ஆளுமைகளை அபகரிக்கும் ஆர்எஸ்எஸ் –
பாஜக
அவர்களின் அபகரிப்பு
நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை
--ஆர் எஸ் யாதவ்
நமது
மாபெரும் ஆளுமையாளர்களை அபகரிக்க ஆர்எஸ்எஸ் / பாஜகவும் தந்திரமான கொள்கையைப் பின்பற்றுகின்றன;
அந்த ஆளுமைகளின் கொள்கைகள் அவர்களுக்கு நேர் எதிரிடையாக இருப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.
பகத் சிங்கைப் புகழ்ந்து பாடியும், ஏதோ
அவர்கள் சுவாமி விவேகானந்தரைப் பின்பற்றுபவர்கள்
போலவும், சுதந்திரத்திற்குப் பிறகு பல பத்தாண்டுகளாகவும் ஏன் அதற்கு முன்பும்கூட யாரை
அவமதித்து வருகிறார்களோ அந்தக் காந்திஜியைக்கூட
இப்போதெல்லாம் வழிபடுவதாகக் காட்டிக் கொள்கிறார்கள்.
சுவாமி விவேகானந்தர்
வெகு
காலத்திற்கு முன்பே வரலாற்றுச் சிறப்புடைய
‘நான் ஒரு சோஷலிஸ்ட்’ என்ற தனது
சிறு பிரசுரத்தில் தன்னை ஒரு சோஷலிஸ்டாக இந்தியாவில் முதன் முதலாக அழைத்துக் கொண்டவர்
சுவாமி விவேகானந்தர். வெளிப்படையாக அவர் தன்னைச் சோஷலிஸ்ட் எனப் பிரகடனப்படுத்தியவர்.
சுவாமி விவேகானந்தரை அபகரித்துச் சொந்தம் கொண்டாட வேண்டுமானால் ‘சோஷலிச’த்தைத் தாங்கள்
நம்பும் கொள்கையாக ஏற்கும் துணிவை அவர்கள் பெற வேண்டும். சோஷலிசத்தை ஏற்க அவர்கள் தயாரா?
அப்படி இல்லை என்றால், சுவாமி விவேகாந்தர் ஆதரித்துப் பிரச்சாரம் செய்த கொள்கைகள் மற்றும்
தத்துவத்துடன் தங்களுக்கு ஏதோ நெருக்கம் இருப்பதாகச் சொந்தம் கொண்டாட முயற்சிக்கக்
கூடாது. 1893 செப்டம்பர் 11ல் அமெரிக்க மண்ணில்
மதங்களின் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது சிங்கம்போல முழங்கி அவர் விடுத்த வலிமையான
அழைப்பு, அனைத்து மதங்களின் அடிப்படையான ஒற்றுமையை வலியுறுத்தியது; ஒருவரது சொந்த மதத்தின்
பெருமையை மட்டும் வலியுறுத்தி பிற மதங்களைப் பழிக்கும் அன்றைக்கு நிலவிய போக்கைக் கடுமையாக
விமர்சனம் செய்தது.
மதங்களின் ஒற்றுமை
மதங்களின்
அடிப்படையான ஒற்றுமையில் ஆர்எஸ்எஸ்–பாஜகவுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லை, அவர்களால்
அது முடியாது. பிற மதங்களைப் பின்பற்றுபவர்களை, குறிப்பாக முஸ்லீம்களை, இழிவுபடுத்துவதுதான்
அவர்களின் மிக விருப்பமான உத்தி; அதனைத் தங்கள் தேர்தல் ஆதாயத்திற்காக மக்களைப் பிளவுபடுத்தப்
பயன்படுத்துகின்றனர். இந்த இடத்தில் சிந்தையைக் கிளரும் சுவாமி விவேகானந்தரின் வாக்கை
நினைக்காமல் இருக்க முடியாது. சுவாமி கூறுகிறார்:
“ஒரு
கிருஸ்துவர், இந்து அல்லது புத்த மதத்தவராக வேண்டாம்; அன்றி ஓர் இந்துவோ அல்லது பௌத்தரோ
கிருஸ்தவராக மாற வேண்டாம். ஆனால் ஒவ்வொருவரும் பிறரது நல்லுணர்வை உள்வாங்க வேண்டும்,
அதே நேரத்தில் தங்கள் நம்பிக்கையின் தனித்துவத்தையும் பாதுகாக்க வேண்டும்; மற்றும்
ஒவ்வொருவரும் அவரவர் சொந்த வளர்ச்சி விதிகளின்படி வளர வேண்டும். அனைத்து மதங்களும்
மிகமிக உயர்வான பண்பு நலன்களுடன் அமைந்த ஆண்களையும் பெண்களையும் உருவாக்கியுள்ளது.
இந்த நிதர்சனமான சாட்சியத்தின் முன்னால், எவரொருவராவது தனது சொந்த மதம் தனித்துவமாக
நீடிக்கவும், பிற மதங்கள் அழியவும் கனவு காண்பாராகில், அவர்களுக்காக எனது இதயத்தின்
அடி ஆழத்திலிருந்து நான் பரிதாபப்படுகிறேன்.”
சுவாமி
விவேகானந்தரின் மேன்மையான கருத்தை உள்வாங்கி தன்வயமாக்க பாஜக - ஆர்எஸ்எஸ் தயாரா? சிறுபான்மையினர் மற்றும் தலித்கள்பால்
வெறுப்பு அணுகுமுறையைக் கைவிட்டு தூக்கி எறிய அவர்கள் தயாரா? இல்லை, அவர்கள் தயாரில்லை.
ஓர் இஸ்லாமிய நண்பருக்குச் சுவாமி விவேகானந்தர்
எழுதிய கடிதத்தை நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். இந்தியாவின் இரு பெரும் சமூகத்தினரிடையே
ஒற்றுமையை வலியுறுத்தி அவர் எழுதினார்: “நமது சொந்த தாய் மண்ணிற்காக, இந்துயிசம் மற்றும்
இஸ்லாம் எனும் இரண்டு பெரும் முறைமைகளின் சங்கமம், --வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும்தான்—ஒரே
நம்பிக்கை.”
மீண்டும்
நாம், சிகாகோவில் நடைபெற்ற மதங்களின் உலக நாடாளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் உண்மையான பிரச்சனையை
மிகக் கூர்மையாகச் சுட்டிக் காட்டி உரைத்ததைப்
பார்க்கலாம்: “(இந்தியாவில்) அவர்களுக்குப் போதுமான மதம் இருக்கிறது – ஆனால் தண்ணீருக்குத்
தவித்துக் காய்ந்துபோன தொண்டை வரள பல லட்சக்கணக்கான மக்கள் உணவுக்காகக் கதறித் துன்பப்பட்டுக்
கொண்டிருக்கிறார்கள். பசியால் துடிக்கும் மக்களுக்கு மதத்தை வழங்குவது பெரும் அவமரியாதை.
பசிக்கு உணவு அளிக்க முடியாத கடவுள், எனக்குச் சொர்க்கத்தில் நிலைத்த பேரின்பத்தை அளிப்பார்
என்று நான் நம்பவில்லை” என்று அவர் பிரகடனம் செய்தார்.
திசை திருப்பல்
இன்று,
பிரதமர் உட்பட பாஜக – ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தாங்கள் அயோத்தியில் ‘பாவ்ய’
ராம் மந்திர் (பிரம்மாண்டமான இராமர் கோயில்) எழுப்பி வருவதாகத் தொடர்ந்து தற்பெருமை
அடித்துக் கொள்கிறார்கள், ஏதோ அப்படிக் கட்டுவது வீதிகளில் வேலைதேடி அலையும் கோடிக்
கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் அளித்துவிடும் என்பதைப்
போல. 120 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சுவாமி விவேகானந்தர் இந்தியாவுக்குத் தேவைப்படுவது பிரெட் (ரொட்டி/ உணவு/ வாழ்வாதாரமே) தவிர
தேவாலயங்களோ அல்லது கோயில்களோ அல்ல என
உறுதிபட முழங்கினார்.
நம்
நாட்டு மக்கள் உயரும் விலைவாசி, வேலைவாய்ப்புக் குறைதல், வருமானம் குறைதல் மற்றும்
வேலைஇல்லாத் திண்டாட்டம் கடுமையாக உயர்வது போன்ற பிரச்சனைகள் காரணமாக கவலைகளில் ஆழ்ந்துள்ளனர்.
இப்பிரச்சனைகளைக் களையத் தீவிரமான நடவடிக்கை எடுப்பதில் அரசு தோல்வியடைந்துள்ளது. உண்மையில்
அரசு பின்பற்றும் கொள்கைகளால் இப்பிரச்சனைகள் மேலும் கடுமையாகின்றன. எனவே இந்த உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை
அவர்கள் அயோத்தியில் பிரம்மாண்ட இராமர் கோயில் மீது திசை திருப்புகின்றார்கள்.
அவர்களைப் பின்பற்றுவோர் மதுராவில் ‘கிருஷ்ண
ஜன்ம பூமி’ என்றும், வாரணாசியில் ‘ஞானவாபி’ என்றும், தாஜ் மகால்
மீதே ஆபத்தான உரிமைகளைக் கோரும் அளவு புதிய பிரச்சனைகளைத் தூண்டிவிடுகின்றனர்.
ஆர்எஸ்எஸ்
– பாஜக கூட்டத்தினர் வேறுபட்ட சமூகங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த புதிய பிரச்சனைகளைத்
தொடர்ந்து உண்டாக்குவார்கள், தங்கள் பிரச்சாரத்தையும் தொடரவே செய்வார்கள். அவர்கள்
சுவாமி விவேகானந்தர் போன்ற நமது பெருமக்களின் புகழைத் திருட்டுத்தனமாக அபகரிக்க குயுக்தியாகக்கூட
முயற்சிப்பர். என்ன ஒரு பித்தலாட்டம்!
முஸ்லீம் ஆட்சியின்போது பெருமளவு மதமாற்றம் நடைபெற்றதாக
அபத்தமான அனைத்து வகையான குற்றச்சாட்டுகளையும் அவர்கள் கூறுவார்கள். அந்த அபத்தங்களுக்கு
மாறாக, “எதிர்கால பாரதம்“ என்ற தனது கட்டுரையில்
சுவாமி விவேகானந்தர் எழுதுவார் : ”முகமதிய ஆட்சியை ஏழைகளும் ஒடுக்கப்பட்ட மக்களும்
ஒரு விடுதலை அனுபவமாக உணர்ந்தனர். அப்படித்தான் நம் மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர்
முகமதியர்கள் ஆனார்கள். இந்த மக்கள் அனைவரும் வாள் முனையிலும் பயமுறுத்தியும் (இஸ்லாமிய
மதத்திற்குக்) கொண்டு செல்லப் பட்டார்கள் என நினைப்பது வெறும் பைத்தியக்காரத்தனம்.”
உச்சத்தில் வெறுப்புப் பிரச்சாரம்
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக சங்பரிவார் கூட்டம் மற்ற
மதத்தைப் பின்பற்றுபவர்கள் குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை
வெட்கமின்றி நடத்தி வருகின்றனர். அவர்களுடைய சீட கோடிகள் ‘தர்மத்தின் மாநாடு’ (தர்ம
சன்சத்) என்ற பெயரில் அமைத்து நடத்தி வருகிறார்கள்; சமீபத்தில் 2021 டிசம்பர்
17 முதல் 20வரை ஹரித்துவாரில் ஒரு கூட்டமும், 2022 ஜனவரி 30ல் பிரயாக்ராஜ்
(பழைய அலகாபாத்) இடத்தில் மற்றொன்றும் நடத்தப்பட்டன: அதன் ஒரே நோக்கம்
மத நம்பிக்கை அடிப்படையில் மக்களிடையே பகைமை மற்றும் பிளவை ஏற்படுத்தி, தேர்தல் ஆதாயத்திற்காக
வாக்காளர்களைப் பாரதூரமாகப் பிளவுபடுத்துவதுதான். ஹரித்துவாரில் பேசியவர்களின் பிற
விஷமத்தனமான மற்றும் வகுப்புவாத ஆத்திரமூட்டும் பேச்சுகளைத் தவிர முஸ்லீம்களை இனப்படுகொலை
செய்ய வேண்டும் என அறைகூவல் அழைப்பும் விடுத்துள்ளனர்.
பிரயாக்ராஜில்
பேசியவர்கள் இந்தியா ஏற்கனவே ’இந்து ராஷ்ட்டிராதான்’
எனப் பிரகடப்படுத்தினர். ஏதாவது பிற மதத்தைச் சேர்ந்த சில அமைப்புகள் அத்தகைய சொற்பொழிவுகளையும்
அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தால், காவல் துறை மற்றும் தேசியப் புலனாய்வு முகமை
இந்நேரம் பல மக்களைத் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்திருக்கும். ஆனால்
அதை நடத்திய ‘தர்ம சன்சத்’ என்று அழைத்துக் கொள்பவர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு
நெருக்கமானவர்கள் ஆயிற்றே. எனவே அவர்களுக்கு ‘மேலிட’ப் பாதுகாப்புக் கிடைக்கிறது. இப்படிப்பட்ட
நடத்தையையும் கொள்கையையும் இன்னமும் பிரச்சாரம் செய்து ஆட்டம் போட முயற்சி செய்யும்
ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல், சுவாமி விவேகானந்தர் மற்றும் அவர் கொள்கைகளை மதித்துப் போற்றுகிறோம்
என்பது ஏமாற்று பொய் பித்தலாட்டம் தவிர வேறில்லை.
காந்திஜி
ஆர்எஸ்எஸ்
மற்றும் பாஜக தேசத்தின் சூழ்நிலையை நஞ்சாக்கி, முஸ்லீம்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு
எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை, தனது மனிதத்தன்மையற்ற கொடூரமான இந்துத்துவா கொள்கைகளைப்
பரப்புவதன் மூலம் நடத்தி வருகின்றன. அவர்கள் காந்திஜியையே அபகரிக்க முயல்கிறார்கள்;
மகாத்மா காந்திஜி கொல்லப்பட்டது வேறு யாராலும் அல்ல, இந்துத்துவக் கோட்பாட்டைப் பின்பற்றும்
ஒருவராலேயே கொல்லப்பட்டார்.
இந்துக்களுக்கு இந்தியாவின் மீது சிறப்பு உரிமை இருப்பதாக ஆர்எஸ்எஸ் கோருவது போல அல்லாமல், காந்திஜி எந்த மத நம்பிக்கை உடையவரானாலும் மக்கள் அனைவருக்கும்
தேசம்
மற்றும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்திலும் சம உரிமை இருப்பதாக காந்திஜி நம்பினார்.
காந்தியின் நீதிபோதனை சார்ந்த பார்வை மற்றும் அவர் அரசியலில்
பின்பற்றியது இரண்டும் இந்த அனைவரையும் உள்ளடக்கிய இந்தியக் கருத்தாக்கத்தை
உருவகப்படுத்தியது. இது தொடர்பாக 1945ல் பதிப்பிக்கப்பட்ட அவரது கட்சியின் “ஆக்கபூர்வமான திட்டம்” பற்றிய சிறு பிரசுரத்தை
நாம் பரிசீலிக்கலாம். அந்தத் திட்டத்தின் முதல் அம்சம் “வகுப்பு
ஒற்றுமை”.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய சில மாதங்களுக்குப் பிறகு 1915 ஏப்ரலில் வேறுபட்ட பல்வேறு மதப் பின்னணியிலிருந்து வந்த மக்களிடையே டெல்லியில் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். காந்தியை உருவாக்கிய அவரது
குருநாதர் கோபால கிருஷ்ண கோகலே
புனாவில் சில வாரங்களுக்கு முன்புதான் இறந்தார். காந்தி கூறினார் : “கோகலே
ஓர் இந்து, ஆனால் சரியான மாதிரி இந்து. ஒரு முறை இந்து சன்னியாசி ஒருவர் அவரிடம் வந்து
ஒரு யோசயை முன் வைத்தார்; அது, இந்து அரசியல் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதுடன்,
முகமதியர்களை அடக்கியும் வைக்கும்; அந்தத் தன்னுடைய யோசனையைப் பல்வேறு மதரீதியான காரணங்களுடன்
விரிவாக முன் வைத்து வற்புறுத்தினார். பின்வரும் வார்த்தைகளில் கோகலே பதில் கூறினார்:
“ஓர் இந்துவாக இருக்க வேண்டுமானால், நீங்கள் விரும்புவதுபோல நான் நடந்தே
ஆக வேண்டும் என்றால், தயவு செய்து வெளிநாடுகளில், ‘நான் ஓர் இந்து அல்ல’ எனப் பதிப்பித்து
வெளியிடுங்கள்!” என்றார்.
‘ஆர்எஸ்எஸ் முழுமையாக ஒரு பாஸிச அமைப்பு’
–வினோபா பாவே
காந்திஜி கொல்லப்பட்ட சில வாரங்களில் அவரைப்
பின்பற்றுவோர் குழு ஒன்று அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்பதை விவாதிக்கச் சேவா
கிராமத்தில் சந்தித்தது. இந்த விவாதங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புக் குறித்த அம்சமும் வந்தது;
அது, காந்திஜியைக் கொன்ற கொலையாளி கோட்ஸே
ஓர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்பதால் மட்டுமே அல்ல; ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்சங்க்சாலக்
(முதன்மைத் தலைவர்) கோல்வால்கர்,
காந்திஜி கொலைக்கு அடுத்த வந்த சில நாட்களில் விஷமத்தனமான வகுப்புவாத உரைகளை நிகழ்த்தி
இருந்தார் என்பதன் காரணத்தாலேயே சேவாகிராமக் கூட்டத்தில் விவாதத்திற்கு வந்தது.
1948 மார்ச் மாதம் சேவாகிராமத்தில் நடைபெற்ற காந்தியர்கள் கூட்டத்தில் (பூமிதான இயக்கத் தலைவர்) வினோபா பாவே உணர்ச்சி மேலிட மனம் வெதும்பிக் கூறினார்: “நான் பிறந்த (சித்பவன் பிராமணர்கள் என்ற) மராட்டிய பிராமண வகுப்பு இப்போது மறைந்து விட்டாலும், என் சக சாதியினர் செல்வாக்கில் இருக்கும் ஓர் அமைப்பு (ஆர்எஸ்எஸ்) ஆழமான நம்பிக்கை இன்மைக்கு ஆளாகி விட்டது”. ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சித்துப் பாவே
கூறினார்: “அந்த அமைப்பு நாட்டில் குறுக்கும் நெடுக்குமாக
ஆழமாக வேர் ஊன்றி பெரும் திறனுடன் பரவி உறுதியாக நிற்கிறது. அதன் குணம் முழுமையாகப்
பாஸிசமாக உள்ளது. அந்த அமைப்பின் உறுப்பினர்கள் மற்றவர்களை நம்புவதில்லை. காந்திஜியின் கொள்கை உண்மையைச் சார்ந்து இருக்கிறது; இந்த நபர்களின் கொள்கை உண்மை அல்லாத பொய்ம்மையைப் பற்றி நிற்கிறது.
இந்தப் பொய்ம்மை அவர்களின் உத்தி மற்றும் அவர்களின் தத்துவத்தின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த
ஒரு பகுதி” என்றார்.
காந்தி தலைமையேற்ற தேசிய இயக்கத்திற்கும் இந்துத்துவ ஆதரவாளர்களின் இயக்கத்திற்கும் இடையே இருக்கும் ஆகப் பெரும் இடைவெளியை வினோபா தொடர்ந்து விளக்கினார். அவர் இவ்வாறு கூறினார்: “ஆர்எஸ்எஸ் அமைப்பின் இயங்குமுறை எப்போதும் நம்முடைய முறைக்கு எதிரிடையானது. (விடுதலைப் போராட்டத்தில்) நாம் சிறைக்குச் சென்றபோது, அவர்களது கொள்கை வெள்ளை ஆட்சியின் இராணுவம் அல்லது போலீஸ் படையில் சேர்வதாக இருந்தது. இந்து – முஸ்லீம் கலவரம் நடக்கக்கூடிய எந்த இடத்திலும் எப்போதும் அவர்கள் விரைவாக வந்து குதித்து விடுவார்கள். இவர்களது இந்நடவடிக்கைகளில் எல்லாம் அந்த நாளின் ஆட்சி (பிரிட்டிஷ் ஆட்சி) தனக்கு அனுகூலமாக இருக்கக் கண்டது; வெள்ளை ஆட்சி அவர்களுக்கு ஆதரவு தந்து உற்சாகப்படுத்தியது; இப்போது நாம் அதன் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்” என்றார் வினோபா பாவே.
நன்றி: நியூஏஜ் (மார்ச் 29 –ஜூன் 4)
--தமிழில் :
நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்





No comments:
Post a Comment