Wednesday 21 September 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 71 -- ‘நாகை’ கே முருகேசன்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 71


      
கே முருகேசன் --

தென்னகத்தில் சிபிஐ கட்சியைக் கட்டியவர்

                              -- அனில் ரஜீம்வாலே

          ‘நாகை’ முருகேசன் என்று புகழுடன் அறியப்படும் கே முருகேசன் 1909 ஜனவரி 10ல் முன்பு மெட்ராஸ் மாகாணமாக இருந்த தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் நாகப்பட்டினத்தில் (நாகை) பிறந்தார். அவரது தந்தை குப்புசாமி நடுத்தர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

    நாகையிலேயே தொடக்கக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வியைப் பெற்ற முருகேசன், 1927 ஏப்ரலில் தனது எஸ்எஸ்எல்சி பள்ளிக் கல்வி இறுதித் தேர்வை நிறைவு செய்தார். தேசிய உணர்வுடைய தந்தை அவருக்கு விடுதலை இயக்கம் பற்றிய கதைகளைக் கூறுவார். பிரிட்டிஷ் ஆட்சியினர் மீது முருகேசனுக்கு வெறுப்பு வளர்ந்தது. ஒரு முறை நாகப்பட்டினம் வந்த காந்திஜி பஞ்சாபில் நடந்த அட்டூழியங்களை விவரித்தார். இந்தச் செய்தி தந்தையால் மகனுக்குத் தெரிவிக்கப்பட்டது.

     1927 மே தினத்தன்று ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் நடத்திய பிரம்மாண்டமான கூட்டத்தை முருகேசன் கண்டார். சிலர் தங்கள் உரைகளில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் தொழிலாளி வர்க்க உணர்வு குறித்துப் பேசினர். முருகேசன் தொழிலாளி வர்க்கத்தில் ஆர்வம் கொண்டார்.

1927 சாக்கோ வான்ஜெட்டி வழக்கின் தாக்கம்

          அமெரிக்காவில் நிக்கோலா சாக்கோ மற்றும் பார்த்தோலோமியோ வான்ஜெட்டி என்ற இரு இத்தாலியப் புலன்பெயர்ந்த தொழிலாளர்களின் தலைவர்கள் மீது மாசச்சூசெட்ஸ்-டின் ஷூ தொழிற்சாலை ஒன்றின் காவலாளியையும் சம்பளம் வழங்கும் முதலாளியையும் (பே மாஸ்டர்) கொலை செய்ததாகப் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டது. வேண்டுமென்றே அந்த வழக்கு 7 ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்பட்டது. இறுதியில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு 1927ல் சார்லஸ்டவுண் அரசுச் சிறையில் மின்சார நாற்காலியில் அமர வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களது மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஐம்பதாவது ஆண்டில் மாசச்சூசெட்ஸ் (தலைநகர் பாஸ்டன்) மாகாண கவர்னர் மைக்கேல் துகாகிஸ் வெளியிட்ட ஒரு பிரகடனம், ’அவர்கள் நியாயமற்று விசாரிக்கப்பட்டார்கள்’ என்றும் “அவர்கள் மீதான எந்த அபகீர்த்தியும் என்றென்றைக்குமாக அவர்கள் பெயர்களிலிருந்து நீக்கப்படுகிறது” என்று அறிவித்தது.

          அந்த வழக்கும் தீர்ப்பும் ஆழமான உளவியல் ரீதியான தாக்கத்தை முருகேசனிடம் ஏற்படுத்தியது. இந்திய நாடெங்கிலும் உலகளவிலும் கற்றறிவாளர்கள், தொழிலாளர்கள் மத்தியில் பரவலான சீற்றம் எழுந்தது.

அரசியலில் தீவிரப் பங்கேற்பு

        அந்நாட்களின்போது நாகையில் அமைந்திருந்த தென்னிந்திய இரயில்வே (SIR, ஒர்க்-ஷாப்) பணிமனை, இரயில்வே தொழிலாளர் இயக்கத்தின் மையமாகத் திகழ்ந்தது.

முருகேசன் அதில் தீவிரமாக ஈடுபட்டார். பின்னர் அந்த SIR கம்பெனி திருச்சி, பொன்மலையில் ஒரு பணிமனையைக் கட்டியது. ஆயிரக் கணக்கான இரயில்வே தொழிலாளர்கள் பணிக்குறைப்பு செய்யப்படுவர் என மிரட்டப்பட்டதால் தொழிலாளர்கள் மத்தியில் கோப அலை எழுந்தது. எனவே, SIR தொழிலாளர்கள் சங்கம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்தது; அது, மெட்ராஸ் மாகாணம் முழுவதும் பிரம்மாண்டமான வரலாற்றுச் சிறப்புமிக்கத் தார்மிக ஆதரவு  வேலைநிறுத்தத்திற்கு இட்டுச் சென்றது.

  நிகழ்வுகளை முருகேசன் உன்னிப்பாகக் கவனித்தார்.

    EVR’ (ஈவெரா) பெரியார் கூட்டங்கள் உட்பட, அந்நாட்களில் நடைபெற்ற ஏறத்தாழ அனைத்துப் பொதுக் கூட்டங்களிலும் முருகேசன் வழக்கமாகக் கலந்து கொண்டார். விரைவில் முருகேசன் தந்தை பெரியாரின் ‘சுய மரியாதை இயக்க’த்தில் (SRM, ‘செல்ஃப் ரெஸ்பெக்ட் மூவ்மெண்ட்’) சேர்ந்தார்.

   எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதி தேர்வான பிறகு முருகேசன் கல்வியைத் தொடரவில்லை. அவர் மக்கள் நலனுக்காகப் போராடும் முழுநேர ஊழியராக ஆனார்.

                  முருகேசன் தனது முடிவைத் தெரிவித்ததும் அவரது தந்தை, ‘முதலில் 18வயது

தாண்டட்டும், பின்னர் முடிவெடுக்கலாம்’ என யோசனை கூறினார். முருகேசன் தன் தாயையும் சமாதானப்படுத்தினார். ‘மிருகங்கள் எந்தத் தெருவிலும் சுதந்திரமாக நடமாடலாம் ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் நடக்கக்கூடாதா’ என்ற பெரியாரின் வாதத்தைத் தாயிடமும் திரும்பக் கூறினார்! ஏன்? அவரது தந்தையே ஒரு காங்கிரஸ்காரர், முழு குடும்பமும் காதி உடையை மட்டுமே உடுத்தினர். இதனால் அவரது குடும்பத்தினரின் அணுகுமுறையும் முருகேசனுக்குப் பெரிதும் உதவியது.

 பிராமணர் அல்லாத இயக்கத்தை முன்னெடுத்த மெட்ராஸ் மாகாணத்தின் நீதிக் கட்சி 1916ல் அமைக்கப்பட்டது. 1925ல் காங்கிரஸ் பிரதேச மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. சிந்தனைச் சிற்பி ம சிங்காரவேலர் தேசியக் கொடியை ஏற்றினார். சாதிவாரி பிரதிநிதித்துவம் மற்றும் இடஒதுக்கீடு கோரி பெரியார் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். கருத்து வேறுபாடுகள் குவிந்து கூர்மையடைந்தது. பெரியார் ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.

   தொடக்கத்தில் கே முருகேசன் பெரியாரை ஆதரித்தார், ஆனால் பின்னர் பல பிரச்சனைகள் மீது வேறுபட்டார்.

ரஷ்யப் புரட்சியின் தாக்கம்

          1927 நவம்பர் 7ல் ரஷ்யப் புரட்சியின் ஆண்டு விழா அனுசரிக்கப்பட்டு, நாகையில் மிகப் பெரிய கூட்டம் நடைபெற்றது. மே தினம், பெரியார் கூட்டங்கள் தவிர முருகேசனைப் புரட்சிகர அரசியல்பால் ஆற்றுப்படுத்தியதில் ரஷ்யப் புரட்சி பெரும் பங்கு வகித்தது. மேலும் ஆயுதப் போராட்ட அடிப்படையில் இயங்கிய தலைமறைவு இளைஞர் இயக்கமும் அவர் மீது செல்வாக்கு செலுத்தியது.

          மாணவர்கள் வேலைநிறுத்தங்களிலும் தீவிரமாகப் பங்கேற்ற முருகேசன் கைதாகி நன்கு அடிவாங்கினாலும் பின்னர் விரைவிலேயே விடுதலை செய்யப்பட்டார்.

