Thursday, 26 May 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 63 -- சவுகத் உஸ்மானி

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 63

          சவுகத் உஸ்மானி –

மீரட் சிறையிலிருந்து இரண்டு முறை

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டவர்

                                                              --அனில் ரஜீம்வாலே

            சவுகத் உஸ்மானி வழக்கத்திற்கு மாறான ஒரு புரட்சியாளர் மற்றும் அசாதாரணமான வர்ணச் சிதறல் காட்சி (கிளைடோஸ்கோப்) அனுபவங்களுடன் கூடிய கம்யூனிஸ்ட்.  அவரது இயற்பெயர் மௌலா பக்ஷ் உஸ்தா. 1901 டிசம்பர் 20ல் இராஜஸ்தான் பிக்கானீர் நகரத்தில் ஓர் உஸ்தா ராஜபுத்ர –முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். அந்தக் குடும்பம் பிக்கானீரின் புகழ்பெற்ற கலையான மிக நுட்பமான ஓவிய, கலைப் பொருட்கள் செய்வதில் ஈடுபட்டதால் ‘உஸ்தா’ என்ற பெயர். அக்கலைஞர்கள் நகாஷி, மனோட்டி மற்றும் மீனாகரி நுட்பங்களைப் பயன்படுத்தினர்.

[நகாஷி (naqqashi) முறையில் ஓவியம் தீட்ட வேண்டிய உலோகப் பரப்பில் வடிவத்தை டிரேஸ் செய்து மேலோட்டமாக வரைந்து திட்டமிடுவர். பின்னர் அந்த உலோகப் பரப்பில் சுத்தியலால் அடித்தும் செதுக்கியும், தோண்டியும் வலைப் பின்னல் (நெட்) போன்ற பின்னணியில் ஓவியத்தை அமைப்பர். பல நாட்கள் உழைத்து மிகுந்த நேர்த்தியும் சிக்கலான நுட்பமும் நிறைந்த கலைப் படைப்பை உருவாக்குவார்கள். முகலாய கலை படைப்பை ஒத்த பிக்கானீர் ஓவியங்கள் அதனினும் நுட்ப வேலைபாடுகள் மிக்கது.

        மனோட்டி (Manoti) புடைப்பு வடிவத்தில் மெல்லிய தங்க மேற்பரப்பு உடையன. அரண்மனை, பெரிய மாளிகைகளின் சுவர்கள், விதானம், கோட்டைத் தூண்களில் மட்டுமல்லாமல் பயன்படு பொருட்களின் மேலும்  நிபுணத்துவம் உடைய கலைஞர்கள் இவற்றைத் தீட்டி உருவாக்குவார்கள்.

            மீனாகரி (Meenakari) என்பது உலோகம் மற்றும் பீங்கான் பரப்புகளின் மேல் வர்ணங்களையும் ஓவியம் தீட்டுவதில் எனாமலிங் முறையையும் பயன்படுத்துவது. –இணையத்தில் தேடி இணைத்தது]

      மேற்கண்ட நுட்பங்களைப் பயன்படுத்தி மிகச் சிறிய வடிவத்தில் சிக்கலான பெரும் நுட்பமான கலை படைப்புகளைத் தங்க முலாம், ஒளிவீசும் கற்களைப் பதித்து உண்டாக்குவதில் (படம்) அக்குடும்பத்தினர் விற்பன்னர்கள் என்பதால் உஸ்தாத் என அழைக்கப்பட்டனர்.

     இளம் பருவத்திலேயே சவுகத் பெற்றோர்களை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். பாட்டியார் சிறுவன் சவுகத்துக்குத் தான் வாழ்ந்து சந்தித்த 1857 கிளர்ச்சியைப் பற்றி கதை கதையாய் சொல்லியதைக் கேட்டு சவுகத் உருவானார். முதலில் மசூதி பள்ளியில் கல்வியைத் தொடங்கியவர் பின்னர் ஜெயின் பள்ளியிலும், அதன் பிறகு துன்கர் நினைவு ஆங்கிலக் கல்லூரியிலும் படித்தார். பிக்கானீர் பிரிட்டிஷுக்கு விஸ்வாசமான ஒரு சமஸ்தான அரசு.

            அவருடைய பெயர் முகமது சவுகத் என மாற்றப்பட்டது. அவரே பிறகு ‘முகமது’ என்ற முன்னொட்டை விட்டுவிட்டு உஸ்மான் (உஸ்தாத்) என்ற தனது பாட்டனாரின் பெயரைத் தழுவினார். பிறகு அதுவே உஸ்மானி என்றாகி இவ்வாறாக இப்போது சவுகத் உஸ்மானி என அவரது வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது.

தேசியவாதச் செல்வாக்கு

            மையநூலகத்தில் கிடைத்த ‘பம்பாய் கிரானிகல்’, ’இன்டிபென்டெண்ட்’ முதலிய தேசியப் பத்திரிக்கைகளைச் சவுகத் படித்தார்.  (1916 – 1921ல் கவர்னர் ஜெனரல் மற்றும் இந்திய வைஸ்ராய் ஆக இருந்த) லார்டு செம்ஸ்போர்டு பிக்கானீர் விஜயம் செய்தபோது, 9வது படித்துக் கொண்டிருந்த சவுகத் மற்றும் மற்றவர்களுக்குக் கோட்டைக்கு வரும் தொலைபேசி அழைப்புகளைப் பெறும் பணி, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அளிக்கப்பட்டது. சிலர் அந்நிகழ்வை மதச்சாயம் பூசி கல்லூரியில் அசைவ உணவு பிரச்சனையாக்க முயன்றனர். டாக்டர் சம்பூரானந்த் முதல்வராக வந்த பிறகு தேசியக் கருத்துகளைப் பரப்ப உதவினார்.

            சவுகத் தேசியவாத இலக்கியங்களை விநியோகித்தார். 1919ல் தேர்வுக்காகச்  சவுகத் அஜ்மீர் சென்றபோது அங்கே திலகரும் மற்றவர்களும் கலந்து கொண்ட அரசியல் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சவுகத் தீவிரமாக அதில் பற்கேற்றார்.

       பூரி (Bhuri) என்ற பெண்ணுடன் மிக இளம் வயதிலேயே சவுகத்துக்குத் திருமணம் நடந்து, 18 வயதிலேயே உஸ்மான் கனி என்ற மகனும் பிறந்தான். சவுகத்தின் தாயின் பெயரும்கூட பூரி.

‘ஹிஜரத்’தில் பங்கேற்றல்

       1918 –20ம் ஆண்டுகளில் நடந்த ஆப்கான் --பிரிட்டிஷ் போரில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று, இந்திய விடுதலை இயக்கத்திற்குத் தார்மிக ஆதரவைப் பிரகடனப்படுத்தியது. ஆப்கானிஸ்தானின் அமீரான (அரசுத் தலைவர்) அமானுல்லா கான் பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் வாழப் பிடிக்காத முஸ்லீம்களை ஆப்கானிஸ்தான் வருமாறு அழைத்தார். முஸ்லீம்களுக்கு மத்தியில் அப்போது ‘ஜிகாத்’ அல்லது (பிரிட்டானியர்களுக்கு எதிரான) புனிதப் போர் அல்லது நாட்டைவிட்டு வெளியேறி  இஸ்லாமிய தேசம் ஒன்றிற்குச் செல்வது என்ற இயக்கம் இருந்தது. இது ‘ஹிஜ்ரத்’ (அரபு வார்த்தை, ‘புலம்பெயர்தல்’) என அறியப்படுகிறது. அதன்படி சுமார் 36ஆயிரம் மக்கள் (தாங்கள் கொண்ட இஸ்லாமிய கொள்கைகளைப் பின்பற்றுவதற்காக) ஆப்கானிஸ்தானுக்குச் சென்றனர். 1918 –20 காலகட்டத்தில் நடந்த கிலாஃபத் இயக்கம் முஸ்லீம்கள் மத்தியில் தேசிய உணர்வை ஊட்ட உதவியது. (கிலாஃபத் என்ற சொல்லுக்குப் பொதுவாக ‘வாரிசு’ மற்றும் குறிப்பாக நபிகளார் மறைவுக்குப் பிறகு ‘இஸ்லாமிய சமூகத்தின் தலைமை’ என்பது பொருள்.)

   சவுகத் உஸ்மானி மூன்றாவது புரட்சிகர ‘ஹிஜ்ரத்கள்’ குழுவில் சேர்ந்து கொண்டார். ‘அரசியல் மாநாடு ஒன்றில்’ கலந்து கொள்ள டெல்லி செல்வதாகத் தனது குடும்பத்தினருக்கு ஒரு சிறிய கடிதம் எழுதிவிட்டு 1920 மே 7ம் நாள் புகைவண்டி மூலம் ஃபெரோஸ்பூருக்கு ஒரு ‘மோச்சி’யாக (காலணி செய்பவராக) மெல்ல புறப்பட்டு விட்டார்.

ஆப்கானிஸ்தானத்திற்குள் நுழைதல்

            பெஷாவரில் ஹிஜ்ரத் கமிட்டியின் விருந்தினர் இல்லத்திற்குச் சென்ற அவர், ரஃபிக் அகமது, ஃபாஸல் இலாஹி மற்றும் ஃபெரோஜுத்தின் இவர்களுடன் ஆப்கானிஸ்தானத்தின் ஜலாலபாத் நகருக்குள் நுழைந்தார்.

       எல்லை வாயிலில் இருந்த ஒரு சீக்கிய வீரர் ‘ஒரு நாள் இந்தியப் படை, விடுதலைப் போராடடத்திற்கு ஆதரவாக நிற்கும்’ என வாழ்த்தினார். புலம்பெயர்ந்தவர்களில் (எமிகிரேர்ஸ்) மியான் அக்பர் ஷா, அப்துல் மஜீத், ஃபெரோஜுதீன் மன்சூர் முதலான புகழ்பெற்ற பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அவர்கள் ஆயுதம் பெறுவதற்காக ஜெனரல் நாடீர் கானைச் சந்தித்து, இரண்டு வாரங்கள் தங்கி பிறகு காபூலுக்குக் குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் சிறு ‘டோங்கா’களில் புறப்பட்டபோது 50ஆக இருந்த எண்ணிக்கை 300ஆக உயர்ந்தது. அக்பர் கான் குரேஷியைத் தலைவராகக் கொண்டு அயல் மண்ணில் ஒரு குழு (எக்ஸைல் கமிட்டி) அமைக்கப்பட்டது. பெஷாவர் சதி வழக்கில் அவர்தான் முதலில் கைது செய்யப்பட்டார்.

            இராணுவப் பயிற்சி அந்தக் குழுவினருக்கு உதவியது; 40 மைல்கள் நடந்து ஜெபால்-உல்-சிராஜ் நோக்கிப் புறப்பட்டவர்கள் பின்னர் மேலும் 300 மைல்கள் உறைய வைக்கும் குளிரில் கிராமங்களின் வழியாக, மலைகளும் பனி பொழியும் மலைத் தொடர்கள் நிறைந்த மிக மிகக் கடினமான பாதைகளை கடந்து (ஆப்கானிஸ்தானத்தின் நான்காவது பெரிய நகரமான) மஸார்-இ-ஷரீப் அடைந்தனர். வழியில் சுட்டுப் பொசுக்கும் பாலைவனத்தையும் கடந்தனர். அந்நகரிலிருந்து ஆப்கான் பக்கத்தைச் சார்ந்த ஆக்சஸ் நதியை அடைந்தனர். நதியின் எதிர்க்கரையில் சோவியத் யூனியனின் தப்ரீஸ் (கிழக்கு அஜர்பைஜானின் தலைநர்) இருந்தது.

சோவியத் யூனியனில்

      ஆப்கான் அரசு எதிர்த்தாலும், மஸார்-இ-ஷரீப் நகரில் இருந்த சோவியத் தூதரகம் மற்றும் நகரின் கவர்னர் உதவிட ஆக்சஸ் நதியைக் கடந்து சோவியத் யூனியனுக்குள் சென்றனர். ரெவ்காம் அல்லது ரெவலூஷனரி கமிட்டி அவர்களை வரவேற்றுத் தங்குவதற்கு முகாம் ஒதுக்கித் தந்தனர். முதன் முறையாகச் சம மனிதர்களாக அவர்கள் நடத்தப்பட்டனர். 

      எதிர் புரட்சி உள்நாட்டுப் போர் காரணமாக தப்ரீஸ் துண்டிக்கப்பட்டிருந்தது. சிலர் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது புறப்பட விரும்பினர்; எனவே குழுவினர் படகு மூலம் கிர்கி நகருக்குச் செல்ல வேண்டி வந்தது; எதிர்புரட்சியாளர்கள் அவர்களை சூழ்ந்து கைது செய்தனர்.

 அடித்துத் துவைத்து, சாட்டையால் விளாசி பல வகைகளில் கொடுமைபடுத்தப்பட்டனர். கனமான சங்கிலிகளுடன் வெயிலிலும் குளிரிலும் பல மைல்கள் ஓட வைக்கப்பட்டனர். இறுதியில் கடத்திச் சென்றவர்கள் 82 முகாஜீர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற முடிவெடுத்தனர். (முகாஜீர் அரபு வார்த்தைக்குப் புலம்பெயர்ந்தவர் என அர்த்தம்). எங்கோ கேட்டத் துப்பாக்கிச் சத்தம் மரண தண்டனை நிறைவேற்ற வந்தவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. கைதிகளை மீண்டும் கைகளிலும் கால்களிலும் சங்கிலிகளைப் பூட்டி மிக மோசமான நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு அடைத்து வைத்து இரக்கமற்று அலைக்கழித்தனர். கழுத்துகளில் இரும்பு வளையங்களையும் கைகளில் விலங்குடனும் மிக மிக மோசமான அடிமைத்தனக் கொடுமைகளை அவர்கள் அனுபவித்தனர்.

      இதன் மத்தியில் போல்ஷ்விக்குகள் பொக்காராவைக் கைப்பற்ற சூழலின் சமநிலை மாறியது, மொத்தமாக 57 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

கிர்கி சண்டை : செஞ்சேனையில்

    விரைவில் அந்தக் குழு கிர்கியில் போல்ஷ்விக்குகளுடன் செஞ்சேனையில் இருந்தனர். அவர்களில் சிலர் எச்சரிக்கைகளை மீறி துருக்கி புறப்பட்டனர். கிர்கி எதிர்புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது. சவுகத் உட்பட 36 இந்தியர்கள் செஞ்சேனையுடன் சேர்ந்து போரிட்டனர். அவர்களோ 300 வீரர்கள் மட்டும், எதிர்ப்புரட்சியாளர்களான ‘வெள்ளையர்கள்’ எண்ணிக்கையோ சுமார் 5000. கிர்கியின் இந்தியப் பாதுகாவலர்களின் வீரம் எதிர்ப் புரட்சியாளர்களாலும் மெச்சப்பட்டது. அந்தப் பகுதியை விரைவில் செஞ்சேனை விடுவித்தது.

   ஒரு மாதத்திற்குப் பிறகு இந்தியர்கள் புகாரா, பின்னர் தாஷ்கண்டிற்கும் புறப்பட்டனர். அங்கிருந்த ‘இந்திய இல்லம்’ மற்றும் ‘புக்காரா இல்ல’த்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அபானி முகர்ஜி, முகமது அலி செப்பாசி, எம் என் ராய், MPBT ஆச்சார்யா, அப்துல் ரப் மற்றும் பிறரை இந்தியன் ஹவுஸில் ஒரு கூட்டத்தில் சவுகத் உஸ்மானி சந்தித்தார்.

‘தாஷ்கண்ட் சிபிஐ’ அமைப்பு 

          ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி’ அமைப்பதற்காக 1920 அக்டோபரில் தாஷ்கண்ட் நகரில் இந்தியப் புரட்சியாளர்கள் சிலரின் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது; தவறான தயாரிப்புகளுடன் எடுக்கப்பட்ட அத்துணிகர முயற்சி எடுபடாது தோல்வியடைந்தது. ராய் அதில் கலந்து கொண்டிருந்தாலும், அவருடைய நினைவலைகள் நூலில் அந்த யோசனைக்கு எதிராகத் தான் இருந்ததாக எழுதியுள்ளார். அதன் நோக்கங்கள் மற்றும் இலக்குகள் பற்றி எவருக்கும் தெளிவு இல்லை. சவுகத் உஸ்மானி அதில் சேரவில்லை. அவர்களில் பலருக்கும் சோவியத் செஞ்சேனை உதவியுடன் இந்தியாவை விடுவிப்பது பற்றிய சிறுபிள்ளைத்தனமான உடோபியக் கனவுகள் கருத்தாக இருந்தன! அவர்களை ஊக்கப்படுத்தாது யோசைனையைக் கைவிடச் செய்ய சோவியத் தோழர்கள் தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளும் செய்தனர்.

ராயும் இத்தகைய சாகசத் திட்டங்கள் சிலவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். உஸ்மானி மற்றும் 15 பேர் இந்திய இராணுவப் பள்ளியில் சேர்ந்தனர். ஜெனரல் ப்ளுகேர் (General Blukher) போன்ற இராணுவ கமாண்டர்கள் அவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.

1921 ஜனவரி தொடக்கத்தில் உஸ்மானி மாஸ்கோவின் அரசியல் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். புகழ் பெற்ற ஆளுமைகள் ஜப்பானின் Sen Katayama, பிரிட்டனின் Tom Quelch, பின்லாந்தின் Otto Kuusinen, மற்றும் சோவியத் யூனியனின் Willie Munzenburg, Borodin போன்றவர்கள்  அங்கிருந்தனர். என்வர் பாஷா கூட விஜயம் செய்தார்.

மாபெரும் கம்யூனிஸ்ட்டான லெனினைச் சவுகத் உஸ்மானி பல முறை

சந்தித்தார், அவரது அலுவலகத்திற்கு ஒரு குழுவாகச் சென்றார். (அந்தச் சந்திப்புப் பற்றி) உஸ்மானி கூறுகிறார் : “லெனினைப் பற்றி எனக்குக் கிடைத்த  மிக்க ஒளிபொருந்திய நினைவு யாதெனில், மின்னிச் சிமிட்டும் கண்களுடன், வெல்லும் புன்னகையும், வெறுக்க முடியாத காந்தமாய்க் கவர்ந்து ஈர்க்கும் தன்மையுடைய ஒரு மனிதர் மற்றும் குழந்தைபோல ஒருவர்” என்று வர்ணித்துள்ளார்.

இந்தியாவுக்குத் திரும்புதல்

    விரைவில் மாஸ்கோவில் இருந்த கிழக்கத்தியப் பாட்டாளிகள் பல்கலைக்கழகத்தில் (University of the Toilers of East) உஸ்மானி சேர்ந்தார். 1921ல் அங்கு மாஸ்கோவில் நடைபெற்ற இந்தியப் புரட்சியாளர்களின் ‘உச்சி மாநாடு’ கூட்டம் அவர்களிடையே மூன்று குழுக்கள் இருப்பதைக் காட்டியது. எம்என் ராயுடன் கடுமையான வேறுபாடுகள் வளர உஸ்மானி அவரைவிட்டு விலகத் தொடங்கினார்.

      அங்குத் தங்கியிருப்பதில் பெரும் பயன் இல்லாததால் உஸ்மானி இந்தியா திரும்ப விரும்பினார். ஸ்டாலின் உட்பட பலரையும் இதன் பொருட்டு சந்தித்தார். செவஸ்ட்டோகோல், பாகு, இரான் முதலிய நாடுகள் வழியாக நீண்ட பயணத்தை மேற்கொண்டு 1922 ஜனவரி 22ல் பம்பாய் திரும்பினார், உடனடியாகத் தலைமறைவாகவும் சென்றார். அவருடைய பெயரைக் கூறாது விட்டுவிட்டு அவரது அறிக்கைகள் பதிப்பிக்கப்பட்டதைக் கண்டு வியப்படைந்தார்! கம்யூனிஸ்ட் இலக்கியங்களைப் பரப்பும் பணியை அவர் மேற்கொண்டார். காசி மற்றும் கான்பூருக்குச் சென்றவர், டாக்டர் சம்பூர்னானந்த் மற்றும் கணேஷ் சங்கர் வித்யார்த்தியைச் சந்தித்தார்; பெர்ஷியா சென்றவர் நான்கு மாதங்களுக்குப் பிறகு உடனடியாகத் திரும்பினார். புரட்சிகர மற்றும் மார்க்ஸிய இலக்கியங்கள் கிடைப்பதில் தனக்கு உஸ்மானி உதவியதாக சம்பூர்னானந்த் குறிப்பிட்டுள்ளார்.

    வித்யார்த்தி அவரைக் கான்பூரில் ஒரு முஸ்லீம் பள்ளியில் ஆசிரியராகப் பணியமர்த்தச் செய்தார். ஆசிரியர் பணி செய்து கொண்டே இரகசியமாகத் தொழிலாளர்கள் மத்தியிலும் செயல்பட்டார். மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களைத் திரட்டக் கல்கத்தா, அலிகார் மற்றும் ரோஹ்டக் புறப்பட வேண்டியிருந்தது. ரோஹ்டக்கில் இராணுவ வீரர்களைக் கவர்ந்து ஈர்த்தார். 1923ல் கைது செய்யப்பட்டவர் மிக மோசமான நிலைமையில் பெஷாவர் சிறைக்கும் பின்னர் கொடுமைக்குப் பெயர்போன அப்போட்டாபாத் சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டார்; அங்கே கைகளில் விலங்கும் கழுத்தில் இரும்பு வளையங்களும் மாட்டி தரையில் இழுத்துச் செல்லப்படுவது வழக்கம்.

   1924 மார்ச் மாதத்தில் கான்பூர் சதிவழக்கின் கீழ் அவர் கான்பூருக்கு மாற்றப்பட்டார்; அங்கு எஸ் ஏ டாங்கே, முஸாஃபர் அகமது மற்றும் நளினி குப்தா ஆகியோரைச் சந்தித்தார். 27 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட உஸ்மானிக்குக் கட்டாயப்படுத்தி உணவு திணிக்கப்பட்டது. சிறைக் கைதிகளில் கழுத்தைச் சுற்றி மரப்பலகைகளைக் கட்டப்பட்டன. 1927ல் அவர் விடுதலையானார். டாங்கே மற்றும் பிறர் உரையாற்றிய ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார்; மேலும் 1927ல் சென்னையில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

      மெட்ராஸில் எம் சிங்காரவேலு இல்லத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் குழுக்களின் கூட்டங்களில் கலந்து கொண்டார். சிங்காரவேலுவுடன்தான் அவர் தங்கி இருந்தார்.  

1928 மாஸ்கோ, காமின்டெர்ன் காங்கிரஸ் மாநாட்டில்

           ஸ்ரீனிவாச அய்யங்கார் மற்றும் மதன் மோகன் மாளவியா உதவியுடன் 1928ல் மாஸ்கோ புறப்பட்ட உஸ்மானியின் பயணச் செலவுகளைக் கணேஷ் வித்யார்த்தியும் மற்றவர்களும் ஏற்றனர். காமின்டர்னின் ஆறாவது காங்கிரஸில் உஸ்மானி பங்கு பெற்றது மட்டுமல்ல, அவர் தலைமைக் குழுத் தோழர்களில் ஒருவராக ஸ்டாலின், க்ளாரா ஜெட்கின், டோக்லியாட்டி (Ercoli’), எபெர்ட் (ஜெர்மனி), லவ்ஸ்டோன் (அமெரிக்கா) மற்றும் பிற தலைவர்களுடன் அமர்ந்திருந்தார். புக்காரின் அதிபராக இருந்தார். அந்த நேரத்தில் உஸ்மானிக்கு வெறும் 27 வயதுதான், அவருக்குச் ‘சிக்கந்தர் சூர்’ என்ற (சிறப்புப்) பெயரைத் தழுவியிருந்தார். காங்கிரஸின் பல்வேறு அமர்வுகளிலும் தீவிரமாகப் பங்கேற்றார். ‘காலனியத்துவ நீக்கம் பற்றிய அறிக்கை’யை (‘Theses on Decolonization) எதிர்த்தார். (காலனியத்துவ நீக்கம் என்பது பொய்யாக விடுதலைக்கு மாற்றாக வைக்கப்படுவது. விடுதலைக்குப் பிறகும் பழைய காலனிய நாடுகளை ஏகாதிபத்தியத்தைச் சார்ந்திருக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்ட திட்டம் என்பது எதிர்ப்பிற்கான காரணங்களில் ஒன்று -–இணைத்திலிருந்து மொழிபெயர்ப்பாளர் திரட்டியது)

     ஐரோப்பாவில் நீண்ட பயணம் செய்த பிறகு 1928 டிசம்பரில் பம்பாய் திரும்பினார். அவருக்கு டாங்கேயுடன் நெருங்கிய தோழமை வளர்ந்திருந்தது.

    1928 டிசம்பர் இறுதியில் கல்கத்தாவில் விவசாயி தொழிலாளி கட்சி (PWP) மற்றும் சிபிஐ கூட்டங்களில் உஸ்மானி கலந்து கொண்டார். அங்கே சிபிஐ செயற்குழு கூட்டம் அவருக்கு வடக்கு–மேற்கு எல்லை இரயில்வே தொழிலாளர்களைத் திரட்டும் பொறுப்பை வழங்கியது.

1929, மீரட் கைதியாக

            1928 இறுதியில் கல்கத்தா ஏஐசிசி அமர்வில் கலந்து கொண்டார். அங்கே ‘இராணுவச் சீருடை’யில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருந்தார். பல இடங்களில் அவர் பேசினார். 1929 மார்ச் 20ல் பம்பாயிலிருந்து டாங்கே, காட்டே மற்றும் மற்றவர்களுடன் கைது செய்யப்பட்டவர் விக்டோரியா டெர்மினஸ் ஸ்டேஷனிலிருந்து மீரட் சதி வழக்கில் மீரட் கொண்டு வரப்பட்டார். உஸ்மானி அவருடைய அறிக்கையில் கூறினார்: “மார்க்ஸிசம் –லெனினியம் கொள்கை எனக்கு ஏற்புடையதாக உடன்படுகிறேன்; நான் ஒரு கம்யூனிஸ்ட். சோவியத் யூனியனின் கம்யூனிட்களின் படையணியில் சேர்ந்தேன்…” அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது, ஆனால் 1935 ஜூலை 1ம் தேதியே விடுதலையானார்.

 மீரட் சிறையிலிருந்து பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டி

       அவருடைய புகழையும், போராட்ட உணர்வையும் உணர்ந்த கிரேட் பிரிட்டனின் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB) சவுகத் உஸ்மானியைக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தல்களில் நிறுத்தியது; அப்போது மீரட் சிறையில் இருந்த உஸ்மானியும் தேர்தலில் போட்டியிடச் சம்மதித்தார். அவர் ஸ்பென் பள்ளத்தாக்கு (Spen Valley) தொகுதியிலிருந்து போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்திற்கான அவரது மனு நிராகரிக்கப்பட்டது. தேர்தல்களில் பில்லி பிரைன் அவரது பிரதிநிதியாக இருந்தார்.

1931ல் மீரட் சிறையிலிருந்து உஸ்மானி மீண்டும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு தென்கிழக்கு செயின்ட் பான்கிராஸ் தொகுதியிலிருந்து போட்டியிட்டார். சென்ற முறையைவிட 50 சதவீதம் அதிகமாக இம்முறை 75000 வாக்குகள் பெற்றாலும், அவர் மீண்டும் தோல்வி அடைந்தார்.

ஆர்எஸ்பி கட்சியில்

     மீரட் சிறையிலிருந்து விடுதலையான பின் உஸ்மானி BB&C இரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தில் பணியாற்றினார். 1940 ஜூலை 14ல் ஆக்ராவில் கைது செய்யப்பட்டவரைத் தியோலி முகாம் பின்னர் பெய்ரைலி, ஃபட்டேஹார்க் முதலான சிறைகளுக்கு மாற்றி 1945 ஜனவரி 8ல் விடுதலை செய்தனர். 1946 RIN கப்பற்படை கிளர்ச்சியின்போது தேசியக் கடலோடிகள் சங்கத்திற்கு (National Seafarers’ Union) பொதுச் செயலாளர் ஆனார். புரட்சிகர சோஷலிட் கட்சி (RSP) உறுப்பினராக முயன்றார், ஆனால் கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கண்டார். ஆர்எஸ்பி தலைவர்கள் வேண்டுகோளை ஏற்று பாக்கிஸ்தான் சென்ற அவர், பாக்கிஸ்தான் குடிமகனாக மறுத்துவிட்டார். இந்தியா திரும்ப அவர் அனுமதிக்கப்படாததால் 1952 செப்டம்பரில் லண்டன் சென்றவர், 72 நாட்கள் கழித்து பம்பாய் திரும்பினார். ஒரு நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றியவர் மீண்டும் 1955ல் லண்டன் சென்று, சில சில்லறை வேலைகளைச் செய்தபடி, நாள்தோறும் பிரிட்டிஷ் மியூசியம் நூலகம் சென்று ஆய்வுப் பணிகளைத் தொடங்கினார்.

பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியில்

            உஸ்மானி பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியில் சேர்ந்து அதன் செயற்குழுவிலும் இடம் பெற்றார். தொழிலாளர் கட்சி மேடையைப் பயன்படுத்தி கோவா விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டிப் பிரச்சாரம் செய்தார். அதே நேரத்தில் தனது ஆய்வையும்1961வரை தொடர்ந்தார்; இதன் விளைவாய் “பழங்கள், காய்கறிகள், கொட்டைகளின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் உணவு குணப்படுத்துகிறது” என்ற புத்தகம் வெளிவந்து பரவலாகப் பாராட்டப்பட்டது. பிரிட்டிஷ் குடியுரிமை வழங்க முன்வந்தபோதும் அதை மறுத்து 1962ல் இந்தியா திரும்பினார். பிறகு 1964ல் எகிப்து நாட்டின் கெய்ரோவுக்குச் சென்றவர் 1974வரை அங்கே இருந்தார்; அப்போது ‘எகிப்து கெஜட்’, ஆப்ரிக்க – ஆசிய மக்கள் ஒருமைப்பாட்டு அமைப்பின் (AAPSO) கலாச்சார மற்றும் அரசியல் பத்திரிக்கையான ‘லோட்டஸ்’ முதலான பத்திரிக்கைகளில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார். பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO)வின் அல் ஃபத் (Al Fatah) அமைப்பிலும் பணியாற்றினார்.

சிபிஐ-க்குத் திரும்புதல்

            1974ல் இந்தியா வந்ததும் உஸ்மானி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அவருடன் மீரட்டில் சக கைதியாக இருந்த டாக்டர் அதிகாரியுடன் சில காலம் அஜாய் பவனில் பணியாற்றினார். அவருடைய 75வது பிறந்த நாளைக் கொண்டாட பிக்கானீரில் இருந்த சிபிஐ தோழர்கள் விரும்பி வேண்டியபோது அவர் 1976ல் பிக்கானீர் சென்றார். பிக்கானீரை விட்டு அவர் சென்றது 1920ல்.

            சவுகத் உஸ்மானி 1978 பிப்ரவரி 26ல் மரணமடைந்தார். அவருடைய மகனும் பிற குடும்ப உறுப்பினர்களும் மோசமான ஏழ்மையில் வாழ்ந்தனர்.

எழுத்துப் படைப்புகள்  

       உஸ்மானி பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார், அவற்றில் பல தொலைந்து போனது. ஆங்கிலம், உருது மற்றும் இந்தியில் அவரது சில படைப்புகள் வருமாறு:

ஒரு புரட்சியாளனின் வரலாற்றுப் பயணங்கள்; நான்கு யாத்திரிகர்கள்; விலங்குகள் மாநாடு; அன்மோல் ஹகானியான் (விலைமதிப்பில்லா கதைகள்); ஃபௌஜி சித்தாரா; கிரகணத்தின் இரவு; நான் ஸ்டாலினை இரண்டு முறை சந்தித்தேன்; பழங்கள் முதலியவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு; பெஷாவரிலிருந்து மாஸ்கோவிற்கு; பெர்ஷியா தொழிற்சாலை சர்வே; பாலஸ்தீன வரலாற்றின் பார்வைகள்; சுயசரிதை (பதிப்பிக்கப்படாதது) முதலியன.

    மேற்கண்ட நூல்களின் ஆங்கிலத் தலைப்பு வருமாறு : Historic Trips of a Revolutionary; Four Travellers; Animal Conference; Anmol Kahaniyan; Fauji Sitara; Night of the Eclipse; I Met Stalin Twice; Nutritive Values of Fruits etc; Peshawar to Moscow; Industrial Survey of Persia; Glimpses of History of Palestine; Autobiography (unpublished), etc.

  ஒரு புரட்சியாளனின் வாழ்க்கைப் பயணம் நமக்குப் பாதையைக் காட்டட்டும், படித்துப் பயன்பெறுவோம்!

--நன்றி : நியூஏஜ் (ஏப்ரல் 24 –30)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

.

 

 

No comments:

Post a Comment