Monday 5 December 2022

அயோத்தியா தந்திர உத்தி -- டிசம்பர் 6 -- நியூஏஜ் தலையங்கம்

 

நியூஏஜ் தலையங்கம் (டிச.4 –10)

அயோத்தியா தந்திர உத்தி

          

டிசம்பர் 6 மீண்டும் நம் வாயிலில் வந்து நிற்கிறது. காயத்தின் இரத்தக் கசிவில் இன்னும் எரிச்சல். பாபர் மசூதி இடிப்பு, தேசத்தின் பன்மைத்துவக் கூட்டுக் கலாச்சாரத்தை அழிப்பதை நோக்கிய பெரும் நடவடிக்கை. அது இந்துத்துவா சக்திகளின் தந்திர உத்தியின் பகுதியும் ஆகும், அதைச் செய்து முடிப்பதற்காகக் காத்திருக்கிறது. தாங்கள் விரும்பும் ஏதேச்சிகார ஆட்சியின் பாதையிலிருந்து தடைகளை அகற்ற, தேசத் தந்தை பாபுஜியை அவர்களால் படுகொலை செய்ய முடிந்தது; 16ம் நூற்றாண்டின் பாரம்பரிய கட்டடம் பாபர் மசூதியைச் சட்ட விரோதமாக 1992 டிசம்பர் 6ம் நாள் கெக்கலிப்புடன் அழிக்கவும் செய்தனர்.

    ஆனால் பாபுஜி முன் வைத்த சவாலை ஒருபோதும் அவர்களால் வெல்ல முடியவில்லை என்பதை நன்கு உணர்ந்தனர், காரணம் இந்து ராஷ்டிரா செயல்திட்டத்திற்குத் தனது வாழ்நாளில் பாபுஜி மிகப் பரந்த முறையில் எதிர்வினையாற்றி, இந்து ராஷ்டிராவை ஆதரித்த ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபாவை இந்திய அரசியலின் விளிப்பிற்கு ஓரம் கட்டினார். தனது பேராண்மை தார்மிக வலிமை மற்றும் பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சபட்ச தலைவராகத் தனது அனைத்து முயற்சிகளுடனும் மகாத்மா காந்தியடிகள் ஒருவர் மட்டுமே அதைச் சாதித்தார். (அதன் விளைவாய்) விடுதலைக்குப் பின் குறுகிய காலத்தில் மதசார்பற்ற ஜனநாயக நாடு குறித்த தொலைநோக்குப் பார்வையின் தர்க்க நியாயத்தை ஏற்று மக்கள் வரவேற்றது கேள்விக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது; அன்றைய நாளின் குழப்பங்களுக்கு மேலாய் எழுந்தது, விடுதலை பெற்ற இந்தியாவை ஒன்றுபடுத்தும் கோட்பாடானது. சுதந்திர இந்தியாவின் இந்த மதசார்பற்ற செயல்திட்டத்தைக் காந்திஜியைப் படுகொலை செய்ததன் மூலம் தடம் புரளச் செய்ய முயற்சிக்கப்பட்டது.

    காந்தியிடமிருந்து மரபுரிமையாய் பெற்ற மதசார்பற்ற, ஜனநாயக உணர்வுநிலையின் அடையாளமாகப் பாபர் மசூதி அமைதியாய் காட்சி அளித்தது. அதை இடித்து நிர்மூலப்படுத்தியதன் மூலம் அவர்கள் வகுப்புவாத, பாசிசத் தந்திர உத்தியைப் புதுப்பிக்க முயற்சிக்கிறார்கள்; முன்பு மகாத்மா காந்தியின் படுகொலையின் விளைவாய் பொங்கி எழுந்த மக்களின் சீற்றம் அவர்களது அத்தந்திர உத்தியை வீசி எறிந்திருந்தது. முப்பது ஆண்டுகளுக்கு முன் பாபர் மசூதி இடிப்புத் தேசத்தின் ஆன்மாவை உலுக்கி, அயோத்தியா தந்திர உத்தியை மேலும் பின்னுக்குத் தள்ளிவிட்டது; அந்த உத்தி, காந்திஜி படுகொலை செய்யப்பட்ட சுமார் இரண்டு ஆண்டுகளுக்குள், 1949 டிசம்பர் 22 நள்ளிரவில் தொடங்கப்பட்டது.

    அந்நள்ளிரவில், பெரிதும் அறியப்படாத அபிராம் தாஸ் என்ற சாமியார் சீடர்களுடன் பாபர் மசூதிக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து ராம் லல்லா என்ற குழந்தை ராமர் சிலையை நிறுவினார். அச்செயல் ஏற்படுத்திய அதிர்வலைகளை, மகாத்மா காந்தி நிறுவிய ஹரிஜன்

 பத்திரிக்கை ஆசிரியர் கேஜி மஷ்ரூவாலாவுக்கு 1950 மார்ச் 5ல் பிரதமர் ஜவகர்லால் நேரு எழுதிய கடிதத்தில் காணலாம்: “நீங்கள் அந்த அயோத்தியா மசூதியைக் குறிப்பிடுகிறீர்கள். அந்நிகழ்வு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன் நடந்தது, அது குறித்து நான் ஆழமாகக் கலக்கம் அடைந்திருக்கிறேன்.” சிறுபான்மையினரை நசுக்கி, கூட்டுக் கலாச்சார உணர்வை அழிக்கும் பெரும்பான்மை- யினப் போர்வையில் எதிர்வரும் அந்த ஆபத்தைப் பண்டித நேரு முன்கணித்துக் கண்டார். அவர்களின் முக்கிய எதிரி மதச்சார்பின்மை. அவர்கள் வழிகாட்டும் விளக்காகக் கொண்ட வெறித்தனமான வகுப்புவாதப்படுத்தலுடன் அக்கோயில் நகரில் அவர்கள் அடைந்த வெற்றிகளை ஒன்று திரட்ட முயன்றனர். ஆனால் வெற்றியோ அவர்களுக்கு எப்போதும் கைநழுவிப் போவதாகவே உள்ளது.

   மசூதிக்குள் இராமர் சிலையால் ஏற்படுத்தப்பட்ட குழப்பம் சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. புனிதத் தன்மையை கெடுப்பதாயினும், அச்சிலைக்கு வழிபாட்டுச் சடங்குகள் நடத்த நீதிமன்றத்தால் அனுமதி கொடுக்கப்பட்டது.

    ஆர்எஸ்எஸ் அமைப்பு அதற்குப் புத்துயிர் அளித்தபோது, 35 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பிரச்சனை அரசியல் ரீதியாகச் செயலற்று உறங்கிக் கிடந்தது. தேசிய கவனம் பெற்றதும் இரண்டு வகுப்புக்களுக்கிடையே மதரீதியான பதற்றத்திற்கான விரைவான மைய அம்சமாக மாறியது. அயோத்தியா தந்திர உத்தியை மேலும் திறனுடையதாக விசிறிவிட, ஆர்எஸ்எஸ் அரசியல் பரப்பை வகுப்புவாதப்படுத்தும் விரிவான சதித் திட்டத்தை வகுத்தது.

     தனது தேர்தல் அரசியல் அமைப்பான பாஜக மற்றும் சாதுக்களைத் திரட்டும் பொறுப்பளிக்கப்பட்ட அதன் கூட்டாளியான விஸ்வ இந்து பரிக்ஷித் (விஹெச்பி) இவற்றை முன்னணியில் நிறுத்தி, ஆர்எஸ்எஸ் இந்து மக்கள் மற்றும் இந்து மதக் குழுக்களிடையே ஆதரவை வெல்ல முயன்றது; தொடர்ச்சியான பெருந்திரள் வழிபாட்டுச் சடங்கு நிகழ்ச்சிகள் மற்றும் மத அடையாளச் சின்னங்களைப் பயன்படுத்தியும் இந்து மதத் தலைவர்களின் தனி மாநாடுகள் மூலமாகவும் பிரச்சாரம் செய்தது.

அத்தருணத்தில் பாஜகவின் தலைவரான எல் கே அத்வானி, ஒரு டயோடா வாகனத்தைத் தேர்போல மாற்றி, தங்கள் நோக்கத்திற்காக நாடு  முழுவதும் இந்துகளைத்  திரட்ட, ரத யாத்திரை தொடங்கினார். அவரது ரதயாத்திரை பயணம் குஜராத் சோமநாத்தில் 1990 செப்டம்பர் 25ல் தொடங்கியது –சோமநாத் நகர் கோவில்களில் ஒன்றுதான் 11ம் நூற்றாண்டில் மத்திய ஆசிய முஸ்லீம் ஆக்கிரமிப்பாளரான கஜினி முகமதால் அழிக்கப்பட்டது.

    அத்வானியின் ரதயாத்திரை அயோத்தியா அடைவதற்கு முன், குஜராத், மகாராஷ்டிரா, கர்னாடகா, ஆந்திரா, மபி, இராஜஸ்தான், அரியானா, பீகார் மற்றும் உபி மாநிலங்களின் நூற்றுக்கணக்கான கிராமங்கள், பல்வேறு நகரங்கிள் வழியே செல்லத் திட்டமிடப்பட்டது. உபியை அடைவதற்கு முன் அத்வானி கைது செய்யப்பட்டாலும், அவரது யாத்திரை இந்து தீவிர உணர்வை முன்னுக்குக் கொண்டு வந்தது; ரதயாத்திரை வழியெல்லாம் இரத்தம் வழிந்தோடியது, வகுப்புவாத மோதல் கலவரங்களைத் தூண்டியது –நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை முக்கிய அரசியல் சக்தியாக மாற்றியது.

          அதன் பிறகு ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கூட்டாளி அமைப்புகள் தொடர்ச்சியான நிகழ்வுகளை அரங்கேற்றியது, இறுதியில் 16ம் நூற்றாண்டின் பாரம்பரிய பாபர் மசூதி 1992 டிசம்பர் 6ல் மண்ணோடு மண்ணாக இடித்துத் தள்ளப்பட்டது.

          மசூதி இடிப்பு ஒரு கொடுமையான அதிர்ச்சி. அது, தேசத்தின் உள்ளுணர்வை உலுக்கி, எப்படி வகுப்புவாதப் பாசிச சக்திகள் இந்திய தேசத்தை மதச்சார்பற்ற

ஜனநாயகப் பாதையிலிருந்து தடம் மாறி விலகச் செய்ய மேற்கொண்ட மற்றுமொரு முயற்சி என்பதை அம்பலப்படுத்தியது. 1948ல் காந்திஜியைப் படுகொலைச் செய்ததன் மூலம் அவர்கள் வெற்றிபெறலாம் என எண்ணினார்கள். ஆனால் நாடு அவர்கள் விரும்பிய திசைவழி செல்ல மறுத்து, தேசத் தந்தை மகாத்மா காந்தியிடமிருந்து பெற்ற மரபுரிமையான மதசார்பற்ற மற்றும் ஜனநாயகத்தைத் தேர்ந்தெடுத்து இன்னும் உறுதியாகப் பற்றி நின்றது.

          பாபர் மசூதியை இடிப்பதன் மூலம் தேசத்தின் அடையாளத்தை உடைத்துச் சிதறடிக்கச் செய்யவும், நாட்டைக் குழப்பத்தில் தள்ளவும் செய்யப்படும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி அடையப் போவதில்லை. தேசத்திற்கு ரெடி மேடாகவும் முன்தயாரிப்பு வார்ப்பாகவும் அவர்கள் வழங்கும் இந்து பெரும்பான்மையின அடையாளம் என்பதை எதிர்த்துத்தான் இந்தியா கடந்த காலத்தில் போராடியது; அதற்காகத்தான் காந்திஜியும் தளர்வின்றிப் போராடியது மட்டுமின்றி, தன் உயிரையும் தந்தார். அத்தகைய கோட்பாட்டிற்கு எதிரான அவர்களின் அயோத்தியா தந்திர உத்தி முயற்சி எதுவும் பெற்றிபெறப் போவதில்லை, ஒட்டுமொத்தமாகக் கூண்டோடு நிராகரிக்கப்படுவது உறுதி!

 மதச்சார்பின்மை போற்றுவோம்! 

ஜனநாயகம் பாதுகாப்போம்! 

பாரத தேசத்தைப் பாதுகாப்போம்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்   

                        

No comments:

Post a Comment