Monday 25 January 2021

வேளாண் சட்டங்கள் – நீதிமன்றமும் அரசியலமைப்புச் சட்டமும்

                                                                                                                        வேளாண் சட்டங்கள் –

           நீதிமன்றமும் அரசியலமைப்புச் சட்டமும்

--காளீஸ்வரன் ராஜ்     (உச்சநீதிமன்ற வழக்கறிஞர்)

புகைப்படம் நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

            புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சனையில் நீதிமன்றத் தலையீடு “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” என சிலநாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கருத்து தெரிவித்தது. வேளாண் சட்டங்களை இடைநிறுத்தி, ஆய்வுக் குழு அமைத்த நீதிமன்ற உத்தரவை விமர்சித்து சட்ட அடிப்படையிலும், அரசியலமைப்பு ரீதியிலும் விமர்சனங்கள் எழுந்தன. அரசியலமைப்பு அடிப்படையில் அமைந்த நீதிமன்றம், நிர்வாக (மத்தியஸ்த) நீதிமன்றம் போல நடக்க முயன்றுள்ளது என்பது விமர்சகர்கள் கூற்று; அதாவது, அரசை இக்கட்டிலிருந்து மீட்பதற்காகவே நீதிமன்றம் பிரச்சனைக்குத் தீர்வு காண முயன்றது. ஆனால் நீதிமன்றத்தின் தலையீடு நியாயமான தீர்வினைக் கண்டு பிடித்து சுமூகமான உடன்பாட்டிற்கு வருவதற்கு உதவுவதற்காகவே என்பது மாற்றுப் பார்வை எதிர்விமர்சனம்.

            வேளாண் சட்டங்களை எதிர்த்த உச்சநீதிமன்ற வழக்குகளின் முக்கியமான அடிப்படை சட்டமியற்றல் சம்பந்தமானது. அதன்படி, குறிப்பிட்ட சட்டம் இயற்ற யாருக்கு அதிகாரம் என்பதைச் “சாராம்சமான உட்கருவும், பொருளடக்கமும்” கோட்பாட்டின்படி பரிசீலிப்பதே நீதிமன்றத்தின் முன்னுரிமையாகும்; அதன் பிறகே அச்சட்டத்தின் பிற அம்சங்கள் ஆய்வுக்கு வரும். அவ்வாறு அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில (அதிகாரத்தின் கீழ் வரும்) பட்டியலில் இடம் பெற்றதே இந்தச் சட்டத்தின் உட்கரு என்பது அடிப்படையான வாதம்.

ஏழாவது அட்டவணை பல பிரிவுகளின் தொகுப்பு போன்றது. சட்டமியற்றும் தேவைக்காகப் பலமுறை மத்திய அரசு மாநில அதிகார எல்லையில் ஊடுருவது வழக்கம். அதை நியாயப்படுத்த மத்திய பட்டியல் அல்லது பொதுப் பட்டியல் இவற்றில் சில பதிவுகளை (என்ட்ரீஸ்) இடம்பெறச் செய்து அதிகார எல்லைகளை (மாற்றி) வரையறுத்து, பின்னர் அதனைப் பின்பற்றுவார்கள். இவ்வாறு முழு சட்டப் புத்தகமும் மத்திய அரசின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு எழுதப்பட்டதை ஒத்திருக்கும். இதே தந்திரத்தை மாநிலங்களும் சில நேரம் செய்வதுண்டு. எவ்வாறாயினும், இவ்விரண்டிலும் அரசியல் சாசன அமைப்பின் கட்டுக்கோப்பு மேலும் அபாயத்திற்கு உள்ளாவது தெளிவு.

புதிய வேளாண் சட்டங்களின் சாராம்சமான உட்கருவும், பொருளடக்கமும் “விவசாயம்”. விவசாயம், விவசாய நிலம் மற்றும் சந்தை ஆகியன மாநிலப் பட்டியலில் முறையே 14, 18 மற்றும் 28வது பதிவுகளாக இடம்பெற்றுள்ளன. அதில் ”விவசாயக் கடன் நிவாரணம்” என்பதை உள்ளடக்கியது 30வது பதிவு. அந்தப் பட்டியலின் 45 முதல் 48வரையான பதிவுகள் நிலம் அல்லது விவசாய நிலம் சம்பந்தமான வருமானம் மற்றும் அதன் மீதான வரிவிதிப்பு தொடர்பானது. பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டம் பெருமளவு ஏழாவது வரையறையின் எல்லைக்குள் அத்துமீறி இருந்தால் உச்சநீதிமன்றம் அதனை அப்படியே ரத்து செய்திருக்கலாம்.

காமேஷ்வர் சிங் வழக்கின் (1952) தீர்ப்பு சந்தேகப்படும்படியான சட்டமியற்றலுக்கு எதிராக வழங்கப்பட்ட மிக அரிதான கண்டனமாகும். இராஜஸ்தான் மாநில அரசு எதிர் ஜி சௌலா (1958) வழக்கில் நீதிமன்றம், குறிப்பிட்ட சட்டம் செல்லுபடியாகுமா என்பதைத் தீர்மானிக்க, அச்சட்டத்தின் உள்ளடகத்தின் மீது கவனத்தைக் குவித்தது.

மேற்கண்ட தீர்ப்புகள் தற்போதைய வேளாண் சட்டங்களை ஊடுருவிப் பரிசீலிக்க முன்னுதாரணமான மதிப்புடையவை. பொதுப்பட்டியலின் பதிவு 33ன் மீது சார்ந்திருக்க மத்திய அரசு முயற்சிக்கும். வர்த்தகம் மற்றும் வணிகயியல் பற்றிய அப்பதிவு பாராளுமன்றத்திற்குத் தடைசெய்யப்பட்ட பகுதி அல்ல. அதில் உணவுப் பொருட்களும் அடக்கம். எனவே வேளாண் சட்டங்களைக் கொண்டுவர, இவ்வாறாகத் தனக்குச் சட்டபூர்வமான தகுதி இருப்பதாக நியாயப்படுத்த மத்திய அரசு வாதிடக்கூடும்.

இப்பிரச்சனையில் அரசியலமைப்பு ரீதியில் சவாலான இப்புதிரைத் தீர்த்து வைக்கவே உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆனால் உரிய நேரத்தில் சட்டரீதியாகத் தீர்த்து வைக்க நீதிமன்றம் தவறி விட்டது; அவ்வகையில் இன்று டெல்லி விதிகளில் நடைபெறும் பல சம்பவங்களுக்கும் நீதிமன்றமும் ஒருவகையில், முதன்மையாக இல்லாவிட்டாலும், இரண்டாவதாகப் பொறுப்புடையதே. இதன் பாடம், அரசியலமைப்புப் பிரச்சனைகளில் காலம் என்பது பொன்போன்றது.

இருந்தபோதிலும், சட்டரீதியான காரணங்களைக் கூறாமல், உச்சநீதிமன்றம் ஜனவரி 12ம் தேதி வேளாண் சட்டங்களை இடைநிறுத்தி உத்தரவிட்டது; சட்டரீதியான புதிரை விடுவிப்பதைவிட, அரசியல் ரீதியான புதிரைத் தீர்ப்பதே அதன் நோக்கம் என்பது தெளிவானது. நீதிமன்றத்தின் தலையீடு தாமதித்த ஒன்று, தடம் புரண்ட ஒன்று. நீதிமன்றம் அமைத்த சமரசக் குழு ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்டது. நீதிமன்றமும் அதனது செயல்படும் பொறுப்பில் தவறியது என விமர்சிக்கப்பட்டது.

ஆனால் தெரிந்து வேண்டுமென்று நோக்கத்தோடு உணர்வற்று நடந்து கொண்ட நிர்வாகம் மற்றும் சட்டமியற்றும் (பாராளு) மன்றங்களின் செயல்பாடுகள் சமமான அளவு கடுமையானது. நெருக்கடிக்குத் தீர்வுகாண சட்டங்களின் அமலாக்கத்தை நிறுத்தி வைக்கலாம் என்பதொத்த யோசனையை முன்வைக்க மத்திய அரசுக்கு ஏறத்தாழ வடஇந்தியாவின் கடும் குளிர்பருவம் முழுவதும் தேவைப்பட்டது. கலந்தாய்வு முறை ஜனநாயகத்தில் சட்டமியற்றும் மன்றங்களின் ஆக்கபூர்வமான விவாதங்கள் முக்கியமான மைய இடத்தை வகிக்கும். பெரும்பான்மை வாதம் (மெஜாரிட்டியிசம்) என்பது விவாதத்தை மறுப்பதற்கான மாற்று அன்று. சந்தையின் மேலாண்மையை நம்பும் ஓர் ஆட்சியின் பார்வையை, நாட்டு மக்கள் படும் துன்ப துயரங்களைக் காணவொட்டாது மறைத்துவிடும். விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனையில் எதிர்கட்சிகளும்கூட சிறப்பாக நடந்து கொண்டதாகப் பெருமை பேசமுடியாது.  

வேளாண் மசோதாக்கள் பாராளுமன்றத்தில் ஏதோ குறைவாக அல்லது முழுமையாக விவாதமின்றி, எதிர்ப்புகளையும் மீறி அவசரகதியில், நிறைவேற்றப்பட்டு விட்டன. சட்ட மசோதா கொண்டு வருவதற்கு முன், அது சபையில் தாக்கலாகும்போது ஏன் அதற்குப் பிறகும்கூட சட்டமியற்றும் முழுமையான நிகழ்முறையில் விவாதங்களிலும் கலந்தாய்வுகளிலும் ஈடுபட வேண்டிய தேவையைக் கலந்தாய்வு ஜனநாயகம் வலியுறுத்துகிறது. இச்சட்டங்கள் கொண்டுவருமுன் தங்களுடன் விவாதிக்கப்படவில்லை என்ற விவசாயிகளின் புகார் முன்கலந்தாய்வின் தேவையைச் சுட்டிக்காட்டுகிறது. ஒரு விஷயத்தில் பாத்தியதை உரிமை உடையவர்களுக்குத் தங்கள் தரப்பை எடுத்துரைக்கும் வாய்ப்பு, அவர்கள் நலன்களைப் பாதிக்கும் முக்கிய முடிவு எடுக்கப்படுவதற்கு முன்,  வழங்கப்பட வேண்டும். தேசிய நீதி வழங்கல் என்பது, சட்டமியற்றல் துறையிலும்கூட, ஆழமான கோட்பாடு.

ஜனநாயகத்தில் ஒரு சட்டத்தின் செல்லுபடியாகும் ஏற்புத்தன்மை, தெருக்களில் நிகழும் அமைதியான போராட்டங்கள் வழியாகவும் சோதிக்கப்படும். ஜனநாயகபூர்வ பொறுப்பேற்பு என்பதை உறுதிப்படுத்த அரசியல் இயக்கம் ஒரு முக்கியமான கருவியாகும். பெருந்தொற்று காலத்தில், இவ்வளவு நெருக்கடி கட்டுப்பாடு சவால்களுக்கு மத்தியில் ஒரு பெருந்திரள் குடிமக்கள் போராட்டம், ஏராளமான மக்கள் பங்கேற்புடன், நடத்தப்படுவது உண்மையில் குறிப்பிடத்தக்கது. பொதுவாக இத்தகைய இயக்கங்கள் அரசு நடவடிக்கைகளைத் தடுத்துக் கட்டுப்படுத்தும் வல்லமை மிக்கவை. இந்தியாவின் குடிமக்கள் சட்டமறுப்பு இயக்கம் வரலாற்றுப் புகழ் மிக்கது என்பதற்கு அதன் பிரம்மாண்டமான பெருந்திரள் பங்கேற்புப் பண்பு மட்டும் காரணமில்லை; மாறாக வன்முறையற்ற அகிம்சை முறையிலான தத்துவத்தைப் பற்றி நிற்கும் அதன் ஆதார வேர்களும் காரணம். பிரம்மாண்டமான விவசாயிகள் இயக்கம் ஆகப்பெரும் அந்த நெறிமுறை பண்பாட்டு உள்ளடக்கப் பொருண்மையைக் கொண்டிருக்கிறது – அது அரசியலமைப்பு சார்ந்த ஆட்சி நெறிமுறைக்குப் புறம்பான ஒன்று அல்ல. அந்த நீதிசார்ந்த உள்ளடக்கமே அந்த இயக்கத்திற்கு வலிமையை வழங்குகிறது.

தேசத்தின் அடிப்படையான அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரை வழங்கியுள்ள “சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதி”யைக் கோருவதற்கு விவசாயிகளுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. சட்டத்தின் ஆதரவோடு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது விவசாயத்திற்கான நீதியின் விலக்க முடியாத மாறுபட்ட வடிவமே. மண்டி முறை ஒழிக்கப்படுவதால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு என்பதும் கூட்டாட்சி முறைமையின் கவலைக்குரிய அக்கறையேயாகும்.

நமது நாட்டின் விவசாயம் பல வகைகளில் பன்மைத்துவ வேறுபாடுகள் கொண்டது; அந்தப் பன்மைத்துவத்தை அங்கீகரித்து நன்கு விரிவாகப் பிரதிபலிப்பதே அரசியல் சாசனத்தின் ஏழாவது அட்டவணை.  எந்த ஒரு நடவடிக்கை கூட்டாட்சியின் மேன்மையான கொள்கைகளைப் பலவீனப்படுத்திவிடுமோ அது, அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், எதேச்சியதிகாரத்துவமாக மாறிவிடும். கூட்டாட்சி என்பதும் அதிகாரத்தைப் பகிர்தல் என்பதும் ஒரே பொருள் சார்ந்தது.

--நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் (24-01-2021)

Farm Laws, The Court and the Constitution

--தமிழில் : நீலகண்டன்,

  என்எப்டிஇ, கடலூர்  

 

           

 

 

No comments:

Post a Comment