Sunday 18 September 2022

மாதர் சம்மேளனம் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை

 


பில்கிஸ் பானு வழக்கில் அநீதியை எதிர்த்து

                    NFIW மாதர் சம்மேளனம்                              குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை

--டாக்டர் ருஷ்டா சித்திக்

செயல் தலைவர், மாதர் சம்மேளனம்

            இந்திய மாதர் தேசிய சம்மேளனம் (NFIW)

            எப்போதும் பாசிசம், காலனியம், புதிய தாராளமயம், ஆணாதிக்கம் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக உறுதியாக நிற்கும் அமைப்பு. அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் அரசமை சட்டப்படியான நிர்வாக அமைப்புகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் சமசரம் செய்து கொள்ளும்போது, அதன் பாதிப்பை, அது வழங்கும் எவ்வகையான (அ) எல்லா அநீதிகள் ஏற்படுத்தும் காயங்களையும் தாங்க வேண்டியிருப்பது இந்நாட்டில் பெண்களே! கடந்த எட்டு ஆண்டுகளில் தேசச் சமூகக் கட்டுக்கோப்பு மூர்க்கமாக இடிக்கப்பட்டு, தவறான பொருளாதார நிர்வாகத்தால் தொழிலாளர்கள் சுரண்டலுக்கும் அதிகரிக்கும் ஏழ்மைக்கும் இட்டுச் சென்றதன் விளைவு குழந்தைகள் மற்றும் பெண்களின் ஊட்டச்சத்துக் குறைபாடு.

         அதிகாரபூர்வ அமைப்புகளை ஒதுக்கி வைக்கும் அளவு நாட்டில் பசு காவல் கும்பல்கள், இணையான கட்டப் பஞ்சாயத்துகள் மற்றும் சமூக ஒழுக்கத்தைக் கண்காணிக்கத் தங்களையே அடாவடியாகப் போலீசாக எண்ணி சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுக்கும் குழுக்கள் அதிகரிக்கும்போது, சமூகத்திலும் பொருளாதாரத்திலும் தங்கள் அந்தஸ்து எப்போதையும்விட இற்று நொறுங்கிவிடும் அச்சுறுத்தலைப் பெண்கள் உணர்கிறார்கள். இவற்றிலெல்லாம், ஆணாதிக்கத்தைப் போதிக்கும், இஸ்லாமிய அச்ச உணர்வைச் சமூகத்தில் பரப்பும் ‘கலாச்சாரக் குழு’வான ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த அளவு பயனைடைந்து அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போகிறது என்பதுதான் மூடி மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

          ஆகஸ்ட் 15ல் தேசியக் கொடியேற்றிய பிரதமர், பெண்களுக்கு அதிகாரமளித்தல், அவர்கள் உரிமைகளைப் பாதுகாத்தல் குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் இனவெறுப்பு வன்முறை குற்றங்களுக்காகத் தண்டனை பெற்ற 11 கிரிமினல் குற்றவாளிகளைக் குஜராத் மாநில அரசு விடுவித்த கொடுமையைக் கண்டு உலகம் அதிர்ச்சியில் உறைந்தது. இதே மாநிலம் குஜராத்தான், 20 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய முதல்வர் நரேந்திர மோடி மேற்பார்வையில் நிகழ்த்தப்பட்ட மிருகத்தனமான கொடூர அட்டூழியங்களால் உலகை அதிர்ச்சி அடையச் செய்தது. ஊழல், உண்மைகளை அடக்கி ஒடுக்குவதின் மட்டம், கற்பனை செய்ய முடியாத மூர்க்கத்துடன் மீண்டும் தலை தூக்குகிறது. குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட நிகழ்வு, பல ஆண்டுகளுக்கு முன் அந்த மாநிலத்தில் முகம் தெரியாத கும்பலால் நடத்தப்பட்ட இனப்படுகொலை, திடீரென்று வெடித்த வன்முறையின் விளைவல்ல; மாறாக, அரசியல் லாபத்திற்காக ஒரு வகுப்பையே கவனமாகத் திட்டமிட்டு இனஅழிப்புப் படுகொலை செய்ததே என அம்பலப்படுத்துகிறது.

கொடூர மிருகத்தனமான குற்றம் என முடிவு செய்த நீதிமன்றங்கள் இறக்கும் வரை ஆயுள் தண்டனை விதித்த அந்தச் சிறைக் கைதிகளை விடுதலை செய்த நிகழ்வு, பொதுவாகப் பெண்களைப் பெரிதும் அச்சுறுத்தும். நாட்டில் இதனை எதிர்த்த பெண்களின் எதிர்வினை, மக்கள் தொகையின் செம்பாதியான பெண்கள் நீதி வழங்கு முறையின் தோல்வியை எப்படிக் கருதுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டும். சமூகத்தின் எளிய பிரிவினர்களுக்குச் சமத்துவம் மற்றும் நீதியை உறுதி செய்யவும்; பெண்கள் மற்றும் குழந்தைகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்கச் செயலில் இறங்கவும் இந்திய மாதர் தேசியச் சம்மேளனம், ஓர் இயக்கமாக, தன் சக்தி அனைத்தையும் திரட்டிப் போராடுகிறது. இன்றைய இந்தியாவின் வரலாறு, மனித உரிமைகள், நீதி மற்றும் சட்டத்தின் முன் அனைத்துக் குடிமக்களுக்கும் சமத்துவத்தை உறுதி செய்யும் சட்டங்களுக்காகப் போராடும் பெண்களின் வரலாறும் ஆகும் என்பதில் தவறில்லை.

எனவே, நாடு முழுவதும் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டங்களில் மாதர் சம்மேளன உறுப்பினர்கள் கலந்து கொண்டது மட்டுமல்ல, நீதி கோரி அவர்களே நாட்டின் உச்சபட்சத் தலைவரான இந்தியக் குடியரசுத் தலைவரிடம் செல்லவும் முன்கையெடுத்துள்ளனர் என்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அனைத்து இதழ்களின் தலையங்கள் அல்லது அறிவார்ந்த சமூகத்தின் பல்வேறு அமைப்புகள் சுட்டிக் காட்டியதைவிட, நீதி வழங்கும் முறைமை தோல்வி அடைந்ததன் தீவிர ஆழத்தைப் பல்வேறு மட்டங்களில் உள்ள தலைவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளனர். அநீதிக்கு எதிரான மாதர் சங்கத்தின் எதிர்வினை ஒருங்கிணைக்கும் செயல் என்பதைப் போலவே, செயற்குழு உறுப்பினர்களுக்குக் கற்றுக் கொள்ளும் பயிற்சியாகவே அது இருந்தது. நாடெங்கும் மாதர் சம்மேளனக் கிளைகள் கடும் சீற்றத்துடன் போராடின. நாட்டில் நீதி படும்பாட்டின் அவலத்தையும், அநீதியைக் கொண்டாடும் கருத்துவாக்க முறைமையும் போராட்டங்களில் விளக்கிக் கிளைகள் பிரச்சாரம் செய்தது போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியன. அவர்களின் எதிர்வினைகளால்தான் நாடு முழுவதும் வெற்றிகரமான தொடர்ச்சியான இயக்கங்களை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நடத்த முடிந்தது.

மனித குலத்திற்கு எதிரான கொடூரமான குற்றங்களை இழைத்த ஆண்களுக்கு முன்கூட்டியே விடுதலை வழங்கும் சலுகையை அறிவித்ததன் பின்னணியில் மறைந்துள்ள அரசியல் சூழ்ச்சித்  திட்டத்தை -- பிரதேச மற்றும் உள்ளூர் மட்டங்களில் நடந்த கூட்டங்களில் வாழ்வின் பல்வேறு துறைகளிலிருந்து வந்து உரையாற்றிய-- பெண்கள் மிகச் சிறப்பாகச் சுட்டிக் காட்டினர். நீதி பிழன்ற இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட நேரம், எதிர்வரும் குஜராத் சட்டமன்றத் தேர்தல்களுடன் இணையாகப் பொருந்தி இருப்பதை அப்பெண்கள் சரியாகச் சுட்டிக் காட்டினர். 2002ன் இனப் படுகொலையிலிருந்து ஒவ்வொரு குஜராத் தேர்தலும் சங் பரிவார் ஆதரவு அமைப்புக் கும்பல்களால் இஸ்லாமிய அச்ச உணர்வு, முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் மற்றும் பாரபட்ச உணர்வு ஊட்டப்படுவதைச் சந்தித்து வருகிறது. அவை பிரச்சார வீடியோக்கள், அரசியல் உரைகளில் தூண்டிவிடல், கொள்கை நடவடிக்கைகள் அல்லது நீதிமன்ற மற்றும் விசாரணை முகமைகளில் தலையிடல், குஜராத் மாநிலச் சட்டப்படியான நிர்வாக அமைப்புகள் எந்த மட்டத்திற்கும் கீழிறங்கும் சமரசம் இப்படி எதுவாயினும், ஒவ்வொன்றிலும் முஸ்லீம் வெறுப்பு அடையாளத்தைப் பார்க்கலாம்.

ஆர்வத்தைத் தூண்டும் வகையில், 2002 படுகொலைக்கு அன்றைய குஜராத் முதல்வராய் இருந்தவருக்கு ஸ்ரீகிருஷ்ணா குழு சுத்த சுயம்பிரகாசச் சான்று (க்ளீன் சீட்) எப்படி வழங்கியது என்பது பற்றி அவர்கள் சுட்டிக் காட்டவில்லை; ஆனால் நரேந்திர மோடி பிரதமரானதிலிருந்து குஜராத்தில் என்ன நிகழ்ந்து வருகிறது எனக் குறிப்பிட்டு வினவினர். (குஜராத் முன்னாள் அமைச்சர், மாயா சுரேந்திர குமார் கோட்னனி என்ற) மாயா கோட்னனி மற்றும் (குஜராத் பஜ்ரங்தள் அமைப்பின் தலைவர் பாபுபாய் பட்டேல் என்ற) பாபு பஜ்ரங்கி சூப்பர் மூளைகள் குஜராத்தின் 11 பாலியல் குற்றவாளிகளுக்கு அடிக்கடி பிணை வழங்க எப்படித் திட்டமிட்ட முறையில் கதையாடல்களைக் கட்டி, பிணை மட்டுமல்ல, விடுதலையும் பெறுவதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவுக் கும்பல்கள், வழக்குத் தொடர்ந்தவர்கள் மற்றும் சாட்சிகளை அடிக்கடி மிரட்டி அச்சுறுத்திப் பணிய வைத்தார்கள் என்பதை விவரித்தார்கள்.

இங்கு ஜாகியா ஜாஃப்ரி தாக்கல் செய்த வழக்கை விவரிக்க வேண்டும். சமீபத்தில் அப்பெண்மணியின் வழக்கை முடித்து வைத்த

 உச்சநீதிமன்றம், ஜாகியா ஜாஃப்ரி மற்றும் மனித உரிமை பாதுகாப்புச் செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட் இருவர் மீதும் மாநில அரசை இழிவுபடுத்த முயன்றதாகக் குற்றம் சாட்டியது; கர்ப்பிணியான தன்னிடம் பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்டவர்கள், குழந்தையையும் மற்றவர்களையும் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரிய ஜாகியா ஜாஃப்ரி மீதே நீதிமன்றம் குற்றம் சுமத்திய நிகழ்வு, எப்படி அரசியல் பெருங்காற்று மீதம் உள்ள ஏனைய வழக்குகளையும் (அதன் தீர்ப்புகளையும்) நீதிக்கு விரோதமாக மாற்றிப் புரட்டிவிடும் என்பதைச் சுட்டிக்காட்டும் சமிக்ஞையாகும். வன்முறைகளின்போது நிகழ்ந்த மோதல்களின் விவரிப்பை எந்த அளவு அரசு சுருட்டிப் பின்னடையச் செய்யும் என்பதைத் தீஸ்தாவின் கைது அடிக்கோடிட்டு வலியுறுத்துகிறது.

சுட்டிக் காட்டப்பட வேண்டிய அடுத்த அம்சம் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய பின்பற்றிய நடைமுறையாகும். பில்கிஸ் பானுவும் அவரது வழக்கறிஞர்களும் 17ஆண்டுகள் வழக்காடிய காலத்தில் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் பல முறை பிணையில் வெளிவர முடிந்தது. இதனால் அவர்களால் அக்குடும்பத்தினர்களையும் சாட்சிகளையும் இடையூறு விளைவித்து மிரட்ட முடிந்தது – இதன் விளைவு, 17 ஆண்டுகளில் 20 முறை பில்கிஸ் தனது குடியிருப்பை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  அவரை இல்லாமையும், என்ன நடக்குமோ என்ற அதிர்ச்சி மற்றும் பாதுகாப்பின்மையும் சூழ்ந்தது. வழக்கின் மனுதாரர்களுக்குக் குஜராத் மாநிலத்தில் நம்பிக்கை இல்லாததால், வழக்கு விசாரணை மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் மனு மற்றும் அதன் மீது முடிவெடுக்கும் நீதிசார் நடைமுறை மட்டும் வினோதமாகக் குஜராத் மாநிலத்திற்குள்ளேயே விவாதித்துச் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.

‘இந்த விஷயத்தை என்னவென்று பாருங்கள்’ என்றுதான் நீதிமன்றம் மாநில அரசுக்கு யோசனை கூறியது. அதையே, தண்டனைக் குறைப்புப் பரிசீலனைக்காகத் தீவிர அரசியல் அமைப்பினை நிறுவும் (ரெமிஷன் பரிசீலனைக் கமிட்டி) நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் காட்டிய பச்சை விளக்கு என்பதாகக் களவாடி, அப்படி அமைத்த குழுவில் ஒரே ஒரு அரசியல் கட்சி மட்டுமே பிரதிநிதித்துவமும் பெற்றது. சொல்லத் தேவையில்லை, அந்தக் குழு உறுப்பினர்கள் அனைவரும் பாஜக-வைச் சேர்ந்தவர்கள். தண்டனைக் குறைப்பு விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, தண்டனை குறைப்பு மன்னிப்பு (ரெமிஷன்) வழங்க வழக்கொழிந்த பழங்காலச் சட்டத்தைப் பயன்படுத்தினர். (ஏனெனில், பாலியல் குற்றவாளிகள் ரெமிஷன் சலுகை பெறத் தகுதியானவர்கள் இல்லை என்கிறது புதிய விதி). மேலும் அதிரடியாக, தண்டனைக் குறைப்புக்கான ஒரே ஒரு மேல்முறையீட்டு மனுவையே எல்லா 11 குற்றவாளிகளையும் விடுவிக்க அடிப்படையாகப் பயன்படுத்தினர். அப்படி அடிப்படையாகக் கொண்டது, குற்றவாளிகள் நல்ல ‘சன்ஸ்காரி பிரமணர்’களாம் (அதாவது மேன்மையான விழுமிய குணங்களுடைய பிராமணர்கள்); விடுதலை செய்தது, எல்லா குற்றங்களிலிருந்தும் அவர்களைச் சுத்தமாக்குமாம். (குற்றவாளிகளைச் சன்ஸ்காரி பிராமணர்கள் என்று புகழ்ந்த பாஜக எம்எல்ஏ ராகுல்ஜி கூறியது உண்மைக்கு மாறானது. அந்த 11 குற்றவாளிகளில் மூவர் மட்டுமே பிராமணர்கள், மீதம் உள்ளவர்களில் ஓபிசி 5, எஸ்சி 2, ஒருவர் பனியா –இணையத்திலிருந்து)

மன்னித்து விடுதலை அளித்ததன் தாக்கம், பெண்களை எதிர்ப்பு இயக்கத்தில் ஒன்று திரளச் செய்தது; 15மாநிலங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அந்தப் பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம், மேதகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும்படி, ஒரு கோரிக்கை மனுவை அளிக்கச் செய்தது. அந்த மேல்முறையீட்டு மனு நீதியைக் கோரியது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல்களைத் தடுத்து நிறுத்தக் கோரியது.

ஆண்களுக்கு மன்னிப்பு அளித்தது மட்டுமல்ல, அந்த ஆண் குற்றவாளிகளைக் கதாநாயகர்கள்போல மாலை அணிவித்து, திலகமிட்டு, இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டதையும் அவர்கள் அதில் சுட்டிக்காட்டினர். இந்த ஆண்கள்தான் வயதான பெண்களிலிருந்து மூன்று வயது குழந்தை வரை 14பேர்களை இரக்கமின்றிக் கொன்றவர்கள், கூட்டாகப் பெண்களுக்கு எதிராகப் பாலியல் வன்புணர்வு வன்முறையில் இறங்கியவர்கள், அந்தக் கொடிய குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டவர்கள்.

அவர்களின் விடுதலை, இத்தேசத்தின் பெண்களுக்கு விடுக்கும் செய்தி – ‘சன்ஸ்காரி பிராமணர்கள்’ வன்புணர்வு செய்யலாம்; கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் வயதான பெண்களைக் கொல்லலாம்; மேலும் இறந்த உடல்களை அவர்கள் சிதைக்கலாம் … என அனைத்தும் சரிதான் என்ற பிரகடனமே. இந்தக் கொடுமை, எந்த வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கும் நாளை நடக்கலாம்; அரசே குற்றவாளிகளைப் பாதுகாப்பதென முடிவு செய்தால், இத்தேசத்தின் பெண்கள் தொடக்கத்தில் இருந்ததைவிட மேலும் எளிதாகப் பாதிக்கப்படக் கூடியவர்களாக விடப்படுவர். இன்று அளிக்கப்பட்ட மன்னிப்பு விடுதலை இனப்படுகொலை செய்ததற்காக; நாளை அது, வேறு எந்தக் குற்றங்களுக்காக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இறுதியாக, வெறும் குற்றவாளிகள் மட்டுமல்ல, மாறாக அவர்களின் ஆதரவாளர்களும் இப்போது பெரிய பிரச்சனையாகி உள்ளனர் என்பதே பெண்களை வந்தடைந்துள்ள செய்தி. இந்த ஆண்களுக்கு மாலை அணிவித்து வழிபட்டுக் கொண்டாடிய அமைப்புகள் எல்லாம் அரசியல் லாபத்திற்காகப் பெண்கள் மற்றும் விளிம்புநிலை எளிய மக்களுக்கு எதிரான வன்முறையை ஆதரித்து வளர்ப்பவை. அவர்கள்தான் மகா கட்டப்பஞ்சாயத்துகள், தங்களைத் தாங்களே நல்லொழுக்கக் கண்காணிப்புப் போலீசாக நியமித்துக் கொண்ட குழுக்கள், கல்லால் அடித்துக் கொல்லும் பசுக் காவல் கும்பல் சக்திகளில் நிரம்பி இருப்பார்கள் – அவர்களின் அடாவடித் தாக்குதல்களுக்குப் பெரும்பாலும் பெண்களே இலக்காகிறார்கள்.

தனித்த வகையில், 2022 செப்டம்பர் 6ம் நாள், நூறு, பல்லாயிரமென மாதர் சம்மேளத்தின் உறுப்பினர்கள் திரட்டி அமைத்த  எதிர்ப்புக் கண்டன

 இயக்கங்கள் மற்றும் அவர்களின் முயற்சிகள் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அவரது கடமைகளை ஞாபகப்படுத்தி உள்ளது; மேலும் பெண்களின் இந்தச் செயல்பாடு நம் இந்திய தேசத்தின் பெண்கள், இப்போது வேரோடியுள்ள மனுவாதி ஆணாதிக்கத்துடன் மோதத் தயாராக எழுந்து விட்டனர் என்பதன் அடையாளம்.


“மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்

 மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,

 வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை

 வெட்டிவிட் டோமென்று கும்மியடி!” 

எனப் புதுமைப் பெண்கள் புயலெனப் பொங்கி எழுந்து விட்டார்கள்!

                                                        --நன்றி : நியூஏஜ் (செப்.18 –24)

(நினைவூட்டலுக்காக                                                                                                 மொழி பெயர்ப்பாளரின் கூடுதல் பின் இணைப்பு :

பாபு பஜ்ரங்கி, 2002 குஜராத் வன்முறையின் முக்கியமான மையப் புள்ளி. நரோதா பாட்டியா படுகொலையில் 36 பெண்கள் 35 குழந்தைகள் உட்பட 97 முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காகச் சிறப்பு நீதிமன்றம் பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் 2019 மார்ச்சில் உச்சநீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது.

2007ல் டெஹெல்கா பத்திரிக்கை மறைவான கேமராவுடன் நடத்திய நேர்முகப் பேட்டியில் பாபு பஜ்ரங்கி, நரோடா பாட்டியா படுகொலை மற்றும் 2002 குஜராத் வன்முறையில் முஸ்லீகளைப் படுகொலை செய்ததில் தனது பங்கைப் பெருமிதத்துடன் கூறினான்,

“நாங்கள் ஒரு முஸ்லீம் கடையையும் விட்டு வைக்கவில்லை, அனைத்தையும் தீயிலிட்டோம்… என்னைத் தூக்கில் போடட்டும் கவலை இல்லை, தண்டனை நிறைவேற்றுவதற்கு முன் எனக்கு இரண்டு நாள் அனுமதி கொடுக்கட்டும், ஏழு அல்லது 8 லட்சம் முஸ்லீம்கள் வசிக்கும் ஜூகாபுராவில் எனது ஆட்டத்தை நடத்துகிறேன்… அவர்களைக் கொன்றொழிப்பேன்… இன்னும் கொஞ்சம்… குறைந்தது 25ஆயிரம் முதல் 50ஆயிரம் முஸ்லீம்கள் மடிய வேண்டும்” என்றெல்லாம் அப்பேட்டியில் கொக்கரித்தான்.

இணையத்திலிருந்து திரட்டியது)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, தொலைத் தொடர்பு சங்கம், கடலூர் 

No comments:

Post a Comment