மே தினம்,
அநீதிக்கு
எதிரான போராட்டத்தை
எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கும்!
--அமர்ஜீத் கவுர்
பொதுச்
செயலாளர், ஏஐடியுசி
மே தினம் உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்கள்
செய்த மாபெரும் தியாகங்களின் சகாப்தத்தை நினைவுபடுத்துகிறது; வரையறுக்கப்பட்ட நிச்சய
ஊதியமின்றி, பணியிடத்துப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு என எதுவுமின்றி அவர்களை மனிதர்களாகவே
எண்ணாது வரைமுறையற்ற நீண்ட நேர வேலை என அவர்கள் சந்தித்த மிகக் கொடுமையான சுரண்டலை
எதிர்த்துத் தொடர்ந்து நடத்திய போராட்டங்களில்தான் தொழிலாளர்கள் அம்மாபெரும் தியாகங்களைச்
செய்தனர். மே தினம் அதைத்தான் நமக்கு நினைவுபடுத்துகிறது!
உழைப்பின் மேன்மைக்காகவும், மனிதர்கள்
என்ற மதிப்புமிக்க உரிமைக்காகவும் வரலாற்றில் அவர்கள் தொடுத்த பெரும் போராட்டங்களை
அந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது. ஒரு வகையில் மனித உரிமைகள் குறித்த உரையாடல்களை வரலாற்றில்
ஏற்றி வைத்தது தொழிலாளர் இயக்கமே. இது, ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் எளிய பிரிவினர்களின்,
சமூகத்தில் ஏதுமற்றவர்களின் அபிலாசைகளுக்குத் தலைமை தாங்கும் பாத்திரத்தைத் தொழிலாளர்
வர்க்கத்திற்கு அளித்தது.
எட்டுமணி நேர வேலை
19ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியின்
தொடக்கத்திலிருந்து, உலகின் பல்வேறு பகுதிகளில் வேலை நேரத்தை வரையறுக்க வற்புறுத்தி
தொழிலாளர்கள் கோரிக்கை எழுப்பத் தொடங்கினர். இந்தியாவில் அத்தகைய குரல் முதன் முறையாக
1866ல், அதாவது புகழ்பெற்ற சிக்காகோ தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கை நடப்பதற்கு
20 ஆண்டுகளுக்கு முன்பு, எழுப்பப்பட்டது; அதனால் தொழிலாளர்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு
ஆளாயினர்.
ஒடுக்குமுறை எவ்வளவு கடுமையானதென்றால்,
எட்டு தொழிற்சங்கத் தலைவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்; அவர்கள் சிக்காகோவின்
ஹே மார்க்கெட் சதுக்கத்தில் அமைதியான கூட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர்கள். அமைதியாக
கூட்டம் நடந்த இடத்தில், தொழிலாளர் இயக்கத்தை இழிபடுத்த விரும்பிய சதிகாரர்கள், ஒரு
வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளர் தலைவர்களில் நால்வருக்குத்
தூக்கு தண்டனை, விசாரணையின்போது ஒருவர் மரணம், மற்றும் மூவருக்கு ஆயுள் தண்டனை. கிளர்ச்சியின்
செய்தி உலகெங்கும் பரவ, எல்லா இடையூறுகளையும் சந்தித்துத் தொழிற்சங்க இயக்கம் துரித
கதியில் வளர்ந்தது.
இந்தியாவில் முதல் வேலைநிறுத்தம்
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ்
இந்தியத் தொழிலாளர்கள் நடத்திய முதலாவது வேலைநிறுத்தம், அவர்கள் சந்தித்த சுரண்டல்
நிலைமைகளை வரலாற்றின் கவனத்திற்குக் கொண்டு வந்த அந்நிகழ்வு, 1827ல் நிகழ்ந்தது.
தொழிலாளர்களின் அப்போராட்டம் காலனியவாதிகளான
ஆளும் வர்க்கங்களின் சுரண்டலுக்கு எதிராகப் பழங்குடி மக்களால் நடத்தப்பட்டது. காடுகளில்
வசித்த அந்தப் பழங்குடி மக்களை அங்கிருந்து விரட்டிவிட்டு, காடுகளின் செல்வாதாரங்களைச்
சுரண்டவும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பல்வேறு கொடுமையான சட்டங்களின் மூலம் விவசாயிகளின்
நிலங்களை அபகரிக்கவும் செய்த ஆளும் வர்க்கங்களை எதிர்த்து அவர்கள் போராடினர்; அப்போராட்டங்கள்
அனைத்தும் நம் தாய் மண்ணின் மீதான அன்னிய ஆட்சிக்கு எதிரான அரசியல் எதிர்ப்புக்கான
சூழலை ஏற்படுத்தின. 1857ன் எழுச்சிக் கிளர்ச்சிகளை மார்க்ஸ் முதலாவது இந்தியச் சுதந்திரப்
போர் என்று குறிப்பிடுவதன் பின்னணியில் இந்த அனைத்து அம்சங்களும் அவற்றிற்கே உரிய முக்கியத்துவத்துடன்
திகழ்கின்றன. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் காலனிய ஆண்டைகளின் இச்சர்வாதிகாரம் தொழிலாளர்
வர்க்கத்தை மீண்டும் உறுதிபட எழச் செய்தது; அதைத்தான் வரலாற்றுப் பக்கங்களில் 1861ல்
கல்கத்தாவில் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டங்களாகப் பதிவு செய்தது, அப்போராட்டங்கள்
பின்னர் நாட்டின் பல ஆலைப் பகுதிகளுக்கும் பரவியது.
சங்கம் அமைத்தல்
1866, ஐந்து ஆண்டுகளில், பணிநேரத்தை வரையறுக்க
வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அதுவரை சங்கம் சேர்தல் என்பது, அந்த வார்த்தைக்குரிய
முழு உணர்வுடன், தொடங்கிடவில்லை. அவையெல்லாம் சில நல்ல உள்ளம் படைத்த தலைவர்கன் முன்மொழிந்த
நலவாழ்வு நடவடிக்கைகள் என்பன போன்றே இருந்தன; தொழிலாளர்களைச் சில நேரம் வகுப்பு அடிப்படையில்,
வெளியிலிருந்து அவர்களுக்குச் சில நிவாரணங்களைப் பெற்றுத் தர, அத்தலைவர்கள் திரட்டினர்.
1870கள் தொடங்கி பிரிவு வாரியான அடிப்படையில் திரட்டப்பட்டு சங்கங்கள் அமைக்கப்படலாயின.
தொழிற்சங்கங்களின் பெருந் திரள் இயக்கம்
நமது நாட்டின் விடுதலை இயக்கத்திற்கு வழிகாட்டு உதாரணங்களை ஏற்படுத்தின. 20ம் நூற்றாண்டின்
தொடக்கத்திலிருந்து, வரையறுக்கப்பட்ட வேலை நேரம், ஊதியம், பணியிடப் பாதுகாப்பு, நட்டஈடு
மற்றும் சமூகப் பாதுகாப்பு எனப் போராட்டக் கோரிக்கைகள் கூர்மையாக வரையப்பட்டது. 1920,
அக்டோபர் 31ல் ஏஐடியுசி பேரியக்கம் அமைப்பதற்கு முந்தைய நேரங்களின்போது நூற்றுக் கணக்கான
வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன என வரலாற்றில் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் முதல் மே தினமும் தொழிலாளர் நலச் சட்டங்களும்
இந்தியாவில் மே தினம் அனுசரிக்கப்படுவது
ஏஐடியுசி சங்கங்கள் அமைக்கப்பட்ட பிறகே தொடங்கின;
1923ல் இன்றைய தமிழ்நாட்டில் (அப்போது மெட்ராஸ்) சிங்கார வேலு அவர்களால் மே தினச் செங்கொடி
முதன் முதலாக ஏற்றி வைக்கப்பட்டது, பிறகு மெல்ல இந்தியா முழுவதும் பரவியது. (அந்த வகையில்
இந்தியாவில் இந்த மே தினம் நூற்றாண்டின் தொடக்கமாகும்.)
நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு தொழிற்சங்கச்
சட்டம் 1926, பிரகடனம் செய்யப்பட்டதுடன் தொழிலாளர் வர்க்கம் சட்ட பூர்வ அந்தஸ்தைப்
பெற்றது; நட்டஈடு மற்றும் மெயின்டனஸ் சலுகை
பெறும் உரிமையை 1923 சட்டத்தின் மூலம் பெற்றது; தொழிலாளர்கள் பலமுறை போராட்ட நடவடிக்கைகளில்
இறங்கி தொழிற்சாலை சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர்.
புரட்சியாளர்கள்
தொழிலாளர்கள் கொடூரமானது என்று கூறிய தொழிற்
தகராறு சட்டம் உட்பட மூன்று சட்டங்களுக்கு எதிராகப் புரட்சியாளர்கள் –பகத் சிங் மற்றும்
பட்டுகேஷ்வர் தத் – இருவரும் தேசிய அசம்பிளியில் (இன்றைய நாடாளுமன்ற இல்லம்) துண்டறிக்கைகளை
வீசி எறிந்த சரித்திரப் புகழ் பெற்ற நிகழ்வு அரங்கேறியது. அந்நிகழ்வு, இன்றைய மோடி
அரசால் கொண்டு வரப்படும் தொழிலகக் குறுங்குறியை (இன்டஸ்ட்ரியல் கோட்) நினைவூட்டுகிறது.
1938ல் சம்பளப் பட்டுவாடா சட்டம் சாதிக்கப்பட்டது.
விடுதலை இயக்கத்தில் பங்கேற்பு
தொழிலாளர் இயக்கம் தனது உரிமைகளுக்காக
உறுதியுடன் போராடியதுடன், விடுதலை இயக்கத்திலும் பங்கேற்றது; இது இறுதியில் அதனை வெற்றிகரமாகத்
தனது முதலாவது தேசிய மையத்தை ஏஐடியுசி என்ற பெயரில் 1920ல் அமைப்பதற்கு இட்டுச் சென்றது.
ஏஐடியுசி அமைக்கப்பட்ட பிறகு, அதன் மேடையிலிருந்து ஒலித்த அறைகூவலை ஏற்று, ஒன்று திரட்டப்பட்ட
ஓர் அமைப்பாக, ஏஐடியுசி பதாகையின் கீழ் தன்னெழுச்சியாக விடுதலை இயக்கத்தில் இன்னும்
ஊக்கத்துடன் பங்கேற்றது. ஏஐடியுசியின் இரண்டாவது
மாநாடு ஜாரியாவில் நடைபெற்றபோது “முழு சுதந்திரம்” கோரி தீர்மானம் நிறைவேற்றியது ம்ட்டுமல்ல,
விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவர்களுடன் இணைந்து உறுதியுடன் அதற்காகப் பாடுபடவும்
செய்தது. காலனிய ஆட்சியாளர்களால் முன் வைக்கப்பட்ட தன்னாட்சி திட்டத்தை (செல்ஃப் ரூல்
பார்முலா) நிராகரித்து, அரசியலமைப்பு மன்றம் (கான்ஸ்டிட்யூவன்ட் அசம்பிளி) அமைத்திடக்
கோரியதுடன், அப்படித் தயாரிக்கப்படும் அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய
கோரிக்கைகளின் சாசனத்தையும்கூட சமர்ப்பித்தது.
விடுதலைக்குப் பிறகு
விடுதலையை அடுத்து வந்த காலத்தில் தேசக்
கட்டமைப்பிற்கான தனது பாத்திரத்தைத் தொழிலாளர் வர்க்கம் ஆற்றியது. தனது காலத்தைத் தாண்டிய
நெடு நோக்கில் தனது பங்காகப் பொதுத் துறை நிறுவனங்கள் நிறுவப்படுவதைத் துரிதப்படுத்தி
சாதித்தது.
அதே போழ்து ஒவ்வொரு அடியிலும் தனது உரிமைகளை,
நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் பல்வேறு சட்டங்களை --கம்யூனிஸ்ட்கள் மற்றும்
தொழிலாளர்கள் மீது நட்புடைய பிற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன்-- நிறைவேற்றச் செய்யவதன்
மூலம் சாதிக்க, தொழிலாளர் வர்க்கம் வீதியில் இறங்கிப் போராட வேண்டியிருந்தது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலும், விடுதலைக்குப்
பிறகும்கூட, தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்குத் தொடர்ச்சியான எதிர்ப்பு வலதுசாரி பிற்போக்குவாதிகளிடமிருந்து
வருகிறது. அந்தச் சக்திகள் தொழிலாளர்களின் உரிமைகளை மட்டும் எதிர்க்கவில்லை, இந்திய
நாட்டிற்கான சுய சார்பு பொருளாதார வளர்ச்சிப் பாதையையும்கூட எதிர்கிறார்கள்; ஒவ்வொரு
கட்டத்திலும், ஒவ்வொரு அடியிலும் தடங்கல்களை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். வரலாறு
அவற்றிற்கெல்லாம் சாட்சியமாக இருக்கிறது.
இன்றைய நிலையில் தொழிலாளி வர்க்கம்
இன்று நாம் எங்கே நிற்கிறோம்? சுயச்சார்பு
பொருளாதார வளர்ச்சித் திட்டத்திற்கு நேர் எதிரிடையான, மேற்கத்திய முதலாளித்துவ ஆட்சிகள்,
குறிப்பாக அமெரிக்கா நடைமுறைபடுத்தும் சுதந்திரச் சந்தை பொருளாதாரத்தில் நம்பிக்கை
கொண்ட அந்தச் சக்திகள், மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது
நாம் எங்கே நிற்கிறோம்? முதலாளித்துவ வட்டம், அதிலும் அந்தக் கார்ப்பரேட் வட்டத்திற்குள்ளேயே
சில நெருங்கிய கூட்டாளிகள் பயன்பெறவே இரவு பகலாகப் பணியாற்றிவரும் மோடி, உண்மையில்
சர்வதேச நிதிமூலத்தின் நன்மைக்காகவே உழைத்து வருகிறார். அதன் விளைவுகள் நாம் அனைவரும்
கண் எதிரே பார்க்கக்கூடியதாக உள்ளன.
பொருளாதாரம் நொறுங்கிச் சிதலமடைந்துள்ளது;
பணவீக்கம் கடந்த பத்தாண்டுகளின் உச்சபட்சமாகச் சமீபத்தில் 12 புள்ளிகள் மேலும் அதிகரித்துள்ளது;
கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் வேலையில்லா விகிதம் உயர்ந்து தற்போது சுமார் 12சதவீதமாகப்
பதிவாகியிருப்பது இந்நாட்டின் இளைஞர்களை விரக்தி அடையச் செய்கிறது; 2006ல் 30 சதவீதமாக
இருந்த உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை 2022ன் தொடக்கத்தில் 15 சதவீதமாகக் கடுமையாகச்
சரிந்துள்ளது. பல நிறுவனங்கள் மூடப்பட்டு வருவதால் வேலை இழப்புத் தொடர்வது மட்டுமல்ல,
புதிய தொழில் நுட்பமும் பல வேலைகளை விழுங்குகிறது. ஊரடங்கு விலகிக் கொள்ளப்பட்டு ஆலைகள்
திறக்கப்படும்போது மீண்டும் பணியில் சேர்வதென்பது ஊதிய வெட்டு மற்றும் தொடர்புடைய சலுகைப்
படிகளைக் குறைப்பது போன்ற கடுமையான நிபந்தனைகளுடன் வருகிறது.
அமைப்புரீதியாகத் திரண்ட சங்கங்களின் கீழ்
தொழிலாளி வர்க்கத்திடமிருந்து வரும் எதிர்ப்புக்களைக் கட்டுப்படுத்தவும் எதிர்ப்போர்
குரலை ஒடுக்கவும் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தம் மற்றும் குறுங்குறியாக்கல் முதலியவற்றைத்
தீவிரமாகப் பின்பற்றுகிறார்கள். திட்டமிட்ட நான்கில், மூன்று தொழிலாளர் குறுங்குறிகளை
(லேபர் கோடு) நாடாளுமன்றத்தில் விவாதமில்லாமல், எதிர்க்கட்சியினர் முழுமையாக வெளிநடப்பு
செய்தநிலையில், இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் அதற்கென உருவாக்கிய முறையான வழிமுறை
நடவடிக்கைகளைப் பின்பற்றாமலேயே நிறைவேற்றினர்.
ஒடுக்குமுறை சட்டங்கள்
அரசின் கொள்கைகளை எதிர்ப்பதைத் தேசத் துரோக
நடவடிக்கை என முத்திரை குத்தி, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு முகமைகள் மூலம்
மக்களைத் துன்புறுத்துகின்றனர். எதிர்ப்போர் மீது பல வழக்குகளைத் தொடுத்து நீண்டகாலம்
அவர்கள் சிறையில் வாடும்படி செய்ய தேசத் துரோகச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்
சட்டம் UAPA, மத்தியப் புலனாய்வு சிபிஐ,
வருமான வரி இலாக்காவின் அமலாக்கத் துறை, தேசியப் பாதுகாப்புச் சட்டம் NSA, மற்றும் தேசிய விசாரணை முகமை NIA போன்ற பல்வேறு முகமைகளைப் பயன்படுத்துகின்றனர்.
மதவாதப் பிளவுபடுத்தல்
மறுபுறம், மத்தியிலும் மாநிலங்களிலும்
ஆர்எஸ்எஸ் – பாஜக தலைமையிலான ஆட்சிகளின் பல்வேறு (உதிரி) அமைப்புகள் மற்றும் சட்டத்தைக்
கையில் எடுத்துக் கொள்ளும் சுய அதிகாரக் கும்பல்கள் –ஆட்சி அதிகாரத்தின் சகல பாதுகாப்புடன்–
தங்களின் மதவாதப் பிளவுபடுத்தல் நிகழ்ச்சி நிரலைத் தொடர்ந்து நிறைவேற்ற பல்வேறு வெறியூட்டும்
முழக்கங்களை முன்வைத்து செயல்படுகின்றனர்: அத்தகைய நிகழ்வுகள்தான் தாய் மதத்திற்குத்
திரும்புவது என்னும் கர் வாப்சி, பசு பாதுகாப்பு, லவ் ஜிகாத், சிஏஏ எனவும் பேயாட்டம்
ஆடி தற்போது ஹிஜாப் தடை என வந்து நிற்கிறது.
வெறுப்பு, கலகம் அதுவே தேர்தல் உத்தி
உத்தர்காண்ட் மாநிலத்தில் தரம் சன்சத்
என்ற அமைப்பு முஸ்லீம்களை இனப் படுகொலை செய்ய வெளிப்படையாக விடுத்த அறைகூவல்களை மோடி
கண்டிக்கவில்லை; இப்போது அதற்குப் பிறகும் கூடும் கூட்டங்களில் அதே நபர்கள் அதே வெறுப்பைக்
கக்கி வருவதையும் அவர் கண்டிக்கவில்லை. அதுமட்டுமல்ல, மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள
அமைச்சர்கள் உள்ளிட்ட சில பாஜக சட்ட மன்ற உறுப்பினர்கள் இந்த மண்ணின் சட்டம் மற்றும்
அரசியலமைப்பை மீறி ஆத்திரமூட்டும் வகுப்புவாத அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்; ஆனால்
பிரதமர், அவர்கள் நடவடிக்கைகளுக்குத் தனது தலையசைப்பு ஒப்புதல் உண்டு என்பது போல, மௌனம்
காக்கிறார்.
சதிகள் மூலம் திட்டமிட்ட கலகங்கள் அரங்கேற்றப்பட்டு
இப்போது புல்டோசர் இடிப்பு அரசியல் என்ற புதிய வடிவத்தில் ஏழை (புறநகர் சேரி) குடியிருப்புகளைக்
குறி வைத்து நகர்வது இயல்பாகத் தொடங்கியுள்ளது. தினசரி சம்பாதியத்தை நம்பியிருப்போர்,
முறைசாராப் பொருளாதாரத்தில் பணியாற்றும் ஏழை தொழிலாளிகளே அவர்களின் தாக்குதல் இலக்கு.
பல்வேறு மதம் மற்றும் நம்பிக்கைகளுடன் அமைதியாக
வாழும் மக்களின் வாழ்வைச் சீர்குலைக்க வெளியிலிருந்து திரட்டப்பட்ட கலகக் குழுக்கள் தருவிக்கப்படுகின்றனர்.
திட்டமிட்ட
முறையில் நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டு அதற்கேற்ப பிரச்சாரமும் திருமூர்த்திகளான பிரதமர்,
உபி முதல்வர் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் மூவராலும்-- எந்த வழியிலாவது உபி தேர்தல்களில்
வெற்றி பெற-- முன்னெடுக்கப்பட்டது; எங்கெங்கும் எல்லா இடங்களிலும் சூழ்நிலையை விஷமாக்க
அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கிய ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டன. காஷ்மீர்
ஃபைல்ஸ் போன்ற படங்கள் வெளியிடப்பட்டது மட்டுமின்றி, அந்நிகழ்ச்சி நிரலைத் தொடர அதற்கு
வரி விலக்கும் அளித்தனர்; அதன் மூலம் கூடுதல் மக்களைப் பார்க்கச் செய்து, விஷமத்தனமான
பிளவுபடுத்தலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அடுத்த சுற்று மாநிலத் தேர்தல்களை
வெல்வதே அவர்களின் மதவாத உத்தி. 2024 பொதுத் தேர்தல்களிலும் கண்ணை வைத்து அவர்கள் அந்த
விஷத்தைப் பரப்புகிறார்கள்.
தொழிலாளர் வர்க்கத்தின் கடமை
இத்தகு சவால் மிகுந்த நேரங்களில் தொழிலாளர்
வர்க்கத்தின் முன் பிரம்மாண்டமான பணி காத்திருக்கிறது. தேசத்தின் நன்மைக்காக, நமது
இயற்கை செல்வாதாரங்களையும் தேசியச் சொத்துக்களையும் பாதுகாக்க, தொழிலாளர் உரிமைகளைப்
பாதுகாக்க, நமது மக்களின் இணக்கமான வாழ்வைப் பாதுகாத்து, வெறுப்பு நிகழ்ச்சிநிரலை நிராகரிக்கச்
சாத்தியமான அதிகபட்ச பரந்த ஒற்றுமையைத் தொடர்ந்து உறுதியாகக் கட்ட வேண்டும்.
இத்தகைய பின்னணியில் 2022 மே தினம் தொழிற்சங்கச்
செயற்பாட்டாளர்களின் தோள்களின் மீது பெரும் பொறுப்புக்களைச் சுமத்தியுள்ளது. ஓய்ந்திருக்க
நேரமில்லை. பெருந்திரள் மக்களின் விருப்பம் மற்றும் அவர்களின் ஒன்றுபட்டச் செயல்பாடுகளின்
மூலம் சர்வாதிகாரிகள் ஒடுக்கப்பட்டு தோற்கடிக்கப்படும் வரையில், முன்னே முன்னே முன்னோக்கிய
நமது பயணம் தொடர வேண்டும்.
இப்படை வெல்லும் எனச் செங்கொடி உயர்த்தி முழங்குவோம்!
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ,
கடலூர்
No comments:
Post a Comment