Friday 15 January 2021

திருவள்ளுவர் தினம்

 


இன்று திருவள்ளுவர் தினம்

குறள் பற்றிய ஒரு சிந்தனை.

            புதன் கிழமை தோறும் மாலை 6.45 முதல் 7.45 வரை ‘காந்தி கல்வி நிலையம்’ நடத்தும் இணையவழி ‘புதன் வாசகர் வட்டம்’ அமர்வில் காந்தியைப் பற்றிய நூல்கள், காந்தியத் தத்துவத்தின்படி வாழ்ந்த பெருமக்கள் வாழ்வு குறித்த ஏதாவது ஒரு நூலை அறிமுகம் செய்து சிறப்புரையாளர் மட்டும் பேசுவார். சென்னையில் நேரடியாக நிகழ்ந்து வந்த நிகழ்ச்சி ஊரடங்கு காலத்தில் இணையவழியாகத் தொடர்கிறது. எனவே நேரலையாகவே எங்கிருந்தும் கேட்க முடிகிறது.

            சென்ற வாரம் நான் அறிந்த எழுத்தாளர், எங்கள் துறையை மட்டுமின்றி எங்கள் மாவட்டத்தையும் சேர்ந்த திரு பாவண்ணன் எழுதிய “எல்லாம் செயல்கூடும்” என்ற தலைப்பில் 15 காந்திய ஆளுமைகளின் கதைகளை விவரித்த நூலை அறிமுகம் செய்தனர். அந்நூலைச் ‘சந்தியா பதிப்பக’த்தின்முன்வெளியீட்டுத் திட்டத்தின்கீழ் பெற்றேன், அதைப் படித்துவிட்டு எனது துணைவியார் மிக விறுவிறுப்பாக உள்ளது என்று உடனடியாகப் படித்து முடித்துவிட்டார் என்பதாலும் அவ்வுரையைக் கேட்டேன். அந்தச் சொற்பொழிவை மிகச் சிறப்பாக செய்த சொற்பொழிவாளர் குறித்துக் காந்தி கல்வி நிலையப் பொறுப்பாளர் திரு சரவணன் சுப்பிரமணியன் எழுதிய குறிப்பை இப்பதிவின் இறுதியில் இணைத்துள்ளேன்.

            இந்தப் பதிவில் நான் எழுதப்போவது அன்றையச் சொற்பொழிவாளர் தனது ஒருமணிநேர உரையில் எடுத்தாண்ட திருக்குறள்களை மட்டுமே. அந்நூலின் 15 காந்திய ஆளுமைகளில் மானாமதுரை காந்தி எனப்படும் கோபிச்செட்டிப் பாளையம் லட்சுமண அய்யர், அரிஜன அய்யங்கார் மற்றும் வெளிநாட்டவர் கெய்த்தான் மூவரைப் பற்றி மட்டுமே பேசினாலும் வரிக்கு வரி பேச்சாளர் மேற்கோள் காட்டிய திருக்குறள்கள் அவரது தோய்ந்த திருக்குறள் பயிற்சியை எடுத்துக் காட்டியது.

இனி குறள்கள்:

1)  யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

     வாய்மையின் நல்ல பிற. (300)

2)  குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு (1025)

3)  அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண் (983)

4)  கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றும் கொல்லோ உலகு (211)

5)  நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து

                மறைமொழி காட்டி விடும்” (28)

 (“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப” ( தொல் காப்பியம் செய்யுளியல்)

6)  தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க்கு எல்லாம் இனிது (68)

7)  புணர்ச்சிப் பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும் ( 785)

8)  இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும் (1040)

9)  நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் (948)

10) எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு (467)

11) சூழாமல் தானேமுடிவு எய்தும் தம்குடியைத்

                 தாழாது உஞற்று பவர்க்கு (1024)

         12) கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃதிலார்

               உண்மை நிலக்குப் பொறை (572)

மேலும் அவர் திருக்குறள் குறித்துக் கூறும்போது குடிமை இயல் குறித்த அதிகாரங்கள் 96 முதல் 108 வரை அதிலும் அதிகாரம் 103 குடிசெயல்வகை முக்கியமானது என்றார்.

