Monday 29 August 2022

75வது சுதந்திர விழா சிறப்புக் கட்டுரை -- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தேச நிர்மாணத்தில் அதன் பங்கும்

                                                                         


           இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தேச நிர்மாணத்தில் அதன் பங்கும்

--அனில் ரஜீம்வாலே

          இந்திய விடுதலையின் 75வது பவளவிழாவைக் கொண்டாடும் தருணத்தில், விடுதலை இயக்கத்தில் எந்தச் சிறு பங்கும் பெறாத சக்திகள், கபட வேடதாரிகளாக இன்று, வீடுகளில் நம்மை இந்திய மூவர்ணக் கொடியை ‘விண்ணுயர’ ஏற்றுமாறு கூறுவது எவ்வளவு பெரிய வரலாற்று முரண்நகை! விடுதலை இயக்கத்தில் பங்கு பெறாதது மட்டுமல்ல, மாறாக சங் பரிவார் கும்பல் விடுதலைப் போராட்டத்தைக் ‘கால விரயம்’ என்றும் ‘முட்டாள்தனமானது’ என்றும் எள்ளி நகையாடி எதிர்த்தது! அதற்கு ஆர்எஸ்எஸ் விநோதமான ‘விளக்க’த்தைத் தந்தது: அவர்கள் அமைப்பு கலாச்சார அமைப்பாம், ‘அரசியலுடன் செயல்பட எதுவும் இல்லை’!! மருந்துக்கு ஒரே ஒரு தியாகியின் பெயர்கூட அவர்களிடம் இல்லை. விடுதலை பெற்றதற்குப் பிறகும்கூட தேசிய மூவர்ணக் கொடி நம் நாட்டிற்குப் பொருத்தமானது இல்லை என அவர்கள் பிரச்சாரம் செய்தனர்!

     அவர்கள் வரலாறு இவ்வாறாக, தற்போது மூவர்ணக் கொடி மீது அவர்களுக்குத் தீடீர் ‘காதல்’ வந்த காரணம் என்னவோ? அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.

விடுதலையும் இந்திய தேசத்தைக் கட்டியெழுப்பலும்

          விடுதலை பெற்றபோது, நாடு பலவீனமானதாக, பின்தங்கிய காலனிய தேசமாக இருந்தது. அந்தச் சூழல், நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார விடுதலையை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைந்த, வளர்ச்சிக்கான தெளிவான செயல் திட்டத்தைக் கோரியது. வலதுசாரி பிற்போக்கு மற்றும் வகுப்புவாதச் சக்திகளின் நோக்கம் வேறாக இருந்தது; உலக ஏகாதிபத்திய ஆதரவுடன் அவர்கள், நிலப்பிரபுத்துவ, வணிக மற்றும் ஏகபோக நலன்களின் மேலாதிக்கத்தைப் பாதுகாத்துத் தொடர விரும்பினர்; அதற்காக, இந்தியப் பொருளாதாரத்தை வெளிநாட்டைச் சார்ந்து இருக்கும் நிலையிலும் அரசியல் ரீதியாகப் பிற்போக்குத் தன்மையிலும் தள்ள இந்தியாவைப் பின்னுக்கு இழுத்தனர். விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் நிகழ்ச்சிப் போக்கில்  வளர்ச்சிக்கான சக்திகள் மற்றும் பிற்போக்குச் சக்திகளுக்கு இடையிலான போராட்டமே மையமான முரண்பாடாக இருந்தது; அப்போராட்டமே தேசத்தின் திசை வழியை முடிவு செய்து நிர்ணயித்தது.

தேசம் என்ற கோட்பாடு

          காலனிய மற்றும் ஏகாதிபத்திய காலத்தில்-- சக்திமிக்க, சுயசார்பு அடிப்படை கட்டுமானங்களையும், கனரக மற்றும் பிற இயந்திரங்கள் போன்ற உற்பத்திச் சாதனங்களையும் மேம்படுத்தி வளர்க்காமல் --இந்தியா போன்றதொரு நாடு நிலைத்திருக்க முடியாது. இம்முன்னேற்றத்தைச் சாதிக்காதிருந்தால், நாடு காலனிய --ஏகாதிபத்தியத்திற்குப் பலியாகி இருக்கும். நவீன காலத்தில் ஒரு வளரும் தேசம் கனரகக் கருவிகள், உலோகவியல், எனர்ஜி, இரும்பு, எஃகு, நிலக்கரி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு முதலியவற்றை உற்பத்தி செய்யும் திறன்களைப் பெற்றிருத்தல் அவசியம். வேறு வார்த்தைகளில் கூறினால், இந்தியா அதனது சொந்த அடிப்படை உள்கட்டமைப்புகளை வளர்த்தாக வேண்டும், அதன் அடிப்படையில் பொதுத் துறையின் வழிகாட்டலின் கீழ் பொருளாதாரத்தின் பிறவெல்லாம் கட்டி எழுப்பப்படும். மரபு, வரலாறு மற்றும் பண்பாடு இந்தக் கண்ணோட்டத்தில் முன் வைக்கப்பட வேண்டும்.

