மதசார்பற்ற ஜனநாயகத்திற்கு
ஒரு சவால்
--கார்க்கி சக்கரவர்த்தி
-- நன்றி : நியூஏஜ் (மே 22 –28)
மோடி ஆட்சியின்போது பாஜகவின் எழுச்சி அதனது
கலாச்சார தேசியம், இந்து தேசியம் மற்றும் இந்து ராஷ்ட்டிரா தத்துவத்துடன், தேர்தலில்
மக்கள் ஆதரவு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அதிகரித்திருப்பது அச்சுறுத்துவதாக உள்ளது.
1952ல் அதன் மூதாதை அமைப்பான ஜனசங்கம் நாடாளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்களைப் பெற்றிருந்தது;
தற்போது 17 மாநிலங்களில் ஆட்சியில் அமர்ந்து 1300 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெரும்பான்மை
நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று, பாஜக நமது மதசார்பற்ற
ஜனநாயக அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு ஓர் ஆபத்தாக மாறியுள்ளது.
மேலும் இந்து மக்கள் தொகையில் பெரும்பான்மையினரின் மனங்களில் முஸ்லீம்
எதிர்ப்பு வெறுப்புணர்வு நஞ்சை ஊட்டியுள்ளது. இந்தச் சமூக ஊடுருவல் நாட்டிற்கு
ஆகப் பெரும் சவால்.
பாஜகவின் இந்த வளர்ச்சியின் முக்கிய அம்சம்
அதனது இந்துத்துவா கொள்கையாகும். சமூகத்தின் பெரும் பிரிவு இந்துவாக இருக்கும் அடையாளத்தை
உணர்கிறது. அவர்களிடத்துச் சிறுபான்மையினர்பால், குறிப்பாக இஸ்லாமியர்கள்பால் உள்ள
அணுகுமுறையில் ஆணவத்துடன் கூடிய பெருமிதம் நிலவுவதைக் காணலாம்; காரணம், இந்துத்துவவாதிகளும்
அவர்களைப் பின்பற்றுபவர்களும் சிறுபான்மையினருக்கு
“உரிய இடத்தை” (இறுதியில்) பாஜக மற்றும்
ஆர்எஸ்எஸ் காட்டிவிட்டதாகக் குரூரத் திருப்தி அடைகிறார்கள். பாஜகவும் அதன் பல்வேறு
வெகுஜன அமைப்பு முன்னணிகளும் விடுதலையின்போது தேசம் பிளவுபட்டதைக் குறித்த தங்களது
சொந்தக் கதையாடல்களையும் வெற்றிகரமாக ஊதிப் பரப்புகிறார்கள்; அதனால்தான் மகாத்மா காந்திஜியைக்
கொன்ற கொலையாளி கோட்சேவை ஒரு தியாகிபோல
கொண்டாடுகிறார்கள். (கோட்சே காந்தியைக் கொன்றது அவன் உணர்ந்த தேசபக்தி என சமீபத்தில்
ஒரு வைஷ்ணவ மடத்து ஜீயர் வெளிப்படையாகப் பேசத் துணிந்தார். --மொழிபெயர்ப்பாளர்)
2014 ஆகஸ்ட்டில் அமித் ஷா பாஜக தலைவராகப் பதவி
ஏற்றதும் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது திகைக்க வைக்கிறது.
அப்போது 3 கோடியே 50 லட்சமாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை 18 கோடியாக வளர்ந்துள்ளது.
அதுபோலவே இந்திபேசும் மற்றும் பசுவை வணங்கும் வட்டாரப் பகுதிகளில் மட்டும் இருந்த ஆர்எஸ்எஸ்
அமைப்பின் செல்வாக்கும்கூட கேரளா, வடகிழக்கு, வங்காளம் போன்ற பகுதிகளிலும் பரவியுள்ளது.
இது சல்லி வேர் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ‘ஜெய்
ஸ்ரீராம்’ அரசியல் முழக்கமாகியது. “புன்னகையுடன்” வெறுப்புப்
பேச்சுகள் அனுமதிக்கப்படுகின்றன. சாதாரண மக்களின் மனங்களில் எப்படி நஞ்சூட்டப்படுகிறது
என்பதற்கு நம்மால் பல உதாரணங்களைக் காட்ட முடியும். ஊர்வலங்கள் செல்வது, மத விழாக்கள்
கொண்டாடுவதில் தீவிரமான மனநிலை ஏற்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
இப்படித்தான் நடக்கும் என்பதற்கு ஆளும் பாஜக
ஆட்சியாளர்கள் அத்தகைய போக்குகளை ஊக்குவிப்பதே காரணம். அப்படி இல்லை எனில், அனுராக் தாக்கூர்
போன்றவர்கள் எப்படி வெளிப்படையாக வகுப்பு வாதத்தைத் தூண்டும் அருவருப்பான முழக்கங்களை,
ஒன்றிய தகவல் ஒளிபரப்பு கேபினட் அமைச்சர்
அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட பிறகும் உதிர்க்க முடிகிறது? சமீபத்தில் புகழ்பெற்ற சன்னியாசியாகக்
கூறப்படுபவர் ஹரித்துவார் தர்ம சபாவில் உரையாற்றும்போது
முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சை, இஸ்லாமியர்களை
இனப்படுகொலை செய்யுமளவு கூட்டத்தினரை வன்முறையில் இறங்கத் தூண்டிவிட்டார். மேலும்
முக்கியமாகச் சமூக ஊடகக் குழுக்களில் முஸ்லீம் சமுதாயத்தினருக்கு எதிரான வெறுப்பை உமிழும்
பதிவுகள் ஏராளமாகப் பதிவிடப்படுவதைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு மெத்த படித்தச் சமூகக் குழுவினரின் எடுத்துக்காட்டு ஒன்றைச்
சொல்ல முடியும். ஈத் முபாரக் வாழ்த்துச் செய்திக்குக் கற்றதாகக் கூறிக்கொள்ளும் ஒரு
மனிதரிர் மறு மொழி செய்தியைப் பாருங்கள்: அவர் பதிவிடுகிறார், “ஈத் முபாரக்
சொல்லாதீர்கள்” மற்றும் ‘இந்து தர்மத்தை மட்டுமே ஆதரியுங்கள்’. செய்தி முடியவில்லை,
வெறுப்பின் குறிப்புடன் தொடர்கிறது: “முஸ்லீம் கலாச்சாரம் /பண்பாடு மிகவும் கொடூரமானது,
தன்னலம் மிக்கது என நமது மக்களை உணரச் செய்வதற்குத் தேவையான அனைத்தையும் நாம் கட்டாயம்
செய்ய வேண்டும்.” இது போன்ற வெறுப்பு கொப்பளிக்கும் செய்திகளைப் பல பதிவுகளிலும்
காண்கிறோம். (மேலும் சில உதாரணங்கள் முஸ்லீம் கடைகளில் பொருட்களை வாங்காதீர். இந்து
கோயில் கடைத்தெருவில் கடை நடத்த முஸ்லீம்களுக்கு அனுமதி மறுப்பு) இவ்வாறு நடந்து கொள்வது
குற்றமில்லையா?
ஆனால் இவற்றை மாற்றுவதற்கு எதுவும் செய்யப்படவில்லை.
தனிநபர் கண்டனம் / எதிர்ப்பு போதாது. இவர்கள் மீதெல்லாம் எந்தக் குற்ற நடவடிக்கையோ
தண்டனையோ வழங்காத ஆட்சி நிர்வாகம், ஆள்வோர் கொள்கைகளை, தத்துவங்களை விமர்சித்தனர் என்பதற்காக
நூற்றுக் கணக்கான பத்திரிக்கையாளர்கள் செயற்பாட்டாளர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறது
(அ) கைது செய்யப்படுகின்றனர். பொது மக்கள் இது குறித்தெல்லாம் அக்கறைப்படுவதில்லை.
லக்னௌவில் சித்திக் என்பார் மீதான வழக்கு, எப்படி அரசும்
நீதிமன்றமும் (ஒன்றுக்குள் ஒன்றாக) கூட்டாகச் செயல்படுகின்றன என்பதை நன்கு எடுத்துக்
காட்டும். நீண்ட நாட்கள் வழக்கை இப்படி இழுத்தடித்து நீட்டிக்க அவர்களுக்கு எங்கிருந்து
பணம் கிடைக்கிறது? கைது செய்யப்பட்டவர் மட்டுமின்றி அவர்களது குடும்பங்களும் மிக்க
இன்னலுக்கு ஆட்படுகின்றன; அதுவும் அவர்கள் முஸ்லீம்களாக இருந்தால் அவ்வளவுதான். சித்திக்
கேரளாவைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர், ஆனால் 2020 அக்டோபர் 5ல் லக்னௌவில் சிறையில்
அடைக்கப்பட்டார்; முஸ்லீம்கள்படும் துன்ப துயரங்களைப் பொதுவெளியில் அழுத்தமாக எழுதியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கேரளப் பத்திரிக்கையாளர்கள்
சங்கம் கைது செய்யப்பட்ட சக பத்திரிக்கையாளருக்குத் தார்மிக ஆதாரவாகத் திரண்டு
“உபா சட்டத்தை ரத்து செய்,
சித்திக் கப்பனை விடுதலை செய்” என்று முழங்கினர். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இந்தியாவில்
154 பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டனர். அரசை விமர்சிப்பவர்கள் அல்லது கேள்வி
கேட்பவர்களைத் துரத்திச் சென்று அவர்களைச் சிறையில் அடைப்பது காலனிய
காலத்தின் பழக்கம், அதிகாரத்துவ ஆட்சியாளர்கள் கைகளில்
தேச துரோகச் சட்டம் (ராஜ துவேஷச் சட்டம்) இருந்தது. ஆனால் இன்று
உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசை அந்தச் சட்டப் பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை (ஃஎப்ஐஆர்)
குற்றச்சாட்டு பதிவதைக் கைவிடக் கூறியதில் பாஜக அரசுக்கு மகிழ்ச்சி இல்லை. பாஜக தலைவர்கள்
பல மாநிலங்களிலும் கடித்துக் குதறி பேசுவதிலிருந்து அவர்களின் அதிருப்தி தெளிவாகிறது.
இந்த அரசு தேச துரோகச்
சட்டத்தை ரத்து செய்யத் தயங்குகிறது; காரணம், அந்தச் சட்டம் மக்களின் பேச்சுத் சுதந்திரத்தை
அல்லது கருத்துகளை வெளியிடும் சுதந்திரத்தை முடக்க அவர்களுக்கு உதவுகிறது.
பாஜக --ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவா கோட்பாடு
மற்றும் வெறுப்புக் கலாச்சாரத்தை எதிர்ப்பதில் அதன் எதிர் தரப்புக்கு (எதிர் கட்சிகளுக்கு)
பெரிய சவாலாக உள்ளது: காரணம், அந்தக் கொள்கை, நமது நாட்டின் உண்மை வரலாறு அறியாது தங்களை
முற்றாகத் துண்டித்துக் கொண்டு, வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமுள்ள
இளைஞர் சமூகத்தினர்
மத்தியிலும் ஆழ ஊடுருவி விட்டது; காரணம், பாரம்பரிய ஆணாதிக்க அமைப்பு முறையை ஏற்றுக்
கொண்ட பெண்கள் மத்தியிலும் ஊடுருவியது; காரணம், மேலும்
அவர்களின் இயல்பான கூட்டாளிகளான சாதுக்கள் மற்றும் பண்டிதர்கள்
பற்றி சொல்லவே வேண்டாம், அவர்கள்தாம் மதம் என்ற பெயரில் வித்தியாசமான வகையிலான ஒளிவீசும்
இந்து குணாம்சங்களைக் கதை கட்டி உற்பத்திச் செய்பவர்கள்.
இந்தத் தீவிர இந்துத்துவவாதிகளின் அச்சுறுத்தல்,
மாநில மற்றும் அரசியல் கட்சிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களையும் – பெரும்பான்மையினரைத்
தாஜா செய்வதற்காக -- மென்மையான இந்துத்துவா பாதையைப் பின்பற்றச் செய்துள்ளது. முற்போக்கு
மதசார்பற்ற ஜனநாயக கோட்பாட்டின் தீவிரமான பண்பாட்டு இயக்கம் முன்னெடுக்கப்படாத வரை,
இந்த (அபாயகரமான) போக்கு, பல பத்தாண்டுகளுக்குத் தொடரவே செய்யும். (நடந்து முடிந்த
பல மாநிலங்களின் சட்ட மன்றத் தேர்தல்களில் பாஜக அல்லாத கட்சிகள்கூட தங்கள் கட்சி சார்பாக
முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தாது இதன் காரணமாகவே என்பதை எளிதாக யூகிக்க முடியும்.
மென்மையான இந்துத்துவா போக்கின் விளைவு அது –மொழிபெயர்ப்பாளர்.)
இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான சவால் மட்டுமல்ல; சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து
மக்கள் மனங்களில் பொறிக்கப்பட்ட சமய, சமூக நல்லிணக்கம் என்ற உணர்வுக்கு சமூக ரீதியிலான
மிகப் பெரிய தடைக்கல் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.
மதசார்பற்ற நமது ஜனநாயகத்தைப் பாதுகாக்கச் சபதமேற்போம்!
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்
குறிப்பு:
கட்டுரை முகப்பு ஓவியம் அஞ்சல் தோழர் TP ஜெயராமன் கை வண்ணம். தலைப்பு “பன்மை பூக்கும் உலகில் வன்மம் இல்லா
வாழ்வு”
சாத்தூர் கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டில்
இடம் பெற்றது
தோழர் TPJக்கு நன்றி!
No comments:
Post a Comment