Tuesday 31 May 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாற்று வரிசை 64 -- இராமச்சந்திர பாபாஜி மோர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 64

        இராமச்சந்திர பாபாஜி மோர்– 

    அம்பேத்கரைத் தீவிர அரசியலுக்குக்  

          கொண்டு வந்த கம்யூனிஸ்ட் 

                                      --அனில் ரஜீம்வாலே


         கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு, இராமச்சந்திர பாபாஜி மோர் பம்பாயில் ஒரு பொதுக் கூட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் உரையாற்றிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டு பாதையில் நின்றிருந்தார். அம்பேத்கர் அப்போது வைஸ்ராய் கவுன்சிலின் செயற்குழு உறுப்பினர். திடீரென்று ஆர்பி மோரைப் பார்த்த அம்பேத்கர் அவரை மேடைக்கு வருமாறு அழைத்தார். மோர் வர மறுத்தபோது அம்பேத்கர் அவரது தொண்டர்களுக்கு வலுக் கட்டாயமாக அவரை மேடைக்குக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்! கூட்டத்தினருக்கு மோரை அறிமுகப்படுத்தி அவர் இவ்வாறு கூறினார் : “இவர் இராமச்சந்திர மோர், மிகப் பெரும் மனிதர். என்னை அரசியல் வாழ்வில் நுழைய வைக்க முயற்சி செய்த சிலரில் ஆர் பி மோர் ஒருவர்!” 

         இதுதான் இராமச்சந்திர மோர், ஓர் அசாதாரணமான கம்யூனிஸ்ட்.                                        

          இராமச்சந்திர பாபாஜி மோர் 1903 மார்ச் மாதம் 1தேதி மிகமிக ஏழ்மையான தலித் மகர் குடும்பத்தில், இன்றைய மகாராஷ்ட்டிராவின் லடவ்லி கிராமம், கொங்கன், கொலாபா மாவட்டம் மகத் தாலுக்காவில் பிறந்தார். தந்தையின் கிராமம் தாஸ்கௌண். அனைத்து வகைகளிலும் அவர்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டார்கள். முன்பு சிவாஜி மோராக இருந்த இராமச்சந்திரா, தந்தையை இழந்ததும் மிக இளம் வயதிலேயே வயலில் தொழிலாளியாகப் பணியாற்றினார்.

          இருப்பினும் இராமச்சந்திராவுக்குப் புத்தகங்களின் மீது விருப்பம் அதிகம். தொடக்கக் கல்வியைக் கிராமப் பள்ளியில் பெற்றார். மேலும் உள்ளூர் சாது ஒருவரிடமிருந்து நிறைய ‘மந்திரங்களை’க் கற்று விரைவில் மிகவும் சமய நம்பிக்கை உடையவராகி, வாரம் இரண்டு நாட்கள் ‘உபவாசம்’ இருந்தார்! பின்னர் இரண்டு கல்வி உதவித் தொகைகளைப் பெற்றார். நடுநிலைப் பள்ளிப் படிப்பு மகதில் முடித்தார். மாவட்டத்திலேயே மகர் சமூகத்திலிருந்து வந்த ஒரு பையன் ஆங்கிலம் படித்தது என்பது இராமச்சந்திராதான்.

சாதிக் கொடுமை

          கல்வி உதவித் தொகையை வென்றிருந்தும் மகத் உயர் நிலைப் பள்ளியில் 11 வயதில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு அவர் ஒரு தபால் அட்டையில் அந்தப் பள்ளிக்கு மானியத்தை நிறுத்துமாறு மாவட்ட செய்திப் பத்திரிக்கைக்குக் கடிதம் எழுதினார்! அந்தக் கடிதம் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி, பள்ளி அவரை அனுமதிக்கும் கட்டாயத்திற்கு ஆட்பட்டது.

         மகர் என்பதால், இராமச்சந்திரா கடுமையான வலிநிறைந்த பாகுபாடுகளைச் சந்தித்தார். 11 வயதிற்குக் கீழ்ப்பட்டோர்க்கான கல்வி உதவித் தொகை தேர்வு எழுதும்போது அவரை மட்டும் தேர்வு அறைக்கு வெளியே அமர வைத்தனர். ஏன்? ஏனெனில் அவர் ‘தீண்டத்தகாதவர்’! ஒரு தொலைவில் இருந்து கேள்வித் தாள் அவரிடம் வீசி எறியப்பட்டது; அவர் தேர்வு எழுதி முடித்த விடைத் தாள்களையும் அவர் தள்ளிவிடத்தான் வேண்டும். ஒரு தொலைவிலிருந்து அவை எடுக்கப்படும், உடலைத் தொட்டுவிடாது இருக்கவாம்! 200 பேர் மாணவர் பட்டியலில் ‘டாப்’பில் வந்த இராமச்சந்திரா மாதம் ரூ 5 உதவித் தொகை பெற்றார்.

          உதவித் தொகையை வென்றது புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தியது. அவர் ஆங்கிலப் பள்ளியில் சேர மகத் சென்றபோது பள்ளிக் கட்டடத்தின் சொந்தக்காரர், இராமச்சந்திராவுக்கு அனுமதி கொடுத்தால், தனது இடத்தைப் பள்ளிக்குத் தர மாட்டேன் என்றார். மூத்த மாணவர்கள் அறிவுரைபடி அதிகாரிகளுக்கு அவர் கடிதம் எழுத, பத்திரிக்கைளில் வெளிவந்த அது விரும்பிய பலனைத் தந்தது, அவருக்கு அனுமதி கிடைத்தது.

பம்பாயில்

       அவரது மாமாக்களில் ஒருவர் அவரைப் பம்பாயில் அம்பேத்கரிடம் அழைத்துச் செல்ல, அதுவே அந்தப் பெரும் அளுமையுடன் அவருக்குக் கிடைந்த முதல் தொடர்பாயிற்று. பம்பாயில் வேலையில்லாமல் பசியில் உழன்றிருக்கிறார்; பின்னர் சில அணாக்களுக்காக இரயில்வே ஸ்டேஷன் உட்பட பல இடங்களில் கூலியாகப் பணியாற்றினார்; பிறகு கப்பல் மேற்ப் புறத்திலிருந்து பெயிண்ட்டைச் சுரண்டி எடுக்கும் வேலையையும் இராணுவத்தில் ஒரு எடுபிடி பியூன் ஆகவும் பணியாற்றியிருக்கிறார். ஆனால் அவருடைய மாமனார் அவரது அந்தச் சொற்ப வருமானத்தையும் அவரிடமிருந்து பறித்துச் சென்றுவிடுவார்!

          பூனா மிலிட்டரி நிர்வாகத்திற்கு ஓடிய இராமச்சந்திரா அங்கே கூலியாகவும், ஏன் மொழி பெயர்ப்பாளருமாகக்கூட வேலை செய்தார். இதன் மத்தியில் 1920ல் திலகர் மரணமடைய, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள எவரிடமும் சொல்லாமல் இராமச்சந்திரா பூனா சென்றார். சொல்லத் தேவையில்லை, இவ்வாறு தனது வேலையை இழந்தார். விரைவில் தாஸ்கௌனிலேயே ஓர் ஆசிரியரானார். பின்னர் மகத்திலேயே தீண்டத்தகாதவர்களுக்காகக் காங்கிரஸ் கட்சி தொடங்கிய ஒரு பள்ளியிலே பணியாற்றி தனது தாய் மற்றும் தங்கைக்கு இப்படி ஏதோ உதவி செய்தார். எல்பின்ஸ்டோன் உயர்நிலைப் பள்ளியிலிருந்து மெட்ரிக் தேர்வுக்கு அவர் தயாரித்தார்.

      இதன் மத்தியில் இராமச்சந்திரா தீண்டத்தகாதவர்களின் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்த மராத்தி இருவார பத்திரிக்கையான ‘மூக் நாயக்’ (குரலற்றவர்களின் தலைவன்) இதழில் எழுதத் தொடங்கினார். அவர் கவிதைகளும் எழுதினார்.[டாக்டர் அம்பேத்கர் 29 வயதில் 1920ல் தொடங்கிய பத்திரிக்கை ‘மூக் நாயக்’]. தீண்டத்தகாதவர் இயக்கங்களில் மோர் மெல்ல இணைந்தார். அந்நாட்களில் மகத் பகுதியில் மோட்டார் பொது போக்குவரத்தில்  உட்கார்ந்து பயணிக்கவும், டீ கடைகளில் டீ அருந்தவும் தீண்டத் தகாதவர்களை அனுமதிக்க மாட்டார்கள். இது வலிமையான போராட்டங்களுக்கு வித்திட்டது.

   அவரும் அவரது நண்பர்களும் தண்ணீர் குடிப்பதில் பிரச்சனைகளைச் சந்தித்தனர், காரணம் அது தீண்டத்தகாதோர் காலனியிலிருந்து தொலைவில் இருந்தது.

படை கலைப்பில் பணி இழந்த வீரர்களும் உணர்ச்சிப் பரவலும்

     முதல் உலகப் போர் முடிந்த நிலையில் 111வது மகர் ரெஜிமெண்ட் (இராணுவப் படைப் பிரிவு) கலைக்கப்பட்டதால் பணியிழந்த இராணுவ வீர்கள் பெரும் எண்ணிக்கையில் மகத்துக்கு வரத் தொடங்கினர். அவர்கள் வயல்வெளிகளில் வேலை செய்யும் கட்டாயத்துக்கு ஆளாயினர். ஆனால் வீரர்கள் உலக அனுபவம் பெற்றிருந்ததால் துணிச்சல், வீரம் இதனுடன் மராத்தி மற்றும் ஆங்கிலமும் அறிந்திருந்தனர். எனவே அவர்களைச் சுலபமாக அடிமையாக நடத்த முடியவில்லை. பணிய மறுத்த அவர்களின் உறுதியான உரிமை நிலைநாட்டல் வளர்ந்தது.

          இதற்கு முன்பே பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பல மகர்கள் தாஸ்கௌண் மற்றும் மகத்தில் குடி அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு இருந்த குறிப்பிட்ட அந்தஸ்துகளில் பிரிட்டிஷ் அரசிடமிருந்து சிறிது பென்ஷன் வந்ததும் ஒன்று. பின்னர் அவர்களில் பலரும் மகாத்மா பூலே, ஷாகுஜி மகராஜ் முதலான ஆளுமைகளுடன் தொடர்பில் இருந்தனர். ஆர்பி மோரின் தாத்தாவும் டாக்டர் அம்பேத்கரின் தந்தையும்கூட அந்தப் பகுதியில் வாழ்ந்தார்கள்; பிராமணிய சக்திகளின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் மீண்டும் மகர்களைப் படைப்பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற பிரச்சனையை எடுத்து வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து சமூகச் சீர்திருத்த இயக்கம் அந்தப் பகுதியில் மிக சக்திமிக்கதாக மாறியது.

மகத் சத்தியாகிரகம்: ஆர்பி மோரும் டாக்டர் அம்பேத்கரும்

          1927ல் புகழ் பெற்ற மகத் சத்தியாகிரகம் நடைபெற்றது. அந்தப் போராட்டம்

டாக்டர் அம்பேத்கர் தலைமையேற்று நடத்தியது என்றாலும், அதற்கே உரிய சரித்திரப் பின்னணியும் அதில் ஆர்பி மோர் முக்கிய தலைமைப் பங்கு வகித்த வரலாறும் உடையது. சத்தியாகிரகத்தின் நோக்கம் அங்கிருந்த சவுதார் குளத்தின் தண்ணீரைப் பயன்படுத்த தீண்டத்தகாத மக்களுக்கும் உரிமை உண்டு என நிலைநாட்டுவதே. (மேல் சாதியினரின் தாக்குதலைச் சந்தித்து) தொடர்ந்து போராடி நீதிமன்ற சட்டப் போராட்டங்களின் வழி நீதியை நிலை நாட்டிய தீண்டத்தகாத மக்களின்  முக்கிய வரலாற்று நிகழ்வானது அந்தச் சத்தியாகிரகம்.    

          பம்பாய் சட்டமன்ற கவுன்சில் உறுப்பினரான சிகே போலே (ராவ் பகதூர் சீத்தாராம் கேசவ் போலே) 1923ல் சட்டமன்றத்தில் “பொது நீர் தேக்கங்கள் மற்றும் அரசால் நிதியளித்துப் பராமரிக்கப்படும் தர்மசாலாக்களைத் தீண்டத்தகாதோர் எனப்படும் தலித்களுக்குத் திறந்துவிட வேண்டும்’ என்ற மசோதாவைத் தாக்கல் செய்து சட்டமாக்கினார். இராமச்சந்திரா மோர் அதனைப் படித்தார். முன்பு மோரின் அனுமதியைத் தடுக்க முயன்ற தாரப் என்பார்தான், ‘சவுதார் குளத்திலிருந்து தலித்துகள் நீரைப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமனறத்தில் வழக்குப் பதிவு செய்தார்’

          1923ல் மகத் பகுதி தலித்கள் மாநாடு ஒன்றை நடத்த முடிவு செய்தனர். 1924ல் மோர் மகத் தாலுக்காவின் தேர்ந்தெடுத்த தலித் செயல்பாட்டாளர்கள் கூட்டத்தைக் கூட்டி “கன்வென்ஷன் ஆப் அவுட்-காஸ்ட்ஸ்” (விலக்கப்பட்ட சாதியினர் மாநாடு) நடத்தவும் அதற்குத் தலைமை ஏற்க 

டாக்டர் அம்பேத்கரை அழைக்கவும் முடிவெடுத்தனர்.

 1924ல் இராமச்சந்திரா மோர் டாக்டர் அம்பேத்கரை அழைக்க பம்பாய் சென்றார். முதலில் அம்பேத்கர் தயங்கினாலும் பின்னர் ஒப்புக் கொண்டு இறுதியில் 1924 மார்ச் மாதம் அந்த மாநாடு டாக்டர் அம்பேத்கர் பங்கேற்போடு நடந்தது.

டாக்டர் அம்பேத்கர் சகோதரர் பல்ராம் தாதாவுடன்கூட இராமச்சந்திரா உரையாடினார்.

மகத் தலித் விடுதலை மாநாட்டின் அமைப்பாளராக ஆர்பி மோர்

          தனது சொந்த கிராமமான தாஸ்கௌனில் 1926 டிசம்பர் 4ம் நாள் இராமச்சந்திரா நூற்றுக் கணக்கான தலித்களுக்குத் தலைமை தாங்கி அழைத்துச் சென்று (கேப்டன்) கிராஃபோர்டு பொது குளத்தின் தண்ணீரை அருந்தும் அவர்களின் உரிமையை நிலைநாட்டினார். (மராட்டிய கொங்கன் பகுதியில் வாழ்வோர்களைக் குறிக்கும்) “கோகனஸ்தா மகர் சேவா சங்கம்” என்ற அமைப்பை அவர் தொடங்கினார். ஆர்பி மோர் அதன் முதல் பொதுச் செயலாளராகவும் பிகாஜி கெய்க்வார்டு முதல் தலைவராகவும் செயல்பட்டனர். 

          மோர் மற்றும் தோழர்கள் பெரும் முயற்சிகளுக்குப் பிறகு 1927 மார்ச் 19 மற்றும் 20 இரு நாட்கள் பம்பாய், தானே, கொலாபா மற்றும் ரத்னகிரி பகுதிகளிலிருந்து சுமார் 5000 தலித்கள் கலந்து கொள்ள மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. அதன் முக்கிய அமைப்பாளரான ஆர்பி மோர் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் மற்றும் ஆனந்தராவ் சைத்ரே, பாபு சஹஸ்ரபுத்தே மற்றும் சித்தாராம் ஷிவ்டார்கர் போன்ற அவரது பிற தோழர்களையும் அறிமுகம் செய்தார். 1927 மார்ச் 19ல் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரை கூட்டத்தினரை மின்னலாய் எழுச்சிபெறச் செய்தது. மார்ச் 20, மாநாட்டின் இரண்டாம் நாளில் ஆயிரக்கணக்கான தலித்கள் ஆர்பி மோர் மற்றும் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் மகத் சவுதார் குளத்திற்குப் பேரணியாகச் சென்று நூற்றாண்டுகளாக இருந்த தடையை உடைத்து அந்தக் குளத்தின் நீரைக் குடித்தார்கள். (மகாத்மா காந்திஜியின் தண்டி யாத்திரை உப்புச் சத்தியாகிரகத்திற்கு நிகரானது அப்போராட்டம் எனக் குறிப்பதுண்டு.) தலித்களின் வரலாற்றுப் புகழ்மிக்க விடுதலைப் போராட்டம் தொடங்கியது.

   உடனடி எதிர்விளைவாய், பழமைவாத சாதி இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் கும்பலாய்ச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்; கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டு தலித் வீடுகள், கடைகள் இடித்து அழிக்கப்பட்டன. காட்டுத் தீயாய் அச்செய்தி, டாக்டர் அம்பேத்கர், ஆர்பி மோர் மற்றும் பிற தலைவர்கள் பெயர்களுடன்  நாட்டில் பரவியது. இந்தச் சத்தியாகிரகத்துப் பிறகுதான் தீண்டத்தகாதோர் விடுதலைக்காகத் தனது வாழ்வை அர்ப்பணிக்க டாக்டர் அம்பேத்கர் சபதம் ஏற்றார்.

          அந்த ஆண்டின் பிற்பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சத்யாகிரக இயக்கத்தை மீண்டும் நடத்த வந்தார். இம்முறை ஆர்பி மோர் அருகே நிற்க ‘மனுஸ்மிருதி’ எரிக்கப்பட்டது.

          இராமச்சந்திர மோர் சமதா சைனிக் தள் (சமத்துவத்திற்கான படை வீரர்கள்) என்ற அமைப்பைப் பம்பாயில் நிறுவியதுடன் ஏராளமாக எழுதினார். 1928 –30ம் ஆண்டுகளில் ஆர்பி மோர் ‘பகிஷ்கிருத்’ (--சாதியிலிருந்து—‘விலக்கப்பட்டவர்கள்’ அதாவது தீண்டத்தகாதோர்) மாநாடுகள் பல நடத்தினார்.

மோர் சிபிஐ கட்சியில் சேர்தல்

          இதன் மத்தியில் ஆர்பி மோரின் கருத்துகள் வளர்ச்சியடைந்தன. பம்பாயில் அவர் இருந்தபோது அப்போது 1920களில் எழுச்சிபெற்று வந்த தொழிலாளர் வர்க்க இயக்கத்துடன் தொடர்பு கொண்டார். 1926லிருந்தே இராமச்சந்திரா பெரும்பாலும் பம்பாயில்தான், பொதுத் தொழிலாளர்கள் மத்தியில், டியூஷன் மற்றும் சிறு பணிகளைச் செய்து கொண்டு வசித்தார். 1931ல் இரத்னகிரியில் இரண்டு கிசான் மாநாடுகளில் கலந்து கொண்டார், கேத் பகுதியில் நடைபெற்ற மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். பம்பாயில் தரூண் மஸ்தூர் சங் (இளம் தொழிலாளர் சங்கம்) திரட்டி அமைத்தார்.

          சிபிஐ மூத்த தலைவர்கள் மீரட் சிறையில் இருந்தனர். டாக்டர் அதிகாரியின் இளைய சகோதரர் ஜெகந்நாத் அதிகாரி மற்றும் பிற கம்யூனிஸ்ட்களைச்

சந்தித்தார். அவர் ஆசிரியராக வெளியிட்ட தொழிலாளர்களுக்கான ‘ஆவான்’ (சவால்) என்ற வாராந்திரப் பத்திரிக்கையில் டாக்டர் அம்பேத்கருக்கு ஒரு பக்கம் ஒதுக்கினார். ‘கிராந்தி’ (புரட்சி) மற்றும் ‘இரயில்வே ஒர்க்கர்’ பத்திரிக்கைகளிலும் மோர் எழுதினார். பின்னர் அவர் ஆர்டி பரத்வாஜ், ஜம்பேகார், பிடி ரணதிவே, அதிகாரி முதலானவர்களைச் சந்தித்துப் பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.

          1936ல் அகில இந்தியக் கிசான் சபா (AIKS) அமைப்பு மாநாட்டில் ஆர்பி மோர் கலந்து கொண்டார். கொலாபா மாவட்டத்தில் நடைபெற்ற சாரி கிசான் இயக்கத்திலும் அவர் கலந்து கொண்டார். [சாரி கிசான் இயக்கம் என்பது ஆறு ஆண்டுகள் நடைபெற்ற மராட்டிய விவசாயிகளின் வரலாற்றுப் புகழ்பெற்ற போராட்டமாகும். மகாராஷ்ட்டிரா கொங்கன் பகுதியில் அமலில் இருந்த கோட்டி (Khoti) முறை என்ற சுரண்டல் கொடுமையை எதிர்த்து நடந்தது. பிரிட்டிஷ் அரசுக்கு வரி வசூல் செய்து தரும் உரிமை பெற்ற பெரும் நில உடைமையாளர்கள்  கோட்டி என அழைக்கப்பட்டனர். அந்த வேலை நிறுத்த இயக்கம் ராய்காட் மாவட்டம், அலிபேக் அருகே சாரி என்ற கிராமத்தில் முதன் முறை தொடங்கியது. விவசாய மற்றும் தொழிலாளர் தலைவர் நாராயண் நாகு பாட்டில் தலைமையில் நடைபெற்ற அந்த நீண்டநெடிய போராட்டம் பிரிட்டிஷ் அரசை மண்டியிடச் செய்தது. டாக்டர் அம்பேத்கர் போரட்டத்தை ஆதரித்தார். –இணையத்தில் மொழிபெயர்ப்பாளர் திரட்டியது.]

          1939 –43 காலகட்டத்தில் அவர் தலைமறைவாக இருந்தார். இராமச்சந்திரா ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ மற்றும் பிற மார்க்சிய நூல்களைப் படித்தார். ‘ஏழைகளிலும் பரம ஏழை’களான தலித் மக்கள் தொழிலாளர் வர்க்கத்தின் மிகப் பெரும்பகுதியாக அமைகின்றனர் என அவர் கூறினார்.

          வியப்பையும் ஆர்வத்தையும் தூண்டக்கூடிய செய்தி டாக்டர் அம்பேத்கரைச் சந்தித்து ஆர்பி மோர் ‘தான் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையப் போவதாக’க் கூறினார் என்பது. அம்பேத்கர் கோபம் அடையவில்லை. மோரிடம் கூறினார்: “நல்லது, நீங்கள் உங்களுக்குரிய மரியாதையுடன் நடத்தப்படுவீர்கள் என நான் நம்புகிறேன்.” ஒருபோதும் அம்பேத்கர் இயக்கத்திலிருந்து விலகி மோர் பிரிந்துவிடவில்லை.

          ஆர்பி மோர் பல பகல் இரவுகளைத் தனது குடும்பத்துடன் நடைபாதையில் கழித்தது உட்பட பெரும் துன்ப துயரங்களை ஒரு கம்யூனிஸ்ட்டாகப் பொறுத்துத் தாங்கிக் கொண்டார். அவர் சிறையில் இருந்தபோது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் எல்பின்ஸ்ரோடு ரயில்வே மேம்பாலத்திற்குக் கீழே வசித்திருந்தனர். மற்ற தோழர்கள் அவர்களுக்கு உதவினர்.

      அவர் புகழ்பெற்ற பாடகர் (கவிஞர், தொழிலாளர்களின் இசைப் பாடகன் ஷாகிர்) அமர் ஷேக் (1916 –1969) உடன்
மிக நெருக்கமாக இருந்தார். அம்பேத்கரிய மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஓர் இணைப்புப் பாலமாக விளங்க அவர் முயன்றார்.

            1942 முதல் 1945 வரை இராமச்சந்திரா இந்தியப் பெருந்தீபகற்ப (GIP, கிரேட் இந்தியன் பெனிசுலா) இரயில்வே தொழிலாளர் சங்கச் செயலாளராகவும் இருந்து நான்காம் பிரிவு தூய்மைப் பணியாளர்களைத் (சஃபாய் ஒர்க்கர்ஸ்) திரட்டியும் பணியாற்றினார். 1945ல் பாரீஸில் நடைபெற்ற சர்வதேசத் தொழிலாளர்  (ILO) மாநாட்டில் என்எம் ஜோஷியுடன் கலந்து கொண்டார். வைஸ்ராய் எக்ஸ்சிக்யூடிவ் கவுன்சில் அமைச்சரவையில் (1942 --46) தொழிலாளர் அமைச்சரான டாக்டர் அம்பேத்கர் அவரை மாநாட்டிற்கு அனுப்பிட சிறப்பு முயற்சி எடுத்தார். ஐஎல்ஓ மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய அவரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் ஷெட்யூல்டு சாதிகளின் சம்மேளனமும் பாராட்டி கௌரவித்தன.

          மோரின் மனைவி சீதாபாய் ஒரு கட்சி உறுப்பினர். அவர்களுடைய மகன் சத்யேந்திரா மற்றும் மகள் கமல் ஏஐஎஸ்எஃப் மாணவர் பெருமன்றத்தில் தீவிரமாகச் செயலாற்றியதுடன் அமர் ஷேக், காவ்ஹங்கர் மற்றும் அண்ணாபாவ் சாத்தேவின் கலாச்சாரக் குழுக்களிலும் பணியாற்றினர். கட்சியின் முழுநேர ஊழியர்கள் என்ற வகையில் முதன் முதலாக முறையான கட்சி ஊதியம் பெற்றவர்களில் ஆர்பி மோரும் ஒருவர். 1943 சிபிஐ முதலாவது கட்சிக் காங்கிரஸ் அவரது குடும்பத்தை ஒரு “கம்யூனிஸ்ட் குடும்பம்” என்று பாராட்டியது.

சாதி மீது நிலைபாடுகள்

          இராமச்சந்திரா மோர் சாதி பிரச்னையின் மீது கூடுதல் கவனம் செலுத்த கட்சியைத் தொடர்ந்து வலியுறுத்தினார். 1953 மூன்றாவது கட்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்பு தீண்டாமை மற்றும் சாதி (சமூக) அமைப்பு முறை குறித்துச் சிறப்புக் குறிப்பினைத் தயாரித்துத் தலைவர்களுக்கு அனுப்பினார். கட்சி அந்தக் குறிப்பை மாநிலக் குழுக்களுக்குச் சுற்றுக்கு அனுப்பி, பொருத்தமான தகவல்கள், விமர்சனங்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டது. 1957 மற்றும் 1964ல் மீண்டும் திருத்தப்பட்ட குறிப்பை ஆர்பி மோர் அனுப்பினார். சாதி மற்றும் சமூக ஒடுக்குமுறை பிரச்சனைகளை வர்க்கப் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாக அவர் கருதினார். டாக்டர் அம்பேத்கர் குறித்துச் சமச்சீர் மதிப்பீட்டை அவர் (கட்சியிடம்) கோரினார். இப்பிரச்சனைகளை அஜாய் கோஷ், இஎம்எஸ் முதலான கம்யூனிஸ்ட் பெருந்தலைவர்களுடன் அவர் விவாதித்துள்ளார். 1959 மற்றும் 1964ல் இந்தியக் குடியரசுக் கட்சி (RPI) மற்றும் சிபிஐ கட்சிகள் இணைந்து நடத்திய நிலமற்ற விவசாய உழைப்பாளிகள் மற்றும் ஆதிவாசிகளின் மாநிலம் தழுவிய பெருந்திரள் சத்தியாகிரகப் போராட்டங்களில்  ஆர்பி மோர் தீவிரமாகப் பங்கேற்றார். பல ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக கம்யூனிஸ்ட் கட்சி செங்கொடிகளும் ஆர்பிஐ கட்சியின் நீலக் கொடிகளும் ஒன்றாகப் பறந்தன.

          1964 கட்சி பிளவுக்குப் பிறகு இராமச்சந்திர பாபாஜி மோர் சிபிஐ (எம்) கட்சியில் இணைந்தார். சிபிஐஎம் மகாராஷ்ட்டிரா மாநிலக் குழுவுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மாநிலக் கட்சி பத்திரிக்கையான ‘ஜீவன்மார்க்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அம்பேத்கர் மற்றும் ஆர்பி மோர் மறைவு

          ஆர்பி மோர் 1972 மே 11ம் மறைந்தார்.

     1956 டிசம்பர் 6ம் நாள் டாக்டர் அம்பேத்கர் மறைந்ததும் மிக பிரம்மாண்டமான அஞ்சலிக் கூட்டங்களில் ஒன்றை ஆர்பி மோர் பம்பாயில் ஏற்பாடு செய்தார். முன்னணி கம்யூனிஸ்ட் மற்றும் அம்பேத்கரிய தலைவர்கள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர். இராமச்சந்திர மோரே இறந்ததும் அவருக்கு அஞ்சலி செலுத்த அம்பேத்கரியர்களும் கம்யூனிஸ்ட்களும் மீண்டும் ஒன்றாய் இணைந்தார்கள்.

          அம்பேத்கரிய இயக்கத்தின்பால் ஆர்பி மோரின் அணுகுமுறை குறித்துப் பல கருத்து வேறுபாடுகளும் விவாதங்களும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும், பின்னர் சிபிஐ(எம்) கட்சியிலும் நடைபெற்றன.

    அவைகளின் அணுகுமுறைகளில் வேறுபாடு இருந்திருக்கலாமே தவிர, அனைத்து மக்களையும் சமமாக ஒரே அந்தஸ்து மற்றும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்ற உணர்வில் என்றும் மாறுபாடு இல்லை. இனியும் இருக்கப் போவதில்லை. அத்தகைய சோஷலிசச் சமூகத்தை அமைக்கும் போராட்டத்தில் இராமச்சந்திர பாபாஜி மோரின் வாழ்க்கை நமக்கு என்றென்றும் ஆதர்சமாய் விளங்கும்!

--நன்றி : நியூஏஜ் (மே 8 --14)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்   

       

No comments:

Post a Comment