          தேசம், தேசத்தை உருவாக்கி நிர்மாணித்தல் என்ற கோட்பாடு உணர்ச்சிப் பெருக்கில் உதிர்க்கப்படும் வெற்று முழக்கம், வார்த்தை ஜாலம் ஆக முடியாது; மாறாக அது, நவீன, வலிமையான நாட்டிற்கான உறுதியான கொள்கைகளை உருவாக்கும் கேள்வி பற்றியது.

வளர்ச்சி செயல்திட்ட உருவாக்கத்தில் சிபிஐ உதவி

        இந்திய அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான இருமுனை செயல்திட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) வகுத்தது: ஒன்று, பொதுத்துறை தலைமையில் இந்தியப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்தல், மற்றும் அடுத்தது அரசியல் ஜனநாயகம்.

   சிபிஐ அதற்கான கொள்கைகளை வகுத்தளித்ததுடன், முக்கிய தொழிற்சாலைகளை  --குறிப்பாக அயல்நாட்டு, உள்நாட்டு ஏகபோகங்களுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளை – ‘தேசியமய’மாக்குவதற்கான பெருந்திரள் போராட்டங்களை நடத்தியது. ‘தேசியமயமாக்கல்’ என்ற சொல், ‘தேசம்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்தது: எனவே, அவை தேசத்திற்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும். பெரிய மற்றும் பகாசுர உற்பத்திச் சாதனங்கள், கருவிகள், அடிப்படை கட்டமைப்புகள், தகவல் தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து போன்றவை கட்டாயமாகத் தேசத்திற்குச் சொந்தமானதாகவும் அவற்றை அரசு மக்கள் நலனுக்காகப் பயன்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.

          ஐந்து பிரிட்டிஷ் ரயில்வே கம்பெனிகள் தேசியமயமாக்கப்பட்டு அவற்றை இணைத்து ‘இந்திய இரயில்வே’ அமைக்கப்பட்டது. இன்று அதுதான் உலகிலேயே ஆகப் பெரியதும் மிகத் திறமையான இரயில்வே கட்டமைப்பாக உள்ளது; அது இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமில்லை, தேசிய ஒருமைப்பாட்டின் வலிமையான வாகனமாகவும் திகழ்கிறது.

     தேசியப் பொருளாதாரத்தை வளர்ப்பதன் மூலம் மட்டுமே மக்களின் தேவைகளையும் அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும். இந்த இரண்டும் ஒன்றொடு ஒன்று பரஸ்பரம் தொடர்புடையன. சிபிஐ செயல்திட்டம் பொதுத்துறையைப் பொருளாதாரத்தின் ‘உத்தரவிடும் உச்சத்தில்’ (கமாண்டிங் ஹைட்ஸ்) வைத்தது: அப்படி உருவானவைதாம், பிலாய், துர்க்காபூர், பொக்காரோ, பரூனி உருக்காலைகளும், மதுரா எண்ணை சுத்தகரிப்பு, (கர்னாடகா மாநில சிக்கமங்களூரு மாவட்டத்தின் --குதிரைபோன்ற முகம் அமைந்த மலை உச்சியான) ‘குதிரேமுக்’ மலைத்தொடரில் தேசியப் பூங்கா, விசாகப்பட்டினம் ஸ்டீல் தொழிற்சாலை (VSP), இரயில்வே, மின்சாரம் மற்றும் எண்ணிறைந்த மற்ற பிரிவுகளும்  --75 ஏகபோகக் குழுமங்கள் மற்றும் அவர்களின் அரசியல் ஆதரவாளர்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து – வெற்றிகரமாக நிறுவப்பட்டன. இந்தியாவை வலிமையிழக்கச் செய்ய விரும்பும் உலக ஏகாதிபத்தியச் சக்திகள், குறிப்பாக அமெரிக்கா, நம் நாட்டிற்கு உதவிட மறுத்தது. சோஷலிச நாடுகள், குறிப்பாகச் சோவியத் சோஷலிச ஒன்றியம் (USSR), இந்தியாவைப் பொருளாதாரச் சக்தியாக மாற்றப் பெருமளவு உதவி செய்தது. இதனால் ஏகாதிபத்திய முறைகளின் தாக்குதல்களிலிருந்து இந்தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயன்றது.

முன்னணி பொதுத்துறை நிறுவனங்களாக பெல், ஹெச்எம்டி, கெயில், செயில், இந்திய மருந்து மற்றும் பார்மசூட்டிகள் லிட் (IDPL) முதலிய நிறுவனங்களையும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக்கான இந்தியக் கவுன்சில் (CSIR), வரலாற்று ஆய்வுக்கான இந்தியக் குழு (ICHR), சமூக அறிவியல் ஆய்வுக்கான இந்தியக் குழு (ICSSR), இந்திய வேளாண் ஆய்வு நிறுவனம் (IARI) போன்ற எண்ணற்ற கல்வி மற்றும் ஆய்வுக்கான முக்கிய  நிறுவனங்களையும் இந்தியா ஏற்படுத்தியது.

வங்கிகள் தேசியமயம், 1969

    வளர்ச்சி மற்றும் பிற்போக்குச் சக்திகள் இடையிலான போட்டியில், விடுதலைக்குப் பின் இந்திய வரலாற்றின் ஒரு திருப்பு முனை, மிகச் சிறப்பான உயர்ந்த அடையாளம், உச்சத்தில் இருந்த 14 ஏகபோக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதேயாகும். அந்தத் திருப்பு முனை பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் மட்டுமில்லாமல் தத்துவார்த்த ரீதியிலும் வலதுசாரி அணி மீது கடுமையான தோல்வியைச் சுமத்தியது. அது, வலது பிற்போக்கு மற்றும் இடது தீவிரவாதம் இரண்டிற்கு எதிராகவும் மிகக் கூர்மையாக நடத்தப்பட்ட தத்துவார்த்தப் போர். வங்கிகள் தேசியமயத்தை நிலப்பிரபுத்துவ, ஏகபோகத் தன்னலக் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனசங்கம், ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா கட்சி உள்ளிட்ட பிற வலதுசாரிகள் மிகக் கடுமையாக எதிர்த்தனர்.

          அதே நேரத்தில் முந்தைய சமஸ்தான ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மன்னர் மானியமும் ஒழிக்கப்பட்டது. இந்தக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் பதவி விலகினார். இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்குச் சிபிஐ மற்றும் இந்திரா காங்கிரஸ் ஆதரவுடன் டாக்டர் வி வி கிரியும், வலதுசாரி ஆதரித்த என் சஞ்சீவ ரெட்டிக்கும் இடையே நடந்த போட்டி அரசியல் வெளிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மிகக் கடுமையாக நடந்த போட்டியில் வி வி கிரி வெற்றிபெற்று குடியரசுத் தலைவரானார்.

       நிலப்பிரபுத்துவ கந்து வட்டி முறைக்கும், ஏகபோகமயமாக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் 14 வங்கிகள் தேசியமயம் மரணஅடியானது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன (MSME) பிரிவின் பெருமளவிலான விரிவாக்கலுக்கும், பசுமைப் புரட்சிக்கு வழி நடத்திய வேளாண் பிரிவின் நவீனமயமாக்கலும் தேசியமயமான வங்கிகள் புதிய வழியைத் திறந்தன. ஸ்டீல் உருக்கு உற்பத்திக்கு முழுத் திறன் வாய்ந்த கட்டமைப்பை ஏற்படுத்தியதுடன் இணைந்த இந்த நடவடிக்கை உலக அரங்கில் இந்தியாவை முன்னே கொண்டு வந்தது.

          நேருவின் வளர்ச்சி மாடல், அல்லது வளர்ச்சிக்கான ‘நேருவின் சட்டகம்’ (ஃப்ரேம் ஒர்க்) இந்தச் செயல்திட்ட யுக்திக்குப் பெரிதும் உதவியது. 1938ன் தொழில் கொள்கை தீர்மானம் முக்கியமாக நேருவால் வடிவமைக்கப்பட்டது; மேலும் திட்டமிட்ட, சுயசார்பு மற்றும் சுதந்திரமான பொருளாதாரத்திற்கு 1948 மற்றும் 1956 தொழில் கொள்கை தீர்மானங்கள் வலிமையான அடித்தளத்தை அமைத்தன. பொதுத்துறைகள் தலைமையில் வளர்ச்சிக்கானச் செயல்திட்ட யுத்தியின்பால் பிரதமராக நேரு ஒரு நேர்மறை அணுகுமுறையைக் கொண்டிருந்தார். இன்று வலதுசாரி பிற்போக்குவாதிகள் நேருவின் வளர்ச்சிக் கட்டமைப்பை அழிக்க முயற்சி செய்கிறார்கள், நேருவின் பேரையும் புகழையும் சேற்றை வாரி இறைத்து இழிவுபடுத்த முயற்சி செய்கிறார்கள்.

பாராளுமன்ற ஜனநாயகத்திற்காகப் போராட்டம்

          நமது அரசியலமைப்புச் சட்டமும் நாடாளுமன்ற முறைமையும் பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு எதிரான நமது விடுதலை போராட்டத்தின் நேரடி விளைவாகும். விடுதலைக்காகப் போராடும் அதே நேரத்தில் நாம் அரசியல் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்காகவும் கூடுதல் இந்தியர்களின் பங்கேற்பிற்காகவும் போராடினோம். ஜனநாயக உரிமைகளை நீட்டிப்பதற்காக நீண்ட போராட்டங்களை இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மற்றும் பிறவும் நடத்தினர். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகள் மீது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கற்றறிவாளர்களும் தலைவர்களும் மிகக் கடுமையான விமர்சனங்களைச் செய்தனர்.

          1937 பொதுத் தேர்தல்கள் நடக்கும்போது சிபிஐ தடை செய்யப்பட்டிருந்தது. இருந்த போதிலும் மெட்ராஸ், பஞ்சாப் மற்றும் வங்காளம் உட்பட பல்வேறு சட்டமன்றங்களுக்குப் கம்யூனிஸ்ட்கள் சுயேட்சைகளாக அல்லது காங்கிரஸ் பதாகையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

          அந்நாட்களில் கல்வி மற்றும் சொத்துரிமையின் அடிப்படையில் தகுதிப்பாடு இருந்ததால், வாக்களிக்க உரிமை பெற்றவர் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதாக இருந்தது, வாக்களிப்போர் 14 சதவீதத்திற்கும் மேல் ஒருபோதும் இல்லை. பிரிட்டிஷ் ஆட்சியின்போது ‘தொழிலாளர்களுடைய தொகுதிகள்’ இருந்ததால் பல கம்யூனிஸ்ட்கள் சட்டமன்றப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டனர். அவ்வாறே அரசியலமைப்பு நிர்ணய சபைக்கும் தொழிலாளர் பிரதிநிதியாகச் சோமநாத் லாகிரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

     சுதந்திரத்திற்குப் பின் ஜனநாயகத்திற்கான அடித்தளத்தை ஏற்படுத்த, அனைவருக்கும் வாக்கு மற்றும் வாக்களிக்கும் உரிமைகளை நீட்டிப்பதற்கான போராட்டம் முக்கிய பிரச்சனையாக இருந்தது. ஜனநாயக உரிமைகளுக்காகத்தான்  கம்யூனிட்கள் உட்பட தேசியத் தலைவர்கள் போரானர், அதற்காகத் தங்கள் இன்னுயிரையும் தந்தனர்.

அரசியலமைப்பு நிர்ணய சபை

  1946ல் அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு நடந்த தேர்தல்களில் 11மாகாணங்களில் 9ல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. சிபிஐ கட்சியும் போட்டியிட்டு தொழிலாளர்களின் தொகுதியிலிருந்து ஓர் இடத்தை வென்று அரசியல் நிர்ணய சபைக்குச் சோமநாத் லாகிரியை அனுப்பியது. 14 சதவீதம் மட்டுமே வரையறுக்கப்பட்ட வாக்காளர்கள் அதில் வாக்களித்தனர். ஆனால்  உண்மையில் சிபிஐ, 1927லேயே வெகு முன்னதாக அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையில் அரசியலமைப்பு நிர்ணய சபையை அமைக்க வேண்டுமெனக் கோரியது.

    பாம்பே மாகாணச் சட்டமன்றத்திற்கு எஸ் ஏ டாங்கே போல சிபிஐ வேட்பாளர்கள் சில மாகாணச் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களில் வெற்றி பெற்றார்கள்.

      அரசியலமைப்பு நிர்ணய சபையில் முன் வைக்கப்பட்ட எண்ணற்ற திருத்தங்கள் மற்றும் முன்மொழிவுகளை டாக்டர் பிஆர் அம்பேத்கர், அரசிலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக இருந்து பரிசீலித்தார். இந்த (விவாதம், பரிசீலனை போன்ற) நடவடிக்கை முழுமையாக நான்கு ஆண்டுகள் நீண்டது: அதில் நேரு, டாக்டர் அம்பேத்கர், டாக்டர் இராஜேந்திர பிரசாத், (என் கோபாலசுவாமி) அய்யங்கார் மற்றும் இறுதியாகச் சோமநாத் லாகிரி தங்களது சொந்த மதிப்புமிக்க பங்களிப்புகளைச் செலுத்தினர்.

அரசியலமைப்புச் சட்டம் : இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு தனித்துவமான, இணையற்ற ஆவணமாகும்; உலகில் வேறெந்த அரசிலமைப்புச் சட்டமும் ஒரே அடியில் தனது வயது வந்த மக்கள் அனைவருக்கும், அதே நாளில், வாக்குரிமை வழங்கவில்லை: அவர்கள் ஆணோ பெண்ணோ, தொழிலாளி அல்லது முதலாளி, விவசாயி அல்லது நிலப்பிரபு, பணக்காரன் அல்லது ஏழை, படித்தவரோ படிக்காதவரோ என எந்தப் பாகுபடும் இன்றி அனைவருக்கும் வாக்குரிமை அளித்தது. உண்மையில், வாக்குரிமை மக்கள் கைகளில் கிடைத்த சக்திமிக்க ஆயுதம். அது இந்திய தேசத்தை வடிவமைத்தது.                         


         தீவிர வலதுசாரிகளும் பாசிச வகுப்புவாதச் சக்திகளும் அதைச் சீர்குலைக்கவும் பாசிசத்தைத் தோன்றச் செய்யவும் தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வது புரிந்து கொள்ளக் கூடியதே. இந்த அரசியலமைப்புச் சட்டத்தைதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாகப் பாதுகாத்துப் போராடி வருகிறது.

          இந்த அரசியலமைப்புச் சட்ட ஜனநாயகத்தின் கீழ் 1957ல் இஎம்எஸ் தலைமையில் கேரளாவில் முதலாவது கம்யூனிச அமைச்சரவை அமைக்கப்பட்டது, மேலும் பின்னர் அந்த அரசு 1969ல் அச்சுத மேனன் தலைமையில் செயல்பட்டது. இது தவிரவும் பல்வேறு மாநிலங்களில் இடதுசாரி, ஜனநாயக, காங்கிரஸ் அல்லாத, மாநிலக் கட்சிகளின் ஆட்சிகள் பொறுப்புக்கு வந்தன.

          பன்முகக் கலாச்சாரம், பன்முக மத நம்பிக்கைகள், பல்வேறு மொழிகள் பேசும் பரந்துபட்ட வகையிலான மக்களைக் கொண்ட இந்திய தேசத்தை நமது அரசியலமைப்புச் சட்டம் ஒன்றாக இணைத்துள்ளது. இடதுசாரிகள், வலதுசாரிகள், மையக் கருத்துடையோர், மாநிலக் கட்சிகள் எனப் பல வேறுபட்ட கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ளன. இதுவே இந்திய ஜனநாயகத்தின் வலிமை.

          இந்தியா ஒரு வலிமையான நவீன தேசமாக மலர்ந்துள்ளது, அதன் முக்கிய குணாம்சமும் வலிமையும் அதன் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உள்ளது.

        இந்த வலிமையும் ஒற்றுமையும்தான் இன்றைய சங் பரிவார் கும்பலின் பாசிச, வகுப்புவாதப் பிளவுபடுத்தும் சக்திகளின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது.

          இன்றைய 75வது இந்திய விடுதலையின் பவள விழாவைக் கொண்டாடும் தருணத்தில் இந்தியாவை, இந்தியாவின் ஒற்றுமையை அதன் ஆதார வலிமையான அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க உறுதி பூணுவோம்!  

--நன்றி : நியூஏஜ் (ஆக.28 –செப்.3)

--தமிழில்: நீலகண்டன்,

தொடர்புக்கு 94879 22786

No comments:

Post a Comment