Wednesday 28 September 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 72 -- ராமானந்த் அகர்வால்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 72

       


ராமானந்த் அகர்வால்  --

அரச சமஸ்தானங்களில் சிபிஐ கட்சியைக் கட்டியவர்

                                                               --அனில் ரஜீம்வாலே

அரியானா குர்கான் மாவட்டம், ரேவாரி தாலுக்கா, பல்வாரி கிராமத்தில் ராமானந்த் அகர்வால் 1919 மே 3ம் நாள் பிறந்தார். தந்தை சூரஜ்பான், தாய் கௌசல்யா தேவி. ராமானந்த் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தந்தை இறந்ததால், தாய் அவர் பிறந்த பாவல் கிராமத்தில் அவரை வளர்க்க, குழந்தைப் பருவத்தை அவர் அங்கேயே செலவிட்டார்.

பாவலில் தொடக்கக் கல்வி பெற்ற அவர் மேல் கல்விக்காக ரேவாரி அனுப்பப்பட்டார். 1936ல் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து, டெல்லி இந்து கல்லூரியில் சேர்ந்தார். 1940ல் இளங்கலைப் பட்டத்தை முதல் தரப்பிரிவில் சிறப்பாகத் தேறி ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடம் பெற்றார். 1936ல் டெல்லி மாணவர்கள் பெடரேஷன் மாநாட்டில் கலந்து கொண்டார்.

அரசியலில்

    அந்நாட்களில் டெல்லி விடுதலை இயக்கத்தின் மையமாகத் திகழ்ந்தது. காங்கிரஸ் 1937 தேர்தல்களில் 11ல் ஒன்பது மாகாணங்களில் வென்றது. ராமானந்த் காங்கிரஸ் செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு மாணவர் இயக்கத்தில் கலந்து கொள்ளத் தொடங்கினார். சபி நதி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளில் தீவிரமாக அவர் ஈடுபட்டபோது அவருக்கு வயது 15 மட்டுமே.

          பிஏ பட்டம் நிறைவு செய்து அவர் லாகூரின் பஞ்சாப் பல்கலைக் கழகம் சென்றார். அங்கே 1943ல் எல்எல்பி சட்டப் படிப்பை முதல் தரத்தில் தேறி தங்கப் பதக்கமும் பெற்றார்.  அதிகபட்ச மதிப்பெண் பெற்று ஒரு சாதனையை ஏற்படுத்தினார். லாகூரில் இருந்தபோது அவர் சமூக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார். தனது நண்பர்களுடன் இணைந்து லாகூரில் மனிதநேயச் சொசைட்டியை நிறுவினார். அந்த அமைப்பு அரிசனங்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வி மற்றும் சமூக அந்தஸ்தை மேம்படுத்தப் பணியாற்றியது.

    1943ல் வங்கத்தில் பெரும் பஞ்சம், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பணிகளில் தீவிரமாகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் தொடர்பு ஏற்பட்டு அவர்களின் ஆழமான செல்வாக்கிற்கு ஆளானார். 1942 விடுதலை இயக்கத்தில் கைதிகளை விடுவிக்கக் கோரிய இயக்கங்களிலும் அவர் பங்கு பெற்றார்.

          படிப்பை முடித்த பிறகு இல்லம் திரும்பிய அவர் சட்டத் தொழிலை மேற்கொள்ள வேண்டுமெனக் குடும்ப உறுப்பினர்கள் விரும்பினர். ஆனால் குவாலியர் பிர்லா டெக்ஸ்டைல் ஆலையில் வருடத்திற்கு ரூ13ஆயிரம் ஊதியத்தில் மேலாளர் பதவி வழங்கப்பட சிறிது காலம் அங்கே பணியாற்றினார். பின் அதனை உதறி குர்கானில் சட்டத் தொழில் தொடங்கினாலும், சில காலத்தில் அதில் ஆர்வம் இழந்தார். அரசியல் போராட்டங்களில் ஈர்க்கப்பட்டார்.

மன்னர் சமஸ்தானங்களில் போராட்டங்கள்

சமஸ்தானங்களில் நிலப்பிரபுத்துவ ஆட்சி. பிரிட்டிஷ் இந்தியாவில் வெள்ளையர்களின் நேரடி ஆட்சி நடைபெற்றது. மன்னர் சமஸ்தானங்களில் பொறுப்பான அரசுகள் அமைக்கக் கோரி காங்கிரஸ் போராட்டங்களை நடத்த முடிவு செய்தது. ராமானந்த் அந்த இயக்கங்களில் பங்கெடுத்தார். (மக்களின் அமைப்பு எனப்படும்) பிரஜா மண்டல் இயக்கம் சமஸ்தானங்களின் நிலப்பிரபுத்துவ ஆட்சியை எதிர்க்கும் முக்கிய உறுப்பாக இருந்தது; அதிலும் ராமானந்த் பங்கேற்கத் தொடங்கினார். பொறுப்பான அரசுகளுக்காகவும் பன்கர் மற்றும் ரத் சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைப்பதற்காகவும் போராட குர்கானில் ஒரு குழு அமைக்க அவர் உதவினார். மேலும் பாட்டியாலா, நபா, பட்டௌடி, ஃபரீத்கோட் மற்றும் பிற சமஸ்தானங்களையும் இந்தியாவுடன் இணைக்கவும் அவர் செயல்படத் தொடங்கினார்.

1945ல் பட்டௌடி சமஸ்தான நவாப்புக்கு எதிராக டாக்டர் சாந்தி சொரூப் தத்தாவுடன் சேர்ந்து அவர் ஒரு பேரணிக்குத் தலைமை வகித்தார். ஒரு கோரிக்கை சாசன மனுவை வழங்க அவர்கள் அரண்மனைக்குச் சென்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிடுவதாகப் போலீஸ் அச்சுறுத்தியது. ‘எங்கே, சுடுங்கள், பார்க்கலாம்’ என ராமானந்த் அவர்களுக்குச் சவால்விட போலீஸ் அவசரஅவசரமாகப் பின் வாங்கியது. 1946 ஃபரீத்கோட் சத்தியாகிரகத்திலும் அவர் பங்கேற்றார்.

1946ல் ரேவாரியைச் சேர்ந்த காந்தி அகர்வால் என்பவரை மணம் செய்து கொண்டார்.

ராமானந்தின் மூத்த சகோதரர் வணிகத்திற்காக 1941ல் ஆல்வார் மாற்றிச் சென்றார். ஆல்வார் முக்கியமான வணிக மையம் மட்டுமல்ல, அரசியல் மையமும்கூட. சகோதரருக்கு உதவ ஆல்வார் சென்ற ராமானந்த் அவரது எண்ணை ஆலையில் கூட்டாளியாகச் சேர்ந்தார்.

1946ல் நிறுவப்பட்ட இந்திய இடைக்கால அரசில் (ப்ரொவிஷனல் கவர்ன்மெண்ட்) ஜவகர்லால் நேரு பிரதமரானார். இந்தியாவின் விடுதலை நெருங்கிக் கொண்டிருந்தது. இருப்பினும், (இராஜஸ்தானின்)ஆல்வார் அரசசமஸ்தானத்தை ஆட்சி செய்தவர் இந்தியச் சுதந்திரத்தை ஒப்புக் கொள்ளத் தயாரில்லை, தனது நிலப்பிரபுத்துவ ஆட்சியைத் தொடர விரும்பினார். ஹீராலால் சாஸ்திரி தலைமையிலான பிரஜா மண்டலுக்கு அவர் சில சலுகைகளை வழங்க முன்வந்தும், சாஸ்திரி அவர் வலையில் விழ மறுத்து விட்டார். ராமானந்த், பொறுப்பான அரசு அமைக்கக் கோரிய பிரஜா மண்டல் பணிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். அவர் நெசவாளர்கள், ஒடுக்கப்பட்டோர், அரிசனங்கள், தோல் பதனிடும் தொழிலாளர்கள் முதலானவர்களின் குடியிருப்பு கிராமங்களுக்கு (மொஹல்லா) சென்று தொடர்பு கொண்டார். அவர்களுக்காக அவர் இரவுப் பள்ளிகளை நிறுவினார், கிசான் பஞ்சாயத்துகளை அமைத்தார். நாராயன் தத் உடன் இணைந்து சர்வோதயா அச்சகத்தை நிறுவினார். நெசவாளிகளுக்குக் குறைந்த விலையில் நூல் (பண்டல்கள்) கிடைக்க கூட்டுறவு பண்டகசாலை அமைத்தார்.

இந்தியாவின் விடுதலையும் ஆல்வாரும்

       1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா விடுதலை அடைந்தது. ஆல்வார் சமஸ்தான பிரஜா மண்டல் அமைப்பு குடிமக்களை வீடுகளில் விளக்கேற்றி தீபாவளிபோல விடுதலையைக் கொண்டாடுமாறு வற்புறுத்தியது. அந்தச் செயல்பாடு, இந்திய விடுதலையை அங்கீகரிக்காது, அதனைக் கொண்டாடவும் மறுத்த சமஸ்தான ஆட்சியாளர்களின் போக்கிற்கு எதிரான கண்டனமும்கூட. ராமானந்தும் அவரது கூட்டாளிகளும் வீடுவீடாக, கடை கடையாகச் சென்று மண்ணால் செய்த (அகல்) விளக்குகளை விநியோகித்தனர். ஆல்வார் மகாராஜா இன்னும் இரண்டாடுகளில் பொறுப்பான அரசு அமைக்கப்படும் என்று பலகீனமாக அறிவித்தாலும் அதை அவர்கள் நம்பவில்லை.

          1947 அக்டோபரில், இளைஞர்களைக் கொண்ட பிரஜா மண்டல் சேவா தள் என்ற அமைப்பை ராமானந்த் நிறுவினார். இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி உட்பட அவர் பயிற்சி முகாம்களை அமைத்தார், ஆனால் அனுமதிக்கப்படவில்லை.

காந்திஜி படுகொலை

         1948 ஜனவரி 30ல் மகாத்மா காந்திஜி படுகொலை செய்யப்பட்டார். காந்திஜி படுகொலை வரை நடந்த நிகழ்வுகளில் இந்து மகாசபா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஈடுபட்டு வந்தது நன்கு அறிந்த செய்தி, ஆனால் ஆல்வார் ஆட்சியாளர்களும் அந்தச் சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவியது. மக்கள் கடும் சீற்றம் கொண்டார்கள், ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பேரணிகள் நடைபெற்றன. ராமானந்த் செயலூக்கத்துடன் அவற்றில் பங்கேற்றார். நிலமை கடுமையாக, ஆல்வார் ஆட்சியாளர் டெல்லிக்கு அழைக்கப் பட்டார். இந்திய அரசு அவரிடம் சரணடையவும், சமஸ்தானத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் ஆவணங்களிலும் கையெழுத்திடும்படி கூறியது. அவர் மறுக்கவே, அவர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். ஆல்வாருக்கு மத்திய படைகள் அனுப்பப்பட்டன. கேபி லால் இந்திய ஒன்றிய அரசின் சார்பாக ஆல்வார் பகுதியின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.

மட்சய சங்கம்

          1948 மார்ச் 18ல் ஆல்வார், பரத்பூர், தோல்பூர் மற்றும் கரௌலி என்ற நான்கு நிலப்பிரபுத்துவ சமஸ்தானங்களை ஒன்றிணைத்து, ஆல்வாரைத் தலைநகராகக் கொண்டு ‘மட்சய சங்கம்’ என்பது அமைக்கப்பட்டது. பிரஜா மண்டலைச் சேர்ந்த பாபு ஷோபாராம் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் ‘ஸ்வதந்தர பாரத்’ என்ற இதழின் ஆசிரியராக இருந்தவர்.

        இந்த இராஜியங்களின் பிரஜா மண்டல் மற்றும் காங்கிரசின் மாநாடு ஆல்வாரில் 1948 நவம்பரில் நடைபெற்றது. மட்சய காங்கிரஸ் நிறுவப்பட்டு ராமானந்த் அகர்வால் அதன் பொதுச் செயலாளர்களில் ஒருவரானார். விடுதலைக்குப் பிறகு இந்தக் காங்கிரசின் முதல் அமர்வு ஜெய்பூரில் நடைபெற்றது. மாநாட்டு ஏற்பாடுகளின் பொறுப்பு, காங்கிரஸ் சேவா தள் அமைப்பிடம் அளிக்கப்பட, அதற்காக அமைக்கப்பட்ட மூன்று உறுப்பினர்கள் குழுவில் ராமானந்தும் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

          ராமானந்த் எந்த அதிகாரபூர்வ பதவியிலும் சேரவில்லை. மக்கள் கோரிக்கைகளுக்காக அவர் தனது சொந்த அரசுக்கு எதிராகவே பெருந்திரள் போராட்டங்களை நடத்தினார். அப்போராட்டங்கள் வெற்றிகரமாக அமைந்தன.

      தேசப் பிரிவினைக்குப் பிறகு பெரும் எண்ணிக்கையிலான அகதிகள் பஞ்சாப், சிந்து, பகவல்பூர், (லாகூர், ஆப்கானிஸ்தானுடன் எல்லைகளைக் கொண்ட) எல்லைப்புற மாகாணம் (ஃப்ராண்டியர் ப்ராவின்ஸ்) முதலியவற்றிலிருந்து ஆல்வார் மற்றும் பரத்பூருக்கு வந்தனர். அவர்களுக்கான நிவாரண, மறுவாழ்விற்காக லாலா காஷிராம் குப்தாவுடன் சேர்ந்து ராமானந்த் பணியாற்றினார்.

     1949 மே மாதம் மட்சய சங்கம் இராஜஸ்தானுடன் இணைந்தது. நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட விவசாயிகளுக்கு அந்த நிலங்களை வழங்கவும் அதற்கான பட்டா உரிமை பெறுவதற்கான போராட்டங்களை ராமானந்த் தொடங்கினார். இதன் விளைவாய் விவசாயிகள் அவருடன் உறுதியாக நின்றனர், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

   1950ல் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ராமானந்த் அகர்வால் பங்கு பெற்றார். அதே வருடம் காங்கிரஸ் நாசிக் அமர்வில் கலந்து கொண்டார். அதில் நேருவின் விருப்பத்திற்கு மாறாகப் புருஷோதம் தாஸ் தாண்டன் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராமானந்த் நேருவை ஆதரித்தார். *உட்கட்சி வேறுபாடுகள் அதிகரித்தன.

*(தொடக்கத்தில் தாண்டனுடன் நேரு இணக்கமாகவே இருந்தார். உபி-யின் ராஜரிஷி என அறியப்படும் தாண்டன் தேசப் பிரிவினையை

எதிர்த்தார். பிரிவினைக்குப் பின் பாக்கிஸ்தானில் இந்துகள் மீது தாக்குதல் அதிகரித்த சூழ்நிலையில் இந்தியச் சிறுபான்மை முஸ்லீம்களை எப்படி நடத்துவது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தாண்டன், கேஎம் முன்ஷியுடன் இணைந்து மதமாற்றத்தை எதிர்த்தவர், இந்தி மொழிக்கு அலுவல் மொழி அந்தஸ்தைப் பெற வாதாடியவர், மென்மையான இந்துமதவாதி. ஆனால் நேரு ‘பாக்கிஸ்தானில் சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இணங்க, இந்தியாவில் சிறுபான்மை முஸ்லீம்களை நடத்த முடியாது; அரசியல் சட்டம் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கிறது’ என்றார். எனவே கருத்து வேறுபாடுகள். ஆச்சார்ய கிருபளாளியை நேரு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஆதரித்தார், ஆனால் தாண்டன் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். – இணையத்திலிருந்து மொழிபெயர்ப்பாளர் இணைத்த கூடுதல் தகவல்)

கம்யூனிஸ்ட் கட்சியில்

          1951ல் ஆல்வாரில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. முதலாவது பொதுத் தேர்தல்கள் நடைபெறுவதற்குச் சற்று முன்பு 1952ல் காங்கிரசின் கிருபா தயாள் மாதூர் மற்றும் பூல் சந்த் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். நிலப்பிரபுத்துவச் சக்திகளின் ஆழமான வேர் பிடித்த நிகழ்வுகள் நடக்கும்போது, தேர்தலுக்கு முன் காங்கிரசைவிட்டு விலகுவது சரியானது இல்லை என்பது ராமானந்தின் கருத்து.

          தேர்தல் முடிந்த பிறகு 1952 மார்ச் மாதம் ராமானந்த் அகர்வால் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்து சிபிஐ கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் இயக்கத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் உச்சத்தில் வைத்துப் பாராட்டப்பட்டன. ஊழலை எதிர்த்தும், மக்களுக்கு மோட்டா ரக தானியங்கள் வழங்கப்படுவது குறித்தும், பாக்கிஸ்தானிலிருந்து வந்த அகதிகள் முதலான பிரச்சனைகளின் பேரில் மாபெரும் மக்கள் இயக்கப் போராட்டங்களை அவர் நடத்தினார். அவர் ஊழலுக்கு எதிரான முன்னணி ஒன்றையும் அமைத்தார்.

            அகதிகளாக வந்த விவசாயிகளுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரி ராமானந்த் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக லத்தியால் அடித்துத் தாக்கியதில் ராமானந்த் மிகக் கடுமையாகக் காயமடைந்தார். ஹருமால் தோலனி, நாராயண் தத், பக்ஷி வாஸிர்சந்த் முதலானவர்களுடன் அவரும் கைது செய்யப்பட்டார். சிறையில் அவர்கள் மோசமாக நடத்தப்பட்டனர்.

            1954 செப்டம்பரில் இராஜஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாடு ஆல்வாரில் நடைபெற்றது. வரவேற்புக் குழுவின் பொறுப்பாளராக ராமானந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலக் கட்சி தலைமைக் குழுவில் அவர் இணைக்கப்பட்டார். அதே ஆண்டு ஆல்வார் சிபிஐ செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

            1953ல் ஆல்வார் நகர கார்ப்பரேஷன் தேர்தல் நடத்தப்பட்டது. ராமானந்த் அகர்வால் ’ஆஸாத் மோர்ச்சா’ (விடுதலை முன்னணி) அமைப்பைத் தொடங்கினார், அந்த முன்னணி 24ல் 15 இடங்களில் வென்றது. காங்கிரஸ் மிக மோசமான தோல்வியைத் தழுவியது, அக்கட்சியின் மேனாள் கார்ப்பரேஷன் சேர்மன் உட்பட பலர் தோல்வி அடைந்தனர்.

      குடிநீர் வழங்கும் திட்டச் செயல்பாட்டிற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு முறையான நட்டஈட்டுத் தொகை வழங்க வற்புறுத்தி ராமானந்த் தர்ணா மற்றும் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினார். முதலமைச்சர் சுகாடியா அளித்த உறுதி மொழிக்குப் பிறகே அவர் 13 நாட்கள் நீடித்த தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

தேர்தல்களில் போட்டி

            முதல் முறையாக ஆல்வார் சட்டமன்றத் தொகுதிக்கான 1957தேர்தலில் ராமானந்த் அகர்வால் போட்டியிட்டார். அந்த மாவட்டத்தில் சிபிஐ 4 சட்டமன்ற இடங்களில் போட்டியிட்டு 16.6 சதவீத வாக்குகள் பெற்றது. ராமானந்த் 40.9 சதவீத வாக்குகளைப் பெற்று, வெறும் 1500 வாக்குகளில் காங்கிரசிடம் தோல்வி அடைந்தார். ராம்ஹார்க் தொகுதியில் ஹருமால் தோலனி வெறும் 1440 வாக்குகளில் தோல்வி அடைந்தார். ஆல்வார் மாவட்டத்தில் சிபிஐ முக்கிய எதிர்க்கட்சியானது.

           குடிமக்கள் முன்னணிக்குத் தலைமை வகித்து ராமானந்த் கார்ப்பரேஷன் தேர்தல்களில் 19 இடங்களைப் பெற்று வென்றார்.

     1962 தேர்தல்களில் அவர் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். விடுதலைக்குப் பிறகு நடந்த மிகப் பிரம்மாண்டமான பேரணியாக ஒரு பெரும் பேரணி நடத்தப்பட்டது. சட்டமன்றத்திற்கு 5 சிபிஐ உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிபிஐ சட்டமன்றக் குழுத் தலைவராக ராமானந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

     லக்ஷ்மன்ஹார்க் நாடாளுமன்றத் தொகுதியில் சிபிஐ ஆதரவுடன் ஒரு சுயேச்சை வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரபல தலைவராக உருவெடுத்த ராமானந்த் சட்டமன்றத்தின் சொல்லாற்றல் மிக்கப் பேச்சாளராகத் திகழ்ந்தார். மற்ற பிற சாதனைகளுடன், ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கும், உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓய்வூதியம் வழங்குவதற்கான அவரது முன்மொழிந்த திட்டம் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டதைக் குறிப்பிட வேண்டும். பல்வேறு பிற பிரச்சனைகளை எழுப்பி சிலவற்றிற்கு அதிகாரபூர்வமாகத் தீர்வும் கண்டார்.

            1972ல் ராமானந்த் மீண்டும் சட்டமன்றத் தேர்தல்களில் வென்றார்.

பெருந்திரள் போராட்டங்கள்

            ராமானந்த் தலைமையேற்று நடத்திய முக்கியப் போராட்டங்களில் ‘ரூத் போராட்டம்’ என்பது ஒன்று. சமஸ்தான இராஜியங்களின் காலத்தில் ‘விரிந்த நிலப்பரப்பு’கள் (‘ரூத்’) அரச குடும்பத்தினர் வேட்டையாடுவதற்காக ஒதுக்கி வைப்பது பொதுவாக வழக்கம். விவசாய நிலங்களையும்கூட அப்படி ஒதுக்கினார்கள். அதைத்தான் ‘ரூத்’ என அழைப்பர். ராமானந்த் மற்றும் சிபிஐ கட்சி அப்படி நிலங்களை ஒதுக்குவதை ஒழிக்கக் கோரியதுடன், அந்நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்குப் பிரித்தளிக்க வேண்டும் என வற்புறுத்தினர். போராட்டக்காரர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். அப்போராட்டம் வெற்றிகரமாக ’ரூத்’ ஒழிப்பில் நிறைவடைந்தது.

       வேறுபல நிலப் போராட்டங்களிலும் ராமானந்த் தீவிரமாகப் பங்கேற்றார்.


உள்ளூர் கல்லூரிகளில் முதுநிலைப் பட்ட வகுப்புகளுக்காக அவர் போராடினார். நிலங்களைப் பிரித்தளிக்கும் சட்டமன்றக் குழுவில் அவர் இடம் பெற்றார். 1964ல் மாவட்டத்தின் பிரச்சனைகளை விவாதிக்க ஓர் அரசியல் மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில்
எஸ்ஏ டாங்கே மற்றும் டாக்டர் ராம் மனோகர் லோகியாவும் (படம்) உரையாற்றினர். 25 உறுப்பினர் போராட்டக் குழு அமைக்கப்பட்டது.

       கிஷண்ஹர்க் பகுதி விவசாயிகளை இடம் பெயரச் செய்வதைக் கண்டித்துப் பெரும் எதிர்ப்பியக்கங்களை ராமானந்த் தலைமையேற்று நடத்தினார். 1961ல் ‘புருஷார்த்தி கிசான் சபா’ (கடின உழைப்பாளி விவசாய சங்கம்) என்ற பேனரின் கீழ் அவர் சட்டமன்றம் முன்பு பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். (ஜெயபிரகாஷ் நாராயண்) ஜெபி இயக்கத்தை எதிர்த்து ராமானந்த் பாசிச எதிர்ப்பு மாநாடுகளை நடத்தினார். மேலும் அவர் எமர்ஜென்சி காலத்தில் சஞ்சய் காந்தியின் கொள்கைகளுக்கு எதிராகவும் பெரும் இயக்கங்களை நடத்தினார். (சுதந்திரப் போராட்ட வீரரான

ஜெயபிரகாஷ் நாராணன் ஒரு சோஷலிஸ்ட். ஆனால் காங்கிரஸ் எதிர்ப்பின் காரணமாக, அவர் தொடங்கிய இயக்கத்தில் அவரது சகாக்களின் கருத்துகளை மீறி பாசிச ஜனசங்கத்தை, அவர்களின் பேச்சை நம்பி, தனது இயக்கத்தில் கூட்டு சேர அனுமதித்தார். ஜனசங்கத்தின் வகுப்புவாதக் கொள்கைகளையும் கைவிடச் செய்ய முடியும் என்று அவர் அளவுக்கதிகமாக நம்பிவிட்டார். அந்த அவரது இமாலயத் தவறு சுட்டிக்காட்டப்பட்டபோது அவர் ஓர் உரையில், ‘ஜனசங்கத்தினர் பாசிசவாதிகள் என்றால் ஜெபியும் பாசிஸ்ட்டாக இருக்கட்டும்’ என்று கூறி விட்டார். உண்மை யாதெனில், ஜனசங்கமும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஜெபியைப் பயன்படுத்திக் கொண்டன. -- இணைத்திலிருந்து மொழிபெயர்ப்பாளர் இணைத்த கூடுதல் தகவல்)

கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்புகள்

            1964ல் கட்சியில் ஏற்பட்ட பிளவுக்குப் பின் ராமானந்த் அகர்வால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் நீடிப்பதைத் தேர்ந்தெடுத்தார். 1964ல் சிபிஐ தேசிய குழு உறுப்பினராகவும், 1968ல் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971ல் மீண்டும் மாநிலச் செயலாளர் ஆனார். பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்ட அவர், தனது உடல் நலப் பாதிப்பையும் பொருட்படுத்தாமல் 1978 படிண்டா சிபிஐ கட்சிக் காங்கிரசில் கலந்து கொண்டார்.

            ராமானந்த், கிதாப் கர் (நூல் நிலையம்) அமைக்க ஏற்பாடு செய்ததுடன், பின்னர் இராஜஸ்தான் பதிப்பகம் தொடங்கி, அதன் நிர்வாக இயக்குநரானார். மேலும் அவர் ஜெய்பூரில் சுவாமி குமாரானந்த் பவன் கட்டவும் உதவினார்.

  1970களின் பிற்பகுதியில் கடுமையான இதயப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார். 1977ல் உடல்நிலை மேலும் மோசமாகி, பிறகு 1979ல் மீண்டும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அவர் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், 1979 மே 16ல் அவர் மறைவு நேரிட்டது.

            ராமானந்த் அகர்வால் புகழ் ஓங்குக!

--நன்றி : நியூஏஜ் (செப்.4 – 10)

--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்  

         

                         

No comments:

Post a Comment