Friday 18 November 2022

நியூஏஜ் தலையங்கம் -- நேருவுடன் இருப்பதா, கைவிடுவதா!

நியூஏஜ் தலையங்கம் (நவ.20 –26)


காங்கிரஸ் முன் எழுந்து நிற்கும் கேள்வி  --

நேருவுடன் இருப்பதா, கைவிடுவதா!

  தத்துவக் கோட்பாட்டின் அடித்தளத்தின் மீதே அரசியல் சிந்தனைகளும் செயல்களும் வடிவம் கொள்கின்றன. அதுவே ஒவ்வொரு சமூக –அரசியல் போர்க் களத்தின் மையத்திலும் இறுதி முடிவெடுக்கும் காரணியாகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் சில குறிப்பிட்ட தத்துவக் கொள்கை போக்குகளை, அதனதன் வர்க்க குணத்திற்கேற்ப பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. 

    காங்கிரஸ் வரலாற்றில் அதன் அரசியல் செயல் திசைவழிக்கான தத்துவக் கோட்பாடு புரிதலுக்குப் பாதை அமைக்கக் கடுமையாகப் போராடியவர் நேரு. அவர், பரந்த முறையில், சோஷலிசத்தின்பால் அக்கறையுள்ள ஜனநாயம் மற்றும் மதச்சார்பின்மை கோட்பாடுகளின் செல்வாக்கிற்கு ஆட்பட்டார். நேருவின் சோஷலிசம் குறித்த புரிதல் விஞ்ஞானபூர்வமானது அல்ல எனப் பலர் விமர்சனம் செய்தனர். தனக்கே உரிய முறையில் சோவியத் யூனியனுடன் நட்புறவைப் பேணிய நேரு, இடதுசாரிகளின் கோட்பாடுகளுடன் ஒரு வகையான நட்பு மற்றும் பகை உறவை மேற்கொள்ள முயன்றார். இதன் காரணமாகச் சொந்த கட்சிக்குள்ளே நண்பர்களையும் எதிரிகளையும் தேடிக் கொண்டார். இந்திய தேசத்தில் விடுதலைக்கு முன்பும், பின்புமான காங்கிரஸ் வரலாறு இவ்வுண்மைக்குச் சான்று பகர்கிறது.

       உலகமயமாக்கல் சகாப்தத்தில், சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, உலகின் தத்துவக் கோட்பாட்டுச் சூழல் தீவிரமான மாற்றங்களைக் கண்டது. அப்புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் செல்வாக்கில் ஆட்பட தூக்கி வீசப்பட்ட பல கட்சிகளில், காங்கிரஸ் கட்சியும் விலக்கில்லை. காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் தங்களை நேரு மற்றும் காந்தியிடம் இருந்தும்கூட தொலைவில் நிறுத்திக் கொண்டனர். இதன் விளைவு, இயல்பாகக் காங்கிரஸ் இடம் பிடிந்திருந்த மதச்சார்பின்மை ஜனநாயக வெளியின் வலிமை குறைந்தது.

     எதிர்பார்த்தது போலவே, காங்கிரசின் மரபார்ந்த ஆதரவு அடித்தளம் அரிக்கப்பட்டது. சமூகத்தின் பின்தங்கிய பிரிவு காங்கிரசிடம் தங்கள் நம்பிக்கையை இழந்தது, மதசார்பற்ற சக்திகள் காங்கிரசின் தகுதிப்பாடு சான்றுகள் குறித்துச் சந்தேகம் கொள்ளத் தொடங்கின. இந்த நிகழ்முறைதான் கடந்த முப்பது ஆண்டுகளின் போக்கில் வடிவெடுத்தது. கட்சியின் பேரழிவுத் துயருக்குத் தலைமை தாங்கிய காங்கிரஸ் தலைமை, கட்சி சந்தித்த நெருக்கடியின் மீது எந்த ஆழமான உள்முக ஆய்வையும் மேற்கொள்ள ஒருபோதும் முயன்றதே இல்லை.

      தற்போதைய அரசியல் நிலைமைகளில், ஆர்எஸ்எஸ் – பாஜகவின் பாசிசக் கொள்கை செயல்பாடுகள் நாட்டின் மதசார்பற்ற ஜனநாயக உணர்வுநிலையை மூழ்கடிக்கும்போது, காங்கிரஸ் தனது சொந்த காந்தி –நேரு மரபையும் அதன் வரலாற்றையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும் என இடதுசாரிகள் விழைகின்றனர். உலகமயமாக்கல் காலத்தின்போது காங்கிரஸ் எடுத்த பொருளாதார மற்றும் அரசியல் நிலைபாடுகள் குறித்து அக்கட்சி சுயவிமர்சனமாகப் பரிசீலிக்க வேண்டுமென நாம் காங்கிரஸ் கட்சியை வற்புறுத்துகிறோம். அதுதான் காங்கிரஸ் மீது இடதுசாரி விமர்சனத்தின் தீவிர மையமாக இன்னும் உள்ளது.

கட்சிக்குப் புத்துயிர் ஊட்டும் ஒரு முயற்சியாகக் கருதப்படும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ –செப்டம்பர் 7 கன்யாகுமரியில் தொடங்கி 150 நாட்களில் காஷ்மீர் வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள) இயக்கத்தின்போது கூட, காந்தி–நேரு மரபு குறித்த இந்த அம்சம் போதுமான முக்கியத்துவத்துடன் ஆழமாக எடுத்துக் கொண்டு பேசப்படவும் இல்லை, உரைகளிலும் பிரச்சாரம் செய்யப்படவும் இல்லை. காங்கிரஸ் கட்சி, இடதுசாரி தத்துவக் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் அல்லது அதன் அரசியல் கண்ணோட்டங்களில் இடதுசாரியாக வேண்டுமென அக்கட்சியை இடதுசாரிகள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

நேருவுக்கு எதிராகக் கடும் அவதூறு தாக்குதல்களைக் கட்டவிழ்ப்பதில் பிற்போக்கு சக்திகள் குறியாக இருப்பது ஏன்? அதற்கான காரணம் என்ன என்பதைப் புரிந்து கொள்வதில் காங்கிரசில் உள்ள பலரும் முழுமையாகத் தோல்வி அடைகின்றனர். ஆர்எஸ்எஸ் புதிதாகக் கண்டுபிடித்துள்ள சர்தார் பட்டேலை நோக்கிய காதல், நேருவின்பால் அவர்களது கசப்பான

வெறுப்பிலிருந்து முளைவிட்டதாகும். கட்சியின் காந்தி –நேரு கொள்கை அடித்தளத்தை இலக்காக நோக்கிய தத்துவார்த்த ஆயுதத் தாக்குதலின்பால் காங்கிரஸ் தலைமை, வியப்பூட்டும் வகையில் பரிதாபகரமாக அலட்சியமாக உள்ளது. தற்போது இந்த அலட்சியம், புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. பின்பு பொறுப்பான காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆர்எஸ்எஸ் நோக்கிய தங்களின் பாசத்தை நினைவூட்டிக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். வேறு யாரும் இல்லை, மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் கேரளா பிரதேஷ் காங்கிரஸ் குழு தலைவரே, ஆர்எஸ்எஸ்-க்கு ஆதரவான இந்தக் குரலை எழுப்புவதில் முன்னே நிற்கிறார். இத்துடன் திருப்தி அடையாத அவர், மேலும் வகுப்புவாதப் பாசிசத்தின் கூட்டாளி நேரு எனவும் சித்திரம் தீட்டும் அளவு சென்று விட்டார்.

இந்த மிகக் கடுமையான பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியின் அனைத்திந்தியத் தலைமை, அதன் சொந்தக் காரணங்களுக்காக மௌனமாக இருக்கிறது. தத்துவார்த்த கோட்பாட்டில் இவ்வகைப்பட்ட (நடுவுநிலை) சார்பற்ற தன்மையுடன், காங்கிரஸ் கட்சி அவர்கள் அகப்பட்டுள்ள ஆழமான நெருக்கடியிலிருந்து வெளியே வர இயலாது. காங்கிரஸ் உறுதியான முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. தத்துவார்த்தக் கோட்பாடு மற்றும் அரசியல் தெளிவிற்கான அவர்களின் தேடுதலில் ஜவகர்லால் நேருவே அடிப்படையான அம்சமாக இருப்பார் என்பதில் அவர்களுக்கு எந்த ஐயமும் இருக்கத் தேவையில்லை.

     நேருவுடன் இருப்பதா, இல்லை நேருவைக் கைவிடுவதா? என்பதே அவர்கள் முன் நிற்கும் கேள்வி!

--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment