Wednesday 9 November 2022

பிரிட்டனின் பொருளாதாரப் பெருங்குழப்பம்

             

   அந்த நாள் பேரரசு, பிரிட்டனில் இன்று பொருளாதாரப் பெருங்குழப்பம்

--ஸ்ரீனிவாஸ் கந்தேவாலே

            கிரேட் பிரிட்டன், தற்போது பெரும் பொருளாதாரக் குழப்பத்தில் நீந்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், உலகின் அனைத்து நாடுகளுமே கோவிட் பெருந்தொற்றின் மோசமான பொருளாதாரத் தாக்கத்தின் இன்னல்களை 2020 –21, பின்னர் மீண்டும் 2021 –22ல் அனுபவித்தன, அவை இப்போது மெல்ல மீட்சியடைந்து வருகின்றன. பிரிட்டனும் ஐரோப்பாவும் மேலும் ரஷ்யா –உக்ரைன் போரின் காரணமாகக் கோதுமை தானியம் வரத்து, பெட்ரோல் கச்சா எண்ணை மற்றும் எரிவாயு வழங்கல் வரத்துக் குறைந்ததன் தாக்கத்தாலும் துன்பப்பட்டு வருகின்றன. இதன் விளைவு பிரிட்டனில் அதிகரித்த பணவீக்கம் (சுமார் 10%). இது கடந்த 40 ஆண்டுகளில் உச்சபட்சமாக இருக்கலாம். இதன் காரணமாக மேலும்

வணிகத் தொழில் மத்தியில் ஸ்திரத்தன்மையின்மை ஏற்பட்டது. வெறும் 45 நாட்களுக்குள் நாட்டின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் இரண்டு பிரதமர்கள் மாறிவிட்டார்கள், தற்போது  மூன்றாவது பிரதமராக ரிஷி சுனக் (இந்தியப் பூர்வீகத்தைச் சேர்ந்தவர்) அக்டோபர் 24ல் ஆளும் கட்சி நாடாளுமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொருளாதாரத்தில் கடும் ஏற்ற இறக்கம், தடுமாற்றம் மற்றும் அதன் அரசியல் பின்விளைவுகள் அடுத்தடுத்த விரைவான காட்சி மாற்றம் என உலகை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளன.

            பிரிட்டிஷ் பொருளாதாரம் சந்திக்கும் முக்கியப் பொருளாதாரச் சவால்களில் வரலாற்று ரீதியான உயர் பணவீக்கம் முக்கியமானது; தொடரும் பணவீக்கம், முலாம் பூசப்பட்ட அரசுப் பத்திரங்களின் மதிப்பைக் குறைத்துவிட்டதால் (முன்பு அரசுப் பத்திரங்களின் முனைகள் தங்கமுலாம் பூசப்பட்டதால் அப்பத்திரங்களுக்கு இந்த அடைமொழி) அவற்றின் விலைகளும் வீழ்ச்சி அடைந்தன. இப்பத்திரங்கள் ஊழியர்களின் பென்ஷன் நிதியத்தின் முக்கிய ஆஸ்தியாக (முதலீடு) இருந்தது. இந்த நிதியம் (ஃபண்டு) ஒரு பக்கம், சந்தையில் மறைமுக நிதியின் முக்கிய ஊற்றாகவும், மறுபுறம் ஊழியர்களின் (அந்தச்) சேமிப்புக்கு நிலைத்த வருவாயாகவும் இருந்தது. பணவீக்கம், சாதாரண மனிதருக்குக் கிடைந்த இந்த வருவாய் ஆதார ஊற்றையும் மற்றும் பிரிட்டிஷ் முதலீட்டுச் சந்தையின் பென்ஷன் நிதியத்தின் பங்கையும் கீழே தள்ளிவிட்டது.

            ரஷ்யாவிலிருந்து எரிவாயு வழங்கல் மற்றும் கச்சா எண்ணெய் வரத்துக் கடுமையாக குறைந்ததால் -- நீண்ட கடும் மழை காலத்தைச் சந்திக்கும் நிலையில் – எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டது. (ஐரோப்பாவும் பிரிட்டனும் எரிசக்திக்கு ரஷ்யாவையே பெரிதும் சார்ந்துள்ளன.) எரிபொருளுக்கு ரேஷன் முறையை அமல்படுத்துவது பரிசீலனையில் உள்ளது; மேலும் எரிபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்ததால் வாழ்க்கை செலவு நெருக்கடி உண்டாகிறது.  சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்ஃஎப்) ‘உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்’ ஆய்வறிக்கை அதன் துணைத் தலைப்பாக ‘வாழ்க்கை செலவு நெருக்கடியை எதிர்கொள்ள’ என்பதை இணைத்துள்ளது.

            பிரிட்டனின் பொருளாதாரம் இந்தியாவைவிட மேம்பட்ட மட்டத்தில் இயங்கினாலும், அது புதிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. அமெரிக்காவில் ‘சப்-பிரைம் கடன் வழங்கல் நெருக்கடி’யின் விளைவாக ஏற்பட்ட 2008 பொருளாதார மாபெரும் பின்னடைவின் தாக்கத்திலிருந்து மெல்ல மீண்டாலும், பிரிட்டன் தற்போது கரோனா பெருந்தொற்றின் பின்விளைவுகள், ரஷ்ய உக்ரைன் போரின் நேரடி பாதிப்பு மற்றும் அவற்றுடன் பொதுமக்கள் திரளின் வருவாய் குறைவு, வாங்கும் சக்தியில் வீழ்ச்சி மற்றும் வாழ்வாதாரச் சிக்கல்கள், மற்றும் (கடன்களின் மீது) வட்டி விகித அதிகரிப்பால் வேலைவாய்ப்பை உண்டாக்குவதில் ஏற்படும் பாதிப்புப் போன்ற  அவ்வவ்போது முதலாளித்துவப் பொருளாதாரத்தில் ஏற்படும் பின்விளைவுகளைச் சந்திக்கிறது. [அமெரிக்காவில் 2008 பொருளாதாரப் பெரும்பின்னடைவு என்பது வகைதொகை இல்லாமல் எளிய வட்டிக்குக் கடன் கொடுத்ததால் கட்டுமானத் தொழில் அபரிமிதமாகக் கொழிக்க, மக்கள் தேவைக்கும் அதிகமாக வீடுகளையும், அரசுப் பத்திரங்களையும் கடனுக்கு வாங்கிக் குவித்தனர். இது ஒரு நிலையில் தேக்கத்தை ஏற்படுத்த, மக்கள் வீடுகளை விற்க முடியாமல், வாங்கிய கடனையும் திரும்பச் செலுத்தாததால், ‘வளர்ச்சி போன்று வீங்கிய நீர்க்குமிழி உடைந்தது’ (பப்பிள் பர்ஸ்ட்), கடன் கொடுத்த வங்கிகள் திவால் ஆயின. ஒரு நிலையில் வங்கிகளில் கடன் கொடுக்க கரன்சி இல்லை, மதிப்பிழந்த செக்குரிட்டி பத்திரங்கள் மட்டுமே இருந்தன. இதையே ‘சப்-பிரைம் கடன் வழங்கல் நெருக்கடி’ என அழைக்கிறார்கள். இந்த 2008 பொருளாதாரப் பின்னடைவால் பலர் வேலை இழந்தனர், தங்கள் சேமிப்புகளையும் வீடுகளையும் இழந்தனர்.]

‘கன்சர்வேடிவ்’ கொள்கைகள்

            பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சி, அதன் குறை கால அரசுகள் மூலம், அதனது பணக்காரர்களுக்கு ஆதரவான, தொழிலாளர் விரோதமான கொள்கைகளை அமல்படுத்த முயன்றது; அம்முயற்சி தொழிலாளர் வர்க்கத்தின் மீதும், மூலதனச் சந்தையின் மீதும்கூட தாக்குதல்களை ஏவியது. பொருளாதார மீட்பை ஊக்குவிக்க அரசு பொதுமக்களுக்கு எந்த நிவாரண உதவிகளையும் அளிப்பதைத் தவிர்த்தது; ஆனால், அதிபணக்காரர்களுக்கு வரிகளைக் குறைத்துச் சலுகைகள் வழங்கியது; இதனால் ஏற்படும் வருவாய் இழப்பைப் பொதுமக்களிடமிருந்து கடன் வாங்கி ஈடுகட்டும் யோசனையை முன் வைத்தது.

கூடுதல் கடன்களைத் திரும்பச் செலுத்தும் சக்தி அரசுக்கு இல்லை என்ற புரிதல் காரணமாகச் சந்தையும் பொது மக்களும் திடீரெனவும் கூர்மையாகவும் எதிர்வினையாற்றினர். முந்தைய பிரதமரும் நிதியமைச்சரும் நோக்கமின்றி ‘நம்பிக்கையில் செய்த தவறு’க்காகப் பதவி விலக வேண்டிய நிர்பந்தம். பெரும் தொழில்களின் முக்கிய தொழிற்சங்கங்கள் சில ஏற்கனவே வேலைநிறுத்தத்தில் இறங்கிவிட்டன, மற்றவை வேலைநிறுத்த அறிவிப்புக் கொடுத்திருந்தன. ஒட்டுமொத்தத்தில் நிலைமை மக்கள் விரோதமாக ஆகியிருந்தது. (படம் நன்றி க்ரானிகல் லைவ்)

            புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ரிஷி சுனக், நீண்ட காலம் முன்பே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருக்க, அவரது இப்போதைய இந்தியத் திருமண உறவு இந்தியாவில் புதிதாகக் கொண்டாடப்படுகிறது. ஆயினும் ஒரு பிரிட்டிஷ்காரராகப் பிறந்து, பிரிட்டிஷ் கல்வி கற்று இங்கிலாந்தின் தற்போதைய மன்னரைவிட செல்வந்தராக உள்ள ரிஷி சுனக் ஒரு பிரிட்டிஷ் குடிமகன்; கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர், கன்சர்வேடிவ் பொருளாதாரக் கொள்கை பார்வையைக் கொண்டிருக்கிறார். கட்சியின் பார்வைக்குள் நின்று தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் அறிவுறுத்தலுடன் கட்சியால் அவர் தேர்ந்தெடுக்கப்- பட்டுள்ளார்.

            புதிய பிரதமரிடமிருந்து நமது எதிர்பார்ப்புகளை மேற்கண்ட அனைத்து அம்சங்களும் குறைத்து விட்டன என்பதே உண்மை. 2022 மற்றும் 2023ம் ஆண்டின் மழைக்காலப் பருவங்களின்போது எரிபொருள் அவசரநிலை உறையச் செய்யும் அம்சமாகும். ஐஎம்ஃஎப் அறிக்கை, ‘‘மிக மோசமானவை இனிதான் வர உள்ளன’’ என ஏற்கனவே எச்சரித்துள்ளதுடன் மேலும், “எங்களின் சமீபத்திய உலக வளர்ச்சி குறித்த முன்கணிப்புகள் 2022ல் 3.2 சதவீதமாகவும் 2023ல் அது மெல்ல 2.7சதவீதமாகும் என்றும், 25சதவீத நிகழ்தகவுடன் அது 2 சதவீதத்திற்குக் கீழேயும் சரியலாம் என்பது மாற்றமின்றி அப்படியே உள்ளன; எண்ணற்ற பல மக்கள் 2023ம் ஆண்டை (பொருளாதாரப்) பின்னடைவு போல உணர்வர்” (தகவல் ஆதாரம் ஐஎம்ஃஎப் ‘உலகப் பொருளாதாரப் பார்வை- 2022’ அறிக்கை P. XIII). “குறைந்த வருவாய்ப் பிரிவைச் சேர்ந்த பல நாடுகள் கடன் வலை துன்பத்திலோ அல்லது அதற்கு நெருக்கமாகவோ உள்ளன. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இறையாண்மை கடன் நெருக்கடி அலையைத் தவிர்க்க அவசரமாகப் பொதுவான திட்டச் சட்டகம் தேவைப்படுகிறது. காலம் விரைவாகக் கரைந்து கொண்டிருக்கிறது. உடனடியாகச் செயல்பட வேண்டிய தருணம்” (மேற்கண்ட ஆய்வறிக்கை p. XIV)

ஏகாதிபத்திய அம்சம்

            ஆழமாக எண்ணிப் பார்த்தால் ஒரு கேள்வி நம்முன் எழும். பிரிட்டன் போன்ற வல்லமையான பேரரசரின் நாடு தொடரும் பணவீக்கத்தைச் சந்திக்கும் நிலையில், பொருளாதார நிலைத்தன்மை இன்மை, வேலையின்மை, குறைந்த ஊதியம் போன்ற பிரச்சனைகளில் ஏன் துன்பப்பட வேண்டும்? ஏற்கத்தக்கதாகத் தோன்றும் ஒரு பதில் யாதெனில், அன்று இந்தப் பேரரசின் (குறைந்த ஊதியம், பணவீக்கம், வேலையின்மை, ஏழ்மை முதலான) பொருளாதாரப் பிரச்சனைகளின் தாக்கத்தைத் தாங்கிப் பிடிக்க, காலனிய நாடுகள் அதிர்ச்சிகளைத் தாங்கும் சுமை தாங்கிகளாக (ஷாக் அப்ஸார்ப்பர்) நடத்தப்பட்டதாக இருக்கலாம்; மேலும் நாளும் காலனிய நாடுகளின் செல்வத்தின் பயன் மட்டும் மாமன்னர் ராஜாங்கத்துக்குக் கொள்ளையடித்து கொண்டு செல்லப்பட்டன  – அப்படித்தான் ஆவணச் சாட்சியங்கள் காட்டுகின்றன. பேரரசரின் ஏகாதிபத்திய நாட்டிலும்கூட செல்வத்தின் பயன்கள் பணக்காரர்களுக்கே சென்றன, சாதாரண பிரிட்டன் மக்கள் நல்ல ஊதியத்திற்காக (முக்கியமாக அமெரிக்காவுக்கு) புலம் பெயர்ந்து சென்றனர். இதன் பொருள் பிரிட்டிஷ் முதலாளித்துவம் எப்போதுமில்லாத மாபெரும் சாம்ராஜ்யத்துடன் (சுமார் 40 காலனிய நாடுகள் அதன் ஆட்சியில்), தான் அடிமைப்படுத்திய நாடுகளின் மக்களுக்கும் அல்லது சொந்த மக்களுக்கும்கூட பொருளாதார நியாயம் வழங்கவில்லை என்பதுதான். ஆனால் குறுக்கும் நெடுக்குமான வர்த்தகப் பரிவர்த்தனைகள் மூலம் சாம்ராஜ்யமும் பிற சிறிய மன்னர்களும் நிலைத் தன்மையை அப்போது அனுபவித்தனர்.

            இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காலனிய நாடுகளின் விடுதலை பிரச்சனை தீர்க்கப்பட்ட நிலையில் பேரரசு பிரிட்டனின் பொருளாதாரம் ஒரு சிறிய நாட்டின் பொருளாதாரம் போல மாறியது; ஐரோப்பிய பொதுச் சந்தையில் நீடிப்பதா இல்லையா, குவிந்துவிட்ட அரசின் பொதுக் கடனைத் திரும்பச் செலுத்துவது எப்படி என்பது போன்ற தனது சொந்த சமூக –பொருளாதார –அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமல் திணறியது. மேலும் முந்தைய பேரரசின் தனது சொந்த மக்கள் விசா மூலம் வெள்ளமாகத் திரும்பி வருவதை எப்படிக் கட்டுப்படுத்துவது, தனது பொருளாதாரத்திற்கு நிலைத்தன்மை அளிப்பது எப்படி, தற்போதைய இறுக்கமான பொருளாதாரத்தில் வருவாய்ச் சமத்துவமின்மையைக் கட்டுப்படுத்துவது எப்படி மற்றும் 2024ல் பொதுத் தேர்தலைச் சந்திக்க உள்ள கன்சர்வேடிவ் கட்சிக்குப் பொது மக்களின் வாக்குகளை எப்படித் திரட்டுவது போன்ற பிரச்சனைகள் கன்சர்வேடிவ் கட்சி முன் நிற்கின்றன.

சாம்ராஜ்ய சகாப்தத்தின்போது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தவும் சமாளித்து நடத்திச் செல்லவும் பிரிட்டனில் புதிய அரசியல் கருத்துகள், கோட்பாடுகள் உருவானது மிகவும் புதிர்போன்ற குழப்பமான கேள்வி. ஆனால் சாம்ராஜ்யத்தை இழந்துவிட்ட பிறகு பிரிட்டனின் புதியன படைக்கும் இப்புதிய உத்வேகம் பலவீனமடையத் தொடங்கியதாகத் தோன்றுகிறது. அரசு ஆக்ஸ்போர்டு பிளாவட்நிக் பள்ளியில் பொருளாதாரம் மற்றும் பொதுக் கொள்கை  துறையின் பேராசிரியர் பால் காலினர் (Paul Collier) தனது நூலில் ஆழமாக விமர்சிக்கிறார்: “முதலாளித்துவம் பிளவுபட்டச் சமூகங்களை உருவாக்குகிறது, அச்சமூகங்களில் எண்ணற்ற மக்கள் கவலையும் பதற்றமும் நிறைந்த நிச்சயமற்ற வாழ்க்கையில் தள்ளப்படுவார்கள்…” (மேற்குறிப்பிட்ட நூல் ‘முதலாளித்துவத்தின் எதிர்காலம் : புதிய பதற்றங்களைச் சந்திக்கும்’, ஆலன் லேன் பதிப்பகம், 2018, பக்.201).

பொருளாதாரப் பெருமந்தம் (கிரேட் டிப்ரஷன் 2008) நிகழ்வைத் தொடர்ந்த சகாப்தத்தின்போது நடைமுறைக்கேற்ற சாதுரியமான கொள்கைகள் முதலாளித்துவத்தை மீண்டும் சீரான பாதையில் கொண்டு வந்தது; மீண்டும் அவர்கள் அதனை முயற்சி செய்யலாம். இன்னும் நமது அரசியல் முறைமை அத்தகையக் கொள்கைகளை உண்டாக்கவில்லை. நமது பொருளாதாரம் போலவே அதுவும் செயல்படாத நிலையில் உள்ளது. பிரச்சனைகளுக்கான தீர்வைக் காரிய சாத்தியமான நடைமுறைகேற்ற வண்ணம் சிந்திக்கும் ஆற்றல் அவர்களை விட்டு அற்றுப் போய்விட்டதா என்ன?

பிரிட்டனின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பிரிட்டிஷ் முறைமையில் மாற்றம் கொண்டு வர பிரதமர் ரிஷி சுனக் அவர்களால் இயலுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

--நன்றி : நியூஏஜ் (நவ.6 –12)
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

 

No comments:

Post a Comment