Tuesday 1 November 2022

24வது சிபிஐ கட்சிப் பேராயத்தில் தோழர் யெச்சூரி முழக்கம்

 

ஆர்எஸ்எஸ் – பாஜகவை வெளியேற்ற
மதசார்பற்ற கட்சிகள் ஒன்றுபட வேண்டும்

         -- கட்சிப் பேராயத்தில் தோழர் யெச்சூரி முழக்கம்

சிபிஐ24வது கட்சிப் பேராயப் பொது அரங்கில் அக்டோபர் 15ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் வாழ்த்துரை பின்வருமாறு:

        “சிபிஐ 24வது கட்சிப் பேராயத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் எங்களது அன்பான தோழமை வாழ்த்துகள். பேராயத் தொடக்க அமர்வில் கலந்து கொள்ள என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி. ஏனைய இடதுசாரி கட்சித் தலைவர்களையும் நான் வாழ்த்துகிறேன். இன்று நமது நாடும் மக்களும் சந்திக்கின்ற கடுமையான சவால்களை எதிர்கொள்வதற்காக இடதுசாரி ஒற்றுமையை வலிமைப்படுத்த விரும்பும் நமது பரஸ்பர விழைவை மீண்டும் வற்புறுத்துகிறேன்.

    தோழர்களே நண்பர்களே! ஆந்திர மாநில அரசியல் மையமான விஜயவாடா நகரில் நீங்கள் குழுமியிருக்கிறீர்கள். விடுதலை வரலாற்றில் பல பத்தாண்டுகளாக கம்யூனிஸ்ட்களின் புரட்சிகர நடவடிக்கைகளின் மையமாக இருந்த இந்த நகரம், இன்றும் அவ்வாறே திகழ்கிறது. முக்கிய மக்கள் போராட்டங்களில் ஒன்றான, கொடிய நிலப்பிரபுத்துவ அடக்குமுறைக்கு எதிராக, விவசாயப் பெருங்குடி மக்கள் நடத்திய ஆயுதப் போராட்டம்டந்த அரசியல் மையத்தில் நீங்கள் கூடியுள்ளீர்கள்.

     இந்த ஆயுதப் போராட்டம் சுமார் 30 லட்சம் விவசாயிகளின் விடுதலையை 18 மாதங்களுக்கு உறுதிப்படுத்தியது; மூவாயிரம் கிராமங்களின் 16ஆயிரம் சதுர மைல்கள் பரப்புள்ள 10லட்சம் ஏக்கர் நிலங்களை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளித்தது. கம்யூனிஸ்ட் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆயுதப் போராட்டம் மற்றும் பிற பல பகுதி விவசாயிகளின் எழுச்சிகள் –வங்கத்தின் தேபகா இயக்கம், கேரள புன்னப்புரா–வயலாறு, மராட்டியத்தில் வார்லி (பழங்குடி இனமக்களின்) எழுச்சி, அசாமில் சுர்மா பள்ளத்தாக்கு உள்ளிட்ட போராட்டங்கள் – நிலச் சீர்திருத்தம் மற்றும் ஜமீந்தாரி முறை ஒழிப்பு நிகழ்ச்சி நிரலை அரசியல் மைய இடத்திற்குக் கொண்டு வந்தன. கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான மக்கள் போராட்டங்கள் இப்பகுதியில் ஆழமாக வேர் கொண்டுள்ளது. இந்த இடத்தில் கட்சிப் பேராயத்தை நடத்துவது, மேலும் கம்யூனிஸ்ட் செல்வாக்கையும் இடதுசாரி சக்திகள் இடையே ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை மேலும் வலிமையாக்கவும் உதவிடும் என்பதில் நான் பெருநம்பிக்கை கொள்கிறேன்.

        தோழர்களே நண்பர்களே! சிபிஐ 24வது கட்சிப் பேராயம் நடைபெறும் தருணத்தில் சுதந்திர இந்தியாவும் நமது மக்களும் எல்லா வகையிலான நெருக்கடிகளையும் கடுமையான சவால்களையும் சந்திக்கின்றன.

     அரசு அதிகாரத்தைச் செலுத்தும் இந்தப் பாஜக அரசு, பாசிச ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவ வகுப்புவாத நிகழ்ச்சி நிரலைத் தீவிரமாகப் பின்பற்றுகிறது. கெடுமதி பிடித்த வகுப்புவாத பிளவுபடுத்தும் செயல், வெறுப்பு விஷம் தோய்ந்த பிரச்சாரங்கள் மற்றும் வன்முறை, மதச் சிறுபான்மையினரைக் குறிப்பாக முஸ்லீம்களைத் தாக்குதல் இலக்காக்கி, இந்திய அரசியல் சட்டத்தைக் கடுமையாகத் தாக்கிச் சீர்குலைக்கிறது; இந்தியக் குடியரசு அமைப்பின் மதச்சார்பற்ற ஜனநாயகப் பண்புநலனை, ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தின்படி   சகிப்புத்தன்மையற்ற பாசிச இந்துத்வ ராஷ்ட்டிராவாக மாற்றப் பிரயத்தனப்படுகிறது.

     அதே நேரத்தில் இந்தப் பாஜக அரசு, வகுப்புவாத – கார்ப்பரேட் உறவுத் தொடர்பை வலிமையாக்க, கேடு பயக்கும் புதிய தாராளமயச் சீர்திருத்தங்களைப் பின்பற்றுகிறது; தேசியச் செல்வாதாரங்களைக் கொள்ளையடித்தும், அரசதிகாரம் சார்ந்த முதலாளித்துவத்தை (க்ரோனி கேப்பிடலிசம்) ஆதரிக்கிறது; அரசியல் ஊழலைச் சட்டபூர்வமாக்கி, முழுமையான அதிகாரத்துவ ஆட்சியைத் திணிக்கிறது: (இவற்றின் மூலம்) மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமைச் சுதந்திரங்களைத் தாக்குகிறது.

   தோழர்களே நண்பர்களே! இந்தியக் குடியரசின் குணாம்சத்தை மாற்ற திட்டமிட்ட முறைகளில் முயற்சிகள் நடக்கின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்ட ஆதாரத் தூண்களான – மதசார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சமூக நீதி மற்றும் பொருளாதார இறையாண்மை – இந்நான்கும் தொடர்ந்து தாக்கப்படுகின்றன.

 புதிய தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தறிகெட்டு வேகமெடுக்கிறது. வழக்கமான தனியார்மயப்படுத்தல் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகைகள் வழங்குவதைத் தாண்டி, இந்தியாவின் பொருளாதார இறையாண்மை அழிக்கப்படுவது பல்முனைகளில் நிகழ்ந்து வருகின்றன.

        நமது அரசியலமைப்பில் பொறிக்கப்பட்ட மதச்சார்பற்ற விழுமியங்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இது, மோடி அரசு இந்தியாவை இந்துத்துவத் தேசமாக மாற்றுவதை நோக்கிச் செல்லும் வளரும் எதார்த்தத்தைச் சுட்டிக்காட்டும் சமிக்ஞைகள் ஆகும்.

    வகுப்புவாத அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் நோக்கத்திலான சட்டங்களைப் பாஜக மாநில அரசுகள் இயற்றி வருகின்றன. இச்சட்டங்கள் வழக்கமாகச் சிறுபான்மை இன அப்பாவி மக்களை இலக்காகக் கொள்கின்றன; மேலும், அவர்களை நேரடியாகத் தாக்கவும் அல்லது சட்டப்படி அவர்களை வழக்கு விசாரணைக்கு உட்படுத்தி தொல்லைப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கும் சட்டமான ஊபா (UAPA) / தேசத் துரோகம் / தேசியப் பாதுகாப்புச் சட்டம், என்எஸ்ஏ ஆகியவை நூற்றுக்கணக்கான மக்களைச் சிறையிலடைக்கத் தாறுமாறாக மனம்போன போக்கில் பயன்படுத்தப்படுகின்றன.

    இச்சட்டங்களின் கொடூரமான பிரிவுகளைக் குறிப்பாகச் சிறுபான்மையின மக்களுக்கு எதிராகப் பயன்படுத்த எழுப்புவது மட்டுமல்லாமல், அவை அரசுடன் உடன்பட மறுத்து எதிர் கருத்துகளை எழுப்பும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பிறருக்கு எதிராகவும் பயன்படுத்தப் படுகின்றன. எதிர் கருத்தை இந்த அரசு தேச விரோதமானது என முத்திரை குத்துகிறது. கடந்த இந்த ஆண்டுகள் –கல்வி, அரசியல், நிதி விவகாரம், சமூக, பண்பாடு என – கூட்டாட்சியின் அனைத்துத் துறைகளிலும் எல்லா பக்கங்களிலிருந்தும் தொடர்ச்சியான தாக்குதல்களைச் சந்தித்து வருகின்றன.

  மாநில ஆளுநர்களின் செயல்பாடுகள் மற்றும் ஆளுநர்கள், அரசிலமைப்புச் சட்டத்தின் அனைத்து நியதி நெறிமுறைகளையும் மீறுகின்றனர். அவர்கள் எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அரசியல் நிகழ்ச்சிநிரல் திட்டத்தின் தொங்கு சதை நீட்சியாகச் செயல்படுகின்றனர்.

        அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்த சமத்துவம் மற்றும் சமூக நீதி லட்சியத்தை நனவாக்குவதை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, சமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள் பெரும் அநீதிகளுக்கும் பாரபட்சமாக நடத்தப்படுவதற்கும் ஆளாக்கப்படுகின்றனர்.

   தோழர்களே நண்பர்களே! மேலே சொல்லப்பட்டவைகளுடன், நாடாளுமன்றம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் முதலான சுதந்திரமான அரசியலமைப்பு அதிகார அமைப்புகள் அனைத்தும் நீர்த்துப்போகச் செய்து (இனி இந்த அமைப்புகளை நம்பிப் பயனில்லை என்றளவு) மதிப்பிழக்கச் செய்யப்படுகின்றன.

        மத்திய புலனாய்வு அமைப்பான CBI மற்றும் குறிப்பாக அமலாக்க இயக்குநரகம் மேலும் மேலும் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறி வைக்கும் ஆளும் கட்சியின் அரசியல் கரங்களாக அக்கட்சியின் ஏவல் துறைகளாகி வருகின்றன.

   தகவல் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் கார்ப்பரேட்டுகள், ஜோடிக்கப்பட்ட செய்தி மற்றும் தகவல்களை வெள்ளமெனப் பாய்வதை உறுதிப்படுத்துகின்றன.

      அறிவியல் அடிப்படையற்றதும் வரலாற்று ஆதாரங்கள் இல்லாததுமான இந்துத்துவா வகுப்புவாதக் கோட்பாடு, பகுத்தறிவு மற்றும் காரணகாரிய இயைபுத் தொடர்பு இரண்டின் மீதும் தாக்குதல் நடத்துகிறது. உண்மைகளை மறைக்கும் இருண்மைவாதம் அல்லது குழப்பம், மூட நம்பிக்கை மற்றும் குருட்டு நம்பிக்கை இவற்றைப் பரப்புவது, மக்களை ஏமாற்ற உதவுகின்றன; இவை இந்து புராணக் கதைகளை உண்மை வரலாறாக மக்கள் மனங்களில் சுலபமாகத் திணிக்க உதவுகின்றன. இது அறிவியல் மனப்பான்மை மற்றும் பகுத்தறிவின் மீது நடத்தப்படும் தாக்குதல்.

        தோழர்களே நண்பர்களே! காலத்தால் நிரூபிக்கப்பட்ட சுதந்திர இந்திய வெளியுறவுக் கொள்கையை மோடி அரசு கை கழுவி விட்டது. இந்தியா இப்போது அனைத்து உலக விஷயங்களிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிபணியும் கூட்டாளியாகத் தரமிழந்து விட்டது.

        இஸ்ரேலுடன் இந்தியா தந்திரோபாய உறவுகளை மேம்படுத்தியும்; பாலஸ்தீன நலன் மற்றும் போராட்டங்களுக்கு நமது வரலாற்றுப் பாரம்பரிய ஆதரவு மற்றும் ஒருமைப்பாட்டை நீர்க்கச் செய்தும் விட்டது. அமெரிக்கா–இஸ்ரேல்–இந்தியா கூட்டணி அச்சு மேலும் உறுதியாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா, அமெரிக்காவுடன் தந்திரோபாய உறவு மற்றும் இராணுவக் கூட்டை நெருக்கமாக்கியுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இணைந்து (QUAD) ‘குவாட்’ எனும் நாற்கரணக் கூட்டணியை ஏற்படுத்தியுள்ளன; தீவிரமான அந்தத் தந்திரோபாய இராணுவக் கூட்டின் நோக்கம், இந்தோ -பசிஃபிக் பகுதியில் சீனாவை ஒதுக்கித் தனிமைப்படுத்துவதே ஆகும்.

        தோழர்களே நண்பர்களே! அரசு என்னதான் பிரச்சாரப் பரபரப்பைக் கட்டவிழ்த்து விட்டாலும், நாட்டின் பொருளாதாரம் தலை குப்புறக் கீழ்நோக்கி வீழ்கிறது. கோவிட் பெருந்தொற்றைத் தவறாகக் கையாண்டதன் மூலம் மக்கள் மீது சுமத்தப்பட்ட துன்பங்களுக்கு மேலே மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான கடுமையான தாக்குதல்கள் அதிகரித்தபடி உள்ளன. வேலையின்மை உச்ச மட்டங்களில் உள்ளது; கட்டுக்கடங்காமல் ஓடும் பணவீக்கம், லட்சோப லட்சம் மக்களை ஏழ்மையிலும் பசியிலும் ஆழ்த்துகிறது.

        இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்கள், அதிகரிக்கும் அதிகாரத்துவப் போக்கு மற்றும் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக மக்களின் எதிர்ப்புத் தீவிரமாகிக் கொண்டு வருகிறது.

        குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான எழுச்சி இயக்கம், குறிப்பாக பெண்களும் இளைஞர்களுமாக, பெரும் மக்கள் கூட்டம் திரண்டதைப் பார்த்தது.

        ஓராண்டிற்கும் மேல் நீடித்த வரலாற்றுச் சிறப்புடைய விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம், அடம் பிடித்த மோடி அரசைப் பிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறச் செய்தது.

        தனியார்மயத்திற்கு எதிராகவும், தொழிலாளர் சட்டத்திருத்தங்களைக் நீக்கவும் வற்புறுத்தி ஆண்டு தோறும் வெற்றிகரமான அனைத்திந்திய வேலைநிறுத்த நேரடி நடவடிக்கைகளில் இறங்கிய மத்தியத் தொழிற்சங்கங்கள், சமீபத்தில் தொழிலாளர் குறுங்குறிகளை (லேபர் கோடு) சட்டபூர்வமாக ரத்து செய்யக் கோரி 2022 மார்ச் 28, 29 இரண்டு நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தங்களைச் செய்தனர்.

        அதிகரித்த ஒருமைப்பாட்டுடன் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து விடுத்த கூட்டுப் போராட்ட அறைகூவல் இயக்கங்களில், சமீப ஆண்டுகளில், பெருந்திரளானவர்கள் ஒன்று திரண்டதைப் பார்க்க முடிந்தது.

        மக்களின் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த இடதுசாரி சக்திகள் ஒற்றுமையின் பலம் அதிகரிப்பது மிகவும் முக்கியமானது.  இந்த அடிப்படையிலேயே இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை, மாற்றுக் கொள்கைத் திசைவழியுடன், இறுக்கமாகக் கட்டப்பட வேண்டும்.

  அதே நேரத்தில், இந்துத்துவா வகுப்புவாதத் தாக்குதல்களை முறியடிக்கவும், அவர்களைத் தனிமைப்படுத்தவும் பரந்துபட்ட அளவில் மதசார்பற்ற சக்திகளை ஒன்று திரட்டுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

        கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசு, அதன் மக்கள் நலம் சார்ந்த மாற்றுக் கொள்கைகள் மூலம் மக்களின் இதயங்களைக் கவர்ந்து, அம்மாநிலம் இதற்குமுன் சந்தித்திராத வகையில் தொடர்ச்சியாக இரண்டாம் முறை இடது ஜனநாயக முன்னணியை அரசமைக்க மக்கள் தேர்ந்தெடுத்தனர். அதன் சாதனைகள், மனித வளர்ச்சிக் குறியீடுகளில் நாட்டிலேயே கேரள மாநிலம் உயர்ந்த முதல்தர இடத்தைப் பெற்றுச் சாதிக்க வைத்துள்ளன. இடது ஜனநாயக முன்னணி அரசைச் சீர்குலைத்துக் கவிழ்க்க ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒன்றிய அரசும் எல்லா வகையிலும் ஓயாது முயற்சி செய்கின்றன. இடதுசாரி சக்திகள் ஒன்றிணைந்து இந்த முயற்சிகளைத் தடுத்து முறியடிக்க வேண்டும்.

  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்த அனைத்துக் கடமைகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. அதன் மூலம் மட்டுமே இடதுசாரி கட்சிகள் மற்றும் சக்திகள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் இந்திய மக்களை ஒன்று திரட்ட முடியும்; மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த முடியும்; இந்தியாவின் மதசார்பற்ற ஜனநாயக குணாம்சத்தைப் பாதுகாத்து, நமது மக்களுக்கான மேலான இந்தியாவை உருவாக்குவதை நோக்கி முன்னேறிச் செல்ல முடியும் என்பதை சிபிஐ(எம்) கட்சி நம்புகிறது.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 24வது கட்சிப் பேராயம் அதன் விவாதங்களில் அனைத்து வெற்றிகளையும் பெற நான் வாழ்த்துகிறேன்!

         ஆர்எஸ்எஸ் / பாஜக அரசை வெளியேற்றுவோம்!

       


         இடதுசாரி ஒற்றுமையை உறுதிப்படுத்தி வலிமை பெறச் செய்வோம்!

  கொள்கை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான போராட்டங்களில் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையைக் கட்டுவோம்!

   இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிராக மதசார்பற்ற சக்திகளின் விரிவான மக்களைத் திரட்டுவோம்!

        மார்க்சியம் – லெனினிசம் நீடு வாழ்க!

--நன்றி : நியூஏஜ் (அக்.23 –நவ.5)

--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

           

No comments:

Post a Comment