Saturday 2 January 2021

சபதத்தைப் புதுப்பிப்போம் -- புத்தாண்டு வாழ்த்து

 

நியூஏஜ் தலையங்கம் (ஜன.3 –9)

  நமது பயணத்தின் சபதத்தை 

மீண்டும் புதுப்பிப்போம்!

2021 புத்தாண்டு பிறந்துள்ளது, நியூஏஜ் (மற்றும் ஜனசக்தி) இதழ் தனது எல்லா வாசகர்கள், ஆதரவாளர்களுக்குப் புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது. சுதந்திரத்தின் கனவுகள் நிறைவேறும் புதிய இந்தியாவைப் படைப்பதற்கான நமது போராட்டம் தொடரும் என, ஒருமித்த உறுதிப்பாட்டோடு, பிரகடனப்படுத்துகிறோம். புது வருடத்தில் நுழையும் வேளை, மனித குல வரலாற்றில் கடந்த ஆண்டின் மிக வித்தியாசமான அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கலாம். அது கசப்பானது, நீண்ட காலம் நினைவை விட்டு அகலாது தொடரக்கூடியது என்றாலும்; அறிவியல் உதவியோடும், ஒன்றாய் இருக்கிறோம் என்ற உணர்வின் ஆதரவோடும் மனித இனம், ‘வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா’ என்று எப்போதும் எல்லா நெருக்கடிகளையும் வென்று செம்மாந்து செல்கிறது என்ற ஓர் உண்மையை அடிக்கோடிட்டு அழுத்தமாக மீண்டும் சுட்டிக் காட்டியுள்ளது.

            அனுபவங்கள் நல்ல பாடம், கோவிட் 19 கற்றுத் தந்த பாடங்களை மனதில் கொள்வோம். சிலர் அதனைக் ‘கடவுளின் செயல்’ எனக் கூற முற்பட்டாலும், பாவம் கடவுள் – செய்வதறியாது நிற்கும் அவர் அப்பாவி—இதிலெல்லாம் தலையிடுவதில்லை. பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்த ஆய்வு முடிவுகள்படி, அதன் பாதிப்புக்களின் ஒரு விளைவு பலவகையான கொள்ளை நோய் தொற்றுகள் பரவுமென முன்பே உலகத்தை எச்சரித்தன. அந்த எச்சரிக்கைகளில்தான், கோவிட் 19 தொற்று பரவலில் மறைந்திருக்கும் பொருளாதார, அரசியல் காரணங்கள் பொதிந்துள்ளன. முதலாளித்துவம் பின்பற்றும் பைத்தியக்காரத்தனமானச் சந்தைப் பொருளாதாரம் --அந்த விஞ்ஞான ஆய்வுகளின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல்-- தொடர்ந்து புவி வெப்பமயமாதலை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடுகிறது. அதன் காரணமாகவே கோவிட் 19 கரோனா வைரஸ் நுண் கிருமி பரவியது. அந்த ஆய்வுகள் உண்மையான பிறகாவது, பருவநிலை மாற்றம் என்ற மிகக் கடுமையான பிரச்சனையைத் தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற முக்கியமான எச்சரிக்கையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

            அந்த எச்சரிக்கைகள் உலகின் அனைத்து அரசியல் கட்சிகளையும், அரசுகளையும் சுற்றுச்சூழல் குறித்தத் தங்களின் கொள்கைகளைச் சமரசமற்ற வார்த்தைகளில் தெளிவாக வரையறுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. தொற்றை எதிர்கொண்டு எதிர்த்துப் போரிடுவதில் முதலாளித்துவச் சந்தைப் பொருளாதார அரசுகள் திணறி திவால் ஆனதை கோவிட் 19 நாட்கள் உலகறிய அம்பலப்படுத்தி விட்டது. உலகின் ஆகப் பெரிய பொருளாதார மற்றும் இராணுவ சக்தியான அமெரிக்க நாடு கரோனாவுக்கு முன்பு கையறுநிலையில் நிற்கிறது; கோவிட் பலி விகிதத்தில் உலகிலேயே அந்த நாடுதான் உச்சத்தில் இருக்கிறது. டொனால்டு டிரம்ப் நிர்வாகம் கோவிட் பெருந்தொற்றைக் கையாண்ட அணுகுமுறை, சந்தை அடிப்படைவாத இயல்பின் வித்தியாசமான முன்மாதிரி. இதற்கு மாறாக, கியூபா, வியட்நாம் மற்றும் சின்னஞ்சிறு நாடுகள் படைத்த முன்னுதாரணங்களின் வரைபடங்களை நேர்மறையாக மதிப்பிட வேண்டும்.

            கடுமையான நெருக்கடியை எதிர்த்துப் போரிட்ட  மனித உழைப்பின் மாண்பும், அதேநேரம் பல தருணங்களில் அவர்கள் சந்தித்த பாகுபாடுகளும் இந்தப் பரபரப்பான நாட்களில் கண்கூடாகக் கண்டோம். 2020ல் ஒரு முழக்கம் உலகில் எதிரொலித்து அதிரச் செய்தது: “கறுப்பர்களின் உயிரும் முக்கியம்”. அந்தப் பெருமுழக்கம், மற்றவர்களுக்கு மனித உரிமையைப் போதிக்கும் அமெரிக்க மண்ணிலிருந்தே புறப்பட்டது வினோதமே! பொலீவியா, சிலி போன்ற நாடுகளில் ஜனநாயக சக்திகள் அரசியல் வெற்றியை ஈட்டியிருப்பது லத்தீன் அமெரிக்க மற்றும் கரிபீயன் நாடுகளின் முன்பு புதிய வாய்ப்புகளை மீண்டும் திறந்து விட்டுள்ளது.

            2020 ஆண்டு இந்தியாவுக்கும் பலவகை உண்மைகளைக் காணக் கண்களைத் திறந்துள்ளது. அரசின் முன்னுரிமை, “மக்களைப் பாதுகாப்பது இல்லை” என நாட்டு மக்களுக்குக் கோவிட்-19 அம்பலப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத் தொடக்கத்தில் தொற்றால் தேசமே அச்சுறுத்தப்பட்டபோது மோடி அரசு அகமதாபாத்திலும், டெல்லியிலும் டொனால்டு டிரம்போடு குலவிக் கொண்டிருப்பதில் மும்முரமாய் இருந்தது. டிரம்ப்புக்குக் கொடுத்த அதே முக்கியத்துவத்தை மத்தியப் பிரதேச அரசைக் கவிழ்த்து அங்கே பாஜக ஆட்சியை அரியணையில் ஏற்றவும் தரப்பட்டது. அந்தச் சதித் திட்டத்தை முடித்த பிறகே கோவிட்  தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கலாமா என மோடி அரசு முன்வந்தது. எப்படிப்பட்ட நடிவடிக்கை, அதிரடித் தாக்குதல் போல நான்கு மணிநேர முன்னறிவிப்புச் செய்து ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.

            புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் போன்ற இந்திய நாட்டு ஏழைகளின் அவலமான வாழ்வியல் நிலைமைகளை அந்த நாட்கள் உலகத்திற்கு வெளிச்சமிட்டது. அவர்களின் மலைபோன்ற துன்ப துயரங்களைப் பார்க்க, அரசு தாமதமாக அறிவித்த பொருளாதார உதவி ஊக்குவிப்புத் தொகுப்புகள் ஒன்றுமில்லாத வெற்றுத் திட்டங்களே. அரசு முன்வந்து வழங்கிய ஊக்குவிப்புத் தொகுப்புகள் உண்மையில் ஏழைகளுக்கானவை அல்ல; அவை அரசின் கூட்டாளிகளான பணக்காரர்களுக்கானது. தேசப் பொருளாதாரத்தின் கருவறையை அன்னிய நேரடி முதலீடுகளுக்குத் திறந்து விடுவதற்கான நல்ல வாய்ப்பாக ஊரடங்கு கட்டுப்பாட்டை அரசு கருதுகிறது. அன்னிய முதலீடுகளின் காலடியில் சேவகம் செய்து கொண்டே, உதடுகளில் ஆத்மநிர்பார் பாரத் (தற்சார்பு இந்தியா), மேக் இன் இன்டியா, உள்நாட்டுப் பொருள்களையே பயன்படுத்துங்கள் என்றேல்லாம் சுதேசி மந்திரம் உச்சரித்து வேஷமிடுகிறது. அவர்களைப் பொறுத்தவரை மண் முதல் விண் வரை எவையெல்லாம் இந்தியாவின் உடமைகளோ அவற்றை எல்லாம்  விற்றுவிடுவது – இந்தியாவையே விற்றுவிடுவார்களோ என அஞ்ச வேண்டியுள்ளது. 2020 ஆண்டு, பாஜகவின் ‘ஸப் கா சாத்’ முழக்கத்தின் உண்மையான அர்த்தம் அதற்கு நேர் எதிரானது என்பதை இந்திய மக்களை உணரச் செய்துள்ளது.

            தொழிலாளர்கள் உரிமைகள் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டன, விவாதிக்க வேண்டிய பாராளுமன்றம் வெறும் பார்வையாளர் மாடமாக நடத்தப்படுகிறது. எஃப்டிஐ-யால் வழிநடத்தப்படும் ஆட்சியாளர்களின் ஐந்து ட்டிரிலியன் டாலர் பொருளாதாரக் கனவே இத்தகைய பாதகமான சீர்திருத்தங்களின் உந்து சக்தி.  இதே கொள்கைதான் மிகப் பிற்போக்கான வேளாண் மசோதாக்களையும் திணிக்கத் தூண்டியது. விவசாயத்தைக் கார்ப்பரேட் மயமாக்குவதன் மூலம் வேளாண் வர்த்தகத்தை வளர்ப்பதே அரசின் உண்மையான நோக்கம். இதைப் புரிந்து கொண்ட காரணத்தால்தான் சுதந்திர தேசத்தின் மிகப் பெரிய போராட்டம் வெடித்துக் கிளர்ந்துள்ளது. எண்ணற்ற விவசாய அமைப்புகள் ஒன்று திரண்டு இந்திய விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான வீரம் செறிந்த போராட்டத்தை நடத்திட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (கிசான் சங்கர்ஷ் கோஆர்டினேஷன் கமிட்டி) அமைத்துள்ளனர் – அவர்களின் முக்கியமான நோக்கம் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது. இந்த எதிர்ப்பு இயக்கம் பஞ்சாபில் சிறு பொறியாகத் தொடங்கியது, வெந்து தணிந்தது காடு என்ற வகையில் தேசம் தழுவிய மிகப் பெரிய இயக்கமாகக் கொழுந்து விட்டு பரவியுள்ளது. போராடும் விவசாயிகளைப் பேச்சுவார்த்தை நடத்திட அழைக்கும் கட்டாயத்திற்கு ஆளான அரசு, மின்சாரத் திருத்த மசோதாவை நிறுத்தி வைக்கவும் முன்வந்துள்ளது. ஆனால் விவசாயிகள் தங்கள் முக்கிய கோரிக்கையில் உறுதியாக உள்ளனர். அடுத்து நடக்கும் பேச்சுவார்த்தையின் முடிவு யாதாயினும், விவசாயிகளின் போராட்டம் நாட்டின் சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைச் செதுக்கியுள்ளது. 2020ம் ஆண்டின் இறுதி நாட்கள் கேரளாவில் இடதுசாரிகள் வெற்றி அடைந்ததையும், ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகச் சக்திகள் வெற்றி பெற்றதையும் கண்டு (மாற்றத்திற்கான) நம்பிக்கை துளிர்க்கிறது.

            புத்தாண்டு விடியும் தருணத்தில், மக்களின் போராட்டத்திற்கு மேலும் வலுவூட்ட நம்மால் சாத்தியமான அனைத்தையும் நிச்சயம் செயல்படுத்துவோம் என்ற நமது உறுதியேற்பைப் பிரகடப்படுத்துவோம். எண்ணியதெல்லாம் உயர்வெண்ணி, பெரிதினும் பெரிது கேட்கும் ஆகப் பெரும் இலட்சியங்களுக்காக உழைக்கும் நமது இந்த இதழ், நியூஏஜ் (மற்றும் ஜனசக்தி) சார்பாக, மீண்டும் நமது பற்றுறுதியைப் பாரறிய முழங்குகிறோம். மதச்சார்பின்மை, ஜனநாயகம், தேசிய இறையாண்மை மற்றும் சோஷலிச இலட்சியங்களுக்கு எதிரான சவால்கள் தீவிரமடைந்துள்ளன; எனவே அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாக்கும் போராட்டங்களை முன்னெடுப்பதே இன்றைய நமது மிக முக்கியமான முன்னுரிமையாகும். இதுதான் நாம் கனவு கண்ட புதிய பாரதத்தை நனவாக்குவதற்கான சரித்திரப் போராட்டம், தேச பக்திப் போர். 

            இந்தப் போரின் வெற்றிக்காக எந்தவொரு சிறு முயற்சியையும் கைவிடாது, பொதுவாக இடதுசாரிகளும், குறிப்பாகக் கம்யூனிஸ்ட் கட்சியும், செயல்படுத்த வேண்டும். இன்றைக்கு நிலவும் எதார்த்த புறநிலைமை, கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலும் கொள்கைகளும் சரியானவை என்பதை நிரூபிக்கிறது. ஆனால் அகநிலையிலிருந்து பரிசீலித்து நோக்கும்போது இன்னும் நமது (இலக்குகளை எட்டுவதற்கான) பயண தூரம் அதிகம் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறோம். மாற்று வளர்ச்சிப் பாதையைக் கட்டியெழுப்ப, கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, இந்த நீண்ட பயணமும் போராட்டத்தின் ஒரு பகுதியே. இன்று இந்தத் தருணத்தின் தேவை அனைத்து மதசார்பற்ற, ஜனநாயக மற்றும் இடதுசாரி சக்திகளை உள்ளடக்கிய எதிர்கட்சிகளின் இணைந்த பரந்துபட்ட மேடை. நமது கடமைகளை நிறைவேற்றி முடிக்கும் ஆண்டாக 2021ம் ஆண்டை மாற்றுவோம். இந்தத் திசைவழியில் சாத்தியமான அனைத்தையும் நிச்சயம் உறுதியுடன் செய்வோம் என்ற நமது உறுதிமொழியை மீண்டும் புதுப்பித்துப் பிரகடனம் செய்வோம்!

            இன்குலாப் ஜிந்தாபாத்!

--தமிழில் : நீலகண்டன், கடலூர்

No comments:

Post a Comment