Tuesday 15 November 2022

சூழலியல் கட்டுரை 2 --பருவநிலை மாற்றத்தின் பாதிப்பைச் சுமப்பது வளரும்நாடுகளே

 

                         

                            பருவநிலை மாற்றத்தின் பாதிப்பைச் சுமப்பது வளரும்நாடுகளே

--டாக்டர் சோம மார்லா

          தற்போது நடைபெற்று வரும் ஐநா பருவநிலை உச்சி மாநாட்டில் பார்படாஸ் நாட்டின் பிரதமர் மியா மோட்லி, ‘பணக்கார நாடுகளின் சரித்திர ரீதியான கடந்த காலக் குற்றச் செயல்களே தற்போதைய பருவநிலை நெருக்கடிக்குக் காரணம்’ என்பதால்

அந்நாடுகளைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்; மேலும், வருவாய் குறைந்த நாடுகள் இயற்கைப் பேரழிவைச் சரிசெய்ய ஒரு டிரிலியன் (அதாவது, ஒரு லட்சம் கோடி) அமெரிக்க டாலர் நிவாரணம் வழங்கவும் கோரினார். ஒரு சிறிய கரிபியன் நாடான பார்படாஸின் பெண் பிரதமர், வளரும் தென்பகுதி நாடுகளின் நலன்களை ஆதரித்து உலக மேடைகளில் துணிச்சலாகப் பேசுவதற்குப் பெயர் போனவர்.

          அவரது கோரிக்கை நியாயமானது. கடந்த கால நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகள் தென்பகுதி நாடுகளைக் காலனியாக அடிமைப்படுத்தி அதன் செல்வாதாரங்கள், உழைப்பு சக்தியைக் கொள்ளையடித்து அவற்றைத் தொழில் புரட்சியில் பயன்படுத்தின. அன்று வளரும் நாடுகளின் செலவில் அவை செல்வத்தைப் பெருக்கின, கூடவே அதிக அளவு கார்பன் (மாசு) வாயுவை வெளியே உமிழ்ந்தலையும் சாதித்தன. இன்றோ –கீழே தள்ளிய குதிரை குழியும் பறித்ததுபோல – (அவர்களால் ஏற்படுத்தப்பட்ட) பருவநிலை பேரழிவுகளில் பாதிக்கப்பட்ட தென்பகுதி நாடுகளே மீண்டும் பெருந்தொகையைச் செலுத்த வேண்டும் என நிர்பந்திக்கப்- படுகின்றன.

சமீபத்தில் பாக்கிஸ்தான், இமயமலைப் பனிப்பாறைகள் உருகியதால் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கைச் சந்தித்தது. கலிஃபோர்னியா மற்றும் ஐரோப்பா அதிகபட்ச வெப்பநிலை, ஆப்பிரிக்கா வறட்சி, பெங்களூரு, கேரளா மற்றும் சமீபத்தில் சென்னையை வெள்ளக் காடாக்கிய பருவம் தப்பிய மிகக் கூடுதல் மழைப் பொழிவு இவற்றிற்கெல்லாம் பசுமை இல்ல வாயுகள் மற்றும் புவி வெப்பமயம் அதிகரித்ததே பொறுப்பு. தொழில் புரட்சியிலிருந்து உலகில் அதிகரிக்கும் பசுமை இல்ல வாயுக்களால் விளையும் இயற்கை பேரிடர்களின் சுமைக்கான செலவையும் செய்ய நிர்பந்திக்கப்படும் வளரும் உலக நாடுகள், ஒரு வகையில், உயிர் உடமைகளுக்கு இரட்டை ஆபத்தைச் சந்திக்கின்றன, இது மிகவும் அநியாயமானது.

     கொடூரமான பருவநிலை பேரழிவான இந்த ஆண்டின் கோடை மற்றும் இலையுதிர் காலம் மற்றும் பணக்கார மேலைநாடுகள் திணித்த பாதிப்புக்களுக்குக் காரணம் அவர்கள் கடந்த காலத்திலும் தற்போதும் உமிழும் கூடுதல் கார்பன் அல்லவா – பிறகு, அதற்கான பகுதியளவு தார்மிக பொறுப்பை ஏற்பதுதானே முறை. எனவேதான் சுமார் 100 நாடுகள் பங்கேற்புடன் தற்போது நடைபெற்று வரும் COP27 பருவநிலை உச்சி மாநாட்டில் பருவநிலை பாதிப்புக்கான நிவாரண நிதியம் என்பது மாநாட்டில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. (நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற) புதைபடிவ எரிபொருள்களிலிருந்து பசுமை எரிசக்தி நோக்கிய மாற்றமான அடிப்படை கட்டமைப்பில் பெரும்பகுதி வளர்ச்சி (பிரேசில், இந்தியா, இந்தோனேஷியா, சீனா போன்ற) வளர்ந்துவரும் உலகத் தென்பகுதியில்  நடைபெறுகிறது.

     குறைந்த அளவு கார்பன் வெளியிடும் பொருளாதார வளர்ச்சிக்கு நிதியளிப்பது, மாற்றத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு மாறுவதற்கு ஆண்டிற்குச் சுமார் ஒரு டிரிலியன் அமெரிக்க டாலர் தேவை. மேலும் அந்த நிதி, பேரழிவால் பாதிக்கப்பட்ட தேசங்கள் தங்கள் நாட்டின் மேற்பரப்பில் மிகையாகப் பொழியும் புயல் நீர் (ஸ்டார்ம் வாட்டர்) ஓடிச் சென்று இயற்கை நீர் சுழற்சியை மேம்படுத்தும் வடிகால் மறுகட்டுமானங்களைக் கட்ட,

ஏரிகளைப் புனரமைக்க, உள்வரும் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்பும் அலையாத்திக் காடுகள் (படம் பிச்சாவரம், சிதம்பரம்என்னும் சதுப்புநிலக் காடுகளில் கண்டல் தாவரங்களை வளர்க்க, கடல் அரிப்பைத் தடுக்கும் தடுப்புச் சுவர்களைக் கட்ட, சுனாமி, புயல் போன்ற பேரழிவு முன்னெச்சரிக்கை வழங்கும் அறிவியல் முறைமைகளை ஏற்படுத்தவும் தேவைப்படுகிறது.

ஏழை நாடுகள், கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும் மிகத் தீவிர பருவநிலையுடன் இணங்கி வாழவும் 2009முதல் பாரீஸ் உடன்பாடு மற்றும் சென்ற கிளாஸ்கோ பருவநிலை மாநாடுகள் மூலம் ஆண்டிற்கு 100 பில்லியன் டாலர் (பத்தாயிரம் கோடி டாலர்) வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டன. [உலக வெப்பமயத்தைத் தொழிற்புரட்சி முன் நிலையுடன் ஒப்பிட்டு 2 அல்லது 1.5டிகிரி செல்சியஸ் அளவுக்குக் கட்டுப்படுத்த 196 நாடுகள் சட்டப்படி ஏற்றது பாரீஸ் பருவநிலை உடன்பாடு (COP21/டிச.2015); அதனை அமல்படுத்த நிதியளித்தல் மற்றும் வழிமுறைகளை இறுதி செய்தது கிளாஸ்கோ மாநாடு (COP26/நவ.2021 ஸ்காட்லாந்து)]

பத்தாண்டுகளுக்கும் மேலாகச் செல்வாதார நாடுகள், ஐநா பருவநிலை மாநாடுகள் குறிப்பிடும் ‘இழப்பு மற்றும் சேதாரம்’ அல்லது உலக வெப்பமயமாதலின் பின்விளைவுகளைச் சமாளிக்க ஏழைநாடுகளுக்கு நிதி உதவி அளிப்பது பற்றிய விவாதங்களை நிராகரித்து வந்தன. சமீப காலம்வரை மேற்கத்திய நாடுகள் வரலாற்று ரீதியாகப் பசுமை இல்ல வாயுகள் வெளியீட்டிலும் தற்போதைய உலக வெப்பமயமாக்கலிலும் அவர்களின் பொறுப்பை மறுத்து வந்தனர். இறுதியாக அவர்கள் தார்மிகப் பொறுப்பை ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. எகிப்தில் நடைபெறும் மாநாட்டில் ‘இழப்பு மற்றும் சேதாரம்’ பிரச்சனையைத் தீர்ப்பதற்கான கவனக் குவிப்பு நிகழ்காலப் பருவநிலை நெருக்கடியைக் குறைக்கவும் அதனை அனுசரித்து ஈடுகொடுக்கவும் உதவும். எதார்த்த உலகில் பருவநிலை நீதிக்கான நிதியம் தேவையுள்ள தென்னுலக நாடுகளைச் சென்றடையவில்லை.

பேரழிவு ஆபத்து அறிவு, உற்று நோக்கல் மற்றும் முன்கணித்தல், தயார்நிலைமற்றும் எதிர்வினை மற்றும் தகுந்த நேரத்தில் முன்எச்சரிக்கை தகவல் தொடர்பை உலகம் முழுவதும் அளிப்பதை டிரிலியன்கள் கணக்கில் அமெரிக்க டாலர் முதலீடுகள் செய்ய முடியும். ‘உலக வானிலையியல் அசோஸியேஷன்’ மற்றும் அதன் தொழிற்நுட்பப் பங்குதாரர்கள் தயாரித்து அளித்த திட்டத்திற்கு இந்தியா உட்பட 50 நாடுகள் ஆதரவளிகின்றன.

 வளங்குன்றா நிலைத்த வளர்ச்சி’ எனும் பசுமை பொருளாதாரத்திற்கான ஐநா சுற்றுச்சூழல் செயல்திட்டம் (UNEP) மீது ரியோ+20 உச்சி மாநாடு, அரசுகள் கொள்கைகளை மறுவடிவாக்கவும் முதலீடுகளை மேற்கொள்ளவும் பின்வரும் பிரிவுகளில் அவற்றிற்கு உதவிட முன்வந்துள்ளது: தூய்மையான தொழில் நுட்பங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள், தண்ணீர் சேவைகள், (பேட்டரி வாகனங்கள் போன்ற) பசுமைப் போக்குவரத்து, கழிவு மேலாண்மை, பசுமை கட்டிடங்கள், நிலைத்த வேளாண்மை மற்றும் காடுகள் முதலிய பிரிவுகள்.

முன்தடுப்பு எச்சரிக்கை முறைமைகள்

தற்போது பாதிக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இத்தகைய வசதிகள் பற்றாக்குறை நிலவுவதால், காத்திருக்கும் பேரழிவுகளிலிருந்து தங்கள் உயிர் உடமைகளைப் பாதுகாக்க முன்கூட்டிய எச்சரிக்கை இன்றி பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கைவிடப்பட்டுள்ளனர். வளரும் நாடுகள் ஆண்டிற்கு 3முதல் 16 பில்லியன் டாலர் இழப்புக்களைத் தவிர்க்க அத்தகைய முன்தடுப்பு நடவடிக்கை முறைமைகளை ஏற்படுத்த வெறும் 80கோடி அமெரிக்க டாலர்களை செலவிட்டால் போதுமானது என தகவமைத்து வாழ்தல் மீதான உலக கமிஷன் கண்டறிந்தது.

பசுமை முதலாளித்துவம்

உலகைச் சுற்றி புதிய தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்தும் அரசுகள், சமூகத்தின் சொத்தான காடுகள், சுரங்கங்கள், ஆறுகள் நதிகள் மலைகள் என இன்ன பிற உள்ளிட்ட பொதுத்துறை பிரிவு நிறுவனங்களை மனம்போன போக்கில் தீவிரமாக மாற்றி வருகின்றன. லாபப் பேராசை பிடித்த முதலாளித்துவம் இயற்கை குறித்த அக்கறை ஏதுமின்றி காடுகளை வெட்டிச் சாய்கின்றன, நதிகள், மண்

மற்றும் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன. ஐரோப்பாவில் வனங்களின் பரப்பு ஒற்றை இலக்கத்தில் சுருங்கியது, பெரும்பான்மை நதிகள் மீன் பிடிக்கக்கூட பயன்படாத அளவு மாசுபடுத்தப்பட்டன. அத்துடன் ஆறுகள், காடுகளுக்கு அவர்கள் விலைப் பட்டியல் அறிவிப்பை மாட்டிவிட்டுள்ளனர். இன்று நிலக்கரி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிபொருளை மாற்றியமைத்து கூடுதலான பிரிவுகள் பசுமையாக மாறின. மலர்ந்து வரும் பசுமை முதலாளித்துவத்திலும் அவர்களின் லாபமே கோலோச்சுகிறது. சூரிய சக்தி மின் தயாரிப்பில் அதானியின் கிரீன்ஸ் பெரும்பான்மை பங்கைக் கைப்பற்றியுள்ளது; எலெக்ரானிக் வாகனங்கள் எனும் இ-ஆட்டோமொபைல்ஸ் தயாரிப்பில் எலான் மஸக், டொயோடா, ஃபோர்டு, ஹூண்டாய் முதலியன முக்கிய நிறுவனங்களாக உள்ளன.

பருவநிலை நீதி நிதியத்திற்காக ஆண்டிற்குப் பத்தாயிரம் கோடி டாலர் வாக்குறுதி அளித்ததற்கு மாறாக, அதில் சிறிய பகுதியான 20ஆயிரம் கோடி மட்டுமே வளரும் நாடுகளை வந்தடைந்துள்ளது. இதில் முரண்நகை யாதெனில், அந்த நிதியும்கூட பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க ஒருபோதும் அளிக்கப் படவில்லை. மாறாக, வரையறுக்கப்பட்ட இந்தக் குறைந்த நிதியில் பெரும்பகுதி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் இ-ஆட்டோமொபைல்ஸ் உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்கு மாற்றித்தரப்பட்டன. கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான திட்டங்களில் ஒன்றாகக் கார்பன் வரவினம் (கார்பன் கிரிடிட்) என்ற வர்த்தக முன்மொழிவு அளிக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட இந்தக் கார்பன் வரவினத்தையும்கூட பசுமை பொருள் உற்பத்தி ஆலைகளின் மேலே குறிப்பிட்ட முக்கிய கம்பெனிகள் ஏகபோகப்படுத்தின. ஐஎம்ஃஎப் விடுவிக்கும் நிதியும்கூட மானியங்கள் அல்ல, அவை வளரும் நாடுகள், கடல் தடுப்புச் சுவர்களை மீண்டும் கட்டவும் இன்னபிற பேரழிவுக் குறைப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் அளிக்கப்படும் வட்டியுடன் கூடிய கடன் மட்டுமே.

வரலாற்றுக் காலம் நெடுக இப்பூமண்டலத்தை மாசுபடுத்தியவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். மேலும் இயற்கை பேரழிவுச் சீற்றங்களை எதிர்கொண்டு, சீர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதற்குத்தக வாழ்வைத் தகவமைத்துக் கொள்வும், பேரழிவை முன்கூட்டிக் கணித்துக் கூறும் அறிவியல் எச்சரிக்கை முறைமைகளை விரைவில் கட்டவும் தேவையுள்ள ஏழைநாடுகளுக்குப் பருவநிலை நிதியை வழங்கி பருவநிலை நீதி காக்கப்பட வேண்டும். 

                                                               

அதற்கு
எகிப்து பருவநிலை உச்சி மாநாடு வழி காண வேண்டும்!

நன்றி : நியூஏஜ் (நவ.13 –19)
--தமிழில்  : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

 

        

 

 

No comments:

Post a Comment