Sunday 13 November 2022

சூழலியல் கட்டுரை -- நியூஏஜ் தலையங்கம்

 நியூஏஜ் தலையங்கம் (நவ.13 –19)


சூழலியல் நெருக்கடி, அபாயகரமான நிலையில்வந்து நிற்கிறது


                    2022 செப்டம்பர் 18ல் ‘மதிப்புமிக்க’ நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் எலிப் பொந்து அல்லது எலிப்பொறி சுரங்கத்தில் பணியாற்றிய மூன்று தொழிலாளர்களின் அற்பமான’ உயிர்கள் பலியாகி உள்ளன.

ஆம், ஆளும் அரசிற்குத் தொழிலாளர்களின் உயிர்கள் வெல்லமாகிப் போனது. அசாம் மாநில தின்சுகியா மாவட்டம், மர்கேரிடா துணைக் கோட்டத்திற்குக் கீழே லேடோ பகுதியில் டிகோக் மாலு குன்றுகளில் அமைந்த நிலக்கரிச் சுரங்கத்தில் விஷவாயுவைச் சுவாசித்ததனால் எனச் சந்தேகிக்கப்படும் துர்பாக்கியமான மரணம், இல்லை – அது ஆளும் அரசும் சுரண்டல் முதலாளிகளும் வாங்கிய பலி! சைதுல் இஸ்லாம், ஹுசைன் அலி மற்றும் அஸ்மத் அலி எனும் 30 வயதிற்குக் கீழுள்ள இளைஞர்கள் பலியானதற்குக் காரணம், சுற்றுச் சூழல் ஆபத்து ஏற்படுத்தும் பயங்கர தாக்கத்திற்கு எதிராக எந்தவிதப் பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கை- களும் எடுக்கப்படவில்லை என்பதுதான். இந்த இடத்தில் அது சுரங்கத்தில் வெளியான விஷ வாயு. இங்கு மாவட்ட அதிகாரிகள் நன்கு அறிந்த வண்ணமே சட்டவிரோத சுரங்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பது தேசிய நாளிதழ்கள் தரும் செய்தி; அப்படித் தெரிந்தாலும் ஆளும் கட்சித் தலைவர்கள் பலர் இதில் ஈடுபட்டிருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருக்க நிர்பந்தப்படுத்தப் படுகிறார்கள். இது ஊர் அறிந்த ரகசியம், அன்றாடக் காட்சி. வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்ட நிலையில் வேலை தேடி அலையும் நிர்கதியான தொழிலாளர்கள், போதுமான பாதுகாப்பு இல்லாத நிலையிலும் இச்சுரங்கப்பணியில் சாவின் பொறிகளாக மாறிப்போன எலிப்பொந்து சுரங்கத்தில் பணியாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஏற்றுக் கொள்கிறார்கள்.

  விஷ வாயுவைத் தவிர, சுரங்கப் பகுதிகள் புத்தாக்க நடவடிக்கைகள் இன்றி கைவிடப்படுவதால், இங்கு விபத்துச் சாவுகளும்கூட ஏற்படுகின்றன. சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுத்து வரப்படும் நிலக்கரியின் மதிப்பைவிட இங்கு மனித உயிர்கள் மலிவாகின. ஊடகங்கங்கள் செய்திகள் சேகரிக்க அனுமதிக்கப்படாவிட்டாலும் வேறு சம்பந்தமில்லாமல் விபத்து நடைபெறவில்லை என்பது நிதர்சனம். சமீபத்தில் விபத்து நடந்த இடத்திலிருந்து 900 கி.மீ. தொலைவில் (அசாம் மாநில பிரம்மபுத்ரா நதி வடகரையில் பொங்கைகான் மாவட்டச் சிறிய நகர்) ஜோகிகோபா என்ற இடத்தில் முதல்முறை இப்படி நடந்தது. இம்மாவட்டத்தில் மட்டும் ஒன்றல்ல, ஓராயிரம் எலிப்பொந்து சுரங்கங்கள் உள்ளன. அதன் ஆபத்துக்களை எதிர்த்து எவரும் குரல் எழுப்ப அனுமதி இல்லை.


    (குறுகலான நுழைவுப் பகுதியுடன் பல அடி ஆழத்திற்குக் கீழே சென்று உள்ளுக்குள் பக்கவாட்டிலும் மனிதர்கள் படுத்தபடி தோண்டிச் சென்று நிலக்கரி படிமங்களை வெட்டி எடுத்துவரும் சட்டவிரோதமான) எலிப்பொந்து சுரங்கங்கள் மனித வாழ்விற்கும் உயிருக்கும் மட்டுமே அச்சுறுத்தல் அல்ல; அவை வனவாழ் உயிரினங்களுக்கும் இயற்கையின் பசுமை வாழ்விற்குமேகூட பெரும் அச்சுறுத்தலானது. ஆனால் இவை போன்ற ஒவ்வொரு பிரச்சனையிலும் லாப வேட்டைக்காக இயற்கையைச் சுரண்டும் பேராசைக்காரர்களின் மீதே அழிவிற்கான பொறுப்பு விழும்.

        89.44 சதுர கிமீ பரப்புள்ள மழைக்காடு பகுதியில் அமைந்துள்ள டெஹிங் பட்காய் பூங்கா, 2004 ஜூன் 13ல் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அசாம் மாநில அரசு 2020 டிசம்பர்13ல் அதனைத் தேசியப் பூங்காவாக அறிவிக்க, அரசின் காட்டிலாக்கா அதற்கான அதிகாரபூர்வ அறிவிக்கை வெளியிட்டது. இந்தியத் தாழ்நில மழைக்காடுகளில் பெரும் பரப்பு இந்தத் தேசியப் பூங்காவாகும். மனதைக் கொள்ளை கொண்டு மயக்கும் இப்பகுதியின் இயற்கை அழகைப் புறக்கணித்து, ‘வன உயிரினத்திற்கான தேசிய வாரியம்’ (NBWL), இதயமற்ற ஒரு சிபார்சு யோசனைக்குத் தலையசைத்து அனுமதித்தது: டெஹிங் பட்காய் பூங்கா வனவிலங்கு சரணாலயத்திற்குச் சொந்தமான 98.59 நிலப் பரப்பை நிலகரி வெட்டி எடுக்கப் பயன்படுத்த கோல் இந்தியா லிட்., நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அக்காட்டின் வழியாக ஓடும் டெஹிங் நதி மற்றும் பட்காய் மலை இவற்றின் எதிர்காலம் என்ன ஆகும் என்பது ஒருவருக்கும் தெரியாது.

         
        வன உயிரினத்திற்கான தேசிய வாரியம், வனநில ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்ட சலேஹி பகுதியில், நிலக்கரி சுரங்கம் அமைக்க கோல்இந்தியா லிட் நிறுவன அலகான
வடகிழக்கு நிலக்கரி பீல்டு முன்வைத்த செயல்திட்டம் பற்றியும் விவாதித்தது.
சலேஹி, டெஹிங் பட்காய் மழைக்காடு பகுதியின் யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட 111.19 சதுர கிமீ இடத்தை உள்ளடக்கியதாகும்; மேலும் திப்ரூகர், டின்சுகியா மற்றும் சிப்சாஹர் மாவட்டங்களின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் பலவற்றில் பரவியுள்ளது. சூழலியல் பன்மைத்துவம் மற்றும் வனங்கள் அழிப்புடன் நேரடித் தொடர்புடைய பல்வேறு நோய்கள்   கடுமையாக அதிகரிப்பதாக விஞ்ஞானிகளும் உணர்கின்றனர். இது, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் இத்தகைய --பறவைக் காய்ச்சல், எபோலா, மத்திய கிழக்கு சுவாசக் கோளாறு (
MERS) நிபா வைரஸ், ஸிகா வைரஸ் மற்றும் கடைசியாகக் கரோனா வைரஸ் போன்ற நோய்கள் படையெடுப்புக்குக் கதவைத் திறந்து விட்டுள்ளது.

          சுனாமி போன்ற இத்தகைய பலிவாங்கும் எல்லா இன்னல்களுக்கும் ஒரே ஆதார மூலமாக இருப்பது, (இயற்கையில்) மனிதத் தலையீடே என்றால் ஆச்சரியம் இல்லை. காடுகளை அழிப்பதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நாட்டிற்குள் வருவதில்லையா? பெருந்தொற்று காலத்தில் ஒன்றிய அரசின் ‘சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சரகம்’ (MoEFCC) சூழலியல் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் தொழில்துறை மற்றும் அடிப்படை கட்டுமான செயல்திட்டங்களுக்குத் திட்டமிட்டது. அது மட்டுமின்றி, உண்மையில் அதற்கான சூழலியல் தாக்க மதிப்பீடு (EIA) அறிவிப்பு 2020 வரைவறிக்கைக்குப் புது சட்ட விதிகள் தொகுப்பை அறிமுகப்படுத்தியது; இதன் மூலம் அதற்கு முந்தைய 2006 இஐஏ அறிக்கை மாற்றி அமைக்கப்படுகிறது: இது சுற்றுச் சூழல் பாதுகாப்பு கொள்கைகளுக்கு முற்றிலும் நேர் எதிரிடையானது. வன உயிரினத்திற்கான தேசிய வாரியம் அனுமதி வழங்கிய செயல், வனப்பாதுகாப்புச் சட்டம் 1980க்கு விரோதமானது, மீறியது என்பதை நிரூபிக்கிறது.

      கோல் இந்தியா துணை அமைப்பான வட கிழக்கு கோல்ஃபீல்டுஸ் நிறுவனத்திற்கு இப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கான சுரங்கக் குத்தகை 1973ல் வழங்கப்பட்டது. அன்றிலிருந்து அந்நிறுவனம் இப்பகுதியில் சுரங்கம் வெட்டும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டது. அனுமதி அளிக்கப்பட்ட குத்தகை காலம் நீண்டகாலம் முன்பே 2003ல் முடிந்து விட்டது. ஆனால் இன்னும் சுரங்கம் வெட்டும் பணிகளைச் சட்டவிரோதமாகத் தொடர்கிறது. (இந்தியாவின் தேயிலை நகரம் என அழைக்கப்படும் அசாமின்) திப்ரூகரில் எலிப் பொறி சுரங்கத்தில் நமது சுரங்கத் தொழிலாளர்கள் சந்தித்த அதே ஆபத்தை டெஹிங் பட்காய் வன உயிர்கள் பகுதி மற்றும் யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட வனமும் சந்திக்கின்றன. இந்த ஆபத்துகள் எல்லாமே கடலின் மேற்பரப்பில் தெரியும் பனிப்பாறை முகடு போன்றது. வாழ்வியல் எதார்த்த உண்மை மேலும் இருள் சூழ்ந்ததாகவும் மிகவும் கவலைக்குரியதாகும்.

        2030 வாக்கில் பசுமை இல்ல வாயு வெளியேற்ற பாதிப்பை 1.5 டிகிரியைத் தாண்டாது என உறுதிமொழி அளித்த 197 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதைப் பருவநிலை மாற்ற அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பருவநிலை குறித்த அரசு நடவடிக்கையைக் கண்காணிக்கும் சுயேச்சையான பரிசீலனை, இந்தியாவின் நடவடிக்கையைப் ‘போதாமை மிகக் கூடுதலானது’ என வகைப்படுத்தியுள்ளது. நிலக்கரித் தொழிலுக்கான தொடரும் இந்திய ஆதரவு, பசுமையை


மீட்டெடுப்பதைச் சீர்குலைக்கிறது என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. உலகின் வெப்பம் வெறும் 1.2 டிகிரி உயர்ந்ததற்கே, பூமண்டலம் அதிகரிக்கும் வெப்ப அலைகள், புயல்கள், பருவம் தப்பிய பெருமழை, வெள்ளம் என இடற்பாடுகளைச் சந்தித்த பிறகும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைத் தடுக்க உலக நாடுகள் அவசர நடவடிக்கை எடுப்பதில் தோல்வியடைகிறது என ஐநா பருவநிலை மாற்ற அறிக்கை கூறுகிறது. நாடுகள் தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்றினாலும்கூட, சுமார் 2.5 டிகிரி வெப்பமயமாக்கும் பாதையில் நாம் இருப்போம் என்பது கவலைக்குரிய பேரழிவாகும்.

சமீபத்திய ‘தேசியப் பங்களிப்பு நிர்ணயிப்பு (நேஷனலி டிட்டர்மைண்டு கான்ட்ரிபியூஷன்ஸ், NDCs) அல்லது கார்பன்-டை-ஆக்ஸைடு முதலிய பசுமை இல்ல வாயுகள் வெளியேற்றத்தை வெட்டிக் குறைப்பதற்கான தனித்தனி ‘குறிப்பிட்ட நாட்’டின் திட்டங்கள் மற்றும் பருவநிலை மாற்ற தாக்கத்திற்கு அனுசரித்து நடவடிக்கை எடுப்பது குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்ததே இந்தக் கண்டுபிடிப்பு மதிப்பீடுகள். பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டு இலக்கை எட்ட, 2030க்குள் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 2010ம் ஆண்டு மட்டத்தினுடன் ஒப்பிட இன்னும் 45 சதவீதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை மேலும் கூறுகிறது. ஒரு காலத்தில் பூமண்டலம் மகிழ்ந்து கொண்டாடிய உயிரோட்டம் ததும்பிய வாழ்கையை உண்மையில் இம்மணுலகம் இன்று நிராகரிக்கிறது.

        அதைத்தான் தற்போது எகிப்து நாட்டின் ஷர்ம் அல் ஷேக் நகரில் நடைபெறும் பருவநிலை

மாற்ற உலக உச்சி மாநாடு அல்லது காப் 27 (கான்பரன்ஸ் ஆப் பார்ட்டீஸ், COP27) மாநாடு பிரதிபலிக்கிறது. அதில் தொடக்க உரை ஆற்றிய ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ்,உலகம் பருவநிலை மாற்ற நரகம் நோக்கிய ஹை-வே பாதையில் உள்ளது’ என உலகத்தைச் சரியாகவே எச்சரித்தார். 


என்ன செய்யப் போகிறது உலக நாடுகள்?  

 


                    

--தமிழில்: நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

 

 

 

No comments:

Post a Comment