Sunday 25 September 2022

நியூஏஜ் தலையங்கம் -- ஹைதராபாத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினர், கம்யூனிஸ்ட்கள்

 நியூஏஜ் தலையங்கம் (செப்.25 –அக்.21)

                                     ஹைதராபாத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினர், கம்யூனிஸ்ட்கள்

     தெலுங்கானா பகுதியின் ஹைதராபாத் சமஸ்தான அரசுக்கு எதிராக விவசாயிகளின் கிளர்ச்சியைத் தலைமையேற்று நடத்தியதே தெலுங்கானா ஆயுதப் போராட்டம். அடிப்படையில் அப்போராட்டம் விவசாயப் பெருங்குடி மக்களை நியாயமற்ற சுரண்டலில் இருந்து விடுதலை 

 மற்றும் இந்தியா விடுதலை அடையும்போது ஹைதராபாத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்தியா சுதந்திரமடைந்த உடனே 1947 செப்டம்பரில் தோழர் டாக்டர் ராஜ்பகதூர் கவுர் எழுதிய புத்தகத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது; அந்நூலிற்கு ராஜ்பகதூர், ‘ஹைதராபாத்தின் மீது மூவர்ணக் கொடி நிச்சயம் பறக்கும்’ என்று சரியாகவே தலைப்பிட்டார். 1944 –46களில் தொடங்கிய விவசாய எழுச்சி 1946 –51ல் அரசுக்கு எதிரான ஒழுங்கமைக்கப்பட்ட பெருங்கிளர்ச்சியாகப் பரிணமித்தது; அந்த மக்கள் போராட்டத்தை வழிநடத்திய புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவரே டாக்டர் ராஜ்பகதூர் கவுர்.

   ஹைதராபாத் நிலப்பிரபுத்துவ ராஜாங்கத்தில் பெரும்பான்மையான நிலங்கள் தோராஸ் எனப்படும் (doras) நிலப்பிரபுக்களின் கைகளில் குவிந்து கிடக்க, சுரண்டல் மிகக் கடுமையாகக் கோலோச்சியது. அவ்வேளாண் அடிமைமுறையில் கிராமங்களின் விவசாயிகள் மீது (ஜமீன்தார்களைவிட) தோராஸ் முழுமையான அதிகாரம் செலுத்தினர். 1930களில் நிலமை மோசமாகி, வணிகப் பயிர்களை நோக்கி மாற்றம் நிகழ்ந்தது. நாற்பதுகளில் விவசாயிகள் கம்யூனிசத்தின்பால் திரும்பி, ஆந்திர மகாசபா மூலம் அமைப்பாக ஒன்று திரண்டு, உரிமைகள் இயக்கத்தைத் தொடங்கினர். அப்பகுதியைப் பாதித்த உணவுப் பஞ்சம் தூண்டுகோலாக, இரண்டாவது உலகப் போரின் இறுதியில் அந்த இயக்கத்தை நிர்வாகமும் தோராஸ்களும் நசுக்க முயன்றதைத் தொடர்ந்து, அந்த இயக்கம் கிளர்ச்சியாகக் கைமீறியது.

          வாராங்கல் மாவட்டக் கடவாடி கிராமத்தில் தோரா ஏஜெண்ட்டுகளால் உள்ளூர் விவசாயத் தலைவர் கொல்லப்பட்டபோது, 1946 ஜூலை 4ல் கிளர்ச்சி தொடங்கியது. முதலில் நிஜாம் மிர் காசிம் அலி கான் என்பானாலும் பின்னர் காசிம் ரஸ்வியாலும் தொடர்ந்த அடக்குமுறைக்குப் பதிலடியாக நால்கொண்டா மற்றும் வாராங்கல் மாவட்டங்களில் கருக்கொண்டு தொடங்கிய கிளர்ச்சி, தெலுங்கானா முழுவதும் புரட்சியாகப் பரவி வளர்ந்தது. ஹைதராபாத் அரசுப் படைகளும் போலீசும், அடியாட்கள் கும்பல் ரஸாக்கர்களுடன் இணைந்தாலும் கிளர்ச்சியாளர்களை அடக்க இயலாதது மட்டுமல்ல, அவர்கள் பின்வாங்கி ஓட நேர்ந்தது; கிளர்ச்சியாளர்களின் படைகள் வெற்றிகரமாகக் கொரில்லா தாக்குதல்களை நடத்தியது. கிளர்ச்சியாளர்கள் கிராம ராஜ்யங்களையும், கிராமக் கம்யூன்களையும் கொண்டதாக இணையான அரசு நிர்வாக முறையை ஸ்தாபித்தனர். அம்முறை சமூகப் புரட்சிக்கு வித்திட்டது; அங்கே சாதி, பாலின வேறுபாடுகள் குறைந்தன.

பெண்களின் பங்கேற்பு, அவர்களின் ஆயுதம் தாங்கிய குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் அதிகரித்தது. நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படுவது அதிகரிக்க, விவசாயிகளின் நிலைமையும் மேம்பட்டது. 1948ன் உச்சத்தில் கிளர்ச்சி ஏறத்தாழ தெலுங்கானா பகுதி அனைத்தையும் கைப்பற்ற, குறைந்தது 4,000 கிராமங்கள் அவர்களின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.

     தெலுங்கு மொழி பேசும் கிருஷ்ணா – கோதாவரி டெல்டா பிராந்தியத்தின் அருகமை பகுதிகளில், ஆந்திர மகாசபா (மெட்ராஸ்) மற்றும் அனைத்திந்திய கிசான் சபா போன்ற வேளாண்மை அமைப்புகள் மூலம் பெருமளவு ஸ்தாபன ரீதியாக 1934 முதலாகக் கம்யூனிஸ்ட்கள் தீவிரமாகச் செயல்பட்டு வந்தனர். தெலுங்கானா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பயிற்சிபெற்ற முதலாவது கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் செயல்பாடு வாராங்கல் மாவட்ட மாதிரா –கம்மம் பகுதியில் நிகழ்ந்தது; அதனை வைரா மற்றும்

பலேர் (Wyra and Paleru) நீர்ப்பாசனத் திட்டங்களில் குடியமர்ந்த விவசாயிகள் மூலம் நிகழ்த்தினர். அவர்களுக்குக் கடலோர ஆந்திராவில் உறவினர்கள் இருந்தனர். முங்கலாவில் பணியாற்றிய புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவரான சந்திரா இராஜேஸ்வர ராவ் (சி ராஜேஸ்வர ராவ்) முயற்சிகளால் முதலாவது கம்யூனிஸ்ட் அமைப்புகள் வாராங்கல் மற்றும் நால்கொண்டா மாவட்டங்களில் நிறுவப்பட்டன. தெலுங்கானாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசக் கமிட்டி  பர்வாஎல்லி வெங்கடரமணநாயக்  தலைமையின் கீழ் 1941ல் அமைக்கப்பட்டது.

          கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சிக்கு மாணவர்கள் இயக்கம் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பு செய்தது. (வங்கப் பிரிவினையைக் கண்டித்துத் தொடங்கப்பட்ட) வந்தே மாதரம் எதிர்ப்பு இயக்கங்களில் அனுபவங்கள் பெற்று, எண்ணற்ற முற்போக்கு மாணவர்களின் இயக்கங்கள் அமைக்கப்பட்டன; அவை இறுதியில் 1942 ஜனவரியில் அனைத்து ஹைதராபாத் மாணவர்கள் சங்கமாக ஒன்றிணைந்தன. தேவுலபள்ளி வெங்கடேஸ்வர ராவ் என்ற வந்தே மாதரம் எதிர்ப்பியக்கங்களின் மேனாள் மாணவப் போராட்டக் கிளர்சியாளர், வாராங்கல் மற்றும் நால்கொண்டா மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைப்பதில் காரணகர்த்தாவாக இருந்தார். ஹைதராபாத் நகரின் தேசிய, முற்போக்கு மற்றும் மதச்சார்பு கொள்கை உடைய கற்றறிவாளர்கள்

அரசியல் தீவிரச் செயல்பாடு நோக்கியும் மாறினார்கள்; முற்போக்கு ‘நயா ஆதாப்’ பதிப்பகம் வெளியிட்ட கம்யூனிஸ்ட் நூல்கள் மற்றும் வகுப்புவாத குழுப்போக்கு அமைப்புகளின் வளர்ச்சிக்கு எதிர்வினையாகத் தொடக்கத்தில் அமைக்கப்பட்ட காம்ரேட்ஸ் அசோசியேஷன் செல்வாக்கிற்கும் அவர்கள் ஆட்பட்டார்கள். இந்த அசோஸியேஷன் ராஜ்பகதூர் கவுர் மற்றும் (உருது கவிதைகளுக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்ற) மக்தூம் மொஹியுதீன் தலைமையின் கீழ் கம்யூனிஸ்ட் இயக்கமானது.

 1947 பிப்ரவரியில் பிரிட்டிஷ் நிர்வாகம் இந்தியத் தலைமைக்கு அதிகாரத்தை மாற்றித் தருவதாக அறிவித்தபோது, சமஸ்தான அரசுகளுக்கு, அவை இந்தியா அல்லது பாக்கிஸ்தான் நாட்டுடன் இணையலாம் அல்லது சுதந்திர நாடாகத் தொடரலாம் என்று அவற்றிற்கு விருப்பத் தேர்வை வழங்கியது. ஹைதராபாத் நிஜாம், முஸ்லீம் பிரபுகள் மற்றும் மஜ்லிஸ்-இ-இதிகாதுல் முஸல்மீன் அமைப்பு ஹைதராபாத் சுதந்திர அரசாக வேண்டும் என விரும்பினர்; ஆனால் பெரும்பான்மையான குடிமக்கள் அரசியல் உரிமை மற்றும் சுயஅரசாட்சியில் பங்குபெறலாம் என்ற நம்பிக்கையில் இந்தியாவுடன் இணைய விரும்பினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி தனது கோரிக்கைப் பட்டியலில் இந்தியாவுடன் ஹைதராபாத் சமஸ்தான இணைப்பைச் சேர்த்ததுடன், இந்திய தேசியக் காங்கிரசின் முற்போக்கு இடதுசாரிப் பிரிவுடன் கூட்டு சேர்ந்து நிஜாமை அக்கோரிக்கையை ஒப்புக்கொள்ள வற்புறுத்தியது.

    1947 மார்ச் மாதத்தில் காங்கிரசில் பிளவு மிகக் கூர்மையடைய, மாநிலக் காங்கிரசின் செயற்குழு மீட்டமைக்கப்பட்டு சுவாமி இராமனந்த தீர்த்தர் 751க்கு 498 என்ற பெரும் வாக்கு வித்தியாசத்தில் பிஜி ராவ்வை வென்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இதனால் அவரால் காங்கிரசுக்குள் மிதவாதிகளைத் தவிர்க்க முடிந்தது. அவர் கம்யூனிஸ்ட்களை அவர்களுடைய கிளர்ச்சிக்காகப் புகழ்ந்தார், மாநில காங்கிரசுக்குள் மேலும் புரட்சிகரமான கொள்கைகளைக் கொண்டுவர ஆலோசனை தந்தார்.

          ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைக்கக் கோரி காங்கிரஸ் சத்தியாகிரகத்தில் இறங்க, சுவாமி இராமனந்த தீர்த்தர் தலைமையிலான மாநிலக் காங்கிரஸ் சட்டமறுப்புப் பிரச்சாரம் தொடங்கியது. காங்கிரஸ் போராட்ட முறையின் திறன் செயல்திறன் மீது தயக்கம் இருந்தாலும் அவர்களது போராட்டத்தில் கம்யூனிஸ்ட்கள் கலந்து கொண்டனர். விரைவில் தெலுங்கானாவில் பெரும்பாலான போராட்டங்கள், குறிப்பாகக் கிராமப் பகுதிகளில், கம்யூனிஸ்ட்களால் நடத்தப்பட்டன; இதனால் இவர்களுக்கு இடையில் போலீசாரால் வேறுபடுத்தி அறிய முடியாததால் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து விட்டன என்று கருதினர். இந்தச் சூழ்நிலையில் கம்யூனிஸ்ட்கள் மத்தியில் பொதுவான புரிதல், “வலதுசாரி காங்கிரஸ்காரர்களின்” பின்னணியில் தோராகளின் ஆதரவு இருந்ததாக எண்ணினர்; இதனால் அவர்களோடு எந்த வடிவத்திலும் கூட்டு சேர்வதை எதிர்த்தனர். அதே நேரம் “இடதுசாரி காங்கிரஸ்காரர்கள்” கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைய விரும்பினார்கள், ஆனால் அந்த விருப்பத்தை முன்னே எடுத்துச் செல்ல இயலாதவர்களாக இருந்தனர்.

          முன்பு தோரா அமைப்பாகக் காணப்பட்ட ஆந்திரா கான்பரன்ஸ் என்ற அமைப்பு, விவசாயிகள் மத்தியில் பிரபலமாகி, தெலுங்கானாவில் அதனை ஆந்திரா மகாசபா (AMS) என்று குறிக்கப்படலானது. அதே காலகட்டத்தில் வெங்கடேஸ்வர ராவ், உற்சாகமிழந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை நேரடியாகக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்தார். தொடக்கத்தில் பயிரிடுவோர் அசோஸியேஷன் போன்ற நிலக்கிழார்களின் அமைப்புகள் மிதவாத தலைமையின் எதிர்ப்பைச் சந்தித்தன; மேலும் அரசிடமிருந்து வந்த கடுமையான அடக்குமுறைகள் மூலமாக ஆந்திர மகாசபா மெல்ல நிஜாமிய நிர்வாகத்தை எதிர்க்கும் தீவிரப் பெருந்திரள் மக்கள் இயக்கமாக மாறியது; அது, விவசாயிகள், தொழிலாளி வர்க்கம், நடுத்தர வர்க்கம் மற்றும் இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தீரம்மிக்க கூட்டணியாக மாறியது. இந்த நிகழ்முறை 1944ல் ஆந்திர மகாசபாவின் (போன்கிர் என்ற பழங்காலக் கோட்டை இருக்கும்) போன்கிர் அமர்வில் நிறைவடைந்தபோது, இரண்டு இளம் கம்யூனிஸ்ட்கள் ராவி நாராயண் ரெட்டி மற்றும் பத்தம் எல்லா ரெட்டி முறையே அதன் தலைவராகவும் செயலாளராகவும் தேர்வு பெற்றனர்.

    பின்னர் நிகழ்ந்தவைத் தியாகிகளால் எழுதப்பட்ட தெலுங்கானா ஆயுதப் போராட்டம், ஹைதராபாத் சமஸ்தானத்தில் கம்யூனிஸ்ட்கள் மூவர்ணக் கொடியைப் பறக்கவிட்டனர், ஹைதராபாத் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. 

               தெலுங்கானா தியாகிகளுக்குச் செவ்வணக்கம்!

--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

                         

 

No comments:

Post a Comment