Thursday 3 November 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 74 -- YV கிருஷ்ணா ராவ்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 74

               

வொய் வி கே – புகழ்பெற்ற வேளாண் நிபுணர்                              மற்றும் கட்சி அமைப்பாளர்

                                                                         --அனில் ரஜீம்வாலே

YVK’ என்று பிரபலமாக அன்புடன் அழைக்கப்படும் YV கிருஷ்ணா ராவ் விவசாயிகளின் தலை சிறந்த தலைவர், வேளாண் பிரச்சனைகளில் நிபுணர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் குறிப்பாக ராயலசீமா பகுதிகளிலும் அனைத்திந்திய மட்டத்திலும் கட்சியைக் கட்டியவர். அவர் ஒரு திறன் வாய்ந்த மார்க்சிய அறிஞர்.

            கிருஷ்ணா ராவ் 1915 செப்டம்பர் 15ல் ஆந்திரா, கிருஷ்ணா மாவட்டம், கண்ணவரம் தாலுக்கா, பேடா அவுட்டபள்ளி என்ற இடத்தில் (விஜயவாடா விமானநிலையத்திலிருந்து 7.5 கிமீ) சுமார் 5 ஏக்கர் நிலம் வைத்திருந்த நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். குடும்பத்தினர்கள் விவசாயத்திற்கு உதவிக்கு ஆட்களை அமர்த்தாமல் வயல்வெளிகளில் வேளாண் பணிகளைச் செய்தனர். கிருஷ்ணா மூன்று நான்கு வயதிலேயே ஆடுமாடுகள் பராமரிப்பில் ஈர்ப்புக் கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தந்தை தெலுங்கு மற்றும் கணக்கு முதலிய பாடங்களைக் கற்க உள்ளூர் பள்ளியில் சேர்த்தார்.

            காங்கிரஸ்காரர்களின் வீட்டில் தங்கியிருந்த பள்ளி முதல்வரை அணுகி பின்னர் அவர் ஆங்கிலமும் படித்தார். இவ்வாறு கிருஷ்ணா ராவ் தேசிய மற்றும் காங்கிரஸ் கொள்கைகளில் இணக்கமாகத் தொடங்கினார்.

            1928ல், அவருக்கு 13 வயதே ஆனபோது, சைமன் குழு புறக்கணிப்புக் குறித்து அவர் படித்தார். 1931ல் கண்ணவரம் உயர்நிலைப் பள்ளியில் அவர் இரண்டாவது பாரம் வகுப்பில் சேர்ந்தார். அன்றைய நாட்கள் பொருளாதார மந்தநிலை நிலவிய காலம்.

காந்தியடிகள் விஜயம்

            1929 ஏப்ரலில் காந்திஜி கிருஷ்ணா மாவட்டத்திற்கு விஜயம் செய்தபோது எல்லா இடங்களிலும் அவர் மிக உற்சாகமான வரவேற்பைப் பெற்றார். அதில் மிகவும் ஈர்க்கப்பட்ட ராவ் காதி உடை அணிய முடிவு செய்தார், அதன்படியே இறுதி மூச்சுவரை அவர் தொடர்ந்து கதர் ஆடை அணிந்தார்! 1930ல் சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கு பெற்ற அவர் கள்ளுக்கடை மறியல், அன்னியத் துணிக் கடைகள் புறக்கணிப்பில் ஈடுபட்டார். காங்கிரஸ்காரர்கள் ‘சவுடு’ நிலத்தின் மேல் மண்ணிலிருந்து உப்பு தயாரிப்பது வழக்கம், அப்படித் தயாரித்து அதனை பாக்கெட்டுகளில் கிராமத்தினருக்காக எடுத்து வருவர். மலபார் ரிசர்வ் போலீஸ் அவர்களை அடித்துத் துவைப்பார்கள். கிருஷ்ணா ராவும் உப்பு தயாரித்துக் கிராம மக்களிடம் காட்டுவார்.

            கிருஷ்ணாவும் நண்பர்களும் பகத்சிங் மற்றும் தோழர்கள் தூக்கிலிடப்பட்டதற்காக மிக வருத்தமுற்றனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி நடத்தப்பட்ட கூட்டத்தில் கிருஷ்ணா ராவும் பேசினார். அனைத்துச் சாதியினரும் பேதமின்றி கலந்து கொள்ளும் சமபந்தி விருந்தில் அவர்களுடன் அமர்ந்து அவரும் சாப்பிட்டார்.

            பீகார் பூகம்பத்தின்போது, டாக்டர் பட்டாபி சீத்தாராமையாவின் நெருங்கிய சகாவான காங்கிரஸ்காரர் காலா வெங்கட ராவ் ஒருங்கமைத்த நிவாரணப் பணிகளில் அவர் ஈடுபட்டார்.

SSLC பள்ளி இறுதித் தேர்வு

            கேள்வித்தாள் ‘வெளியாகி’விட்டதென்ற சர்ச்சைக்குப் பிறகு கிருஷ்ணா ராவ் மார்ச் 1936ல் எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் தேர்வு பெற்றார். காப்பி அடித்ததாகக் குற்றம்சாட்டி ஆறு மாணவர்களின் தேர்வு முடிவுகளை அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். மீண்டும் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தலாம் என்று ராவ் விளக்கிய பிறகு மறுதேர்வில் அவர்கள் பாராட்டத் தக்க உயர் மதிப்பெண்களுடன் தேர்வு பெற்றனர்.

            அமெரிக்கரான ஜெராய் ஸ்ட்ரோக் முதல்வராக இருந்த ஏசி கல்லூரியில் சேர்ந்தார். ஏழை மாணவர்கள் கட்டணமின்றித் தங்கும் விடுதியில் தங்கினார். அங்கே அவர்களுக்கு இலவசமாக இரண்டு நாட்களுக்கு உணவு கிடைத்தது; வாரத்தின் மீதம் உள்ள 5 நாட்களுக்கு குண்டூரில் வசதியாக இருந்த கம்மா இன குடும்பங்களிடம் ‘வாரலு’ அல்லது இலவச உணவுக்காகக் குடும்பத்திற்கு ஒரு நாள் முறை வைத்து வாரம் முழுவதும் சென்றார். (‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்று ஔவையார் இதைத்தான் சொன்னாரோ!)

சோஷலிசத்தின்பால் ஈர்ப்பு

        அவர் கல்லூரியில் படித்த காலத்தில் ஆந்திரக் கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகளில் ஒருவரான போலேபெட்டி நரசிம்ம மூர்த்தியுடன் தொடர்பு ஏற்பட்டது. கிருஷ்ணா ராவுக்கு

அவர் ரஷ்யப் புரட்சி, சோஷலிசம் முதலியவற்றை அறிமுகம் செய்தார்.

 தும்மலா வெங்கடராமையாவின் இளைய சகோதரரான வெங்கடசுப்பையாவுடன் அவர் தனது அறையைப் பகிர்ந்து கொண்டார். அவரிடம் மார்க்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவலையும் பிற மார்க்சிய இலக்கியங்களையும் தும்மலா படிக்கக் கொடுத்தார். கிருஷ்ணா ராவ் காங்கிரஸ் மற்றும் சிபிஐ இரண்டு கூட்டங்களிலும் கலந்து கொண்டார். 

     1937 தேர்தல்களில் அவர் காங்கிரசுக்காகப் பணியாற்றினார், மேலும் ராஜமுந்திரி இரயில்வே தொழிலாளர் தொகுதியில் போட்டியிட்ட வி வி நரசிம்மன் மற்றும் விஜயவாடா ஆலைத் தொழிலாளர்கள் பகுதியில் போட்டியிட்ட பி வெங்கடேஸ்வரலுக்காகவும் பாடுபட்டார். அங்கே பிரச்சாரத்திற்கு வந்த ஜவகர்லால் நேரு உரையைக் கேட்டார். நேரு சோஷலிசத்தை ஆதரித்தார்; ஆனால் ஓர் இடத்தில் அவரது உரை வேண்டுமென்றே தவறாக, அப்படியே எதிரிடையாகப் பொருள்பட மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்த்தவரை எதிர்த்துக் கூச்சல் எழுந்தது. 

          காங்கிரஸ் சோஷலிசக் கட்சி கூட்டத்தில் உரையாற்ற எஸ் ஏ டாங்கே குண்டூர் வந்தார். அணு இயற்பியல் விஞ்ஞானத்திருந்து உதாரணங்களைக் கூறி இயங்கியல் பொருள் முதல் வாதமே சரியானது என்பதை அவர் விளக்கியது, கிருஷ்ணா ராவிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

        கணிதவியல், இயற்பியல் முதலான பாடங்களில் அவர் மார்ச் 1937ல் இன்டர் மீடியட் தேர்வில் சிறப்புத் தகுதியுடன் தேர்வானார். இதற்குச் சற்று முன்னதாக அவருக்குச் சிபிஐ உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. பின்னர் அவர் பி எஸ்சி (இயற்பியல்) பட்டப் படிப்பில் சேர்ந்தார்.

            பிறருடன் அவர் 1937 ஆகஸ்டில் குண்டூரில் ஏற்பாடு செய்த மாகாண மாணவர்கள் மாநாட்டில் எஸ் எஸ் பாட்லிவாலா மற்றும் ஹஸ்ரா பேகம் (படம்) உரையாற்றினர். 1937ல்

தடுப்புக் காவலுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தில் கிருஷ்ணா ராவ் தீவிரமாகப் பங்கேற்றார்; ஏசி கல்லூரிக்கு எதிரே அவர் மறியலுக்குத் தலைமையேற்றார். கல்லூரியின் பர்சராக (நிதி நிர்வாகி) இருந்த ஸ்பைஸ் என்ற அமெரிக்கர் கொடூரமான பேர்வழியாக இருந்தார். கிருஷ்ணா ராவும் மற்றவர்களும் கல்லூரி கேட்டின் முன் படுத்து மறியலில் ஈடுபட்டபோது ஏறத்தாழ அவர்கள் மீது ஏற்றுவதுபோல ஸ்பைஸ் தனது காரை ஓட்டி வந்தார். கிருஷ்ணா ராவ் காயமடைந்தார், மாணவர்கள் ‘ஸ்பைஸ், திரும்பிப் போ!’ என சீற்றத்தோடு முழங்கினர், YV கிருஷ்ணா ராவ் கதாநாயகனானார்!

          காங்கிரசின் ஹரிபுரா மற்றும் திரிபுரி அமர்வுகளுக்கு அவர் நிதி திரட்டினார். மேலும் ராய் குழுவினர் 1938ல் நடத்திய எம் என் ராய் கூட்டத்திலும் கலந்து கொண்டார், ஆனால் அவருடன் உடன்படவில்லை.

       1939 செப்டம்பர் 1, 2 தேதிகளில் காக்கிநாடாவில் நடத்தப்பட்ட மாணவர்களின் மாகாண மாநாட்டைச் சுபாஷ் சந்திர போஸ் தொடங்கி வைத்தார். காக்கிநாடாவின் பிரபல கம்யூனிஸ்ட்டான சிவிகே ராவ் வீட்டில் கம்யூனிஸ்ட் மாணவர்கள் தங்கள் கூட்டத்தை நடத்தினர்.

போருக்கு எதிரான செயல்பாடுகள்

       போருக்கான ஆளெடுப்புக்கு எதிரான இயக்கத்தில் ஆளெடுப்பு நடைபெற்ற குண்டூர் மருத்துவமனைக்குள் கிருஷ்ணா ராவ், எம் ஹனுமந்த ராவ் மற்றும் மற்றவர்கள் நுழைந்து கண்டன ஆர்பாட்டம் நடத்த, போலீசாரின் பிரம்படி தாக்குதலுக்கு ஆளாயினர். மாலையில் ‘ஏகாதிபத்திய’த்தின் கொடும்பாவி எரிக்கப்பட்டது, ஒரு சவப்பெட்டி (‘பாடை’) கட்டப்பட்டது. எம் ஹனுமந்த ராவ் முற்போக்கு இலக்கியங்களுக்காக அமைத்த ‘ஸ்டூடெண்ட் எம்ப்போரியம்’ புத்தகக் கடைக்கு சென்ற அவர்களைப் போலீஸ் கைது செய்ய முயன்றும் முடியவில்லை.

       1940 ஜனவரி 26ல் தேசிய மூவர்ணக் கொடியை ஏற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்தது. இரவு நேரத்தில் சென்று கிருஷ்ணா ராவ் பல இடங்களில் கொடி ஏற்றினார். 1940 மார்ச்சில் அவர் பிஎஸ்சி இளங்கலைப் பட்ட இறுதித் தேர்வில் வென்று தனது கிராமத்திற்குத் திரும்பிச் சென்றார், இந்தி மொழி கற்றார். கட்சியின் ரகசிய செல் அமைப்புகளையும் ஏற்படுத்திய அவர் கட்சி வகுப்புகள் நடத்தினார்.

திருமணம்

            தனது மூத்தவர்களின் எதிர்ப்பை மீறி தெனாலி தாலுக்கா முசுனூரி வெங்கடசுப்பையா மகள் பாக்கியவதியை 1940 ஆகஸ்ட் 30ல் கிருஷ்ணா ராவ் திருமணம் செய்து கொண்டார். மிகக் குறைவான சடங்குகள், மாலை மாற்றலுடன் மரபுவழி அல்லாத எளிய திருமணமாக நடந்தது. தேசிய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட பாக்கியவதி கதர் ஆடை அணிந்து கதர் பிரச்சாரம் செய்வார். 1933ல் காந்திஜி விஜயவாடா வந்தபோது அவர் தனது தங்க வளையல்களை நன்கொடையாக வழங்கினார்.

ஜப்பான் குண்டு வீச்சு

            இரண்டாவது உலகப் போரின்போது ஜப்பான் 1942 ஏப்ரல் 7ல் விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடா மீது குண்டு வீச, அதன் படையினர் இந்திய மண்ணின் பகுதிகளை ஆக்கிரமித்தனர். பிரிட்டிஷ் அரசு கண்ணவரத்தில் விமானதளம் கட்டும் பணியை மேற்கொள்ள தேவையான கற்கள் மற்றும் களிமண் சுமந்து செல்லும் வண்டியோட்டிகளைத் திரட்டியது. அவர்கள் நியாயமான ஊதியம் கோரினர். ஆனால் போராடத் தொடங்கிய பிறகே கோரிக்கைகள் நிறைவேறின. இந்தச் செயல்பாடுகளில் கம்யூனிஸ்ட்கள் பங்கெடுத்தனர். 

            கிருஷ்ணா ராவ் பேஜ்வாடா சென்று வேளாண்மை மற்றும் தொழில் துறையில் ரூ30 மாத ஊதியத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். உள்ளூர் சிபிஐ அலுவலகம் விஜயம் செய்தார்.

பெண்களுக்கான பயிற்சி முகாம்

            சிபிஐ, பெண்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றை அம்மாகாணத்தில் அமைத்தது. அதில் பாக்கியவதியும்கூட ஆர்வமாகப் பங்கெடுத்தார். வான்வழித் தாக்குதலிருந்து பாதுகாப்பு (ஏர் ரைடு புரொட்டெக்க்ஷன்) அளிப்பதிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. பிரஜாசக்தி, பியூபிள்ஸ் வார் முதலான கட்சிப் பத்திரிக்கைகளைப் பாக்கியவதியும் பிற பெண்களும் விற்றனர்.  1943 தொடக்கத்தில் கட்சி, கிருஷ்ணா ராவிடம் வேலையை ராஜினாமா செய்து கட்சி முழுநேர ஊழியராகப் பணியாற்றுமாறு பணித்தது, அவரும் அவ்வாறே செய்தார். முதலில் ரூ30, பின்னர் ரூ60 மற்றும் 1957 –58ல் ரூ 100கூட மாத ஊதியமாகப் பெற்றார்.

