக்கங்கள் அமைதியாகவும் சிலவற்றில் வன்முறையும் இருந்தது. 1954ல் உச்சநீதிமன்றத்தில் அவர்களுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. நீதி மன்றம் பள்ளிகள் இனரீதியாகப் பிரிக்கப்படுதற்கு எதிராக உத்தரவிட்டது. இருப்பினும் வேறுபல வடிவங்களில் பாரபட்சம் நீடித்தது. 1964ல் சிவில் உரிமைகளுக்கான இயக்கம் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் துவக்கப்பட்டது.
        இந்தியாவில் தலித்துகள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுவதால் அவர்கள் கிராமங்களின் ஒதுக்குப் புறங்களில் வாழ வேண்டுவதுபோல அமெரிக்காவில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் வாழ்விடங்கள் சேரிகளில்தான் அமைக்கப்படுகின்றன. அவர்களது மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் இராணுவம், போலீஸ் மற்றும் அரசுத் துறை வேலைவாய்ப்பும் வழங்கப்படுவதில்லை.  
சமஉரிமைக்காகப் போராடும் கருப்பினத்தவர் மீது வன்முறைத் தாக்குதல்கள் தொடர்ந்தன. ‘உலக அரங்கில் அமெரிக்கா முதலிடத்தில், அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர் முதலிடத்தில்’ என்பது அமெரிக்கா பின்பற்றிய கொள்கையாக இருந்தது. புள்ளிவிபரங்களின்படி ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 100 ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் கொல்லப்படுகிறார்கள். தனிநபர் வெள்ளைஇனவெறியர்கள் இந்தியர்களையும்கூடக் கொல்கிறார்கள். இந்தியாவில் கைர்லாஞ்சி, கீழவெண்மணி, சுந்துரு, காரம்செடு போன்ற இடங்களில் பெருமளவில் தலித்கள் கொலை செய்யப்படுவதைப் போல, அமெரிக்காவில் வெள்ளை இனவெறியர்களால் கருப்பின மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
மகாத்மா காந்தியால் ஆதர்சம் பெற்ற மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் நடத்திய வன்முறையற்ற அகிம்சை அமைதி வழியிலான சிவில் உரிமை இயக்கங்கள் லட்சக்கணக்கில் மக்களை ஈர்த்தன. மிக ஆழமாக வேர் ஊன்றியிருந்த இனப் பாகுபாடுகள், இனவேற்றுமைகளை இந்த இயக்கங்கள் உலுக்கி அசைத்ததால், இறுதியில் சில பகுதியளவான வெற்றிகள் கிட்டின.
‘எனக்கு ஒரு கனவு இருந்தது’ என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற பாடல் வரிகள். அதில் தனது சமூகம் பற்றிய எதிர்காலக் கனவுகளை விவரித்திருப்பார். (இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று பள்ளுப் பாடிய பாரதி தனது கவிதைகளில் ‘பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை’, ‘எல்லோரும் ஓர் நிலை எல்லோரும் ஓர்விலை’, ‘ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்’ என்றெல்லாம் கனவுத் திட்டங்களை விவரித்தது போல) மார்ட்டின் லூதர், அந்தக் கவிதை வரிகளில் ‘ஒரு மனிதன் அவனது நிறத்தின் அடிப்படையில் அல்லாது, நீதிநெறி சார்ந்த மதிப்புகளால் மதிக்கப் படுவான்’ என்று நம்பிக்கை தெரிவித்திருப்பார். அந்தப் புகழ்பெற்ற பாடல் அமைதியான சிவில் உரிமை இயக்கங்களின் தேசிய கீதமாயிற்று. ஜனநாயகத்தில் நம்பிக்கை உடைய வெள்ளைஇனத்து மக்களும்கூட பல இலட்சக் கணக்கில் அந்த இயக்கங்களில் இணைந்தனர். இயக்கங்களின் கடுமையான அழுத்தம் காரணமாக 1964ல் ‘சிவில் உரிமைகள் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி வாக்குரிமை, வேலைவாய்ப்பில் சமஉரிமை முதலியன வழங்கப்பட்டன. சட்டத்தில் வகைசெய்யப்பட்டதே, அது அமல்படுத்தப்பட்டதா எனில், இந்தியாவில் தலித் இடஒதுக்கீடு அமலாக்கத்தில் நீடிக்கும் சுணக்கமும், பாகுபாடும் தொடர்கிறது. மகாத்மா காந்தியின் அமெரிக்கச் சீடராக அறியப்படும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அதே வழியில் படுகொலை செய்யப்பட்டார்.
சிவில் உரிமைகளுக்கான மற்றொரு தலைவர் மால்கம் –எக்ஸ், மாறாக துடிப்பான தீரம் மிக்கவர். உரிமை என்பது வெள்ளை இனத்தவரின் கருணையினால் பெறப்படுவது அல்ல என்ற கருத்துடையவர், வீரம் செறிந்த போராட்டங்களை மேற்கொண்டவர். அவரது உரைகளால் இலட்சக்கணக்கான மக்கள் உத்வேகம் பெற்றனர். அவர் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கையில் அவரை ஒரு கொலையாளி 21 குண்டுகளால் துளைத்தெடுத்தான். இந்தப் பெரும் தலைவர்களைப் படுகொலை செய்த பாதகர்கள் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படுவதில்லை. இந்தப் படுகொலைகள் பலவற்றில் என்ன நிகழப் போகிறது என்பது பற்றிய முன்கூட்டிய தகவல்கள் அரசுக்கு கிடைத்தன. ஆப்பிரிக்க-அமெரிக்கர்களைக் கொன்றவர்கள் மற்றும் கு க்ளக்ஸ் க்ளன் உறுப்பினர்களில் தண்டனை பெற்றோர் மிகவும் சொற்பம். ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் போலீசாரால் ஏதோ ஒரு வகையில் துன்புறுத்தலுக்கு ஆளானோர் 57 சதவீதம்.
இன்றைய போராட்டங்கள்
அநீதிகள் தொடர்கின்றன, போராட்டங்களும் தொடர்கின்றன. இந்தியாவிலும் தலித்களைப் படுகொலை செய்தவர்கள், அடித்துக் கொன்றவர்கள் –ப்ராஸிக்யூஷனின் அலட்சியம், சாட்சியங்கள் தாக்கல் செய்யப்படாத காரணங்களால் –பல வழக்குகளிலும் தண்டனையிலிருந்து தப்பவிடப்படுகின்றனர்.  ஆந்திராவில் சுந்தூருவில் பேரளவிலான தலித்கள் மிகக் கொடுமையாகக் கொல்லப்பட்டதில் அனைத்து குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டனர். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பாகுபாடு பாரபட்சத்தில் ஒரே நிலைமைதான்.
டிரம்ப் கொள்ளையைப் பெரிதுபடுத்துகிறார், மாறாக, நாட்டின் பலபகுதிகள் நடைபெறும் போராட்டங்களின் இயல்பு அது அல்ல. ஆனால் உண்மையான பெருங் கொள்ளை சட்டரீதியாக அதிபரின் அதிகாரத்தின்கீழ் அனுமதித்த கோவிட் நிவாரணத் தொகுப்புத் திட்டத்தின் பெயரால் நடைபெறுகிறது. சுமார் 4கோடி மக்கள் வேலையின்றி, தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் சுகாகாரக் காப்பீட்டை இழந்து, உண்ண உணவின்றி, வாடகையோ அன்றி கடன் வட்டியையோ கட்ட முடியாது அவதிப்படும் நிலையில், செல்வம் மிக்கவர்கள் 82 பில்லியன் டாலர் வரிவிதிப்பிலிருந்து விலக்களிக்கப்படுகிறார்கள். இந்தத் தொகுப்புத் திட்ட மாற்றத்தால் மொத்தமாக 95 சதவீத தனிநபர்கள் 2 லட்சம் டாலர் அல்லது அதற்கு மேல் லாபம் பெற உள்ளனர்.
மேற்கண்ட சூழ்நிலையில்தான் ஜார்ஜ் ஃப்ளாய்டின் கொடுமையான படுகொலை அரங்கேற்றப்பட்டிருக்கிறது. பாகுபாடுகள், சமத்துவம் இன்மை, துன்புறுத்தல்களை அனுபவித்து வரும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் பல நூற்றாண்டுகளாகப் ‘பாரபட்சத்தை இனியும் பொறுக்க முடியாது’ எனப் போராடியும், கொடுமையான இனவெறிக்குப் பலியாகியும் வருகிறார்கள்.  
“கருப்பர்களின் உயிர்களும் முக்கியமானவை” என உரத்துக் குரல் எழுப்பும் இந்த நியாயமான போராட்டம் வெள்ளையின மக்கள் மற்றும் கண்டங்கள் கடந்தும் பேரளவிலான ஆதரவைப் பெற்றுள்ளது. இது வரவேற்கத்தக்க நல்லதொரு மாற்றம். ஆனால் பல அமெரிக்க இந்தியர்கள்--அவர்களும் இத்தகைய பாரபட்ச அணுகுமுறையைச் சந்தித்தாலும்--ஏனோ இந்த மாபெரும் போராட்டங்களில் அவர்கள் நடுநிலை வகிப்பது துரதிருஷ்டவசமானது. அவர்களும் போராட்ட இயக்கங்களில் பங்கேற்க உறுதியான நிலைபாடு எடுத்து வெளியே வர வேண்டும் என்பது முக்கியமானது. கலவரங்கள் மற்றும் தீவைப்பு சம்பவங்களின் பின்னே ஒளிந்து கொண்டு டிரம்ப் இனவெறுப்பு தீ நாடு முழுவதும் பரவ வேண்டும், அதில் குளிர் காய்ந்து எதிர்வரும் அதிபர் தேர்தலில் தான் ஆதாயம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார். வெள்ளையர்களின் வோட்டுக்களைப் பெற மிகக் குயுத்தியான திட்டங்களை அவர் செயல்படுத்துகிறார்.
உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களும் ஒன்றிணைய வேண்டியது மிக மிக முக்கியமானது. ஒன்றிணைந்து நாம் கர்ஜித்து முழங்குவோம், ”மக்கள் மத்தியில் தோலின் நிறம் இனியும் பிளவுபடுத்த அனுமதிக்க முடியாது”. சமத்துவம் மற்றும் இனிவெறி ஒழிப்பிற்குப் பாடுபடும் இந்த மாபெரும் உலக இயக்கத்தில் இந்திய மக்களாகிய நாமும் பங்குபெறுவோம்!     
        “எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற்கு அளிக்கும் - ஆம்
இந்தியா உலகிற்கு அளிக்கும் - ஆம் ஆம்
இந்தியா உலகிற்கு அளிக்கும்!
எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க! “
                                              --மகாகவி பாரதி

--தமிழில் : நீலகண்டன்,
  என்எப்டிஇ, கடலூர் 
 


No comments:

Post a Comment