Tuesday 20 September 2022

செப்டம்பர் 17 -- தெலுங்கானா ஆயுதப் போராட்டம் --சிறப்புக் கட்டுரை

 

தெலுங்கானா ஆயுதப் போராட்டம்

இந்தியாவுடன் ஹைதராபாத் சமஸ்தானத்தை
இணைக்கப் போராடியது, சிபிஐ

--எஸ். சுதாகர் ரெட்டி
சிபிஐ மேனாள் பொதுச் செயலாளர்

1947 செப்டம்பர் 11ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உடந்தையாய் இருக்க, ஹைதராபாத் சமஸ்தானத்தை நிஜாம் சுதந்திர நாடாக அறிவித்ததால், நிஜாமுக்கு எதிராக மூண்டெழுந்த தெலுங்கானா ஆயுதப் போராட்டம் முக்கியமான வரலாற்று நிகழ்வாகும். ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைக்க நிஜாம் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்துமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்கு அறைகூவல் விடுத்தது. அப்போராட்டப் பிரகடனத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆந்திர மகாசபா மற்றும் அனைத்து ஹைதராபாத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (AHTUCசார்பில் முறையே தோழர்கள் ராவி நாராயண் ரெட்டி, பத்தம் எல்லா ரெட்டி மற்றும் மக்தூம் மொஹிதீன்

கையெழுத்திட்டனர். இந்தியாவின் விடுதலைப் போராட்டம் பல கருத்தோட்ட ஓடைகள் சங்கமித்தப் பேராறு.          

   முக்கியப் போராட்டம், பிரிட்டிஷ் நேரடியாக ஆட்சிசெய்த பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்றது. அது தவிர சிறிதும் பெரிதுமான 545 சமஸ்தானங்கள், குறுநில ஆட்சிகள் பிரிட்டிஷ் குடையின் கீழ் இருந்தன. தங்கள் குறுநிலத்தில் வாழ்ந்த மக்களைச் சுரண்டவும் கொடுமைகளைச் செய்யவும் மட்டுமே அவை சுதந்திரமாக இருந்தன; ஆனால் அப்படி மேலாண்மை செய்ய அனுமதித்தற்காகப் பிரிட்டிஷ் பேரரசுக்கு அவை பெரும் தொகைகளை (கப்பமாக) செலுத்த வேண்டியிருந்தது. உண்மையில் அது சாதாரணமான சிறிய சலுகை அல்ல; பிரிட்டிசாருக்கு அஞ்சியே மக்கள் அவர்களைத் தூக்கி எறியாமல் இருந்தனர்.

ஹைதராபாத் மாகாண அமைப்பு

          சமஸ்தானங்களில் ஹைதராபாத் மிகவும் பெரியது. அந்தச் சமஸ்தானத்தின் பாதி மாவட்டங்கள் தெலுங்கு பேசுபவை, ஐந்தில் மராத்தி மொழியும், கனடா மொழி பேசப்பட்ட மூன்று கனடா மாவட்ங்களிலும் இருந்தன. எனவே இப்பிரதேசத்தை மொழிகளின் முப்பட்டை கண்ணாடி (பிரிசம்) எனலாம். ஆனால் அலுவல் மொழியும், பயிற்சி மொழியும் உருது மட்டுமே. இம்மண் பெரும் தேஷ்முக்குகள் மற்றும் நிலப்பிரபுகள் கைகளில் குவிந்து இருந்தது. அவர்களில் சிலரிடம் ஒரு லட்சத்திலிருந்து ஒன்னரை லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் குவிந்திருந்தது.

          அங்கு “வெட்டி” என்ற சிஸ்டம் நடைமுறையில் இருந்தது, (ஜீவா பாடும் ‘பாழுக்கு உழைத்தோமடா’ போல) அதன்படி அனைத்து மக்களும் ஊதியமின்றி நிலப்பிரபுக்களுக்காக வேலை செய்ய வேண்டும். எந்தக் குடிமை உரிமைகளோ, மனித உரிமைகளோ இல்லாத ஏறத்தாழ பாதி அடிமை என்ற அந்த முறையை மக்கள் வெறுத்தனர், எனினும் அவர்களால் எதுவும் செய்ய முடியாத கையறுநிலை.

தேசியக் காங்கிரசும் பிரதேச மாகாணங்களும்

தேசியக் காங்கிரஸ் தலைமையிலான தேசிய இயக்கம் தனது போராட்டத்தைப் பிரதேச மாகாணங்களில் விரிவுபடுத்த முயற்சி செய்யவில்லை; ஒருக்கால், அவர்களின் ஆதரவைப் பின்னர் ஒருகாலத்தில் பெற வேண்டியிருக்கலாம் என்பது அவர்கள் நம்பிக்கை. “வெளிநாட்டுக் காலனியத்திற்கு எதிரான போராட்டம்” என்பதைக் காங்கிரஸ் இயக்கம் வெள்ளைத் தோல் உடையவர்களுக்கு எதிரான போராட்டம் என வரையறுத்து அத்துடன் நிறுத்திக் கொண்டது. உண்மையில், நம் மண்ணைச் சேர்ந்த பிரதேச மாகாணங்களின் ஆட்சியாளர்கள் (நேட்டிவ் ரூலர்ஸ்) தங்களின் வலிமை அனைத்தையும் திரட்டிப் பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தனர். பிரிட்டிஷ் ஆதரவில் அவர்கள் பிரிட்டிஷ் வேலைக்காரர்கள் மற்றும் வீரர்களைவிடவும் (அரசரைத் தாண்டிய அரச விஸ்வாசி போல) கூடுதல் விஸ்வாசத்துடன் இருந்தனர்.

          ஆனால் விடுதலைப் போராட்டத்தின் ஒளிக்கீற்று சமஸ்தானங்களின் இருண்ட பகுதிகளையும் சென்றடையவே செய்தது, மக்கள் மத்தியில் நம்பிக்கை எழுந்தது. திருவாங்கூர் –கொச்சி, ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் மற்றும் பிற பகுதிகளின் ஏதேச்சிகார பிரதேச ஆட்சிகளுக்கு எதிராக வீரம் செறிந்த ஆயுதப் போராட்டங்கள் நடந்தன. 1942ன் வெள்ளையனே வெளியேறு இயக்கம், இரண்டாவது உலகப்போர் மற்றும் அதன் பின்விளைவுகள், இந்திய தேசிய இராணுவத்தின் போர், பாம்பேயில் நடைபெற்ற ராயல் இந்தியா நேவி (ஆர்ஐஎன்) கப்பல்படை வீரர்களின் கிளர்ச்சி புதிய நம்பிக்கைகளைக் கொண்டு வந்தன. ஆனால் இந்திய தேசியக் காங்கிரசும் மகாத்மா காந்தியும் ஒரு கட்டத்திற்கு மேல் சமஸ்தானப் பகுதிகளில் போராட்டங்களை விரிவுபடுத்த விரும்பவில்லை. ஆனாலும் பிரிட்டிஷ் நம் இந்திய தேசத்தைவிட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

சுதந்திரப் பிரகடனம்

          பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1947 ஜூன் மாதம் இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் 545 சமஸ்தானங்களுக்கும் விடுதலையைப் பிரகடனப்படுத்தி ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இந்தியத் துணைக் கண்டத்தில் குழப்பதை ஏற்படுத்தும் ஒரு கேடு கெட்ட சூழ்ச்சி அது. இப்படிச் செய்வதன் மூலம் உட்நாட்டு சச்சரவுகள், போர்கள் ஏற்படும் என எதிர்பார்த்த அவர்கள், அதன் விளைவாய் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தங்களின் பிரிட்டிஷ் இராணுவம் நீண்ட காலத்திற்கு இங்கே இருக்கலாம் என்பதும் அவர்கள் கனவு. ஆனால் அதற்கு மாறாக, ஜனநாயக முறைக்கு மாறவும், ஒன்றுபட்ட இந்தியாவுக்கான மக்களின் ஆழமான விழைவால் பெரும்பாலான சமஸ்தானங்கள் இந்திய ஒன்றியத்துடன் இணையச் சம்மதித்தன; எனினும், ஹைதராபாத், ஜம்மு காஷ்மீர், திரிபுரா மற்றும் (சோமநாதர் ஆலயம் இருக்கும் பகுதியான) ஜுனகத் சமஸ்தானங்கள் மட்டும் தனித்து விடுதலையை அறிவித்தன.

ஹைதராபாத்தில் சமூகங்களின் போக்கு

          ஹைதராபாத் நிஜாம் பிரிட்டனிலிருந்து ஆயுதங்கள் வாங்க உத்தரவிட்டு, பெரும் தொகையை (பிரிட்டனின்) வெஸ்ட்மினிஸ்டர் வங்கிக்கு மாற்றினார். அந்தப் பணம் இன்னும் பிரிட்டிஷ் வசமே உள்ளது, இந்தியா–பாக்கிஸ்தான் தகராறு இன்னும் தீர்க்கப்படவில்லை. ஆந்திர மகாசபா தெலுங்கு பேசும் மக்களின் சமூகப் பண்பாட்டு இயக்கமாகும், பின்வந்த ஆண்டுகளில் அந்த அமைப்பில் இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தினர். முக்கியமான 1947 காலகட்டத்தில் ராவி நாராயண் அதன் தலைவராக இருந்தார். முஸ்லீம் அரசு என அதனைப் பாதுகாக்க, நிஜாமின் தனி இராணுவமான, ராஜ்கர்கள் (Razakers) மக்கள் மீது அடக்குமுறை அச்சுறுத்தல்களைக் கட்டவிழ்த்து விட்டது.

          உண்மையாதெனில், பெரும் எண்ணிக்கையிலான முஸ்லீம்கள் கடும் ஏழ்மையில் வாழ்ந்தனர். நிஜாமை ஆதரித்த நிலப்பிரபுகளில் கூடுதலான எண்ணிக்கையினர் இந்துகளே. துரதிருஷ்டவசமாக முஸ்லீம் ஜனத் தொகையில் ஒரு பிரிவினர் “அனல் மாலிக்” (நான் அரசன்) என்ற முழக்கத்தைப் பெரிதும் நம்பினர், நிஜாமை ஆதரித்தனர். [அதாவது, நாட்டை ஆள்வது தன்னைப் போன்ற ஒரு முஸ்லீம், எனவே அது தான் ஆட்சி செய்வதைப்போல –நான் நாட்டின் அரசன், என்பது ‘அனல் மாலிக்’ கோட்பாடு. புறநானூற்றுப் பாடல் ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்று பேசும்]. ஆனால் நாட்டுப் பற்று, ஜனநாயக மற்றும் முற்போக்குச் சிந்தனை கொண்ட முஸ்லீம்கள் நிஜாமுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு நல்கினர். உதாரணத்திற்கு, தனது நிலத்திற்காகப் போராடிய பண்டகி என்ற முஸ்லீம் விவசாயி இந்து நிலப்பிரபுக்களால் கொல்லப்பட்டார். நிஜாமை எதிர்த்த ‘அம்ரோஸ்’ (இன்று) இதழின் துணிச்சல் மிக்க ஆசிரியர், ஷோய்லபுல்லா கான் ராஜ்கர்களால் கொலையானார்.

தெலுங்கானா போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி

          தெலுங்கானா பகுதி போராட்டத்தைக் கம்யூனிஸ்ட்கள் தலைமையேற்று நடத்தியதால் அதற்கு ஒருபோதும் வகுப்புச் சாயம் பூசப்படவில்லை. அந்தப் போராட்டம்

வழக்கொழிந்த, வாழ்ந்து முடிந்த நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரானது. நிலைமை நன்கு கனிந்து இருந்தது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான தெளிவான அழைப்புக்குச் செவிசாய்த்த லட்சக் கணக்கான மக்கள் அதில் பங்கேற்றனர். உண்மையைச் சொன்னால், தெலுங்கானா பகுதியில் கட்சியின் ஸ்தாபனக் கட்டமைப்பு பலவீனமாகவே இருந்தது; ஆனால் கட்சித் தலைமையின் செல்வாக்குப் புகழ், சரியான திட்ட உத்தி, தந்திரோபாயங்கள் கட்சிக்குப் பெரிதும் உதவின.

          ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணத்தின் பகுதியாக இருந்த ஆந்திரா கட்சி ஸ்தாபனக் கட்டமைப்பு ரீதியில் சிறப்பான தயார்நிலையில் இருந்தது. கட்சித் தலைமை தத்துவார்த்த மற்றும் அரசியல் முதிர்ச்சியைப் பெற்றிருந்தது. ஆந்திரா கட்சி அனைத்து உதவிகளையும் தெலுங்கானா போராட்டத்திற்கு அளித்தது. ஆயுதப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன, நிதி மற்றும் ஆயுதம் திரட்டப்பட்டது, தன்னார்வத் தொண்டர்கள் தெலுங்கானா போராட்டத்தில் இணைந்தனர், பல ஆந்திரத் தோழர்கள் தெலுங்கானாவில் கொல்லப்பட்டு பலியாயினர். 1946லிருந்து ஹைதராபாத்தில் தங்கி இருந்த தோழர் சி இராஜேஸ்வர ராவ் மற்றும் தோழர்கள் பி சுந்தரையா, தம்மா ரெட்டி சத்யநாராயணா, எஸ்விகே பிரஸாத் போன்ற பிற புகழ்பெற்ற தலைவர்களும் மற்றும் பலரும் நேரடியாக இணைந்து போராட்டத்தில் பங்கேற்று வழிகாட்டினர்.

ஹைதராபாத்தில் தோழர் சி ஆர் கட்சியின் முதல் (உட்கரு) மையத்தை ஏற்படுத்தினார். மூவாயிரம் கிராமங்கள் கட்சிச் செல்வாக்கின் கீழ் வந்தன. நிலமற்றவர்களுக்குச் சுமார் பத்து லட்சம் ஏக்கர் நிலம் பிரித்தளிக்கப்பட்டது. நிலவுடைமை ஜமீன்தார்கள் கிராமங்களிலிருந்து தப்பியோடி எங்கோ மறைந்தனர். போராட்டத்தில் இரண்டு கட்டங்கள் இருந்தன.

போராட்டத்தில் இரண்டு கட்டங்கள்

முதல் கட்டம், ஆயுதப் போராட்டம் தொடங்கிய 1947 செப்டம்பர் 11ம் நாளிலிருந்து, ஹைதராபாத்துக்குள் இந்திய இராணுவம் நுழைந்த 1948 செப்டம்பர் 17ம் நாள் வரையானது. போராட்டத்தின் இரண்டாம் கட்டம், அந்த நாளிலிருந்து ஆயுதப் போராட்டம் திரும்பப் பெற்ற 1951 வரையானது. முதல் கட்டத்தில் மக்கள் அற்புதமான

பேராதரவையும் பரிவையும் வாரி வழங்கினர். நிலப்பிரபுகள் ஓடி ஒளிந்தனர். ராஜ்கர்கள் மற்றும் நிஜாமின் போலீஸ்படைகள் தங்கும் இடமாகவும் மையமாகவும் இருந்த ஜமீன்தார்களின் தேவிடீஸ் என்று அறியப்படும் மாபெரும் பங்களாக்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. லட்சக் கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். சர்தார் பட்டேலின் நம்பிக்கைகுரியவரான கே எம் முன்ஷி ஹைதராபாத் மாகாணத்தில் இந்திய அரசின் ஏஜெண்ட் ஜெனரலாக இருந்தார். மோதல் நிறுத்த ஒப்பந்தம் நிஜாமுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்டது.

இந்திய அரசின் அணுகுமுறை

நிஜாம் இந்திய ஒன்றியத்துடன் இணைய வேண்டும் என அரசு விரும்பினாலும், படைகளின் பலப் பிரயோகத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால் கம்யூனிஸ்ட்கள் வலிமை பெற்று வந்ததால், எங்கே கம்யூனிஸ்ட்கள் ஹைதராபாத்தைக் கைப்பற்றி விடுவார்களோ என்ற அச்ச உணர்வு இருந்தது. எனவே ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றியத்தின் தலைமைக்கு அழுத்தம் தந்தனர். இந்திய இராணுவம் நான்கு புறங்களிலிருந்தும் ஹைதராபாத் மாகாணத்திற்குள் 1948 செப்டம்பர் 13 நாள் அணிவகுத்து நுழைந்தனர், செப்டம்பர் 17 அன்று நிஜாம் சரணடைந்தார்.

நிஜாமின் படையால் வலிமையான இராணுவத்தை எதிர்த்து நிற்க முடியவில்லை. எனவே எதிர்ப்பு பெயரளவில் மட்டுமே இருந்தது. நிஜாம் சரணடைவதாகப் பிரகடனம் செய்தார், இந்தியாவுடன் ஹைதராபாத் மாகாணத்தின் இணைப்பு அறிவிக்கப்பட்டது. இந்த இணைப்புக்காக முக்கிய போரை நடத்தி எண்ணற்ற தனது தோழர்களின் இன்னுயிர்களைத் தியாகம் செய்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒன்றிய அரசு கலந்தாலோசிக்கவில்லை. இது மிகப் பெரிய துரோகம். (நோக்கம் பொதுவானதாக இருந்ததால், அரசு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை இயல்பான நேச சக்தியாகக் கருதி இருக்க வேண்டும்.) கட்சியுடன் விவாதங்கள் நடத்தப்படவில்லை. தூக்கி எறியப்பட வேண்டிய நிஜாமுக்கு ராஜ மரியாதை அளிக்கப்பட்டது, பின் அவரை ‘ராஜ் பிரமுக்’காக (ஆளுநருக்கு இணையான முக்கிய பிரமுகர் அந்தஸ்து), வருடத்திற்கு ரூபாய் 2 கோடி நிவாரண மானியத் தொகையுடன், அறிவித்தனர்.

சிபிஐ மீது இராணுவத்தின் அட்டூழியம்

கிராமங்களுக்குள் அணிவகுத்து நுழைந்த இந்திய இராணுவம் கம்யூனிஸ்ட்களைத் தேடி வேட்டையாடியது. மக்கள் மீது பெரும் கொடூர அட்டூழியங்களைப் புரிந்த ராஜ்கர்களின் தலைவனான காசிம் ரஸ்வி சிறு தண்டனைக்குப் பிறகு பாக்கிஸ்தான் செல்ல அனுமதிக்கப் பட்டான். இந்திய இராணுவம் ராஜ்கர்களை விடுதலை செய்தது; ஆனால் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட்களைக் கொன்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தைத் தொடர்வது என முடிவு செய்தது.

போராட்டத்தைத் தொடர்ந்தது ஏன்?

நிலப்பிரபுக்கள் கிராமங்களுக்குத் திரும்ப வந்தனர், பிரித்தளிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் கைப்பற்ற முனைந்தனர். ஜெனரல் சௌத்திரி கம்யூனிஸ்ட்களை 2 வாரங்களில் அழித்தொழிப்பதாக ஜம்பமடித்தார். குழப்பம் ஏற்பட்டது. நடுத்தர வர்க்கம், வணிகம் செய்யும் மக்கள், கற்றறிவாளர்கள் நிஜாமின் ஆட்சி முடிவுக்கு வந்ததாக மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய ஒன்றியத்துடன் இணைப்புச் சாதிக்கப்பட்டது. அவர்கள் ஆயுதப் போராட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் என விரும்பினர். ஏழை மக்கள் குழம்பினர். கட்டாயமாக ஆயுதப் போராட்டத்தைத் தொடர கட்சி நிர்பந்தப்படுத்தப்பட்டது.

புதிய முடிவு

நிஜாம் மற்றும் நிலப்பிரபுக்களுடன் சமரசம் செய்து கொண்டதன் மூலம் காங்கிரஸ் மற்றும் ஒன்றிய அரசு துரோகம் இழைத்தன என்பது உண்மையே! ஆயினும் ஒருக்கால், மாறிய சூழ்நிலைக்குப் பொருத்தமான வித்தியாசமான உத்தி தேவைப்பட்டிருக்கலாம். சிலர் நடுநிலை வகித்தர். காங்கிரஸ் ஆதரவாளர்கள் வெளிப்படையாகத் தீவிர பகை உணர்வு கொண்டனர். தங்கள் அடியாள் படைகளுடன் திரும்ப வந்த நிலவுடைமையாளர்கள் அத்தகைய எல்லா பிரிவுகளையும் ஒன்று திரட்டினர். ஆயுதப் போராட்டத்தைத் திரும்பப் பெறுதல், திரும்பப் பெறும் நேரம் காலம் மற்றும் பின்பற்ற வேண்டிய தந்திரோபாயம் கட்சிக்குள் சூடான விவாதப் பொருள்களாயின. கட்சி மதிப்புமிக்க பல தோழர்களின் உயிர்களைப் பலி கொடுத்து இழந்தது. இறுதியாக கட்சி ஆயுதப் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாகவும் பொதுத் தேர்தல்களில் பங்கேற்கவும் முடிவெடுத்தது. கட்சி மீது தடை விதிக்கப்பட்டிந்ததால் கம்யூனிஸ்ட்கள் ‘மக்கள் ஜனநாயக முன்னணி’ என்ற பெயரில் வரையறுக்கப்பட்ட இடங்களுக்குப் போட்டியிட்டனர், மாபெரும் பெருமபான்மையுடன் வெற்றிவாகை சூடினர்.

முடிவின் மீது மாறுபட்ட பார்வைகள்

இன்றும்கூட தெலுங்கானா ஆயுதப் போராட்டம் மற்றும் அதன் பாடங்கள் மிகவும் பொருத்தமானவை. ஆயுதப் போராட்டம் திரும்பப் பெற்றது இன்னும் விவாதத்திற்குரிய பொருளாக உள்ளது. திரும்பப் பெற்றது தவறான முடிவு என்று கூறும் நக்ஸைலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் சில பிரிவுகள், அவர்களின் தற்போதைய ஆயுதம் தாங்கிய போராட்டம் தெலுங்கானாவின் தொடர்ச்சி என்கின்றன. சில தோழர்கள் திரும்பப் பெற்ற முடிவு தாமதமாக எடுக்கப்பட்டது, இன்னும் முன்னதாகவே திரும்பப் பெற்றிருக்க வேண்டும் என்று நம்புகின்றனர். இந்தப் பொருள் மீது ஆழமான நேர்மையான விவாதங்கள் நடத்தப்படுவதன் மூலம் இந்தியப் புரட்சிக்கான முறையான பாடங்களை உய்த்துணரலாம்.

வரலாற்றைத் திரித்தல்

   தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின்போது, பாஜக மற்றும் அதன் முன்னோடியான ஜன சங்கம் பிறக்கவில்லை ஆயினும், ஆர்எஸ்எஸ் அமைப்பு அப்போது இருக்கவே செய்தது. ஒருமுறை ஆர்எஸ்எஸ் சர்சங்சாலக் (உச்சபட்ச தலைவர்) ஹைதராபாத்தை விட்டு வெளியேறக் கூறியபோது அவரும் அதற்குக் கீழ்ப்படிந்ததாகக் கூறப்படுகிறது. இஸ்லாமுக்கு மதம் மாறுவதற்கு எதிராக ஆர்ய சமாஜ் எதிர்ப் போராட்டம் நடத்தி இந்துயிசத்திற்கு மீண்டும் மாறும் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. அத்தருணத்தில் குழம்பினாலும் பின்னர் அவர்களில் பலரும் தங்கள் தவறை உணர்ந்தனர். அத்தகைய ஆர்ய சமாஜிகள் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர்.

          ஆயுதப் போராட்டத்தின் 74 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் தற்போது திடீர் பாசம் வந்தவர்களாக விடுதலை தினத்தை (லிபரேஷன் டே) அனுசரிக்கின்றனர்; தெலுங்கானாவை விடுதலைப் பெறச் செய்ததில் சர்தார் பட்டேல் தீர்மானகரமான பங்கினை ஆற்றியதாக உரிமை கோருகின்றனர். சுதந்திர இந்தியாவுக்கு எதிராகக் கம்யூனிஸ்ட்கள் போர் தொடுத்ததாக மேலும் குற்றம் சாட்டுகின்றனர். பொய் புனைந்துரைத்தலில் எந்த அளவுக்குக் கீழிறங்க முடியுமோ அப்படி பாஜகவினர் மோசமாகக் கம்யூனிஸ்ட்களைக் களங்கப்படுத்த ‘கம்யூனிஸ்ட்கள் ராஜ்கர்களுடன் கை கோர்த்தனர்’ என அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தவும் துணிகின்றனர். அவர்களது இந்த முழுமையான நோக்கம், தெலுங்கானா ஆயுதப் புரட்சியை முஸ்லீம் அடக்குமுறைக்கு எதிரான இந்துகளின் விடுதலைப் போராட்டம் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்கே ஆகும். இம்முயற்சி கேடுகெட்ட கட்டுக்கதை என்பதைத் தவிர வேறில்லை. இது அப்பட்டமாக வரலாற்றைச் சிதைத்துத் திரிப்பது.

ஆயுதப் போராட்டத்தின் உண்மை

       உண்மை யாதெனில், நிஜாம் தலைமை தாங்கியதும், இந்து நில உடைமையாளர்கள் மற்றும் சில முஸ்லீம் ஜாகிர்தார்கள் ஆதரித்ததுமான நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான வீரம் செறிந்த போராட்டமே வரலாற்றுப் புகழ் பெற்ற தெலுங்கானா போராட்டம்!

    நிஜாம் மதசார்பற்றவர் அல்ல என்பது உண்மைதான், ஆனால் தனது சொந்த காரணங்களுக்காக அவர் எப்போதும் வகுப்புவாத நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றவில்லை. அவர் இந்து ஜாகிர்தார்கள் மற்றும் தேஷ்முக்களைப் புரவலராக ஆதரித்தார். அவரிடம் சில இந்து அதிகாரிகளும் இருந்தனர்; இராஜியத்தின் பெரும்பான்மை இந்து குடிமக்களுடன் தொடர்பு கொள்ள நிஜாமிற்கு அவர்கள் தேவைப்பட்டனர். ஆனால் பாரபட்சம், குறைந்தபட்சம் மொழி மற்றும் சமயம் தொடர்பான பாரபட்சம், நிச்சயமாக அங்கே இருந்தது.

     ஆனால் ஆயுதம் எடுத்துப் போராடியவர்கள், ஒடுக்குமுறை நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்துத்தான் தாங்கள் போராடுகிறோமே தவிர ஒரு மதத்தை எதிர்த்து அல்ல என்பதில் தெளிவாக இருந்தார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்டிஏ) ஆட்சியில் இருந்தபோது பாஜக அந்த அருவருப்பான பிரச்சாரத்தைத் தொடங்கியது. அப்போது ஹைதராபாத் மாநில சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பரிசீலனைக் குழு (ஸ்கிரீனிங் கமிட்டி, விபி சிங் ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட அதிகாரபூர்வ குழு, பின்னர் ஐக்கிய முன்னணி ஆட்சியில் உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா நியமித்த குழு) ஆயிரக் கணக்கான தெலுங்கான விடுதலைப் போராட்ட வீரர்கள் பெயர் பட்டியலை ஓய்வூதியம் வழங்கக் கோரி சிபார்சு செய்தது. ஆனால் அப்போது 1998 முதல் 2004 வரை உள்துறை அமைச்சராக இருந்த எல் கே அத்வானி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அந்த ஓய்வூதியத்திற்கு அனுமதி வழங்க மறுத்து ஸ்கிரீனிங் கமிட்டி சிபார்சை நிராகரித்தார்.

          நிஜாமிற்கு எதிரான மக்கள் போராட்டத்தில் எந்தப் பங்கும் வகிக்காத சங் பரிவார் கும்பல், வெட்கமற்று இப்போது வரலாற்றைத் திரிக்கத் தனது அருவருப்பான தந்திரங்களைச் செயல்படுத்த முயற்சிக்கிறது. பொய்களில் பிறந்த பாஜக, பொய்களிலேயே வளர்ந்தது. அன்னிய ஆட்சியிலிருந்து ஒரு நாடு சுதந்திரம் அடைந்தால் அதனை விடுதலை என்று அழைப்பார்கள். விடுதலை என்பது, அன்னிய ஆட்சியிலிருந்தும், ஒடுக்குமுறையாளர்களின் சுரண்டலிருந்தும் மக்களை விடுவிப்பது என்றும் சமூக ரீதியிலும், அரசியல் ரீதியிலும் உண்மையான ஜனநாயகத்தைச் சாதிப்பது என்றும் விரிவான பொருள் உடையது.

புதிய ஆய்வு தேவை

          தெலுங்கானா ஆயுதப் போராட்டம் பல்வேறு கோணங்களிலிருந்து பரிசீலனை செய்யப்பட வேண்டும். கட்சியால் தலைமை தாங்கப்பட்ட ஏழைகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு விவசாயிகள் தவிர, நடுத்தர வர்க்க வேளாண் குடியினர், சிறு குறு வணிகர்கள், அறிவுச் சமூகம் என்ற பிரிவுகளிலிருந்தும் பரந்த அளவிலான மக்கள் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தனர், மிக மிக சிரமமான காலங்களில் நமது தலைமறைவு வாழ்வு தலைவர்களைக் காப்பாற்றியுள்ளனர். கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள், இந்துகள், முஸ்லீம்கள் எனப் பலதரப்பினர் ஆயுதப் போராட்டத்துடன் உறுதியாக நின்றனர்.

          பெண்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

  சமூகத்தின் பல்வேறு பிரிவுகள் தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தை ஆதரித்ததற்கான காரணங்கள் யாவை என்பது குறித்து ஆழமான ஆய்வு நடத்த வேண்டிய தேவை உள்ளது. அத்தகைய ஆய்வு மட்டுமே தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தை ஒருங்கிணைந்த முறையில் புரிந்து கொள்ளவதற்கு ஒருவருக்கு உதவிடும்.

     தெலுங்கானா குறித்த இதுவரையான பெரும்பாலான நூல்களும் எழுத்துகளும் போராட்டத்தின் வரையறுக்கப்பட்ட கோணத்தில் இருந்து மட்டுமே செய்யப்பட்டுள்ளது. சிலர் இந்த வீரம் செறிந்த போரின் பகுதி விவரிப்புகளை மட்டுமே தந்துள்ளனர்.  கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு ஏற்படுத்திய சூழல், சில முக்கியமான தலைவர்களின் பங்களிப்புகளைக் குறைவுபடுத்தவும் மற்றும் அவர்களையே புறக்கணிக்கும் அளவும் சில எழுத்தாளர்களை முயற்சிக்கச் செய்துவிட்டது. அதற்கு மாறாக, பாரபட்சம் அற்ற, விருப்பு வெறுப்பற்ற முறையில், தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த விரிவான பதிவுகளும், ஆய்வு எழுத்தாக்கங்களும் இனி எதிர்கால வரலாற்றாளர்களால் திரிபின்றி எழுதப்படும் என நான் நம்புகிறேன்.

          1948 செப்டம்பர் 17ம் நாள் இந்திய இராணுவம் ஹைதராபாத் மாகாணத்திற்குள்

நுழைந்து, அதனை நிஜாமிடமிருந்து மீட்டு இறுதியில் ஹைதராபாத் மாகாணத்தை இந்தியத் துணைக்கண்டத்தின் ஒன்றியத்துடன் ஒன்றிணைத்த நாள்!

தெலுங்கானா ஆயுதப் போராட்டத் தியாகிகளுக்குச் செவ்வணக்கம்!

(கட்டுரையாசிரியர், சுரவரம் சுதாகர் ரெட்டி,

மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சிபிஐ மேனாள் பொதுச் செயலாளர்)

--நன்றி : நியூஏஜ் (செப்.18 – 24)

--தமிழில் : நீலகண்டன்,

தொடர்புக்கு 94879 22786

   

 

 

     

           

 

No comments:

Post a Comment