கட்சி மற்றும் கிசான் பணி

            ரஜனி பால்மே தத் எழுதிய ‘இன்றைய இந்தியா’ புத்தகத்தை முதன் முதலாக தெலுங்கு மொழியில் கே சத்தியநாராயணா, ட்டி வெங்கடராமையாவுடன் இணைந்து கிருஷ்ணா ராவ் மொழிபெயர்த்து “நேதி பாரதம்” என்ற பெயரில் பதிப்பித்தனர். சிபிஐ விஜயவாடா நகரக் குழுவின் உறுப்பினராகக் கிருஷ்ணா ராவ் இருந்தார். 1943ல் ஆந்திரா மாகாணக் குழு அவரிடம் மாகாண கிசான் சபாவின் பொறுப்பேற்குமாறு பணித்தது.

            கிசான் அமைப்பில் அலுவலகச் செயலாளராகக் கிருஷ்ணா ராவ் சேர்ந்து, 1945ல் அதன் செயற்குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

            எட்டாவது அனைத்திந்திய கிசான் மாநாடு விஜயவாடாவில் 1944 மார்ச் 13 மற்றும் 14 தேதிகளில் நடைபெற்றது. அரசு உணவுப் பற்றாக்குறை மற்றும் கொள்ளை நோய் பரவல் என்ற சாக்கில் இரயிலில் செல்ல டிக்கெட் வழங்குவதை நிறுத்தி விட்டது. இருப்பினும் பிரதிநிதிகள் படகுகளிலும், கால் நடையாகப் பல காத தூரம் நடந்தும் வந்து சேர்ந்தனர். அருகிலிருந்த கிராமங்களிலிருந்து விவசாயிகள் மாட்டு வண்டிகளில் காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு வந்தனர். நகரம் முழுவதும் எலுமிச்சை பழங்களாலேயே அழகழகான அலங்காரங்கள், சாலைகளிலும்கூட, பெண்களால் செய்யப்பட்டது. அங்கு ஒரு லட்சத்திற்கும் மேல் கூடினர். அம்மாநாட்டுப் பணிகளில் YVK மற்றும் பாக்யவதி தீவிரமாகப் பங்கேற்றனர்.

‘பந்தர் கால்வாய்’ தூர்வாரல்

            வங்கத்தில் மட்டுமல்லாமல் ராயல சீமா, வடக்கு விசாகா முதலிய பகுதிகளிலும் பஞ்சம் வெடித்தது. கிருஷ்ணா ராவ் தீவிர நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். பந்தர் கால்வாயில் அண்டை வெட்டி, கால்வாயில் படிந்து குவிந்த சேறு அகற்றி மராமரத்துப் பணிகளை மேற்கொண்ட கிசான் சபா, கால்வாயை 1944 ஜூன் 1ம் நாள் மீண்டும் பயன்பாட்டிற்குத் திறந்தது. ஒப்பந்ததாரர்கள் வராத நிலையில் கட்சி மிகவும் சுறுசுறுப்பாகி, குறித்த காலத்தில் பணியை முடிக்கக் கிசான் சபா பொறுப்பேற்றது. பெண்கள் உட்பட 3000க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் பல்வேறு அணிகளில் (ஜாட்டுலு) பணியாற்றியபோது, சிறப்பு கலாச்சாரக் குழுகள் அவர்களை உற்சாகப்படுத்தியது. இடதுசாரி காங்கிரஸ்காரர்களும்கூட இணைந்து கொண்டனர். நம்ப முடியாத வேகத்தில் கால்வாயின் பெரும் தொலைவு பரப்புகள் தூர் வாரப்பட்டு காலத்தில் பணி முடித்தனர்.

     இந்த இயக்கத்தில் கிசான் சபா சார்பாகக் கிருஷ்ணா ராவ் அரசு ஓவர் சீயருக்கு (கண்காணிப்பாளர்) உதவியாளராக இருந்தார்.

பெருந்திரள் விவசாயிகள் இயக்கம்

      1945ல் தெனாலியில் நடைபெற்ற மாகாண விவசாயிகள் மாநாட்டில் கிருஷ்ணா ராவ் அதன் செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசு தடைசெய்ய முயன்றது, ஆனால் அவர்கள் விவசாயிகள் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து அந்நடவடிக்கையை முறியடித்தனர்.

      இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட எழுச்சியில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான ‘கட்லா உத்யமம்’ (bunds movement’) என்ற இயக்கம் [அதனைத் தோராயமாக, நீரைத் தேக்கும் ஏரி போல வயல் பரப்புகளை ஒரு தொகுப்பாக வரப்புக் கட்டுவது எனலாம்], பல இடங்களில் வெடித்தது; குறிப்பாக 1946 தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்குப் பிறகு ஒரு சாதகமான நிலை உருவானது. கட்சி மற்றும் கிசான் அமைப்புகள் தலைமையில் விவசாயிகள் நிலப்பிரபுக்களிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றி நிலத் ‘தொகுப்பு’களை (‘bunds’) ஏற்படுத்தி அதனைத் தங்களிடையே பிரித்துக் கொண்டு தங்கள் நிலங்களில் மீண்டும் அமர்ந்தனர்.

       ஆந்திர மகாசபா அமைப்பு இடதுசாரித் தலைமையின் கீழ், முக்கியமாகச் சிபிஐ கீழ், வந்தது. 1947 வாக்கில் கிருஷ்ணா ராவ் ‘ராயத்து சங்கம்’ (விவசாயிகள் அமைப்பின்) எல்லா பொறுப்புக்களையும் தம் தோள்களில் சுமந்தார்.

        1947 மே - ஜூனில் கிசான் போராட்டம் தொடர்பாக சி இராஜேஸ்வர ராவிடமிருந்து ஒரு கடிதத்துடன் கிருஷ்ணா ராவ், அலிகார் சிகந்தர் ராவில் நடந்த அனைத்திந்திய கிசான் சபா (AIKS) மாநாட்டில் பி சி ஜோஷியைச் சந்தித்தார்.

    1947 ஆகஸ்ட் 15, தேசத்தின் விடுதலை விழா விஜயவாடா மற்றும் பிற பகுதிகளில் பரவலாகக் கொண்டாடப்பட்டது. பிரம்மாண்ட பொதுக் கூட்டங்களில் கிருஷ்ணா ராவும் உரையாற்றினார்.

       1948 ஜனவரி 30ல் தேசத் தந்தை மகாத்மா காந்திஜி படுகொலை செய்யப்பட்டார். கடும் சீற்றமடைந்த மக்கள் ஆர்எஸ்எஸ் ஆட்களை அடித்து உதைத்தனர். போலீஸ் இத்தாக்குதல்களுக்குக் கம்யூனிஸ்ட்கள் மீது பழி சுமத்த முயன்றனர்.

     சிபிஐ இரண்டாவது கட்சிப் பேராயத்தில் (1948 கல்கத்தா) விஜயவாடாவிலிருந்து கலந்து கொள்ளச் சென்ற கிருஷ்ணா ராவ் வழியில் வைசாக் மற்றும் பிறகு கட்டாக்  சென்றார். கல்கத்தா பேராயத்தில் கிருஷ்ணா ராவ் முழுமையாகப் பிடிஆர் பாதையை ஆதரித்தார்.

ராயலசீமாவும் ஆயுதப் போராட்டமும்

      மக்கள் தெலுங்கானா ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசினாலும், குறிப்பிடத்தக்கப் பெரும் போராட்டம் 1948 – 50ம் ஆண்டுகளின்போது கல்கத்தாவைத் தொடர்ந்து ராயலசீமா மாவட்டங்களிலும்கூட நடைபெற்றது. 1938 வந்தே மாதரம் போராட்டக் காலங்களிலிருந்தே கிருஷ்ணா ராவ் தெலுங்கானாவுக்கு நன்கு அறிமுகமானவர். 1948 ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்ட அவர் போலீஸ் காவலிருந்து தப்பி கமலாபுரம் தாலுக்காகளில் வகுப்புகள் எடுத்தார். போலீஸ் அவருக்கு ‘நால்கொண்டா கம்யூனிஸ்ட்’ என்று பெயரிட்டனர்!.

     ராயலசீமா மாவட்டங்களில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தில் கிருஷ்ணா ராவ் ஒரு முன்னணித் தலைவர் என்பது பெரிதும் அறியப்படாத தகவல். அதில் கலந்து கொள்வதற்காக அனுமதி பெற ஹைத்தராபாத் சென்றார், அனுதியும் தரப்பட்டது. ராயலசீமா பிராந்திய குழுவுக்கு முதலில் பெல்லாரியும் பின்பு பெங்களூரும் தலைமையகமாக இருந்தது, கிருஷ்ணா ராவ் அதன் செயலாளர். அவர் பெங்களூரில் தலைமறைமாக இருந்தார். நூலிழையில் அவர் தப்பினார், அவ்வாறின்றி அவர் கைது செய்யப்பட்டிருப்பின் நிச்சயம் சுடப்பட்டிருப்பார்.

      ராயலசீமா போராட்டத்திற்கு நல்லமாலா காடுகள் பின்வாங்கித் திரும்பச் செல்லும் இடமாக இருந்தது.

   இந்த நிகழ்வுப் போக்கை ‘மூன்று P-களின் கடிதம்’ (‘Three-P’s Letter’) மாற்றியது. [கட்சி வரலாற்றில் அது ஒரு முக்கிய ஆவணம். அந்த ஆய்வறிக்கையைத் தோழர் டாங்கே உள்ளிட்ட மூன்று தலைவர்கள் தயாரித்தளித்தனர். அப்போது தலைமறைவாக இருந்த அத்தலைவர்கள் சூட்டிக்கொண்ட புனைப் பெயர்கள் மூன்றும் ஆங்கில எழுத்து P-யில் தொடங்கியது. எனவே அது ‘மூன்று P-களின் கடிதம்’]. 1951வரை கிருஷ்ணா ராவ் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவாகவே இருந்தார்; ஆனால் விரைவில் அதன் தவறைப் புரிந்து கொண்டார். ஆயுதப் போராட்டம் தொடர்வதை ராவி நாராயண் ரெட்டி, பத்தம் யெல்லா ரெட்டி, மக்தூம் மற்றும் சிலர் உறுதியாக எதிர்த்தனர் என்பதையும் கிருஷ்ணா ராவ் தெரிந்து கொண்டார்.

     தலைமையால் கிருஷ்ணா ராவ் பம்பாய்க்கு அழைக்கப்பட்டார்; எம் பசவயுன்னையா (படம்)

அவரிடம் ஆயுதப் போராட்டத்தைத் திரும்பப் பெற்று தேர்தல்களில் பங்கேற்பதான கட்சியின் முடிவைத் தெரிவித்தார். ஸ்டாலினைச் சந்திக்கச் சென்ற சிபிஐ கட்சிக் குழுவில் டாங்கே, அஜாய் கோஷ், சி இராஜேஸ்வரராவுடன் சென்ற நான்காவது உறுப்பினர் பசவபுன்னையா. பம்பாயில் பசவபுன்னையாவைச் சந்தித்த இப்போது கிருஷ்ணா ராவ் தனது கருத்தை முழுமையாக மாற்றிக் கொண்டார்.

தேர்தல்கள்

            ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கைக்குப் பின் 1951 அக்டோபரில் வெளிவந்த கிருஷ்ணா ராவ் சிபிஐ கடப்பா மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். 1962ல் குடிவாடா நாடாளுமன்றத் தொகுதி இடத்திற்குப் போட்டியிட்ட அவர் தோல்வியுற்றார். 1964 கட்சி பிளவுபட்டதற்குப் பின் அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுதியாக நீடித்தார். 1966 முதல் 1978வரை மாநில மேலவை உறுப்பினராக இருந்தார். மொழிவாரி மாநிலங்கள் சீரமைப்பில் ஆந்திரப் பிரதேசம் ஏற்படுத்துவதற்கானப் போராட்டத்தில் அவர் பங்கேற்றார். மேலும் வைசாக் உருக்காலைப் போராட்டக் கிளச்சியில் அவர் தீவிரமாகக் கலந்து கொண்டார்.

பதவி பொறுப்புகள்  

ஆந்திரப் பிரதேசக் கிசான் சபாவின் தலைவராக அல்லது பொதுச் செயலாளராக அவர் பல ஆண்டு காலம் இருந்தார். பின்னர் கிருஷ்ணா ராவ் அனைத்திந்திய கிசான் சபாவின் பொதுச் செயலாளராக அல்லது தலைவராகப் பல ஆண்டுகள் இருந்தார். இந்திய அரசின் வேளாண் விலை ஆணையம் (அக்ரி ப்ரைஸ் கமிஷன்) உறுப்பினராக அவர் இருந்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினராக நீண்ட காலத்திற்குப் பொறுப்பு வகித்த கிருஷ்ணா ராவ் மத்திய செயற்குழுவில் 1989 முதல் 1995வரை இருந்தார்.

இறுதி ஆண்டுகள்

        கிருஷ்ணா ராவ் தனது இறுதி ஆண்டுகளை அனைத்திந்தியக் கிசான் சபாவிலும், பின் சிஆர் ஃபௌண்டேஷன் மற்றும் ஹைத்ராபாத் NRRR மையத்தில் அதன் முதல்  இயக்குநராகவும்

பணிசெய்து அர்ப்பணித்தார். பெரும்பாலான தன் நேரத்தைப் படிப்பதிலும் ஆய்வு செய்வதிலும் அர்ப்பணித்தார். அறிவுசார் மையமாக அனைத்திந்திய முற்போக்கு ஃபோரம் அமைப்பை நிறுவுவதில் அவர் தீவிரமாக உதவி செய்தார். YV கிருஷ்ணா ராவ் புத்திசாலித்தனமான அறிவாளி, வேளாண் பிரச்சனைகளில் நிபுணர் மற்றும் இத்தாலிய மார்க்சியவாதி அன்டோனியோ கிராம்சி குறித்த ஆய்வுகளில் சிறப்பு ஆர்வம் எடுத்துக் கொண்டவர். 21ம் நூற்றாண்டில் சோஷலிசம் உட்பட பல பொருட்களின் மீது கோட்பாடு சார்ந்த பிரச்சனைகள் மற்றும் கேள்விகள் மீதான பல்வேறு முக்கிய கருத்தரங்கங்களை (செமினார்) நடத்த அவர் உதவினார். 

      2010 டிசம்பர் 26ல் (இந்தியக் கம்யூனிஸ்ட் அமைப்பு தின நாளில்) இம்மண்ணுலக வாழ்வைவிட்டு மறைந்த YV கிருஷ்ணா ராவ், அறிவார்ந்த செல்வம் மற்றும் பெரும் ஆய்வுப் பாராம்பரியத்தைவிட்டுச் சென்றென்றுள்ளார். அவற்றை நன்கு பயன்படுத்தி அவர் உயர்த்திப் பிடித்த செங்கொடிக்குப் புகழ் சேர்ப்பதே நாம் அவருக்குச் செலுத்தும் செவ்வாஞ்சலி! ஓங்குக அவர் புகழ்!

--நன்றி : நியூ ஏஜ் (அக்.9 –15)
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment