Tuesday 5 January 2021

தோழர் ஓம் பிரகாஷ் குப்தா 8--ம் ஆண்டு நினைவஞ்சலி ஜனவரி 6

 


தோழர் குப்தா

ஒன்றுபடுத்தல், இணைந்து போராடல், தீர்வு காணல்

இவற்றின் அடையாளச் சின்னம், உயர்தனி நாயகன்

தோழர் குப்தா ---தொலைத்தொடர்பு தொழிற்சங்க இயக்க வரலாற்றின் தந்தை–--அவரது நெடிதுயர் வடிவத்தை உருவகப்படுத்துவதின் வாயிலாக ‘தொழிற்சங்க வாழ்வின் குறைவிலா பண்பின் சகாப்தம்  ஒன்றை நம் வாழ்வின் கண் எதிரே தரிசிக்கும் பேறு பெற்றோம் நாம்.

       இருபத்திநான்கே வயதில், தலைநிமிர்ந்து, தொழிற்சங்க இயக்கப் பெருவாழ்வில் அடியெடுத்து வைத்தவர் அவர். தபால் தந்தித் தொழிலாளர்களைத் திரட்டுவது ஒன்றிணைப்பது என்ற புனிதப் பணிக்காகத் தோழர் டாங்கே மற்றும் தோழர் தாதா கோஷ் அவர்களின் சார்பில் அனுப்பப்பட்ட வாராது வந்த மாமணி.

       திரு ராம்லால் திருமதி சோனா தேவி இணையருக்கு ஏப்ரல் 8-ம் தேதி 1922ம் ஆண்டு இரண்டு சகோதரிகள் மற்றும் ஐந்து சகோதரர்களுடன் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் ஓம் பிரகாஷ் குப்தா. தொடக்கக் கல்வியை (Karnal) கர்னலிலும், உயர்நிலைக் கல்வியை முல்தான் மற்றும் லாகூரில் பெற்றார். லாகூரில் பயிலும் போது திரு ஐ.கே. குஜரால் (நமது முன்னாள் பிரதமர்) குப்தாவின் சீனியர். 1942 ஆண்டு காலத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத் தொடர்பில் இருந்தார் என்றும் தலைமறைவு குழுக்களை அமைத்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு இராணுவத் தலைமையக அரசுப் பணியிலிருந்து வேலைநீக்கம் செய்யப்பட்டார்.

       அவரது வாழ்வின் பிற்கால சாதனையோடு வேலைநீக்கத்தை இணைத்துப் பார்த்தால் ஒரு அபூர்வமான வரலாற்று முரண்நகை ஒன்றை அவதானிக்கலாம். ஓய்வூதியப்பலன் ஏதுமின்றி பிரிட்டீஷ் அரசாங்கத்தால் வேலைநீக்கம் செய்யப்பட்ட குப்தாதான் சுதந்திர இந்திய அரசாங்கத்தோடு வாதாடிப் போராடி அரசுப் பென்ஷனை நமக்கு பாதுகாத்து கையளித்தார், அதுமட்டுமா வேலைநீக்கம் செய்யப்பட்ட BSNL தொழிலாளிக்கும் அரசுப் பென்ஷனைப் பெற வகைசெய்தார்.

       அரசியல் கைதிகளுக்காக ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்ட சிறப்புப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுமாறு தோழர் குப்தாவை அழைத்தவர் வேறுயாருமல்ல, தோழர் சுர்ஜீத்தான். (பின்னாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் தோழர் சுர்ஜீத்).  அந்தப் பள்ளி நடைபெற பலரிடமும் நன்கொடை பெற்று நிதி திரட்டித் தந்தார் குப்தா.  தனது முதுகலைப் படிப்பைத் தொடர மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார்.

       தற்போது பாக்கிஸ்தானுடன் இணைந்த பகுதியிலிருந்து வந்தவரான தோழியர் ஜனக், நமது சங்கத்தின் டெல்லி கிளைச் செயலாளராக இருந்தார். 1949 வேலைநிறுத்தத்தில் குப்தா 14 மாத காலம் சிறையிலிருந்தபோது தோழியர் ஜனக் அவர்களும் கைது செய்யப்பட்டார். அவர்களுக்கிடையே அரும்பிய நட்பு திருமணத்தில் மலர்ந்தது. ஆனால் துவக்கத்தில் ஜனக்கின் தாயார் அவர்கள் திருமணத்தை எதிர்த்தார். அதற்குக் காரணம் தோழர் குப்தா தொழில்முறை தொழிற்சங்வாதியாக இருந்தார் என்பதே.

       தொழிற்சங்க இயக்கத்தில் தோழர் குப்தா முதலில் துவக்கியது UPTW இணைப்பு முன்மொழிவுத் தீர்மானம்தான்.  இணைப்பு என்பது அவரைப் பொறுத்தவரை எப்போதும் ஒரு சாதாரண இயந்திரகதியான யுக்தியாக இருந்ததில்லை.  முடியாதவொன்றில்லை, எதையும் சாதித்து முடிக்க முடியும் என்ற உயரிய தொலைநோக்குப் பார்வை கொண்டவர். ஒற்றுமை என்பதை ஒரு ஆத்மசுத்தியோடு உறுதியான லட்சியமாகக் கொண்டு அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்.

       மார்க்ஸிய ஞானம், காந்திய சிந்தனைத் தெளிவு நன்கு உடையவர் என்றபோதும், தனது அறிவுப் பெருமிதத்தை வெளிக்காட்டாதவர் மட்டுமல்ல, அப்படியொருத் தோற்றமளிப்பதையும் தவிர்க்க விரும்புபவர் தோழர் குப்தா. ஆனால் அன்றாடத் தொழிற்சங்கப் பிரச்சனைகளில் மார்க்ஸிய அறிவை காந்திய வழிமுறையில் பயன்படுத்த முயல்வார்.  தொழிலாளர்களை இயக்கங்களில் பெருமளவில் திரட்டிடவும், பிரச்சனைத் தீர்வில் அரசுகளை வழிக்குக் கொண்டு வருவதிலும் அவர் அதிகம் பயன்படுத்திய புகழ்மிக்க ஆயுதங்கள் உண்ணாவிரதமும் ஒத்துழையாமையுமே!

       அடிமட்ட மக்களுக்காகப் போராடி அவர்கள் வாழ்வை உயர்த்தி மேல்நிலைப்படுத்துவது என்பதைக் கொள்கையாகக் கொண்டவர்.  அந்தக் கொள்கையில் விடாப்பிடியாக இருந்து வெற்றிபெற்ற தருணம்தான் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட காசுவல் கூலித் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தியது மட்டுமல்ல அவர்களை இலாக்காவின் படிநிலைகளில்  TM / TTA என உயரச் செய்ததுமாகும்.

       அவர் செயல்பாட்டின் அடிப்படை ஆதார சுருதி பாகுபாடு காட்டாதே என்ற உறுதிப்பாடே.  விடுமுறை நாட்கள், மருத்துவம் முதலிய சலுகைகள் மற்றும் வார ஓய்வுநாள் பிரச்சனைகளில் மூன்றாம் பிரிவு நான்காம் பிரிவு ஊழியர்களுக்கிடையே பாரபட்சம் நீக்கிச் சமநிலையைக் கொண்டு வந்தது.

       அவரது சொற்பொழிவு பாணி ஆடம்பரமற்றது, அலங்காரமான அடுக்குமொழிச் சொற்கள், குழப்பும், பயமுறுத்தும் டாம்பீக வெற்றுச் சொற்கள் ஏதுமில்லாத எளிமையான மக்கள் பேச்சு பாணி ஆகும்.  ஊழியர் நலன்களுக்குச் சம்பந்தமில்லாத எந்தச் சொற்களையும் அவரது நா உதிர்த்ததில்லை, விவாதித்ததில்லை.

       மாநாடு தொழிற்சங்கக் கூட்டங்களில் பேசும்போது குப்தா இரண்டு முரண்பட்ட எதிரும் புதிருமான மேற்கோள்களைக் கையாள்வார்.  ஒன்று மகாபாரதம், இன்னொன்று மாசேதுங்கின் சிகப்புப் புத்தகம்.

       NFPTE மற்றும் அதன் ஒன்பது சங்கங்களின் செயல்பாடுகளில் குப்தா கடைபிடித்தது தோழர் லெனின் அவர்களின் சுயநிர்ணய உரிமை கொள்கை.

       மார்ஸிய விஞ்ஞானம் உற்பத்தி சக்திகளின் மறுமலர்ச்சியை புத்தாக்கத்தைக் கூறும். அந்த மார்க்ஸிய ஞானமே குப்தா முன்வைத்த கேடர் சீரமைப்பின் அடிநாதம் —ஜீவ சுரம்.  பிரச்சனைத் தீர்வுகளில் அவர் மிகச் சிறந்த விவாத மேன்மைமிக்கவராகவும், விடாப்பிடியான போராளியாகவும் தொடர்ந்து திகழ்ந்தார்.

       இயக்கத்தின் அமைப்புக் கோட்பாடுகளில் அவர் கடைபிடித்தவை செவ்வியல் உதாரணமாகத் திகழக் கூடியவையும் மனிதநேயம் மிக்கதுமாகும்.  அது அப்படித்தான் இருக்க முடியும், ஏனெனில், செவ்வியல்கள் எல்லாம் அடிப்படையில் மனிதநேயம் மிக்கவைதாமே!

       அவர் நம் அனைவருக்கும் போதித்தார், கற்றுத் தந்தார்: பெரும்பான்மைக்குப் பெரும்பான்மை என்ற (அதிகார) போதை இருக்கலாகாது; அதே போழ்து, சிறுபான்மைக்கு நிராகரிக்கும் உரிமை இருக்க முடியாது  ஒத்த கருத்துள்ள சிலர் சேர்ந்து தமக்குள்ள உரிமையைப் பயன்படுத்துகிறோம் என்று, தலைமையைக் காட்டிக் கொடுக்க முனைந்தால் --– பிறகு, தலைமைக்கும் அமைப்பை, அமைப்பின் முடிவுகளைப் பாதுகாக்கும் உரிமை நிச்சயம் இருக்க முடியும் என உறுதியாக நம்பியவர் குப்தா.

       1982 டெலிகாம் இதழில் தோழர் குப்தா இப்படி எழுதினார்: ஒற்றுமையைக் கட்ட வேண்டுமென்றால், அப்போது சுயகட்டுப்பாடும், அமைதியும் காக்க வேண்டியதும் முக்கியம்.  முதலில் மற்றவர்களின் கருத்தை மதிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவரின் தடுமாற்றங்களை –-பலவீனங்களை-- வெல்வதற்கு அவருக்கு நாம் உதவ வேண்டுமே அன்றி, அந்தத் தடுமாற்றங்களை -– பலவீனங்களையே-- நாம் துஷ்பிரயோகம் செய்தால் ஒற்றுமையைக் கொண்டு வருவதென்பது மேலும் மேலும் சிரமமானதாகிவிடும்

            தன்னுடைய வாழ்நாளெல்லாம் NFTE அமைப்பை அனைத்துக் கருத்தோட்டங்களும் கொண்ட பரந்துபட்ட அமைப்பாகக் கட்டிக் காப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். NFTE  அமைப்பின் மீது அரசியல் சாயம் ஆகக் கூடுதலாகக் கவிந்து விடுவதைத் தவிர்ப்பதில் கவனமாக இருந்தார்.

       அவர் எப்போதும் அனைவரின் நலன் விரும்புவராகவும், அனைவரோடும் பகிர்பவராகவும், பண்பின் பான்மை மிக்கவராகவும் இருந்தார்.  டெல்லியில் குப்தா வீடு ஒன்று வாங்கிக் கொள்ள அவரது தந்தை அவருக்கு ஒரு தொகையைக் கொடுத்தார்…  ஆனால் அவரோ அந்தப் பணத்தில் உறுப்பினர்களின் பங்களிப்போடு நமது சங்கத்திற்கென ஒரு கட்டிடம் – தாதா கோஷ் பவன் – வாங்கினார். 

       தோழர்களோடு பழகுவதில் தோழர் குப்தாவுக்கெனத் தனித்துவமான ஒரு பாங்கு உண்டு. பழமையான தோழமைத் தருணங்களைப் பசுமையாகப் புத்தகத்தில் மூடி வைத்த மயிலிறகாய்ப் போற்றி நெகிழும் நெஞ்சினர் நம் குப்தா. தோழர்கள்  K.இராமமூர்த்தி, K.G. போஸ், மோனி போஸ் மற்றும் ஜெகன் இல்லங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வருகை தருவதைத் தவறவிட்டதில்லை.  குப்தா குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவை ஒரு நெகிழ்வான தருணத்தை அசை போட ஆயிரம் இருக்கும்.  அதில் ஒன்று,

       தோழர் ஜெகன் வேலைநீக்கம் செய்யப்பட்டபோது ஜெகனின் பொருளாதார சிரமங்களைச் சிறிதே குறைக்க தோழர் குப்தா அவருக்கு அனுப்பிய ஒரு பத்து ரூபாய் தாள் இன்றும் மதிப்பு மிக்கதாய் விளங்குகிறது.

       மறைந்தாலும் என்றும் நம்மோடு வாழும் தோழர் குப்தா நினைவைப் போற்றுவோம்!  புகழ் பாடுவோம் !

(முன்பு வெளியான தோழர் பட்டாபி எழுதிய

ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் -- நீலகண்டன்

வெளியீடு: கடலூர் மாவட்டச் சங்கம் )

No comments:

Post a Comment