Wednesday, 4 May 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு வரிசை 57 சத்யபக்தா – சிபிஐ அமைப்பு மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 57


சத்யபக்தா – 

சிபிஐ அமைப்பு மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்

                                                                    --அனில் ரஜீம்வாலே

சத்யபக்தா ஒரு புரட்சியாளர், கம்யூனிச மற்றும் புரட்சிகர ஏடுகளின் பதிப்பாளர் மற்றும் 1925 கான்பூர் முதலாவது கம்யூனிஸ்ட் அமைப்பு மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ஆவார். சர்ச்சைகளுக்குரிய மனிதரான அவர் இயக்கத்தை விட்டும் விலகிச் சென்றார். இருப்பினும் வரலாற்றில் அவரது முக்கியத்துவத்தை எவ்வகையிலும் குறைத்துவிட முடியாது. ‘சிபிஐ அமைக்கப்பட்டதற்கான பெருமையை ஒருவருக்கு அளிக்க வேண்டுமானால் அது சத்யபக்தாதான்’ என்று டாக்டர் ராம்பிலாஸ் சர்மா எழுதியுள்ளார்.

            அவரது உண்மையான பேர் சக்கான் லால். 1897 ஏப்ரல் 2ம் நாள் இராஜஸ்தானின் பாரத்பூர் மாவட்டத்தில் பிறந்தார். அவரது தந்தை குந்தன்லால், சமஸ்தான அரசு நடத்திய ஒரு நடுநிலைப் பள்ளியின் முதல்வராக இருந்தார்.

            கல்கத்தா ‘பாரத் மித்ரா’ (பாரத நண்பன்) இதழுக்குச் சந்தா செலுத்தி அதன் ஆழமான செல்வாக்கிற்கு ஆளானார் சத்யபக்தா. எளிய பின்னணியிலிருந்து வந்த அவர் ஒரு போதும் செல்வமோ சொத்தோ சேர்த்ததில்லை.

            புரட்சிகரப் பத்திரிக்கைகளைப் படித்து வளர்ந்த அவர் குதிராம் போஸ், பரீந்திர கோஷ் மற்றும் அரபிந்த கோஷ் குறித்து அறிந்து கொண்டார். ‘சத்ய சனாதன் தர்மா’ (பழமையான சத்திய தர்மம்)  வாராந்திர இதழ் அவருக்கு அறிமுகமானது.

    அவர் ஒரு தலித் பெண்ணை மணந்து கொண்டார், அப்பெண்மணி ஒருக்கால் கைம்பெண்ணாக இருந்திருக்கக் கூடும்.

      அவர், ‘பிரதாப்’ இதழ் மற்றும் அதை நடத்திய கணேஷ் ஷங்கர் வித்யார்த்தியின் செல்வாக்கில் ஈர்க்கப்பட்டார். 1912–13 ஆண்டு இளம் வயதிலேயே தலைமறைவு புரட்சிகர இயக்கத்தில் இணைந்தவர் வெடிகுண்டுகள் செய்யப் பயன்படும் வெடி மருந்துகளைச் சேகரித்து வந்தார். வெடி பொருட்களுடன், அதுகுறித்த எச்சரிக்கை அறிவின்றி சில துணிகரச் சோதனைகளைச் செய்ய முயன்றதில் அவரது விரல் வெடித்துச் சிதறியது. அதைத் தொடர்ந்து அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவர் போலீசின் கண்காணிப்புப் பார்வையில் இருந்தார். ஷக்ராம் கணேஷ் தேவ்ஸ்கர் எழுதிய  தேஸீர் கதா, பக்கிம்சந்திரரின் ‘ஆனந்த மடம்’ மற்றும் ‘ஜப்பான் கா உதய்’ (உதயம்) போன்ற நூல்களைப் படித்து அவற்றில் ஆழ்ந்தார்.

காந்தியராக ஆதல்

            1916ல் ஹரித்வார் கும்ப’த்தில் இருந்த ‘பாரத் சேவக் சமாஜ்’ அமைப்பில் தன்னார்வத் தொண்டராக இணைந்து சேவை செய்து கொண்டிருந்தபோது அவருக்குக் காந்திஜியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் அதுவரை சபர்மதி ஆசிரமம் உருவாகவில்லை; கருவாக அந்த அமைப்பு அகமதாபாத்தின் ஆலீஸ் பாலத்திலிருந்து ஒரு மைல் தள்ளியிருந்த ஒரு கிராமத்தில் வாடகை வீட்டிலிருந்து அப்போது செயல்பட்டது. சத்யபக்தா அங்கே சென்று நீர் நிரப்புதல், கை இயந்திரத்தில் மாவு அரைத்தல் முதலிய உடலுழைப்புப் பணிகளைச் செய்யத் தொடங்கினார்; அதே போழ்ந்து வங்காளம் மற்றும் குஜராத்தி மொழிகளையும் கற்று வந்தார்.

            அங்கே அவர் காந்திஜியின் ‘சர்வோதயா’ மற்றும் ‘சிறை அனுபவம்’ நூல்களை இந்தியில் மொழிபெயர்த்தார். காகா காலேக்கர், வினோபா பாவே, மகாதேவ் தேசாய் போன்ற காந்தியர்களுடன் தொடர்பு கொண்டார். அவர் நிரந்தரமாக ஆசிரமத்தில் தங்கியிருக்க வேண்டுமென காந்திஜி விரும்பினார்; ஆனால் சத்யபக்தாவுக்கு அவரது சொந்த திட்டங்கள் வேறு இருந்தன, மேலும் அகிம்சா போன்ற கோட்பாடுகளில் அவருக்கு முழுமையான உடன்பாடில்லை. 1918லிருந்து 1920 வரை அங்கே தங்கி இருந்த அவர் காங்கிரஸின் பாம்பே அமர்வில் பங்கேற்றார்.

1916லிருந்து எழுதத் தொடங்கிய அவரது முதல் கட்டுரை ‘தோண்டு கேசவ் கார்வ் வாழ்க்கை’ என்பதாகும் (மகரிஷி கேசவ் (படத்தில்) என்றழைக்கப்படும் அவர் ஒரு பேராசிரியர், சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், பெண்கள் நலனுக்கு உழைத்தவர், பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் நிறுவியவர் மற்றும் பாரத் ரத்னா விருது பெற்றவரும் ஆவார்); பிறகு பல வாழ்க்கை வரலாறுகள் மற்றும் சரஸ்வதி, மரியாதா, ஹிட்கரிணி, பிரதிபா முதலிய பிற தேசிய ஏடுகளில் கட்டுரைகள் பலவும் எழுதினார். அவர் பண்டிட் சுந்தர்லாலின் பவிஷ்ய இதழில் பணியாற்றியபோது ஜவகர்லால் நேரு, விஜயலெட்சுமி பண்டிட் மற்றும் பிற தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. 

கம்யூனிசத்துடன் தொடர்பு

            கிருஷ்ண காந்த் மாளவியா நடத்திய ‘மரியாதா’வில் பணியாற்றியபோது சத்யபக்தா 1921ல் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். ஆனால் காங்கிரஸ் அரசியலுடன் விரைவில் ஏமாற்றமடைந்த அவர் இராஜஸ்தான் சேவா சங்கத்தில் இணைந்தார். பிறகு கம்யூனிஸ்ட் கருத்துகளுடன் தொடர்பு ஏற்பட்டு ரஷ்யப் புரட்சி குறித்து படிக்கத் தொடங்கி அதன் மீது பெரிதும் மதிப்பு கொண்டார்.

கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘ஒர்க்கர்ஸ் ட்ரட்நாட்’ (பயமறியா தொழிலாளிகள்) செய்திப் பத்திரிக்கையின் ஆசிரியர் சில்வியா பங்க்ருஸ்ட் அவர்களுடன் சத்யபக்தா கடிதத் தொடர்பு கொண்டார். அப்பெண்மணியின் மூலமாக ஏராளமான மார்க்சிய இலக்கிய ஏடுகளைப் பெற்றார். 1923ம் ஆண்டின் தொடக்கத்தில் நாக்பூரிலிருந்து வெளியான ராதா மோகன் கோகுல்ஜியின் ‘பிராண்வீர்’ என்ற  இடதுசாரி வாரஇதழில் அவர் சேர்ந்தார். எட்டு மாதங்கள் அதன் ஆசிரியராக இருந்து அதன் சுதந்திரதின சிறப்பு மலரை வெளியிட்டார். ஒரு செய்தியாளராக எஸ் ஏ டாங்கே குறித்து அவர் எழுதிய எழுத்துகள் பெரும் கவனத்தையும் ஈர்ப்பையும் பெற்றது.

1923ன் இறுதியில் சத்யபக்தா கான்பூருக்குத் திரும்பி வந்து தொழிலாளர்கள் நடவடிக்கைகளில் பங்கேற்றார். 1924ன் தொடக்கத்தில் விக்டோரியா காட்டன் மில்லில் நடந்த வேலைநிறுத்தம் ஒன்றரை மாதங்கள் நீடித்தது. அந்த வேலைநிறுத்தம் குறித்த விரிவான செய்திகளைச் சத்யபக்தா ‘தைனிக் வர்த்தமான்’ பத்திரிக்கையில் 1924 ஏப்ரல் 30ல் ஒரு கடிதத்தில் விவரித்திருந்தார். மஸ்தூர் சபா இரண்டாயிரம் ரூபாய் வசூலித்ததாக எழுதிய அவர் “கான்பூர் தொழிலாளர் இயக்கத்தில் கம்யூனிஸ்ட் அல்லது போஸ்ஷ்விக் திட்டங்களில் நம்பிக்கை கொண்ட பலர் உள்ளனர்…” என மேலும் எழுதினார். பிரிட்டிஷ் அரசு கான்பூர் சதி வழக்கு போன்ற தனது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளை மறைப்பதற்காக போல்ஷ்விஸம் என்ற போலியான மாயை அச்சுறுத்தலை எழுப்புகிறது என அவர் கூறினார்.

சிபிஐ அமைப்பு கருத்துருவாக்கம்

            கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பது என்ற வகையில் அவர் சிந்திக்கத் தொடங்கி, அனைத்து கம்யூனிஸ்ட்களின் அகில இந்திய மாநாடு ஒன்றைக் கூட்ட வேண்டும் என்று எண்ணினார். அவர் மட்டும் என்பதில்லை, இந்தியாவில் பாம்பே குழுவினர் உட்பட பலரும் அதே போன்ற எண்ணம் கொண்டிருந்தனர் என்பது உண்மையே. அவர் ‘இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி’ என்ற கட்சியை அமைக்கும் தனது நோக்கத்தை 1924 ஜூலை 12 தேதியிட்ட ‘ஆஜ்’ (இன்று) என்ற இந்தி நாளிதழில் வெளியிட்டார். அவர் ரஷ்யாவையும், அதன் கம்யூனிஸ்ட் ஆட்சியையும் சுட்டிக் காட்டி, மகிழ்ச்சியற்ற மற்றும் சுரண்டப்படும் மக்களைக் கைதூக்கி முன்னேற்றிவிட கம்யூனிசம் ஒன்று மட்டுமே வழியென உறுதிபடக் கூறினார்.

            கட்சியில் இணையும்படி அனைத்துச் சம்பளக்காரர்கள், விவசாயிகள், கிளர்க்குகள், பள்ளி ஆசிரியர்கள், இரயில்வே மற்றும் தபால் ஊழியர்கள், ப்யூன்கள் முதலானவர்களுக்குச் சத்யபக்தா அழைப்பு விடுத்தார். அக்கடிதத்தில் அவர் ‘பாரதிய சாம்யவாதி தள்’ (இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி) செயலாளர்  என்று கையெழுத்திட்டிருந்தார். அவரது அறிக்கை ‘இந்தியன் வோர்ல்டு’ என்ற ஆங்கில நாளேட்டிலும் வெளியானது.

            1925 செப்டம்பரில் சத்யபக்தா இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு நான்கு பக்கச் சுற்றறிக்கையை ‘இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி’ என்ற தலைப்பில் வெளியிட்டார்; அறிக்கையின் இறுதியில் உறுப்பினர் படிவம் அச்சடிக்கப்பட்டு இணைக்கப்பட்டிருந்தது. ‘முழுமையான சுயராஜியத்தையும், பொதுச் சொத்துரிமை அடிப்படையிலான சமூகத்தையும் …உற்பத்திச் சாதனங்கள் மற்றும் கருவிகள் மற்றும் உற்பத்தி வினியோகத்தையும் நிறுவி அமைப்பதைக் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கங்களாக வரையறுத்திருந்தார். ஜமீன்தாரி முறையை ஒழிப்பதற்கு அறைகூவல் விடுத்த அவர், பாடுபடும் பாட்டாளி மக்கள் ஒன்று திரண்டு தங்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். கட்சி தற்போதைய (சுரண்டல் அமைப்பு) முறையை மாற்றுவதற்காகப் பாடுபடும் என்றார்.

            ஐக்கிய மாகாணங்களின் அரசு இந்த இரண்டு கையேடுகளையும் 1924 அக்டோபர் 11 தேதியிட்ட கெசட் அறிவிக்கை மூலம் தடை செய்தது. 1924 அக்டோபர் 20 (கான்பூரிலிருந்து வெளியாகும்) ‘வர்த்தமான்’ (‘தற்போது’ என்ற பொருளுடைய) இதழில் ஒரு கடிதம் மூலம் சத்யபக்தா அதனை எதிர்த்து, “கட்சியைத் தடைசெய்வதாக முதலில் பிரகடனம் செய்யாமல் கட்சியின் விதிகளுக்குத் தடை விதிப்பது அரசின் கோழைத்தனம்” என கண்டனம் தெரிவித்தார். அவர் ஒரு கம்யூனிஸ்ட், அதன் எல்லா விளைவுகளையும் சந்திக்கத் தயாராகவே இருந்தார்.

     “கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்க எங்களுக்கு உரிமை உள்ளது” என 1924 நவம்பர் 5 தேதியிட்ட ‘ஆஜ்’ இதழில் அவர் வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சி சுயராஜியத்தை, சமூக ஒழுங்கின் மாற்றங்களை இன்னதென்று வரையறுக்கவோ தெளிவுபடுத்தவோ இல்லை என்று குறிப்பிட்ட அவர், தேசியக் காங்கிரஸ் மிக உறுதியாகப் பணக்காரர்களின் செல்வாக்கின் கீழ் உள்ளதாக மேலும் தெரிவித்தார். ஏழை பணக்காரர் இடையேயான வித்தியாசத்தை நீக்க கட்சி விரும்புகிறது என்ற அவர் இது குறித்த லெனினின் மேற்கோளையும் எடுத்துக் காட்டினார்.

          அவரது நடவடிக்கைகளை நெருங்கிக் கண்காணித்த பிரிட்டிஷ் அரசு அவரது வீட்டையும் அவரது சோஷலிசப் புத்தகக் கடையையும் பலமுறை சோதனையிட்டு புத்தக வெளியீடுகளைப் பறிமுதல் செய்தது. கான்பூர் சதி வழக்குக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பேர்களில் முதலில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது; ஆனால் போதுமான சாட்சியம் இல்லாததால் அவரது பெயரைச் சேர்க்காது விட்டனர்.

            ‘இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி’யின் ‘முதலாவது காலாண்டு அறிக்கை’யைச் சுருக்கமான கடிதமாக சத்யபக்தா செயலாளர் என்ற கையெழுத்துடன் ‘பிராண்வீர்’ வெளியிட்டது. கட்சியில் அப்போது பெரும்பாலும் கான்பூர், மத்தியப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தானில் இருந்த 78 உறுப்பினர்களில் முக்கியமானவர்கள்: மௌலானா ஹஸ்ரத் மொகானி, நாராயண் பிரஸாத் அரோரா (எம்எல்சி), இராம சங்கர் ஆவஸ்தி (வர்த்தமான் ஆசிரியர்), ராதா மோகன் கோகுல்ஜி, மற்றும் ராம் கோபால் வித்யாலங்கர் (பிராண்வீர் ஆசிரியர்) முதலானவர்கள்.

            சத்யபக்தா HSRA (இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் ஆர்மி) என்னும் புரட்சிகர அமைப்பின் எல்லா கருத்துக்களையும் ஒப்புக்கொள்ளவில்லை எனினும், அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்தார். அவ்வமைப்பு உத்திரப்பிரதேசக் கிளை பிரசுரங்களான ‘வாலன்டியர்’ (தன்னார்வலர்) மற்றும் ‘ரெவலுஷனரி’ பிரதிகளைப் பறிமுதல் செய்தனர். 1924 அக்டோபரில் ‘போல்ஷ்விஸம் க்யா ஹை’ (போல்ஷ்விஸம் என்றால் என்ன) என்ற 16 பக்கச் சிற்றறிக்கை வெளியீட்டைக் கேள்வி பதில் வடிவில் எழுதினார். இந்தச் சிற்றேட்டை ஸ்வதேஷ் இதழின் ஆசிரியர் முகுந்த் பிகாரி விற்றுக் கொண்டிருந்தபோது கோரக்பூரில் கைது செய்யப்பட்டார். சத்யபக்தா கடுமையாக எதிர்த்தார். முகுந்த் பிகாரி 1925 மார்ச்சில் விடுதலையானார்.

            1925 மார்ச்சில் வெளியிடப்பட்ட கட்சியின் இரண்டாவது ‘காலாண்டறிக்கை’யில் உபியிலிருந்து 139பேர் உட்பட மொத்தம் 215 கட்சி உறுப்பினர்கள் இருந்ததாகத் தெரிவித்தது. அதே மாதம் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சக்லத்வாலா சத்யபக்தாவுடன் கடிதத் தொடர்பு கொண்டார். 1925 ஜூன் 18ல் “இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்காலத் திட்டம்’ என்ற தலைப்பிலான துண்டறிக்கை சத்யபக்தாவால் வெளியிடப்பட்டது; அதில் கான்பூரில் 1925 இறுதியில் நடைபெற உள்ள காங்கிரஸ் மாநாட்டு அமர்வுடன் இந்தியன் கம்யூனிஸ்ட் மாநாடு நடத்தப்படும் என்பது முதன் முறையாகக் குறிப்பிடப்பட்டது.

            1925 ஜூலை 7ல் புத்தகக் கடையை மீண்டும் திடீர் சோதனையிட்டு கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 1925 ஜூலை 16 தேதியிட்ட இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் இந்தச் செய்தி, “கம்யூனிஸ்ட் கட்சி : போலீஸ் சோதனை வேண்டாத நடவடிக்கை, செயலாளர் விளக்கம்” என்ற தலைப்புடன் வெளிவந்தது. இந்தியா ஒரு சிறையாக மாறிச் சுருங்கி விட்டது எனச் சத்யபக்தா கடுமையாக விமர்சித்தார்.

            போலீசும் பிரிட்டிஷ் உளவுப் பிரிவினரும் சத்யபக்தாவால் அமைக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு, அவர் தலைமையிலான HRA (இந்துஸ்தான் ரிபப்ளிக் ஆர்மி) யின் நேரடி விளைவெனச் சந்தேகப்பட்டது. அவரது ஆவணங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் இறுதி லட்சிய இலக்கு, நோக்கங்கள் மற்றும் திட்டங்களை மேலும் தெளிவாக வழங்க சத்யபக்தா முயன்றார்.

சத்யபக்தா அழைப்புக்கு எதிர்வினை

            கான்பூர் சதி வழக்குக்குப் பிறகு பம்பாய் “சோஷலிசவாதிகள் குழு”வும் கட்சி அமைப்பதென எண்ணியிருந்தனர் என எஸ்வி காட்டே பதிவிட்டுள்ளார். இதன் மத்தியில் அவர்கள் சத்யபக்தாவின் அறிக்கையைக் குறித்து அறிந்து கொண்டனர், கான்பூர் மாநாட்டில் பங்கேற்பது என முடிவெடுத்தனர். ஜெபி பஹர்கட்டாவும் அப்படியே செய்ய முடிவு செய்தார்.

            கேஎன் ஜோக்லேக்கர் தானும் பம்பாய் குழுவினரும் கான்பூர் சிறையில் எஸ்ஏ டாங்கேவைச் சந்திக்கச் சென்ற விஹெச் ஜோஷி மூலம் இதை அறிந்து கொண்டதாகப் பதிவிட்டுள்ளார். அவர் எழுதினார், “பாம்பே குழுவினராகிய நாங்கள் இந்த யோசனைக்கு ஆதரவளித்து, சாத்தியமான மிகக் கூடுதலான எண்ணிக்கையில் பங்கேற்க முடிவெடுத்தோம்.” மேலும் கான்பூர் சதி வழக்கில் (சட்ட உதவி) பாதுகாப்புக் குழுவுக்குச் சத்யபக்தா மிகவும் உதவியாக இருந்ததாகக் கூறினார்.

             ‘அல்மோராவில் ஒரு கடிதம் மூலம் என்னைச் சத்யபக்தா தொடர்பு கொண்டு கான்பூர் கம்யூனிஸ்ட் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்’ என முஸாஃபர் அகமது எழுதியுள்ளார். கான்பூரை அடைந்த முஸாஃபர் அகமது அங்கே காட்டே, ஜோக்லேக்கர், நிம்கர் முதலானவர்கள் வந்திருப்பதைக் கண்டார்.

            சத்யபக்தா மற்றும் மற்றவர்களின் முன்முயற்சிக்குப் பாம்பே மற்றும் வங்காளத்திலிருந்து மட்டுமல்லாமல் பஞ்சாப் மற்றும் மெட்ராஸிலிருந்தும் நேர்மறையான மறுமொழி கிடைத்தது.

        இவ்வாறு காட்டேயின் கூற்றுப்படி, (நாடு முழுவதும் இயங்கி வந்த பல்வேறு) கம்யூனிஸ்ட் குழுக்களைக் கான்பூரில் ஒன்றாகக் கூட்டுவதற்கான பணி சத்யபக்தாவால் செய்யப்பட்டது. சத்யபக்தா ஒரு குழுவை அமைத்தார், கணேஷ் சங்கர் வித்யார்த்தி மற்றும் அவரது ‘பிரதாப்’ பத்திரிக்கையின் உதவிகளைப் பெற்றார். ஓர் இடதுசாரி சிந்தனையாளரான வித்யார்த்தி கம்யூனிஸ்ட்களுக்கு உதவினார்.

            (தற்போது) அனைவரும் நன்றாக அறிந்த செய்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)

கான்பூர் அமைப்பு மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது என்பது. சத்யபக்தாவின் ‘இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி’ கலைக்கப்பட்டது, கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி) முறைப்படி அமைக்கப்பட்டது. இப்படி நிகழ்ந்தது குறித்து தனக்கு எந்த அதிருப்தியும் இல்லை என்று சத்யபக்தா எழுதினார்


சத்யபக்தாவின் கருத்து வேறுபாடுகளும் கட்சியிலிருந்து வெளியேறலும்

          கான்பூர் மாநாட்டில் அமைக்கப்பட்ட சிஇசி (மத்திய செயற்குழு)வுக்குச் சத்யபக்தா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் விரைவில் அவருக்கு வேறுபாடுகள் வளர்ந்தன; குறிப்பாகச் சர்வ தேசியம் குறித்தக் கேள்வி (பிரச்சனை) மீது வேறுபாடு ஏற்பட்டு மத்திய குழுவிலிருந்து அவர் ராஜினாமா செய்தார். பின்னர் ஆதரவான தேசியவாதியாக நீடித்தாலும் கட்சியைவிட்டு நீங்கி அவர் வெளியே சென்றுவிட்டார்.  

          கான்பூர் மாநாட்டிலேயே கட்சியின் தன்மை குறித்து அவருக்கும் சிபிஐக்கும் இடையே (உடன்பாடில்லாத) வேறுபட்ட பார்வைகள் இருந்தன (கட்சியின் தன்மையை மாநாட்டில் அவர்தான்  முன்னெடுத்தார் என்பது வேறு விஷயம்). இந்த வேறுபாடு மெல்ல கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து அவரை விலகிச் செல்ல வைத்தது. அவருடைய கருத்தோட்டத்தின்படி அது ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி’ என்பதற்குப் பதில், ‘இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி’ என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். அது கட்சியின் வெறும் பெயர் சம்பந்தப்பட்ட கேள்வி மட்டுமல்ல, மாறாக அது முழுமையான அணுகுமுறை குறித்தது. கம்யூனிஸ்ட் சர்வதேசியம் (காமின்டர்ன்) அமைப்பைத் தான் எதிர்க்கவில்லை என்றும் அதனுடன் நட்பு ரீதியான உறவையே ஆதரிப்பதாகக் கூறிய அவர், ஆனால் (இந்தியாவின்) கட்சியை அதனோடு (முடிச்சிட்டு) கட்டிவிட முடியாது என்று கருத்து தெரிவித்தார்.

            மாநாட்டிற்குப் பிறகு சத்யபக்தா ‘சாம்யவாதி’ (கம்யூனிஸ்ட்) என்ற எட்டு பக்க இந்தி இருவாரப் பத்திரிக்கையின் முதல் இதழை 1926 ஜனவரி 1தேதி வெளியிட்டார். அவர் அதனை மாநாட்டின்போதே வெளியிட நினைத்தாலும் அவ்வாறு வெளியிட முடியவில்லை. அவ்விதழில் சிங்காரவேலு, மௌலானா ஆஸாத் சுபஹானி மற்றும் ராதா மோகன் கோகுல்ஜியின் கட்டுரைகளுடன் ரஷ்யா மற்றும் லெனின் குறித்த கட்டுரைகளும் அடங்கி இருந்தன.  அதனது தொடக்க இதழ்களும் பிரிட்டிஷ் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.  அவரது ‘அக்லே சாத் சால்’ (அடுத்த ஏழு ஆண்டுகள்) புத்தகமும் தடைசெய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

            பின்னர் அவர் ‘சந்த்’, ‘பிராண்வீர்’ முதலான இந்தி பத்திரிக்கைகளில் பணியாற்றி வந்தாலும் அவற்றிலிருந்தும் விலக நேரிட்டது. மெல்ல மெல்ல அவர் ஆதரவற்ற ஏதிலி ஆனார். 1941ல் மதுரா மற்றும் பிற இடங்களில் இருந்த ஆன்மிக ஆசிரமங்களில் சேர்ந்தார்; ஆனாலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அவர் இந்திய மற்றும் வெளிநாட்டு சரித்திர ஆளுமைத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சிறு நூல்களாகச் சுமார் 100  எழுதினார். மேலும் அவர் 1857 முதல் 1947 வரையான இந்திய விடுதலை இயக்க வரலாறு புத்தகத்தையும் எழுதினார். அவர் ‘அகண்ட ஜோதி ஆசிரம’த்தில் சேர்ந்தார், ஆனால் ஆசிரமத்தின் தினசரி வழிபாடு மற்றும் ’ஆரத்தி’ நிகழ்ச்சிகளில் அவர் ஒருபோதும் கலந்து கொண்டதில்லை. கம்யூனிசம் குறித்த தனது சொந்த வியாக்ஞான விளக்கங்களிலேயே தொடர்ந்து அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.

      அந்த நிகழ்வுகள் நடந்து முடிந்த 46 ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் சிபிஐ செயல்பாட்டாளர்களுடன்  தனக்கு எந்த சண்டையும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.

            ஆசிரமத்தில் ஆதரவற்ற ஏதிலியாகச் சத்யபக்தா 1985 டிசம்பர் 3ம் நாள் தனது 90வது வயதை நெருங்கும்போது மறைந்தார். இந்தியக் கம்யூனிச இயக்க வரலாற்றில் அவருக்குரிய இடத்தைப் பெறுவதற்கு அவர் பெரிதும் தகுதியுடையவர். வரலாற்றில் சிந்தையாளரும் செயற்பாட்டாளருமாகிய அவருக்கென்ற நிச்சய இடம் உண்டு.

--நன்றி : நியூஏஜ் (ஜன.9 –15)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment