Thursday 1 September 2022

75வது சுதந்திர விழா சிறப்புக் கட்டுரை -- விடுதலை போரில் கம்யூனிஸ்ட்களின் ஒளி வீசும் வரலாறு

                                                         

       விடுதலைப் போராட்டத்தில்                 கம்யூனிஸ்ட்களின் ஒளிவீசும் பங்கு

--ஆர் எஸ் யாதவ்

நம் நாடு 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, விடுதலை இயக்கத்தில் ஒருபோதும் பங்கேற்காத வகுப்புவாத, பிற்போக்கு, பிளவுவாத, ஜனநாயக விரோத சக்திகள் ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது, நமது சமகால வரலாற்றின் ஒரு முரண்நகை. ஆர்எஸ்எஸ் தேச விடுதலை இயக்கத்திலிருந்து ஒதுங்கி இருந்தது மட்டுமின்றி, அதன் தலைவர் கோல்வால்கர் தனது ஆதரவாளர்களுக்கு இவ்வாறு ஆலோசனையும் கூறினார்: “இந்து மக்களே! பிரிட்டிஷாருடன் போரிட்டு உங்கள் சக்தியை விரயமாக்காதீர், நமது உட்பகைவர்களான முஸ்லீம்கள், கிருஸ்துவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்களை எதிர்த்துப் போரிட அந்தச் சக்தியைச் சேமியுங்கள்!”

            விடுதலைக்காக அர்ப்பணித்து முன்னணியில் இருந்த கட்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சி முனையிலே முகத்து நின்றது. கம்யூனிஸ்ட்கள் உண்மையிலேயே மிகவும் பெருமைப்படலாம், சுதந்திரத்திற்கு முன் கட்சியில் இணைந்த ஒவ்வொரு உறுப்பினரும் சுதந்திரப் போராட்ட வீரர்களாக இருந்தனர்; அவர்களில் நீண்ட கால சிறை தண்டனை பெற்றவர்கள், வாழ்நாள் முழுமையும் நாடு கடத்தப்பட்டவர்கள், அவ்வளவு ஏன் உயிர்த் தியாகம் செய்து தியாகிகள் ஆனவர்கள் இருந்தனர். 1943ல் முதலாவது கட்சிக் காங்கிரஸ் மாநாடு நடந்தபோது கட்சியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 15,563. அந்த எண்ணிக்கையில் 695 தோழர்கள் சிறையில் இருந்தனர், அவர்களில் 105 பேர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளில் 70 சதவீதத்தினர், ஒன்று அல்லது பல முறை சிறை தண்டனை அனுபவித்தவர்கள். ஒட்டுமொத்தமாக அவர்கள் அனைவரும் சேர்ந்து சிறையில் கழித்த காலத்தைக் கணக்கிட்டால் அது 411 ஆண்டுகளாகும். விடுதலைப் பவள விழாவின்போது கம்யூனிஸ்ட்கள் குறித்துப் பெருமிதம் மேலிடுகிறது.

            பிரிட்டிஷ் அடிமை நுகத்தடியிலிருந்து பூரண விடுதலை என்ற கோரிக்கையை விடுதலை இயக்கத்தின் மைய இடத்திற்குக் கொண்டு வந்த பெருமை கம்யூனிஸ்ட்களையே சாரும். இந்திய தேசிய காங்கிரஸ், ‘ஹோம் ரூல்’, ‘டொமினியன் அந்தஸ்து’, ’பொறுப்பான அரசு’ எனப் பலவாறாக ‘ஸ்வயராஜ்யம்’ குறித்துத் தெளிவின்றி பேசிக் கொண்டிருந்தபோது ‘பூரண சுதந்திரம்’ என்ற முழக்கத்தைக் கோரிக்கையாக எழுப்பியவர்கள் கம்யூனிஸ்ட்கள். பூரண விடுதலை என்பதன் பொருள்,  பிரிட்டிஷாரிடமிருந்து முழுமையாகப் பிரிவது என்பதை அவர்கள் முன் வைத்தார்கள்.

        குறிப்பிட வேண்டிய ஒரு நிகழ்வு, இந்திய தேசிய காங்கிரசின் (டிசம்பர் 1921)  அலாகாபாத் அமர்வின்போது புதிதாக அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி (1920 அக்டோபர் 7ம் நாள் தாஷ்கண்ட் நகரில் அமைக்கப்பட்டது), எம் என் ராய் மற்றும் அபானி முகர்ஜி பெயரில் அரசியல் பிரகடனத்தை (மெனிஃபெஸ்டோ) வெளியிட்டு ஆயிரக் கணக்கில் அதன் பிரதிகளை அம்மாநாட்டில் வினியோகித்தனர். அந்த அறிக்கையின் முக்கியமான கோரிக்கை, ‘இந்தியாவுக்கு முழு விடுதலை’ மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பின் அடிப்படை வேளாண்மை சீர்திருத்தங்களுடனும் தொழிலாளர் வர்க்கத்திற்குத் தொழிற்சங்க உரிமைகளுடன் கூடிய ஜனநாயகக் குடியரசாக அதனை மாற்றுவது.

       (பின்னர் 1926 டிசம்பர் 26ம் நாள் இந்திய மண்ணில் கான்பூர் நகரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு மாநாடு நடந்தபோது, அதன் வரவேற்புக்குழு தலைவராக இருந்த) ஹஸ்ரத் மொஹானி, அலகாபாத் காங்கிரஸ் அமர்வில் “ஸ்வராஜ்” என்பதைப் ‘‘பூரண விடுதலை மற்றும் அயல்நாட்டு அனைத்து கட்டுப்பாடுகளிலிருந்து விட்டு விடுதலையாவது” என வரையறுக்கும்படித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

பெஷாவர் சதி வழக்குகள்

   “பிரிட்டிஷ் இந்தியாவின் மீதுள்ள தனது இறையாண்மையை மாட்சிமை தங்கிய பேரரசரிடமிருந்து பறித்துவிட போர் தொடுக்கும் சூழ்ச்சியில்” ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி ஏற்கனவே 1921 டிசம்பரிலேயே கம்யூனிஸ்ட் குழுக்களை விசாரணைக்கு உட்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1921 அக்டோபர் 10ல் முதலாவது பெஷாவர் சதி என அறியப்படும் சதி வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னர் 1921 முதல் 1927க்குள், ஒன்றன் பின் ஒன்றாக, பெஷாவர் சதி வழக்குகள் என ஐந்து வழக்குகள் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக ஏவப்பட்டன.

            1920களின் முற்பகுதியில் கம்யூனிஸ்ட்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தனர். இருந்தபோதிலும் இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும் என்ற அவர்களின் எண்ணமே ஆட்சியாளர்களை அவர்களுக்கு எதிராகப் பல்வேறு சதி வழக்குகளைப் புனையத் தூண்டியது.

            1924ல் பெஷவார் சதி வழக்குகள் நடந்து கொண்டிருந்தபோது, அரசு போல்ஷ்விக் சதி வழக்கு என்றழைக்கப்பட்ட மற்றொரு வழக்கை –சௌகத் உஸ்மானி, முஸாஃபர் அகமது, எஸ் ஏ டாங்கே மற்றும் நளினி குப்தா என்ற -- நான்கு கம்யூனிஸ்ட்கள் மீது தொடுத்தனர்.

            கான்பூர் கம்யூனிஸ்ட் அமைப்பு மாநாட்டில் அதன் தலைவர் சிங்காரவேலர் கட்சியின் நோக்கங்கள் மற்றும் இலக்குகளை விளக்கினார்: “கம்யூனிஸ்ட்களின் இயக்கம், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் இயக்கமாகும்; கட்சியின் உடனடியான இலக்கு, சுயராஜ்யத்தை அல்லது அனைத்து நியாயமான வழிகளிலும் பூரண விடுதலையை நிறுவுவது” என்றார்.

      1928வாக்கில், தொழிலாளர் வர்க்க மையங்களில் கம்யூனிஸ்ட் கட்சி கணக்கில் கொள்ளப்பட வேண்டிய சக்தியாகத் தன்னை நிலைநிறுத்தியது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்குள்ளும் ஓர் இடதுசாரி பிரிவு மலரத் தொடங்கியது. கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் காங்கிரசில் இருந்த இடதுசாரிப் பிரிவினருடன் நெருக்கமாகப் பணியாற்றினர். அவர்கள் காங்கிரசின் மெட்ராஸ் அமர்வில் (1927) பூரண விடுதலை இலக்குக்கான தீர்மானத்தை நிறைவேற்ற வற்புறுத்தினர்.

