Monday 6 June 2022

நேற்று பாபர் மசூதி, இன்று ஞானவாபி…நாளை?

                                                                               

நேற்று பாபர் மசூதி, 

இன்று ஞானவாபி…நாளை?

                                                       --எஸ் அனுமந்த ரெட்டி

            73 ஆண்டுகளுக்கு முன் இரகசியமாக ஒரு நள்ளிரவு பாபர் மசூதியில் ஒரு கற்சிலை வைக்கப்பட்டது. சிலர் அதனைப் பகவான் இராமர் பிறந்த இடம் அது என்பதற்கு அத்தாட்சி என்றனர். தற்போது வாரணாசி ஞானவாபி மசூதியில் காணப்பட்ட 12 அடி உயரம் எட்டு அங்குல விட்டம் உள்ள –வழிபடத் தோன்றாத -- நீர் ஊற்று சாதனம், சிவலிங்கம் ஆகிவிட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பொருத்தவரை மண்ணில் சிறிது துருத்திக் கொண்டிருப்பது எல்லாம் சிவலிங்கம், காவி வண்ணம் பூசப்பட்ட கல் பகவான் அனுமன் மற்றும் மசூதியில் உள்ள ஒவ்வொரு பொருளும் இந்து கடவுள் சிலை.

            1991ல் சிலர் வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்தனர். 16வது நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் உத்தரவுபடி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அங்கே ஞானவாபி மசூதி கட்டப்பட்டது என அவர்கள் மனுவில் குற்றம் சாட்டினர். மேலும் மசூதி வளாகத்தில் தினசரி வழிபாடு நடத்த மனுதாரர்களும் உள்ளூர் அர்ச்சகர்களும் அனுமதி கோரினர். 2019ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் அக்கோரிக்கையையும், மசூதியில் இந்தியத் தொல்பொருள் இலாக்கா ஆய்வு நடத்த வேண்டும் என்ற மனுவையும் நிராகரித்து விட்டது.

            சமீபத்தில் இந்து தேசத்தை அமைக்கும் நோக்கமுடைய விஸ்வ வேதிக சனாதன சங்க அமைப்பைச் சேர்ந்த ஐந்து பெண்கள் ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிங்கார கௌரி அம்மன் மற்றும் பிற விக்ரகங்களைத் தினசரி வழிபட அனுமதி கோரினர். அது தற்போதைய புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோலவே மும்முறை தலாக் (மணமுறிவு), சபரிமலையில் பெண்கள் வழிபடும் உரிமை முதலிய பிரச்சனைகளில் ஆர்எஸ்எஸ் தங்களின் துணை அமைப்புகள் மூலம் சட்ட வழக்குகளைத் தொடுத்தது.

            1991ம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், இந்தியா விடுதலை அடைந்த 1947 ஆகஸ்ட் 15 அன்று (வழிபாட்டுத் தலங்கள்) எவை எவை எப்படி இருந்தனவோ அவை அவைகளை மாற்றமின்றி அப்படியே பராமரிக்க வேண்டும் எனப் பணித்துள்ளது;  அதன்படி அந்த இடங்களின் மதத் தன்மை மாற்றப்படக் கூடாது; அவற்றைக் கையகப்படுத்துவது மற்றும் உரிமைகள், கிளர்ச்சிகள் அனுமதிக்கப்படக் கூடாது. இதன் மீதான எந்த உரிமை கோரல்கள் மற்றும் மனுக்கள் விசாரிக்கப்பட முடியாது. ஒரு மதம் சார்ந்த இடம் அதே மதத்தின் பிற பிரிவினர்களுக்கோ அன்றி பிற மதத்தவர் இடமாகவோ மாற்றப்படக் கூடாது. இந்தச் சட்ட விதிகளை மீறிபவர்களுக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதத் தொகை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றெல்லாம் அந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதைப் பாஜக கட்சி எதிர்த்தது.

           நீதிமன்றமும் அதிகாரிகளும் அயோத்தியாவில் சூழ்ச்சி செய்தனர். உச்சநீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்தது. 450 ஆண்டு காலப் பழமையான மசூதியை இழந்த முஸ்லீம்களுக்கு அனுதாபம் தெரிவித்தது. ஆனால் புராணத்தை நம்பி பாபர் மசூதி இடத்தை ராம் லல்லா (குழந்தை இராமர் சிலை) வசம் ஒப்படைத்தது! அத்தருணத்தில் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் மோகன் பகவத் (உரிமை கோரி) மற்ற மசூதிகளைத் தொட மாட்டோம் என உறுதிமொழி அளித்தார். மற்ற மசூதிகளை அரசு பாதுகாக்கும் என முஸ்லீம்கள் நம்பினர். இன்று நீதிமன்றங்கள் அரசியலமைப்புச் சட்டத்தைக் கைவிட்டன, ஆர்எஸ்எஸ் தங்கள் வாக்குறுதியை மீறியது. பொதுவில் மக்கள் நம்பிக்கை உடைந்தது.

            வாரணாசி நீதிமன்றமும் அலகாபாத் உயர் நீதிமன்றமும் நேரடியாகவும் தீவிரமாகவும் சட்டத்தை மீறின. உச்ச நீதிமன்றம் பார்வையாளராகப் பார்த்திருந்துவிட்டு, தாமதமாகத் தலையிட்டபோது 30 மாதங்களுக்கு முன்பு அயோத்தியா தீர்ப்பில் தாங்கள் நிறுவிய தங்கள் சொந்த கோட்பாடுகளை மீறியது. (இவ்வாறு) ஓட்டையாக்கப்பட்ட மதச்சார்பின்மையுடன் நாட்டில் தற்போது ஞானவாபி மசூதி நீடிப்பது ஆபத்துக்குள்ளாகியுள்ளது. வாரணாசி நீதிமன்றம் மசூதி வளாகத்தில் வீடியோ சர்வே நடத்தவும் அந்தப் பணியை மே 17க்குள் முடிக்கவும் உத்தரவிட்டது. முஸ்லீம்கள் அந்த உத்தரவை எதிர்த்துச் சர்வே நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியதை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. சர்வேயை நிறுத்த தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்பட்டது.

            மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்தி அளவிடும் சர்வே குழு கூடுதல் உற்சாகத்துடன், பொது விடுமுறை நாட்களிலும் தீவிரமாகப் பணியாற்றி, உரிய தேதிக்கு முன்பே பணியை முடித்துவிட்டது. நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் ஞானவாபி மசூதியின் தன்மையை மாற்றிவிட்டது. நீதிமன்றங்கள் எப்போதும் வினோதமானவை. இயல்புக்கு மாறாக இந்தியத் தலைமை நீதிபதி கர்னாடகாவின் ஹிஜாப் வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய முகாந்திரம் இல்லை என்றார். தற்போது அதே நீதிமன்றம் ஞானவாபி வழக்கை உடனடியாக விசாரித்தது. (“செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும்” என்ற திருக்குறள்படி) இரண்டு நிகழ்வுகளிலும் முஸ்லீம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. ஞானவாபி வழக்கை விரைவாக விசாரித்த நீதிமன்றங்களின் போக்கு அவற்றின் ஒரிஜினல் பாணி செயல்பாட்டிற்கு மாறானது. (வழக்கு என்றாலே ஆண்டுக் கணக்கில் தாமதமாகும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்தது. விசாரணைக்கு வராமலேயே மனிதர்கள் பலர் ஆண்டுக் கணக்கில் விசாரணைக் கைதிகளாகச் சிறையில் வாடுவதும் தெரிந்ததுதான்.) இதில் நீதியரசர் ஒருவர் இன்னும் ஒருபடி மேலே சென்று, ‘ஒரு இடத்தின் மதத் தன்மையை (ஆராய்ந்து) நிச்சயிப்பது வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் பிரிவு 3ஐ மீறிய செயலாகும் என்று கருத வேண்டிய தேவையில்லை’ என்று குறிப்பிட்டார். மன்னிக்க வேண்டும், நீதிமான்களே, நிச்சயமாக அந்த நடவடிக்கை அந்தச் சட்டப் பிரிவை மீறிய செயலே (Definitely it falls foul.) அது சந்தேகத்தையும் பதற்றத்தையும் மட்டுமல்லாமல் கிளர்ச்சிகளுக்கு இட்டுச் செல்வதையும் ஏற்படுத்துகிறது. நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் வழிபாட்டுத் தலச் சட்டத்தை மீறிவிட்டன.

            இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா, ஆர்எஸ்எஸ் அமைப்புக்காக ஆஜராகும் தனிநபர் வழக்கறிஞர்போல நடந்து கொண்டார். ஞானவாபி மசூதி விசாரணையை நிறுத்தக் கோரும் மனுவை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என அவர் வாதிட்டார். வீடியோ சர்வே அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய ஒன்று. ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான சர்வேயர் அஜய் மிஸ்ரா அதனைப் பொது வெளியில் கசியவிட்டார். இது ஆர்எஸ்எஸ் மற்றும் பிற சங் பரிவார் அமைப்புகளை ஆத்திரமூட்டித் தூண்டிவிட்டது. சர்வேயர் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டார். அதன் பிறகும் கடவுள் சிலைகளின் துண்டுகள், ஆலயத்தின் எச்சங்கள் மற்றும் ஞானவாபி மசூதி மதிற்சுவர்களில் இந்தியில் எழுதிய எழுத்துகள் இருப்பதாக அவர் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்தார். நீதிமன்றங்கள் அவரைக் கட்டுப்படுத்தவில்லை.

            தாஜ் மகாலின் 22 காலி அறைகளில் இந்து கடவுளர்களின் தடயங்கள் இருப்பதாக வதந்தி பரப்பப்பட்டது, அது தவறானது என்பதும் நிரூபிக்கப்பட்டது. அவுரங்க சீப் ஆட்சியில் கிருஷ்ணா, க்ஷேத்ர கேசவ்தேவ், மதுராவில் 13.37 ஏக்கர் புனித இடம் இடிக்கப்பட்டு ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டதாக ஆர்எஸ்எஸ் குற்றம் சாட்டியது. மசூதியை இடிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை 2020 செப்டம்பர் 30ல் மதுரா சிவில் நீதிமன்றம் நிராகரித்தது. தற்போது அந்த வழக்கை விசாரிக்கும்படி சிவில் நீதிமன்றத்தை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் பணித்துள்ளது.

            சமீபத்திய ஆதரவான நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் அரசியலமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளால் உற்சாகமடைந்த ‘ஆர்எஸ்எஸ் போற்றுதலுக்குரிய தலைகள்’ வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறுவதற்கு அல்பக் காரணங்களுக்காகக் காத்திருக்கின்றனர். அந்தச் சட்டத்தை அமலாக்குவது கடினமானதும் முடியாததுமாகும் என அவர்கள் வாதிடுகின்றனர். அவ்வாறு இருக்குமாயின், பிறகு சட்டத்தை உரிய வகையில் திருத்த வேண்டுமே தவிர புறக்கணித்துவிட முடியாது. மத்திய பிரதேசத்தில் (சட்ட விரோதமாக) புல்டோசர் கொண்டு கட்டடங்களை இடிக்கும் அணுகுமுறையைத் தொடங்கி வைத்த முரளிதர் ராவ், “இந்துக்களால் சிவலிங்கம் வழிபடப்படுவதை உலகின் எந்தச் சக்தியாலும்  தடுக்க முடியாது; விரைவாக முஸ்லீம்கள் இந்த உண்மை உணர்ந்து கொள்வது அவசியம்; கவுரவப் பிரச்சனையாகப் போராடக் கூடாது என்பது தனது தனிப்பட்ட கருத்து” என்று கூறினார். இது எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல, அதுவும் அதை எனது சொந்த எரிஎண்ணெய் என்று சொல்லிக் கொண்டே ஊற்றுவது.

            உபி துணை முதல்வர் மற்றும் பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மௌரியா, பாஜக எம்பி ஹர்நாத் சிங் யாதவ், சத்தீஸ்கர் மேளாள் உள்துறை அமைச்சர் பிரிஜ் மோகன் அகர்வால், உபி மேனாள் அமைச்சர் சித்தார்த் நாத் சிங் மற்றும் பிற ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள், “ஞானவாபி மக்கள் பிரச்சனை” என்கிறார்கள். இது ஆர்எஸ்எஸ் கும்பல் நடத்திய கலவரங்களை மூடி மறைப்பதற்காக. அவர்கள் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை ரத்து செய்ய விரும்புகிறார்கள். காங்கிரஸ் முஸ்லீம்களைத் தாஜா செய்வதற்காக ஏற்படுத்திய சட்டம் எனக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் இச்சட்டம் ஆர்எஸ்எஸ் தத்துவவாதி பிவி நரசிம்மராவால் அவர்களுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  இந்தச் சட்டம் நீதிமன்ற பரிசீலனைக்கு அனுமதிக்கவில்லை என்றும், அது அரசியலமைப்புச் சட்டப்படி இந்துகள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் ஜைனர்களுக்கு எதிரான பாரபட்சம் என்றும், அயோத்தியாவை ராமருக்குக் கொடுத்த பிறகு அதே கடவுளின் அவதாரமான  கிருஷ்ணருக்கு மதுராவை மறுப்பது அரசியல்சட்ட விரோதமென்றும் வித்தியாசமான வாதத்தை அவர்கள் முன்வைத்தனர்.

            2021 டிசம்பரில் ஹர்நாத் சிங் யாதவ் இந்தச் சட்டத்தை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் கோரினார். இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படியானதில்லை என எதிர்த்து வாதிடும் இரண்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. நீதிமன்றம் அரசின் பதில் மனுவைக் கோரியுள்ளது. அரசு இந்தச் சட்டத்தை ரத்து செய்து திரும்பப் பெறலாம் அல்லது உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்ய உத்தரவிடலாம்.

            நாட்டில் பல மசூதிகளை மூட வேண்டும் எனப் பல வழக்குகள் தாக்கலாகி உள்ளன. ‘நரேந்திர மோடி விச்சார் மஞ்ச்’ என்ற அமைப்பு தொடுத்த வழக்கில் 18ம் நூற்றாண்டில் மைசூர் மன்னர் திப்பு சூல்தான் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ஆஞ்சநேயர் ஆலயத்தை இடித்து மசூதி கட்டினார் என்று கூறி அம்மசூதியில் ஆய்வு நடத்தக் கோரியதுடன், வழிபாடு நடத்தவும் இந்துகளை அனுமதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. அவர்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்கவில்லை என்றால் அவர்கள் நடவடிக்கையில் குதிப்பார்கள் என மாண்டியா மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்.  “அயோத்தியா நம்முடையதானது. இப்போது காசி, மதுரா மற்றும் குதுப் மினார் முறை. 30ஆயிரம் கோயில்களைக் கட்ட தயாரிப்புகள் நடந்து வருகின்றன (வேறு எப்படி, மசூதிகளை இடித்து விட்டுத்தான்)” என்ற முழக்கங்களுடன் இந்துத்துவா அமைப்புகள் கலவரங்களை ஏற்படுத்துகின்றன. வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, டீசல், பெட்ரோல், எரிவாயு விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்புச் சரிவு, வேலைஇல்லாத திண்டாட்டம் போன்ற வாழ்வை அச்சுறுத்தும் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பி, எதிர்வரும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2024 பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அவர்கள் தீட்டிய அபாயகரமான திட்டம் இது.

            மதம், வழிபாட்டுத் தலங்கள், புராணம் அல்லது ஆதாரமற்ற கட்டுக்கதைகள் மீதான தகராறுகளை நீதிமன்றங்கள் அனுமதிக்கக் கூடாது. மதச்சார்புடைய ஆளும் வர்க்கம் நீதிமன்றங்களை நாடுகிறது என்றால் நீதிமன்றங்கள் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்கும் என அவர்கள் உறுதியுடன் நம்புகிறார்கள் என்று பொருள். நீதிமன்றங்களின் நேரம் விரையமாகி பணிச்சுமை கூடுகிறது. இந்தியாவெங்கும் சிதலமடைந்த கட்டடங்களும், மறுகட்டுமானங்களும் உள்ளன. நமது வரலாற்றில், ஒரு பிரதேசத்தை ஆக்கிமித்து வெற்றி பெற்ற அரசன் தனது விருப்பம் மற்றும் தனது மத நம்பிக்கைபடி பழைய சிலைகளை மாற்றிய, வழிபாட்டுத் தலங்களின் தன்மையை மாற்றிய நிகழ்வுகள் பலப்பல.

         ஆர்எஸ்எஸ் விளையாட்டுகள் அமல்படுத்தப்படுமானால் என்ன நிகழும்? பல கோவில்கள் மசூதிகளாக வேண்டும், சிவன் கோயில்கள் வைணவ ஆலயங்களாகும், புத்த விஹார் மடங்களாகும் அல்லது தலைகீழாகவும் நடக்கும். முதலில் பூரி, சபரிமலை, அமராவதி, திருமலை இடங்களில் உள்ள கோவில்களை பௌத்தர்களிடம் கையளிக்க வேண்டும். மதரீதியான செக்டேரியன் குழுப் போக்கு ஒரு எல்லையை அடைந்து விட்டால் பின்பு மக்களை மீண்டும் ஒன்றுபடுத்துவது மிகக் கடினமாகிவிடும். கடவுளின் பெயரால் வாலின் சேட்டைகள் நாயை ஆட்டுவிப்பது நிறுவனமயப்படுத்தலாகாது. (குட்டி குரைத்து நாயின் தலையில் விழலாகாது என்பார்கள். அது இப்போது உண்மையாகி உள்ளது. நபிகள் நாயகம் குறித்துப் பாஜக நிர்வாகிகள் நூபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் வெளியிட்டத் தவறான கருத்துகள் உலக அரங்கில் இந்தியாவுக்குத் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டன.)

       இந்தியா பல்வேறுபட்ட மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்களால் ஒன்றிணைக்கப்பட்ட நாடு. நமது அரசியலமைப்புச் சட்டம் அனைத்து

மதங்களுக்கும் வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்தி பாதுகாக்கிறது. வகுப்பு இணக்கத்தைச் சீர்குலைக்கும் சட்ட விரோத நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படும் எந்த மனுவையும் நிராகரித்து அனைத்துக் குடிமக்களின்  அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது நீதிமன்றங்களின் கடமை. நீதிமன்றங்கள் கடமையாற்றும் என நம்புவோம்!

--நன்றி: நியூஏஜ் (ஜூன் 5 –11)

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment