Thursday 11 June 2020

அமெரிக்க நிறவெறி குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை மொழிபெயர்ப்பு


வெள்ளைத் தோல் வழிபாடு
அமெரிக்காவிலும் இந்தியாவிலும்

--ஜாவர் சிர்கார்
(ஓய்வுபெற்ற சிவில் அதிகாரி, முன்னாள் கலாச்சாரச் செயலாளர்
  மேனாள் சிஇஓ பிரச்சார் பாரதி)
        

சமீபத்தில் நிகழ்ந்த பெருமளவிலான எதிர்ப்புப் போராட்டங்கள், அவற்றுள் சில வன்முறையாக நடந்தவை, அமெரிக்காவை உலுக்கி வருவதை அறிவோம். வெள்ளை போலீஸ் அதிகாரிகள் இரக்கமற்ற முறையில் ஜார்ஜ் ஃப்ளாய்டு என்ற கருப்பினத்தவரைக் கொன்ற வீடியோ காட்சி வைரலானதும் வெடித்தன இந்த எதிர்ப்புகள். வெள்ளையல்லாத நிறத்து மனிதர்களாகிய நமது அனுதாபமும்கூட இயல்பாக வெள்ளையர்களால் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் பக்கமே. இருப்பினும், நிறத்தின் அடிப்படையிலான இன வேற்றுமை நோய் ஒழிக்கப்படும்வரை, அதன் பாதிப்பின் வெளிப்பாடுகள் பலவகைகளிலும் திரும்ப நிகழவே செய்யும் என்பதையும் உணர வேண்டும். இந்நிகழ்வில் எதிரி போலீஸ் அல்ல; மாறாக, நிறத்தின் அடிப்படையில் நம்மைப்போல் இல்லாதவர்கள் என்பதாலேயே அவர்கள் அழகற்றவர்கள், அழுக்கானவர்கள் என அவர்கள் மீது வெறுப்பைப் பரப்பும் நிறவேறுபாடே நமது எதிரியாகும்.
        இந்த அளவுகோலின்படி வெள்ளை அமெரிக்கர்களைவிட பல இந்தியர்களும் நிச்சயமாக மோசமானவர்களே; ஏனெனில் ஆப்ரிக்கர்களுக்கு எதிராகத் தன்னிச்சையாக எழும் இந்தியர்களின் வெறுப்பு எந்தவகையிலும் அமெரிக்கர்களைவிட வன்மம் குறைந்ததல்ல. என்ன, ஆப்ரிக்கர்கள் அடர் கருமை என்றால், நாம் கருமையின் வேறுசாயல் வகையினர்; எனவே அவர்களைவிட அழகானவர்கள் என்ற எண்ணம். இதனால்தான் இந்தி சினிமாக்களில் போதை மருந்து கடத்துபவர்களாக அடர் கருமை நிறத்தவர் காட்சிப்படுத்தப்படுகின்றனர். உதாரணமாக தம் மரோ தம், ராமன் ராகவ் 2.0, கமிநே அண்ட் ஷைத்தான் போன்ற படங்களில் போதை மருந்து கடத்துபவர்களை ஆப்ரிக்கத் தேசத்தவர்களாகவே காட்டியிருப்பது பிரச்சனையை சிக்கலாக்கியுள்ளது.
        இந்திய வெளியுறவின் கடும்முயற்சியால் ராஜதந்திர ரீதியாக ஆப்ரிக்காவில் இந்தியா மேலான நிலையைப் பெற்றிருந்தாலும், பல இந்தியர்களின் நிறவெறி அணுகுமுறை அதனைப் பாதிக்கிறது. ஐ.நா. அமைப்பு அல்லது வேறு எந்தச் சர்வதேச அமைப்புக்களிலோ இந்தியா ஓர் இடத்தைப் பெற வேண்டுமானால் ஆப்ரிக்காவின் 55 நாடுகளின் ஆதரவு தேவை. மேற்கண்ட அணுகுமுறையால் அந்நாடுகள் இந்தியாவிற்கு எதிராக வாக்களித்தால்கூட ஆச்சரிப்பட ஏதுமில்லை. ஆனால் ஏற்றுக்கொள்ளமுடியாத இந்த அணுகுமுறை நமது குடும்பங்களாலோ அன்றி சமூகத்தாலோ மறுக்கப்படவும் இல்லை; அல்லது அனைவரும் காணும்படியான ஒரு தண்டனை அரசு அமைப்புகளால் அளிக்கப்படவும் இல்லை. மாறாக, இந்தப் பாரபட்சமான பாகுபடுத்தலின் துன்பம் ஓசைப்படாமல் ஏனைய இந்திய கறுப்புத் தோல் மனிதர்கள் மேல் விரிவாக்கப்படுகிறது.
        இந்தியாவின் வடகிழக்குப் பகுதி குடிமக்கள் பலநேரங்களில், வடஇந்தியாவின் பெரும்பான்மையினரான ‘கலர்’ தோல் நிறமுடையவர்களால் மிக இழிவாகத் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதை என்னவென்று அழைப்பது? இந்தியாவிற்கு எவ்வளவு மோசமான நிலையில் வடகிழக்குப் பகுதி அமைந்துள்ளது என்பதைப் பற்றிய சிறிதளவு புரிதல்கூட மிருகங்களாக வேட்டையாடி இழிவுபடுத்தும் மனிதர்களுக்கு இல்லை. கறுப்பு நிறத்தவர் – அழகு நிறத்தவர் என்ற கருத்தை மையப்படுத்தி அப்நே ரங்க் ஹஸார் போன்ற பல படங்கள். இருந்த போதும், பல இனங்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டில் தோலின் நிறமிகள் காரணமாக பல வேறுபட்ட நிறங்களை உடைய மனிதர்கள் இருப்பது இயல்பு என்ற கருத்தைப் பதிய வைக்க வேண்டும். இதனை மானுடவியல் அறிஞர்கள் இன்னும் நன்றாக விளக்கி இன மேன்மை கற்பிதங்களை ஆதாரமற்றது என நிரூபிக்க முடியும். துரதிருஷ்டவசமாக ஆழமாகப் பதிந்து போன ஆரியர்கள் –திராவிடர்கள் கொள்கையை ஒதுக்கித் தள்ளி வைத்தாலும், அதன் பிறகும் தவறான கருத்துக்களால் பீடிக்கப்பட்டவர்களாக நாம் இருக்கிறோம்: குழந்தைப் பருவம் முதல் நாம் நம்புவது, எவ்வளவுக்கு எவ்வளவு தோலின் நிறம் சிவப்பாகிறதோ அந்த அளவு அவர்கள் பரம்பரை வம்சாவளித் தூய்மையானவர்களாக இருப்பார்கள்! எவ்வளவு குழந்தைத்தனமான நம்பிக்கை!
        அழகு என்பது ஆட்டிப்படைக்கிறது. உதாரணமாக முஸ்லீம்களிடையே தோலின் நிறம் சிகப்பாக சிகப்பாக அவர்கள் மேற்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து வெற்றி கொண்டவர்களின் தூய்மையான இரத்த வாரிசாக இருப்பார்கள்; அதுவே தோலின் நிறம் கரும்பாக கருப்பாக அவர்கள் உள்ளுரில் மதம் மாறிய ‘கீழ்நிலை’யைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பது அசைக்க முடியாத கருத்தாக உள்ளது. இதே போன்ற பாதிப்பு இந்திய கிருஸ்துவர்களிடையேயும் நிலவுகிறது. இந்தியக் கலைகளை ஆய்வுசெய்த முன்னோடியான நம்பர்க்குரிய சர்வதேசிய ஆய்வாளர் ஸ்டெல்லா க்ரம்ரிச், “ஆரம்பகால இந்திய கலைகளில் இனத்தின் செல்வாக்கு” என்ற தலைப்பில் 1924ல் கட்டுரை எழுதியுள்ளார். அஜந்தா குகை ஓவியங்களில் அழகுநிற மேனியர் பலநேரம் கருநிறத்து மனிதர்களுக்குத் ‘தொண்டு’ செய்வதாகச் சித்தரித்திருப்பதை நாம் அவதானிக்க முடியும்; அந்தக் கறுத்த நிறத்தவர் அதிக அதிகாரமுடையவராகவும் காணப்படுவர். சமூக அந்தஸ்து வகிப்பதற்கும் அவர் நிறத்திற்கும் சம்பந்தமில்லை என்பதைச் சமூகத்தின் பொதுபுத்தி ஏற்க மறுப்பது வருந்தத்தக்கது. மனிதனின் நிறமும் அவனது சாதியும் உண்மையில் சமதூரத்தில் வைத்து எண்ணப்படுவதாயின், மிகஉயர்ந்த சாதியிலிருந்து வந்த நடிகர் மனோஜ் பாஜ்பாய் மற்றும் நடிகை திபன்நிதா சர்மாவும் அவர்களின் நிறம் சற்றே குறைந்தவர்களாக இருப்பதைக் காரணம் காட்டி பாகுபாடு காட்டப்படுவார்களா? (இது குறித்து பாலிவுட்டில் வெளிப்படையாக முன்பே விவாதிக்கப்பட்டிருக்கிறது)
        1957ன் சிறந்த படமான ‘மதர் இந்தியா’வில் சுனில்தத் முகம் கருப்பாக்கப்பட்டதை நாம் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்; ஏனெனில், ஒரு விவசாயி வேடத்திற்கு அவர் கூடுதல் அழகுடையவராக இருந்தாராம். இந்த நடவடிக்கை உலகளாவிய வகையில் ‘பழுப்பு முகமாக்குதல்’ அல்லது ‘முகத்தைக் கருப்பாக்குதல்’ என நிறம் குறைந்தவர்களைக் கேலிசெய்ய மேற்கத்தியர்களால் முன்பு பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைக்கு அது இனத்தை இழிவுபடுத்தலெனும் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் அமெரிக்கர்களை இனவெறிகள் எனக் கண்டிக்கிறோமே அவர்களை விட மோசமாக, இந்தியாவில் தங்குதடையின்றி அந்தப் போக்கு தொடரவே செய்கிறது. சமீபத்திய பாலா, சூப்பர் 30, கல்லி பாய் அண்ட் ஆர்டிகிள் 15 போன்ற படங்களில் சிகப்பு நிறமுடைய நடிகர்களின் முகம் கறுப்பாக்கப்பட்டு – நினைவில் கொள்க, அது தண்டனைக்குரிய குற்றம் – வாய்ப்பளிக்கப்பட்டார்களே தவிர இயற்கையாக கருநிறமுடையவர்களில் திறமை உள்ளவர்கள் பயன்படுத்தப்படவில்லை. உழைக்கும் வர்க்க மனிதர்கள், ‘நற்குடி மேன்மக்களை’ விட கறுப்பாக இருந்தேயாக வேண்டும் என்ற கருத்து நமது திரைப் படங்களில் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. சமூகப் பாகுபாடு போக்குகள் மற்றும் இந்திய மக்கள் ஒற்றுமைக்கு எதிரான பிரச்சாரப் பெரும் பசிக்குத் தீனி போடுவதை இந்திய சினிமாத் துறை நிறுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது.
        சில நாட்களில் மேனியைச் சிவப்பாக்கும் அழகு க்ரீம் லாபகரமான வர்த்தகம் இன்று அதிகரித்துள்ளது. அழகுச் சாதனப் பொருட்கள் மேம்பாட்டிற்கான விளம்பரங்களில் முகஅழகின் நிறம் குறைந்தவர்களை மன அழுத்தம், மனச் சோர்வு உடையவர்களாக அல்லது அனுகூலமற்ற பின்தங்கிய நிலையில் உள்ளவர்களாகச் சித்தரிக்கக் கூடானெ ‘விளம்பரங்களுக்கான தரக் கட்டுப்பாடு இந்திய கவுன்சில்’ (ASCI) 2014ல் சுற்றறிக்கையில்  எச்சரிக்க வேண்டியிருந்தது.
        ஆனால் கறுப்பு நிறமென்ன அவ்வளவு அருவருப்பானதா?  சிகப்பு அல்லது வெள்ளை மேம்பட்டது என்ற கருத்தாக்கம் வழக்கொழிந்த கௌகாசியன் இனக்கொள்கை சார்ந்தது, அது உலகின் பாதி பரவியிருந்த வெள்ளையர்களால், வரலாற்றின் பல காலகட்டங்களில் இந்தியாவைப் பீடித்த நோய். ஆனால் இந்திய வரலாறும் கலைகளும் நமக்குச் சொல்வது நேர் எதிரிடையானது.  தோடா வைகுண்டம் தனது ஓவியங்களில் பெண்களைக் கருநிறத்தவர்களாகவும் குண்டாகவும் படைத்திருந்தாலும் அவைதான் உண்மையான இந்திய அழகைப் பிரதிநிதித்துவப்படுத்துவது. ‘கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு’ என்ற பிரச்சாரத்தை நாம் வலுவாக முன்னெடுக்க வேண்டும். வெப்பமண்டலப் பிரதேசமான நமது நாட்டில் கறுப்பு நிறம்தான் இயல்பானது. இயற்கையாக நமக்கு வழங்கப்பட்ட நிறத்தில் பெருமிதம் கொள்வோம். கறுப்பின் எத்தனையோ அழகான சாயல்களில் பழுப்பும் ஒன்று.  ‘கறுப்பே அழகு’ என்பது கார்மேனி வண்ணன் எனக் கண்ணன் நீலமேகச் சியாமள வண்ணனாக ஆழ்வார்களால் ஆராதித்துக் கொண்டாடப்படுவதிலிருந்து தெரியவில்லையா?  
“வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
 அதில் மானுடர் வேற்றுமை இல்லை
 எண்ணங்கள் செய்கைகள் யாவும்
 இங்கு யாவர்க்கும் ஒன்றெனக் காணீர்!”                          
                                                        - -மகாகவி பாரதி
--நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
--தமிழில் : நீலகண்டன்,
  என்எப்டிஇ, கடலூர்

             



No comments:

Post a Comment