            மேற்கண்ட 11வது குறளுக்கு எடுத்துக்காட்டாக ஜெர்மன் தொழில் அதிபர் ஒருவர் தானே முன்வந்து நிலங்களை வாங்கி காந்திய ஆளுமைகளில் ஒருவரான திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் தொடங்கிய பூதான இயக்கத்திற்கு உதவியதைக் குறிப்பிட்டார்.

            சொற்பொழிவாளரின் தாத்தா கடலூர் மஞ்சக்குப்பத்தில் காந்தியப் போராட்டத்தில் கலந்து கொண்டு போலீசாரின் தடியடியில் கால் உடைந்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டாராம்; அந்தத் திருச்சி சிறையில்தான் விவிஎஸ் அய்யர் திருக்குறள் பற்றிக் கூற கோவாவைச் சேர்ந்த ஒரு சக சுதந்திரப் போராட்ட வீரர் சமீபத்தில் ஹொங்கனி மொழியில் திருக்குறளை மொழியாக்கம் செய்து வெளியிட்டதைக் குறிப்பிட்டார்.

            உரையின் துவக்கத்தில் நூலாசிரியர் திருபாவண்ணன் அவர்களிடம் தீர்த்தாம்பாளையத்தில் ஓர் இளநீர் விற்கும் பெரியவர் அஞ்சலை அம்மாள் பற்றிக் கூறியதைக் குறிப்பிடும்போது தீர்த்தாம்பாளையம் என்பது தாகம் தீர்த்தான் பாளையம் என இருக்கலாம் என்ற ஊர்பெயர்க் காரண ஆராய்ச்சி பற்றிக் குறிப்பிட்டார். அந்தத் தீர்த்தான்பாளையம் எங்கள் மாவட்டத்தின் சிதம்பரம் – பி.முட்லூருக்கு இடையே இருப்பது மட்டுமல்ல அந்தப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கித்தான் கடலூர் மாவட்டத்தின் மூத்த தொலைத்தொடர்பு தொழிற்சங்கத் தலைவர் நாங்கள் ‘அண்ணாச்சி’ என அன்புடன் அழைத்த மறைந்த தோழர் டி ரங்கநாதன் அவர்களது கணக்கன் பாளையம் ஊருக்குச் சென்றதை நினைவூட்டியது.

            இனி திரு சரவணன் சுப்பிரமணியன் பேச்சாளர் திரு சி இராஜேந்திரன் குறித்து எழுதிய குறிப்பு பின்வருமாறு:

வணக்கம்,


காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 13.01.2021 அன்று (மாலை 6.45-7.45) ஃபேஸ்புக் வழியே நேரலையில்
திரு சி.இராஜேந்திரன் பேசுவார்

புத்தகம்: எல்லாம் செயல் கூடும்: காந்திய ஆளுமைகளின் கதைகள்

ஆசிரியர்: பாவண்ணன்

(குறிப்பு: இந்நிகழ்வு Wednesday Book Review என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் நிகழும்)

பேச்சாளர் பற்றி:

இந்த வார பேச்சாளர் திரு சி. இராஜேந்திரன் I.R.S., அவர்கள் இந்திய வருவாய்ப் பணியில் (IRS- சுங்கம், மத்திய கலால் மற்றும் சேவை வரி) 1985ஆம் ஆண்டு சேர்ந்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், சிங்கப்பூரில் இந்திய தூதரகத்திலும் பணியாற்றிய அனுபவம் உடையவர். மத்திய அரசுப் பணியில் சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டும் வகையில், இவருக்கு 2003-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது விருது வழங்கப்பட்டது. "திருக்குறள் உவமை நயம்" என்ற 238 திருக்குறள் உவமைகளுக்கு விளக்கம் அடங்கிய நூலை 2007-இல் எழுதி வெளியிட்டார். அதுமுதல், பல்வேறு இடங்களுக்கும் சென்று திருக்குறள் சார்ந்த பயிற்சி பட்டறைகளை பல்வேறு தளங்களில் நடத்தியிருக்கிறார். பாமரருக்கும் பரிமேலழகர் என்ற 1888 பக்கங்கள் கொண்ட இவரதுநூல் பத்தாண்டு கால உழைப்பில் விளைந்தது. இவரது திருக்குறள் பணியைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கிப் பாராட்டியுள்ளன.

நூல் பற்றி:

`           காந்தியடிகளின் சொற்களை தன் வாழ்நாள் கட்டளையாக எடுத்துக் கொண்டு, சமூகத்தின் வளர்ச்சிக்காக சேவை புரிந்த சில முக்கிய காந்திய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாகத் திரு பாவண்ணன் அவர்களின் ஆக்கத்தில் வெளிவந்த “சத்தியத்தின் ஆட்சி” என்னும் நூல் வெளிவந்தது. பின்னர், அதன் தொடர்ச்சியாக மேலும் சில ஆளுமைகளைப் பற்றிய தொகுப்பாக “எல்லாம் செயல் கூடும்” என்னும் தலைப்பில் மீண்டும் திரு பாவண்ணன் அவர்களின் ஆக்கத்தில் சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஜெகந்நாதன் மற்றும் கிருஷ்ணம்மாள் தம்பதியினர், ஆக்கூர் அனந்தாச்சாரி, வினோபா பாவே, வல்லபாய் பட்டேல், ஹரிஜன ஐயங்கார் கிருஷ்ணசாமி, ஆனந்த தீர்த்தர், லட்சுமண ஐயர் உள்ளிட்ட 15 காந்திய ஆளுமைகளைப் பற்றி இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.

ஆசிரியர் பற்றி:

பாவண்ணன் அவர்களின் இயற்பெயர் பாஸ்கரன். மத்திய அரசின் தொலைபேசித் துறையில் பொறியாளராக உயர் பதவியில் பணியாற்றியவர். 18 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதை நூல்கள், 3 நாவல்கள், 2 குறுநாவல்கள், 22 கட்டுரைத் தொகுப்புகள், 6 குழந்தைகளுக்கான நூல்களும் இவரது ஆக்கங்களாக வெளிவந்துள்ளன என்பதோடு, கன்னடத்திலிருந்து 24 நூல்களும், ஆங்கிலத்திலிருந்து 2 நூல்களும் என மொத்தம் 26 மொழிபெயர்ப்பு நூல்களும் என தமிழிலக்கிய உலகில் இவர் மாபெரும் பங்காற்றியுள்ளார். சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது மற்றும் தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளைப் இவர் பெற்றிருக்கிறார்.

****   ***   ****

முத்தாய்ப்பாக, திரு இராஜேந்திரன் கூறினார்:  “வள்ளுவர் கூறினார், காந்தி வாழ்ந்து காட்டினார்!”

திருக்குறள் பயில்வோம், திருவள்ளுவர் சொன்னபடி,

            கற்க கசடறக் கற்பவை கற்றபின்

            நிற்க அதற்குத் தக (391)

இந்தக் குறளுக்கு இக்குறட்பா வார்த்தைகளைக் கொண்டே விளக்குமிடத்து இவ்வாறு கூறுவார்கள்: (கற்க என்பதை உத்தரவாக ஒவ்வொரு வார்த்தையோடும் இணைத்து) கற்க; கற்க, கற்க (மீண்டும் மீண்டும்); கசடறக் கற்க; கற்பவை கற்க; கற்றபின் கற்க; நிற்கக் கற்க; மேற்கண்டவாறு கற்று அதற்குத் தக வாழ்வில் நிற்கக் கற்க!

            தமிழ் மூதாட்டி சரியாகத்தான் சொல்லி உள்ளார்:

             “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்

              குறுகத் தரித்த குறள்”

”அறம் இதென்றும் மறம் இதென்றும் நாம் அறிந்திலாத போழ்து

 (குழப்பம் நேர்ந்தபோது / துன்பம் நேர்கையில்)

 தமிழ் இறையனாரின் திருக்குறளிலே ஒருசொல்

 இயம்பிக் காட்ட மாட்டாயா”

                எனத் ‘துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து’ வேண்டி நிற்பார் பாவேந்தர்.

    குறள் பயில்வோம்!

    

 

No comments:

Post a Comment