சுயமரியாதை இயக்கம் (SRM)

     1927ல் இந்தியா வந்தடைந்த சைமன் கமிஷன் 1928வாக்கில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்தது. குழுவிற்கு எதிராக மெட்ராசில் பெரும் இயக்கங்கள் நடத்தப்பட்டன. துரதிருஷ்டவசமாக, தந்தை பெரியாரும் அவரது சுயமரியாதை இயக்கமும் சைமன் குழுவை ஆதரித்ததால் அவர்களுடன் முருகேசன் ஒத்துழைப்பது என்ற கேள்வியே எழவில்லை. மேலும் 1930களின் தொடக்கத்தில் காந்திஜி தலைமையிலான ஒத்துழையாமை இயக்கத்தையும் பெரியார் எதிர்த்தார். இதன் விளைவாய், பெரியார் மற்றும் சுயமரியாதை இயக்கத்திலிருந்து முருகேசன் விலகினார்.

     டி என் ராமச்சந்திரன், சாமிநாதன் மற்றும் மற்றவர்களுடன் முருகேசன் விரைவில் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். நாகை காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர் கோவிந்தசாமி தலைமையில் பெரும் இயக்கம் நடைபெற்றது. அவர் கைதாகி திருச்சி சிறைக்கு அனுப்பப்பட அங்கே, இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு அஸோசியேஷனைச் (HSRA) சேர்ந்த பட்டுகேஷ்வர் தத் மற்றும் பாய் மகாவீர் சிங் முதலானவர்களைச் சந்தித்தார். சிறையில் அவர்கள் காங்கிரஸ் கைதிகளுக்கு வழக்கமாக மார்க்சிசம் மற்றும் சோஷலிசம் குறித்து அரசியல் வகுப்பு எடுத்தனர். வகுப்பு விரிவுரைகளின் குறிப்புகளை எழுதி கோவிந்தசாமி யாருமறியாமல் வெளியே கடத்திடுவார். அக்குறிப்புகளை முருகேசனும் அவரது நண்பர்களும் படியெடுத்து “குடியரசு” இதழில் வெளியிடுவார்கள். பின்னர் அவற்றைத் தொகுத்துக் ‘கம்யூனிசத்தின் கோட்பாடுகள்’ என்ற தலைப்பில் அவர்கள் பிரசுரித்தனர்.

     1931ன் காந்தி – இர்வின் உடன்பாடு குறித்துக் கருத்துத் தெரிவித்த முருகேசன் எது சரி என்பதைக் காந்திஜி அறிவார் என்றார். பகத்சிங்கைக் காப்பாற்ற ஆகச் சிறந்த அளவு காந்திஜி முயன்றார், மேலும் அவர் பகத்சிங்கைக் காட்டிக் கொடுத்தார் என்பதுபோலச் சொல்வது தவறானதாகும். இது மடத்தனமான அறிக்கை என்றார் முருகேசன்.

      சாமிநாதன், ஜி என் ராமச்சந்திரன் மற்றும் முருகேசன் போன்ற சுயமரியாதை இயக்க

முன்னணித் தலைவர்கள் காங்கிரஸ் தலைமையிலான தேசிய இயக்கத்திற்கு ஆதரவாக வெளிப்படையாக வெளியே வந்தனர், மேலும் அவர்கள் கம்யூனிசத்தாலும் ஈர்க்கப்பட்டனர். பாட்டாளி வர்க்கச் சர்வதேச கீதத்தைத் தமிழில் மொழிபெயர்த்தது சாமிநாதன். (யூஜின் பார்ட்டியார் எழுதிய சர்வதேச கீதம், சாமிநாதனின் மொழிபெயர்ப்பில் ‘பட்டினிக் கொடுஞ் சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்’ எனத் தொடங்கும் பாடலாக இன்றும் ஒலிக்கிறது)

 சுயமரியாதை இயக்கத்தின் இளம் தலைவர்கள் இன்னும் கூடுதலான நேர்கொண்ட பார்வையில் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நிலைபாட்டை எடுத்து, ப ஜீவானந்தத்தைச் செயலாளராகக் கொண்டு ‘சுயமரியாதை சமதர்மக் கட்சி’யை நிறுவினர். காங்கிரஸ்பால் ஈவெரா பெரியாரின் வெறுப்பு அவரைக் ‘‘காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சி மேல்’’ என்ற நிலையை எடுக்க வைத்தது. புதிய அமைப்புச் சோஷலிசத்தை நோக்கித் திரும்பியது. ஆர்.கீசன், முருகேசன் போன்ற சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர்கள் மற்றவர்களுடன் இணைந்து தனியான ‘சுயமரியாதை மாநாட்டை’த் தஞ்சை மாவட்டத் திருத்துறைப்பூண்டியில் 1936 பிப்ரவரியில் கூட்டினர். அவர்கள் சுயமரியாதைக்காரர்களின் சுதந்திரமான சோஷலிசக் கட்சியை அமைக்க முடிவெடுத்தனர்.

                         இதன் மத்தியில் காட்டே, ஏஎஸ்கே (ஐயங்கார்), சுந்தரையா மற்றும் பிற 

தலைவர்களை அமைப்பாளர்கள் சந்தித்தனர். 1936 நவம்பர் 1ல் முதலாவது சுயமரியாதை சோஷலிச மாநாடு திருச்சிராப்பள்ளியில் நடைபெற்றது. டாக்டர் எம் கிருஷ்ணசுவாமி தலைமை தாங்கிய மாநாட்டை எஸ் ஏ டாங்கே தொடங்கி வைத்தார். மாநாட்டில் சுயமரியாதை சோஷலிஸ்டுகள் ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி’யில் (CSP) இணைய முடிவு செய்தனர்.

        1934ல் ஒரு நாளிதழைத் தொடங்க முருகேசன் வேறு சிலருடன் மெட்ராஸ் வந்தார். அவர் சிங்காரவேலரின் உதவியை நாடினார், அவருடன் தங்கியிருந்து, அவருடைய பெரிய நூலகத்தைப் பயன்படுத்திக் கொண்டார். கம்யூனிசம் குறித்து அவர் சிங்காரவேலரிடமிருந்து ஏராளமாகக் கற்றுக் கொண்டார்.

    மெட்ராஸ் வரும்போது அவரிடம் இராமச்சந்திரன் கொடுத்த 2000 ரூபாயைப் பயன்படுத்தி முருகேசன் ‘புது உலகம்’ (நியூ வோர்ல்டு) என்ற மார்க்சிய மாத இதழைத் தொடங்கினார். முருகேசன் இதழின் ஆசிரியர், இராமச்சந்திரன் அதன் துணை ஆசிரியர். 1935 மே முதல் நாள் அதன் முதல் இதழ் வெளியானது.

‘தென்னிந்தியாவைக் குலுக்கிய பத்து நாட்கள்’

      1918லேயே நாகப்பட்டினத்தில் ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் அமைக்கப்பட்டது.

அவர்களிடையே விபி பிள்ளை, டாக்டர் பி வரதராஜூலு நாயுடு, மற்றும் திரு வி க உள்ளிட்ட பலர் உரையாற்றினர். 1919 மார்ச்சில் மகாத்மா காந்திஜிகூட உரையாற்றினார். பின் வந்த ஆண்டுகளில் நாகப்பட்டினம், இரயில்வே தொழிலாளர் போராட்டங்களின் மையமானது. 1927 –28 காலகட்டத்தில் நாகப்பட்டினம் மற்றும் பிற மையங்களில் இரயில்வே தொழிலாளர்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.

 1928 ஏப்ரல் வாக்கில் இரயில்வே நிர்வாகம் 5000 தொழிலாளர்களை ஆட்குறைப்புச் செய்வதாக அறிவித்தது. தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வீட்டுக்கனுப்ப பணியில் தேர்வு (டிரேடு டெஸ்ட்), சிலருக்குக் கூடுதல் பணிக்கொடை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை நிர்வாகம் கையாண்டது. வீசி எறிந்த ரொட்டித் துண்டு போன்ற சலுகைகளைத் தொழிலாளர்கள் ஏற்க மறுத்தனர். டி கிருஷ்ணசாமிப்பிள்ளை தலைமையில் வேலைநிறுத்தக் குழு மையம் அமைக்கப்பட்டது. குழுவில் சிங்காரவேலு, முகுந்த் லால் சிர்கார் இடம் பெற்றனர்.

     நிர்வாகம் நாகப்பட்டினம், போத்தனுர் மற்றும் பொன்மலை பணிமனைகளைப் பூட்டியது. அந்தச் செய்தி தென்னிந்திய இரயில்வே முழுவதும் பரவியது. சிக்னல்மென் மற்றும் ரன்னிங் ஸ்டாஃப் ஊழியர்கள் அந்தச் செய்தியை எல்லா இடங்களுக்கும் எடுத்துச் சென்றனர். 1928 ஜூன் 30ல் பிரம்மாண்டமான பேரணி திருச்சிராப்பள்ளியில் நடத்தப்பட்டது. வேலைநிறுத்த அறிவிப்பு வழங்கினர்; 1930 ஜூலை 19ல் வேலைநிறுத்தம் தொடங்கியது.

    இந்த வரலாற்றுப் புகழ்பெற்ற வேலைநிறுத்தம் பத்து நாட்கள் நீடித்தது. வரலாற்றில் இந்த வேலைநிறுத்தம் “தென்னிந்தியாவைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்று இடம் பெற்றது. இந்தச் சரித்திர வேலை நிறுத்தத்தில் முருகேசன் தீவிரமாகப் பங்கேற்றார். அரசு தனது ஆவணங்களில் இதனை அந்த ஆண்டின் மிக முக்கியமான நிகழ்வு என்று பதிவு செய்தது. பல்வறு கேடர்களைச் சேர்ந்த இரயில்வே தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்று பாசஞ்சர் மற்றும் மெயில் ரயில் வண்டிகளைத் தடுத்து நிறுத்தினர், தண்டவாளக் கப்ளிங் எனப்படும் இணைப்புக்களைத் துண்டித்தனர், லெவல் கிராஸிங்களை மறித்துத் தடுத்தனர், இரயில்வே தண்டவாளங்களில் படுத்து நிர்வாகம் ஓட்டிய ரயில் வண்டிகளையும் நிறுத்தினர். இப்படிப் போராட்டம் பல வடிவங்களை எடுத்தது. போலீஸ் பிரம்படி தாக்குதல், துப்பாக்கி முனையால் குத்தித் தாக்குதல் என்பதுடன் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

          ஜூலை 21ல் நிர்வாகம் எல்லா ரயில் வண்டிகளையும் ரத்து செய்தது. ஜூலை 27 வாக்கில் ரயில்வே தொழிலாளர் சங்கச் செயற்குழு, வேலைநிறுத்தக் குழு உறுப்பினர்கள் அனைவருடன் நூற்றுக் கணக்கான தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர். சங்கத்தின் ‘தொழிலாளி’ இதழ் அலுவலகம் உட்பட தொழிற்சங்க அலுவலகங்கள் சோதனையிடப்பட்டு சூறையாடப்பட்டன. மெட்ராசில் ஆயிரமாயிரமாகத் தொழிலாளர்கள் கண்டனப் பேரணி நடத்தினர். பிரிட்டிஷ் அரசால் வேலைநிறுத்தத்தை உடைக்க முடிந்ததே தவிர அவர்களால் தொழிலாளர்களின் எழுச்சி உணர்வை அடக்க முடியவில்லை.

    வேலைநிறுத்தத்தின் முன்னணித் தலைவர்களுக்கு எதிராகத் தென்னிந்திய இரயில்வே சதி வழக்குத் தொடுக்கப்பட்டது. 1937 –39ல் மெட்ராசில் காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பட்டதும் சிறையில் அடைக்கப்பட்டவர்களின் விடுதலை சாத்தியமானது.

     1935ம் ஆண்டிலிருந்து தொழிலாளர்களின் புதிய தலைமை உருவானது, அதில் கே முருகேசன், ப ஜீவானந்தம், ஏஎஸ்கே முதலானோர் இடம்பெற்றனர்.

புகழ்ந்திசைக்கப்படாத (பாடாண் திணை) நாயகன்

     கே முருகேசன் முழுமையாக அரசியல் பணியில் ஈடுபட முடிவு செய்தார். மெட்ராசுக்கு

மாறிய அவர் சிங்காரவேலரைச் சந்தித்தார், அவரது பரந்த பங்களாவில் தங்கினார். அவரைச் சிங்காரவேலர் அச்சகத் தொழிலாளர்கள், டிராம், கள் இறக்குவோர், தெருக்களில் வியாபாரம் செய்பவர்கள் முதலான தொழிற்சங்கங்களில் அறிமுகப்படுத்தினார். முருகேசன் பல தொழிற்சங்கங்களில் முக்கிய பொறுப்புக்களிலும், அவற்றில் பலவற்றின் செயலாளராகவும் ஏஎஸ்கே ஐயங்கார், ப ஜீவானந்தம், பி இராமமூர்த்தி முதலானவர்களுடன் செயல்பட்டார்.

20 தருணங்களில் மொத்தம் 16 ஆண்டுகள் முருகேசன் சிறை தண்டனை பெற்றார். 1936 முதல் 1940 வரை தமிழ்நாட்டில் தங்கி இருந்த எஸ் வி காட்டே தொழிற்சங்கப் பணியில் கே முருகேசனையும் மற்றவர்களையும் வளர்த்து உருவாக்கினார். ஏஎஸ்கே ஐயங்கார் போல கே முருகேசனும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

   கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்க இயக்கத்திற்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த முருகேசன் கொண்டாடிப் புகழப்பட வேண்டிய தலைவர் எனினும், குடத்திலிட்ட விளக்காகப் புகழ்ந்திசைக்கப்படாத நாயகனாக இருந்துவிட்டார். 1936ல் மெட்ராசில் தொடங்கப்பட்ட முதலாவது சிபிஐ கிளையின் உறுப்பினர் அவர். பி இராமமூர்த்தி, ஏஎஸ்கே ஐயங்கார், ப ஜீவானந்தம், பி சீனுவாச ராவ் முதலானோர் உறுப்பினர்களாக இருந்த அக்கிளையின் முதலாவது செயலாளர் சி எஸ் சுப்பிரமணியம். சிங்காரவேலர் எழுதிய 250 புத்தகங்களை மாஸ்கோவுக்கு அனுப்பி வைப்பதில் காரணகர்த்தாவாக இருந்தவர் முருகேசன். அந்நூல்கள் மாஸ்கோ லெனின் நூலகத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

          ஆயுதப் போராட்டம் என்ற கருத்தை முருகேசன் ஆதரிக்கவில்லை.

         சிபிஐ அந்த நேரத்தில் மிகவும் முறை சார்ந்த அமைப்பாகத் திகழ்ந்தது, வேறு எந்தக் கட்சிக்கும் அத்தகைய அமைப்பு பலம் கிடையாது. இராணுவத்தில்கூட கட்சியின் 500 யூனிட்டுகள் (கிளை போன்ற சிறிய அமைப்பு) இருந்தன.

          இரண்டாவது உலகப் போரின்போது முருகேசன் சிறையில் அடைக்கப்பட்டார், 1942ல் விடுதலையாக வேண்டும். மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்துப் போராட முருகேசனும் மற்றவர்களும் கைதாயினர். 1942ல் மீண்டும் கைது செய்யப்பட்ட முருகேசன் முதலில் அல்லிபுரம் முகாம் சிறையிலும் பின்னர் வேலூர் மத்திய சிறை மற்றும் தஞ்சாவூர் ஜெயிலுக்கும் அனுப்பப்பட்டார். தொழிலாளர்களின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

  சிறையில் முருகேசன் பல காங்கிரஸ்காரர்களையும் மற்றவர்களையும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையச் செய்தார்.

    முருகேசன் மற்றவர்களுடன் 1947 ஆகஸ்ட் 15 விடுதலை விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்.

    1948 ஜனவரி 30ல் மகாத்மா காந்திஜி படுகொலை செய்யப்பட்டார். இது பரவலான கோபம் மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மீது தாக்குதல்களையும் ஏற்படுத்தியது. பின்னர் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது. மைலாப்பூர், திருவல்லிக்கேணி மற்றும் பிற இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிகள் இனிப்பு வழங்கி மகாத்மா காந்தி படுகொலையைக் ‘கொண்டாடி’னர். இது மக்களைக் கடும் சீற்றம் கொள்ளச் செய்ய அவர்கள் ஆர்எஸ்எஸ் சுயம்சேவக்குகளைத் தாக்கினர். முஸ்லீம்களைத் தாக்குவதன் மூலம் மேலும் கோபம் வன்முறை ஏற்படுத்தச் செய்யப்பட்ட முயற்சியைக் கம்யூனிஸ்ட்கள் தடுத்தனர். காந்திஜிக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பதால் அவர் மீது தாக்குதல் நடத்தவும் இறுதியில் அவர் படுகொலை செய்யப்படுவதற்கும் காரணமாயிற்று என முருகேசன் கருதினார்.

    தமிழ்நாட்டில் கட்சி செயல்பாடுகளில் தீவிரப் பங்காற்றிய முருகேசன், புதுடெல்லில் டாக்டர் அதிகாரி உட்பட பலருடன் பல்வேறு பொறுப்புக்களிலும் பணியாற்றினார். 1964 கட்சி பிளவிற்குப் பிறகு அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் நீடித்தார். கட்சியும் தொழிற்சங்கமுமே வாழ்வாக வாழ்ந்த தோழர் கே முருகேசன் 1991 ஆகஸ்ட் 17ல் இயற்கை எய்தினார்.

--நியூஏஜ் (ஆக.21 –27)

--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

     

 

 

 

No comments:

Post a Comment