Saturday 1 October 2022

இந்துத்துவா மீது காந்தியடிகளின் வெற்றி

 நியூஏஜ் தலையங்கம் (அக்.2 –8)


இந்துத்துவா மீது காந்தியடிகளின் வெற்றி

            மீண்டும் அக்டோபர் 2 வந்தது, அந்நாளில்தான் பாபு பிறந்தார். பாபு நமக்கு வழங்கிய மறக்க முடியாத செய்தி, மாற்றம் – அது நிரந்தரமானது. ‘எந்த மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறாயோ, நீயே அந்த மாற்றமாகு’ என்று அவர் வழங்கிய செய்தி, அதுதான் வாழ்வின் வழி என்று நமக்குச் சொன்னார். அந்த உண்மைக்காக அவர் தம் வாழ்வையே தந்தார். கொலையாளியின் துப்பாக்கித் தோட்டாக்கள் நெஞ்சைத் துளைத்தபோது அவரது கடைசி வார்த்தைகள், “ஹே ராம்”! அவர் தம் இறுதிக்காகத் தயாராக இல்லாமல் இல்லை. அவருக்கு அதிர்ச்சி, ஆச்சர்யம் ஏதும் இல்லை. தம் மக்களை அவர் மிக நன்றாக அறிவார், மேலும் அந்தப் ‘பிறரை’யும்கூட அறிவார். அவர்கள் நம்மிடையே வேர் பிடிக்கவே இல்லை. ‘நாம்’ என்பது இந்தியா மட்டுமல்ல, ஆனால் அதைத் தாண்டியும் வியாபித்திருப்பது. பாபுஜி நம் அனைவரையும் அவரது மெலிந்த கரங்களில் எடுத்துள்ளார். மெல்ல அவர் நொறுங்கி பூமியில் சரியும்போது, அவர் நன்கு அறிந்திருந்தார் அது தோல்வி அல்ல. கோட்சேவும் அவனை உருவாக்கிய பிதாமகர்களும்தான் சுருங்கத் தொடங்கினார்கள். அவர்களைப் பொருத்தவரை, அவர்களின் இலட்சியமான இந்து ராஷ்ட்டிராவே, பாபுஜி கொல்லப்பட்ட பிறகு, நொறுங்கி அழிக்கப்படலானது.

       
அதன் விளைவாய் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது. அதன் தலைவர்கள் எல்லாம் சிறை வைக்கப்பட்டனர். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அத்தடை நீக்கப்பட்ட பிறகும் ஆர்எஸ்எஸ் மக்களால் ஏற்கப்படவில்லை; அவர்கள் விரக்தியில் ஆழ்ந்தனர்.

              உலகமெங்கும் அக்டோபர் 2, சர்வதேச அகிம்சை தினமாக, வன்முறையற்ற தினமாகக்
 கொண்டாடுகிறார்கள்; நாமும், மக்களின் குடியுரிமை      சுதந்திரங்களின் மீது தொடுக்கப்படும் எந்தத் தாக்குதலுக்கு எதிராகவும் அமைதியாக நம் எதிர்ப்பைக் காட்டும் உறுதிமொழியை அனைவரும் அந்நாளில் மீண்டும் சூளுரைக்கிறோம்.

    அகிம்சை என்பது பாபுஜிக்கு, அதனை மறுப்பது அல்லது வலியுறுத்துவது என்ற வரையறைக்குள் அடங்கி நிற்பது அல்ல! மாறாக அது, வன்முறை குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் ஆகும். அது அச்சமற்று இருப்பது மட்டுமல்ல, நாம் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். எனவே கொலையாளி மூன்றாவது முறை சுடுவதற்காகத் துப்பாக்கியுடன் அவரைப் பார்த்தபோது, (ஏனெனில் முதல் இரண்டு முறை சுட்டபோது முற்றிலும் எதிர்பாராதது, மூன்றாவது தோட்டா எதிர்பார்க்கப்பட்டதுதானே, எனவே) கொலையாளியைப் பாபு ஒரு தருணம் வெறுமே பார்த்தார், பூமியில் சரிந்தார்.

        அது மிக நெருக்கமாக, நமது பண்பாட்டு உணர்வோடு கலந்திருக்கிறது. கோட்சே மீது அவரது கடைசி பார்வையில் குற்றம் சொல்லும் சாயல்கூட இல்லை. அவ்வாறுதான் அவர், தனது கொலையாளியையும்கூட தனக்குள், அவனையும் தனது சொந்தமாக ஆக்கியிருந்தார். கலாச்சார பண்பாட்டு பன்மைத்துவம் புதிய மட்டங்களை, மனித நேயம் –மனிதம் என்ற புதிய உச்சங்களை அடைந்துள்ளது. (பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே, இன்னா செய்தாரை ஒறுத்தல் மற்றும் மெய்ப்பொருள் நாயனாரைப் பொய் வேடம் புனைந்த முத்தநாதன் வாளால் வெட்டி வீழ்த்தியபோது, முத்தநாதனைத் தாக்க வந்த காவலரைக் கையமர்த்திய நாயனார், ‘தத்தா நமர்’ எனக் காவலரைத் தடுத்து வீழ்ந்தார் என்று இலக்கியங்களில் படிப்பதற்கு வாழும் இலக்கணமாய் வாழ்ந்தவர் பாபுஜி). இதனோடு ஒப்பிடும்போது, அந்த மக்களின் வகுப்புவாத அடையாளம் என்ற இந்து தேசியம் எங்கோ தொலைவில் சுருங்கி, கொடூரமாகக் கிடக்கிறது. அது ஒன்றே இந்து தேசியவாதம் என்கின்ற வகுப்புவாத அடையாளத்திற்கு எதிரான மாபெரும் வெற்றி!

            ஆனால் தேசியமோ, சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்காகக் காலனிய சக்திகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது; அதற்கான அதன் மிக விரிந்த தளத்தில் எல்லா வகுப்புகள், இனங்கள் மற்றும் அனைத்து மக்களையும் உள்ளடக்கி இருந்தது. அதன் உள்ளார்ந்த வலிமையின் ஊற்றுக்கண் குடியுரிமைகளை விரிவுபடுத்துவதிலும் அதனைப் போற்றிப் பராமரிப்பதிலும் இருந்தது. உண்மையில், எதிர்கட்சியின் பொறுப்பை நிறைவேற்ற பத்திரிக்கை அமைப்பு மட்டுமே இருந்தது. அங்கே ஜனநாயகம் இல்லை, ஆனால் பத்திரிக்கை இருந்தது.

      1908ல் முதன் முறையாக நாட்டில் தொழிலாளர்களின் அரசியல் வேலை நிறுத்தம், ஏறத்தாழ யாரும் அமைத்துத் திரட்டாது தன்னெழுச்சியாக நடைபெற்றது, பாலகங்காதர திலகருக்கு ஆறு

ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து வேலைநிறுத்தம். திலகர் காலனிய அரசுக்கு எதிராக ஏராளமாக எழுதி வந்ததால் கைது செய்யப்பட்டார். அவர் எழுதிய தொடரை ‘வந்து சேர்ந்த வெடிகுண்டு’ என்று அழைத்தார்கள். திலகர் தனது எழுத்துகளில் நிகழ்வுகளை அதிகம் விவரிப்பதில்லை, மாறாக, அவற்றின் பின்னணியில் இருக்கும் காரணங்களை ஆய்வு செய்தார். “மாற்று விமர்சனக் கருத்தை அனுமதிப்பதில்லை, சிந்திக்கவும் செயல்படவும் அரசு சுதந்திரம் அளிப்பதில்லை; (அதனால்) இளைஞர்கள் இத்தகைய வன்முறைச் செயல்களில் விடைகளைத் தேட எத்தனிக்கிறார்கள்” என்று அவர் கூறினார். திலகர் வன்முறையைக் கண்டித்தார், இருப்பினும் அவருக்கு எதிராக தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

      சிலர் அவரிடம் கைது செய்யப்படலாம் என எச்சரித்தார்கள். அதற்கு அவர் ‘காலனிய அரசு இந்த நாடு முழுவதையும் பெரிய சிறைச்சாலையாக மாற்றிவிட்டது; எனவே சிறைக்குப் போவது என்பது பெரிய அறையிலிருந்து சிறிய அறைக்குள் செல்வதைப் போலத்தான்’ என பதில் கூறினார். அவருக்கு எதிரான விசாரணைக்கு எதிர்வினை முன் எப்போதும் இல்லாதது. பாம்பே

டெக்ஸ்டைல் தொழிலாளர்கள் வீதிகளில் குவிந்தனர், ஆறு நாட்கள் தொடர்ந்து வீதிகளிலேயே இருந்தனர், 1908 முதல் 1914வரை திலகர் சிறையில் இருந்த காலத்திற்குச் சரியாக, ஆறு நாட்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு தோழர் லெனின் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை அறிந்த பின், ‘இந்தியாவின் அரசியல் அரங்கில் தொழிலாளர்களின் நுழைவு’ என்று அவர்களைப் பாராட்டினார். மேலும் அவர் திலகரை ‘ஒரு புரட்சியாளர்’ என்று அழைத்தார்.

   சில ஆண்டுகளுக்குப் பின் 1922ல், காந்திஜிக்கு எதிராகவும் அதே தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பாபுஜியைத் தொடர்ந்து பல லட்சக்கணக்கானவர்கள் தெருக்களில் வந்தனர், லட்சக் கணக்கானவர்கள் சிறையில் அடைபட்டனர், அதெல்லாம் ஒத்துழையாமை இயக்கத்தின் காரணமாக என்பது உண்மைதான்; ஆனால் அவற்றிற்கு எதிராகக் காலனிய அரசு எந்தக் குற்றச்சாட்டுகளையும் குறிப்பிட்டுச் சுமத்தவில்லை என்பது ஆச்சர்யமே. மாறாக, அவரது ‘யங் இந்தியா’ பத்திரிக்கையில் அவர் கட்டுரைகள் எழுதினார் என்பதற்காகக் காந்திஜி மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டினர். ‘ஒருவர் தன் உயிரைக் கொடுத்தும் குடியுரிமையை ஆதரித்துப் பாதுகாக்க வேண்டும்’ என்று காந்திஜி கூறினார். மேலும் அதுதான் சமூக மற்றும் அரசியல் வாழ்வின் மூச்சுக் காற்று என்றார். அவருக்கு அதுவே சுதந்திரத்திற்கான அடிப்படை ஆதாரம். சுதந்திரம் கட்டாய அவசியம், குடியுரிமைகளுக்கு வரம்பு கிடையாது. அதுவே உயிர் வாழ்வின் தண்ணீர் என்றார். தண்ணீரைச் சுத்தமாக வைத்திருக்க வேறுபாடுகளையும் அவர் அனுசரித்து உடன் வைத்திருக்க எந்த மட்டத்திற்கும் செல்ல அவர் தயாராக இருந்தார். ஏனெனில், நீரின்றி அமையாது உலகும் மனிதகுலத்தின் உயிரோட்டமும், அதுபோலத்தான் சுதந்திரமும் குடியுரிமையும்.

     அது குடியுரிமைகள் குறித்த கேள்வி மட்டுமல்ல, அதற்கான போராட்டமும்கூட. இந்தப் போராட்டத்தில், அதை மேலும் வலிமையாக்க, மிக முக்கியமான தேவை ஒன்றுபடுவது. கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான மீரட் சதி வழக்கு அத்தகைய ஒன்று: அப்போது காலனியத்திற்கு எதிரான அனைத்துச் சக்திகளும் ஒன்றுபட்டிருந்தது, வெல்ல முடியாத சவாலாக மாறியது. நமது 32 தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள், அவர்களை அரசு தீவிரவாதிகள் என்று கருதியது. அவர்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது, ஆனால் அதில் அவர்கள் தோல்வி அடைந்தார்கள். அதற்குக் காரணம் எதிர்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதேயாகும். அதுவே தேசியம் மலர்ந்து வந்த நமது தேசிய இயக்கத்தின் பாரம்பரியம். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்ட்களை ஒடுக்குவதில் குறியாக இருந்தார்கள்; அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, சாதாரணமான பொதுமக்கள் திரளும்கூட கம்யூனிஸ்ட் தத்துவம், கொள்கைகளுடன் அறிமுகம் கொண்டார்கள். கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மீரட், ஐக்கிய மாகாணங்களின் ஒரு சிறு நகரம்; இருப்பினும் அவர்களைக் குறித்த ஒவ்வொரு சிறு செய்திகளும் பொதுவெளியை அடைந்தன. அதற்கான பெருமை நமது தேசியப் பத்திரிக்கை ஊடகத்தையே சாரும், அவைதாம் ஒவ்வொரு நாளும் அந்தச் செய்திகளைப் பொதுவெளியில் பரபரப்பாக்கி பரப்பி வந்தன.

   ஒரு நாளும் நாம் மறக்க மாட்டோம், பொது எதிரிக்கு எதிரான நமது மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கான நல்லதொரு உதாரணம் அது.        

      குடியுரிமைகளை உயர்த்திப் பிடித்த பத்திரிக்கைகளுக்கும் அதன் ஆதர்சமாய்த் திகழ்ந்த தேசப் பிதாவுக்கும் சர்வதேச அகிம்சை நாளில் நாம் புகழஞ்சலி செலுத்துவோம்! காந்திஜி சொற்களை நெஞ்சில் சுமப்போம்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment