Tuesday 5 January 2021

ஞானத் தந்தை தோழர் ஞானையா நூற்றாண்டு -- ஜனவரி 7

 


தோழர் D. ஞானையா நூற்றாண்டு

R. பட்டாபிராமன்

(மேனாள் தமிழ் மாநிலச் செயலாளர், NFTE)

[ 07.01.1921ல் மதுரை திருமங்கலம் அருகிலுள்ள நடுக்கோட்டையில் பிறந்த தோழர் ஞானையாவுக்கு இன்று 2021ம் ஆண்டு ஜனவரி 7ம் நாள் நூற்றாண்டு நிறைவு. அவர் தமது 97வது வயதில் மறைந்தபோது நமது தோழர் ஆர் பட்டாபி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது :]

தபால் தந்தித் தொழிற்சங்க இயக்கத்தின் பன்முக ஆளுமைமிக்க மேதைகளில் ஒருவர்; மார்க்ஸியம் குறித்துப் பல புத்தகங்கள் எழுதிய சிறந்த ஆசிரியர்; இந்தியச் சமூகத்தில் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளின் மீது விடாப்பிடியாகத் தொடர்ந்து சமரசமற்ற விமர்சனங்களை முன்வைத்தவர்; மதச்சார்பின்மை மேன்மையை உயர்த்திப் பிடித்துவந்தப் போராளி தோழர் டேனியல் ஞானையா பொன்ராஜ் 2017 ஜூலை 8 காலையில் காலத்தோடு ஐக்கியமானார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தோழர் குப்தாவோடு மிக நெருங்கிய உற்ற நண்பராகத் தோள் கொடுத்தவர். இயக்கத்தின் தந்தை ஸ்தானத்தில் இருந்து தமிழகத்தின் பன்னூறு தோழர்களின் ஆதர்சமாக விளங்கி தமது 97 வது வயதில் ஒர் இளைஞனாக வலம்வந்த தோழர் ஞானையாவின் மறைவு நமக்கெல்லாம் ஞானத் தந்தையின் மறைவு!

ஜெர்மன் லூத்தரன் கிருஸ்துவக் குடும்பத்தில் பிறந்தாலும், தபால் துறையில் நுழையும் முன்பே, மதுரை அருகே உள்ள சொந்தக் கிராமத்துத் தோழர்களின் தொடர்பால் இளம்பருவக் கம்யூனிஸ்டாக மலர்ந்தவர். இளமையில் மாணவர் இயக்கங்களிலும் உள்ளூர் கிஸான் சபாக்களுடனும் இணைந்து பணியாற்றினார். பின் நாளைய பல புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் பயின்ற மதுரை கிருஸ்துவக் கல்லூரியில் உயர்கல்வி பெற்றார்.

மதுரை மையத்தில் போஸ்டல் சர்வீஸ் தேர்வு எழுதிய 2000 பேர்களில் தேர்வு பெற்ற நால்வரில் ஒருவர்.  அந்தக் காலத்தில் அரசுத் துறைகளிலேயே அஞ்சல் துறையில்தான் ஊதியம் அதிகம். ஆனாலும் சுதந்திரப் போராட்டக் களத்தில் இருந்த இவரைத் தேடிப் பிடித்து நியமன உத்தரவை தரும்படியாயிற்று இவரது தந்தைக்கு. 1941 அக்டோபரில் கரூரில் அஞ்சலகப் பணியில் சேர்ந்தார்.

இரண்டாம் யுத்தக் காலத்தில் ஆர்மி போஸ்டல் சர்வீஸில் ஒரு கட்டாயத்தினால் இணைந்தாலும், அது அவரது உலகப் பார்வை விரிவாக்கப் பெரிதும் பயன்பட்டது. 1941 – 46 காலக் கட்டம் 21 வயது இளைஞருக்கு உலக அனுபவச் சாளரத்தைத் திறந்தது. கெய்ரோ நூலகம் பல புரட்சியாளர்களின் கருத்துகளை அறிந்து கொள்ள வாய்ப்பான மையமானது. HG வெல்ஸ், வெஃப், மார்க்ஸ்—ஏங்கெல்ஸ், பெர்னாட்ஷா மற்றும் ஸ்டிராச்சே போன்றோரின் நூல்களைத் தேடிப் படித்தார்.சோஷலிசக் கருத்தோட்டமுடைய நண்பர்களுடன் விவாதித்தார். அஞ்சல் ஊழியர் இயக்கத்தின் மற்றுமொரு கொள்கை உறுதிமிக்கத் தலைவரான பிரேமநாதனுடன் நட்பு கொண்டார். இந்த நண்பர்கள் இந்தியச் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் முன்னேற்றத்தையும், சோவியத் யூனியனின் மக்கள் யுத்த கோஷங்களையும் உன்னிப்பாகக் கவனித்தனர். அவர் கராச்சியில் இருந்தபோது ராயல் இந்தியக் கடற்படை வீரர்களின் கிளர்ச்சிப் போராட்டச் செய்தியைக் கேட்டார்; கோரிக்கைகளை அறிந்து கொண்டார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் தோழர் PC ஜோஷி வேண்டுகோளை ஏற்று ஞானையாவும் பிரேமநாதனும் ரூபாய் 2000 நன்கொடை திரட்டினர்.  1945-46 ல் அது சிறிய தொகை அல்ல. அதனை நேரடியாக வழங்க பம்பாய் சென்ற இடத்தில் தோழர்கள் BT ரணதிவே, மோகன் குமாரமங்கலம், அதிகாரி மற்றும் ஜோஷியோடு பழகும் வாய்ப்பைப் பெற்றார்.

ஆர்மி போஸ்டல் சர்வீஸிலிருந்து இந்தியா திரும்பியதும் திருச்சி தலைமை அஞ்சலகத்தில் பணியில் சேர்ந்தார். தலமட்டத் தொழிற்சங்கத் தலைவர்களுடன் தொடர்பு

கொண்டார். அப்போது தபால் தந்தி இயக்கத்தை ஒற்றுமைப்படுத்த தோழர் குப்தா மேற்கொண்ட முன் முயற்சிகளை அறிந்து, அகோலா மாநாட்டில் குப்தாவுடன் உறுதியாக நின்றது மட்டுமல்ல, அந்தக் கொள்கை வழிக்காகத் தமிழ்நாட்டில் கடுமையாகப் போராடினார். வார்தா ஆஸ்ரமத்தில் காந்தியடிகளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

1960 மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தத்தில் கைது செய்யப்பட்டு ஏழு மாத விசாரணைக்குப் பிறகு விடுதலையானார். ஆனாலும் நிர்வாக நடவடிக்கையாகச் சஸ்பென்ஷனைத் தொடர்ந்து வேலைநீக்கம் செய்யப்பட்டார். NFPTE பேரிக்கத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட தோழர்களின் நிவார உதவிக்காகப் பணமும் பொருளும் திரட்டி தேவை உள்ளவர்களுக்கு அனுப்பி வைக்க அரும்பாடுபட்டார். திரு ஜி. லெட்சுமணன் அத்தகைய நிவாரணம் பெற்றவர்களில் ஒருவர்; அவர், திமுக கட்சியின் உயர் தலைவர்களில் ஒருவராகவும் மக்களவையின் துணைச் சபாநாயகராகவும் பின்னர் விளங்கியவராவார்.

கூட்டு ஆலோசனைக் குழு மற்றும் கட்டாய நடுவர் தீர்ப்பாயமான JCM அமைப்பு உருவாக்கத்திலும் அதன் விவாதங்களிலும் தோழர் ஞானையா பெரும்பங்காற்றினார். அதன் நடவடிக்கைகளை மத்திய அரசு ஊழியர்களுக்குச் சாதகமாக மாற்றியமைத்தார். JCM அமைப்பு வேண்டுமெனில் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்ட உரிமையைக் கைவிட வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைபாட்டிற்கு எதிராகக் கடுமையாகப் போராடினார். மத்திய அரசு இயக்கங்களின் பல்வேறுபட்ட தலைவர்களும் JCM துவக்கநாளில் தோழர் ஞானையா அவர்கள் ஆற்றிய ஒப்பற்ற உரையைப் பெரிதும் பாராட்டினர். பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கும் ஒரு நிலையான அமைப்பை ஏற்படுத்தியது மிகப்பெரிய சாதனையாகும். இதற்கெனப் பாடுபட்ட தோழர்கள் ஞானையா, ஓபி குப்தா அவர்களின் சேவையை 50 ஆண்டுகளாகப் பல்வேறு மத்திய அரசு ஊழியர் இயக்கங்கள் நன்றியோடு நினைவு கூர்கின்றனர். ஞானையா லண்டன் சென்று அங்கே செயல்படும் விட்லி கவுன்சில் நடைமுறைகளைக் கற்றறிந்து JCMஐ செழுமைப்படுத்தினார்.

சர்வதேச தபால் தந்தி தொழிற்சங்கமான PTTI சர்வதேசக் கூட்டத்தில் கலந்து கொள்ள புருஸல் சென்றார்.  அங்கு அதன் பொதுச் செயலாளர், பாட்டாளிகளின் சர்வதேசியம் என்ற இடதுசாரி கொள்கைக்கு எதிரான கருத்துடையவராக இருந்தார். அதனை மறுத்து அவரோடு கூட்டத்தில் வெளிப்படையாக பாட்டாளிகளின் சர்வதேசியத்திற்காக வாதாடினார்.

மாமேதை லெனின் நின்ற மேடையில் தோழர் ஞானையா

1917 சோவியத் யுகப் புரட்சின் பொன் விழா கொண்டாட்டச் சரித்திர நிகழ்வில் கலந்து கொள்ள தோழர் ஞானையாவும் குப்தாவும் சோவியத் யூனியன் சென்றனர். புரட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இத்தருணமான 2017ல் தோழரின் மறைவு துரதிருஷ்டமானது. ஆனாலும் அவருக்கு ஒர் அற்புதமான வாய்ப்பு கிட்டியது; அது, மார்க்ஸியம்- லெனினிய

உயர்கல்விக்காக நவம்பர் 7ம் தேதி 1980 ல் மீண்டும் சோவியத் சென்று சமூக விஞ்ஞானத்திற்கான லெனின் அகாடெமியில் உரையாற்றியது.  அந்த மேடை எத்தகையது எனில், அதே மேடையில் அங்கிருந்துதான் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு தோழர் லெனின் பொதுமக்களுக்கு உரையாற்றினார். அதே பேச்சாளர் மேசையில் தோழர் ஞானையா நின்றதை நாம் பெருமையோடு நினைந்து பார்க்கிறோம்.

செப்டம்பர் 19, 1968 மத்திய ரசு ஊழியர்களின் மகத்தான வேலைநிறுத்தத்தை ஆகப்பெரிய வீரத்துடன் தலைமையேற்று நடத்தினார். வேலைநிறுத்தம் துவங்குவதற்கு முதல் நாளே அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருந்து உற்சாகமான அறிக்கைகளால் வேலைநிறுத்த வெற்றிக்காகப் பாடுபட்டார்.

NFPTE பேரியக்க அங்கீகாரம் பறிக்கப்பட்டது. சம்மேளனத்திற்கும் கிளைச் சங்கத்திற்கும் அங்கீகாரமற்ற சூழல். ஜனநாயகமற்ற இதனை எதிர்த்து அங்கீகாரத்தை மீண்டும் பெற தோழர் குப்தாவுடன் இணைந்து காலவரையறையற்ற உண்ணா விரதப் போராட்டத்தைத் துவக்கினார்.  8 நாட்கள் நீடித்த இந்தப் போராட்டம் பல்வேறு கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்றது. திருவாளர்கள் வாஜ்பேயி, டாங்கே, புபேஷ் குப்தா, அச்சுதானந்தன், சந்திரசேகர், மோகன் தாரியா மற்றும் அருணா அஸப் அலி முதலானோர் பந்தலுக்கு வந்து போராட்டத்தை வாழ்த்தினர். அரசுடன் அருணா ஆஸப் அலியும் மோகன் தாரியாவும் மத்தியஸ்தம் பேசிட பரபரப்பான எட்டுநாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. NFPTE அங்கீகாரம் மீட்டெடுக்கப்பட்டது.

சம்மேளன இதழான P & T லேபரின் ஆசிரியராக இருந்து தோழர் ஞானையா பல அரிய கட்டுரைகள் எழுதினார்.  அன்றைய அரசின் பிற்போக்கான கொள்கைகளைத் தோலுரித்தார். எமர்ஜென்ஸி காலத்தில் இயக்கத்தின் இதழ்கள் தணிக்கை செய்யப்பட்டு கிளைகளுக்கு அனுப்ப முடியாத நிலை. ஆனாலும் தோழர் ஜெகனின் சாதுர்யத்தால் தமிழ்நாட்டிலிருந்து ஒலிக்கதிர் இதழோடு மறைத்து அனுப்பப்பட்டது. ஜனதா அரசில் ஜார்ஜ் பெர்னான்டஸ் கம்யூனிகேஷன் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவருடன் ஞானையா வேலைநிறுத்தத்திற்குப் பிறகு துறையில் நிலவிய பழிவாங்குதல் பிரச்சனைகள் குறித்து விவாதித்து விளக்கினார். திரு பெர்னான்டஸ் கோப்புகளை வரவழைத்து நேரடியாகத் தலையிட்டு பழிவாங்குதல் நடவடிக்கைகளைக் களைந்தார். அவற்றில் திரு சங்கர் தயாள் சர்மா மறுதலித்த தோழர் ஞானையாவின் வேலைநீக்கமும் ஒன்று.  திரு பெர்னான்டஸ் அவர்களால் அந்தத் தடை நீங்கப்பெற்று தோழர் ஞானையா மீண்டும் பணியில் சேர்ந்து பணிநிறைவும் செய்தார்.  சஸ்பென்ஷன், டிஸ்மிசல், கட்டாய ஓய்வு என்பதைத் தொடர்ந்து இப்படிப் பணியில் சேர்ந்தது இது ஐந்தாவது முறை. (ஆனாலும் தன்னடக்கத்துடன் “நானும் ஓடினேன்” (I too ran) என்று தன் நூலுக்குத் தலைப்பிட்டார்)

செகரெட்டரி ஜெனரல் பதவியைத் தோழர் குப்தாவிடம் ஒப்படைத்த பிறகு தோழர்களுக்கு மார்க்ஸியக் கல்வி அளிப்பதில் தோழர் ஞானையா கவனம் செலுத்தினார். 1978 லிருந்து குறுகிய பத்தாண்டுகளுக்குள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் AITUC யின் நன்கறியப்பட்ட தலைவரானார். கட்சியின் தேசியக் கவுன்சில் உறுப்பினராகவும், கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். AITUC ன் துணைத் தலைவராக அவர் நடத்திய தொழிற்சங்க வகுப்புகள் இன்றும் பலராலும் பாராட்டப்படுகிறது.

கட்சியின் மூத்த தேசியத் தலைவர்கள் டாங்கே, ராஜேஸ்வர ராவ், மொகித்சென், இந்திரஜித் குப்தா, ஏ பி பரதன் முதலான தோழர்களோடு நெருங்கி உறவு கொண்டிருந்தார்.

அவர்களோடு விவாதித்து கட்சியின் கொள்கை நிலைகளைக் கூர்மைப்படுத்த உதவினார்.  அதே போன்று தமிழகத் தலைவர்கள் ப. மாணிக்கம், ஆர். நல்லகண்ணு, தா. பாண்டியன், ஏ.எம்.கோபு, எஸ் எஸ் தியாகராஜன் முதலானவர்களுடன் பணிசெய்து தமிழகக் கட்சி நிலைபாட்டைச் செழுமைப் படுத்துவதில் துணை நின்றார். இதற்கு அவரின் ஊசலாட்டமில்லாத கறார் கொள்கை நிலைபாடே காரணம்.

சமூக நீதிக்காகத் தொடர்ந்து உறுதியாக நின்ற போராளி. மண்டல் கமிஷன் குறித்து ஆழமான ஆய்வு நூல்கள் எழுதியவர்.  உயர் சாதி பிரமணர்களுக்காகத் தனியே தண்ணீர் குடம் வைத்த சாதிய பாகுபாட்டை எதிர்த்துத் துணிச்சலாக அலுவலகத்தின் உள்ளேயே அந்தக் குடத்தை உடைத்தவர்.  அப்போதுதான் பணியில் சேர்ந்து சங்கத்தில்கூட உறுப்பினர் ஆகாத இளைஞராக இருந்த காலம் அது.  அது தான் தோழர் ஞானையா.

குப்தாவின் சமகாலத் தோழர். தோழர்கள் ஜெகன், முத்தியாலு, ஆர்கே, எம்.எல்.சர்மா, B P சர்மா முதலானோரின் ஆசர்சமாகவும் மற்றும் இளைஞர்களான தோழர்கள் மாலி, தமிழ்மணி மற்றும் மதிவாணன் முதலிய தொலைத்தொடர்பு இயக்கத்தின் அடுத்த தலைமுறை தலைவர்கள் பலரை உற்சாகப்படுத்தி உருவாக்கியவர். தமிழகத் தொழிலாளர்களின் வர்க்கக் கல்வி மேம்பாட்டிற்காகத் ’தொழிலாளர் கல்வி மையத்தை’ நிறுவியவர். பல கல்வி முகாம்களை நடத்தி தோழர்களின் வர்க்க அரசியல் புரிதலை, சமூகத்தில் வர்க்கப் போராட்டத்தின் அவசியத்தை உணர வைத்தவர். சாதியம் குறித்த கேள்விகளை எழுப்பி சமூக நீதி இயக்கத்தை மேலெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தைப் போதித்தவர். CPI, CPM இயக்கத் தலைவர்களை/ தோழர்களை சந்தித்த போதெல்லாம் இடதுசாரி ஒற்றுமைக்கான தனது விருப்பத்தை வெளியிட்டவர்.  இடதுசாரிகள் தவறிழைக்கும்போதும், இடதுசாரிகளின் போதாமை குறித்தும் விமர்சிக்கத் தயங்காதவர்.

இந்தியாவை, அதன் வரலாற்றை, சமூக ஏற்றத் தாழ்வுகளை, இந்து—முஸ்லீம் பிளவின் பேரளவிலான பாதிப்பை, ஒற்றுமைக்கான தேவையைப் புரிந்து கொள்வதில் மிகுதியான ஆர்வத்தை, உழைப்பை, கடுமையான தேடுதலை மேற்கொண்டவர். இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக முஸ்லீம் சமூகம் அளித்த பெரும் பங்களிப்பை, சமூக முன்னேற்ற இயக்கங்களில் அதன் தலைவர்கள் வகித்த பாத்திரத்தை விவரிப்பதில் அவருக்கு என்றும் வார்த்தை பஞ்சம் ஏற்பட்டதில்லை. விதந்து விரிவாக நூல்கள் எழுதியுள்ளார்.

மேற்கண்ட பொருள்களில் எல்லாம் 25க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.  அவை எல்லாம் ஞானக் களஞ்சியம், பொக்கிஷம்.  தன்விவரக் குறிப்பாக அவர் எழுதிய தன் வரலாறு சிறு நூலின் தலைப்பு ”நானும் ஓடினேன்” (I Also ran).  சம்மேளனத்தின் சாதனை வரலாறான “ஒளிவீசும் வரலாறு” (Glimpses)  தோழர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. CPI  கட்சியின் வரலாறு பற்றியும் எழுதியுள்ளார். கடைசி காலத்தில் கம்யூனிஸ இயக்க வரலாறு குறித்த விரிவான நூல் எழுதத் தரவுகளைச் சேகரிக்க முதிர்ந்த வயதிலும் கடுமையாக உழைத்து வந்தார்.  மார்க்ஸிய கோட்பாட்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தற்காலத்திற்கேற்ப செழுமைப்படுத்தத் தோழர்களோடு அறிவார்ந்த விவாதங்களை நடத்துவதில் மிகுந்த ஆர்வமும் அத்தகை தோழர்களை வரவேற்பதில் மகிழ்வும் கொண்டவர். முதிர்ந்த 96 வயதில் தினசரி மணிக்கணக்கில் படிப்பதிலும் எழுதுவதிலும் செலவிட்ட ஒரு மனிதரைக் காண்பது அபூர்வமானதும் வியப்பானதுமாகும்.

 தோழர் ஞானையாவைப் பார்த்திருந்தால் திருவள்ளுவர் ‘சாந்துணையும் கல்லாதவாறு’ என வியந்து கேள்வி எழுப்பி இருக்க மாட்டார். அப்படிக் கடைசி மூச்சு வரை கற்பதில் தாகமுடையவராக, கசடறக் கற்றதை இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கற்றுத் தந்துவிட வேண்டும் என்ற சமூகப் பொறுப்புணர்வுத் துடிப்பும் உடையவராக இருந்தார் ஞானையா. அவர் எழுத்துக்களின் ஊடாக, தோழர்களின் நினைவுகளின் ஊடாக அவர் ஜீவிதமாக என்றென்றும் வாழ்வார்.  ஞானத் தந்தையிடமிருந்து தொடர்ந்து கற்போம்! அவர் எந்தச் சமூக மாற்றத்திற்காகக் காலமெல்லாம் உழைத்தாரோ, உறுதியாக நின்றாரோ அதற்கென நாம் நம்மை மறு அர்ப்பணிப்பு செய்வோம்!

நாம் வாழும், வாழ்வை மேம்படுத்த நாளும் போராடும் சமூகத்திற்காகத் தோழர் ஞானையா அளித்த விலைமதிப்பில்லா கொடைக்காக அவரை வணங்குவோம்!  ஒவ்வொரு தபால் தந்தி ஊழியரும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் உறுப்பினர் என்ற வகையில் அற்புதமான மனித நேயர் மாபெரும் தோழர் ஞானையா குறித்து பெருமை கொள்வோம்!



நூற்றாண்டு விழா நாளில் எங்கள் ஞானத் தந்தையே செவ்வணக்கம்!

 

  --தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment