Tuesday 13 September 2022

75வது சுதந்திர தின சிறப்புக் கட்டுரை -- விடுதலைக்குப் பின் இந்தியாவில் தொழிலாளர் வர்க்க இயக்கம்

               


விடுதலைக்குப் பின் இந்தியாவில் 

                       தொழிலாளர் வர்க்க இயக்கம்

--திக்காராம் சர்மா

            காலனிய ஆட்சியிலிருந்து இந்தியா 1947 ஆகஸ்ட் 15ல் விடுதலை பெற்றது. நாடெங்கெங்கும் விழாக் கோலம். அனைத்திந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் மற்றும் மற்றவர்களுடன் விழா கொண்டாட்டங்களில் இணைந்தன.

            அப்போது நமது நாடு மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது, காலனிய நுகத்தடியில் நீண்ட காலம் அடிமைப்பட்டிருந்ததன் மரபுரிமை தந்தது. தொழில்துறை மேம்பாட்டு வளர்ச்சி நிகழ்முறையில் தொழிலாளர் வர்க்கம் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்ற அதன் உதவியால் நம்மால் முன்னோக்கிப் பயணிக்க முடிந்தது.

தொழிலாளர் வர்க்கத்தின் பங்கு

    அமலாக்கத் தேர்ந்தெடுத்த செயல்திட்ட உத்தி, நம் தேசத்தை வளர்ச்சிப் பாதையில் நடைபோட உதவியது. அதற்கான பெருமை, சுதந்திர இந்தியாவுக்கான எதிர்காலக் கண்ணோட்டத்தை உருவாக்கிய, தொழிலாளர் வர்க்கத் தலைமையையின் முன்னோக்கிய நடவடிக்கைகளையேச் சாரும். ஐந்தாண்டுத் திட்டத்தின்போது சுய சார்பு பொதுத்துறை அடிப்படையிலான பொருளாதாரத்தைக் கட்டும் செயல்திட்ட உத்தியை ஏஐடியுசி பேரியக்கம் வளர்த்தெடுத்தது. அதனை அமல்படுத்த, முக்கியத் தொழில்களைத் தேசியமயமாக்கும் முறையைத் தேர்ந்தெடுத்தது.

        விடுதலை பெற்ற தொடக்க ஆண்டுகளில், பிரிட்டிஷ் மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவச் சக்திகளுக்குச் சொந்தமான பல்வேறு முக்கிய தொழிற்சாலைகளை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

மற்றும் பிற முற்போக்கு சக்திகளின் ஆதரவைப் பெற்ற, ஜவகர்லால் நேரு தலைமையிலான அரசு தேசியமயமாக்கியது. அப்படித் தேசியமயமாக்கப்பட்டவைகளில் இரயில்வே, மின்சாரம், டிராம்கள் மற்றும் சாலைப் போக்குவரத்து, சுரங்கங்கள், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு மற்றும் எஃகு, கச்சா எண்ணெய் மற்றும் பவர், வங்கிகள் முதலியன அடங்கும். அதே நேரத்தில் புதிய கனரகத் தொழிற்சாலைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள், ஆலைகள், வங்கிகள், இரயில்வே முதலானவற்றை அரசு கட்டியது. பிலாய், துர்க்காபூர், குதிரைமுக், மதுரா, விசாகப்பட்டனம் ஸ்டீல் பிளாண்ட், பொக்காரோ, பக்ராநங்கல் அணைக்கட்டு முதலியன ‘இந்தியப் பொருளாதார (நவீன) ஆலயங்களின்’ முக்கிய மையங்களாகப் பிரதமர் ஜவகர்லால் நேருவால் அமைக்கப்பட்டன. அந்நவீன ஆலயங்கள், அதே நேரத்தில், தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களின் விளைவும் ஆகும்.

1948 மற்றும் 1956ன் தொழில் கொள்கைத் தீர்மானங்கள் தொழில்களை மூன்று பெரும் பிரிவுகளாகத் தொகுத்தது: i) அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நிலக்கரி, இரும்பு மற்றும் எஃகு, (பெட்ரோலிய சுத்திகரிப்பின் உபபொருளாகக் கிடைக்கும் பாராஃபின், செயற்கை மெழுகு போன்ற) கனிம எண்ணெய், தொலைத் தொடர்பு, விமானம் கட்டுதல் மற்றும் கப்பல் கட்டுதல்; ii) முழுவதும் பொதுத்துறை ஏகபோகத்தின் கீழ் பாதுகாப்பு, ரயில்வே மற்றும் அணுசக்தி ஆலைகள்; iii) சோஷலிச நாடுகளின் நட்புறவு மற்றும் அவர்களின் உதவியுடன் முக்கிய எஃகு உருக்கு ஆலைகளை அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் கீழ் நிறுவுதல்.

தொழிற்சங்க இயக்கத்தின் நிபந்தனைகளும் கோரிக்கைகளும்

       தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த பேச்சுவார்த்தைக்கான அமைப்பு முறையை மேம்படுத்த ஏஐடியுசி மற்றும் எஸ்ஏ டாங்கே கேந்திரமான பங்கை ஆற்றினர். நீண்ட போராட்டங்கள் மற்றும் விவாதங்களின் மூலம் முத்தரப்பு பேச்சுவார்த்தை அமைப்பு உருவானது. அதன் பலனாய்த் தொழிலாளர் வர்க்கம் சில முக்கிய கோரிக்கைகளை வென்றது.

  ‘பொதுத்துறையின் தொழிலாளர் வர்க்கம் புது வகையிலானது, அது முதலாளித்துவ வர்க்கத்தை நேரடியாகச் சந்திக்கத் தேவையில்லை, ஆனால் அரசை மட்டுமே சந்திக்கிறது’ என டாங்கே சுட்டிக் காட்டினார். அத்தகைய வர்க்கம் நிர்வாகத்தில் பங்கேற்பது உட்பட பெருமிதமான, நம்பிக்கையுடன் ஆக்கபூர்வமான பங்கை ஆற்றியது.

தொழிற்சங்க அமைப்பில் பிளவு

            சுதந்திரம் வரை நாட்டில் ஒரு மத்திய தொழிற்சங்க அமைப்பு, ஏஐடியுசி மட்டுமே இருந்தது. விடுதலை பெறுவதற்குச் சற்று முன்பு 1947 மே 4ம் நாள் தொழிற்சங்க இயக்கத்தின் சில பகுதியினர் மற்றும் காங்கிரஸ்காரர்களால் ‘இந்திய தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ்’ (ஐஎன்டியுசி) நிறுவப்பட்டது. நிலைமை சிக்கலானது. விடுதலைக்குச் சற்று பிறகு, ஹிந்த் மஸ்தூர் சபா (ஹெச்எம்எஸ்) 1948 டிசம்பர் 29ல் அமைக்கப்பட்டது. ஐக்கிய தொழிற்சங்க மையம் (லெனின் சாரணி), தற்போது ‘அனைத்திந்திய ஐக்கிய தொழிற்சங்க மையம்’ (AIUTUC), என அறியப்படும் அமைப்பு 1958, ஏப்ரல் 26 –27ல் நிறுவப்பட்டது. பாரதிய ஜன சங் (தற்போது பாஜக)வின் ‘பாரதிய மஸ்தூர் சங்’ (பிஎம்எஸ்) 1955, ஜூலை 23ல் பிறந்தது. 1964ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவால் ‘இந்தியத் தொழிற்சங்கங்களின் மையம்’, சிஐடியு 1970ல் தனியே அமைக்கப்பட்டது. சிபிஐ (மார்க்ஸிஸ்ட்–லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் ‘அனைத்திந்திய தொழிற்சங்கங்களின் மத்தியக் கவுன்சில்’ (AICCTU) அமைப்பு 1989 ஆகஸ்ட் 4ல் அமைக்கப்பட்டது. இவற்றைத் தவிர வேறுசில அமைப்புகளும் உள்ளன.

குழுவாதப் போக்கால் விளைந்த சேதம்

            1948ல் சிபிஐ தழுவிய குழுவாத மற்றும் சாகசப் பாதை காரணமாக ஏஐடியுசி மற்றும் தொழிலாளர் வர்க்க இயக்கம் கடினமான காலங்களைச் சந்தித்தன. தொடக்கத்தில் பிசி ஜோஷி தலைமையிலான சிபிஐ இந்திய விடுதலையை உற்சாகமாக வரவேற்றது; ஆனால் பின்னர் தலைமை மாற்றப்பட்டதும், விடுதலையைப் போலிச் சுதந்திரம் எனக் கட்சி பிரகடனம் செய்தது.

ஏஐடியுசி, 1949 மார்ச் 9 முதல் நாடு முழுவதும் காலவரையற்ற ரயில்வே வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் தந்தது, அப்போராட்டம் புரட்சிக்குக் கொண்டு செலுத்தும் என்றெண்ணி! ரயில்வே தொழிலாளர்கள் பொதுவாக அழைப்பிற்குச் செவி சாய்க்கவில்லை, நாட்டில் அனைத்துப் புகை வண்டிகளும் மகிழ்ச்சியாக ஓடின! போராட்டம் பரிதாபகரமாகத் தோற்றது, ஏஐடியுசி மற்றும் சிபிஐ தொழிலாளர் திரளிலிருந்து முற்றாகத் தனிமைப்பட்டன. ரயில்வே சங்கங்கள் மற்றும் வேறு பல அமைப்புகளையும் இழந்தது. தொழிலாளர் வர்க்க இயக்கம் மீண்டும் 1960களின் தொடக்கத்தில், மாவோயிசத்தின் காரணமாக ஏற்பட்ட பிளவுகளால் சேதமடைந்து மேலும் பல பிளவுகளுக்கு வித்திட்டது.

மீண்டு எழுந்த தொழிலாளர் இயக்கம்

            1950களின் தொடக்கத்தில், தொழிலாளர் வர்க்கம் ஆக்கபூர்வ முன்னெடுப்புக்களை, குறிப்பாக அஜாய் கோஷ், எஸ்ஏ டாங்கே, காட்டே மற்றும் மற்றவர்களின் முயற்சிகளால், மீண்டும் தொடங்கியது.

       முதன் முதலாக ஏஐடியுசி பேரியக்கம்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பொதுத் துறை மீது நேர்மறையான நிலைபாட்டை எடுத்தது; ஏஐடியுசி 1957 டிசம்பர் 25 முதல் 29வரை எர்ணாகுளத்தில் நடைபெற்ற தனது 25வது வெள்ளி விழா அமர்வில் அவற்றை ஆதரித்துத் தீர்மானங்களை நிறைவேற்றியது.

       1948ல் தொழிலாளர் மாநிலக் காப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றம்; 1949ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு முதலாவது மத்திய சம்பளக் குழு அமைத்தல்; தற்காலிக கதவடைப்பு (லே -ஆஃப்) மற்றும் நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்கான (க்ளோஷர்) நிபந்தனைகள் குறித்த ‘தொழில் தகராறு சட்டம்’ 1953ல் திருத்தம்; கிராக்கிப் படியில் மாற்றம், பிராவிடெண்ட் பண்டு சட்டம் 1952 மற்றும் குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948 நிறைவேற்றம் முதலியன அச்சாதனைகளில் சில.

     வேலைநிறுத்தங்கள் உட்பட எண்ணற்ற போராட்டங்கள் நடைபெற்றன. அவற்றில், கல்கத்தா தேனீர் தோட்டப்பயிர் தொழிலாளர்கள், மெட்ராஸ் கைத்தறித் தொழிலாளர்கள்,

பாம்பே ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் பலர் நடத்திய போராட்டங்கள் ஏராளம். முதன் முறையாக 1953 ஜூன் 30ல் பாதுகாப்புத் தொழிற்சாலை தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தத்தில் இறங்கினர். பாதுகாப்புத் தொழிற்சங்கங்கள் எல்லாம் ‘அனைத்திந்திய பாதுகாப்பு ஊழியர்கள் பெடரேஷன்’ என ஓர்குடையின் கீழ் ஒன்றிணைந்தன. துரதிருஷ்டம், 1960ல் ஐஎன்டியுசி பிரிவினர் வெளியேறி, ‘இந்திய தேசியப் பாதுகாப்புத் தொழிலாளர்கள் பெடரேஷன்’ அமைக்கப்பட்டது.

            1957 ஜூலையில், ஊதியக் கொள்கை, வீட்டுவசதி, தொழிற்சாலைகளில் ஒழுங்கு, தேசியமயம் முதலியவற்றை விவாதிக்க முதலாளிகளின் பிரதிநிதிகள், தொழிலாளர் துறை மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்க, (முத்தரப்பு) 15வது இந்தியத் தொழிலாளர் மாநாடு நடத்தப்பட்டது. ஜவுளித் தொழில், மின்சாரம், செய்திப் பத்திரிக்கைகள், தோல் முதலிய குறிப்பிட்ட சில தொழிலகங்களில் ‘ஊதிய வாரியங்கள்’ (வேஜ் போர்டு) அமைக்க அரசு நிர்பந்தப்படுத்தப்பட்டது. பின்னர் மேலும் ‘ஊதிய வாரியங்கள்’ அமைக்கவும், ஊதியத்தைத் தேசிய அல்லது மாநிலத் தொழிலக மட்டத்தில் தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டது.

            1957ல் தபால் தந்தித் தொழிலாளர்கள் மத்திய அரசு ஊழியர்களுடன் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்தது; அரசு சம்பளக் குழு அமைக்க ஒப்புக்கொள்ள, வேலைநிறுத்த அறிவிக்கை திரும்பப் பெறப்பட்டது. 1960 ஜூலை 12 முதல் மத்திய அரசு ஊழியர்கள் வெற்றிகரமான நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்தனர்.

            மற்ற போராட்டங்களில், 1967 பிப்ரவரியில் உ.பி. மாநில அரசு ஊழியர்களின் 62 நாள் வேலைநிறுத்தம்; கிராக்கிப்படிக்காக 4 லட்சம் ஊழியர்கள் கலந்து கொண்ட ஆந்திரப் பிரதேச ஊழியர்களின் 5 நாள் வேலைநிறுத்தம்; ஆட்குறைப்புக்கு எதிரான கான்பூர் டெக்ஸ்டைல் 90 நாட்கள் வேலைநிறுத்தம் முதலியன குறிப்பிட வேண்டியவை.

போராட்டத்தின் புதிய வடிவங்கள்

    ஏஐடியுசி, அதன் தலைவர் எஸ்ஏ டாங்கே முன்னெடுப்பில் இந்திய வரலாற்றில் முதன் முறையாக -- 1963 செப்டம்பர் 13ல் இரண்டு லட்சம் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் நடுத்தர வர்க்க ஊழியர்கள் கலந்து கொண்ட--

பாராளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி (“டெல்லி சலோ”) நடத்தப்பட்டது. எஸ் ஏ டாங்கே மற்றும் ஏ கே கோபாலன் நாடாளுமன்றத்திற்கு முன் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தப் பேரணியில் உரையாற்றினர். 10 லட்சம் மக்கள் கையெழுத்திட்ட ஒரு மாபெரும் மனு (கிரேட் பெட்டிஷன்) இறுதியாக நாடாளுமன்றச் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

   ஊர்வலம், பேரணி, பந்த், முற்றுகை போன்ற புதிய வடிவங்களில் போராட்டங்கள், பெரும்பாலும் டாங்கே அவர்களால் அமைக்கப்பட்டு, உருவாயின. 

வங்கிகள் தேசியமயம், 1969

            அடிப்படை அரசியல்–கோட்பாட்டு விஷயங்களில் ஆளும் கட்சியில் ஏற்பட்ட பிளவின்

காரணமாக, பிரதமர் இந்திரா காந்தியின் முகாம் சிறுபான்மையானது. வங்கித் தொழிலைத் தேசியமயமாக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் அவரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. நாடாளுமன்ற மக்களவையில் வங்கிகள் தேசியமய மசோதாவை ஆதரித்து ஏஐடியுசி பொதுச் செயலாளர் எஸ்ஏ டாங்கே சரித்திரப் புகழ்பெற்ற உரையை ஆற்றினார். 1969ல் அதிரடியாக மிகப்பெரும் ஏகபோகக் குழுமங்களுக்குச் சொந்தமான 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.

      வங்கிகள் தேசியமயம், நாட்டில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் விவசாயம் இவற்றின் வளர்ச்சியையும் விரிவாக்கத்தையும் சாத்தியமாக்கியது. நாட்டில் நிலப்பிரபுக்களின் கந்து வட்டி முறை கொடுமை மறைந்தது, இந்தியக் கிராமப்புறத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளின் மாபெரும் வலைப்பின்னல் கட்டமைப்புப் பரவியது.

சில முக்கிய போராட்டங்கள்

            1960 –70களின் காலகட்டம் சந்தித்த சில வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டங்கள்: 1960 தபால் தந்தி ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுடன் முதல் அனைத்திந்திய இரயில்வே வேலைநிறுத்தம்; 1968ல் இரயில்வே ஊழியர்களின் இரண்டாவது பெரிய வேலைநிறுத்தம் தவிர்க்கப்பட்டது; ஆனால், 1973ல் இரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் மற்றும் ரயில் ஓட்டுநர்களின் இரண்டு வேலைநிறுத்தங்களும்; தொடர்ந்து 1974 ஜனவரியில் பணி நேரம், கிரேடு ஊதிய விகிதம், பிற பொதுத் துறை ஊழியர்களுடன் சமத்துவம், போனஸ், பணி நேரம் மற்றும் பணி நிலைமைகளின் சீரமைப்பு போன்ற கோரிக்கைகள் மற்றும் பழிவாங்கல் தீர்வு கோரிக்கைக்காகவும் இரயில்வே கார்டுகளின் வேலைநிறுத்தமும் நடைபெற்றன.  அனைத்திந்திய இரயில்வே வேலைநிறுத்தம் 1974 மே 8ல் தொடங்கி மே மாதம் 27ம் தேதிவரை நடைபெற்றது. அதில் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றனர். அனைத்துத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர், ஏஐடியுசி முக்கிய பங்காற்றியது.

            1970களின் தொடக்கத்தில் இந்திரா காந்தி அரசைச் சீர்குலைக்க வலதுசாரி பிற்போக்கு ஜெபி இயக்கம் (ஜெயப்பிரகாஷ் நாராயணன்) நடந்தது. அந்தச் சீர்குலைவைக் கட்டுப்படுத்த அவர் உள்நாட்டு அவசரநிலையைத் திணித்தார், ஆனால் அது ஜனநாயக விரோதமாகக் கருதப்பட்டது. அவசரநிலையின் போதும், வேலைநிறுத்தங்களும் இயக்க நடவடிக்கைகளும் தொடர்ந்தன. தேசியப் புகையிலைத் தொழிலாளர்கள், பாட்டா இந்தியா லிட்., பீகாரில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் முதலான வேலைநிறுத்தங்கள் நடந்தன.

ஜனதா கட்சி ஆட்சி

       1977 பொதுத் தேர்தல்களில் இந்திரா காந்தி தோற்றார், ஜனதா கட்சி அதிகாரத்துக்கு வந்தது. ஜனதா கட்சியில், பின்னர் பாஜக-வாக மாறிய ஜன சங் கட்சி உட்பட பல கட்சிகள் சேர்ந்திருந்தன. அரசு, தொழிலாளர் வர்க்க இயக்கங்களை முடக்கப் பல நடவடிக்கைகளை எடுத்தது. அவர்களை முடக்க ஊதிய முடக்கம் முயற்சி செய்யப்பட்டது. பொதுத்துறை ஊழியர்கள் 1978 ஜூன் 28ல் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து, ஊதிய முடக்க யோசனையை ஒன்றிய அரசு திரும்பப்பெற நிர்பந்தப்படுத்தியது. தொழிலாளர் விரோத தொழில் உறவுகளைத் திணிக்கும் தொழில் மசோதாவை அறிமுகப்படுத்தவும் அரசு முயன்றது. அம்முயற்சியைத் தொழிலாளர் வர்க்கம் அக்ரோஷத்துடன் அடியோடு எதிர்த்தது.

 ஒற்றுமைக்கான முயற்சிகள்

     சிஐடியு, ஹெச்எம்எஸ் மற்றும் பிற சங்கங்களை ஒற்றுமைப்படுத்தி ஒன்றிணைக்க ஏஐடியுசி பலமுறை அணுகியும், பலன் விளையவில்லை. ஒரு கட்டத்தில் 90களின் மத்தியில் ஒருமுறை ஏஐடியுசியும் HMSம் ஒன்றுபட்டு ஐக்கியமாக ஏறக்குறைய ஓர் உடன்பாட்டிற்கு வந்தன. ஆனால் எவ்வாறோ அது நடைபெறாது போனது.

      தொடர்ந்து ஏஐடியுசி விடாப்பிடியாகத் தொழிற்சங்க இயக்கத்தை, குறிப்பாக AITUC, HMS மற்றும் CITUவை, ஒன்றுபடுத்த முயன்று வருகிறது, ஆனால் பல்வேறு தடைகள்.

70 ஆண்டுகளின் லாபங்கள்

      விடுதலைபெற்ற பிறகு கடந்த 70 ஆண்டுகளில் தொழிலாளர் இயக்கம் அடைந்த சாதனைகள் பல: போனஸ், பிஎஃப் உடன் கருணைத் தொகை, பங்களிப்புச் சுகாதாரக் காப்புறுதி அறிமுகம், ஊதியத்துடன் விடுமுறை உரிமை, வாழ்க்கை செலவு விலை உயர்வைச் சமன்படுத்தும் படி, குறைந்தபட்ச ஊதியம், குறிப்பிட்ட பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், கதவடைப்பு மற்றும் ஆட்குறைப்புக்கான நட்டஈடு முதலியவற்றைக் கோரத் தொழிலாளிக்கு உரிமை போன்ற பயன்களைக் குறிப்பிடலாம்.

  1960களின் விசாகப்பட்டினம் எஃகு ஆலை இயக்கத்தின்போது நடந்தது போலத்

தொழிலாளர்கள் போலீஸ் அடக்குமுறை, லத்தி பிரம்படிகள், துப்பாக்கிச் சூடு, கைதுகள் போன்ற கொடுமைகளைச் சந்தித்தனர். அவர்கள் வேலை இழந்தனர், பலர் இன்னுயிர் தந்து தியாகிகள் ஆனார்கள். 1978 ஏப்ரல் 5ல் ம.பி இராஜதானி சுரங்கங்களின் 11 தொழிலாளர்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர் ம.பி.யில் மேலும் 9 விவசாயத் தொழிலாளர்கள் பாய்லதில்லா இரும்புத் தாது திட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர் உத்ராகாண்ட் பந்த் நகரில் 1978 ஏப்ரல் 13ல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் விவசாயத் தொழிலாளிகள், பல்கலைக்கழக ஊழியர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஃபரிதாபாத்தில் 1979 அக்டோபர் 17ல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20க்கும் அதிகமான தொழிலாளர்கள் பரிதாபமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்படி இந்தப் பட்டியல் முடிவற்ற நீள்கிறது.

     இந்தியாவில் உழைக்கும் வர்க்கக் கூட்டத்தில் 7 சதவீதத்தினர் மட்டுமே அமைப்பு சார்ந்த பிரிவில் பணியாற்றுகின்றனர். இப்பிரிவில் அரசு ஊழியர்கள், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அரசுடன் தொடர்புடைய தனியார் பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமே அடங்கியுள்ளனர். மீதம் உள்ள 93 சதவீதத் தொழிலாளர்கள், உழைப்பாளிகள் அமைப்பு சாராப் பிரிவுகளில் வேலை செய்து வருகின்றனர். எனவே அவர்களை ஒன்று திரட்டி அமைப்பது மிகக் கடினமான ஒன்றாக உள்ளது.

    1991ல் நரசிம்ம ராவ் அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கையின் “தாராளமயம், தனியார்மயம், உலகமயம்” என்னும் எல்பிஜி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பெரிதும் சேதப்படுத்தி சீர்குலைத்தது. அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையை ஏஐடியுசி எதிர்த்தது.

பாஜக ஆட்சியும் தொழிலாளர் வர்க்கமும்

     பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி தொழிலாளர் மற்றும் தொழிற்சாலை அமைப்புக்களையும் தொழிலாளர் சட்டங்களையும் திட்டமிட்ட முறையில் சீர்குலைத்துப் பிய்த்து எறிகிறது. தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டங்களால் சாதித்துக் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற தொழிலாளர் சட்டங்களை நான்கு தொழிலாளர் தொகுப்புகளாகச் சுருக்கி விட்டது; இதன் மூலம் தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகளையும் சாதனைகளையும் பறிக்கிறது. மோடி அரசு முழுமையாகத் தொழிலாளர் விரோத நிலைபாட்டை ஏற்றுச் செயல்படுகிறது.

         ஏஐடியுசி பேரியக்கமும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் வலதுசாரி பிற்போக்கு மற்றும் அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகிறது.

            நமது போராட்டம் தொடர்கிறது!

-- நன்றி : நியூஏஜ் (செப்.11 –17)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

 

No comments:

Post a Comment