            காங்கிரசின் மெட்ராஸ் அமர்வில் என்ன நிகழ்ந்தது என்பதைச் சுருக்கமாக நினைவது ஆர்வத்தைத் தூண்டுவதாகும். பம்பாயிலிருந்து வந்த ஒரு கம்யூனிஸ்ட் தலைவரான கே என் ஜோக்லேக்கர் ஒரு வரி தீர்மானத்தை முன்மொழிந்தார்: ‘‘இந்திய தேசிய காங்கிரசின் இலக்கு இந்தியாவுக்குப் பூரண சுதந்திரத்தை வென்று சாதிப்பதாக இருக்க வேண்டும்.” அவரும் மற்ற கம்யூனிஸ்ட்களும் -- இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க ஜவகர்லால் நேரு முன்னோக்கி நடந்து வந்தபோது -- ஆச்சரியத்தில் மகிழ்ந்தார்கள். பின்னர் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

   காங்கிரசின் 1928 டிசம்பர் கல்கத்தா ஆண்டு அமர்வில் கம்யூனிஸ்ட்கள் நினைவில் கொள்ளத்தக்க பங்கை ஆற்றினர். இம்மாநாட்டில் மகாத்மா காந்திஜி அறிமுகம் செய்த முக்கிய தீர்மானத்தின் மீது ஜவகர்லால் நேருவும் சுபாஷ் சந்திர போசும் ஒத்த மாதிரியான தன்மையில் திருத்தங்களை முன்மொழிந்தனர். அந்தத் திருத்தங்கள், முன்பு நடந்த மெட்ராஸ் காங்கிரஸ் அமர்வின் முடிவான காங்கிரசின் இலட்சியம் முழுமையான சுதந்திரம் என்ற பிரகடனத்தைக் கல்கத்தா காங்கிரஸ் பற்றி நிற்க வேண்டும் எனக் கோரியது. கம்யூனிஸ்ட்களும் ஏனைய இடதுசாரி சிந்தனையுள்ள தேசியவாதிகளும் இந்தத் திருத்தத்திற்கு வாக்களித்தனர், ஆனாலும் அது குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

       மறுநாள், கம்யூனிஸ்ட்கள் தலைமையில் 50ஆயிரம் தொழிலாளர்கள் பங்குபெற்ற மாபெரும் பேரணி, காங்கிரஸ் தலைவர் மோதிலால் நேருவின் அனுமதி பெற்று, காங்கிரஸ் மாநாட்டுப் பந்தலுக்குள் நுழைந்தது; பேரணியில் வந்தவர்கள் பூரண சுதந்திரத்தை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றினர்.

       1921 காங்கிரஸ் அலகாபாத் அமர்விலிருந்து நடந்த இந்திய தேசிய காங்கிரசின் ஒவ்வொரு ஆண்டு மாநாட்டிலும் கம்யூனிஸ்ட்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பலன் அளித்தது என்பதை நாம் உய்த்துணர முடியும்; மேலும் முக்கியமாகக் கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தொழிலாளர் வர்க்கம் கல்கத்தா காங்கிரஸ் அமர்வின்போது (1928) ஏற்படத்திய தாக்கம், காங்கிரஸ் தலைவர்களிடம் ஒரு நேர்மறை விளைவை ஏற்படுத்தியது; அடுத்த ஆண்டு அமர்வு 1929 டிசம்பர் 31ல் லாகூரில் நடந்தபோது பூரண விடுதலைக்கான தீர்மானம் இந்திய தேசிய காங்கிரசால் நிறைவேற்றப்பட்டது.

            விடுதலை இயக்கத்தில் கம்யூனிஸ்ட்கள் வகித்த பங்கைப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கடுமையாகக் கருதினர். முக்கியமாக, தொழிலாளர் வர்க்கம் கம்யூனிஸ்ட்களால் ஒன்று திரட்டப்படுவது குறித்து அவர்கள் கவலை கொண்டனர். கம்யூனிஸ்ட்களின் தலைமையிலும் வழிகாட்டலிலும் நாடெங்கும் பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் தங்கள் பொருளாதாரக் கோரிக்கைகளை எழுப்பி அதற்காகப் போராடியதுடன் மட்டும் நிற்காமல், தொழிலாளர்கள் அரசியல் கோரிக்கைகளை எழுப்பியதுடன் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள்.

மீரட் சதி வழக்கும் விளைவும்

[புகைப்படத்தில் இடம் பெற்றிருப்போர்

Portrait taken outside the jail in Meerut of twenty-five of those who were imprisoned as part of the Meerut Conspiracy Case. 

Back row (left to right): KN Sehgal, SS Josh, HL Hutchinson, Shaukat Usmani, BF Bradley, A Prasad, P Spratt, G Adhikari. 

Middle Row: RR Mitra, Gopen Chakravarti, Kishori Lal Ghosh, LR Kadam, DR Thengdi, Goura Shanker, S Bannerjee, KN Joglekar, PC Joshi, Muzaffar Ahmad. 

Front row: MG Desai, D Goswami, RS Nimbkar, SS Mirajkar, SA Dange, SV Ghate, Gopal Basak]

       1929 மார்ச் 20ல் அரசு பெரும்பான்மையான கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் வர்க்கத் தலைவர்களை மீரட் சதி வழக்கில் கைது செய்தது. இந்தியா முழுவதும் 31 தலைவர்களும் பின்னர் மேலும் ஒருவருமாகக் கைது செய்யப்பட்டனர். வழக்கு தேசிய மற்றும் சர்வ தேசிய அளவில் பிரம்மாண்டமான விளம்பரம் பெற்று பிரபலமானது. மீரட் வழக்கு கைதிகளுக்கு ஆதரவு பக்கபலமாகக் காங்கிரசும்கூட தீவிரமாக வந்தது. காந்திஜி, டாக்டர் அன்சாரி மற்றும் பலர் அவர்களில் முக்கியமானவர்கள்.

            உருவாகி வந்த கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் தலைவர்களைக் கைது செய்ததன் மூலம் தேசிய இயக்கத்திலிருந்து கம்யூனிஸ்ட்களைத் தனிமைப்படுத்துவதில் ஆட்சியாளர்கள் வெற்றி பெற முடியவில்லை; இது மீரட் கைதிகளுக்குக் காங்கிரஸ் அளித்த ஆதரவிலிருந்து மிகத் தெளிவாகிறது. எனினும், கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்களின் இயக்கத்தைப் பெருமளவு தலைவர் இல்லாத அமைப்பாக ஆக்கியதில் அவர்கள் வென்றனர் –அது அடுத்து வந்த ஆண்டுகளின்போது கடும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது.

சட்ட மறுப்பு இயக்கம்

     1930 பிப்ரவரி 14 –16ல் சபர்மதியில் கூடிய காங்கிரஸ் செயற்குழு “சட்ட மறுப்பு இயக்க”த்திற்கு (சிவில் டிஸ்ஒபீடியன்ஸ்) அறைகூவல் தந்தது. மார்ச் 1930ல் உப்பு சட்டத்தை மீறி காந்திஜி உப்பு சத்தியாகிரகம் தொடங்கினார். அந்த முழுமையான முன்னெடுப்பு தண்டி கடற்கரையில் பிரம்மாண்டமான மக்களின் ஆதரவைப் பெற்று, கடல் நீரிலிருந்து உப்பு எடுக்கப்பட்டது. எதிர் விளைவாக ஆட்சியாளர்கள் மிகக் கொடுமையான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டனர் என்பதும் உண்மையே.

            1930ல் காந்திஜி மீரட் சிறையில் வந்து சந்தித்தபோது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்ட்கள் அவரிடம், சட்ட மறுப்பு இயக்கத்திற்குக் கம்யூனிஸ்ட்களின் ஆதரவை உறுதி அளித்தனர். ஆனால் சிறைக்கு வெளியே இருந்த சில கம்யூனிஸ்ட்கள் அந்த இயக்கத்தை “பூர்ஷ்வா” சீர்திருத்த இயக்கம் (ரிஃபார்மிஸ்ட்) என்று கேலி செய்தனர். அதன் பெரும் பொறுப்பிற்கான பங்கு கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவர்களைச் சார்ந்தது; அவர்கள்தான் காங்கிரஸ் தலைமையின் பங்கு குறித்துப் பிழையான புரிதலை வழங்கினர்.

சட்டமறுப்பு இயக்கமும் கம்யூனிஸ்ட்களும்

            காங்கிரசின் கராச்சி அமர்வில் (ஏப்ரல் 1931) சிபிஐ தனது பொதுமேடை செயல்திட்ட வரைவை (டிராப்ட் பிளாட்ஃபார்ம் ஆப் ஆக்க்ஷன்) வினியோகித்தது. அந்த ஆவணம் தேசியப் போராட்டம் குறித்த தனது அணுகுமுறையைக் குறிப்பிட்டு எதுவும் அப்படியே கூறவில்லை அல்லது கம்யூனிஸ்ட்கள் தேசியப் போராட்டத்தில் பங்கேற்பதைத் தடையும் செய்யவில்லை. ஆனால் சில கம்யூனிஸ்ட்கள் பங்கேற்றபோது அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர்; எனினும், குழுவாதப் புரிதல் காரணமாகவும் பொதுமேடை வரைவறிக்கையில் இயக்கத்தில் சேருமாறு உற்சாகமான அறைகூவல் இல்லாத காரணம் மற்றும் காங்கிரஸ் தலைமை குறித்து அதனது எதிர்மறை அணுகுமுறை -- குறிப்பாகக் காகிரசின் இடதுசாரிப் பிரிவின்பால் எதிர்மறை கருத்து காரணமாக, பொதுவாகக் கம்யூனிஸ்ட்கள் சட்ட மறுப்பு இயக்கத்திலிருந்து ஒதுங்கியே இருந்தனர் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

            மீரட் கைதிகள் ஒவ்வொருவராக விடுதலையாகி வரத் தொடங்கியதும் சிதறிக்கிடந்த கம்யூனிஸ்ட்களை மீண்டும் ஒன்று திரட்டி அமைப்பு ரீதியாக கட்சி நன்கு கட்டப்பட்டு செயல்படத் தொடங்கியது. இதற்கு முன் அழிவேற்படுத்தும் குழுவாதப் பாதையில் எல்லா வகையிலும் திருத்தங்களை மேற்கொள்ளும் கடமையைக் கட்சி மேற்கொண்டது.

புதிய பாதை    

            சிதறிக் கிடந்த தொழிற்சங்க ஒற்றுமை மீண்டும் சீரமைக்கப்பட்டு கட்சி, காங்கிரசைச் சுற்றி ஒன்றுபட்ட தேசிய முன்னணியைக் கட்ட முயன்றது. கட்சியில் ஒற்றுமை கட்டப்பட்டு அனைத்திந்திய அளவில் மத்தியில் சட்ட இதழ் அதன் நடவடிக்கைகளை அமைப்பு ரீதியாக ஒருங்கிணைத்தது. இந்திய தேசிய காங்கிரசுக்குள் அதன் பணிகள் நன்கு அமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. காங்கிரசுக்குள் இடதுசாரி சக்திகளுடன் ஒத்துழைத்த கட்சி, தேசிய விடுதலைக்கான அனைத்துப் போராட்ட இயக்கங்களிலும் ஒற்றுமையை வலியுறுத்தியது.

            1935 இறுதியை நோக்கி டாக்டர் கங்காதர் அதிகாரி, எஸ் வி காட்டே மற்றும் எஸ்எஸ் மிராஜ்கர் அடுத்தடுத்து கைது செய்யப்பட, சோமநாத் லாகிரி சிபிஐ பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், (பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது பொதுச் செயலாளரான) ஜார்ஜ் டிமிட்ரோவ் அறிக்கை மற்றும் “தத் – பிராட்லே தீசிஸ்” (ஆய்வேடு) அடிப்படையில் புதிய அரசியல் ஆய்வறிக்கை வரைவைத் தயார் செய்தார். (பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் ரஜனி பால்மே தத் மற்றும் பென் பிராட்லே காலனிய நாடுகளில் கம்யூனிஸ்ட்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய முன்னணியைக் கட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அறிவறிக்கை. –கூடுதல் இணைப்பு இணைத்திலிருந்து.) கட்சியில் புதிய திருப்பம் ஏற்பட்டது.

            இந்திய தேசிய காங்கிரஸ் லக்னோ அமர்வில் (1936 ஏப்ரல்) கம்யூனிஸ்ட்கள் தீவிரமாகப் பங்கேற்றனர். ஜவகர்லால் நேரு அப்போது காங்கிரஸ் தலைவர். அவரது மனைவி கமலா இறந்த பின் ஐரோப்பாவிலிருந்து அப்போதுதான் அவர் திரும்பி இருந்தார். ஐரோப்பாவில் அவர் ரஜனி பால்மே தத் உட்பட பல கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்திருந்தார். அவரும் டிமிட்ரோ அறிக்கையையும் பார்த்துள்ளார். அவை அனைத்தும் அவரிடம் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததை மாநாட்டில் அவரது தலைமை உரையில் உணர முடிந்தது. அவர் கூறினார்: “இந்தியப் பிரச்சனைகளுக்கான தீர்வு சோஷலிசத்தில் உள்ளது என்பதில் உடன்பட்டு நான் நம்புகிறேன்.” தடைசெய்யப்பட்ட சிபிஐ மற்றும் காங்கிரஸ் அமர்வின் பிரதிநிதிகளான விரல்விட்டு எண்ணும் கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் சோஷலிஸ்டுகளுடன் இணைந்து நேருவின் உரையை ஆதரித்தனர்.

காங்கிரசில் சுபாஷ் சந்திர போஸ் தலைமை

            1938ன் பிற்பகுதியில் சிபிஐ, தடைசெய்யப்பட்டிருந்தாலும், சுபாஷ் சந்திர போசைக் காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு நிறுத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைப்பதில் முன் நின்றது. தேர்தலில் போஸ் 1575 வாக்குகள் பெற்று, 1375 வாக்குகள் பெற்ற வலதுசாரி அணியின் வேட்பாளர் பட்டாபி சீத்தாராமையாவைத் தோற்கடித்தார். ஆனால் அவர்கள் சுபாஷ் சந்திரபோசை ஒரு போதும் முறையாகச் செயல்பட அனுமதிக்கவில்லை; வெறுத்துப் போன போஸ் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.

            போஸின் மறு தேர்வு நிச்சயமாக நாட்டில் வளர்ந்து வந்த தீவிரமயமாக்கலைச் சுட்டிக் காட்டியது. அந்த நேரத்தில் பாம்பே தேர்தல்கள் நடந்தபோது அதிகபட்ச வாக்குகள் பெற்ற டாக்டர் அதிகாரியுடன்  பிசிசி (ப்ரொவிஷனல் சென்ட்ரல் கமிட்டி) கம்யூனிஸ்ட்கள் சிறப்பாக வெற்றி பெற்றார்கள்; மேலும் பாம்பே முனிசிபல் தேர்தல்களில் நான்கு கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் கூடுதல் வாக்குகள் பெற்றனர்.

இரண்டாவது உலகப் போர்

            1939 செப்டம்பரில் 2வது உலகப் போர் தொடங்கியபோது, போர் நெருக்கடியைத் தேசிய விடுதலையைச் சாதிக்கப் புரட்சிகரமாகப் பயன்படுத்துவதே இந்திய மக்களின் கடமை என்று 1939 செப்டம்பரில் சிபிஐ பொலிட் பீரோ பிரகடனப்படுத்தியது.

            அரசு இரும்புக் கையால் அடக்குமுறையில் இறங்கியது. நாடெங்கும் கம்யூனிஸ்ட்கள் மற்றும் பிற தீவிரப் பிரிவுகளை வேட்டையாடத் தொடங்கியது. 1941 ஜனவரியில் உள்துறை உறுப்பினர் ரெஜினால்டு மேக்ஸ்வெல், ‘700 பேர் விசாரணையின்றி சிறைக்காவலில் அடைக்கப்பட்டதில் சுமார் 480பேர், அநேகமாக விதிவிலக்கின்றி, நாடறிந்த கம்யூனிஸ்ட்கள் அல்லது கம்யூனிஸ்ட் திட்டத்தின் தீவிர ஆதரவாளர்கள்’ என்று தெரிவித்தார்.

            1941 ஜூன் 22ல் ஜெர்மனி சோவியத் யூனியனைத் தாக்கியது. இது போரில் புது திருப்பமாக அமைந்தது. போரின் தன்மை மாறிவிட்டதாகக் காங்கிரஸ் சுட்டிக் காட்டியது. சோவியத் யூனியன், சீனா மற்றும் பாசிச சக்திகளால் அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளுக்குத் தனது தார்மிக ஒருமைப்பாட்டை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 1942 ஜனவரியில் பிரகடப்படுத்தியது; மேலும் போருக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்கி, “தேசப் பாதுகாப்புக்காகத் தேசிய அரசு” என்ற கோரிக்கையை கோரியது. அந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்தது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

            இதன் பிறகு, 1942 ஆகஸ்ட் 7, 8ல் பாம்பே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் போராட்ட இயக்கத்திற்கான எந்தத் தயாரிப்பும் இல்லாவிட்டாலும், புகழ்பெற்ற “வெள்ளையனே வெளியேறு” (க்விட் இந்தியா) தீர்மானத்தை நிறைவேற்றியது. அரசு உடனடியாகப் பொறுப்பில் இருந்த தலைவர்களைக் கைதுசெய்தது. மக்கள் கூட்டம் அரசின் கொடுமையான நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றி பரவலாக எதிர்பில் இறங்கியது. தேசிய விடுதலைக்காகப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பெருந்திரள் மக்களின் கிளர்ச்சி ஏறத்தாழ தன்னெழுச்சியாக நடைபெற்றது. அரசு மிகக் கொடூரமான அடக்கு முறையைக் கைக்கொண்டது. அரசாங்க அறிக்கைகளின்படி, 1942 ஆகஸ்ட் 9லிருந்து 31வரை கைது செய்யப்பட்டவர்கள் 60,229, தடுப்புக் காவலில் 18,000 மற்றும் போலீஸ் அல்லது இராணுவத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்வர்கள் 940பேர்.

            பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் தியோலி தடுப்புக் காவல் முகாமில் இருந்தனர். கட்சி தடை செய்யப்பட்டிருந்த நிலையில் வெளியே தலைமறைவு மையம் செயல்பட்டது; தியோலி முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்தவர்களிடமிருந்து அவர்களுக்குக் கட்சியின் பாதை மாற்ற ஆலோசனையைக் கூறி 1941 டிசம்பரில் ஓர் ஆவணம் அனுப்பப்பட்டது. 1941 பிப்ரவரியில் பொலிட் பீரோ ஒரு தீர்மானத்தில் இவ்வாறு கூறியது: “மக்கள் போரில், மக்களுக்கு உரிய பங்கை ஆற்றும் வகையில், இந்திய மக்களை மாற்றுவோம்.” தேசத்திற்கு அப்பாலும், தேசத்திற்குள்ளும் மாபெரும் எண்ணிக்கையிலான மக்கள் திரள்களுக்கு கூடுதல் விரிவான விடுதலைக்கு, நாட்டின் மக்களும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் போரிட உறுதி ஏற்கப்பட்டது. அந்தப் போர், யுத்தத்தை மக்கள் போராக மாற்றிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரானதாகட்டும். 1942 ஜூலையில் சிபிஐ மீதான தடை நீக்கப்பட்டு, கட்சி சட்டபூர்வமாகச் செயல்படத் தொடங்கியது.

            போர் முயற்சிகளைஆதரிக்கச் சிபிஐ முன்வந்தது எனினும், நாட்டின் சுதந்திரத்திற்கான கோரிக்கையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. இந்தப் புதிய காலகட்டத்தில் விடுதலைப் போராட்டத்திற்கான குறிப்பிட்ட யுத்தியைக் கட்சியும் சரியாகத் திட்டமிட்டது; அது, தேசத்தைப் பாதுகாக்க வேண்டி தேசிய அரசை வெல்வதற்கான தேசிய ஒற்றுமை. இந்த நிகழ்முறையில் பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் நாட்டின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்க வெளிப்படையாக வந்தனர்; கைதாயினர், மேலும் போராட்ட இயக்கத்தில் பங்கேற்றபோது கொல்லப்பட்டு உயிர்த் தியாகமும் செய்தனர்.

போர் முடிவும் உலகில் மக்கள் எழுச்சியும்

            1945 மே 9ல் பெர்லின் வீழ்ந்ததும் உலகப் போர் முடிவுக்கு வந்தது. அது காலனிய எதிர்ப்பு மற்றும் தேசிய விடுதலை இயக்கங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. விரைவில் உலகெங்கும் சோஷலிஸ்ட் மற்றும் தேசிய விடுதலை புரட்சிகளின் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. போருக்குப் பிறகான இந்த மக்கள் எழுச்சி இந்தியாவிலும் வேகம் கொண்டது. 1945 இரண்டாவது பாதியில் வேலைநிறுத்தங்கள் அதிகரித்து விரைவாக வலிமை பெற்றன. இரயில்வே மற்றும் தபால் துறைகளில் வேலைநிறுத்தங்களும் பல்வேறு நகரங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆர்பாட்டங்களும் நடைபெற்றன. கொல்கத்தாவில் 1945 நவம்பர் 11ல் நடந்த பெருந்திரள் ஆர்பாட்டங்கள் மோதல்களாக, தெருச் சண்டைகளாக மாற தடுப்புகள் அமைக்கப்பட்டன.

விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டங்கள்

            தொழிலாளர் வர்க்க வேலைநிறுத்தங்கள் தவிர நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் எழுச்சி பெற்று போராட்டங்கள் நடத்தினர்; சில உதாரணங்கள்: ஒளிவீசும் தெலுங்கானா ஆயுதப் போராட்டம், புகழ்பெற்ற வங்கத்தின் தெபகா இயக்கம் (குத்தகை விவசாயிகளின் உற்பத்தியில் பாதியை அடாவடியாக வசூலித்த நிலப்பிரபுக்களின் சுரண்டல் கொடுமைக்கு எதிராக அனைத்திந்திய கிசான் சபா முன்னெடுத்த சரித்திரப் புகழ்பெற்ற மாபெரும் போராட்டம். தேபகா எனில், மூன்றில் ஒரு பங்கு –அதை மட்டுமே குத்தகையாகத் தர முடியும் என்பதைச் சாதித்து அமல்படுத்திய போராட்டம்), மாண்ட்கோமரி குத்தகைதாரர்கள் போராட்டம், ‘சுயமாகப் பயிர் செய்து வந்த விவசாயி’யை (‘பகாஷ்ட்’) பயிரிடும் நிலத்திலிருந்து வெளியேற்றுவதை எதிர்த்துப் பீகாரில் விவசாயிகள் நடத்திய ‘பகாஷ்ட் இயக்கம்’ மற்றும் வார்லி, தஞ்சாவூர், மலபார், உனாவ் முதலிய விவசாயிகள் போராட்டங்கள் பலப்பல. உண்மையில், பெரும்பாலான போராட்டங்கள் சிபிஐ கட்சி அமைத்து தலைமை தாங்கப்பட்டவை. தொழிலாளர் வர்க்க, விவசாயிகளின் பொருளாதாரக் கோரிக்கைகளுடன் இப்போராட்டங்களின்போது தவறாமல் எப்போதும் தேச விடுதலை கோரிக்கை எழுப்பப்பட்டது. பெருமளவு இப்போராட்டங்கள் அரசியல் தன்மையைப் பெற்றன.

இராணுவ வீரர்கள் போராட்டமும் சிபிஐ கட்சியும்

            மேலும் 1946 ஜனவரியில் பாம்பேயில் விமானப்படை ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்றது; பின்னர் ராயல் இந்திய கடற்படை தொடங்கிய வேலைநிறுத்தம் மாபெரும்

மாபெரும் எழுச்சியானது. வேலைநிறுத்தம் செய்த கடற்படை வீரர்கள் தங்கள் கப்பல்களில் மூன்று கொடிகளை ஏற்றினர்; அவை, காங்கிரஸ், முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகள். வேலைநிறுத்தம் தானா, கராச்சி, கொல்கத்தாவிற்குப் பரவியது. பிப்ரவரி 21 வாக்கில் முழுமையான ராயல் இந்திய கப்பற்படையும் வேலைநிறுத்தத்தில் இணைந்தது. பிரிட்டிஷ் இராணுவப்படைகள் வரவழைக்கப்பட மோதல்களும் துப்பாக்கிச் சூடும் நடந்தன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவலில் அன்றைய தினமே பாம்பேயில் ஹர்த்தால் கதவடைப்பும், தொழிலாளர்கள், மாணவர்களின் வேலைநிறுத்தம் மற்றும் தார்மிக ஒருமைப்பாட்டு ஆர்பாட்டங்களும் நடைபெற்றன. இரத்தம் சிந்திய மோதல்கள் நிகழ்ந்தன, பிப்ரவரி 23ல் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இராணுவ சிக்னல் படையணியினர் ஜபல்பூரில் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். பிப்ரவரி 23, 24ல் பாம்பேயில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 270பேர் கொல்லப்பட்டனர், 1700பேர் காயமடைந்தனர். (படத்தில் கப்பற்படை வீரர்கள் மீது போலீஸ் அடக்குமுறை ஒரு காட்சி)

            துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பல தோழர்கள் இருந்தனர். (பரேல் மகிளா சங்கத் தலைவியுமான) கமல் தோண்டே அவர்களில் ஒருவர். புரட்சிகரமான இராணுவம், கப்பற்படை, விமானப்படை வீரர்களுடன் தொழிலாளர் வர்க்கம் தோளோடு தோள் நின்றது வரலாற்று முக்கியத்துவம் உடையது. குறைந்த காலத்திற்குத்தான் என்றாலும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒற்றுமையைக் கொண்டு வந்தது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. 

          போருக்குப் பின் ஏற்பட்ட இந்த மாபெரும் எழுச்சி பிரிட்டிஷ் அரசின் நம்பிக்கையைக் குலைத்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட உணர்வுநிலைக்கு வந்த அவர்கள் இந்தியாவுக்குச் சுதந்திரத்தை அறிவித்தனர். இன்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன் 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா விடுதலை அடைந்தது!

நாமிருக்கும் நாடு நமதென்பது அறிவோம்!

 அது நமக்கே உரிமையாம் என்பதறிவோம்!”

--நன்றி : நியூஏஜ் (ஆக.28 –செப்.3)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment