Wednesday 30 December 2020

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 23 இராவி நாராயண் ரெட்டி

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -23

                               

                                            

        இராவி நாராயண் ரெட்டி:

           தெலுங்கானா 

ஆயுதப் போராட்டத்தின் கதாநாயகன்

--அனில் ரஜீம்வாலே

(நியூ ஏஜ்–நவ.21 --27, 2020)

            தெலுங்கானா ஆயதப் போராட்டத்தின் (1946—50) புகழ்வாய்ந்த தலைவர் இராவி நாராயண் ரெட்டி (ஆர்என்ஆர்) 1908ம் ஆண்டு ஜூன் 5ம் நாள், ஆந்திரப் பிரதேசத்தின் ராமகிரி மண்டல போலிபள்ளி கிராமப் பஞ்சாயத்தின் புவனகிரி என்ற இடத்தில் (தற்போது தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது) பிறந்தார். அவரது கிராமம் சர்ஃப்-இ-காஸ் (நிஜாமின் தனிப்பட்ட சொந்த சொத்தான) நிலம் அமைந்த அட்ராஃப் பால்டா (Atraf Balda) மாவட்டத்தில் அமைந்திருந்தது. அது ஹைதராபாத் நிஜாமின் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகும்.

            அவர் விடுதலை பெற்ற இந்தியாவின் 1952 முதலாவது பொதுத் தேர்தலின் கதாநாயகரும் ஆவார்.

            அவருடைய பெயரைத் தற்போதும் பலர் ‘இரவி’ என்று தவறாகவே எழுதுகிறார்கள், அது ராவி ஆற்றின் பெயராக அவருக்கு வைக்கப்பட்டதால் அவர், ‘இராவி’ நாராயண் ரெட்டி. சதார்காட் உயர்நிலைப் பள்ளியில் படித்த பின் ஹைதராபாத் நிஜாம் கல்லூரியில் சேர்ந்து 1927ல் மெட்ரிக் படிப்பை நிறைவு செய்தார். அப்போது மாநிலம் முழுமையிலுமாக மொத்தம் வெறும் 15 உயர்நிலைப் பள்ளிகளே இருந்தன. இராவி பணக்கார நிலப்பிரபுத்துவக் குடும்பத்திலிருந்து வந்தாலும் சந்தர்ப்பம் வரும் ஒவ்வொரு தருணத்திலும் அவர் எதிர்த்துக் கிளர்ச்சி செய்யத் தவறியதில்லை. அவர் நல்ல விளையாட்டு வீரரும் கூட, அகில இந்திய ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார். அப்போது முதுகில் அடிபட்ட காயத்தின் பாதிப்பு, வாழ்நாள் எல்லாம் அவருக்குத் தொடர்ந்தது.

காந்திய இயக்கத்தில் இணைதல்

            காந்திஜியின் அறைகூவலை ஏற்று இன்டர் மீடியட் படிப்பைப் புறக்கணித்து பாதியிலேயே கைவிட்டு காந்தியின் இயக்கத்தில் சேர்ந்தார். காந்திய நூல்களைப் படிக்கத் தொடங்கி ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்றார். சுமார் 100 இளைஞர்கள் டாக்டர் செல்லிகனி இராமாராவ் தலைமையில் மாநிலத்தை விட்டு வெளியேறி காக்கி நாடாவில் சத்தியாகிரக முகாம் அமைத்தபோது இராவியும் பத்தம் யெல்லா ரெட்டியும் அதில் சேர்ந்தனர். அங்கிருந்து திரும்பியதும் தனது கிராமத்தில் இராவி ஒரு நூற்பு மையத்தை அமைத்தார். 

            அவர் நேரு எழுதிய புத்தகங்களையும் ‘மாஸ்கோ உரையாடல்கள்’ போன்ற சோஷலிச இலக்கியங்களையும் படித்தார். காங்கிரஸ் கட்சியின் ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட்’  இதழை அவர் தவறாது படித்தார்.

அரிஜன சேவா சங்கத்தில்

            ஏரவாடா சிறையில் இருந்த காந்திஜி டாக்டர் அம்பேத்காருடன் பூனா உடன்பாடு கண்டு, சிறையிலிருந்து விடுதலையான பிறகு ஹரிஜன் சேவா சங்கத்தைத் தொடங்கினார். வார்தா ஆசிரமத்தில் காந்தியிடம் தனது அனைத்து நகைகளையும் வழங்கிய இராவி அரிசன சேவா சங்கத்தின் ஹைதராபாத் கிளைக்குச் செயலாளர் ஆனார். அரிசன முன்னேற்றத்திற்காக அந்தச் சங்கம் எண்ணற்றப் பெரும் சேவைகளை மேற்கொண்டது; அனைத்துச் சாதியினரோடு சமமாக அமர்ந்து உண்ணும் சமபந்தி போஜனம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், கற்பித்தல், விடுதிகளைக் கட்டுதல், பள்ளிகளை நடத்துதல் எனப் பல தொண்டுகள். சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்ள டெல்லி செல்ல வேண்டியிருந்த இராவி நாராயண் காந்திஜியின் சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றார். ஹைதராபாத்தில் மஜ்லீஸ்கள் மற்றும் அன்ஜும்-இ-தப்லீக்கள் பரப்பிய மேலாதிக்க முஸ்லீம் மதவாதத்தை அரிசன சேவா சங்கம் தீவிரமாக எதிர்த்தது மட்டுமல்ல, இந்து மதவாதப் பிரச்சாரத்தையும் எதிர்த்தது. மதவெறியர்கள் நடத்திய கட்டாய மதமாற்றத்தை எதிர்த்தும் போராடியது.

ஆந்திர மகாசபா

            தெலுங்கு மொழியை அங்கீகரிப்பதற்கான ஓர் இயக்கம் 1920களில் மாநிலத்தில் வேகம் கொண்டது.  பல்வேறு தெலுங்கு அமைப்புகள் ஒன்று கூடி 1924ல் ஆந்திரா ஜன்சங்கம் (ஆந்திரா மக்கள் அசோசியேஷன்) அமைப்பை ஏற்படுத்தினர். அதில் வணிகர்களும் கடைக்காரர்களும் மிக முக்கியமான பங்காற்றினர். அப்போது மாணவராக இருந்த இராவி நாராயண் வணிகர்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

            ஆந்திர மகாசபாவின் முதல் மாநாடு 1930ல் ‘ஜோஷிபேட்’டில் நடைபெற்றது. இராவி, இராமச்சந்திர ரெட்டி மற்றும் 13 பேருடன் மாநாட்டிற்கு அவ்வளவு தொலைவும் சைக்கிளிலேயே சென்றனர். தன்னார்வப் படை குழுவுக்கு இராவி தலைவராகச் செயல்பட்டார்.

            இராவி தன் மாணவ நண்பர்களுடன் இம்முறை 74 மைல்கள் (!) சைக்கிள் மிதித்துச் சென்று மகாசபாவின் இரண்டாவது மாநாடு நடந்த தேவர்கொண்டா என்ற இடத்திற்குச் சென்றனர். தெலுங்கு மொழிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

            மூன்றாவது மாநாடு கம்மத்தில் நடந்தபோது இராவி நாராயண், நண்பர்கள் முயற்சியால் மராத்தி, கன்னடம், உருது முதலிய மற்ற மொழிகளும் பயன்படுத்தப்பட்டன. 1937ல் நிஜாமாபாத்தில் நடைபெற்ற மாநாட்டில் இராவி செயலாளர்களில் ஒருவராகத் தேர்வானார். 1940 மாநாட்டில் அமைப்பு நிலை சீர்திருத்தத்திற்கான முன்மொழிவுகளை அவர் அளித்தார்.

            1941 ஹூசூர்நகர் சில்லுகூட் என்ற இடத்தில் நடந்த மகாசபாவின் 8வது மாநாட்டில் ஆர்என்ஆர் தலைமை தாங்கினார். அப்போது வலதுசாரி இடதுசாரி என்ற பிளவு கூர்மையடைந்தது. கம்யூனிஸ்ட்கள் மிகவும் பலம் பொருந்திய சக்தியானார்கள். விவசாயிகள் இயக்கமும் வேகம் பிடித்துத் தீவிரமடைந்தது. சூர்யாபேட், ஜன்ஹூன் மற்றும் பிற இடங்களிலும் விவசாயிகளின் பெரும் எழுச்சி மூண்டது. 11வது மாநாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்ள, 12வது மாநாட்டில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். அந்த மாநாடும் இராவி நாராயண் தலைமையேற்க நடந்தது. பத்தம் யெல்லா ரெட்டி அமைப்பின் தலைவராகவும் ஆர்என்ஆர் மகாசபாவின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

            இதன் மத்தியில் மகாசபாவிலிருந்து வலதுசாரி பிரிவினர் வெளியேறினர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைதல்

            நில உடைமைக்கு 20 ஏக்கர் உச்சவரம்பு என அறிவித்தது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இராவி நாராயண் தனக்கு 20 ஏக்கர் மட்டும் வைத்துக் கொண்டு 500 ஏக்கர் நிலங்களைக் கொடுத்து விட்டார். காந்திஜி செகந்திராபாத் (இரட்டை நகரங்கள் என அறியப்படுவது, 3வது நிஜாம் சிகந்தர் ஜா பெயரில் அமைந்த நகர்) வழியாகச் சென்றபோது அவரிடம் இராவி 50 ‘தோலா’ எடையுள்ள தங்கத்தை வழங்கினார்.  

            1939 இறுதியில் இராவி சிபிஐ கட்சியில் சேர்ந்தார். ஆந்திர மகாசபாவிலும், காங்கிரசிலும் இருந்த கம்யூனிஸ்ட் குழுக்களை ஒன்றிணைப்பதில் அவர் முக்கிய பங்காற்றினார். ஹைதராபாத் காமரேடுகளின் அசோசியேஷனிலும் அவர் மிகத் தீவிரமாகச் செயல்பட்டார். மாகாணத்திலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கம்யூனிஸ்ட் குழுக்கள் செயல்பட்டு வந்தன. அவை 1939ல் ஒன்றிணைந்து நிஜாம் மாநிலக் கம்யூனிஸ்ட் கமிட்டி அமைக்கப்பட்டது. சி இராஜேஸ்வர ராவ் சில அரசியல் வகுப்புகள் அங்கே எடுத்துள்ளார்.

           

போன்கீர், சூர்யாபேட், ராமண்ணாபேட், நலகொண்டா, ஹூஸுர்நகர் முதலிய இடங்களில் விவசாயிகளின் எழுச்சி சக்திமிக்கதாகத் திரண்டது. 1946 அக்டோபரில் (சூர்யாபேட் மாவட்ட) பாலிமுல்லா கிராமத்தில் ஆயுதப் போராட்டம் நடந்தது.  பதா சூர்யாபேட்டிலும் அது தொடர்ந்தது. மக்கள் கவண் வில்கள், கற்கள், தடிகள் மற்றும் இதர பிற முரட்டுத்தனமான வழிகளில்தான் தொடக்கத்தில் அந்தப் போராட்டத்தைத் துவங்கினர்.

            இராவி நாராயண் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளைத் திரட்டினார். பிறகு அவர் பம்பாய் சென்று விவர அறிக்கையைச் சிபிஐ கட்சி தலைமையிடம் தெரிவித்தார். ஆட்சியில் இருந்த நிஜாம் வரலாற்றில் இழுக்குடைய அவரது ஆயுதமேந்திய ரசாக்கர் குண்டர்களின் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டார்; அவர்கள் (வாராங்கல் மாவட்டத்திலுள்ள) அகுனூர்  கிராமம் (இங்கே 800 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலும் பல ஜைன கோவில்களும் உள்ளன), மச்சிரெட்டிபல்லி முதலான இடங்களில் வன்முறை அட்டூழியங்களை நிகழ்த்தினர். மோகன் குமாரமங்கலம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உரையாற்றும்போது இவற்றை விவரித்ததால் மக்கள் அனைவரும் உண்மைகளை அறிந்து கொண்டனர். கள நிலவரத்தை நேரில் சென்று திரட்டிவர காந்திஜி பத்மஜா நாயுடுவை அனுப்பினார். அவர் நிஜாமுடன் விவாதித்து அவருக்குக் காரண காரிய பகுத்தறிவு ஊட்டி உண்மைநிலையை உணரச் செய்ய முயன்றும் அதில் பலன் ஏற்படவில்லை.

            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிசி ஜோஷி ஆயுதப் போராட்டம் துவங்க அனுமதி அளித்தார். இராவி நாராயண் மற்றும் ஆந்திர மகாசபா அறைகூவல் விடுக்க, ஆயுதம் தாங்கிய ‘தலாம்கள்’ (தன்னார்வத் தொண்டர் அணிகள்) அமைக்கப்பட்டன. நிஜாம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியையும் ஆந்திர மகாசபாவையும் தடை செய்தார்; மக்கள் மத்தியில் மத வெறுப்புணர்வு, வேறுபாடுகளைத் தூண்டினார். நாடு விடுதலை அடையும் தருணம், அவர் ஹைதராபாத்தைச் சுதந்திர நாடாக அறிவிக்கச் சதி செய்தார்.

            1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மகாசபாவும் ஹைதராபாத் நகரில் மூவர்ணக் கொடியை ஏற்றி பல்வேறு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தன. ஆர்என்ஆர், பத்தம் யெல்லா ரெட்டி, சி இராஜேஸ்வரராவ், கேஎல் மகேந்திரா மற்றும் பிற தலைவர்கள் தலைமையேற்க, கம்யூனிஸ்ட் கட்சி தெலுங்கானா பிராந்தியத்தில் சுமார் 2500 கிராமங்களை விடுதலை செய்தது மட்டுமின்றி 10 லட்சம் ஏக்கர் நிலங்களை, ‘தலாம்கள்’ (தன்னார்வத் தொண்டர் அணிகள்) மூலம் நிலமற்றவர்களுக்குப் பிரித்தளித்தது.

‘போலீஸ் ஆக்க்ஷன்’ மற்றும் இந்திய இராணுவம் நுழைவு

            அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலை தருணங்களில் 1946ல் ஆயுதம் தாங்கிய போராட்டத்தைத் தொடுப்பது என்ற முடிவு மிகவும் சரியானது. அது நிஜாமிற்கு எதிரான, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான புகழ்மிக்கப் போராட்டம், மக்கள் ஏகோபித்து ஆதரவளித்தது.

            ஆனால் இரண்டு நிகழ்வுகளின் வளர்ச்சிப் போக்குகள் சூழ்நிலையை மாற்றி விட்டது. 1948ம் ஆண்டு செப்டம்பர் 13ம் நாள் இந்திய இராணுவம் ஹைதராபாத் நகருக்குள் நுழைந்து நிஜாமின் அமைச்சர்களைக் கைது செய்தது. நிஜாம் சரணடைந்தார், புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது. இந்திய இராணுவத்தின் செயல்பாடுகள் எப்போதுமே போற்றத்தக்கதாகச் சரியாக இருந்து விடுவதில்லை. இந்த நிகழ்வும் கூட ‘போலீஸ் ஆக்க்ஷன்’ (காவலர்கள் நடவடிக்கை) என்றே குறிப்பிடப்படுகிறது. மக்கள் இந்திய அரசின் நடவடிக்கையை ஆதரித்தனர். நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கான வழி திறந்து விடப்பட்டது.

            இரண்டாவது மாற்றம், கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பிசி ஜோஷி 1947 டிசம்பரில் BTரணதிவேயால் நீக்கப்பட்டது. இது, சிபிஐ கட்சியை ஏறத்தாழ அழிப்பதான, ‘பிடிஆர் லைன்’ வழி இடதுசாரி சாகசப் பாதைக்குத் திறப்பு விழா நடத்துவதாயிற்று. தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தை நேரு அரசுக்கு எதிராக இந்திய மக்கள் நடத்திய ஆயுதக் கிளர்ச்சியின் ஒரு பகுதி என ரணதிவே மதிப்பிட்டார். இதன் தர்க்க நீட்சியாக இந்தப் போராட்டம் இந்திய இராணுவத்திற்கு எதிரான ஒன்றாகவும் தொடர்ந்தது. விளைவு, அழிவு ஏற்படுத்தும் தற்கொலை முயற்சி என நிரூபணமாயிற்று. தெலுங்கானா போராட்டம் பிளவுபட்டு ஒரு பெரும் பகுதி விவசாயிகள் அதை விட்டு நீங்கினர். (அரசின்) சில சீர்திருத்தங்கள் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்கள் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டனர். மக்கள் ஆதரவை இழந்த காரணத்தால் (போராட்டத்தில் ஈடுபட்ட) கம்யூனிஸ்ட்கள் கிராமங்களை விட்டு காடுகளுக்கு மாறும் நிர்பந்தம் உண்டானது. இறுதியில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர், ஆயுதப் போராட்டத்தையும் விலக்கிக் கொள்ள நேர்ந்தது.

            இராவி நாராயண் ரெட்டி, கேஎல் மகேந்திரா, பத்தம் யெல்லா ரெட்டி, மக்தூம் மற்றும் பிறர் ஆயுதப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வற்புறுத்தினர். அதனைச் செய்ய கட்சித் தலைமை மிகவும் தாமதப்படுத்தி விட்டது. எனினும் ஆர்என்ஆர் அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்தார். இதன் விளைவாய் அவர் பிடிஆர் தலைமையின் சீற்றத்திற்கு ஆளானார். அவர் சீர்திருத்தவாதத்தை, பிற்போக்குத் திருத்தல் வாதத்தை மேற்கொள்வதாகக் குற்றம் சாட்டி துரோகியாவும்கூட சித்தரிக்கப்பட்டு, அட, பட்டியலில் வேறு என்னதான் சொல்லாது விட்டு வைத்தார்கள்! அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் அங்கிருந்து வெளியேறி பம்பாய்க்குச் செல்ல நேர்ந்தது. அங்கே அவர் டாங்கே முதலான தலைவர்களைச் சந்தித்தார். இரண்டு மாதங்கள் அங்கே தங்கியதன் மூலம் போலீசிலிருந்து தப்பினார்.  

            இதன் மத்தியில் பிடிஆர் தலைமை மாற்றப்பட்டு முதலில் சி இராஜேஸ்வர ராவ், பின்னர் அஜாய் கோஷ் பொதுச் செயலாளரானார். கட்சி விசாரணை கமிஷன் இராவி மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவித்தது. 1950 டிசம்பரில் கட்சியின் மத்தியக் குழு கடிதம் ஒன்று பின்வருமாறு தெரிவித்தது: “ஆந்திரப் பிரதேசக் கமிட்டியிலிருந்து நீக்கப்பட்ட இராவி நாராயண் ரெட்டி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கக் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது.”

            தலைமறைவு வாழ்விலிருந்து 1951ல் வெளிவந்த இராவி நாராயண் ஹைதராபாத்தில் வசித்தார். சிறிது காலம் கைதாகி சிறையில் இருந்த பிறகு டிசம்பர் 1951ல் விடுதலையானார். மாறியுள்ள புதிய சூழ்நிலை குறித்தான தனது கருத்துகளை ஓர் அறிக்கையாக அவர் சமர்ப்பித்து அதில் கட்சிப்  பாதையில் ஏற்படுத்த வேண்டிய மாறுதல்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

முதல் பொதுத் தேர்தல்களின் கதாநாயகன்

            1951 –52 முதல் பொதுத் தேர்தல்களில் போட்டியிடுவது என கட்சி முடிவெடுத்தது. அப்போதும் சிபிஐ கட்சி தடை செய்யப்பட்டு இருந்ததால் ஹைதராபாதில் கட்சி பிடிஎஃப் அல்லது மக்கள் ஜனநாயக முன்னணி என்ற பெயரில், ‘கை‘ சின்னத்தில் போட்டியிட்டது. டாக்டர் ஜெய்சூர்யா தலைவராக இருந்தார். நலகொண்டா பாராளுமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட இராவி நாராயண் –சிறையில் இருந்து கொண்டே—மனு தாக்கல் செய்தார். விடுதலையானதும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாயைப் போய்ச் சந்தித்தார். கட்சி முடிவு செய்தது, அவர் தான் போட்டியிடும் தொகுதியில் தனக்காகப் பிரச்சாரம் செய்யத் தேவையில்லை! அவரை வாராங்கல் மாவட்டப் பொறுப்பாளராக நியமித்தது. அவர் தனக்காகப் பிரச்சாரமே செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் அவருக்குப் பிரச்சாரம் செய்வதற்காக மக்கள் காடுகளிலிருந்தும்கூட வெளியே வந்தார்கள். நாடு முழுவதிலும் நடைபெற்ற தேர்தலில் அவரே அதிகபட்ச வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கையில் பண்டித ஜவகர்லால் நேருவே அவருக்கு அடுத்து இரண்டாவதாக வந்தார். மற்றவர்களைப் போலவே கம்யூனிஸ்ட்களுக்கும் இது சற்றும் எதிர்பாராத ஒன்று; அது பாராளுமன்ற ஜனநாயகம் குறித்து அவர்களை மறுசிந்தனை செய்ய வற்புறுத்தியது. ஆர்என்ஆர் பாராளுமன்ற மக்களவையில் முதல் உறுப்பினராக நுழைந்தார்.

            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாராங்கல்லில் 12 இடங்களையும் நலகொண்டாவில் 14 இடங்களையும் மற்றும் தெலுங்கானா பகுதியில் 40 இடங்களையும் வென்று மிகப் பெரிய சாதனையைச் செய்தது.

ஆர்என்ஆரும் சர்வோதயாவும்

            ஆர்என்ஆரின் பெரிய மைத்துனர் (மனைவியின் மூத்த சகோதரர்) வி இராமச்சந்திர ரெட்டி தானமாக வழங்கிய 100 ஏக்கர்களைக் கொண்டு போன்கீர் தாலுக்காவின் பொச்சாம்பல்லி கிராமத்தில் வினோபா பாவேயின் பூதான இயக்கம் தொடங்கியது. ஆர்என்ஆர் பூதான இயக்கத்திற்கு எதிரி அல்ல; அவரைப் பொறுத்தவரை, யாதொரு இயக்கத்தின் மூலமும் ஏழைகளுக்கு உதவிகள் செய்யப்படும் என்றால் அது வரவேற்கத் தக்கதே என்று கூறினார். ஆனால் அதன் தத்துவத்தைதான் அவர் எதிர்த்தார். (பறித்தவர்களிடமிருந்து பறித்தால் அது பறித்தலாகாது என்பது மார்க்ஸியம். சமூகத்திலிருந்து பறித்த செல்வங்களிலிருந்து கொஞ்சம் தானம் செய்பவர்களைத் தானப் பிரபு என எப்படிக் கொண்டாட முடியும்?--மொழிபெயர்ப்பாளர்). பூதான இயக்கமே தெலுங்கானா போராட்டத்தின் ஒரு விளைவு என்று அவர் கருதினார்.

            1984ல் தண்ணீருக்காக ஓர் இயக்கம் ’ஜல சாதனா சமிதி’ என்பதன் கீழ் நடத்தினார். பின்னர் நலகொண்டா பாராளுமன்றத் தேர்தல்களில் இதுவரை அச்சடிக்காத மிக நீண்ட வாக்குச் சீட்டு, 485 வேட்பாளர்களின் பெயர்களை அச்சிட்டு, வழங்க வேண்டி வந்தது.

பத்ம விபூஷண் விருது

            இந்திய அரசால் வழங்கப்படும் (முதல் உயரிய விருதான பாரத் ரத்னாவுக்கு அடுத்து)  இரண்டாவது புகழார்ந்த உயரிய குடியியல் விருதான பத்ம விபூஷண் விருது இராவி நாராயண் ரெட்டிக்கு வழங்கப்பட்டது.

தெலுங்கானா போராட்டத்தின் கதாநாயகன் இராவி நாராயண் ரெட்டி 1991 செப்டம்பர் 7ம் நாள் மறைந்தார்.

இன்றைய விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்திலும் அவர் தியாகத்தின் வீச்சு வீசிக் கொண்டிருக்கிறது என்பதை வானுயர உயர்த்தப்படும் செங்கொடிகளில் காண முடிகிறது.

 --தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment