புதிய சூழ்நிலையில்
தொழிற் சங்கங்களுக்கான புதிய உத்தி
--டாக்டர் பி கே காங்கோ
CPI தேசியச் செயலக உறுப்பினர்
நலவாழ்வு பொருளாதாரம் நிலவிய காலகட்டத்தில்
தொழிற் சங்கங்களின் தற்போதைய அமைப்பும் உத்தியும் உருவாயின; அன்றைய தொழில் நுட்பம்,
பெரும் உற்பத்தி அலகுகளுடன் பல நூறு தொழிலாளர்களைப் பணியமர்த்திய பெரிய கார்ப்பரேஷன்கள்
உருவானதைக் கண்டன. மேலும், தொழிலாளர்களின் திறனை ஒன்றுமில்லாதாக்கி பார்ட் பார்ட்டாக
பெருமளவு உற்பத்தி செய்து வரிசையாய்ப் பொருத்தும் முறையைப் புகுத்திய (ஃபோர்டு மோட்டார்
கம்பெனியின்) ஃபோர்டிசமும் அப்போது கண்டதுதான். ஆனால் தொடர்ச்சியாக மெல்ல அரும்பிய
வர்க்கப் போராட்டம், அன்று நிலவிய சோஷலிச உலகுடனும்கூட தங்கள் கூட்டுபேர சக்தியை அதிகரிப்பதில்
உற்பத்தியை நிறுத்தக் கூடிய தொழிலாளர்களின் சக்தி அதில் முக்கியமான அம்சம் என்பதைக்
கண்டது; அது, முதலாளிகளுக்கு எதிரான தொழிலாளர்கள் சக்தியை அதிகரிப்பதில் உதவியது.
1917 ரஷ்யப் புரட்சியின் வெற்றியுடன்,
தொழிலாளர்கள் அரசு நிர்வாகத்தை எடுத்துக் கொண்டு நாட்டின் வணிகம் முதலான அனைத்தையும்
நடத்தலாம் என்று வழங்கிய செய்தி தெளிவாகவும் உரத்தும் ஒலித்தது; இது, கூட்டுபேர சக்தி
மிக்க தொழிற்சங்கங்களுக்குச் சலுகைகள் வழங்க முதலாளிகளையும்கூட நிர்பந்தித்தது.
உற்பத்தியும் உயர்ந்தது, ஊதியமும்
உயர்ந்தது
1929 –31ம் ஆண்டுகளின் பெரும் பொருளாதார
வீழ்ச்சி நெருக்கடியின் பாடங்களும் முக்கியத்துவம் உடையது. நுகர்வோர்களின் சக்தி வளர்ந்து
விரிவடையவில்லை எனில், முதலாளித்துவத்தையும் இருள் சூழும்; அப்போது நடந்த பெரும் போராட்டங்களை
மறந்துவிட முடியாது. தொழிலாளர் வர்க்கம் மற்றும் அதன் ஆதரவாளர்களின் தியாகம் முதலாளித்துவ
வர்க்கத்தைத் தொழிற்சங்கங்களுடன் விவாதிக்க நிர்பந்தித்ததில் முக்கிய அம்சமாகும். எனவே
1930 முதல் 1975வரையான காலகட்டத்தில் உற்பத்தி அதிகரித்ததுடன்கூட ஒட்டுமொத்த தொழிலாளர்
வர்க்கத்தின் உண்மையான ஊதியமும் உயர்ந்தது; மேலும், அவர்களுக்கு இடையேயான வருமான சமத்துவமின்மை
உயர்வதையும் மட்டுப்படுத்தியது.
19 மற்றும் 20ம் நூற்றாண்டகளில் எட்டுமணி
நேர வேலை நாளுக்காகத் தொழிற் சங்கங்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்கள், காலனியத்திற்கு
எதிரான தேசிய எழுச்சியில் அவர்கள் பங்கேற்றது, சோஷலிச உலகம் நிலவியது மற்றும் அன்றைய
தொழில் நுட்பத்துடன்கூட 1929–31 ஆண்டு பொருளாதாரப் பெரு வீழ்ச்சியின் அனுபவங்கள் எல்லாம்
தொழிற் சங்கங்களின் வலிமையை அதிகரித்து உருவாக்குவதில் பங்களிப்புச் செய்தன. ஆனால்
கம்யூனிஸ்ட்கள், ஜனநாயகவாதிகள், சோஷலிஸ்ட்டுகள் என்ற அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தின்
மத்தியில் பிளவுகளை உண்டாக்கின; இப்பிளவுகள் மட்டுமின்றி, அதிதீவிர தேசியம் மற்றும்
தொழிலாளர் வர்க்கத்தை அரசியலற்றதாக்கும் முயற்சிகள் தொழிலாளர் வர்க்கத்தின் பேரசக்தி மற்றும் அரசியல் வலிமையை கட்டுப்படுத்த முதலாளித்துவத்தை
ஊக்கப்படுத்தின.
முதலாளித்துவத்தின் சிந்தனை போக்கை “மேலாதிக்கம்,”
ஊடகங்களைக் கட்டுப்படுத்தி அன்றிருந்த சோஷலிச நாடுகளுக்கு எதிராகப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடும்
போக்கு என வர்ணிக்கலாம்; அது முதலாளித்துவ வர்க்கத்தின் அதிகாரத்தையும் சமூகத்தின்
மீதான செல்வாக்கு மற்றும் இறுதியாக அரசில் அதன் அதிகாரத்தைத் தக்க வைப்பதிலும் உதவியது.
ஆனால், எந்த அரசும் தொழிற்சங்கங்களின் சக்தியைப் புறக்கணிக்க முடியாது, அதனுடன் சமரசம்
செய்து கொண்டே ஆக வேண்டும் என்பது தெளிவான விஷயம். எனவே அந்தக் காலகட்டத்தைத் ‘தங்கச்
சமரசம் அல்லது தங்கக் கைக் குலுக்கல்’ என வர்ணிக்கப்படுகிறது. ஆனால் அத்தகையச் சமரசத்திற்குப்
பிறகும் வர்க்கப் போராட்டம் தொடர்ந்து நடைபெறவே செய்தது; தொழிலாளர் வர்க்கம் மற்றும்
தொழிற்சங்கங்களின் அதிகாரத்தை வரையறுத்துக் கட்டுப்படுத்த முதலாளித்துவவாதிகளும் தொழில்
நுட்பம், அரசு அதிகாரம் முதலியவற்றைப் பயன்படுத்தவே செய்தன.
தொழிற்சங்கங்களின் போக்கு
தங்கள் பொருளாதாரக் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக
மட்டும் ஒன்று சேர்ந்த தொழிலாளர் வர்க்கத்தைப் பிளவுபடுத்த, புதிதாக விடுதலை அடைந்த
பல பழைய காலனிய நாடுகளில் மதம், சாதி, மொழி மற்றும் அல்லது பிற இனப் பிரச்சனைகள் தாராளமாக
ஊக்குவிக்கப்பட்டன. இந்த இடத்தில்தான் பணம் ஒருவருக்கு அதிகாரம், மேம்பட்ட வாழ்க்கைத்
தரம், மற்றும் அதன் மூலம்அதிகப் பணத்தைச் சம்பாதித்து தனது சொந்த வாழ்க்கை மேம்பாடு அடைய வைக்கலாம் என்பன போன்ற முதலாளித்துவத்தின்
சிந்தனை செல்வாக்கு செலுத்தி முக்கிய பங்கு வகிப்பதைக் காணலாம். இதன் காரணமாக தொழிற்சங்கங்கள்
அனைத்தும் தங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு அதிகப் பணப் பலனைப் பெற்றுத் தருவதில் தங்களுக்குள் போட்டியிட்டன. மற்ற முக்கிய பிரச்சனைகள் பின்னுக்குத்
தள்ளப்பட்டன.
அதிக நிதியைச் செலவிடுவதன் மூலம் மேம்பட்ட
வீட்டு வசதி, மருத்துவ வசதி, நல்ல கல்வி, போக்குவரத்து முதலிய பிரச்சனைகள் தீர்க்கப்பட
வேண்டும் என எதிர்பார்ப்பதால் அந்தச் சேவைகள் அரசு கட்டுப்பாட்டிலா அல்லது தனியார்
துறை மூலம் வழங்கப்படுவதா என்பது பற்றி அக்கறைபடவில்லை. உண்மையில், பொதுத்துறைகள் மூலம்
அளிக்கப்படும் நல்ல சேவைகள் புறக்கணிப்பு மற்றும் அலட்சியம் காரணமாக தனியார் பள்ளிகள்,
மருத்துவ மனைகள், போக்குவரத்து முதலியன தனியார் மூலம் நிர்வகிக்கப்படும்போது மேம்பட்டு
இருப்பதாகக் கருதப்பட்டது. எனவே ஒழுங்குபடுத்தலை அரசிடம் விட்டுவிட வேண்டும் எனக் கருதப்பட்டது
மட்டுமின்றி மக்களும் ‘அரசாங்கத்தின் வேலை, தொழில் நடத்துவது அல்ல’ எனச் சொல்லத் தொடங்கினர்.
உற்பத்தி முறையில் மாற்றம்
வணிகம் தொடர்பான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதன்
மூலம் அரசு தனது வருவாயையும் வரியையும் உயர்த்த முடியும், அதன் மூலம் மக்களுக்கு உதவுவதில்
அரசு மேம்பட்ட நிலையில் இருக்க முடியும் என உணரப்பட்டது. அதே நேரத்தில் புதிய தொழில்நுட்பத்தின்
வரவும் அதனை முதலாளித்துவ வர்க்கம் கட்டுப்படுத்தியதும் புது வகையான உற்பத்தி செயல்பாடுகளுக்கு
வித்திட்டது. ஒரே கூரையின் கீழ் ஒரு பொருள் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட நாட்கள்
கடந்த காலமானது; பகுதி பகுதியாகப் பிரித்து உற்பத்தி நிகழ்முறை செயல்பாடுகள் பல்வேறு
மையங்களில் மேற்கொள்ளப்பட்டன; இது பல்வேறு சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தி மையங்களை
நிறுவ உதவியது. (இப்படிப் பல்வேறு மையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பாகங்கள் ஓரிடத்தில்
பொருத்தப்பட்டு முழுமை அடைந்தது.) இந்த மாற்றம் படு வேகமானது.
மாற்றத்தின் மோசமான விளைவு
சுய சார்பு, இறக்குமதிக்கு மாற்று (அதாவது
வளர்ந்த நாடுகளைச் சார்ந்து இல்லாமை) முதலான பழைய தேசியப் பொருளாதாரச் சிந்தனை நிகழ்முறை
மாற்றப்பட்டது; வெளிநாட்டுப் பணம், வெளிநாட்டுச் சந்தை, ஏற்றுமதித் தொழில்கள் ஊக்கப்படுத்தப்பட்டன.
இந்தப் புதிய போக்கால் நலவாழ்வுப் பொருளாதாரக் காலத்தின்போது உருவான பழைய கட்டமைப்புகள்
மெல்ல பிரித்தெறியப்பட்டன. ஒப்பந்த கான்டிராக்ட் முறைமை அதிகரித்தது. நிரந்தரமானத்
தொழிலாளர்கள், நிரந்தரமான பணிகள் மெல்ல பழங்கதை வரலாறாகத் தொடங்கின.
தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றவும் தொழிலாளர்களின்
கூட்டுபேரச் சக்தியைக் குறைக்கவும் திட்டமிட்ட முயற்சிகள் நடத்தப்பட்டன. (புகழ்பெற்ற
பிரெஞ்ச் பொருளாதார நிபுணரும் பேராசியருமான) தாமஸ் பிக்கெட்டி எழுதிய “21ம் நூற்றாண்டில்
முதலாளித்துவம்” என்ற புகழ்பெற்ற நூலில் ‘பெரும்பான்மை நாடுகளில் தொழிலாளர்களின் உண்மை
ஊதியம் 1980 முதல் தேக்கமடைந்தது அல்லது வீழ்ச்சியடைந்தது’ என்பதைத் தக்க சான்றுகளுடன்
எடுத்துக் காட்டியுள்ளார்.
பறிபோகும் பணிகள்
சமத்துவமின்மையின் வேகமும் அதிகரித்து
வளர்ந்தது. உலகின் செம்பாதிக்கும் அதிகமான உலகின் மொத்த செல்வத்தை வெறும் ஒரு சதவீதத்திற்கும்
குறைவான நபர்கள் கட்டுப்படுத்தினர்; மேலும் 4வது தொழில் புரட்சி என்று அழைக்கப்படும்
புதிய தொழில் புரட்சி தற்போது இருக்கும் பணிகளில் 50 சதவீதத்தை இல்லாது ஒழித்துவிடும்
சாத்தியம் உள்ளது என உரிமை கோரப்படுகிறது. சந்தேகமில்லை, புதிய பணிகள் உருவாக்கப்படுகின்றன;
ஆனால் அந்தப் பணிகளுக்குத் திறனும் அனுபவமும் தேவைப்படுகிறது; அதில் பெரும்பான்மை தொழிலாளர்களுக்குப்
போதாமை உள்ளதால், அவர்கள் உலகத் தொழிலாளர் அமைப்பு, ஐஎல்ஓ, வரையறுத்துள்ள நிலையில்லாத
தரமில்லாத பணிகள் மற்றும் குறைவான ஊதியம் உள்ள பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு
ஆளாக்கப்படுகிறார்கள்.
தொழிலாளி – முதலாளி புதிய உறவு
பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு
இடையே ஊபர், ஓலா, அமேசான், ஸ்விகி, ஸோமாடோ போன்றவற்றில் நாம் பார்க்கும், புதிய உறவு
உருவாகத் தொடங்கியது. சுய வேலைவாய்ப்பு, ஆதிக்கம் செலுத்தும் சேவைப் பிரிவு மற்றும்
அதிகரிக்கும் கான்டிராக்ட் முறை அல்லது முகமை அல்லது மூன்றாவது நபர் மூலம் பணியமர்த்தப்படுவது
தற்போது தொழிற்சங்கங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
அரசும்கூட தற்போது ஸ்கீம் ஊழியர்கள் என
மட்டுமே வேலைக்கு எடுக்கிறது; (அரசின் ஒரு ஸ்கீம் முடிந்ததும் அந்தத் திட்டம் சார்ந்த
பணியாளர்களின் வேலைவாய்ப்பும் முடிந்து போகும்.) ஸ்கீம் ஊழியர்களை அரசு ஊழியர்களாக
அங்கீகரிக்க மறுக்கும் அரசு, அவர்களுக்கு மதிப்பு ஊதியமாகச் சொற்பத் தொகையை அளிப்பதால்
தொழிலாளர் நலச் சட்டங்கள் மூலம் ஸ்கீம் ஒர்க்கர்கள் எந்த நீதியும் பெற முடியாது போகிறது.
அங்கன்வாடி, மதிய உணவுத் தொழிலாளர்கள், ஆஷா ஊழியர்கள் மற்றும் அவர்களைப் போன்றவர்கள்
அதற்குச் சிறந்த உதாரணமாவர். ஸ்கீம் ஒர்க்கர்களை ஒன்று திரட்டி இயக்கம் கட்ட ஏஐடியுசி
பேரமைப்பு முயல்கிறது. அதுபோல மற்ற சங்கங்களும் தீவிரமாக ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.
உண்மையில், பெரும்பான்மை மாநிலங்களில் ஒன்றுபட்ட தொழிற்சங்க இயக்கத்தில் ஸ்கீம் பணியாளர்களின்
திரண்ட பங்கேற்பு முக்கியமாக மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
புதிய சூழ்நிலையில் சவால்
புதிய சூழ்நிலையின் சவாலை உணர்ந்துள்ள
தொழிற்சங்கங்கள் 1984லிருந்து தேசிய மட்டத்தில் ஒன்றுபட்ட தொழிற்சங்கப் போராட்டங்களை
நடத்த கவனமான முயற்சிகளை மேற்கொள்கின்றன. நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள்
வேலை நிறுத்தங்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஐக்கிய அமைப்பு முதலின மிகவும்
முக்கியமான வளர்ச்சிப் போக்குகளாகும். மாநில மட்டத்தில் ஸ்கீம் தொழிலாளர்களும்கூட ஒன்றுபட்ட
போராட்டங்களை நடத்தியுள்ளது முக்கியமானதாகும்.
இருப்பினும், தொழிற்சாலை மட்டத்தில் முதலாளித்துவம் பயன்படுத்தும் புதிய உத்திகள் வருமாறு: (புதிய ஊழியர்களை நியமிப்பதற்குப் பதில்) பயிற்சியாளர்களை நியமிப்பது, நீம் (NEEM, தேசிய வேலைவாய்ப்புத் தகுதியை அதிகரிக்கும் திட்டம்) திட்டத்தின் கீழ் பணியமர்த்துவது, காஷுவல் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அமர்த்துவது, ஜுனியர் மேனேஜ்மெண்ட் கேடர் (அதிகாரிகளை) நியமிப்பது எனத் தந்திரங்களைப் பயன்படுத்தி அவர்களை உற்பத்தியில் ஈடுபடுத்துகிறது. மேலும் நவீன இயந்திரங்களையும் பயன்படுத்துகிறது. சங்கம் சேரும் நிரந்தத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது, அவர்கள் பணியை நிறுத்துவது அல்லது தொழிற்சங்க வேலைநிறுத்தத்தின் தாக்கம் பயனற்றதாக்கப்படுகிறது.
[விளக்கக் குறிப்பு: முன்பு 1961 அப்ரன்டீஸ்
சட்டத்தின் கீழ் பயிற்சியாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டு,
பயிற்சி இறுதியில் பணி நியமன உத்தரவாதமும் அளிக்கப்பட்டது. ஆனால் திறன்மிக்க தொழிலாளர்களை
உருவாக்கும் நோக்கத்தோடு தொழில் கல்விக்கான அனைத்திந்திய கவுன்சில் AICTE, மற்றும் அரசும் இணைந்து முன்னெடுத்த திட்டமே NEEM. அதன் கீழ் தொழிற்சாலைகளில்
நேரடி செயல் அனுபவம் பெறுவதற்காகப் பதிவு செய்தவர்கள் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள்;
பயிற்சி ஊதியம் தவிர அவர்களுக்குப் பணி நியமன உத்தரவாதம் இல்லை]
செயற்கை அறிவு (ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஜ்),
ரோபோகள் மற்றும் கணிணி மூலம் இயக்கப்படும் இயந்திரங்கள் பல பணிகளையும் இன்று வழங்கொழிந்தனவாக
ஆக்கி, தொழிலாளர்களின் திறமைகளைப் பயனற்றதாக்கிவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உற்பத்திச் செயல்பாடுகளின்
கட்டுப்பாடு தொழிற்சங்கங்களின் செல்வாக்கின் கீழ் இருந்தன; அவை தற்போது மேனேஜ்மெண்ட்
கட்டுப்பாட்டில் சென்று விட்டன.
புதிய தாக்குதல்கள்
தற்போது தொழிலாளர்களின் பணிநேரத்தை அதிகரிப்பதற்கான
முயற்சி நடக்கிறது. உற்பத்தி உயர்வுடன் புதிய தொழில்நுட்பம் வரும்போது, மிகச் சுலபமாகத்
தொழிலாளர்களின் பணி நேரத்தைக் குறைக்க முடியும்; தொழிலாளிகளுக்கு நல்ல பணிச் சூழலை
வழங்கிட முடியும்; ஆனால் லாப நோக்கம் அத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தவிடாது தடுக்கிறது.
அதிகரிக்கும் வேலை இல்லாத் திண்டாட்டம்
வேலை நேரத்தைக் குறைந்து, கூடுதல் நபர்களைப் பணியமர்த்தக் கோருகிறது. ஆனால் அந்தக்
கோரிக்கையை நிறைவேற்ற அன்று எட்டு மணி நேர கோரிக்கைக்காக நடத்தப்பட்ட உறுதியான நிலைத்த
போராட்ட இயக்கம் போல இன்றும் நடத்த வேண்டிய தேவை உள்ளது. சில வளர்ந்த நாடுகளில் குறைந்தபட்ச
ஊதியத்தை உயர்த்தக் கோரும் இயக்கங்கள் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் ஒரு மணி நேரத்திற்குக்
குறைந்தபட்ச ஊதியம் 15 அமெரிக்க டாலர்கள் என்ற கோரிக்கை, முக்கியமான ஒன்றாக பொதுத்
தேர்தலில் பிரச்சனையாகப் மாறியுள்ளது.
நமக்குத் தேவை புதிய உத்தி
இந்தியாவில் கோரிக்கை எழுப்பினாலும், தேர்தல்களில்
முக்கிய பிரச்சனையாக்குவதில் நாம் தோற்றுவிடுகிறோம். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
தொழிற்சங்கங்கள் மற்றும் சமூகத்தின் கண்ணோட்டம் பணி நிரந்தரம் கோருவது, ஊதிய உயர்வு
மற்றும் வேலைகள் மூலம் சமூகப் பாதுகாப்பு என்பதாக இருந்தது. ஆனால் இந்தக் கண்ணோட்டம்
தேய்ந்து வருவதால் நாம் புதிய உத்திகளை அவசியம் வகுக்க வேண்டும். பென்ஷன், மருத்துவ
வசதிகள், கட்டுப்படியாகக்கூடிய வீட்டு வசதி மற்றும் அனைவருக்கும் போக்குவரத்து போன்ற
சமூகப் பாதுகாப்புக் கோரிக்கைகளை நாம் வற்புறுத்த வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளுக்காக நாம் தொழிலாளர்களைத்
திரட்ட வேண்டும். பாரம்பரியப் போராட்ட மாதிரிகளோடு, சுய வேலை செய்பவர்கள் என அழைக்கப்படுபவர்கள்
மற்றும் திரட்டப்படாத தொழிலாளர்களைக் கவர ஒரு புதிய உத்தி வகுப்பதே தற்போதைய உடனடித்
தேவை. கார்ப்ரேட்டுகளிடம் பணியாற்றும் தொழிலாளர்களைச் சங்கமாகத் திரட்டி அமைப்பது மற்றும்
அதன் வலிமையின் மூலம் அவர்கள் ஊதியத்தை உயர்த்தவும்
சமூகப் பாதுகாப்பைப் பெறவும் அரசு மற்றும் கார்ப்பரேட்களைக் கட்டாயப்படுத்த எண்ணும்
கண்ணோட்டம் தற்போது ஒரு நெடுந்தொலைவு கனவாகி விட்டது!
சுய வேலை செய்பவர்கள், திரட்டப்படாத உழைப்பாளிகள், அற்பமான கூலியுடன்
அமைந்த நிரந்தரமற்ற பணிகளை எந்தச் சமூகப் பாதுகாப்பும் இன்றி செய்பவர்களே அதிகமாக நிறைந்த
ஒரு புதிய சமுதாய அமைப்பு உருவாகிவரும் காட்சியே இன்றைய எதார்த்தம். இந்தச் சூழலில்
மேலான மனித வாழ்விற்காக வருங்காலத்தை எதிர்கொள்ள தொழிற்சங்கங்களுக்குப் புதிய கோரிக்கைகளை
வற்புறுத்தும் ஒரு புதிய உத்தியுடன் கூடிய அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.
சபதமேற்போம்
மே 1ஐ சர்வதேச உழைப்பாளர் தினமாகக் கொண்டாடிவரும்
நாம் அறிவோம், அது வெற்றிகரமான போராட்டத்தின் விளைவு! 8மணி நேர வேலை வரையறுப்புக்காகத்
தொழிலாளர்கள் நடத்திய நீண்ட உறுதியான போராட்டம் அது. உருவாகிவரும் புதிய சூழல் தொழிலாளர்கள்
மற்றும் தொழிற்சங்கங்களைப் புதிய உத்தியை வகுப்பதற்கு ஊக்கம் அளிக்கும்; அதே நேரம்
நமது முந்தைய போராட்ங்களிலிருந்து நாம் உற்சாகம் பெறுவோம். நமது முந்தைய போராட்டங்களிலிருந்து
மேலும் வலிமையான தொழிற்சங்கங்கள் உருவாயின, தொழிலாளர்களுக்கு மேம்பட்ட வாழ்வு சாத்தியமானது,
மேலும் நலவாழ்வு அரசுகள் அமைந்தன. உருவாகும் புதிய சூழலிலும் அது சாத்தியம், நம்மால்
முடியும் சபதேமேற்போம்!
--நன்றி : நியூஏஜ் (மே மே 15 –21)
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

No comments:
Post a Comment