Monday 28 November 2022

ஆர்எஸ்எஸ் – பாஜக கருத்தியலை எதிர்க்க வேண்டியதன் தேவை -- --டாக்டர் பி கே காங்கோ

 


       ஆர்எஸ்எஸ் – பாஜக சித்தாந்தக் கருத்தியலை எதிர்க்க வேண்டியதன் தேவை

--டாக்டர் பி கே காங்கோ


             ‘சம்ரஸ்தா’ மற்றும் ‘பலசாலி பாரத்’ ஆகிய கருத்துகள்   ஆர்எஸ்எஸ் --பாஜக கருத்தியல் மற்றும் நடைமுறையின் முக்கியக் கூறாக முன் வைக்கப்படுகிறது. இவ்விரு கருதுகோள்களும் ’இந்தியா என்ற கருத்தாக்கம்’ என அழைக்கப்படும் சமத்துவம், சோஷலிசம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை கருத்துகளுக்கு எதிரானவை.

            உலகெங்கும் புதிய கருத்துகளின் அலையை யுகப் புரட்சி என்னும் 1917 போல்ஷ்விக் புரட்சி கட்டவிழ்த்தது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். பாடுபடும் மக்கட் பெருந்திரள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளாகிய மக்களுக்கு அதிகாரமளித்தல் என்பது மைய இடத்திற்குக் கொண்டு வரப்பட்டது, அவ்வாறே ‘ஜனநாயகம்’. 1920ல் ஏஐடியுசி பேரமைப்பு நிறுவப்பட்டபோதும், 1921ல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் ஹஸ்ரத் மொஹானி பூரண சுதந்திர முழக்கத்தை முன் வைத்தபோதும் மாபெரும் மக்கள் கூட்டம் ஒன்று திரண்டதைக் கண்டோம்; இது நாட்டில் அன்றைக்கிருந்த சுயநலக் கும்பலுக்கு அச்சத்தை ஏற்படுத்த –சுயநலக் கும்பலின் நலன்களைப் பாதுகாக்கவும், மக்களைக் குழப்பி தவறான வழிகாட்டவும் --1925 செப்டம்பர் 27 நாக்பூரில் ராஷ்டிரிய சுயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பு தொடங்கப்பட்டது.

            எனினும், ‘சமத்துவம், ஜனநாயகம், சோஷலிசம்’ போன்ற புதிய கருத்துகள் பரவலான செல்வாக்கு மற்றும் வரவேற்பைப் பெற்றதையும் மக்களுக்கு அதிகாரமளித்ததையும் தடுத்து நிறுத்துவது மிகச் சிரமமான, ஏறத்தாழ இயலாத ஒன்றாகியது; எனவே மக்களைக் குழப்ப சுயநலக் குப்பல் தந்திரம் செய்தது, (ஆர்எஸ்எஸ் அமைக்கப்பட்டது.) மேலும், தலித்கள் ஆலய

நுழைவு, சாதிய பாகுபாடு மற்றும் தீண்டாமை எதிர்ப்பு, டாக்டர் பிஆர் அம்பேத்கர் தனது ‘இந்து கோடு மசோதா’ அல்லது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மூலம் கொண்டு வர விரும்பிய பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற முற்போக்குப் பிரச்சனைகளை எல்லாம் ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்ட நாளிலிருந்தே ஆதரிக்கவில்லை. மக்களுக்கு ஆதரவான இந்த முன்னெடுப்புகளை எல்லாம், மேல் சாதி சலுகைகளைப் பாதுகாக்க விரும்பிய ஆர்எஸ்எஸ் நேரடியாக அல்லது மறைமுகமாக எதிர்த்தது; மேலும், இம்முயற்சிகளை ‘இந்து மதத்தில் தலையீடு’ என முன்நிறுத்தி பிரச்சனையைத் திசை திருப்பியது.

            தற்போது தீவிரவாதமே இஸ்லாமிய அடிப்படைவாதம் என்றும், சோவியத் யூனியன் வீழ்ச்சி முதலாளித்துவத்தின் வெற்றி எனவும் சமமானதாகக் கருதப்படும்போது; வெறுப்பு, சகிப்பின்மை, அச்சம் அடிப்படையில் அமைந்த ஆர்எஸ்எஸ் கருத்தியல் மற்றும் உயர் சாதி, உயர் வகுப்பு மேட்டிமை முதலியன  வளர செழிப்பான களத்தைக் கண்டன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எதார்த்தத்தில் தங்கள் திட்டத்தை நனவாக்கவும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் இட்டுக் கட்டிய கதைகள், வெட்டி ஒட்டிய தகவல்கள் நிரம்பிய பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. எனவே ஆர்எஸ்எஸ் சிந்தாந்தத்தின் மைய கருத்தியலாக ஏன்
சம்ரஸ்தா’ மற்றும் ‘பலசாலி பாரத்’ வைக்கப்பட்டன
என்பதைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. ‘விதியுடன் ஓர் உடன்பாடு’ என்ற புகழ்பெற்ற உரையில் பண்டிட் நேரு 
இந்தியப் பொதுமக்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் இந்தியாவை மாபெரும் நாடாக்க வலியுறுத்தினார்: இதற்காக அவர் வேற்றுமையில் ஒற்றுமை, ஜனநாயகம், சோஷலிசம், நீதி, மதச்சார்பின்மை போன்ற கருத்தியல்களை வலியுறுத்தினார்.

    இம்முக்கிய பிரச்சனைகளுக்காக பொதுமக்கள் இந்திய விடுதலை இயக்கத்தில் பிரிக்க முடியாத பங்கு வகித்தபோது ஆர்எஸ்எஸ் இதிலிருந்து விலகி நின்றது. இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் அதன் தலைவர்களுக்கும் மாபெரும் தேசம், இந்தியப் பெருமிதம் என்பது வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் உலகச் சமாதானத்தில் நம்பிக்கை கொண்ட அமைதியான ஜனநாயக, சோஷலிச இந்தியாவாக இருந்தது.

       எனினும், இந்தக் கருத்துக்குப் ‘பலசாலி பாரத்’ கருத்து நேர் எதிரிடையாக இருந்தது. அந்தக் கருத்தியலின் பார்வை ‘தீவிர வலிமை பொருந்திய இந்தியா’ (மிலிடன்ட் இந்தியா), அது பெரும் கார்ப்பரேட்டுகள் அல்லது முதலாளித்துவக் குழுமங்களால் அதிகாரச் செல்வாக்கு செலுத்தும் பொருளாதாரமாகும். ‘சம்ரஸ்தா’ என்பது மேலெழுந்த வாரியாகச் சமத்துவம் என்று பொருள்படும்: ஆனால் அந்தச் ‘சம்ரஸ்தா’, மக்கள் தங்கள் உரிமைகளைக் கைவிட்டு, தன்னலகக் கும்பலின் மேலாதிக்கத்தை ஏற்று, தங்கள் கௌரவம் அல்லது சமத்துவம் பற்றி கவலைப்படாமல் அவர்களின் கருணை அல்லது நல்லலெண்ணத்தினால் பிழைத்திருப்பதான சமத்துவம் – ஒரு வகையில், ‘நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே’ என்பது போல (ரம்பையின் காதல் படத்தில் மருதகாசி பாடல்), மயான அமைதி நிலவும் சமத்துவம். தேசத்தின் மேன்மைக்காக, பெரு முதலாளிகளின் லாபத்திலிற்காக உழைக்கும் மக்கள் திரள் எதையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து பாடுபட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். அவர்களது அந்தக் கருத்தியலில் மாபெரும் தேசத்திற்காக மக்கள் இருக்கிறார்களே தவிர, விடுதலைப் போராட்ட இயக்கத்தின் ‘இந்தியக் கருத்தாக்க’த்தின் கோட்பாடான ‘மக்களுக்காக மாபெரும் தேசம்’ இல்லை.

     சமத்துவம், நீதி மற்றும் ஜனநாயகத்திற்காகப் போராடும் முற்போக்கு சக்திகள், ‘சம்ரஸ்தா’ மற்றும் ‘பலசாலி பாரத்’ போன்ற கருத்துகள் மூலம் ஆர்எஸ்எஸ் – பாஜக முன் வைக்கும் மேலாதிக்க உலகப் பார்வையை எதிர்த்துப் போராட வேண்டும்.

     முதலாளித்துவப் பொது நெருக்கடிக்குப் பின் 1929 –30களில், ஆங்கிலோ -சாக்சன் உலகில் (அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள்) நிலவிய முதலாளித்துவ முறைமை நலவாழ்வு பொருளாதாரக் கருத்தைத் தழுவியது; அன்றைக்கு நிலவிய சோவியத் யூனியன் மற்றும் நெருக்கடியின் விளைவாக எழுந்த வலிமையான தொழிற்சங்க இயக்கத்தின் செல்வாக்கே இதற்குக் காரணமாக அமைந்தது. இருப்பினும், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் முதலான நாடுகள் தொழிற்சங்க இயக்கத்தை நசுக்கிய பாசிச மாடலைப் பின்பற்றி முதலாளிகளுக்கு அனைத்து வகையான ஆதரவுகளையும் வழங்கின. இப்பாசிச மாதிரியால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ், இந்தியாவில் மேலாதிக்கத்தைச் சாதிக்கப் பலசாலி பாரத் மற்றும் சம்ரஸ்தா ஆகிய கருத்தாக்க மாடல்களை கொண்டு வந்துள்ளது. எனவேதான் அவர்கள் கலாச்சார பண்பாட்டு தேசியவாதம் மற்றும் தீவிர தேசியத்தை வலியுறுத்துகின்றனர்; மேலும் அதிகரித்துவரும் சமத்துவமின்மை, வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு போன்ற எதன் மீதும் அர்த்தமுள்ள விவாதம் நடத்துவதையும் தவிர்க்கிறது.

            நாடாளுமன்ற அவைகளில் விவாதமின்றி, மூன்று கருப்பு வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்றும் தொழிலாளர் குறுங்குறிகளை –சம்பந்தப்பட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடனும் கலந்து பேசாமல்-- தன்னிச்சையாக நிறைவேற்றியது, இந்தப் பாசிசப் போக்கின் வெளிப்பாடே ஆகும்.

“குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு

மேன்மையுறக் குடிமை நீதி

கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று உலகறியக் கூற…”

ஜனநாயகம், சோஷலிசம், சோஷலிசத்தைப் பாதுகாக்க ஆர்எஸ்எஸ் – பாஜகவின் தீய நோக்கமுடைய திட்டங்களை எதிர்க்க வேண்டியது அவசியமான தேவை.

--நன்றி : நியூஏஜ் (நவ.27 –டிச.3)

--தமிழாக்கம் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர் 

No comments:

Post a Comment