Friday 9 September 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 70 -- பூபேந்திரநாத் தத்தா

 

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 70

பூபேந்திரநாத் தத்தா

   --இந்தியாவில் மார்க்ஸியத்தின் தோற்றத்தை     முன்னறிவித்த தீர்க்கதரிசி

--அனில் ரஜீம்வாலே

          டாக்டர் பூபேந்திரநாத் தத்தா, சுவாமி விவேகானந்தரின் மிக இளைய சகோதரர். புகழ்பெற்ற ஜெர்மானிய இந்தியவியலாளர் ஹில்ரூடு ரஸ்டவ் (Hiltrud Rustau) கூற்றின்படி ‘விவேகானந்தர் தன்னை ஒரு சோஷலிஸ்ட் என்று அழைத்துக் கொண்டது வாய்தவறிச் சொன்னதல்ல; அவரது சகோதரரும் ஒரு சோஷலிஸ்ட், ஆனால் வேறுவகைப் பாதையில் சோஷலிசத்தை நாடியவர். ஒரு முழுமையான சோஷலிஸ்ட்டாக மலர்வதற்கு முன் சுவாமி விவேகானந்தர் போதுமான நீண்ட காலம் வாழவில்லை. பூபேந்திரநாத் தனது ஆதர்ச உற்சாகத்தை மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் லெனினிடமிருந்து தருவித்துக் கொண்டார்.

இளமைக் காலம்

            பூபேந்திரநாத் 1880 செப்டம்பர் 4ம் நாள் கல்கத்தாவில் பிறந்தார். அவரது தந்தை விஸ்வநாத் தத்தா கல்கத்தாவில் பிரபலமான சட்டத்துறை அட்டர்னி; அவர் உறுதியான மூடநம்பிக்கை எதிர்ப்பாளராக இருந்ததுடன் கைம்பெண் மறுமணத்தையும் ஆதரித்தார். பூபேனின் தாய் ஓரளவு நன்கு படித்தவர், ஆங்கிலம் அறிந்தவர், விழிப்புணர்வு பெற்றவர் ஆதலால் அவரது எதிர்கால வளர்ச்சியைக் குறிப்பிடுமளவு வடிவமைத்தார். கல்கத்தாவில் ஈஷ்வர் சந்திர வித்யாசாகர் நிறுவிய மெட்ரோபாலிடன் பள்ளியிலிருந்து பூபேன் நுழைவுத் தேர்வில் தேறினார்.

பிரம்ம சமாஜத்தில்

       மூத்த சகோதரர் நரேந்திரநாத் (சுவாமி விவேகானந்தர்) போலவே பூபேந்திரநாத்தும், தாராளச் சிந்தனையர் மற்றும் இளைஞர் பிரிவுகள் தேடி இணைந்த பிரம்ம சமாஜத்தின் செல்வாக்கிற்கு ஆட்பட்டார். விவேகானந்தர் எழுதிய ‘கொழும்பிலிருந்து அல்மோரா வரை’ என்ற நூலைப் படித்த பூபேந்தருக்கு, அரசியல் சீர்திருத்தங்கள் இல்லாமல் சமூக-சமய சீர்திருதங்கள் சாத்தியமில்லை என்பதில் நம்பிக்கை ஏற்பட்டது. இக்கருத்துடன் 1902--03ல் புரட்சிகர இயக்கத்தில் அவர் இணைந்தது, இறுதியில் லெனினுடன் (மறைமுகமாக) தொடர்பு கொள்வதில் கொண்டுபோய் நிறுத்தியது.

            அவரது பதின் இளைமைப் பருவம், இந்து – முஸ்லீம் நல்லெண்ண நட்புறவு சூழலில் கடந்தது.

            அனுஷிலான் சமிதி என்ற புரட்சிகர இயக்கத்தில் இணைந்த அவர், தனித்த இந்து புனித நூல்களின் மேல் மட்டும் உறுதிமொழி ஏற்க மறுத்து விட்டார். அவருக்காகப் பல்வேறு மதங்களின் கலவையான புனித நூல்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அவருக்கு வழங்கப்பட்டது.

            புரட்சி மற்றும் சோஷலிசம் குறித்த வகுப்புக்களையும் அனுஷிலான் நடத்தியது. பின்னர் ‘ஜுகாந்தர் பத்திரிகா’வில் சேர்ந்த பூபேந்தர் அதன் ஆசிரியரானார். அப்பத்திரிக்கை பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக ஆயுதப் புரட்சியைப் பரிந்துரைத்தது. 1906 டிசம்பர் 2ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விமர்சனம் செய்த யுகாந்தர், எவ்வாறு நமது இந்தியச் செல்வம் நாளும் இங்கிலாந்துக்குக் கொள்ளை கொண்டு போவதை விளக்கியது.

            புரட்சிகர எழுத்துகள் மற்றும் நடவடிக்கைகளுக்காகப் பூபேந்திரநாத் தேசத் துரோகக் குற்றச்சாட்டில் 1907 ஜூலை 5ல் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது அவருக்கு ஆதரவாகச் சகோதரி நிவேதிதா (விவேகானந்தரின் சீடர்) நின்றார். ஒரு வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவர், சிறையில் மோசமாக நடத்தப்பட்டார்.  

            கல்கத்தாவில் டாக்டர் நீல்ரத்தன் சர்கார் இல்லத்தில் சுமார் 200 பெண்கள் கூட்டம் நடத்தி இப்படியொரு மகனைப் பெற்றதற்காகப் புவனேஸ்வரி தேவியைப் பாராட்டினர். அவர்கள் தங்கள் பாராட்டுரையை ஒரு பட்டுத் துணி மீது சில்வர் தட்டில் வைத்து வழங்கினர். புவனேஸ்வரி தேவி பதிலுரையில், ‘பூபேனின் பணி இப்போதுதான் தொடங்கியுள்ளது’ என்றவர், “அவரை நாட்டின் சேவைக்கு நான் அர்ப்பணித்து விட்டேன்” என்று கூறினார்.

      பின்னர், ஒருமுறை, பூபேன் தன் தாயிடம் நகைச்சுவையாகக் கூறினார்: “நீங்கள் விவேகானந்தரின் தாய் என்பதற்கான பெரும் அங்கீகாரத்தை ஒருபோதும் பெற்றதில்லை. ஆனால் எனது தாயாகப் பொதுமக்களின் வரவேற்பையும் பெற்று விட்டீர்கள்!”

அமெரிக்காவில் பூபேந்திரநாத்

          விடுதலையாகும் தருணத்தில் பூபேந்திரநாத்திடம் ஓர் உதவிச் சிறைஅதிகாரி, அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கைத் தவிர்க்க ஏதாவது வெளிநாட்டிற்குச் சென்றுவிடும்படி யோசனை

கூறினார். எனவே விடுதலையானவுடன் பூபேன் மாறுவேடத்தில் அமெரிக்கா புறப்பட்டார். பூபேந்தருக்குப் புறப்படும் திட்ட ஏற்பாடுகளை --(ஒரு பள்ளி ஆசிரியரும், விவேகானந்தரின் நெருங்கிய நண்பரும் பெண் சீடருமான) சகோதரி கிரிஸ்டைன் கூறிய யோசனைகளின்படி -- அவரது மூத்த சகோதரர் மகேந்திரநாத் செய்து உதவினார். தேவையான பணத்தை அளித்துத் தாய் உதவினார். விடுதலையான மறுநாளே கல்கத்தாவிலிருந்து அமெரிக்கா செல்லும் கப்பலில் ஏறினார். அமெரிகாவில் அவர் தங்குமிடம் மற்றும் கல்விக்கு விவேகானந்தர் மற்றும் சகோதரி நிவேதிதாவின் நண்பர்கள் ஏற்பாடு செய்தனர். நியூயார்க் இந்தியா இல்லத்தில் தங்கிய அவரை அமெரிக்காவிலும் பிரிட்டிஷ் போலீசார் கண்காணித்தனர்.

            பூபேன் (Bronx) புரோனக்ஸ் பார்க் சோஷலிசக் கிளப்பின் உறுப்பினராகி, சோஷலிசத் தலைவர்கள் ஆற்றிய உரைகளில் கலந்து கொண்டார். அவர் 1912ல் நியூயார்க் பல்கலைக் கழகத்திலிருந்து இளங்கலைப் பட்டம் பெற்று, 1914ல் பிரவுண் பல்கலைக் கழகத்திலிருந்து சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

            பூபேந்திரநாத் விரைவில் லாலா ஹர்தயாள் நிறுவிய கத்தார் கட்சியில் (Gadar Party) இணைந்து அதன் உயர் பொறுப்புகளுக்கு உயர்ந்தார்.

ஜெர்மனியில் : பெர்லின் கமிட்டி

            முதலாவது உலகப் போர் தொடங்கியதுடன், இந்தியப் புரட்சியாளர்கள் பலர், இந்திய விடுதலை இயக்கத்திற்கு ஜெர்மானிய உதவியைப் பெறலாம் என்ற நம்பிக்கையால், பெர்லினுக்கு இடம் மாறினர். இந்தியப் புரட்சியாளர்களின் பெர்லின் குழு வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா மற்றும் பிறர் முயற்சியால் அமைக்கப்பட்டது. பூபேந்திரநாத் மற்றும் பிற கதார் இயக்கப் புரட்சியாளர்கள் விரைவில் பெர்லின் சென்று இணைந்தனர். அந்தக் குழு ஜெர்மன் அரசிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிக்கான வாக்குறுதியைப் பெற்றது.

            அதன் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பூபேந்திரநாத் அப்பொறுப்பில் 1916 –18 காலகட்டத்தில் செயல்பட்டார். அவரது தலைமையின் கீழ் குழுவின் அணுகுமுறை தீவிர மாற்றங்களை அடைந்தது. இந்தியப் புரட்சியாளர்கள் ஜெர்மன் நிதி உதவியை –இந்தியா விடுதலை பெற்றதும் திரும்பச் செலுத்தும் -- ‘கடனாக’ப் பெறச் சம்மதித்தனர்.

ரஷ்யப் புரட்சி

            உறுதியளிக்கப்பட்ட ஆயுதங்களுடன் கப்பல்கள் வராததால் ஜெர்மன் உதவியுடன் கிளர்ச்சி நடத்தும் முயற்சிகள் மிக மோசமாகத் தோல்வியடைந்தன. 1917 மே மாதத்தில் பெர்லின் குழு மற்றொரு அலுவலகத்தை ஸ்டாக்ஹோமில் அமைத்தது; அங்கே ரஷ்ய போல்ஷ்விக்களுடன் பூபேந்திரநாத்துக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஸ்டாக்ஹோம் குழு அக்டோபர் புரட்சிக்குச் சற்று முன்பு பெத்ரோகிராடு சோவியத்துக்கு வேண்டுகோள் விடுத்து, இந்திய விடுதலை இயக்கம் குறித்து விவாதித்தது.

            1917 நவம்பர் 7 அன்று ரஷ்யப் புரட்சி நடந்தது. இந்தியப் புரட்சியாளர்கள் தங்கள் நடவடிக்கைகளை ஜெர்மனியிலிருந்து ரஷ்யாவுக்கு மாற்றினர். பூபேன் 1919ல் மானுடவியல் ஆய்வுக்காகப் பெர்லின் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து அத்துறையில் 1923ல் ஹம்பர்க் பல்கலைக் கழகத்திலிருந்து முனைவர் பட்டம் (டாக்டரேட்) பெற்றார். அதற்கு முன் பெர்லின் மனித இனவியல் கழகத்தில் (எத்னோலாஜிகல் சொஸைட்டி) உறுப்பினராகவும் சேர்ந்தார்.

            எம் என் ராய் பெர்லினில் சிறிது காலம் தங்கியிருந்தபோது இந்தியக் கம்யூனிஸ்ட் அறிக்கை ஒன்றைத் தொகுத்து, அதனைப் பூபேன் மற்றும் பிறருடன் விவாதித்தார். பூபேன் அதில் கையெழுத்திடவில்லை.

            சோவியத் அதிகாரிகள் அழைப்பின் பெயரில் 1921 தொடக்கத்தில் மாஸ்கோ சென்ற இந்தியப் புரட்சியாளர்கள் குழுவில் ஓர் உறுப்பினராகப் பூபேந்திரநாத் சென்றார். அவர்கள் காமின்டர்ன் கமிஷன்களின் கூட்டங்களில் கலந்து கொண்டனர். அதற்கு முன் ஏற்கனவே 1920 முற்பகுதியிலேயே எம்என் ராய் காமின்டர்ன் காங்கிரசுக்குச் சமர்ப்பித்திருந்த அவரது ஆய்வறிக்கை (தீசிஸ்), காமின்டர்ன் மற்றும் லெனினால் நிராகரிக்கப்பட்டது. பூபேந்திரநாத் மற்றும் வீரேந்திர சட்டோபாத்யாயாவும் அவர்களது சொந்த ஆய்வுகளைத் தனித்தனியாகப் பல்வேறு அமைப்புகளுக்கு அளித்தனர். விடுதலை இயக்கத்தில் அணி சேர்வது (கூட்டணி) குறித்த கேள்விக்கு அவர்களது ஆய்வுகள் ராயின் கருத்துகளிலிருந்து தீவிரமாக மாறுபட்டது.

            எம்என் ராயுடன் வேறுபாடுகள் குறித்துப் பூபேந்திரநாத் கூறினார்: “ராய் இந்தியாவில் புரட்சிகர இயக்கம் கட்டவும், தேசியவாதிகளுடன் ஒத்துழைக்கவும் விரும்பவில்லை; தேசியவாதிகள் தவிர, வேறு எங்கிருந்து நீங்கள் (புரட்சிக்கு) ஆட்களைப் பெறுவீர்கள்?”

லெனினுக்குப் பூபேந்திரநாத் கடிதம்  

          தாஷ்கண்ட் நகரில் ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி’ அமைக்கும் கருத்தை டாக்டர் பூபேன் தத்தா எதிர்த்தார். அவர் எழுதினார்: தாஷ்கண்டில் “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது என்ற ஒரு செய்தி மாஸ்கோ பத்திரிக்கையில் திடீரென்று வெளியானது.” அந்த யோசனை / கருத்தை அவர் விரும்பவில்லை. கொள்கை ரீதியாக அவர் எதிர்க்கவில்லை, ஆனால், இந்தியாவில் உள்ளோர் உட்பட, அனைவரின் ஒத்துழைப்போடும், அது செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். “….மாஸ்கோவில் உள்ள சிலர், நாம் அனைவரும் அறியாமல், கம்யூனிஸ்ட் கட்சி அமைத்தால், நாம் அதனை ஏற்க முடியாது, எவ்வகையிலும் அதனுடன் ஒத்துழைக்கவும் முடியாது.” காமின்டர்ன் உதவியுடன் இந்தியப் புரட்சிகர போர்டு அமைப்பை அமைக்கும் யோசனையை அவர் தெரிவித்தார்.

          டாக்டர் தத்தா அவரது ஆய்வறிக்கையை (தீசிஸ்) லெனினுக்குக் காமின்டர்ன் தலைவர் ரகோசி (Rakosi) மூலம் 1921 ஆகஸ்ட் 23ல் ஒரு கடிதத்துடன் அனுப்பினார்:

            “பெறுநர் தோழர் லெனினுக்கு,

     “ஒரு இந்தியனாகிய நான்… இந்தியாவில் உள்ள சூழல் நிலை மற்றும் புரட்சிகரச் சக்திகளின் குணாம்சம் பற்றிய எனது திருத்தப்பட்ட கட்டுரையின் படியை உங்களுக்கு அனுப்புகிறேன்…

   “அருள்கூர்ந்து தாங்கள் இந்தக் கட்டுரையைப் படித்து…கேள்வி மீதான தங்கள் கருத்தைத் தெரிவித்தால் நான் தங்களுக்கு நன்றியுடையவனாக இருப்பேன்…

     “தங்கள் உண்மையுள்ள, பூபேந்திரநாத் தத்தா”

            தனது பதிலில் லெனின் தெரிவித்தார்:

       “அன்புள்ள தோழர் தத்தா, தங்கள் ஆய்வறிக்கையை நான் படித்தேன்… காலனிய கேள்வி குறித்த எனது ஆய்வறிக்கையை (தீசிஸ்) நாம் பற்றியிருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன். விவசாயிகளின் லீக் அமைப்புகள், அப்படிப்பட்ட அமைப்புகள் இந்தியாவில் இருந்தால், அவை குறித்தப் புள்ளிவிபர உண்மைகளைச் சேகரியுங்கள்.

       “தங்கள்… வி உலினாவ் (லெனின்)” (பார்க்க, லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 45, பக்கம்270)

        லெனின் தனது கடிதத்தில் ராயின் ஆய்வறிக்கைகளை முழுவதுமாக நிராகரித்தார். லெனினின் கடிதம் பூபேன் கண்களைத் திறந்தது, அவர் விவசாயிகளின் பங்கினைக் குறித்துக் கவனம் செலுத்தவில்லை என்பது உண்மைதானே.

      இந்தியப் புரட்சி குறித்த செயல் திட்டம் மற்றும் தந்திரோபாயங்கள் மீது ராயுடன் அவருக்குக் கசப்பான சச்சரவு வாதங்கள் வளர்ந்தன. பூபேன் மற்றும் அவரது நண்பர்கள் இந்தியாவுக்குப் புறப்படுவதென முடிவு செய்தனர். புறப்படும் முன் ரகோசி அவரைச் சந்தித்தார். பூபேன் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் பேராசிரியர் வார்கா அவர்களையும் சந்தித்தார். கருத்து வேறுபாடுகள் இருப்பினும் பூபேனும் ராயும் எந்த வகையிலும் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து சச்சரவில் ஈடுபடவில்லை.

இந்தியா திரும்புதல்

      மிக நீண்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு, மிகவும் மாறியிருந்த இந்தியாவுக்கு 1925 ஏப்ரலில் திரும்பினார். கான்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் முழுமையாக ஒத்துழைத்தார், தொழிலாளர்கள் விவசாயிகள் (WPP) கட்சியில் பங்கெடுத்தார். இந்தியாவில் அவரது முதலாவது அரசியல் நடவடிக்கை, கௌகாதியில் 1926 டிசம்பரில் நடைபெற்ற ‘அரசியல் ரீதியாகத் துன்பப்படுபவர்களின்’ மாநாட்டில் பங்கேற்று, அதற்குத் தலைமை தாங்கியதுதான். பூபேன், ‘இந்திய முதலாளித்துவ நடுத்தர வர்க்கம் மட்டுமின்றி பொதுமக்கள் திரளும் விடுதலைக்கான போராட்டத்தில் இணைந்தனர்’ என்று கூறினார்.

      1927ல் WPP கட்சியின் ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்ட பூபேந்திரநாத் அங்கே நளினி குப்தாவைச் சந்தித்தார். அவர் இளைஞர்கள் மத்தியில் சோஷலிச, மார்க்ஸியக் கருத்துகளைப் பரப்பி ரஷ்யப் புரட்சி குறித்துப் பேசினார். பிரபலமான மூத்தக் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்கத் தலைவர் டாக்டர் ரனீன் சென், “டாக்டர் பூபேந்திரநாத் இளம் புரட்சியாளர்கள் மத்தியில் மார்க்ஸியம் குறித்து அரசியல் வகுப்புகள் எடுப்பது வழக்கம். வகுப்புக்களில் கலந்துகொண்ட பலர் பின்னர் அவரது செல்வாக்கின் கீழ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்’ என்று நினைவுறுத்தியுள்ளார். [டாக்டர் ரனீன் சென் 1973 முதல் 1976வரை ஏஐடியுசி தலைவராகவும், 3,4 மற்றும் 5வது மக்களவையில் பாரசாட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். --இணையத்திலிருந்து ]

      புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் வரலாற்றாளர் சின்மோகன் ஷெகனாவிஸ், தான் பெற்ற மார்க்ஸியப் பயிற்சிக்குப் பூபேந்திரநாத்துக்கு நன்றிக் கடன்பட்டதாகப் பின்வருமாறு கூறினார்: “1933 –34 காலகட்டத்தின்போது திரு பூபேந்திரநாத் தத்தாவுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவரிடமிருந்து சோஷலிசம் மற்றும் மார்க்ஸியம் கற்க விரும்புவதாக நான் கூறியபோது, அவர், ‘அப்படிக் கற்பது அறிவாளியாகவா அல்லது மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்காக?’ எனக் கேட்டார்.” ஷெகனாவிஸ் அவரிடம், ‘தான் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பணியாற்ற விரும்புவ’தாகக் கூறினார்.

மாணவர்கள், இளைஞர்கள் அமைப்பாளர்

      பூபேந்திரநாத் பலராலும் விரும்பித் தேடிச் செல்லும் தலைவராவார். 1927ல் டாக்கா மாவட்ட இளைஞர்கள் மாநாட்டில் தலைமை உரையாற்றினார். முதலாவது அனைத்திந்திய சோஷலிச இளைஞர் காங்கிரஸ் குறித்த முன்மொழிவு மீது எஸ் ஏ டாங்கே அவர்களுக்கு 1927 நவம்பர் 12ல் ஒரு கடிதம் எழுதினார்: “இந்தக் காங்கிரஸ் (மாநாடு) மார்க்ஸிய உலகப் பார்வையை உயர்த்திப் பிடிக்கும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு மட்டுமே எனக் கூட்டப்படுகிறது, அத்தகைய இளைஞர்கள் மட்டுமே காங்கிரஸ் (மாநாட்டு) பிரதிநிதிகளாக வரவேற்கப்படுகிறார்கள்.”

     1927 டிசம்பர் 27ல் சோஷலிஸ்ட் இளைஞர் காங்கிரஸ் கல்கத்தாவில் நடைபெற்றது. வரவேற்புக் குழுவின் தலைவராகப் பூபேந்திரநாத் மார்க்ஸியத்தின்பால் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், அவர்களிடம் படிப்பு வட்டங்களை அமைக்க யோசனை கூறினார். மாநாட்டிற்கு ஜவகர்லால் நேரு தலைமை வகித்தார். 1928 தொடக்கத்தில் பூபேந்திரநாத்தைத் தலைவராகக் கொண்டு அனைத்து பெங்கால் யூத் அசோஸியேஷன் அமைக்கப்பட்டது. அவரே மாநாட்டில் முக்கிய உரையையும் ஆற்றினார்.

            1930 ஏப்ரல் ராஜ்ஷாகியில் நடைபெற்ற யங் காம்ரேட்ஸ் லீக் மாநாட்டிலும் பேசினார். பூபேந்திரநாத்தின் உரை பல இளைஞர்களை அராஜகவாதத்தைக் கைவிட்டு கம்யூனிசத்தின் பால் வருவதற்கு உதவியது.

1929 மே 5ல் கௌல்னா மாவட்ட மாணவர்கள் மாநாட்டில் தலைமை தாங்கினார், 1929 ஆகஸ்ட் 17ல் பர்த்வான் மாவட்ட மாணவர்கள் மாநாடு, 1931 ஜூனில் ஃபரீத்பூர் மாணவர்கள் மாநாடு மற்றும் பிறவற்றில் கலந்து கொண்டார். மார்க்ஸைப் பின்பற்றும்படி அவர் மாணவர்களிடம் வலியுறுத்தினார்.  (பெயருடன் ‘தா சேர்த்து அழைப்பது வங்கத்தின் மரியாதை வழக்கம்) உடன் தனது பழக்கம் 1928 ஹூக்ளி மாவட்ட மாணவர்களின் மாநாட்டில் ஏற்பட்டதை நினைவு கொள்கிறார், புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் பினாய் கிருஷ்ணா சௌத்திரி 

ஹிரேன் முகர்ஜி மற்றும் ஹுமாயுன் கபீர் இருவருடன் இணைந்து பூபேன்‘தா வங்க மாகாண மாணவர்கள் பெடரேஷன் மாநாட்டில் 1939 அக்டோபர் 12ல் கலந்து கொண்டார்.

WPP கட்சி மற்றும் தொழிற்சங்க இயக்கம்

       மீரட் சதி வழக்கின்போது (1929 --33), வெளியே இருந்த கம்யூனிஸ்ட்கள் குழப்பத்தில் சிதறிக் கிடந்தனர். கல்கத்தாவில் ‘இந்தியன் புராலிடேரியன் ரெவலுஷனரி பார்ட்டி’ (இந்திய உழைப்பாளர்கள் புரட்சிகர கட்சி), பஞ்சு கோபால் பதூரி, காளி கோஷ், பக்கிம் முகர்ஜி மற்றும் சிலரால் அமைக்கப்பட்டது. அந்த அமைப்புடன் பூபேன்‘தா நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தார். இந்தக் கட்சி, சிபிஐயின் கிளையாக அது அங்கீகரித்த ஒர்க்கர்ஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றியது. மேலும் இக்கட்சி சர்தேசாய், ரணதிவே மற்றும் குல்கர்னியின் பாம்பே குழுவுடன் தொடர்பில் இருந்தது, மீரட் கைதிகளுக்கு உதவியது, அது சிபிஐயின் கல்கத்தா கமிட்டியுடன் இணைய தனது விருப்பத்தைத் தெரிவிக்க, தனித்தனியாக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. பி(வி)ஸ்வநாத் முகர்ஜியும் இக்குழுவைச் சேர்ந்தவர்.

      பூபேந்திரநாத் ஏறத்தாழ அனைத்து முக்கிய இயக்கங்களிலும் தீவிரமாகப் பங்கேற்றார்: காரக்பூர் ரயில்வே ஒர்க்கர்ஸ், பிஎன்ஆர் ரயில்வே தொழிலாளர்கள், ஜாம்ஷெட்பூர் டிஸ்கோ நிறுவனம், 1928ல் கல்கத்தாவில் மே தினப் பேரணிகள், முதலியன. 1928ல் ஏஐடியுசி பேரியக்கத்தின் ஜாரியா அமர்வில் கலந்து கொண்டார், அதன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உள்ளூர் அளவிலும், அனைத்திந்திய மட்டத்திலும் எண்ணற்ற தொழிற்சங்கங்க அமைப்புகளை அமைத்தார்.

பிற பெருந்திரள் அமைப்புகள்

      பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி மற்றும் மற்றவர்களின் முன்முயற்சியால் 1941ல் நிறுவப்பட்ட FSU எனப்படும் ‘சோவியத் யூனியன் நண்பர்கள்’ அமைப்பின் முதலாவது தலைவர் பூபேந்திரநாத் தத்தா. அதில் பூபேஷ் குப்தா, சின்மோகன், கோபால் ஹால்டர், ஜோதி பாசு மற்றும் மற்றவர்களும் கலந்து கொண்டிருந்தனர். முற்போக்கு எழுத்தாளர்கள் அமைப்பிலும் (PWA) பூபேன்‘தா பங்கு பெற்றார்.

உறுப்பினர் அல்லர், ஆனால் சிபிஐ உடன் இருந்தார்

       டாக்டர் பூபேன் தத்தா இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முறையான உறுப்பினராக ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் நடைமுறையில் அதன் நடவடிக்கை செயல்பாடுகளில் கட்சியின் ஒரு உறுப்பினராகச் செயல்பட்டார். உற்சாகப்படுத்தி புதிய உறுப்பினர்களைக் கட்சியில் சேர்த்தார், அவர்களில் ஒருவர்தான் சோமநாத் லாகிரி (பின்நாட்களில் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராகச் செயல்பட்டவர்). முக்கியமான மார்க்ஸிய செவ்வியல் நூல்களை மொழிபெயர்த்தார். அவருடைய புகழ்பெற்ற படைப்புகளில் ‘அப்பிரகாஷிதா ராஜ்நிதிக் இதிகாஸ்’ (பிரசுரிக்கப்படாத அரசியல் வரலாறு) புத்தகமும் ஒன்று. மார்க்சியத்தின் தீவிரப் பிரச்சாரகர் அவர்     

       பல துறைகளில் பெரும் கற்றறிவாளராக விளங்கிய அவரது புகழுக்குப் பல நூல்களும்கட்டுரைகளும் சொந்தமானது. மக்கள் நலன்களுக்காகப் பணியாற்றி, ஆதரித்துப் பிரச்சாரம் செய்த சுவாமி விவேகானந்தர் மற்றும் இராமகிருஷ்ணா மிஷனின் சமூக மற்றும் பெருந்திரள் அம்சங்களை அவர் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.

         1961 டிசம்பர் 25ம் நாள் டாக்டர் பூபேந்திரநாத் தத்தா இயற்கை எய்தினார்.

            வாழ்க பூபேன்‘தா புகழ்!

--நியூஏஜ் (ஜூலை31 --ஆக.6)

--தமிழில் : நீலகண்டன், என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment